Wednesday, April 29, 2015

வெற்றியின் ரகசியம் என்ன?

வெற்றியின் ரகசியம் என்ன?

கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ், இயேசு 
கிறிஸ்து பிறப்பதற்கு முன் வாழ்ந்தவர் (469 BC–399 BC)

அவர் வாழ்ந்த காலத்தில், ஒரு நாள், ஒரு இளைஞன் வந்து அவரை சந்தித்தான். வெற்றியின் ரகசியத்தைத் தனக்கு சுருக்கமாகச் சொல்லித்தருமாறு வேண்டிக்கொண்டான்.

அடுத்த நாள் காலை, ஊருக்கு அருகில் உள்ள ஆற்றங்கரைக்கு வந்து தன்னை சந்திக்கச் சொல்லி, அப்போதைக்கு அவனை அனுப்பிவைத்தார் அவர். அவனும் மறு பேச்சின்றி  சென்று விட்டான்.

அடுத்த நாள் காலை. ஆற்றங்கரைக்கு வந்து அவரைச்  சந்தித்தான் அவன்.

தன்னுடன் சேர்ந்து நடக்குமாறு அவனைப் பணித்துவிட்டு, அவர் ஆற்றுத் தண்ணீரில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். அவனும்  நடந்தான்.

மார்பளவு நீருள்ள பகுதிக்கு இருவரும் வந்து  சேர்ந்தார்கள்.

அப்போதுதான் அது நடந்தது.

சற்றும்  எதிர்பார்க்காத வகையில், அந்த இளைஞனைத் தன் இருகரங்களாலும் பிடித்த  சாக்ரடீஸ், தன் பலம் கொண்ட மட்டும் அவனைத் தண்ணீருக்குள் அமுக்கிப்  பிடித்துக் கொண்டார்.

ஒன்றும் புரியாத இளைஞன், அவர் பிடியில்  இருந்தும், நீருக்குள் இருந்தும் விடுபட முயன்றான். முடியவில்லை.

ஒரு நிமிட மரணப் போராட்டத்திற்குப் பிறகு, தன்னை விடுவித்துக் கொண்டு மேலே  வந்தான். முகம் சிவந்துவிட்டது. மூச்சுத் திணறியதால், வேக வேகமாகக் காற்றை  உள்ளிழுத்து சுவாசிக்கத் தொடங்கினான்.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகுதான் தன்நிலைக்கு வந்தான்.

சாக்ரடீசின்மேல் மிகுந்த மரியாதை  வைத்திருந்ததால், அமைதியாகக் கேட்டான்:

“ஐயா, ஏன் இப்படிச்  செய்தீர்கள்?”

“செய்ததைவிடு! தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும்போது  உனக்கு மிக அத்யாவசியமாகத் தேவைப்பட்டது எது? - அதைச் சொல் முதலில்!” என்று பதிலுக்கு அவனைக் கேட்டார் சாக்ரடீஸ்.

“காற்று. சுவாசிப்பதற்கான  காற்று!”

“வெற்றியின் ரகசியமும் அதுதான். மோசமான நிலையில் ஒன்று தேவைப்படும் நிலையில், போராடி, அதைப் பெற்றாய் இல்லையா நீ?வெற்றியும்  அதுபோலத்தான் கிடைக்கும். வெற்றிக்கு வேறு ரகசியம் ஒன்றும் இல்லை! மூச்சு விடுபவன் மனிதன் அல்ல, முயற்சி செய்பவனே மனிதன்

வெற்றியின் ரகசியம்! + விடாமுயற்சி!

வெற்றியின் ரகசியம்! + விடாமுயற்சி!

ஓரிரு முறை முயற்சி செய்து விட்டு, "இதற்கு மேல் என்னால் முடியாது...' என்று சொல்பவன் சராசரி. "என் லட்சியத்தை எட்டும் வரை, முயற்சி செய்து கொண்டேயிருப்பேன்...' என்று சொல்பவன், சாதனையாளன்.

தோல்வியால் துவண்டவர் களை, இந்த உலகம் நினைவில் வைத்திருப்பதில்லை. தோல்வி உங்களுக்கு, புதிய உற்சாகத்தையும், வைராக்கியத்தையும் கொடுக்க வேண்டுமே தவிர, விரக்தியைக் கொடுக்கக் கூடாது. யாருக்கும் முதல் முயற்சியிலேயே, மிகப் பெரிய வெற்றி கிடைத்து விடுவதில்லை.

தடைக்கற்களை, முன்னேற்றத்துக்கான படிக்கற்கள் என்று நினைத்துக் கொள்வோம். "வீழ்ந்தோம்' என்று இந்த உலகம், நம்மைப் பற்றிச் சொல்லும் போது, அதே உலகம், "வென்றோம்' என்று சொல்லும்படி சாதித்துக் காட்டுவோம்.

தோல்வி என்றைக்கும் நிரந்தரமானதல்ல. நம்முடைய முயற்சிகளில், சில தோல்வியைத் தழுவலாம். ஆனால், முயற்சியே எடுக்காமல் விட்டு விட்டால், நம்முடைய வாழ்க்கையே தோல்வியில் முடியும்.

<<<<உடனுக்குடன் பலன் எதிர்பார்ப்பது, உடனே பலன் கிடைக்காவிட்டால், சோர்ந்து விடுவது சிறுபிள்ளைத்தனம். பிரச்னையை கண்டு, ஓடி ஒளிவது கோழைத்தனம். ஓடி ஒளிவதால், பிரச்னைக்குத் தீர்வு கிடைப்பதில்லை. பிரச்னையின் தன்மைக்கேற்ப, தீர்வு உடனே கிடைக்கலாம் அல்லது சில காலம் கழித்துக் கிடைக்கலாம்.

விடாமுயற்சியால், வரலாற்றில் இடம் பெற்ற சிலரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்:

சிறுபிள்ளையாக இருக்கையில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட வில்மாருடாப் என்ற பெண்மணி, 1960 ஒலிம்பிக்கில், ஓட்டப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார். ஐந்து வயதில் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட ஷெல்லிமான், 1956 ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில், தங்கப் பதக்கம் பெற்றார்.

ஒரு ஊருக்குச் செல்வதற்கு, பல வழிகள் இருப்பது போல, நம்முடைய இலக்கை அடைவதற்கும், பல்வேறு வழிகள் உள்ளன. ஒரு வழி அடைபட்டால், மாற்று வழி பற்றி யோசிக்க வேண்டும். மிகப் பிரபலமான விஞ்ஞானி, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம், முட்டாள் தனத்துக்கு விளக்கம் கேட்ட போது, "ஒரே வேலையை, திரும்பத் திரும்ப ஒரே மாதிரி செய்துவிட்டு, வித்தியாசமான பலனை எதிர்பார்ப்பதற்கு பெயர் தான் முட்டாள்தனம்...' என்றாராம்.

அலெக்சாண்டர் கிரகாம் பெல், காது கேளாத தன் மனைவிக்கு, காது கேட்பதற்காக கருவி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது தான், தொலைபேசியைத் தற்செயலாக கண்டுபிடித்தார். உங்களுக்குப் புதிய வாய்ப்பு, பிரச்னை உருவத்தில் வரலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நமக்குத் தோல்வியோ, பின்னடைவோ வரும் போது, நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் இதோ... "தோல்வி அல்லது பின்னடைவுக்கு என்ன காரணம்? எங்கே தவறு நடந்தது? நான் இதிலிருந்து கற்றுக் கொண்ட பாடம் என்ன? இனிமேல் இந்த மாதிரி தவறு நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?'

சாதனையாளர்கள், தங்களுடைய முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று விடுவதில்லை. தான் இழந்த நாட்டை மீட்கப் போராடிய ராபர்ட் புரூஸ், இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் போன்ற பலரும், தங்களின் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறவில்லை. தேசிய கவி பாரதியாரும், கவிஞர் கண்ணதாசனும், தங்களின் ஆரம்பகால கவிதைப் போட்டியில், முதல் பரிசு பெறவில்லை.

அமெரிக்கா ஜனாதிபதியாகி, அடிமைத்தனத்தை ஒழித்து, வரலாறு படைத்த ஆபிரகாம் லிங்கன், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன், ஐந்து முறை பல்வேறு தேர்தல்களில் தோல்வியைத் தழுவியவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தங்கள் பிள்ளை சரியாகப் படிக்கவில்லையே என்று புலம்பும் பெற்றோருக்கு, விஞ்ஞானி எடிசனின் நிஜவாழ்க்கைக் கதை தைரியமூட்டும். மின்சார விளக்கு உட்பட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான விஞ்ஞானி, தாமஸ் ஆல்வா எடிசனுக்கு, காது சரிவரக் கேட்காது. மூன்று மாதமே பள்ளியில் படித்தவர். "அடிமக்கு' என்று, ஆசிரியர்களால் முத்திரை குத்தப்பட்டு, பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டார்.

ஆயிரம் முறை புதுப்புது வழிகளில் முயற்சி செய்தும், மின்சார விளக்கைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதைப் பார்த்து, மற்றவர்கள் கிண்டல் செய்த போது, "நான் ஆயிரம் வழிகளில் மின்சார விளக்கு எரியாது என்ற உண்மையைக் கண்டுபிடித்தேன் அல்லவா?' என்று தமாசாகப் பதிலளித்தார். தன், 67 வயதில், இவரது ஆராய்ச்சி மையம், தீ விபத்தில் சாம்பலாகியது. அப்போது, அவர், "பரவாயில்லை, கடவுள் புதிய கண்டுபிடிப்புக்கு வழி வகுத்துக் கொடுத்துள்ளார்...' என்று கூறினார். விடா முயற்சிக்கும், மனவலிமைக்கும் எடிசனைத் தவிர, வேறு யாரை உதாரணமாகச் சொல்லுவது?

பீதோவன் காது கேளாதவர். இளம் வயதில், இசை ஞானம் இல்லாதவர் என்று ஒதுக்கப்பட்டவர். ஆனால், பிற்காலத்தில் உலகிலேயே உன்னதமான இசையை உருவாக்கியவர் என்று புகழப் பட்டார்.

மிகச் சிறந்த அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒருவராகக் கருதப்பட்ட ப்ராங்ளின் ரூஸ்வெல்ட், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, இரண்டாம் உலகப் போரின் போது, அமெரிக்காவை வழி நடத்தி வெற்றி கண்டார்.
நேருவுக்கு பின், இந்தியப் பிரதமரான லால்பகதூர் சாஸ்திரி, பள்ளிக்குச் செல்வதற்கு தினமும் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். ஆற்றின் குறுக்கே, பாலம் இல்லாததால், புத்தகத்தையும், கழற்றிய உடையையும், தலைக்கு மேல் சுமந்தபடி நீச்சலடித்து, தினமும் அக்கரையை அடைந்திருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அதிகாலையில் வீடு வீடாகச் சென்று பேப்பர் போட்டு, பள்ளிக்குச் சென்றிருக்கிறார். இப்படிச் சொல்ல ஆரம்பித்தால், சுதந்திர இந்தியாவில், அடி மட்டத்திலிருந்து புகழின் உச்சத்தை அடைந்தவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
மிகச் சிறந்த சாதனையாளர்கள் கூட, ஆரம்ப காலத்தில் தடுக்கி விழுந்திருக்கின்றனர். "போர்டு' என்ற கார் கம்பெனியை நிறுவி, புதிய கார்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய கோடீஸ்வரரான ஹென்றி போர்டு, முதல் காரை உருவாக்கும் போது, ரிவர்ஸ் கியரைப் பொருத்த மறந்து விட்டார்.

தோல்வியடைந்து விடுவோமோ, அவமானப்பட்டு விடுவோமோ என்று பயந்தே, பலர் முயற்சி செய்வதேயில்லை.

இன்று, உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் பில் கேட்சும், ஆப்பிள் நிறுவனத்தின் மூலம், கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்திய, ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகிய இருவரும், கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே விட்டவர்கள். பில்கேட்ஸ், தன் நண்பரோடு, வீட்டில் கார் நிறுத்துமிடத்தில் ஆரம்பித்த நிறுவனம் தான், உலகப் புகழ்பெற்ற மைக்ரோசாப்ட்.

இந்திய கம்ப்யூட்டர் துறையில் முத்திரை பதித்த நாராயணமூர்த்தி, கையிலிருந்த வேலையை விட்டு விட்டு, இந்தியாவை கம்ப்யூட்டர் துறையில் முன்னணிக்குக் கொண்டு வர வேண்டுமென்ற நோக்கத்தில், கம்ப்யூட்டர் தொழில் துவங்க நினைத்தார். இவரது ஆரம்பகால முயற்சி, தோல்வியைத் தழுவியது. இறுதியில், தொழில் துவங்க கையில் பணமில்லாமல் திண்டாடிய போது, மனைவி தன் நகையை விற்றுக் கொடுத்த, 10,000 ரூபாயை வைத்து, மற்ற நண்பர்களுடன் துவங்கிய நிறுவனம் தான், இன்று இந்தியாவில் முன்னணியில் இருக்கும் கம்ப்யூட்டர் நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ்.

தனக்கு நிறைய திறமையிருந்தும், அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுபவர்கள், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். புகழின் உச்சிக்குச் சென்ற பலர், ஆரம்ப காலத்தில் அங்கீகாரம் கிடைக்காமல், போராட நேர்ந்திருக்கிறது.

ஒரு துறையில் சாதனை படைக்க, இளம் மேதையாக இருந்திருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. ஆர்வமும், ஈடுபாடும், திறமையும், உழைப்பும் இருந்தால், எந்த வயதிலும் சாதனை படைக்கலாம்.

மிகச்சிறந்த சாதனையாளர்கள் துரதிர்ஷ்டவசமாக சறுக்கி விழ நேர்ந்தாலும், அவர்களுடைய தன்னம்பிக்கையும், கம்பீரமும் சற்றும் குறைவதில்லை.

எல்லா தோல்விகளும், அனைவரையும் ஒரே மாதிரி பாதிப்பதில்லை. உதாரணமாக, தேர்வு, போட்டி, வியாபாரம் மற்றும் காதலில் தோல்வியடைந்தவர்களில், தற்கொலை செய்து கொள்பவர்கள் ஒரு ரகம். ஆனால், அவர்களை விட மோசமான தோல்வியடைந்தவர்கள், "பரவாயில்லை, எனக்கு இது ஒரு நல்ல பாடம்...' என்று ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொள்பவர்கள் மறு ரகம். நாம் இந்த இரண்டாவது ரகத்தைச் சார்ந்தவராக இருக்கலாம்! எப்போதெல்லாம் பிரச்னை மற்றும் தோல்வியைச் சந்திக்க நேர்கிறதோ, அப்போது இரண்டு கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்வோம், "அதனால் என்ன? அடுத்து என்ன?'

நல்ல வழி தானாகவே பிறக்கும்

வெற்றியின் ரகசியம்

வெற்றியின் ரகசியம் 

எத்தனையோ மகான்களின் சமாதி மற்றும் ஒடுக்கங்களை வழிபட்டு வரக்கூடிய எனக்கு மிகவும் பிடித்தமான இடம் விஜயாபதி. விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். இந்த இடத்தின் ரகசியத்தை முழுமையாக அறியாத வரையில் என் வாழ்க்கையில் வெற்றி என்பது எட்டிப்பிடிக்க முடியாத தூரம் ஆகும். ஆனால், இன்று என் வாழ்க்கையில் வெற்றி என்பது தொடக்கூடிய தூரம் ஆகும்.

அப்படி என்னதான் இந்த இடத்தில் ரகசியம் உள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் குலகுரு வெள்ளைச்சாமி அடிகள் அருளாலும், நான் விடும் மூச்சுக் காற்றின் வழியாக என்னை வழிநடத்தும் குருவருளாலும் இந்த இடத்தின் ரகசியத்தை அறிந்து கொள்ள முடிந்தது.

