Thursday, January 2, 2014

என் புத்தாண்டு உறுதிமொழிகள்!!

என் புத்தாண்டு உறுதிமொழிகள்!!

இதோ மீண்டும் ஒரு வருடம் என்னைக் கடந்து போகிறது. 

கடந்து சென்ற வருடம் என்னை எவ்வாறெல்லாம் பாதித்தது. என்னென்ன அனுபவங்களை தந்தது என்றெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். 

பணியில் இருந்த காலத்தில், அதாவது கணினி என்கிற ஒரு வினோதம் வங்கியில் அடியெடுத்து வைத்திராத காலத்தில், ஆண்டு இறுதி என்பதே ஒரு சிம்ம சொப்பனமாக இருந்து வந்தது. ஆண்டு இறுதி கணக்கு முடிக்க டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவையும் கடந்து பணியாற்ற வேண்டிய நிர்பந்தத்தில் இருந்ததுண்டு. ஆனாலும் வருட இறுதி ஜெனரல் லெட்ஜர் பாலன்ஸ் ஆகிவிட்டது என்கிற ஒரு மனநிம்மதியுடன் புத்தாண்டின் விடியற்காலையில் சில்லென்று காற்று முகத்தில் பட ஸ்கூட்டரில் பாரிஸ் கார்னரில் இருந்து புரசைவாக்கத்திலிருந்த வீட்டிற்கு வந்த சுகமான அனுபவமும் நினைவுக்கு வருகிறது.

பிறகு புகுந்த கணினி அலுவலக வாழ்க்கையை மட்டுமல்லாமல் குடும்ப வாழ்க்கையையும் கூட இயந்திரமயமாக்கிவிட்டது. இப்போதெல்லாம் நாம் எதையுமே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்கிற சவுகரியம் - அது சில சமயங்களில் அசவுகரியமாகவும் ஆகிப்போகிறது. மனைவியின் செல் நம்பரைக் கூட நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை - எத்தனை தொலைவில் உள்ளவர்களுடனும் நொடியில் தொடர்புக்கொள்ளக் கூடிய சவுகரியம் - இதிலும் அசவுகரியம் உள்ளதே! பிறந்த நாள் வாழ்த்தை சொல்ல கடைசி நிமிடம் வரையிலும் காத்திருந்து சொல்ல முயலும்போது busy tone இடையில் வந்து பிறகு இணைப்பு கிடைக்கும்போது இப்பத்தான் உங்களுக்கு சொல்ல தோனிச்சா என்கிற மகள்களின் எரிச்சலையும் சம்பாதித்து கொடுத்திருக்கிறது - இப்படி பல சவுகரியங்கள் இருந்தாலும் இவை முன்பு தனிமனித உறவுகளில் இதுவரை இருந்து வந்த நெருக்கத்தை, அன்னியோன்யத்தை குறைத்துவிட்டது என்றே தோன்றுகிறது.

இணையம் முதன் முதலில் நம் வாழ்வில் நுழைந்தபோது அது ஒரு புரியாத புதிராகத்தான் இருந்தது. ஆனால் அதுவே நாளடைவில் ஒரு அலாதி அனுபவமாக மாறி இப்போது அதுவே நம்முடைய நாட்களின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக்கொள்கிறதை காண முடிகிறது.

இந்த இணைய அடிமைத்தனம் இன்று பல தனிமனித உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது. 

கடந்த பத்து நாட்களாக மலேசியாவிலிருந்து வந்திருந்த மகள் மற்றும் பேத்தியுடன் நேரம் செலவிடவேண்டும் என்பதற்காகவே இணையத்திற்கு வருவதை நிறுத்தியிருந்தேன். ஆனால் அது அத்தனை எளிதாக இருக்கவில்லை. எதையோ பறிகொடுத்துவிட்டதுபோன்ற எண்ணம் மனதில் இருந்துக்கொண்டே இருந்தது. அந்த அனுபவம் எனக்கே வியப்பாக இருந்தது. நான் எதற்கும் எந்த சூழலும் அடிமையாகிவிடுபவன் இல்லை என்று எண்ணியிருந்த எனக்கு என்னுடைய இந்த பலவீனம் ஒருவித அச்சத்தைக் கூட அளித்தது. 

ஆனால் முதல் இரண்டு நாட்களுக்குப் பிறகு பேத்தியும் என்னுடன் நெருங்கி வந்துவிட நேரம் போனதே தெரியாமல் போனது. இணையத்திற்கு வெளியிலும் வாழ்க்கை இருப்பதை எனக்கு உணர்த்தியது  இரண்டு வாரங்களுக்குப் பிறகு நேற்று மாலை அவர்கள் திரும்பிச் சென்றதும் மீண்டும் ஒரு வெறுமை. நானும் என்னுடைய மனைவியும் தனித்துவிடப்பட்டதுபோன்ற ஒரு உணர்வு. மனைவிக்கு சமையல், தையல், தோட்டம் என்ற பல்வேறு அலுவல்கள். ஆனால் எனக்கு? இணையத்தை தவிர வேறு எதுவும் இல்லை என்பது போன்றதொரு வெறுமை. இத்தகைய எண்ணம் எனக்கு மட்டும்தானா அல்லது பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட அனைவருக்குமே உள்ளதா என்று தெரியவில்லை. 

இதிலிருந்து விடுபட வேண்டும். ஆகவே கடந்த வருடம் இணையத்தில் இருந்த நேரத்தில் பாதியளவு மட்டுமே இந்த வருடம் செலவிட வேண்டும் என்று எண்ணியுள்ளேன். இது அத்தனை எளிதல்ல என்றாலும் இதை சாத்தியமாக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். இது நல்ல முடிவுதானா இதை தொடர்ந்து கடைபிடிக்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இணைய பிரவேசத்தால் நின்றுபோயிருந்த வாசிக்கும் பழக்கத்தை மீண்டும் தொடர வேண்டும். மறந்துபோயிருந்த நண்பர்களை  தேடிப்பிடிக்க வேண்டும், தொடர்பற்று போயிருந்த சொந்தங்களுடனான உறவுகளை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். 

இவைதான் எதிர்வரும் புத்தாண்டு உறுதிமொழிகள்.

இணைய நண்பர்கள் அனைவருக்கும் என் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 

No comments:

Post a Comment