Friday, December 13, 2013

சுயமுன்னேற்றம் என்பதன் உண்மைநிலை என்ன?

சுயமுன்னேற்றம் என்பதன் உண்மைநிலை என்ன?

நண்பர்களே சுயமுன்னேற்றக் கருத்துகள் எந்த அளவிற்கு நமக்கு உதவும். எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் உதவுமா? அதன் மறுபக்கம் என்ன?

சுய முன்னேற்றக் கருத்துகள் மீது இரு வேறுபட்ட அபிப்ராயங்கள் உண்டு. இவற்றினால் வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர் பலர் உண்டு நான் உட்பட.....எளிமையாகச் சொன்னால் இந்தக் கருத்துகள் திருமணத்திற்கு முன்னர் படிப்பை முடித்துவிட்டு வேலைக்கோ அல்லது தொழிலுக்கோ சென்று கொஞ்சம் கையில் காசு பார்க்கும் சமயத்தில் நாம் கேள்விப்பட்டால் நிச்சயம் கொஞ்சமேனும் பலனளிக்கும்.

அந்த சமயத்தில் சிதறும்/தொய்வடையும் நம் மனதை சற்று உற்சாகப்படுத்தி தீவிரமாய் இயங்க வைக்கும் ஆற்றல் சுயமுன்னேற்றக் கருத்துகளுக்கு உண்டு. அப்போது மனம், பணத்தை அதிகம் சம்பாதிக்கக் காரணிகளைத் தேடிக்கொண்டு இருக்கும். இதனால் சுயமுன்னேற்றக் கருத்துகளை, அவற்றின் செயல்முறைகளை  நடைமுறைப்படுத்தினால் எந்த சிரமமும் இல்லாமல் ஏற்றுக்கொண்டுசெயல்படும். அதனால் இது சாத்தியம்.:)

இன்னொருபுறம் கட்டுப்பெட்டியாய் உலகம் தெரியாமல் வளர்ந்தவர்களுக்கு இப்படியெல்லாம் இருப்பது தெரிந்தால் ஆச்சரியமாக தெரியும் அவர்களுக்கும் கொஞ்சம் சுயமுன்னேற்றக்  கருத்துகள் வேலை செய்யும்.

ஏதாவது கூட்டம் நடந்தால் உள்ளே போகக்கூட சற்றே அச்சத்தோடு/ஆர்வமில்லாமல்  வெளியே நின்று கேட்பவர்கள் மனதில் பேச்சாளரின் பேச்சுத்திறமையால் ஒரு சில கருத்துகளேனும் பதியும். ஏன் பதிகிறது என்றால்  ஏற்கனவே நம் விருப்பத்திற்கு ஒத்த கருத்துகளைத்தான் மனம் ஏற்றுக்கொள்ளும்.

பணத்திற்கு நன்றாக ஒத்துப்போகும் இக்கருத்துகள் மனம் சார்ந்த உணர்வுகளுக்கு, மன அழுத்தங்களுக்கு, சிதைவுகளுக்கு ஓரளவிற்குதான் வேலை செய்யும். இதுதான் சுயமுன்னேற்ற கருத்துகளின் எல்லை :)

மாறாக  சுயமுன்னேற்றக்கருத்துகளே வாழ்வை திசை திருப்பிவிடும் என்கிற வாதத்தில் மனதின் விருப்பம் முக்கிய பங்கு வகிக்கும் என்பதினை உணருங்கள். மனம் ஒத்துழைக்காத பட்சத்தில் சுயமுன்னேற்றக்கருத்துகள் எல்லாம் கேலிக்கு உரியவையே. அதிலும் இதைச் சொல்லுகிறவர்கள் அதை முயற்சி செய்தார்களா என்ற ஆராய்ச்சியில் நுழைந்தால் தேறமாட்டார்கள் என்ற விவரம் அவர்கள் பேசும்போதே தெரிந்துவிடும்.

ஒரு சில வருடங்களுக்கு முன் நான் திருப்பூரில் சுயமுன்னேற்ற நிகழ்வு நடந்தபோது ரொம்பநாளாச்சே மீட்டிங்க் போயின்னு அங்கே போனேன். பேச்சாளர் சொன்னார். என்ன பேசறதுன்னு இன்னிக்கு காலைல வர முடிவு பண்ணல. கையில் ஒரு புத்தகம் கிடைச்சதுன்னு ஒரு ஏழு பாயிண்ட் சொன்னார். சத்தியமா என்ன சொல்ல வர்ர்றாருன்னே புரியல., என் நிலைமையே இப்படின்னா புதுசா சுயமுன்னேற்ற கூட்டத்துக்கு வந்த நபர்களின் நிலை என்னாயிருக்கும். தெனாலிராமன் பூனை, பாலைகண்டு ஓடிய கதைதான்.

இங்கேதான் ஏன் இப்படி நடக்கிறது என ஆராய்ந்து விதியை துணைக்கு அழைக்க வேண்டி இருக்கிறது. நீங்க தேறனும்னு விதி இருந்தா நாலு நல்ல கருத்து கிடைக்கும். இருக்குற உற்சாகமும் வடியனும்னு இருந்தா இப்படி மீட்டிங்தான் மாட்டும் :) ஆனா அப்படியே விட்டறலாமா.? முயற்சிங்கிறது என்ன., விடாமுயற்சி விஸ்வரூபவெற்றி. இதுக்கெல்லாம் அசராம மீட்டிங் நடந்தா போங்க . என்னிக்கு நமக்குத் தெரிஞ்சததேதான் பேசறாங்க அப்படின்னு தோணுதோ  அன்றோடு விட்டுவிடுங்க மீட்டிங் போறத :). 

சுய முன்னேற்றம் என்பது உங்களுக்குள் இருக்கும் தீயை சற்றே ஊதிப்பெருக்குவதுதான். அதை உணர்ந்து விசிறப் பயன்படுத்துங்கள்.

மனம் என்பது தொடர்ந்து காலத்தால் மழுங்கிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்டது. மனம் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். அதற்கு தியானம் சார்ந்த ஆன்மீகப் பாதை உதவும். சில சமயங்களில்  நாம் சற்று சோம்பி இருக்கிறோம் என்று நமக்கே உணர வைக்கவாவது இது போன்ற கூட்டங்கள் உதவும்.

சுய முன்னேற்ற கருத்துகளை  நமக்குள் ஒரு சிறு தூண்டுதலாக பயன்படுத்திக்கொள்ளலாமே தவிர முழுமையாக வலுக்கட்டாயமாக திணிக்க வேண்டாம். உடல் எப்படி எந்த ஒன்றிற்கும் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ளுமோ அப்படித்தான் மனமும். ஒரு கட்டத்தில் சுயமுன்னேற்றக் கருத்துகளை எதிர்க்க ஆரம்பித்து எதிர்மறையாக மாறிவிடும்.

மனதின் போக்கிற்கு ஏற்ப இவற்றை அணுகி வளம் பெறுங்கள்.
இந்த சிந்தனை கூட சுயமுன்னேற்றத்தில் வரும் என்பதையும் உணருங்கள் :)))))

No comments:

Post a Comment