வெற்றியின் ரகசியம் விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். யார் இந்த விஸ்வாமித்திர மகாரிஷி என்றால் தன் உடலாகிய காயத்தை திரியாக மாற்றி அதிலே தீபம் ஏற்றி பிரம்மமாகிய இறைவனைக் கண்டு உலகில் சகல பாவங்களையும் நீக்கும் காயத்திரி மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் ஆவார். தர்ம தேவனால் விஸ்வா மித்திரன் என்று அழைக்கப்பட்டவர் விஸ்வம் என்றால் உலகம், மித்திரன் என்றால் நண்பன் ஆகும். ஆகவே உலக நண்பன் என்று முதன்முதலில் அழைக்கப்பட்டவர். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இறைவனுக்கு போட்டியாக திரிசங்கு என்ற நண்பனுக்கு சொர்க்கத்தை அமைத்தவர். அடிக்கடி உணர்ச்சி வசப்படுபவர், கோபப்படுபவர். இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் வெற்றியின் ரகசியம் ஆரம்பமாகிறது.

இறைவனுக்குப் போட்டியாக சொர்க்கத்தைப் படைத்த காரணத்தால் தன்னுடைய தவசக்தியை முழுமையாக இழந்த விஸ்வாமித்திர மகரிஷி அந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும். இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் உள்ள இடிந்தகரை ஊருக்கு அடுத்து உள்ளது. இங்கே வந்து தவம் செய்யும்பொழுது தவத்தைத் கெடுக்கும் வகையில் இருந்த தாடகை என்ற அரக்கியை வதம் செய்ய தசரதசக்கரவர்த்தியின் புதல்வர்களாகிய இராமன், லட்சுமணனை அழைத்துக் கொண்டு விஜயாபதி என்ற இந்த இடத்திற்கு வந்தார். இந்த இடம் அந்தக் காலத்தில் தில்லை மரங்கள் நிறைந்த வனப்பகுதியாகும்.

அருகில் கடற்கரை அமையப் பெற்ற இடம் ஆகும். தன்னுடைய தவத்தைத் தொடங்க தன்னுடைய இஷ்ட்ட தெய்வமான பராசக்தியான தில்லை மகா காளியை சிதம்பரத்தில் இருந்து அழைத்து வந்து கடற்கரை ஓரத்தில் பிரதிஷ்டை செய்தார். மேலும் தவத்தின் போது இரவு, பகல் பாராமல் பசி, தூக்கம் தெரியாமல் இருக்க வேண்டி ராமர், லட்சுமணருக்கு பலா அதிபலா என்ற மந்திரத்தை குரு உபதேசம் செய்தார். இங்கு ஒரு ரகசியம் மறைவாக உள்ளது. ஏனெனில் தசரதனின் குரு வசிஷ்ட்ட மகரிஷி ஆவார். இந்த வசிஷ்ட்ட மகரிஷியினால் வளர்க்கப்பட்டவர்கள் இராமர் லட்சுமணர் ஆவார்கள். ஆனால் இராமன் லட்சுமணர்களுக்கு குருவாக இருந்து குருமந்திர உபதேசம் செய்தவர் விஷ்வாமித்திர மகரிஷி ஆவார். ஆகவே இராமர், லட்சுமணரின் குருநாதர் பிரம்மரிஷி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட விஷ்வாமித்திர மகரிஷி ஆவார்.

இதனை படிக்கும் அன்பர்கள் மறக்காமல் இதனை புரிந்து கொள்ள வேண்டும் தாடகை என்ற அரக்கியை இராமர், லட்சுமணர்கள் வதம் செய்தனர். விஷ்வாமித்திர மகரிஷி இழந்த சக்தியை மீண்டும் திரும்பப் பெற்றார். இராமர், லட்சுமணருக்கு பெண்ணை வதம் செய்ததால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. இதனை நீக்குவதற்கு சிவனையும், தாய் அகிலாண்ட ஈஸ்வரியை பிரதிஷ்டை செய்து அந்த இடத்தில் உள்ள கடற்கரையில் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கினார். தனக்கு உதவிய ராமனுக்குப் பரிசளிக்க விரும்பி ராமனை அழைத்துக் கொண்டு மிதிலைக்குச் சென்றார். ஏனெனில் மிதிலையில் ஜனக மன்னனின் மகள் சீதா திருமணம் நடைபெற சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. ராமனுக்கு சீதையை மணம் முடிக்க வேண்டும் என்பது விஷ்வாமித்திரரின் ஆசை ஆகும். காலத்தின் கட்டாயமும் அதுவாகும். ஆனால், தசரதனின் குருநாதர் வசிஷ்ட்டர் விஷ்வாமித்திர மகரிஷியின் எதிரி போன்றவர். விஸ்வா மித்திரர் பிரம்ம ரிஷி பட்டம் பெறுவதை விரும்பாதவர் ஆவார். இந்த வசிஷ்ட்ட மகரிஷி சீதை இருவரால் கவர்ந்து செல்லப்பட வேண்டும் என்று விதி உள்ளது. எனவே ராமனுக்கு சீதையை கல்யாணம் செய்யக்கூடாது என்று கூறி தடை செய்தவர். ஆனால் இந்த தடையை மீறி விஷ்வாமித்திரரின் அருளால் இராமன் வில்லை வளைத்து சீதையை மணம் முடிக்கச் சென்றார்.

திருமணத்தைத் தலைமையேற்று நடத்தித் தர விஷ்வாமித்திரரும் சென்றார். ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தில் விஷ்வாமித்திரரை அவமானப்படுத்தக் காத்திருந்த வசிஷ்ட்டர் தசரதனின் துணையுடன் ராமன் திருமணத்தை நடத்தினார். ராமன் தன்னுடைய குரு விஷ்வாமித்திரர் தான் திருமணத்தை நடத்தித்தர வேண்டும் என்று சபையில் எடுத்துக்கூறாமல் மவுனம் காத்தார். இதனால் குருவின் மன வருத்தத்திற்கு ஆளானார். திருமணத்தை நடத்தக்கூடாது என்ற வசிஷ்ட்டர் தன் சுயநலத்திற்காக திருமண சடங்கை நடத்தினார். இதனால் ராமன், சீதா திருமண வாழ்க்கையில் துன்பமும், போராட்டமும் நிறைந்ததாக அமைந்தது. இதிலிருந்து நாம் புரிய வேண்டியது என்னவென்றால் தாய், தந்தையை விட குருவே மேலானவர் ஆவார் என்பதை உணர வேண்டும். எனவே நாம் அனைவரும

ஓம் விஸ்வாமித்ராய வித்மஹே

பிரம்ம ரிஷியாய தீம மஹி

தன்னோ சத்திய மித்திர ப்ரசோதயாத்

என்று அனுதினமும் ஜெபித்து குருவருளைப் பெறுவோம்.

முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் என்ற புராண சிறப்பினை அறிவோம். தில்லை மரங்கள் அடர்ந்த காடு போன்ற இந்த கடற்கரை பகுதியில் தற்சமயம் இரண்டு தில்லை மரங்கள் மட்டுமே சாட்சியாக இருக்கின்றன. கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் அன்னை தில்லை மகா காளி குடியிருந்து அருள் ஆட்சி செய்து வருகிறார்.

இங்கு இவர்களுக்கு கொய்யா பழம், சாக்லேட், மிட்டாய், எள்மிட்டாய் நெய்வேத்தியமாக படைக்கப்படுகிறது. இதன் மூலம் நம் குடும்பத்தில் இறந்த சிறு கன்னி தெய்வங்களின் ஆத்மா மற்றும் முன்னோர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடைய வழி கிடைக்கிறது. மேலும் இங்குள்ள கடற்கரை மண்ணில் புரண்டு, உருண்டு எழுந்து மீண்டும் கடல் நீராடி பின்பு தில்லை காளியை வணங்குவதன் மூலம் நம்முடைய பாவகர்மாக்களை அன்னை காளி நீக்கி அருள்புரிகிறார். மேலும் விஷ்வாமித்திரரால் பூஜிக்கப்பட்ட ஓம குண்ட விநாயகர் கோவில், சிவன் சந்நிதி, தாய் அகிலாண்டேஸ்வரி, கன்னி மூல கணபதி, வள்ளி தெய்வானை சமேத முருகன், கால பைரவர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் அமையப்பெற்றுள்ளன. இவற்றில் சிகரம் வைத்தாற்போல கோவிலின் பின்புறம் இராஜராஜேஸ்வரி பீடம் மற்றும் சித்தர் சன்னதி அமைய பெற்றுள்ளது. இங்கு ஒவ்வொரு பௌர்ணமி இரவும் பக்தகோடிகளால் சிறப்பாக அன்னதானத்துடன் பௌர்ணமி பூஜை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இங்கு விஷ்வாமித்திர மகரிஷியின் சூட்சம சமாதி நிலையும் அமையப் பெற்றுள்ளது. இந்த தகவல் வல்லநாட்டு சித்தர் சாது சிதம்பர சுவாமிகளால் கண்டு உணர்ந்து சொல்லப்பட்டது. இந்த ஆலயம் சுமார் 60வருடங்களுக்கு முன்பு சிதிலம் அடைந்து இருந்த காலத்தில் வல்லநாட்டு சுவாமி சாது சிதம்பரம் அவர்களால் இரண்டு முறை 1008 நவக்கிரக தீப ஜோதி ஏற்றி வழிபட்டு பூஜை செய்யப்பட்ட பின்பு தான் இன்று தமிழகம் முழுவதும் பக்தர்களால் வழிபட கூடிய சிறந்த பரிகாரஸ்தலமாக விளங்குகிறது.

இக்கோயில் சிறப்புகள்:

இக்கோவிலில் செய்யப்படும் நவ அபிஷேகபரிகார பூஜையின் பயனாக நம்முடைய முற்பிறவி மற்றும் இப்பிறவியில் செய்த பாவகர்மாக்கள் மற்றும் நவகிரக தோஷங்கள் நீக்கப்படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம்

1. தீராத கர்ம வியாதிகள், ஆயள் கண்டம்.

2. எதிர்ப்புகள்,கோர்ட், கேஸ் விவகாரங்கள்.

3. குழந்தை பாக்கிய தடை பிரச்சனைகள்.

4. தொழில் முடக்கம், புத்தி மாறாட்டம் போன்ற பிரச்சனைகள் நிவர்த்தி ஆவதை நான் 100 சதவீதம் பரிபூரணமாக உணர்ந்திருக்கிறேன். மேலும் ஒவ்வொரு ஜோதிடரும் கட்டாயம் 3 வருடங்களுக்கு ஒரு முறை இங்குள்ள கடலில் குளித்து விநாயகர், காளி, சிவனை வணங்கி பின்புறம் உள்ள விஷ்வாமித்திரர் சித்தர் பீடத்தில் ராஜராஜேஸ்வரி பீடத்தில் அவரவர் பிறந்த நட்சத்திரத்தின் அதிபதிக்கு உரிய எண்ணிக்கையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர கட்டாயம் ஜோதிடத்தில் வாக்குபலிதம் அதிகரிக்கும் என்பது நான் கண்டு உணர்ந்த அனுபவ உண்மை ஆகும்.

மூன்று பௌர்ணமிக்கு மற்றும் அமாவாசைக்கு தொடர்ந்து சென்று தீபம் ஏற்றினால் எப்படிப்பட்ட பிரச்சனைனகளையும் தவிடுபொடியாக்கி விஸ்வாமித்திர மகரிஷி காத்து அருள்வார். இங்குள்ள கடலில் குளித்துவிட்டு குளித்த ஆடைகளை கடலில் விட்டுவிட வேண்டும். மேலும் இங்குள்ள கோவிலில் இருந்து எந்த ஒரு பிரசாதங்களையும் வீட்டிற்கு கொண்டு செல்ல கூடாது. நான் பெற்ற இன்பத்தை வாசகர்களுக்கு படம் பிடித்து காட்டி விட்டேன்.

வேணும் சுபம் வல்லநாட்டு சுவாமி அருள் துணை! ஸ்ரீகண்ணையா யோகி அருள் துணை! ஸ்ரீவெள்ளைச்சாமி அடிகள் அருள் துணை!

உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?

உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?

எல்லோரும் மற்றவர்களைப் பார்த்து உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்கத் துடிப்பார்கள். அது மட்டுமல்ல பலர், வெற்றி பெற்றவர்களைப் பார்த்து, அவரின் வெற்றியின் ரகசியம் என்னவாக இருக்கும்? யாரோ பலே பார்ட்டியின் சப்போர்ட் இருக்கும் போல… இல்லேன்னா எப்படி வெற்றியை இவ்வளவு எளிதில் அடைந்து இருக்க முடியும்' என்று தலையைப் பிய்த்துக் கொள்வதும் உண்டு. இதோ அந்த ரகசியம் உங்களுக்கு மட்டும்!! 

ஒரு மகாராஜா தன் அரண்மனையில் மிகச் சிறந்த சேவல் ஓவியத்தை வைக்க நினைத்தார். மன்னனின் ஆசை காட்டுத் தீ போல் எல்லா ஊரிலும் பரவியது. ஏத்தனையோ ஓவியங்கள் வந்தும் அவற்றில் மன்னனுக்கு முழுத் திருப்தி ஏற்படவில்லை. மற்ற நாடுகளில் உள்ள ஓவியர்களுக்காக ஒரு போட்டி வைத்தார் மன்னர்.
அவரது ஆசை போல், மற்ற நாட்டு ஓவியர்கள் வரைந்த படங்கள் மன்னரின் பார்வைக்காக வைக்கப்பட்டன. மன்னர் தான் குழந்தையாக இருந்த போது தனக்கு ஓவியம் கற்றுக் கொடுத்த அந்த வயதான ஓவிய ஆசிரியரை இப்போட்டியின் நீதிபதியாக நியமித்தார்.
எல்லா ஓவியங்களையும் பார்த்த அந்த வயதான ஆசிரியர் மீண்டும் ஒருமுறை ஓவியங்களைப் பார்த்தார். கன்னத்தைத் தடவிய படியே நடந்த அவரிடம், மன்னர்.

"என்ன சிறந்த சேவல் ஓவியத்தைத் தேர்வு செய்து விட்டீர்களா?" என ஆசையாகக் கேட்டார். "இந்தப் போட்டிக்கு இதில் எந்த ஓவியமும் தகுதி ஆனது இல்லை" என்றார். ஆசிரியர் அமைதியாக, எல்லோரும் வாயடைத்துப் போனார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு, "இந்த ஓவியங்கள் வைத்த அறையில், சேவல்களை விடுவோம். ஒரே இனத்தைச் சேர்ந்த மற்ற சேவலைப் பார்த்ததும், சேவலுக்குச் சண்டை போடத் தோன்றும். அப்படி எந்தச் சேவல், எந்த ஓவியத்தைப் பார்த்துச் சண்டை போடத் துவங்குகிறதோ, அந்த ஓவியம்தான் மிகச் சிறந்த ஓவியம் என்று முடிவு செய்வோம்" என்றார் அந்த ஓவிய ஆசிரியர்.

அவரது வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாமல், மன்னர் அந்த அறையில் நிறைய சேவல்களைக் கொண்டு வந்து விட கட்டளை பிறப்பித்தார். ஆனால் வந்த சேவல்கள் எந்த ஓவியத்தையும் பார்த்துச் சண்டை போடாமல், நேரே வெளியே வந்தன.

மன்னர் மனம் தளராமல், "சேவல்களைச் சண்டை போடத் தூண்டும் அந்த ஓவியத்தை நீங்கள் ஏன் வரையக்கூடாது?" என ஓவிய ஆசிரியரைப் பார்த்துக் கேட்டார்.

