Tuesday, December 10, 2013

நட்பு உணர்வை மேம்படுத்துவதற்காக நண்பர்கள் தினம்

நட்பு உணர்வை மேம்படுத்துவதற்காக நண்பர்கள் தினம்

உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொருவரும் மற்றவரிடம் பல பரிமாணங்களில் அன்பு செலுத்துகிறோம். தாய், தந்தை, சகோதரன், சகோதரி, பிள்ளைகள், உறவுகள், காதலர்கள் என்று ஒவ்வொருவரிடமும் காட்டும் அன்பு, இயற்கையாக மனிதனிடம் அமைந்துள்ளது.

இவர்களில் யாரிடம் அதிக அன்பு செலுத்தப்படுகிறது? என்பதெல்லாம் அளவிடக் கூடியதல்ல. அன்பு செலுத்தும்போது அதன் பரிமாணம், ஆளுக்கு ஆள் மாறுபடுவதை உணர முடியும்.

ஆனால் நட்புக்கு பரிமாணமும் இல்லை, அளவும் இல்லை. அது நண்பர்களிடம், தோழிகளிடம் மட்டுமே காட்டப்படக் கூடியது. உறவுகளிடம்,  நண்பனைப் போல்' பழகினேன் என்றுதான் கூறுவார்களே தவிர,  நண்பனாக' பழகினேன் என்று யாரும் கூறமாட்டார்கள். இதயம் ஏற்றுக் கொண்ட நண்பர்களுக்கே, தோழிகளுக்கே உரித்தாக காட்டப்படும் எதிர்பார்ப்பற்ற விசேச அன்புதான் நட்பு.

நட்பை அல்லது நண்பர்களை, தோழிகளை போற்றும் விதத்தில்தான் அதற்கென்று ஒரு நாளை அங்கீகரிக்க முடிவு செய்யப்பட்டு, அது நண்பர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் இதற்கென்று குறிப்பிட்ட சம்பவம் எதுவும் இல்லை என்றே வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

ஆனால் முதலாம் உலக யுத்தத்தின் மோசமான பாதிப்புகளே இந்த தினத்தை ஏற்படுத்தும் காரணமாக அமைந்தன என்று நம்பப்படுகிறது.

மனிதர்களுக்கு இடையேயுள்ள மனக்கசப்புகள் மட்டுமல்ல, நாடுகளுக்கு இடையே இருக்கும் கசப்புணர்ச்சிகள் மாறி, நட்பு உணர்வை மேம்படுத்துவதற்காக, அமெரிக்க பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு முயற்சிதான் நண்பர்கள் தினம். இதற்கான முடிவு 1935 ம் ஆண்டு அமெரிக்க பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்டது.

நண்பர்களை, தோழிகளை கவுரவப்படுத்தவும், மேலும் பலருடன் நட்புணர்வு கொள்ளவும் ஒரு நாளை அதற்கென்று அர்ப்பணிக்க வேண்டும் என்று அதில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, ஒவ்வொரு ஆகசு(ஸ்)ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை நண்பர்கள் தினம் அல்லது நட்பு தினமாகக் கொண்டாடலாம் என்று முடிவு செய்தனர். தேசிய அளவில் கொண்டாடப்பட்ட இந்த தினம், இன்று சர்வதேச அளவில் பரவலாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தில் நண்பர்களின்/தோழிகளின் வீடுகளுக்குச் சென்று பரிசுப் பொருட்கள் கொடுப்பது; நண்பனின் நீண்டநாள் விருப்பத்தை அந்த நாளில் எதிர்பார்க்காத நிலையில் திடீரென்று நிறைவேற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்துவது.

அதுவரை போகாத சுற்றுலா பகுதிகளுக்கு நண்பர்கள் சகிதம் செல்வது; வாழ்த்து அட்டைகள் பூக்கள் வழங்குவது; விழாக்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது உட்பட பல அம்சங்களுடன் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

பெற்றோர் சகோதரர் போன்ற உறவுகள், அவரவர் விருப்பத்தில் உருவானதல்ல. ஆனால் நட்பு என்பது அவரவரே முடிவு செய்யும் ஒன்று. எனவே நண்பர்களை, தோழிகளை தேர்வு செய்வதில் முன்னெச்சரிக்கை தேவை.

 எல்லாருமே நண்பர்கள், தோழிகள் அல்ல, எல்லாரும் காட்டுவதும் நட்பு அல்ல' என்ற கருத்தை உலகத்தில் நடக்கும் பல சம்பவங்கள் உறுதி செய்து வருகின்றன.

No comments:

Post a Comment