Wednesday, March 25, 2015

ஒளிமயமான எதிர்காலம்…

ஒளிமயமான எதிர்காலம்…

சின்னஞ்சிறு விஷயத்திலும் தன் முழுக்கவனத்தைம் செலுத்துபவனே அதிமேதையாகிறான். தான் அதிமேதை என்பதற்காக சிறிய விஷயங்களையும் கவனிக்காது அலட்சியம் செய்பவன் தோல்வியை அடைகிறான். வாழ்வின் நுட்பமான இத்தகைய சில வழிமுறைகளைத் தெரிந்து செயல்படும்போது ஒளிமயமான வாழ்வைபெறலாம்.

உண்மை ஒரு கூரிய கத்தி முனையை போன்றது. அதை உபயோகிக்கத் தெரியாமல் உபயோகித்தால் நம் கையையே பதம் பார்த்து விடும். உண்மையையும் சில இடங்களில் மறைத்தே ஆக வேண்டுமாயின் அதற்காகத் தயங்கக் கூடாது. அதனால், யாருக்கும் தீமை நேராவிட்டால் அவ்வாறு மறைப்பதில் தவறேதுமில்லை.

அறிவு வேறு, உத்தி வேறு

அறிவுக்கு எதைச் செய்வது என்பது மட்டுமே தெரிம். உத்திக்கு அதனை எவ்விதம் செய்தால் வெற்றி பெற முடியும் என்பதும் தெரியும். அதனால் தான், அறிவாளிகள் சிந்தனை மட்டும் செய்கிறார்கள். உத்தியைக் கையாள்பவர்களே வெற்றியும் பெறுகிறார்கள்.

அறிவானது நமக்கு சில விஷயங்களில் மட்டுமே நமது தேவையை பூர்த்தி செய்யும். ஆனால், உத்தியோ நமக்கு எல்லா விஷயங்களிலும் வெற்றியைத் தேடித் தரும். துன்பங்கள், தடங்கல்கள் என்று எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது உத்தியே. இரண்டுக்கும் இடையே வெண்ணெய்க்கும், சுண்ணாம்புக்குமான வேறுபாடு உண்டு.

புதிய சிந்தனையுடன் செயலாற்றுங்கள்

நம் வாழ்வு வளமாக மாறுவதற்கு புதிதாக சிந்தித்த விஞ்ஞானிகள் தான் காரணம். இன்றைய நவீன வசதிகளான கப்பல்கள், விமானங்கள், பாலங்கள், பல்கலைக்கழகங்கள், நுல்நிலையங்கள், நகரங்கள், ரசாயனக் கண்டுபிடிப்புகள், கலைச்செல்வங்கள் என நாம் அனுபவிக்கும் அனைத்து வசதியான பொருட்களுக்கும் காரணம், அவர்களின் அன்றைய சிந்தனை நிறைந்த உழைப்பே.

இளமையை பயன்படுத்துங்கள்

மழைக்காலத்தில் ஆறுகள் நிரம்பி வழிகின்றன. கோடைகாலத்தில் வற்றி விடுகின்றன. அதுபோன்ற இடங்களில் உள்ளவர்கள் கோடைகாலத்தில் அணைக்கட்டுகள் முலம் தங்களுக்கு தேவையான நீரைத் தேக்கி வைக்கிறார்கள். இளமை என்னும் கிணறு எப்போதும் சுரந்து கொண்டிருக்கும் என்று எண்ணி, இளைஞர்கள் தங்கள் ஆற்றல்களை வீண்விரயம் செய்து விடக்கூடாது. அந்த கிணறு வறட்சியடைய ஆரம்பித்ததும் தான் அவர்களுக்கு தங்களது ஆற்றலின் மதிப்புத் தெரிய வரும். நம் உடல், முளை ஆகியவற்றின் ஆற்றல் என்ற ஆறானது முதுமைபருவத்தில் வற்ற ஆரம்பித்து விடுகிறது. ஆனால், இளமையில் அதைச் சீராக செலவிட்டு வருவோமாயின், கோடைக்காலத்திற்காக அணைக்கட்டுக்களில் நீரைத் தேக்கி பயன்படுத்துவது போல, முதுமையிலும் நாம் இளைஞர்கள் போன்று கம்பீர வலம் வரலாம்.