"மன்னர் உங்கள் சித்தம். ஆனால் எனக்கு ஆறு மாத கால அவகாசம் தேவை" என்றார் முதியவர். மன்னரும் சரி என்று "ஆறு மாதம் கழித்து, இதே அறையில் இப்போட்டி நடக்கட்டும்" என்று கட்டளை பிறப்பித்தார். காலம் சுற்றியது. சரியாக ஆறு மாதம் ஆனதும், அதே அறையில் எல்லா ஓவியர்களும் மீண்டும் கூடினார்கள். ஆனால் அந்த முதியவர் கையில் எந்த ஓவியத்தையும் கொண்டு வரவில்லை. மன்னர் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

"மன்னா ! இப்போது இங்கேயே அரை மணியில் வரைகிறேன். எனக்கு அதற்கான உபகரணங்கள் தேவை" என்று முதியவர் கூறியதும், அனைத்தும் வந்து சேர்ந்தன. ஓவியர் கடகடவென ஓவியத்தை வரைந்தார். பிறகு அதை மற்ற ஓவியங்களோடு வைத்தார். மீண்டும் அந்த அறைக்குச் சேவல்கள் அனுப்பப்பட்டன. எல்லோரும் மிக ஆவலாகக் காத்திருக்க, அவரது ஓவியத்தைப் பார்த்து ஒரு சேவல் அதில் வரையப்பட்டிருந்த சேவலை நிஜ சேவலாக நினைத்துச் சண்டைக்குப் போனது ! அப்போட்டியில் வெற்றி  பெற்றது இவரது ஓவியம்தான் !

மன்னனுக்கு ரொம்ப சந்தோஷம். "உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? ஏன் ஆறு மாத காலம் உங்களுக்குத் தேவைப்பட்டது? இருப்பினும், நீங்கள் அப்போது எதுவும் வரையாமல், கடைசியில் வரைய அரைமணி நேரம் ஏன் கேட்டீர்களா?" என மன்னர் அந்த முதியவரிடம் கேட்டார்.

"மன்னா, கடந்த ஆறு மாதமாக நான் கோழி, சேவல்களோடு வாழ்ந்தேன் . அவை எப்படி உணவு உண்கிறதோ, அதுபோன்றே நானும் உணவு உட்கொண்டேன். அவை எப்படி நடக்கிறதோ அது போலவே நானும் நடந்தேன். அவை எப்படி தூங்குகிறதோ அது போலவே நானும் தூங்கினேன். நானே கோழியாக ஒன்றிப்போய் கோழியாகவே மாறி விட்டேன். அதற்குப் பிறகுதான் நான் அந்த சேவல் படத்தை வரைந்தேன்" என்று அந்த முதியவர் கூறினார்.
ஆகவே ஒரு காரியத்தில் ஒன்றிப் போதல் என்பது மிகவும் அவசியம். வெற்றியின் ரகசியம் ஈடுபட்ட காரியத்தில் ஒன்றிப் போவதுதான். அது எந்தக் காரியமாக இருந்தாலும் முழு ஈடுபாடும், ஒன்றிப் போவதும் முக்கியம்.

பிராத்தனை போதும், நாம் கடவுலோடு  ஒன்றிப்போக வேண்டும். அப்படிச் செய்தால் நம் பிராத்தனை  நிறைவேறும். வெறும் முணுமுணுத்தால் போதாது. அதோடு ஒன்றிப் போய் பிரார்த்தனை செய்ய வேண்டும். வீட்டு வேலையாக இருந்தாலும், அலுவலக வேலையாக இருந்தாலும் படிப்பாக இருந்தாலும் எடுத்த காரியத்தோடு நாம் ஒன்றிப் போனால், வெற்றி நிச்சயம்.

Monday, April 27, 2015

உண்மையின் தத்துவங்கள்

உண்மையின் தத்துவங்கள்

01. ஒவ்வோர் இன்பமும் இறுதியில் துன்பமாகப் பரிணமிப்பதை ஒவ்வொருவரும் நாளடைவில் அறிவார்கள்.

02. காதுகள் இருந்தும், புண்ணியக் கதைகளைக் கேட்காதவன், பகுத்தறிவு இல்லாத பசுக்கள் முதலான பிராணிகளுக்கே ஒப்பாவார்கள்.

03. நல்லது செய்வோன் எவனும் நலிவுறுதல் இல்லை. அதே போன்று தீயது செய்பவன் எவனும் அதன் பலனை அனுபவிக்காமல் விட்டதுமில்லை.

04. இப் புவியில் பிறந்த எந்த மனிதனும் பிற மனிதனால் இரட்சிக்கப்படுகிறான் என்றோ, அழிக்கப்படுகிறான் என்றோ கூறுவது மடத்தனமானது.

05. உறுதியான மனமுடையோன் தான் செய்யும் காரியம் அனைத்தும் தான் செய்ததாகக் கருதமாட்டான்.

06. தெய்வத்தை மனிதன் யாண்டும் முழுமனதோடு ஆராதித்தால், அத் தெய்வத்தின் விபூதிகளெல்லாம் அம் மனிதனை வந்தடைகின்றன.

07. அரசமரத்தின் விதை கண்ணுக்குத் தெரியாது. அது மிகவும் நுட்பமானது. ஆனால் அது ஒரு கட்டிடத்தின் இடுக்கில் விழுந்து வேர்விட்டுச் செடியாகி, மரமாகிக் கட்டிடத்தையே பெயர்த்துத் தள்ளுகிறது அப்படித்தான் நல்லவர் மனதையும் மிக எளிதில் கெட்ட சக்தி மாற்றி அணைய வைக்கும்

08. இனிய வாழ்க்கை கிட்டும் என்ற விருப்பத்தில் பரதர்மத்தில் பிரவேசிப்பது குளத்தில் குளிக்கப் போய் சேற்றை அள்ளிப் பூசுவது போலாகும்.

09. நம்பிக்கை இல்லாதவனுக்கு இவ்வுலகம் இல்லை, அவ்வுலகமும் இல்லை.

10. கடவுளைக் கான் நினைப்பவனுக்கு கல்லும் கடவுளே, கடவுளைக் கல்லாகப் பார்ப்பவனுக்கு கடவுளும் கல்லே.

11. சத்தியவான்களான உத்தம புருஷர்களுக்கு கிருதயுகம் யுத்தமானது என்றும் பொய்மையாளர்களான அதர்மபுருஷர்களுக்கு கலியுகம் உன்னதமானதென்றும் கலியுகத்தில் ஒருவன் சத்தியவானாகவும், தருமாத்மாவாகவும் இருந்தால் பூலோகத்தார் அவனைப் பரிகாசம் செய்வார்களே தவிரப் பெரிதாகப் போற்றமாட்டார்கள்.

12. நீரில் ஏற்படும் நுரைக்குச் சமமான இந்த மனிதப் பிறவியை நிலையானது என்று எண்ணுகின்றனரே மூடர்கள்.

13. இந்த வையகம் முழுவதையும் தமதாக்கிக் கொள்ள வேண்டும் என்று பேராசை கொண்டு ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டிருக்கின்றனரே அந்தோ பரிதாபம்.

14. நம் முன்னோர்கள் கொண்டு போக முடியாததை நாம் மட்டும் கொண்டு போக முடியுமா? இதையெண்ணிப் பார்ப்பதில்லையே என் செய்வேன் யான்.

15. பராக்கிரமமும் நான் என்ற மமதையும் நானே செய்தேன் இனியும் நானே செய்வேன் என்ற ஆணவமெல்லாம் நெருப்பில் பட்ட இலவம் பஞ்சு போல் காலமென்னும் சக்கரத்தில் அகப்பட்டு அழிந்து விடும்.

Friday, April 24, 2015

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?!

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?!

ஒன்றை இழந்துதான் மற்றொன்றை பெற வேண்டும். தன்னுடைய இளம்பருவத்தை வறுமையில் கழித்தவர்கள் வசதிக்காக ஏங்குகிறார்கள். எந்த பணம் அவர்களைத் துன்பத்திலும், சோதனையிலும் தவிக்கவிட்டு வேடிக்கை பார்த்ததோ, அந்த பணத்தை திகட்டுமளவு சம்பாதிக்கும் ஆசை அவர்களுக்கு வந்து விடுகிறது. தங்கள் தூக்கத்தை இழந்து, ஓய்வை இழந்து, பல இனிய அனுபவங்களை இழந்து பணத்தை குவிக்கிறார்கள்.

எண்ணம் சக்தி வாய்ந்தது. ஆயுதத்தை விட மதிப்பு மிக்கது. எண்ணத்தில் இருந்தே செயலுக்கான தூண்டுதலை நாம் பெறுகிறோம். நல்ல எண்ணங்கள், நல்ல விளைவுகளைம், தீய எண்ணங்கள் தீய விளைவுகளையும் தத்தம் செயலின் வழியே கொண்டிருக்கும். எண்ணமே வாழ்க்கையை

வடிவமைக்கிறது.பணத்தின் மீது விருப்பம் இருக்கலாம், ஆசை இருக்கலாம். ஆனால் அதுவே வெறியாகி விடக் கூடாது.

நீங்கள் எதை வேண்டுமானாலும் அடுத்தவர் தலையில் கட்டிவிட முடியும். ஆனால் உங்கள் கவலையை அவர்கள் மீது சுமத்த முடியாது.

மனிதர்கள் இரண்டு வகை. எதற்குமே கவலை படாதவர்கள், எடுத்ததற்கெல்லாம் கவலைபடுகிறவர்கள் என இரண்டு வகை. நியாயமான கவலைகள் மனித இயல்பு. நேற்று வரை தொலைந்து போன பணத்துக்காகக் கவலைபடுவதும், அடுத்து தொலைத்ததை விட பணக்கார உறவினர் முலமாக அதிகபணம் ஈட்டிவிட முடிமா என்ற எதிர்பார்ப்பதும் எப்படி நியாயமான கவலையாகும்?

வாங்கிய கடனை எப்படிக் கொடுப்பது? கொடுத்த கடன் திரும்ப வருமா? பைக்கில் சென்ற கணவன் பத்திரமாக வீடு திரும்புவானா? இப்படி கணக்கில்லாத கவலைகளும் சிலருக்கு எட்டிபார்க்கும்.

கவலைகள் காளான்களாய் முளைக்கும். விட்டு வைத்தால் மலையாக மாறி நம்மை மலைக்கச் செய்யும்.

அனாவசியக் கவலைகளுக்கு இடமளிக்க வேண்டாம். அவை உங்கள் கனவுகளின் வண்ணங்களை இழக்கச் செய்யும். கவலை உங்களுடைய ஊக்கத்தை நலியச் செய்து விடும். ஊக்கத்தை இழந்தால் நீங்கள் வெற்றியில் இருந்து வெகுதூரம் விலகி நிற்கும்படியாகி விடும்.

இதை புரிந்து கொள்கிறவரை வாழ்க்கையில் உண்மையான எதிர்பார்ப்பு மற்றும் திருப்தி எது என்பதை நாம் உணர முடிவதில்லை.

நமக்கு மகிழ்ச்சி என்பது பொருட்களில் இல்லை. அவற்றை பெறுவதில் இருக்கிறது. அதனால் தான் நாம் கடைகடையாக ஏறி, நமக்கு பிடித்தமானதை வாங்குகிறோம். மகிழ்ச்சி எங்கெல்லாம் இருக்கிறது? ஒலிக்கின்ற அருவியில், உலவுகின்ற காற்றில், அழகு பூக்களில், கவலை சிறிதுமில்லாத குழந்தையின் முகத்தில்… இப்படி எண்ணற்ற இடங்களில் மகிழ்ச்சி பரவிக் கிடக்கிறது.

சவால் என்பது சாதாரணமல்ல… ஒரு சவாலை நீங்கள் எதிர்கொள்கிற போது அது உள்ளடக்கிய அநேக பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சவால்கள் வளர்ச்சிக்கு அவசியம். அவற்றை வெல்கிறபோது நீங்கள் வளர்ச்சி அடைகிறீர்கள் என்று அர்த்தம்..

நம்முடைய ஆற்றலை உறுதியான முறையில் பயன்படுத்துகிறபோது, நமது வாழ்விலும் அற்புதங்கள் நிகழும்.

ங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள், எப்படி உணர்கிறீர்கள், நம்புகிறீர்கள் என்பதை பொறுத்தே உங்களுடைய வெற்றி நிர்ணயிக்கபடுகிறது. உங்களுடைய வழக்கமான சிந்திக்கும் முறைதான் வெற்றி அல்லது தோல்விக்கான விதையை உங்கள் மனதில் ஊன்றுகிறது.

வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்படுவதற்கு, உங்களுக்குள் ஏராளமான திறன்கள் காத்திருக்கின்றன என்றாலும் அதை கண்டுகொள்ள வேண்டும், அதை கருத்தாய் வளர்க்க வேண்டும். நம்முடைய திறமையைக் கொண்டு பல உன்னதங்களை நாம் நிகழ்த்த முடியும் என்று நம்புங்கள்.

எதுவுமே இல்லாதிருப்பதை விட ஏதாவது ஒன்றை பெற்றிருபது மேலானது என்பார்கள். நம்பிக்கை என்பது விரும்பிய விதத்தில் எண்ணமிடுவது அல்ல, ஒன்றைத் திடமாக நம்புவது.

ஒரு எண்ணத்தை, ஒரு திட்டத்தை, ஒரு செயலால் உங்களால் உருவாக்க முடியும். பின்னணியில் வலுவான நம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியம்.

ஒரு விதையளவு நம்பிக்கை இருந்தால் போதும். சிறிய விதைதான்… ஆனால் அது விதைக்கபட்டு விடுகிறபோது… அது செல்வத்தையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியைம் கொண்டுவந்து விடுகிறது.

திறமைகளை கண்டுபிடிப்பது எப்படி?

திறமைகளை கண்டுபிடிப்பது எப்படி?

ஒவ்வொருவரிடமும் பல்வேறு திறமைகள் ஒளிந்துள்ளன. அவற்றை எவையென்று தேடிக்கண்டுபிடிக்கும் போது தான் அவர்களுக்குள் புதிய மறுமலர்ச்சியை உருவாக்க முடியும். அவர்களிடம் இருக்கும் ஒவ்வொரு விதமான ஆற்றலும் உள்ளொளியாக இருந்து பிரகாசிக்கிறது. அந்த ஆற்றலை அவரவர் சூழ்நிலை, சக்தி, அறிவு போன்ற அம்சங்களுக்கேற்ப, அவரவர் மட்டுமே வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு முதலில் தங்கள் இயல்பான திறமை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். திறமையை மதிப்பிடும் போது நமக்குள் இருக்கும் ஆசைகள் மற்றும் கனவுகளையும் திறமை தான் என்று அதனுடன் சேர்த்துவிடக் கூடாது.

உதாரணமாக, சர்க்கஸ், சினிமா, நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகளை பார்க்கும் போது, அதில் வரும் கதாநாயகர்களை போல நாமும் செய்து பார்க்க ஆசைபடுவதுண்டு. இந்த மாதிரி ஆசைபடும் ஒரு சிலர் வேண்டுமானால், பிற்காலத்தில் சினிமா நட்சத்திரங்களாகலாம். அல்லது சர்க்கஸ் வீரர்களாகலாம். அல்லது சந்தர்ப்பமும், சுயமுயற்சியும் சேர்ந்து அவர்கள் விரும்பும் எதிர்காலம் அமைய உதவுகிறது. ஆனால், சினிமா நடிகர்களாக வரவேண்டும் என ஆசைபடும் அனைவருக்குமே எதிர்காலத்தில் அவர்கள் ஆசை நிறைவேறுவது இல்லை. காரணம், நடிப்புத்திறமை அவர்களுக்கு இயல்பான ஆற்றலாக இல்லாமல் இருப்பது தான் காரணம்.

இதே போல் பல துறைகளிலும் நமது ஆசையும் கனவும் விரிந்து பரந்திருந்தாலும், எதிர்காலத்தில் அவரவர் திறமை, ஆற்றலுக்கு ஏற்பதான் அவை நிறைவேறும். அதனால், நமது திறமையை மதிப்பிடும்போது அவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, பொறியியல் துறையில் மாணவன் அடிப்படை பயிற்சிகளை பெற்று வருகிறான். உண்மையில் அவனுக்கு அதில் ஆர்வம் இருந்தால், அந்த ஆர்வம் பயிற்சியின் போதே தெளிவாகத் தெரிந்துவிடும். ஒரு துறையில் சிறிதும் ஆர்வமில்லாதவர்களுக்கு அந்த துறையானது, அவர்கள் வேலைசெய்யும் போதே, தெரிந்து விடும். அவர்களுக்கு அந்த வேலை பெரிய சுமையாகத் தோன்றும்.

