மற்றவர்கள் உங்களை விரும்பசெய்வது எப்படி?
இந்த உலகத்தில் வெற்றி பெற்றவர்களின் சுய சரிதையை படித்தோம் என்றால் அவர்களிடத்தில் ego என்ற குணமே இருக்காது. தன்னை விட வயதில் சிறியவர்களாக இருந்தாலும் சரி அல்லது வயதில் பெரியவர்களாக இருந்தாலும் சரி உரியவர்களுக்கு உரிய மரியாதை தருவதில் தயங்கமாட்டார்கள்.
"நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்" என்ற பழைய திரைப்பட பாடலுக்கு ஏற்ப ஒருவர் தன்னை மாற்றி கொள்ள வேண்டும்.
தற்பெருமை என்பது ஒருவரை மற்றவர்கள் அருவருக்க செய்து விடும். தற்பெருமை பேசும் ஒருவரை கண்டாலே தலை தெறிக்க ஓடி விடுவார்கள். சிலர் பார்த்தீர்கள் என்றால் வாயை திறந்தாலே தன்னை பற்றியே பேசி கொண்டு இருப்பார்கள். எதிரில் உட்கார்ந்து இருப்பவர் நெளிந்து கொண்டு இருப்பதை கூட புரிந்து கொள்ளாமால் அவர் பாட்டுக்கு தன்னுடைய சுய புராணத்தை பாடி கொண்டு இருப்பார். தற்பெருமை பேசும் ஒருவரை மற்றவர்கள் விரும்ப மாட்டார்கள்.
தெரியாத விஷயத்தை அடக்கத்துடன் தெரிந்து கொள்ளுங்கள். வயது வித்தியாசம் பார்க்காதீர்கள். இவன் என்ன பெரிய ஆள் இவனிடம் நாம் ஏன் தெரிந்து கொள்ளவேண்டும் என நினைக்காதீர்கள். உங்களது அடக்கம் மற்றவர்கள் உங்களை நேசிக்க செய்யும்.
மற்றவர்களிடம் பழகும்போது எந்த வித சுய நலத்துடனும் பழகாதீர்கள். பின்னால் உங்களுக்கு ஆகவேண்டிய காரியத்திற்காக மற்றவர்களிடம் போலியாக பழகாதீர்கள்.
சுயநலமில்லாத உங்களது பழக்கம் மற்றவர்களிடத்து உங்களை பெரிதும் விரும்பசெய்யும்.
நட்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள். கள்ளம் கபடமில்லாத நட்புடன் பழகுங்கள். அதே சமயத்தில் உங்கள் நட்பை மற்றவர்கள் அவர்களுடைய சுயநலத்திற்காக பயன் படுத்த நினைக்கும்போது நாசூக்காக அந்த நட்பை அவர்கள் மனம் கோணாதபடி ஒதுங்கி கொள்ளுங்கள்.
நல்லவர்களுடைய நட்பு கிடைக்கும்போது உங்கள் நட்பு கிடைத்தமைக்கு அவர்கள் பெருமை படும்படி உங்கள் பழக்க வழக்கங்கள் எந்த வித சுயநலமும் இல்லாமல் இருக்க பார்த்து கொள்ளுங்கள்.
உங்களிடம் உள்ள சில பிடிக்காத குணங்களை தவிர்த்து விடுங்கள். உதாரணமாக கோபம்,
ego போன்றவற்றை அடியோடு ஒழித்து விடுங்கள். ஏனென்றால் கோபம், ego போன்ற மனப்பான்மை உள்ளவர்களை பொதுவாக மற்றவர்கள் நேசிக்கமாட்டர்கள். பல நல்லவர்களின் நடப்பை இது போன்ற குணங்கள் இருந்தால் நீங்கள் இழக்க வேண்டி வரும்.
எல்லோரையும் விரும்ப கற்று கொள்ளுங்கள். யாரையும் வெறுக்க கூடாது. மற்றவர்களிடம் உங்களுக்கு பிடிக்க தகாத விசயங்கள் இருந்தால் அவர்கள் மாற்றி கொள்ளும் மன நிலையில் இல்லாமல் இருந்தால், அவர்கள் மனம் புண்படாதபடி நாசூக்காக ஒதுங்கி கொள்ளுங்கள்.
மற்றவர்களை மனம் திறந்து பாராட்ட கற்று கொள்ளுங்கள். உங்களிடம் ஒருவர் பேசும்போது அவருடைய பேச்சில் தெரியும் நல்ல பண்புகளை செயல்களை குணங்களை
மனம் திறந்து பாராட்டுங்கள். உங்கள் பாராட்டின் மூலமாக ஒருவருக்கு அங்கீகாரம் கிடைக்கின்றபோது அவர் உங்களை பன்மடங்கு விரும்புவார்.
மற்றவர்களின் துன்பத்திலும் துக்கத்திலும் பங்கு கொண்டு அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை கூறுங்கள். உங்களுடைய ஆறுதல் வார்த்தைகள் உங்களைப்பற்றி ஒரு உயர்வான எண்ணம் அவர் மனதில் எப்போதும் நிலைத்து இருக்கும்.
சரி, மேலே கூறிய பண்புகளை மற்றவர்கள் விரும்ப வேண்டும் என்றால் கடை பிடிக்க முடியுமா?
சற்று சந்தேகம்தான். ஏனென்றால் ஒவ்வொருவருடைய வேலை, தொழில், குடும்ப சூழ்நிலை போன்ற காரணங்களினால் நல்ல பண்புகளாக இருந்தாலும் கடை பிடிக்க முடியாத சூழ்நிலை இருக்கும். அதனால் மற்றவர்கள் வெறுக்கும் நிலையிலோ அல்லது விரும்பாத சூழ்நிலையோ இருக்கலாம்.
அப்படி என்றால் இதற்க்கு என்னதான் தீர்வு? உங்கள் மனதுதான் அதற்கு சரியான தீர்வு அல்லது வழியை காட்டும். உங்கள் மனது சரியான தீர்வு அல்லது வழியை கட்ட தியானத்தின் துணையை நாடலாம்.
தியானம் பழகும்போது நட்பு மனப்பான்மை பெருகும். நட்பு மனப்பான்மை பெருகுகின்ற போது மற்றவர்கள் உங்களை அதிகம் நேசிக்க தொடங்கி விடுவார்கள். தியானத்தின் மூலம் interpersonal relationship அதிக அளவில் வளர்கின்றது என பல ஆராய்சிகள் தெரிவிக்கின்றன. தியானத்தின் மூலம் கோபம், ego, கள்ளம், கபடம், சூது, வாது போன்ற செய்கைகள், எண்ணங்கள் களைய படுகின்றன. சூது, வாது, கபடம் இல்லாத ஒருவரை பொதுவாக எல்லோருமே விரும்புவர்.
அதே போன்று உண்மையான நட்பு எது, பொய்மையான நட்பு எது, என்பதை மற்றவர்களை பார்த்த உடனேயே எடை போடசெய்யும் சக்தியும் தியானத்திற்கு உண்டு. அதனால் போலியான நட்பு கொண்டவர்களை சுலபமாக அடையாளம் காண செய்யும் சக்தி தியானத்திற்கு உண்டு.
எனவே ஒருவருடைய மனதை புண்படுத்தாத, நல்ல குணங்கள் உங்களையும் அறியாமல் உங்களிடம் குடியிருக்கும்போது மற்றவர்கள் உங்களை அதிகம் விரும்புவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
No comments:
Post a Comment