நல்ல புத்தகங்களே நல்ல நண்பன்

நண்பர்களின்றி தனித்து இருபவர்களுக்கு புத்தகமே நிஜமான நண்பன். உங்கள் ஆற்றலை தேவையான காரியங்களில் மட்டும் பயன்படுத்துங்கள். உடல் நலத்தில் அக்கறை கொள்ளுங்கள். ஓய்வு நேரங்களில், வாழ்க்கையை மேம்படுத்த உதவும் பயனுள்ள பயிற்சி முறைகளை மேற்கொள்ளுங்கள். குறித்த நேரத்தில் குறித்த வேலையை செய்யுங்கள். நீங்கள் சொல்ல விரும்பும் கருத்தை, சுருங்கச் சொல்லி விளங்க வையுங்கள்.

ஒருவனுக்கு எப்போது கடமை உணர்ச்சி ஏற்படுகிறதோ, அப்போதே அவனது வாழ்க்கை பாதையும் மென்மையாக மாறுகிறது. கடமையிலிருந்து அணுவளவேனும் அடிபிறழாது நின்று அவன் தன்னுடைய துன்பங்களையெல்லாம் விரட்டுகிறான். அவனது நல்ல எண்ணங்களால் மேலான உரிமைகள் எல்லாம் தாமாகவே அவனை வந்தடைகின்றன.

திறமைகளை கண்டுபிடிப்பது எப்படி?

திறமைகளை கண்டுபிடிப்பது எப்படி?

ஒவ்வொருவரிடமும் பல்வேறு திறமைகள் ஒளிந்துள்ளன. அவற்றை எவையென்று தேடிக்கண்டுபிடிக்கும் போது தான் அவர்களுக்குள் புதிய மறுமலர்ச்சியை உருவாக்க முடியும். அவர்களிடம் இருக்கும் ஒவ்வொரு விதமான ஆற்றலும் உள்ளொளியாக இருந்து பிரகாசிக்கிறது. அந்த ஆற்றலை அவரவர் சூழ்நிலை, சக்தி, அறிவு போன்ற அம்சங்களுக்கேற்ப, அவரவர் மட்டுமே வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு முதலில் தங்கள் இயல்பான திறமை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். திறமையை மதிப்பிடும் போது நமக்குள் இருக்கும் ஆசைகள் மற்றும் கனவுகளையும் திறமை தான் என்று அதனுடன் சேர்த்துவிடக் கூடாது.

உதாரணமாக, சர்க்கஸ், சினிமா, நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகளை பார்க்கும் போது, அதில் வரும் கதாநாயகர்களை போல நாமும் செய்து பார்க்க ஆசைபடுவதுண்டு. இந்த மாதிரி ஆசைபடும் ஒரு சிலர் வேண்டுமானால், பிற்காலத்தில் சினிமா நட்சத்திரங்களாகலாம். அல்லது சர்க்கஸ் வீரர்களாகலாம். அல்லது சந்தர்ப்பமும், சுயமுயற்சியும் சேர்ந்து அவர்கள் விரும்பும் எதிர்காலம் அமைய உதவுகிறது. ஆனால், சினிமா நடிகர்களாக வரவேண்டும் என ஆசைபடும் அனைவருக்குமே எதிர்காலத்தில் அவர்கள் ஆசை நிறைவேறுவது இல்லை. காரணம், நடிப்புத்திறமை அவர்களுக்கு இயல்பான ஆற்றலாக இல்லாமல் இருப்பது தான் காரணம்.