குறிப்பாக, எந்த துறையில் நமக்கு நீடித்த ஆர்வமும், உற்சாகமும் தொடர்ந்து இருக்கிறதோ அதில் தான் நமது திறமை உள்ளது என்பதை உணர்ந்து அந்த வழியில் முயற்சி செய்ய வேண்டும். திறமைக்கான தேடல்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் இருக்க வேண்டும். அதுவே வாழ்நாள் முழுவதும் நீடித்து விடக்கூடாது. திறமையை கண்டுபிடித்தவுடன் அதை வளர்ப்பது எப்படி என்பது குறித்த திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

இரண்டு முறையான பயிற்சிகளின் முலம் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம். அவற்றில் ஒன்று நேரடிபயிற்சி முறை. மற்றொன்று சுயமுயற்சி. நேரடிபயிற்சி முறைபடி கற்க வசதி மற்றும் வாய்ப்புகள் இல்லாதவர்கள் சுயமாக கற்றுக்கொள்ளலாம். `சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’, `கண்டதும் கற்க பண்டிதன் ஆவான்’ போன்ற பழமொழிகள் பயிற்சியின் அடிப்படையை நமக்குக் கற்றுத்தருகிறது. விடாபிடியாகத் தொடர்ந்து முயற்சியில் ஈடுபடும்போது எவருக்கும் எந்தக்கலையிலும் தானாகவே சரியான பயிற்சி கிடைத்துவிடும் என்பதே பழமொழிகள் உணர்த்தும் உண்மை. குறிப்பாக, கலைத்துறையினருக்கு இது பொருத்தமாக இருக்கும். சரியான வசதி வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், முறையான முயற்சியிருப்பின் பயிற்சி உங்களுக்கு எளிமையாகவே இருக்கும்.

உங்கள் பலத்தை தெரிந்து கொள்ளுங்கள்

உங்கள் பலத்தை தெரிந்து கொள்ளுங்கள்

உலகில் உள்ள மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமானவர்கள். அடிப்படையில் மனிதர்களின் குணங்கள் வேறுபட்டிருக்கும். பார்வையில், கொள்கையில், ரசனையில், பேச்சில், நடத்தையில், என்று எல்லாமே ஒன்று போல் இருப்பதில்லை. நாம் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் என்றால், ஏன் வெவ்வேறு விதமான உடைகள் உருவாக்கபடுகின்றன? வெவ்வேறு சுவை உணவுகள் சமைக்கபடுகின்றன… வெவ்வேறு கலைகள் உருவாக்கபடுகின்றன?!

நாம் விரும்பும் ஒரு விஷயம்… அடுத்தவருக்கு வெறுபாய் அமையும். ஒருவரின் தனித்தன்மை அடுத்தவரிடம் இருப்பதில்லை. தம்முடைய பலம் மற்றும் பலவீனத்தில் மனிதர்கள் வேறுபடுகின்றனர்.

இதை நாம் மிகச் சரியாக புரிந்து கொண்டால் மட்டுமே ஆற்றல் மிக்க விதத்தில் செயல்பட முடியும். ஒரு செயலை வெற்றிகரமாக முடிக்க… நம்முடைய திறமையை வெளிபடுத்தவும், நமது திறமைக்கேற்ற வேலையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் அது உதவும்.

நம்மிடம் உள்ள சிறப்பான திறனை, நாம் தெரிந்து கொள்வது அவசியம். நமக்கென்று ஒரு செயலை செய்யும் ஸ்டைல் இருக்கும். அதை நாம் கண்டறிந்தால் மட்டுமே எந்த வேலையுடனும் நாம் நம்மை பொருத்திக் கொள்ள முடியும்.

நம்முடைய செயல்முறைதான் ஒன்றை எளிதாக்குகிறது… அல்லது கடினமாக்குகிறது. செயல்முறையை பொறுத்தே ஒன்றை முன்கூட்டியோ, அல்லது தாமதமாகவோ செய்ய முடிகிறது.

தொழில் அல்லது வேலையில் பலங்கள் மற்றும் பலவீனங்கள் பற்றிய மதிப்பீடு கண்டிப்பாக உதவும். முதலில் உங்களுடைய மிக பெரிய பலம் எது என்று கண்டுபிடிங்கள். செயலாற்றும் திறமை, உயர் நுணுக்க அறிவு, ஆர்வங்கள் ஆகியவற்றில் உங்களுடைய பலத்தை தெரிந்து கொள்ளுங்கள்.அதேபோல், உங்களுடைய பண்பு நலன்கள், திறன்களை பட்டியலிடுங்கள். படிப்பில், வேலையில், சொந்த வாழ்க்கையில் உங்களுடைய பண்பு நலன்கள் எந்தளவுக்கு உங்களுக்கு வெற்றியை கொடுத்திருக்கின்றன என்பதை ஆராயுங்கள்.

உங்களுக்கு மிக பெரிய சவாலாக இருக்கும் விஷயம் எது என்பதை அறிந்து, அதை முழுமையாக கற்றுக் கொள்ளுங்கள்.

` உன்னை அறிந்தால்… உலகத்தில் போராடலாம்..’ என்கிறார்கள். முதலில் உங்களை நீங்களே சுய விமர்சனம் செய்யுங்கள்! நீங்கள் கற்பனையாளரா..? அல்லது எதையும் அணுகி ஆராய்பவரா..? அல்லது எந்திரத்தனமானவரா..? என்பதை அறிந்து அதற்கான தொழிலை அல்லது வேலையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

உடல் நன்றாக இல்லாவிட்டால் மனம் பாதிக்கபடும். மனம் சீராக இல்லாவிட்டால் உடல் பாதிக்கபடும். உடலும், மனமும் ஆரோக்கியமாக இருந்தால் தான் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள் வேலையை செய்து முடிக்க இயலும். தன்னிடம் உள்ள திறமைகளை, செயல் திறனை முழுமையாக வெளிபடுத்த ஆரோக்கியம் அவசியம்.

ஒரு வேலையை நீங்கள் தள்ளி போடுவது அதன் பின்னர், தொடர்ச்சியாக பல வேலைகளைக் கிடப்பில் போடும்படி செய்து விடும். உங்கள் சுமைதான் மேலும் அதிகரிக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். செயல் தாமதத்தால் விரும்பத்தகாத விளைவுகள், இழப்புகள் உண்டாகும்.

இன்றைக்கே முடிக்கக் கூடிய வேலையை நாளைக்கு என்று தள்ளி போட வேண்டாம். அலுவலகத்தில் மட்டுமல்ல, வீட்டிலும் வேலையைத் தள்ளி போடுகிற பழக்கம் நமக்கு இருக்கிறது. ஐந்து நிமிடம் செய்ய வேண்டிய வேலையை தள்ளி போடுவதால் இறுதியில் அந்த வேலையின் மீது வெறுப்பு ஏற்படும். இதனால் அடுத்தவர்கள் நம்மீது வைத்திருக்கும் அபிப்ராயம் கெட்டுவிடும் சூழல் ஏற்படும்.

வெற்றிக்கு ஒரு புத்தகம் – ஐந்து வில்லன்கள்

வெற்றிக்கு ஒரு புத்தகம் – ஐந்து வில்லன்கள்

ஆட்டிட்யூட்! இப்போதெல்லாம் இந்த வார்த்தையை அடிக்கடி கேட்கிறோம். பையன் நல்ல திறமைசாலிதான் ஆனா ஆட்டிட்யூட் சரியில்லையே! என்கிறார்கள்.

அதென்ன ஆட்டிட்யூட்?

தமிழில் இதனை மனப்பாங்கு என்கிறார்கள். அவ்வப்போது நம்மைச் சுற்றி நிகழ்கிற விஷயங்களை நமது மனம் எப்படி எதிர்கொள்கிறது, எப்படி எதிர்வினை (ரியாக்ட்) செய்கிறது… இவற்றின் தொகுப்பைத்தான் ஆட்டிட்யூட் (Attitude) என்கிறோம்.

சுமாரான திறமை கொண்டவர்கள்கூட, தங்களது மனப்போக்கைப் பொருத்தமானவகையில் அமைத்துக்கொண்டால் மிகப் பெரிய அளவு முன்னேறுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

அதேசமயம், இதற்கு நேர் எதிராக, பிரமாதமான திறமைசாலிகள் நல்ல ஆட்டிட்யூட் இல்லாமல் தடுமாறுவதும் உண்டு. இந்த ஆட்டிட்யூட்டை எப்படி சாதகமாக பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து தி டிஃப்ரன்ஸ் மேக்கர் (The Difference Maker) என்ற புத்தகம் வந்திருக்கிறது அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஜான் சி மேக்ஸ்வல்.

நல்ல ஆர்ட்டிட்யூட் வளர்த்துக்கொள்வது அத்தனை சிரமமில்லை. ஆனால், நீங்கள் அப்படி முன்னேறிவிட முடியாதபடி தடுக்கக்கூடிய ஐந்து வில்லன்கள் இருக்கிறார்கள் என்று மாக்ஸ்வெல் எச்சரிக்கிறார். நாம் இந்த ஐந்து பேரையும் புரிந்துகொண்டு முறியடிக்கப் பழகிவிட்டால், அதன்பிறகு அவர்கள் என்ன செய்தாலும் பப்பு வேகாது, நாம்தான் ஜெயிப்போம்!

மார்ஸ்வெல் சொல்லும் அந்த 5 வில்லன்கள்: ஊக்கமின்மை, மாற்றம், பிரச்னைகள், பயம் மற்றும் தோல்வி.

இப்போது, சினிமாவில் வருவதுபோல் இந்த வில்லன்களை ஒவ்வொருவராக எதிர்த்து நிற்போம், அவர்களை ஜெயிக்கக் கூடிய ஆயுதங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

1. ஊக்கமின்மை:
*நீங்கள் செய்கிற எதையும் மேலோட்டமாகப் பார்க்காதீர்கள், ஆழ்ந்து யோசித்து அதன் உண்மையான நோக்கத்தை உள்ளே பதிய வைத்துக்கொள்ளுங்கள்.
*சரியான நபர்களோடு பழகுங்கள். நீங்கள் செய்கிற எதுவும் உருப்படாது என்று சொல்கிறவர்களோடு எந்நேரமும் வளையவந்தால், உங்களைப் பற்றி உங்களுக்கே அவநம்பிக்கைதான் தோன்றும்.
*நெகட்டிவ் வார்த்தைகளைத் தவிர்த்துவிடுங்கள், உங்களுக்கே தெரியாமல் அவை ஏற்படுத்தும் அதிர்வுகள் உங்களைச் சோர்வாக்கும், முன்னேற்றத்தைப் பாதிக்கும்.

2. மாற்றம்:
* நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும் அதைப் புரிந்துகொள்ளுங்கள், முரண்டு பிடிக்காதீர்கள்.
* மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் இல்லை. இதை மனத்தில் வையுங்கள்.
* அதேசமயம், சில விஷயங்களை எப்போதும் மாற்றிக்கொள்ளக்கூடாது. அந்தக் கொள்கைகளில் உறுதியாக இருங்கள்.

3. பிரச்னைகள்:
*பிரச்னைகள் நிகழ்ந்தே தீரும், தயாராக இருங்கள், அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் என்று முன்கூட்டியே யோசித்துக் கொள்ளுங்கள், ஒன்று அல்ல, மூன்று தீர்வுகளைச் சிந்தித்துவையுங்கள்.
*பல சமயங்களில், நாம் பிரச்னை என்று நினைப்பது மேலோட்டமான ஒரு விஷயம், நிஜப் பிரச்னை ஆழத்தில் ஒளிந்திருக்கும். அதைக் கண்டுபிடியுங்கள்.
*அத்தனைப் பிரச்னைகளுக்குள்ளும் ஒரு புதிய வாய்ப்பு ஒளிந்திருக்கிறத, தேடிப் பிடித்து பயன்படுத்துங்கள்.

4. பயம்:
* பயம் இல்லாததுபோல் நடிக்காதீர்கள். எனக்கு இதை நினைத்து அச்சமாக உள்ளது என்று ஒப்புக்கொள்கிறவன் கோழை அல்ல, வீரன். அவனால்தான் அந்தப் பயத்தை வெல்லமுடியும்.
*உங்கள் பயத்தின் தொடக்கப் புள்ளி எது என்று யோசியுங்கள், அங்கே அடியுங்கள்.
* நேற்று, நாளை ஆகியவற்றைவிட இன்றுதான் மிக முக்கியம், அதை மறக்காமல் இருந்தால் எந்தப் பயமும் உங்களை எதுவும் செய்யாது.

5. தோல்வி:
* சறுக்கல்கள் வரும்போது, மாத்தி யோசியுங்கள். இந்தத் தோல்வியும் ஒரு வெற்றியாக இருக்கலாம்.
*உங்கள் மொழியையே மாற்றுங்கள். ச்சே இப்படி நடந்திருக்கலாம். என்பதைவிட அடுத்தமுறை இப்படிச் செய்வேன் என்பது பெட்டர்.
* சில விஷயங்களை நம்மால் கட்டுப்படுத்தமுடியும், மற்ற பல நம் கையில் இல்லை. அவற்றை மாற்ற நினைத்துப் பிரயோஜனம் இல்லை, நம்மால் முடிந்ததைமட்டும் தொடுங்கள், சரி செய்யுங்கள்.

திறமை அறிந்தவர்களிடம் திறமை காட்டினால்தான் பலன்

திறமை அறிந்தவர்களிடம் திறமை காட்டினால்தான் பலன்

“குருவே, எனக்கு ஒரு நல்ல வேலை அமையவில்லை’ என்று வருத்தத்தோடு சொன்ன இளைஞனை நிமிர்ந்து பார்த்தார் குரு.

“என்ன பிரச்னை?’ என்று கேட்டார்.

“என்னிடம் நிறைய திறமைகள் இருக்கிறது. ஆனாலும், எனக்கு வேலை கிடைக்கவில்லை’ என்றான் இளைஞன்.

வந்தவனின் பிரச்னை குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்லத் துவங்கினார்.

“ஒரு கிராமத்துக்கு பெரியவர் ஒருவர் அவரிடம் ஆசி பெற்றால் வாழ்வு சிறக்கும் என்ற ஊர் மக்கள் எல்லோரும் அவரிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கினர். அந்த ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். அவனும் பெரியவரிடம் சென்றான். அவனையும் அவர் ஆசிர்வதித்தார். ஆனால், அந்த இளைஞன் விடவில்லை. “பெரியவரே, இந்த ஆசிர்வாதத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது? என் பிழைப்புக்கு ஏதாவது கொடுங்கள்’ என்று கேட்டான். உடனே பெரியவர் தன்னுடைய பையைத் துழாவி ஒரு அழுக்கு மோதிரத்தை எடுத்து, “இதை விற்று உன் பிழைப்புக்க வைத்துக்கொள்’ என்றார்.

நூல் சுற்றி கரை படிந்த அந்த அழுக்கு மோதிரத்தை பார்த்த இளைஞனுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. என்றாலும், அந்த மோதிரத்தை எடுத்துக்கொண்டு போய் கிராமத்தில் தனக்குத் தெரிந்தவர்களிடம் விற்க முயன்றான். ஆனால், யாரும் அந்த அழுக்கு மோதிரத்தை வாங்க முன்வரவில்லை. இந்த மோதிரம் விலை போகாது என்ற முடிவுக்கு வந்த இளைஞன் மீண்டும் அந்தப் பெரியவரிடம் வந்து நடந்ததைச் சொன்னான்.

அப்போது அந்தப் பெரியவர், “இந்த மோதிரத்தை நகைக் கடையில் விற்க முயற்சித்தாயா? முதலில் போய் ஒரு நகைக் கடையில் கேள்’ என்று சொன்னார்.

பெரியவர் சொன்னது போல் ஒரு நகைக் கடையில் மோதிரத்தை காட்டியபோது. அவர்கள் உடனே அதன் அழுக்கை நீக்கி அதன் தரத்தை கண்டுபிடித்துவிட்டனர். அவனுக்கு நல்ல பணமும் கொடுத்தனர்.’

இந்தக் கதையைச் சொன்னதும் வேலை தேடி வந்திருந்த இளைஞனுக்கு தன்னுடைய தவறு புரிந்தது.

அப்போது அவனுக்கு குரு சொன்ன வின் மொழி:
திறமை அறிந்தவர்களிடம் திறமை காட்டினால்தான் பலன்.

உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..!

உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..!

நம்மில் பலருக்கும் உள்ள பிரச்சினையே நமக்கான திறமையை உரிய நேரத்தில் வெளிப்படுத்தத் தெரியாதது தான். அந்த வீட்டுக்கு புதிதாக வந்த மருமகள் பிரார்த்தனை அறையில் மனமுருக இறைவனை துதித்து பாடிக் கொண்டிருந்தாள். அப்போது வெளியில் வாக்கிங்கை முடித்து விட்டு வந்த மாமனார் தன் மகனிடம், “எத்தனை அருமையான பாட்டு… இன்னும் கொஞ்சம் டிவி வால்யூமை கூட்டி வை” என்றார்.

மகன் சொன்னபிறகு தான் தன் மனம் உருகப் பாடியது தன் அன்பான மருமகள் என்பதை தெரிந்து கொண்டார். “சினிமாவில் பாடியிருந்தால் திரைக்கு இன்னொரு பி.சுசிலா கிடைத்திருக்கக் கூடுமே! ஏன் மருமகளே உன் திறமையை இத்தனை நாளாக குடத்திலிட்ட விளக்காக வைத்திருந்தாய்?” என்று மருமகளிடம் கேட்டார், மாமியார்.

மருமகளோ, “எனக்கு எங்கள் வீட்டில் அந்த அளவுக்கு சுதந்திரம் இல்லை மாமா. நாளைக்கு இன்னொரு வீட்டில் போய் சமையலைக் கவனிக்கப் போகிற பெண்ணுக்கு பாட்டு என்ன வேண்டிக்கிடக்கிறது என்று அம்மா சொல்லி விட்டார். அதனால் என் பாட்டு `அதுபாட்டுக்கு’ இருந்து விட்டது என்றாள்.

இந்தப் பெண் என்றில்லை, பலரும் தங்கள் திறமையை சரிவர அரங்கேற்ற முடியாமல் கடைசி வரை தங்கள் திறமைகளை தங்களுக்குள்ளே புதைத்துக் கொள்ளும் அவலம் தான் நடந்து வருகிறது. சிலரது அபூர்வ திறமைகளை பள்ளிக்கூடம் தட்டிக் கொடுக்கும். கல்லூரி முத்தம் கொடுக்கும். ஆனால் கல்லூரிப்படிப்பை முடித்த பிறகு நண்பர்களிடம் இருந்து இந்தக் கலையாளர்கள் அந்நியமாகி விடுகிறார்கள். கடைசியில் எந்த கலைக்காக கல்லூரி முழுக்க அறியப்பட்டார்களோ, அந்தக் கலையை தங்களிடம் இருந்து முற்றிலும் விலக்கி வைத்தபடி கம்பெனி கம்பெனியாய் வேலைக்கு அலைந்து கொண்டிருப்பார்கள்.

இந்த நாட்களில் மறந்தும் அவர்கள் தங்கள் கலை பற்றிப் பேசுவதில்லை. அப்புறம் ஒருவழியாய் வேலை கிடைத்து கொஞ்சி மகிழ ஒரு குடும்பம் கிடைத்து அவர்கள் சந்தோஷத்தில், கவலையில் தங்கள் எஞ்சிய வாழ்நாளை கரைத்துக் கொண்டிருப்பார்கள். கடைசி வரை கலை மட்டும் அவர்களிடம் இருந்து விலக்கப்பட்ட கனியாகவே இருந்து விடும்.

இப்படித்தான் ஒரு வயலின் வித்வான் இருந்தார். அவர் குடும்பத்தின் அன்றைய சூழலில் `கலையாவது கத்தரிக்காயாவது’ என்ற சொல்லக்கூடிய அளவுக்கு குடும்பத்தில் வறுமை ஆட்டிப் படைத்தது. அதனால் வயலினை பரணில் தூக்கிப் போட்டவர், குடும்பத்துடன் கூலி வேலைக்குப் போய்விட்டார். அந்தக் கூலி வேலை முதலில் பெற்றோர் சார்ந்த குடும்பத்தையும், பிறகு மனைவி, பிள்ளைகள் கொண்ட குடும்பத்தையும் பொருளாதாரத்தில் சற்றே தாங்கிப் பிடிக்க உதவிற்று. அவ்வளவு தான்.

ஆனாலும் அவருக்குள் ஓரு ஏக்கம். நமக்குள் இருந்த வயலின் கலைஞனை தொலைத்து விட்டோமே என்று உள்ளுர மறுகிக் கொண்டிருந்தார்.

அன்று மாலையில் கிடைத்த நேரத்தில் பக்கத்து ஊரில் நடக்கும் வாரச்சந்தைக்கு போனார். அங்கே ஒரு இளைஞன் பழைய வயலின் ஒன்றை ஏலத்தில் விட இருந்தான். அந்த வயலினை வாசித்தே பல நாட்களாகி இருக்கலாம். விற்க வேண்டிய அவசியம் வந்தபோது சந்தைக்கு வந்து விட்டான். அவன் முதலில் பத்து ரூபாயில் இருந்து ஏலத்தை ஆரம்பித்தான். `பழமை மாறாத வயலின்’ என்று சொல்லி அவன் ஏலம் விட்டதில் அடுத்தவர் 20 ரூபாய்க்குக் கேட்டார். இன்னொருவர் ஏலத்தை 30 ரூபாயாக உயர்த்தினார்.

மேற்கொண்டு கேட்க ஆளில்லை. இளைஞனும் கிடைத்தவரை லாபம் என்ற எண்ணத்தில் ஏலத்தை முடித்துக் கொள்ளும் மனநிலைக்கு வந்தான்.

அப்போது தான் நமது வயலின் வித்வான் அந்தக் கூட்டத்திற்குள் நுழைகிறார். இளைஞனை நெருங்கியவர், `வயலின் ஏலம் விடும்போது அதை வாசித்துக் காட்டுவது தானே சரியாக இருக்கும்’ என்றபடி, தன் நெஞ்சோடு வயலினை அணைத்தபடி இசை மீட்டத் தொடங்கினார்.

அடுத்த சில நிமிடங்களில் அந்த இசை சந்தைக்கு வந்த மொத்தக் கூட்டத்தையும் அங்கே வரவழைத்து விட்டது. கேட்டவர்கள் மெய்யுருகினார்கள். அடுத்த பாட்டு, அடுத்த பாட்டு என்று தொடர்ந்து மூன்று பாட்டுக்கு வாசித்து முடித்தவர், ஜனங்களை நோக்கி, `இப்போது ஏலம்கேட்கிறவர்கள் கேட்கலாம். ஏலத்தை முதலில் இருந்து ஆரம்பிப்போம்’ என்றார். அவரே வயலின் ஏலம் நூறு ரூபாய் என்று ஆரம்பித்தார்.

வயலின் இசை கேட்டு ஏற்கனவே உருகிப் போயிருந்தவர்கள் பலரும் ஏலத் தொகையை கூட்டிக் கொண்டே போனார்கள். கடைசியில் எண்ணூறு ரூபாய்க்கு கேட்டவருக்கு வயலின் கிடைத்தது. இளைஞன் இப்போது அந்த பெரியவரை தன் வயலினை விற்றுத்தர வந்த தெய்வமாகவே கருதினான். ஏலப்பணத்தில் 300 ரூபாயை அவருக்கு கொடுக்க முன் வந்தான். அவரோ `என்ஆத்ம திருப்திக்கு இசைத்தேன். அதற்கு விலை வைக்காதே’ என்று பணத்தை வாங்க மறுத்து விட்டார்.

அது மன்னர் ஆட்சிக்காலம். அந்த பெரியவர் அங்கிருந்து நாலடி நடந்திருக்க மாட்டார்.அதற்குள் அரண்மனை வீரர்கள் அவரை சுற்றி வளைத்தார்கள். “எங்கள் மன்னரின் அரசவைக்கு தேர்ந்த இசைக்கலைஞர்கள் தேவை. அப்படி ஒருவருக்காக நாங்கள் நகரை வலம் வந்தபோது தான் உமது இசையை கேட்டோம். இப்போதே அரண்மனைக்கு எங்களுடன் வந்து எம் மன்னரை பார்க்கிறீர்” என்று அழைத்து சென்றார்கள். அவருக்குள் புகுந்து கொண்டிருந்த அந்தக் கலை கடைசியில் அவரை அரண்மனை இசைக்கலைஞராக்கி அழகு பார்த்தது. இது தான் கலையின் சிறப்பு.

கற்ற கலைக்கு காலம் கடந்தாலும் மரியாதை நிச்சயம். அதனால்கலை தெரிந்தவர்கள் அதை மறைபொருள் போல் மூடி வைக்காமல் வெளிப்படுத்துங்கள், வெளிப்படுங்கள். உலகை வெல்லுங்கள்.

உறவுகளை சார்ந்திருங்கள்

உறவுகளை சார்ந்திருங்கள்

உயிர் உள்ளது, உயிர் அற்றது என்று, உலகில் உள்ளவற்றை பிரிக்கலாம். உயிர் உள்ள அனைத்தும், உணர்வை வெளிப்படுத்துகின்றன. உணர்வுகளை வெளிப்படுத்துவதால் உறவுகள் ஏற்படுகின்றன. அடுத்த கட்டமாக, உணர்வுகளை பகிர்ந்து கொள்வதும் அவசியமாகிறது. இப்படித் தான், அறிவு மற்றும் எண்ணங்கள் பரிமாறப்படுகின்றன.

தனி மரம் தோப்பாகாது; தனி மனிதன் சமூகமாக மாட்டான். உணர்வு, எண்ணம், அறிவு ஆகியவற்றை பரிமாறிக் கொள்வதால் பயன் கிடைக்கிறது. நல்லது – கெட்டது, சுகம் – துக்கம், அறிவு – அறியாமை, தெளிவு – குழப்பம் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் போதுதான், அவை அர்த்தம் பெறுகின்றன. தோன்றியதை சொல்ல சக மனிதன் தேவைப்படுகிறான். இப்படி பரிமாறிக் கொள்வதால், ஆதாயம் மற்றும் இழப்பு ஆகியவை இரு சாராருக்கும் கிடைக்கிறது. பலனை பொறுத்து, உறவு நிற்கும் அல்லது நீர்த்துப் போகும். 

மனிதன், தனக்காக வாழலாம்; ஆனால், தானாக வாழ முடியாது. இது, உலக நியதி. அதனால்தான், ‘யாருக்காக வாழ்கிறோம்’ என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதைப் பொறுத்து தான், வாழ்க்கையில் ஈடுபாடு ஏற்படுகிறது. 

சங்கடப்படும் போதுதான் ஆதரவும், துணையும் அதிகமாக தேவைப்படும். அதுபோல் சந்தோஷமாக இருக்கும்போது, அதை பகிர்ந்து கொள்ளவும், நமக்கு உறவுகள் தேவைப்படுகின்றன. எனவே உறவை சார்ந்திருங்கள்.

வாழ்த்துவதால் வருமே வளமும் நலமும்

வாழ்த்துவதால் வருமே வளமும் நலமும்

ஜப்பானில் “கோய்’ என்றொரு மீன் வகை உள்ளது. இந்த மீன் விசித்திரமான இயல்புடையது. நீங்கள் இந்த மீனை ஒரு சிறிய தொட்டியில் வைத்து வளர்த்தால் அது அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று அங்குலம் மட்டுமே வளரும். 

சற்று பெரிய தொட்டியில் வளர்த்தால் கோய் மீன் 8 அல்லது 10 அங்குலம் வரை வளரும். சிறு குட்டையில் கோய் மீன்களை வளர்த்தால் அது ஒன்று முதல் ஒன்றரை அடி வரை வளரும். கோய் மீனைக் குளத்தில் வளர்த்தால் இரண்டரை அடி முதல் மூன்றடி வரை வளரும். மிகப் பெரிய ஏரியில் கோய் மீனை வளர்த்தால் அது ஐந்து அடி வரை வளரும். 

மனிதர்களும் கோய் மீனைப் போன்றவர்கள்தாம். சிறியவற்றைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் வளர முடியாமல் போய்விடும். பெரியவைகளைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கவேண்டும். அப்போததான் வளர முடியும். உங்களது சிந்தனை உயர உயர உங்களது செயல்பாடும் மேம்பாடு அடையும். உங்களது மதிப்பும் உயர்ந்து கொண்டே செல்லும். 

மனிதர்கள் தங்களை பற்றிக் குறைவாகவே மதிப்பிடுகிறார்கள். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. சிறிய தொட்டியில் வளர்க்கப்படும் கோய் மீன்கள் போல மனிதர்கள் தங்களைக் குறுக்கிக் கொண்டு விடுகினறனர். இதனால் அவர்களால் அவர்களது முழு ஆற்றலை வெளிப்படுத்த முடியாமல் போய்விடுகிறது. இதற்கு முக்கிய காரணங்கள் யாவை? இந்தக் காரணங்களைக் கண்டறிந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய முடியும். 
பொதுவாக எதிர்மறைச் சிந்தனைதான் அதிகமாகக் காணப்படுகின்றது. 

ஒரு குண்டான மனிதர் சாப்பிட உட்காரும்போதே “நான் சாப்பிடுவதெல்லாம் கொழுப்பாக மாறிவிடுகிறது.’ என்று அலுத்துக் கொள்ளுகிறார். 

ஒரு குடும்பத் தலைவி காலையில் எழும்போதே “இந்த வீட்டில் எங்கு பார்த்தாலும் குப்பையாகத்தான் கிடக்கிறது. ஒருநாளும் குப்பைகள் குறைவதாகத் தெரியவில்லை’ என்று அலுத்துக் கொள்கிறார். 

பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பும் மாணவி தனத தந்தையைப் பார்த்து, “அப்பா, கணக்கில் நான் குறைந்த மதிப்பெண்கள்தான் எடுப்பேன் போல் தெரிகிறது. தேர்வில் நான் தோல்வி அடைந்து விடுவேன் என்று அஞ்சுகிறேன்’ என்று சொல்கிறார். 

வானிலை அறிவிப்பாளர் “இன்று மழை பெய்வதற்கான வாய்ப்பு 20% மட்டுமே உள்ளது. வானம் ஓரளவு மேகமூட்டமாகக் காணப்படும்’ என்று குறிப்பிடுகிறார். 

இவை யாவும் எதிர்மறையான எண்ண அலைகளாகும். ஆற்றல் மிக்க பலர் தங்களது ஆற்றலை வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் குடத்தில் இட்ட தீபங்களாக உள்ளனர். குன்றிலிட்ட தீபங்களாக அவர்களால் பிரகாசிக்க முடியவில்லை. பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், மேல் அதிகாரிகள் எனப் பல்வேறு தரப்பினரும் கேலி, கிண்டல் செய்வதால் ஆற்றல்களைப் பலரால் வெளிப்படுத்த முடியவில்லை. 

இதமற்ற சொற்கள் ரணத்தை ஏற்படுத்துகின்றன. தெரிந்தோ, தெரியாமலோ உதிர்க்கப்படுகின்ற வார்த்தைகள் வேதனையை ஏற்படுத்துகின்றன. 

உளவியலாளர்கள், எண்ண அலையின் ஆற்றல் எப்படிப்பட்டது என்பதைத் துல்லியமாக நிரூபிக்க ஒரு சோதனையை மேற்கொண்டனர். 

இரண்டு பசுமைக் குடில்கள் ஒரே மாதிரியாக உருவாக்கப்பட்டன. மண், உரம் போன்றவை ஒரே மாதிரியாக இடப்பட்டன. பசுமைக் குடிலில் சீதோஷ்ணம் சமமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது. இரண்டு குடில்களிலும் தலா 23 விதைகள் ஊன்றப்பட்டன. 