இதே போல் பல துறைகளிலும் நமது ஆசையும் கனவும் விரிந்து பரந்திருந்தாலும், எதிர்காலத்தில் அவரவர் திறமை, ஆற்றலுக்கு ஏற்பதான் அவை நிறைவேறும். அதனால், நமது திறமையை மதிப்பிடும்போது அவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, பொறியியல் துறையில் மாணவன் அடிப்படை பயிற்சிகளை பெற்று வருகிறான். உண்மையில் அவனுக்கு அதில் ஆர்வம் இருந்தால், அந்த ஆர்வம் பயிற்சியின் போதே தெளிவாகத் தெரிந்துவிடும். ஒரு துறையில் சிறிதும் ஆர்வமில்லாதவர்களுக்கு அந்த துறையானது, அவர்கள் வேலைசெய்யும் போதே, தெரிந்து விடும். அவர்களுக்கு அந்த வேலை பெரிய சுமையாகத் தோன்றும்.

குறிப்பாக, எந்த துறையில் நமக்கு நீடித்த ஆர்வமும், உற்சாகமும் தொடர்ந்து இருக்கிறதோ அதில் தான் நமது திறமை உள்ளது என்பதை உணர்ந்து அந்த வழியில் முயற்சி செய்ய வேண்டும். திறமைக்கான தேடல்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் இருக்க வேண்டும். அதுவே வாழ்நாள் முழுவதும் நீடித்து விடக்கூடாது. திறமையை கண்டுபிடித்தவுடன் அதை வளர்ப்பது எப்படி என்பது குறித்த திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

இரண்டு முறையான பயிற்சிகளின் முலம் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம். அவற்றில் ஒன்று நேரடிபயிற்சி முறை. மற்றொன்று சுயமுயற்சி. நேரடிபயிற்சி முறைபடி கற்க வசதி மற்றும் வாய்ப்புகள் இல்லாதவர்கள் சுயமாக கற்றுக்கொள்ளலாம். `சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’, `கண்டதும் கற்க பண்டிதன் ஆவான்’ போன்ற பழமொழிகள் பயிற்சியின் அடிப்படையை நமக்குக் கற்றுத்தருகிறது. விடாபிடியாகத் தொடர்ந்து முயற்சியில் ஈடுபடும்போது எவருக்கும் எந்தக்கலையிலும் தானாகவே சரியான பயிற்சி கிடைத்துவிடும் என்பதே பழமொழிகள் உணர்த்தும் உண்மை. குறிப்பாக, கலைத்துறையினருக்கு இது பொருத்தமாக இருக்கும். சரியான வசதி வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், முறையான முயற்சியிருப்பின் பயிற்சி உங்களுக்கு எளிமையாகவே இருக்கும்.

உங்கள் பலத்தை தெரிந்து கொள்ளுங்கள்

உங்கள் பலத்தை தெரிந்து கொள்ளுங்கள்

உலகில் உள்ள மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமானவர்கள். அடிப்படையில் மனிதர்களின் குணங்கள் வேறுபட்டிருக்கும். பார்வையில், கொள்கையில், ரசனையில், பேச்சில், நடத்தையில், என்று எல்லாமே ஒன்று போல் இருப்பதில்லை. நாம் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் என்றால், ஏன் வெவ்வேறு விதமான உடைகள் உருவாக்கபடுகின்றன? வெவ்வேறு சுவை உணவுகள் சமைக்கபடுகின்றன… வெவ்வேறு கலைகள் உருவாக்கபடுகின்றன?!

நாம் விரும்பும் ஒரு விஷயம்… அடுத்தவருக்கு வெறுபாய் அமையும். ஒருவரின் தனித்தன்மை அடுத்தவரிடம் இருப்பதில்லை. தம்முடைய பலம் மற்றும் பலவீனத்தில் மனிதர்கள் வேறுபடுகின்றனர்.

இதை நாம் மிகச் சரியாக புரிந்து கொண்டால் மட்டுமே ஆற்றல் மிக்க விதத்தில் செயல்பட முடியும். ஒரு செயலை வெற்றிகரமாக முடிக்க… நம்முடைய திறமையை வெளிபடுத்தவும், நமது திறமைக்கேற்ற வேலையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் அது உதவும்.