ஒரு பசுமைக் குடிலின் முன் ஒருவர் தினந்தோறும் நின்று கொண்டு “இந்த விதைகள் முளைக்காது, முளைத்தாலும் நிலைக்காது. சீக்கிரமே வீணாகிப்போய்விடும்’ என்றெல்லாம் அவர் வசைமாரி பொழிந்து வந்தார். 

மற்றொரு பசுமைக்குடிலின் முன் மற்றொருவர் நின்று கொண்டு, “இந்த விதைகள் யாவும் அபாரமாக முளைக்கும், அற்புதமாக வளரும், அமோக பலனைத் தரும்’ என்று வாழ்த்துமாரி பொழிந்துவந்தார். இந்த வாழ்த்தும் வசையும் மூன்று வாரங்கள் தொடர்ந்தன. 

வாழ்த்துமாரிக்கு உள்ளான குடிலில் ஊனப்பட்டிருந்த விதைகள் யாவும் முளைத்தன. கம்பீரமாகக் காட்சியளித்தன. 

வசைமாரிக்குள்ளான குடிலில் ஊன்றப்பட்டிருந்த 23 விதைகளில் இரண்டு மட்டுமே முளைத்தன. அவை மிகவும் நலிந்த நிலையில் இருந்தன. 

வாழ்த்து மாரியும் வசைமாரியும் தொடர்ந்தன. வாழ்த்துக்குள்ளான பசுமைக் குடிலில் பயிர்கள் செழித்தோங்கின. வசைமாரிக்குள்ளான பசுமைக் குடிலில் முளைத்திருந்த இரண்டு பயிர்களும் வாடி வதங்கிவிட்டன. 

விதைகளின் நிலையே இப்படிப்பட்டது என்றால் மனிதர்களின் நிலையைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அதனால்தான் வைபவங்களின்போது வாழ்த்துகளைக் கேட்க வேண்டும் என்று சமூக ரீதியாக ஏற்பாடு செய்து வைத்துள்ளனர். 

மனிதர்களிடையே குழப்பம் அடிக்கடி தலை தூக்குகிறது. ஒரு மாணவர் ஒரு பாடத்தில் தேர்ச்சியடையவில்லை என்றால் அவர் மனம் உடைந்து விடுகிறார். என்னால் எல்லா பாடத்திலும் வெற்றி பெற முடியவில்லையே என்றும் வேதனைப்படுகிறார். இந்த வேதனை அவருடைய வளர்ச்சியைத் தடுத்து விடுகிறது. 

“பல பாடல்களில் வெற்றி பெற்றுள்ளேன். ஒன்றில் மட்டும்தான் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளேன். அடுத்த முறை அதிலும் மகத்தான வெற்றி பெறுவேன்’ என்றும் சிந்திக்கத் தொடங்கி விட்டால் தோல்வியை துரத்தியடித்துவிட முடியும். 

தனி நபர்களின் எண்ண ஓட்டத்தைச் சீர்குலைப்பதில் தெரிந்தோ, தெரியாமலோ ஆசிரியர்கள், பெற்றோர், உறவினர்கள், மேல் அதிகாரிகள் ஆகியோரும் ஈடுபடுகிறார். திடமான, தெளிவான ஆக்கப்பூர்வ சிந்தனை இருந்தால் மட்டுமே தோல்வியை அண்டவிடாமல் செய்ய முடியும்.

5 இருந்தால் ஆளலாம்

5 இருந்தால் ஆளலாம்

வாழ்க்கையில் எளிதாக முன்னேறுவதற்கு மால்டி போஜ்வாணி என்ற நிபுணர் தரும் 5 வழிகள்…

1. இணக்கமான உறவு: உங்களிடம் பேசும் நண்பர்கள், வாடிக்கையாளர்களை பேசவிட்டு அவர்களின் மனநிலையை நன்றாக புரிந்து கொண்டு அவர்களுக்கு தகுந்தவாறு நீங்கள் பேச வேண்டும். இந்த இணக்கமான உறவினை மேற்கொள்ள விரும்புபவர்கள் சில அத்தியாவசியமான நுட்பங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது ஒருவர் பேசும் பேச்சுக்களில் இருந்தே பேசுபவர் எந்த துறையை சேர்ந்தவர், அவர் எப்படிப்பட்டவர், எந்த வழியில் பேசினால் அவரை ஈர்க்க முடியும் என்பது குறித்து தெரிந்து கொள்ளும் திறமையை வளர்க்க வேண்டும். இந்த வகையில் வாடிக்கையாளர்களை பேசவிட்டு அவர்களின் கருத்தை அறிந்து அதற்கு தகுந்தபடி பேசப்படும் நடவடிக்கை மூலம் உங்கள் வியாபார வெற்றி பெருகும்.

2. குழப்பங்களை நீக்கும் தெளிவு: நம் மனதை எப்பொழுதும் தூய்மையானதாகவும், தன்னம்பிக்கையுடனும் குழப்பங்களை நீக்கி தெளிவாகவும் வைத்திருக்க வேண்டும். எந்த காரியத்தையும் நம்மால் செய்ய முடியும் என்கிற மனோதிடம் வேண்டும். நாம் ஏதேனும் பிரச்சினைகளில் சிக்கிக் கொண்ட நிலையிலும் அதைப்பற்றி பெரிதுபடுத்தாமல், அந்த இடத்தில் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்று நினைத்து அந்த சிக்கலை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் சிக்கல் நிறைந்த வேலைகளை செய்யப்போகும்போது `அய்யோ இந்த வேலையை எப்படி செய்யப் போகிறோமோ!’ என்று தயக்கத்துடன் செல்லாமல் ஏதோ விளையாட்டாக அந்த வேலையை செய்வது போன்ற எண்ணத்துடன் செய்தால் அது சிறப்பாக முடியும்.

ஒரு வேலையை ரசித்து செய்யும்போது மனச்சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதுமையான ஒரு செயல் அல்லது திட்டம் தீட்டும்போது ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால், நம் மனதிற்குள் நாமே ஆழமாக பல வழிகளில் சிந்திக்கும்போது பல புதிய வழி முறைகள் தோன்றும். எப்பொழுது நமக்குள் நாமே சிந்திக்க ஆரம்பிக்கின்றோமோ அப்போது மனதில் உள்ள குழப்பங்கள் மாறி முழுமையான சக்தியுடன் கூடிய பல வழிகள் உருவாகும்.

3. ஒருநிலைப்படுத்துதல்: எப்பொழுது ஒருவர் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, மனதை ஒருநிலைப்படுத்தி செயலில் ஈடுபடுகின்றாரோ அப்பொழுது அவரால் எளிதில் வெற்றி பெற முடியும். குழப்பமான நேரங்களில் எல்லாம் மனதை ஒருநிலைப்படுத்தி சிந்திப்பதன் மூலம் குழப்பங்கள் நீங்கி புதிய வழி பிறக்கும்.

முதன் முதலில் நீங்கள் முழுமூச்சாக ஒரு காரியத்தில் ஈடுபட்டு அதில் முழுமையான சந்தோஷம் மற்றும் வெற்றியை பெறும்பொழுது நீங்கள் உங்கள் உண்மையான மகிழ்ச்சி உணர்வை வெளிப்படுத்தும் விதமாக உங்கள் கை விரல்களை மடக்கி முழங்கையை கீழ்நோக்கி இழுத்து உங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்துவீர்கள். இது மனதை ஒருமுகப்படுத்துவதன் மூலம் தானாக வெளிப்படும் உணர்வுகளின் செயல்பாடாகும். ஆனால் எப்பொழுது உங்கள் வேலை சரியாக அமையவில்லையோ அப்போது உங்களுக்குள் இது போன்ற உணர்வுகள் தோன்றாது.

4. ஒருங்கிணைத்து முடிவெடுத்தல்: ஒவ்வொருவருக்கும் தங்கள் வேலையை செய்யும்போது சில குழப்பங்கள் ஏற்படும். இந்த சமயங்களில் தங்கள் நண்பர்களிடம் இருந்தோ அல்லது ஏற்கனவே இந்த வேலையை செய்து முடித்துள்ள அனுபவசாலிகளிடம் இருந்தோ உதவிகளை பெற வேண்டி இருக்கும். இந்த நேரத்தில் அந்த வேலையில் உள்ள அனைத்து செயல்களையும் ஒருமுகப்படுத்தி சிந்தனை செய்து முடிவெடுக்கும்போது நல்ல தீர்வு கிடைக்கிறது.

எடுத்துக்காட்டாக உங்களுக்கு உங்கள் உடலை ஒல்லியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதேநேரத்தில் சாக்லேட் தின்பதற்கும் ஆசை உள்ளது என்று வைத்துக் கொள்வோம். சாக்லேட் தின்பதால் உடல் எடை அதிகரிக்கும். இதனால் உங்கள் உடல் ஒல்லியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாது. இதில் சாக்லேட் தின்பதை விட உங்கள் உடல் ஒல்லியாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது. எனவே இரண்டு ஆசைகளையும் ஒரே நேரத்தில் சிந்தித்து அதில் எது சிறந்ததோ அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

5. சிறந்த மொழி வெளிப்பாடு: பேசும்போது சில வார்த்தைகள் எதிர்மறையான கருத்துக்களை உருவாக்கிவிடும். குறிப்பாக ஆனால் என்ற வார்த்தையானது எதிர்மறையான ஒரு விளைவை ஏற்படுத்தும் வார்த்தையாகும். எடுத்துக்காட்டாக நீங்கள் உங்கள் நண்பரிடம் பேசும்போது `நான் உங்கள் நலனை விரும்புகிறேன் ஆனால்….’ என்று கூறுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த வார்த்தையில் இருந்தே அவரது உடல்நலனில் நீங்கள் அக்கறையில்லாமல் இருப்பதுபோல் ஆகிவிடுகிறது.

இதை கேட்டதுமே உங்கள் நண்பருக்கு இதுவரை பேசியது அனைத்தும் பயனற்று போய்விட்டது என்ற எண்ணம் தோன்றிவிடும். இதனால் நீங்கள் எந்த காரியத்தை பேசிக் கொண்டிருந்தீர்களோ அதற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுவிடும். எனவே அந்த மாதிரியான பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். மேலும் எதற்கெடுத்தாலும் இல்லை, தெரியாது என்று சொல்லுவதை தவிர்த்து ஆம், தெரியும் என்று பேசுங்கள் வெற்றி பெறலாம்.

வாழ்க்கை என்பது என்ன?

வாழ்க்கை என்பது என்ன?

இந்த தலைப்பையே உங்களுக்குள் ஒரு முறை கேட்டுப்பாருங்கள். வாழ்க்கை என்பது என்ன?

– உயிரோடு இருப்பதா?

– மகிழ்ச்சியாக இருப்பதா?

– பணம், புகழைத் தேடி தலை தெறிக்க ஓடுவதா?

– தோல்விகளில் கற்றுக் கொள்வதா?

– வெற்றிகளில் பெற்றுக் கொள்வதா?

– தன்னலமற்ற அர்ப்பணிப்பா?

– தத்துவங்களின் அணிவகுப்பா?

…. இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும், பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும். சுகமோ துக்கமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது. காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழவைக்கிறது. முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது.

சிந்திக்கும் மனிதன் தெளிவடைந்தானா என்றால் அதுதான் இல்லை. மேலும், மேலும் குழம்பி முடிவில் தற்கொலையில் வாழ்வை பறிகொடுக்கிறான்.

இறைவனால் இவ்வுலகில் படைக்கப்பட்ட மற்ற ஜீவராசிகளுக்கு வாழ்க்கையை பற்றிய ஆராய்ச்சி எதுவுமில்லை. விலங்குகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை. காரணம் அவைகளுக்கு முடிவை பற்றிய பயமில்லை. அந்த வகையில் அறியாமை ஒரு வரம்.

தான் அறிவாளி என்று கர்வப்படும் மனிதனால் வாழ்க்கையில் ஜெயிக்க முடிவதில்லை. காரணம் அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது. அது என்ன..? தன்னம்பிக்கை. மனோபலம் உள்ளவனுக்கு மட்டுமே அது சாத்தியமாகும்.

அப்படி ஒரு விஷயம் இருக்கிறதா…? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

வாழ்க்கையை பற்றி தீர்மானமான விளக்கம் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு மனோபலம் ஒன்று மட்டுமே தீர்வாக அமைகிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுப வங்களே அவர்களின் வழிகாட்டி. அனுபவங் களிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண் டும். அப்படி கற்றுக் கொண்டவன் ஜெயிக் கிறான். கற்றுக் கொள்ளாதவன் தவிக்கிறான்.

ஒரு ஜெர்மனிய பழமொழி, “அனுபவம் என்ற பள்ளியில் மூடன் எதையும் கற்றுக் கொள்ளமாட் டான்” என்கிறது. அப்படி கற்றுக் கொள்ளாதவரை வாழ்க்கை அவனுக்கு வசப்படாது.

மற்ற உயிரினங்களிலிருந்து மனிதன் பல விதத்தில் மாறுபடுகிறான். சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதில், தன் தேவைகளை தானே தேடி பூர்த்தி செய்து கொள்வதில், நன்மை- தீமைகளை பகுத்தறியும் விதத்தில் பிறருக்கு வழிகாட்டியாக இருப்பதில்..! இத்தனை யும் பெற்று, சிந்தித்து செயல்படும் திறன் பெற்றிருக்கும் மனிதன், சில நேரங்களில் மிருகத்தை விட கீழ்நிலைக்கு வந்து விடுகிறான். போகும் திசை தெரியாமல் மயங்கி நிற்கிறான். அப்போது தான் வாழ்க்கையில் பயம் ஏற்படுகிறது.

துன்பம் துரத்தும் போது ஆன்மிகமும், அறிவியலும் அவனுக்கு துணை போவதில்லை. தோல்விக்கு பின்பு கிடைக்கும் வெற்றிக்காக காத்திருக்க அவனுக்கு பொறுமையில்லை. தோல்வியே வாழ்க்கை என்று முடிவுசெய்து, தனக்கு சோகமான முடிவைதேடிக் கொள்கிறான். தோல்விகள் நமக்கு நல்ல அனுபவங்களை தந்து, நம்மை பலசாலியாக்குகிறது.

நம்பிக்கை எனும் வானவில் நம்மிடம் எப்போதும் இருக்கவேண்டும். வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது. நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது. ஒவ்வொரு மனிதனின் கையிலும் அழகான வாழ்க்கை இருக்கிறது. அதை வளப்படுத்தும் நம்பிக்கை எனும் வானவில்தான் தோன்ற மறுக்கிறது. அப்போது வாழ்க்கை வெறுமையாகிறது. அந்த வெறுமையை நிரப்ப யாராலும் முடியாது.

இரவும், பகலும் வருவதுமில்லை. போவதுமில்லை. அவை பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள். சுகமும், துக்கமும் வருவதுமில்லை. போவதுமில்லை. நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள். பூமி இரவுக்காக வருந்துவதுமில்லை, பகலுக்காக மகிழ்வதுமில்லை. அது ஓர் கர்மயோகியைப் போல தன் பணியை செய்துக் கொண்டிருக்கிறது.

சூரியன் உயிர்களை வளர்க்கிறது. காக்கிறது. அது இல்லாத நேரத்திலும் உயிர்கள் அதை எதிர்நோக்கி காத்திருக்கிறது. ஆனால் இன்றைய அவசர மனிதனிடம் விடியலுக்காக காத்திருக்கும் பொறுமையில்லை. கல்வியறிவு அதிகமில்லாத காலத்தில் கூட இருந்திராத மனச்சுமை, டென்ஷன், தற்கொலைகள், இப்போது தான் அதிகமாகி வருகிறது. எந்த அறிவியல் வளர்ச்சியும் இவர்களை வாழவைப்பதில்லை. இந்த நவீனயுகத்தில் தற்கொலை தடுப்பு மையங்கள் ஆங்காங்கே உருவாகி வருவது வரமா? சாபமா?

உங்களுடைய வாழ்க்கையில் மற்றவர்களுக்கு தேவையான முன் உதாரணம் இருக்க வேண்டும். தோல்விகளை தாண்டி வெளிவந்தால் தான் அங்கே வெற்றி நம்மை வரவேற்க காத்திருக்கும். வெற்றிக்காக உழைக்கிறோம். தோல்வி நம் முன்வந்து நிற்கும் போது துவண்டு போகிறோம். தோல்வி தான் முதலில் வரும். அது உலக இயல்பு.

தோல்வியை கண்டு மிரண்டு போய் வாழ்க்கையை தொலைத்து விடுகிறோம். ஏன் இந்த அவசரம். தோல்விக்கு பின் வெற்றி என்ற வாக்கு பொய்யா, மெய்யா என்று பொறுத்திருந்து பார்க்கலாமே.

இன்று பல்வேறு சூழலால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள். எதிர்பார்த்த ஒன்று கிடைக்காவிட்டால் விரக்தியின் எல்லைக்கே போய்விடுகிறார்கள். நாம் நினைத்தால் எதுவும் நடக்கும் என்ற தத்துவம் அவர்களுக்கு புரிவதில்லை.

நாம் நினைக்கும் எண்ணங்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். அந்த பாசிடிவ் எண்ணங்கள் நம் சூழ்நிலைகளை மாற்றியமைத்து நம்மை வெற்றி பாதையில் அழைத்துக் செல்லும். நம் எண்ணம் ஒருநாள் செயலாகும் போதுதான் அந்த எண்ணத்தின் வலிமை புரியும். நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாக மாறிவிடுவோம்.

– நம்மைவிட உடலில் பலசாலி யானை

– நம்மைவிட வேகத்தில் சிறந்தது குதிரை

– நம்மைவிட உழைப்பில் சிறந்தது கழுதை.

இப்படி மிருகங்கள் நம்மைவிட பலமடங்கு பலசாலிகளாக இருந்தாலும், நாம்தான் இவைகளை அடக்கி ஆள்கிறோம். காரணம் மனிதன் மட்டுமே மனோபலம் கொண்டவன். நமக்கு ஏற்படுகிற பிரச்சினைகளும் அப்படித்தான். அதனை அடக்கியாளும் சக்தி நம்மிடம் உள்ளது.

கட்டிகளை கரைப்பதுடன்… புண்களை ஆற்றும் வல்லாரை!

கட்டிகளை கரைப்பதுடன்… புண்களை ஆற்றும் வல்லாரை!

வல்லாரை+ தூதுவிளை இரண்டையும் சம அளவில் இடித்துப் பிழிந்த சாற்றை 5  மி.லி. சாப்பிடவும். நோய்க் கேற்றவாறு காலம் நீடித்து சாப்பிட சயரோகம்,  இருமல் சளி குணமாகும்.

இதன் இலைச்சாறு நாளும் 5 மி.லி. காலை மாலை  சாப்பிட்டு வரவும். யானைக்கால், விரை வாதம், அரையாப்பு, கண்டமால்  குணமாகும். ஆமணக்கெண்ணையில் இலையை வதக்கி, மேலே பற்றிடவேண்டும். கட்டிகளும்  கரையும். அரைத்துப் பூச புண்களும் ஆறும்.

வல்லாரை, உத்தாமணி, மிளகு  சமன் கூட்டி அரைத்துக் குண்டுமணி அளவு மாத்திரை செயுது காலை, மாலை 1  மாத்திரை வெந்நீரில் கொடுக்க, அனைத்து வகையான காய்ச்சலும் தீரும்.

கீழாநெல்லி, வல்லாரை சமன் அரைத்து சுண்டக்காயளவு காலை மட்டும், தயிரில் கொள்ள நீர் எரிச்சல் தீரும்.

வல்லாரை சாற்றில் 7 முறை ஊறவைத்து, உலர்த்திய அரிசித் திப்பிலி, மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், தொண்டைக் கரகரப்பு நீங்கவும் நல்ல சாரீரம் கொடுக்கவும் பயன்படும்.

பெண்களுக்கு உதிரத்தடை ஏற்படும். மாதவிலக்கு  தள்ளிப்போகும். இதனால் இடுப்பு, அடிவயிறு கடுமையாக வலிக்கும். இதற்கு  வல்லாரை + உத்தாமணி இலையை சம அளவில் அரைத்து, 20-, 30 கிராம் அளவு காலை,  மாலை நான்கு நாள் சாப்பிட குணமாகும்.

வல்லாரயை நிழலில் உலர்த்தி  சூரணம் செய்து கொள்ளவும். பரங்கிச் சக்கையையும் இதே போல் சூரணம் செய்து,  இரண்டையும் சம அளவில் சேர்த்து, 5-,10 கிராம் காலை, மாலை பசும் வெண்ணெயில்  சாப்பிட வேண்டும். நோய்க்கேற்ப 6- முதல் 12 மாதம் சாப்பிட வேண்டும். மோர்  பாலில் தான் உணவு சாப்பிட வேண்டும். புளி, காரம், இனிப்புக் கூடாது.  புலால், புகை, மது கூடாது. குட்டம் குணமாகிவிடும்.

பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முதல்படி அவற்றை எதிர்கொள்வதே

பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முதல்படி அவற்றை எதிர்கொள்வதே

காசி நகரின் துர்க்கா தேவி ஆலயத்தில் அம்பிகையைத் தரிசித்து விட்டு ஓர் ஒற்றையடிப் பாதை வழியாகத் திரும்பி கொண்டிருந்தார் .அந்த ஒற்றையடிப் பதையில் ஒரு புறத்தில் ஒரு பெரிய குளம். இன்னொரு புறத்தில் மதில் சுவர் . சுவாமிஜி அந்தப் பதையில் சென்று கொண்டிருந்த போது சில குரங்குகளை காண்டார் , அவை உருவத்தில் பெரியவை , கறுத்த முகமும் கொடிய பார்வையும் கொண்டவை . தன் முன் வந்து நின்ற குரங்குக் கூட்டத்தைக் கண்டு அஞ்சித் திரும்பி வந்த வழியே நடக்க தொடங்கினார் சுவாமிஜி .

அவரைத் துரத்தத் தொடங்கியது குரங்குகள் கூட்டம் .நடக்க தொடங்கியவர் பிறகு ஓடத் தொடங்கினார் . இவர் ஓடுவதைப் பார்த்த குரங்குகள் கூட்டம் அதிவேகமாக இவர் பின்னால் ஓடி வந்தன .இந்தக் குரங்குகளை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லையே, என்ற நிலையில் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்த வரை பார்த்த முதியவரான ஒரு துறவி சுவாமிஜியின் பரிதாப நிலையைப் பார்த்து விட்டு "face the brutes "என்று கத்தினார் .இந்த வார்த்தைக்களைக் கேட்டதும் ,சுவாமிஜிக்குப் பொறி தட்டியது போல இருந்தது.அவ்வளவுதான் ஓடிக்கொண்டிருந்த சுவாமிஜி நின்று குரங்குகளை முறைத்து பார்த்தார் .முதலில் ஒடி வந்த குரங்குகள் பின் மெதுவாகப் பின் வாங்க தொடங்கியது .அப்புறம் திரும்பி ஓடியேவிட்டன .

பிற்காலத்தில் சுவாமிஜி தமது சொற்பொழிவில் இந்தச் சம்பவத்தை விவரித்துவிட்டுக் கூறியதாவது . ''அன்றுதான் என் வாழ்வில் புதிய பாடம் ஒன்றைக் கற்று கொண்டேன் .வாழ்க்கையில் நம்மைப் பிரச்சனைகள் எதிர்கொள்கின்ற போது அவற்றை எதிர்கொள்ள முடியாமல் அஞ்சி ஓடினால் அவை நம்மை வேகமாகத் துரத்தும்.மேலே விழுந்து கடிக்கும் .ஆனால் நாம் அந்தப் பிரச்சனைகளைத் துணிச்சலோடு எதிர்கொள்வோமானால் அவை இல்லாமலே போய்விடும் .பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முதல்படி அவற்றை எதிர்கொள்வதே

உலகில் மாறாத ஒரே விஷயம் மாற்றமே என்பது தான்

உலகில் மாறாத ஒரே விஷயம் மாற்றமே என்பது தான்

கீதையில் கண்ணனின் கூற்று உள்ளது உலகில் மாறாத ஒரே விஷயம் மாற்றமே என்பது தான் அது!!! அது மிக மிக உண்மையானது!!!

என் பத்து வயதுகளில் இருந்தாற்போல் இருபதுகளில் நான் இல்லை!!

இருபதுகளில் இருந்தாற்போல் முப்பதுகளிலும் , முப்பதுகளில் இருந்தாற்போல் நாற்பதுகளிலும் இல்லை!!

அதே போல் நாற்பதுகளில் இருந்தாற்போல் இன்று ஐம்பதுகளில் இல்லை!!

சில நல்ல மாற்றங்கள் உள்ளது!!! அல்லாத சிலதும் உள்ளது!!! ஆனாலும் மாற்றம் என்பது இருந்துகொண்டேதான் இருக்கிறது!!

நான் மாறவே மாட்டேன் என்று ஒரு புளியங்கொம்பைப் பற்றிக் கொண்டு தொங்குபவர்கள் கூட அந்தக் கொம்பு காலப் போக்கில் மாறி தடிமனாகவோ இளைத்தோ போவதைக் காணலாம்!!!

மாற்றத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் எல்லாருமே கெட்டவர்கள் என்று நான் சொல்ல மாட்டேன்!!! ஆனால் சரியான பார்வைகள், புரிதல் இல்லாதவர்கள் என்றுதான் சொல்வேன்!!!

மேன்மை நம் கைகளிலே...

மேன்மை நம் கைகளிலே...

மிகவும் எளிமையான ஒருவர் குளக்கரையில் படுத்திருந்தார். அதிகாலைப் பொழுதில் எழுந்தார். அருகில் இருந்த குன்றின் அடிவாரத்துக்குச் சென்றார். அருகில் ஒரு பெரிய உருண்டைக்கல் இருந்தது. அந்தக் கல்லை மலை உச்சியை நோக்கி நகர்த்த ஆரம்பித்தார். அது அவ்வளவு சுலபமாக இல்லை. மிகவும் கஷ்டப்பட்டு தன் பலம் முழுவதையும் செலுத்தி, ஒரு வழியாக, உச்சிக்கு கொண்டுபோய் நிறுத்தினார்.

அடுத்து ஓர் ஆச்சரியம் நடைபெற்றது. அந்த மனிதர் கஷ்ட்டப்பட்டு மலை உச்சிக்கு கொண்டு சென்ற அந்தக் கல்லை மேலிருந்து கீழே உருட்டி சிரித்தபடி அவரும் கீழே ஓடிவந்தார். இதை வேடிக்கை பார்த்த மக்களுக்கு எதற்காக அந்தக் கல்லை உருட்டிவிட்டார் என்பது புரியவில்லை.

இதே காரியத்தை அவர் தினசரி செய்து வந்தார். அதனால் மக்கள் அவரைப் 'பிராந்தன்' என்று அழைத்தனர். பிராந்தன் என்றால் மலையாளத்தில் பைத்தியம் என்று அர்த்தம். எனவே நாராயணன் என்று பெயர் கொண்ட அவரை 'நாராயணப் பிராந்தர்' என்றே அழைத்தனர்.

ஒரு சந்தர்ப்பத்தில் தனது இத்தகைய செயலுக்கான காரணம் பற்றி குறிப்பிடும்போது, "வாழ்க்கையில் ஒரு மனிதன் உயர்வது என்பது சிரமமான காரியம். ஆனால் கீழே வழுக்கி வீழ்வது என்பது மிகவும் சுலபமானது" என்று தெரிவித்தார்.

இவர்தான் 18 சித்தர்களின் ஒருவரான நாராயணப் பிராந்தர் என்று அழைக்கப்படுகிறார்.

எவ்வளவு உயர்ந்த ஆன்மிக நிலையில் இருந்தாலும் ஜபம், பூஜை அவசியம்

எவ்வளவு உயர்ந்த ஆன்மிக நிலையில் இருந்தாலும் ஜபம், பூஜை அவசியம்

பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் குரு மகான் ஸ்ரீ தோத்தாபுரி ஸ்வாமிகள். இவர் எல்லா சித்திகளையும் பெற்றவர். கடவுளைக் கண்ட ஞானி. ஆனாலும்கூட இவர் தினசரி காலை, மாலை வேளைகளில் ஜபம், பூஜை, கிரியைகளை செய்து வந்தார்.

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சருக்கு ஒரு சந்தேகம், கடவுள் காட்சி பெற்ற நம் குருவானவர் ஏன் தினசரி காலை, மாலை வேளைகளில் ஜபம், பூஜை புனஷ்காரங்கள் செய்கிறார். இதைத் தனது குருவிடமே நேரிடையாகவே கேட்கவும் செய்தார்.

"ஸ்வாமி, கடவுள் காட்சி கண்ட தாங்கள் ஏன் இன்னமும் ஜபம், பூஜை இவற்றில் ஈடுப்பட்டு வருகிறீர்கள்? இவையெல்லாம் ஆரம்பகால ஆத்மா சாதகர்களுக்கு தேவைப்படலாம். தாங்கள் ஏன் செய்கிறீர்கள் என்பதை அறிய விழைகிறேன்" என்றார்.

அதற்கு ஸ்ரீ தோத்தாபுரி, "ஒருநாள் செம்பில் பால் வாங்கிப் பயன்படுத்திவிட்டு கழுவாமல் மறுநாள் அதே செம்பில் பால் வாங்கினால் அந்தப் பால் எப்படி கெட்டு விடுமோ அதுபோல தினசரி பூஜை, கிரியைகளால் மனதிலுள்ள அழுக்கைக் களைய வேண்டும். ஒரு நாள் விட்டாலும் மனதில் அழுக்கு படிந்துவிடும், எனவே எவ்வளவு உயர்ந்த ஆன்மிக நிலையில் இருந்தாலும் ஜபம், பூஜை போன்ற கிரியைகளை அவசியம்மேற்கொள்ள வேண்டும்" என்று பதில் கூறினார்.

Thursday, April 23, 2015

இலக்கை நிர்ணயித்து அடைதல் எப்படி?

இலக்கை நிர்ணயித்து அடைதல் எப்படி?

Goal Post’ இல்லாத கால்பந்து விளை யாட்டு; செல்லுமிடம் தெரியாத கடற்பயணம் – இவைகளைக் கற்பனை செய்து பாருங்கள். முன்னது அர்த்தமற்ற நேரவிரயம்; பின்னது ஆபத்தான நிலைகுலைய வைக்கும் செயல்பாடு; இலக்கில்லா வாழ்க்கையும் இந்த வகையையே சாரும். நமது ஒவ்வொரு எண்ணமும் ஒரு செயலைக் குறிக்கும். ஒவ்வொரு செயலும் ஓர் இலக்கைக் குறிக்கும். ஒவ்வொரு இலக்கும் ஒரு வெற்றியைக் குறிக்கும். ஒவ்வொரு வெற்றியும் நம் சாதனைப் பட்டியலில் இடம்பெறும்.சாதனைப் பட்டியல் நாம் வாழ்வாங்கு வாழ்ந்தோம் என்பதற்கான பகிரங்க அடையாளம். சுருங்கச் சொல்லின் இலக்கில்லா வாழ்க்கை என்பது அச்சாணி இல்லாத வண்டிக்குச் சமம்.

அது போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேராது. இத்தகைய இலக்கை நிர்ணயிப்பது எப்படி? அதை அடைவது எப்படி? – பார்ப்போம்!

இலக்கு என்றால் என்ன?

“நமக்கு வேண்டியது என்ன என்பதை விஞ்ஞான ரீதியில் நிர்ணயித்து, அதை முறையாக திட்டமிட்டுக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அடைவதே ‘இலக்கு’ எனப்படும்.”