நம்மிடம் உள்ள சிறப்பான திறனை, நாம் தெரிந்து கொள்வது அவசியம். நமக்கென்று ஒரு செயலை செய்யும் ஸ்டைல் இருக்கும். அதை நாம் கண்டறிந்தால் மட்டுமே எந்த வேலையுடனும் நாம் நம்மை பொருத்திக் கொள்ள முடியும்.

நம்முடைய செயல்முறைதான் ஒன்றை எளிதாக்குகிறது… அல்லது கடினமாக்குகிறது. செயல்முறையை பொறுத்தே ஒன்றை முன்கூட்டியோ, அல்லது தாமதமாகவோ செய்ய முடிகிறது.

தொழில் அல்லது வேலையில் பலங்கள் மற்றும் பலவீனங்கள் பற்றிய மதிப்பீடு கண்டிப்பாக உதவும். முதலில் உங்களுடைய மிக பெரிய பலம் எது என்று கண்டுபிடிங்கள். செயலாற்றும் திறமை, உயர் நுணுக்க அறிவு, ஆர்வங்கள் ஆகியவற்றில் உங்களுடைய பலத்தை தெரிந்து கொள்ளுங்கள்.அதேபோல், உங்களுடைய பண்பு நலன்கள், திறன்களை பட்டியலிடுங்கள். படிப்பில், வேலையில், சொந்த வாழ்க்கையில் உங்களுடைய பண்பு நலன்கள் எந்தளவுக்கு உங்களுக்கு வெற்றியை கொடுத்திருக்கின்றன என்பதை ஆராயுங்கள்.

உங்களுக்கு மிக பெரிய சவாலாக இருக்கும் விஷயம் எது என்பதை அறிந்து, அதை முழுமையாக கற்றுக் கொள்ளுங்கள்.

` உன்னை அறிந்தால்… உலகத்தில் போராடலாம்..’ என்கிறார்கள். முதலில் உங்களை நீங்களே சுய விமர்சனம் செய்யுங்கள்! நீங்கள் கற்பனையாளரா..? அல்லது எதையும் அணுகி ஆராய்பவரா..? அல்லது எந்திரத்தனமானவரா..? என்பதை அறிந்து அதற்கான தொழிலை அல்லது வேலையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

உடல் நன்றாக இல்லாவிட்டால் மனம் பாதிக்கபடும். மனம் சீராக இல்லாவிட்டால் உடல் பாதிக்கபடும். உடலும், மனமும் ஆரோக்கியமாக இருந்தால் தான் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள் வேலையை செய்து முடிக்க இயலும். தன்னிடம் உள்ள திறமைகளை, செயல் திறனை முழுமையாக வெளிபடுத்த ஆரோக்கியம் அவசியம்.

ஒரு வேலையை நீங்கள் தள்ளி போடுவது அதன் பின்னர், தொடர்ச்சியாக பல வேலைகளைக் கிடப்பில் போடும்படி செய்து விடும். உங்கள் சுமைதான் மேலும் அதிகரிக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். செயல் தாமதத்தால் விரும்பத்தகாத விளைவுகள், இழப்புகள் உண்டாகும்.

இன்றைக்கே முடிக்கக் கூடிய வேலையை நாளைக்கு என்று தள்ளி போட வேண்டாம். அலுவலகத்தில் மட்டுமல்ல, வீட்டிலும் வேலையைத் தள்ளி போடுகிற பழக்கம் நமக்கு இருக்கிறது. ஐந்து நிமிடம் செய்ய வேண்டிய வேலையை தள்ளி போடுவதால் இறுதியில் அந்த வேலையின் மீது வெறுப்பு ஏற்படும். இதனால் அடுத்தவர்கள் நம்மீது வைத்திருக்கும் அபிப்ராயம் கெட்டுவிடும் சூழல் ஏற்படும்.