இலக்கின் வகைகள்

1. குறுகிய கால இலக்கு : 6 மாதம் – 1 வருடம்

2. மத்திய கால இலக்கு : 1 வருடம் – 3 வருடம்

3. நீண்ட கால இலக்கு : 3 வருடம் – 5 வருடம்

இலக்கை நிர்ணயித்தல் எப்படி? (How to Set your Goal) – Wiseman

Why this Goal – ஏன் இந்த இலக்கு?

ஏன் இந்தக் குறிப்பிட்ட இலக்கை நிர்ணயிக்கின்றோம் – மிகவும் முக்கியமா, விருப்பமா, தேவையா, அவசரமா நமது வளர்ச்சிக்குத் தேவையான மிகவும் முக்கிய அவசரமாக (குறுகிய கால இலக்கு) முடிக்க வேண்டிய இந்தக் குறிப்பிட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிற Is it realistic / possible? சாத்தியமான இலக்குதானா?

நடைமுறைக்குச் சாத்தியமான, அடையக் கூடிய இலக்கை நிர்ணயித்தல் வேண்டும். “ஆறுமாதத்திற்குள் அமெரிக்க ஜனாதிபதி ஆவேன்” – போன்ற கற்பனைகளைத் தவிர்க்க வேண்டும். மற்றவர்களைப் பார்த்துக் காப்பி அடித்து வீம்புக்கு இலக்கை நிர்ணயித்தல் முறையாகாது.

Select your goal – இலக்கைத் தேர்ந்தெடுத்தல்

இலக்கை நிர்ணயிக்கும்போது அது யாரைச் சார்ந்து இருக்கிறது என்பதை அவதானிக்க வேண்டியது அவசியம். தனிப்பட்ட குறிக்கோள், குடும்பம் சார்ந்த குறிக்கோள், சமூகம் சம்பந்தப்பட்ட குறிக்கோள் – இவற்றில் தேர்ந்தெடுக்கும் இலக்கு எவ்வளவு நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். சமூகம் சார்ந்த இலக்கினை நிர்ணயிக்கும்போது சற்று முன் யோசனையுடனும் கலந்து ஆலோசித்தும் எடுத்தல் நலம் தரும். குடும்பம் சார்ந்த இலக்கில், குடும்பத்தார் அனைவரும் இணைந்து பணியாற்றுதல் சிறப்பு.

Eleminating deficiencies – குறைகளை தவிர்த்தல்

இலக்கை நிர்ணயித்தபின், நமது முயற்சிகள் நீர்த்துப் போகாவண்ணம் இலக்கின் மீது விடாப்பிடியான பற்றுடன் இருத்தல் வேண்டும். இலக்கை நிர்ணயித்த பின் பாதி முயற்சியில் திடீரென்று வேறு இலக்கிற்கு தாவுதல் கூடாது.

இலக்கை நிர்ணயிப்பதில் முனைப்பின்றி (Lack of Seriousness) இருத்தல் வெற்றி தராது.

எழுத்தில் வடிக்காத இலக்கு எழுச்சி பெறாது. ஏற்றம் பெறாது. ஊக்கம் தராது.  நினைவில் இராது.

Matching the factors of Goal – இலக்கின் பாகுபாடுகளைப் பொருத்துதல்

Most important – A – மிகவும் முக்கியம்
Most urgent – B – மிகவும் அவரசம்
Most desired – C – மிகவும் விரும்புவது
Skill oriented – X – திறன் சார்ந்தது
Knowledge oriented – Y – அறிவு சார்ந்தது
Physical work oriented – Z – உடலுழைப்பு சார்ந்தது

உதாரணமாக நீங்கள் ஓர் ஓட்டப்பந்தய வீரராக வேண்டும் என்ற இலக்கானது “CZ” எனப் பாகுபடுத்தப்படும். ஓர் ‘IAS’ ஆக வேண்டும் என்றால் ‘AY’ என்ற பாகுபாட்டின் கீழ் வகைப்படுத்தலாம். இலக்கை விஞ்ஞான பூர்வமாக நிர்ணயிப்பதற்கு இந்தப் பாகுபாடு உதவுகிறது.

Analysis Your Potential – உங்கள் தகுதிசார் திறனை ஆராய்ந்து பார்க்கவும்
Ambition – குறிக்கோள் (கனவு)
Strength – பலம்
Taste – விருப்பம் (ரசனை)
Money – பணம்

உங்கள் இலக்கானது மேற்குறிப்பிட்ட தகுதிசார் திறன்களை ஆராய்ந்து, அதன் அடைப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

Never Underestimate

உங்களையோ அல்லது உங்கள் இலக்கையோ ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். “என்னால் இது முடியுமா” என்ற எண்ணம் வேண்டாம். உங்களால் முடியும் என்ற உறுதிப்பாட்டில் உங்கள் இலக்கினை நிர்ணயுங்கள்.

Achieving the Goal – இலக்கை அடைதல்

விஞ்ஞான பூர்வமாய் நிர்ணயிக்கப்பட் இலக்கை உங்கள் முயற்சியினால் சுலபமாக அடைய முடியும். ஒருபோதும் மனந்தளர வேண்டாம். கடினமான இலக்கை சிறுசிறு பிரிவுகளாக மாற்றிச் செயல்படுத்தலாம். அதீத ஈடுபாடோ அல்லலது மெத்தனமோ வேண்டாம். இலக்கை அடைந்த விட்டதாக மனக்கண்ணில் காட்சிகளை ஓடவிட்டுக் காணுங்கள். (visualisation)

இவ்வாறு சிறிது முயற்சியும், சிறித நேரமும் சீரிய முறையில் செலவழிக்கப்பட்டு, சிக்கலின்றி இலக்கை நிர்ணயித்து சிறப்பாக அதை அடைந்தால், சரித்திரமும், சந்ததியும் உங்களை “சாதனையாளன்” என வாழ்த்தும்.

இது உறுதி!

இலக்குகளை அடைய 10 வழிகள் …

இலக்குகளை அடைய 10 வழிகள் …

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் இலக்கு என்பது அவசியம் என்று அறிஞர்கள் கூறுவது உண்மையா?இலக்கு இல்லாத மனிதன் மாலுமி இல்லாத படகு போல தத்தளிப்பான் என்பது நிஜமா? நீங்கள் நிர்ணயிக்கும் இலக்குதான் பிற்காலத்தில் உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கப் போகும் திருப்புமுனை.

இலக்கைத் தேர்வு செய்வதிலும், தேர்வு செய்த இலக்கை அடைவதிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

இல்லாவிட்டால், வாழ்க்கையில் தோற்றவர்களின் பட்டியலில் உங்களின் பெயரும் இடம் பெற்றுவிடும்.-

நீங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்கு மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் சக்திக்கு தகுந்ததாக இருக்கலாம். உங்கள் பொருளாதார வசதிக்கு ஏற்றதாக இருக்கலாம். உங்கள் உடல்நிலை ஒத்துழைக்கக் கூடிய அளவில் இருக்கலாம்.

இலக்குகளை வகுத்து அதை சிறிதுசிறிதாக அடைய முயற்சிக்கலாம். இலக்குகளை வகுத்து அவற்றை அடைவதற்காக பயணம் மேற்கொள்கிறவரா நீங்கள்?

அப்படியானால் இங்கே தரப்பட்டுள்ள 10 எளிமையான வழிகள் நிச்சயம் உங்களுக்கு வழிகாட்டும்.

முதலில் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் தேர்வுசெய்யும் இலக்கு உங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த கூடாது. உள்ளுக்குள் நடுக்கத்தை உருவாக்கக் கூடாது. உங்களை சோர்ந்து போய் மூலையில் முடங்கச் செய்வதாக இருக்கக் கூடாது.

அவ்வாறு இருந்தால் அந்த இலக்கு உங்களுடைய இலக்கே அல்ல.

நீங்கள் வகுத்த இலக்குகள் மனதில் அச்சத்தை உருவாக்கினால் அவற்றை தயங்காமல் தூக்கியெறியுங்கள். அடுத்த இலக்கை தேர்வு செய்யங்கள்.

வழி : 1

உங்கள் இலக்குகளை ஒரு நோட்டுப் புத்தகத்தில் தெளிவாக எழுதுங்கள். இலக்குகளை எழுதிப் பார்த்து, அவற்றை அடிக்கடி படித்து மனதில் பதிய வைத்தவர்களில் 80 சதவீதம் பேர் வெற்றி அடைந்திருக்கிறார்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, இலக்குகளை எழுதுங்கள்.

உங்கள் இலக்குகளை ‘ஸ்மார்ட்’ ஆக இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். உங்கள் இலக்கு குறிப்பிடத் தகுந்ததாக இருக்க வேண்டும். அளவிடக் கூடியதாக இருக்க வேண்டும். அடையக் கூடியதாக இருக்க வேண்டும். உங்களின் முயற்சிக்குப் பலன் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். கடைசியாக… குறிப்பிட்ட காலத்திற்குள் அடையக் கூடியதாக இருக்க வேண்டும்.

வழி : 2

உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் வகுக்கும் திட்டங்கள் சிறியதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அந்த திட்டத்தை எளிதில் செயல்படுத்தக் கூடிய வகையில் வகுத்துக் கொள்ளுங்கள். இலக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்குமாறு அமைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வகுத்த திட்டத்தை, எழுதி வைத்த இலக்குகளை மாதம் ஒருமுறை மனதிற்குள் அசைப்போடுங்கள்.

வழி : 3

உங்களுடைய இலக்குகளுக்கான காரணங்களை எழுதுங்கள். அந்த இலக்குகளை அடைவதற்கு உங்களை உந்தும் காரணிகளையும் எழுதுங்கள்.
அவை உங்கள் மனதிற்கு ஊக்கக் கிளச்சியையும், புத்துணர்ச்சியையும் அளிப்பவையாக இருக்க வேண்டும். நீங்கள் ஆழ்ந்து சிந்திக்கும்போது உண்மையில் அந்த இலக்குகள் முக்கியத்துவம் மிகுந்தவையாக இருக்க வேண்டும். இந்தக் காரணங்கள் இலக்குகளை பூர்த்தி செய்யும் விதத்தில் இருந்தால், மேற்கொண்டு உங்கள் பயணத்தைத் தொடருங்கள்.

வழி: 4

நேர்மறையான எண்ணங்களை வளர்க்கும் வாக்கியங்களை எழுதுங்கள். அத்தகைய புதிய வாக்கியங்களை உங்களுக்கென்று உருவாக்குங்கள்.

‘‘என்னால் முடியும்.’’ ‘‘ஒரு வாரத்திற்குள் முடித்து விடுவேன்.’’ ‘‘என்னால் முடியாவிட்டால் வேறு யாரால் முடியும்?’’ நேர்மறையான எண்ணங்களை உருவாக்கி, தன்னம்பிக்கையை தழைக்கச் செய்யும் 3 அல்லது 5 புதிய வாக்கியங்களை உருவாக்குங்கள். இந்த வாக்கியங்கள் எப்போதும் உங்களின் தன்னம்பிக்கையைக் குறையாமல் பார்த்துக் கொள்ளும்.

வழி : 5

உங்கள் மனதில் தோன்றிய இலக்குகளை உருவகம் செய்ய பழகிக் கொள்ளுங்கள். தெளிவாகக் கூறினால், கனவு காணுங்கள். நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அது குறித்து அடிக்கடி மனதில் கற்பனை செய்யுங்கள். உங்கள் இலக்குகளை அடையும் வரை அந்த நினைப்பு உயிரில் கலந்திருக்க வேண்டும். மூச்சிலும் நிறைந்திருக்க வேண்டும்.

வழி : 6

இதுவரை சொல்லப்பட்ட நடைமுறைகளை அன்றாட வாழ்க்கையில் அமல்படுத்துங்கள். காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் உங்கள் இலக்குகளை மனதில் அசைபோடுங்கள். தன்னம்பிக்கை அளிக்கக் கூடிய வாக்கியங்களையும், உற்சாகம் தரும் வாக்கியங்களையும் உரக்க உச்சரியுங்கள். அந்த இலக்குகளை உருவகம் செய்து பாருங்கள்.

இதோடு முடித்து விடக்கூடாது. இலக்குகளை அடைவதற்கு நாள்தோறும், ஏதேனும் ஒரு நடவடிக்கை அல்லது திட்டத்தை வகுத்து செயல்படுத்துங்கள். அதை மறக்காமல் குறித்துக்கொள்ளுங்கள். பின்னர் செயலில் இறங்குங்கள். எத்தகைய சூழ்நிலை வந்தாலும் இலக்குகளை அடைவதற்கான அன்றைய நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்காதீர்கள்.

வழி : 7

எதிர்மறையான எண்ணங்களை முதலில் துடைத்தெறியுங்கள். இலக்குகளை அடையும் உங்கள் நோக்கத்திற்கு அவைதான் தடைக்கற்கள். மனதில் எதாவது ஓர் ஓரத்தில் அவை ஒளிந்திருக்கும்.

நல்ல சிந்தனைகள் உருவாவதற்கும், நம்பிக்கையூட்டும் வாக்கியங்கள் மனதில் நிறைவதற்கும் நீங்களும், உங்கள் மனதுமே காரணம் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் இலக்குகளை அடைவதற்கு துணை செய்யும் வாக்கியங்களை மனதில் அசைபோட ஒருபோதும் மறக்காதீர்கள்.

வழி: 8

இலக்குகளை அடையும் முயற்சியில் நாள்தோறும் நீங்கள் பல்வேறு சவால்களைச் சந்திக்க நேரும்.

அந்தச் சவால்களை குறித்து வையுங்கள்.

அந்தச் சவால்களை சமாளிக்க நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை பதிவு செய்யுங்கள். முயற்சிகளில் நீங்கள் எதிர்கொண்ட தடைகளை வரிசைப் படுத்துங்கள். தடைகளைத் தகர்க்க நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் வெற்றிகளையும் குறித்து வையுங்கள்.

இவ்வாறு வரிசைப்படுத்தும் போதுதான், நீங்கள் சந்தித்த தடைகள் எத்தனை என்பது புரியும்.

அவற்றை தகர்க்க நீங்கள் மேற்கொண்ட வழிகள்… வெற்றி கிடைத்தது எப்படி என்பதை உணர்ந்து அடுத்த கட்டத்துக்கு நீங்கள் செல்ல உதவியாக இருக்கும்.

வழி: 9

‘‘உன் நண்பன் யாரென்று சொல். உன்னைப் பற்றி நான் கூறுகிறேன்.’’ இப்படி ஒரு பழமொழி உண்டு.

உங்கள் இலக்குகளை அடைவதற்கு நல்ல நண்பர்கள் அவசியம். உங்கள் இலக்குகளை நோக்கிச் செல்வதற்கு அவர்கள்தான் உதவியாக இருப்பார்கள். உங்களுக்கு உந்துதலாக இருக்கும் நண்பர்கள் வட்டாரத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

அவர்களை நண்பர்களாக வைத்துக் கொள்ளுங்கள்.

முடிந்தால், இலக்குகளை அடைவதற்கு சிறந்த வழி காட்டியை தேடித் சென்று அவரிடம் நட்பு பாராட்டுங்கள்.

அவர், உங்களின் ஆசிரியராக, சகோதரராக, சகோதரியாக, நண்பராக, அண்டைவீட்டாராக இருக்கலாம். அவர்கள்தான் உங்களின் இலக்குகளை அடைவதற்கு ஊக்கமளிக்கும், உந்துதல் அளிக்கும் காரணிகளாக இருப்பார்கள்.

வழி : 10

இலக்குகளை அடைய நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளில் சின்ன வெற்றி கிடைக்கிறதா? அந்த வெற்றிக்கு உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். சிறு சிறு இலக்குகளை நிர்ணயித்து அதை எளிதாக அடையுங்கள். அந்த வெற்றியை நினைத்து மகிழுங்கள். அந்த மகிழ்ச்சி உங்களை உற்சாகப்படுத்தும். பாராட்டுக்களும், உற்சாகமான வார்த்தைகளுமே இலக்குகளை அடைவதற்கான நமது ஓட்டத்தை வேகப்படுத்தும்.