மனசு ஒரு மந்திரச்சாவி

மனசு ஒரு மந்திரச்சாவி

வாழ்வில் எல்லா சூழல்களையும் நம்மால் உருவாக்கி விட முடியாது. ஆனால், அவற்றிற்கு தகுந்த மனோபாவத்தை நம்மால் உருவாக்கிக் கொள்ள முடியும். தீய மனோபாவங்கள் நல்லவற்றை அழித்து விடுகின்றன. நல்ல மனோபாவம் கீழ்த்தரமான எண்ணங்களாலும், அற்ப புத்தியாலும் பாழாகி விடுகின்றன. இதனால் பலன் எதுவும் இல்லை. நல்ல மனோபாவங்கள் என்பது எதிர்மறையான எண்ணங்களை மனதிலிருந்து நீக்குவது தான்.

உதாரணமாக, பலருக்கு ஓய்வெடுக்க அதிக நேரம் இருக்கிறது. ஆனால் அந்த ஓய்வில் சந்தோஷம் தான் குறைவு. பல வகையான உணவுகள் இருக்கின்றன. ஆனால் அதை சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்கள் தான் குறைவானவை. உயர்ந்த மனிதன். ஆனால் தாழ்ந்த குணம். அதிக லாபம். ஆனால், குறைந்த உறவுகள்.

நிலாவிற்கே நாம் சென்று திரும்பி விட்டோம். ஆனால், பக்கத்து தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல முடியவில்லை. வெளியில் உள்ள விண்வெளியை வென்று விட்டோம். ஆனால், உள்ளே உள்ள மனதை வெல்ல முடியவில்லை. நமது வாழ்வில் உள்ள முரண்பாடே இதுதான். மற்றவர்கள் உணர்ச்சியின்றி இருப்பதைக் கண்டு திகைத்து நிற்கிறோம். ஆனால், நாம் அப்படி இருப்பதை மாற்ற ஒரு முயற்சியும் எடுப்பதில்லை.

இன்னும் ஒரு சிலர், நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து அதை மாற்ற சிறிதும் அக்கறை காட்டுவதில்லை. நாம் முயன்றால் எல்லாவற்றைம் சரி செய்துவிடலாம். மழை பெய்தால் சில குட்டைகளில் நீர்த்தாமரைகள் மலர்கின்றன. அவை வேகமாக வளர்ந்து நீர் மட்டத்தையே முடி விடுகின்றன. சில வேலையாட்கள் குட்டையில் இறங்கி இலைகளை வெட்டி தண்ணீரைச் சுத்தம் செய்கின்றனர். சில நாட்களில், இலைகள் வளர்ந்து விடுகின்றன. மறுபடி வேலையாட்கள் வந்து இலைகளை வெட்டுகிறார்கள்.

இது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இலைகளை அதாவது பிரச்சினைகளை அவர்கள் பார்க்கும் போது அதற்கான தற்காலிக தீர்வையே காண்கிறார்கள். இதே பிரச்சினை அவர்களுக்கு நீண்ட கால பிரச்சினையாக தெரிந்திருந்தால், அவர்கள் வேரோடு பிடுங்கி இருப்பார்கள். இந்த இரண்டையுமே அவர்கள் செய்யவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் வெளியில் தெரியக்கூடிய பிரச்சினைகள் மட்டும் தீர்ந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். அதனால் தான் இலைகளை மட்டும் வெட்டினார்கள். அந்த வேலையாட்களை போல் தான் நாமும் நமது வெளிப்படையான பிரச்சினைக்கு மட்டும் தீர்வு காகிறோம்.

நடத்தைகள் என்பது பலவிதமான மனோபாவங்களின் தொகுப்பு. நடத்தைக்கு பின்னால் இருந்து செயல்படும் காரணங்களை புரிந்து கொள்ள வேண்டும். நமது மனோபாவங்களாலும், நம்பிக்கைகளாலும் தான் நடத்தை உருவாகிறது. மனோபாவங்கள் மிக முக்கியமானவை. ஆனால், அதற்கான காரணங்களைக் கூறுவது அவ்வளவு எளிதானது அல்ல.

ஒரு குறிக்கோளைத் தீர்மானித்து விட்டால், நாம் அதற்காக செயல்படவேண்டும். நல்ல உறவு தான்நோக்கம் என்றால் நல்ல நடத்தை வருவது நிச்சயம். ஆனால், இதற்கு சரியான நம்பிக்கைகளும், மனோபாவங்களும் அவசியம். எப்போதும் நாம், `அடுத்தவர் மிகச்சரியாக இருக்க வேண்டும்’ என்று எதிர்பார்போம். ஆனால், நமது குறைகளை சரிபடுத்திக் கொள்ள மாட்டோம். `நான் மாறவே மாட்டேன்’ என்று பிடிவாதம் பிடிப்பவர்களுக்கு ஒரே பதில் `நாம் மாறுவதைத் தவிர வேறு வழியில்லை’ என்பதே.

மகிழ்ச்சிக்கு 8

மகிழ்ச்சிக்கு 8

உங்களின் வேலை, `வீட்டு பக்கம்’ பாதிப்பை ஏற்படுத்துகிறதா? அப்படியானால் நீங்கள் மனபூர்வ மாக நேசிக்கும் விஷயங்களுக்கு அதிக நேரம் ஒதுக்க ஆரம்பிங்கள். அது உங்களுக்கு புத்துயிர்பையும், புத்துணர்வையும் ஊட்டும். வாழ்க் கையில் எது முக்கியம், எது உங்களின் நேரத்தையும், சக்தியையும் உறிஞ்சுகிறது என்று பிரித்து பார்த்து, முக்கிய மானவற்றில் அதிக கவனம் செலுத்த கற்றுக் கொள்ளுங் கள். அதன்பின், அலுப்பூட்டும் வாழ் க்கை ஆனந்தமய மாக மாறிவிடும்.

நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் இங்கே…

1.சரியான சாப்பாட்டு நேரம்

ஒழுங்கற்ற உணவு வேளைகள் உங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். தினமும் ஒரே குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட முயலுங்கள்.

2.போதுமான உறக்கம்

தினசரி உங்களுக்கு எவ்வளவு நேர உறக்கம் தே வை என்று வரையறுத்துக் கொள்ளுங்கள். அந்த அளவின்படி தினமும் இரவு தூங்க முயலுங்கள்.

3.தூய்மை நேரம்

தினமும் நன்றாகக் குளிப்பதற்கு, புனித நீராடுவதற்கு, அழகு நிலையம் செல்வதற்கு, `மசாஜ் தெரபிகள்’ மேற்கொள்வதற்கு, இவை போன்ற தூய்மை பணிகளுக்கு திட்டமிட்டு நேரம் ஒதுக் குங்கள்.

4.அன்றாட வேலைகள்

அன்றாட சின்னச்சின்ன வேலைகள் தவிர்க்க முடி யாதவை. ஆனால் உங்களின் பணி அட்டவணையை பாதிக்காத வகையில் அவை `அட்ஜஸ்ட்’ செய்யபட வேண்டும்.

5.உங்கள் விருப்பத்துக்கு…

நீங்கள் ரசித்து அனுபவிக்கும் விஷயத்துக்கு வாரம் ஒரு மாலை வேளையையாவது ஒதுக்குங்கள். அப்போது செல்போனை அணைத்து விடுங்கள், கம்ப்யூட்டர் உறங்கட்டும். நீங்கள் உங்களுக்கு பிரியமான விஷயத்திலேயே ழுழ்கி போய் விடுங்கள்.

6.ஆதரவுக் கரங்கள்

நீங்கள் நெருக்கடிக்கு உள்ளாகும்போது உங்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் ஒன்றிரண்டு பேராவது இருக்கட்டும். அவர்கள், தேவைப்படும்போது உதவி செய்யும் உறவினர் களாக இருக்கலாம், நீங்கள் வெளியூர் செல்லும் போது வீட்டைக் கவனித்துக்கொள்ளும் அண்டை வீட்டாராக இருக்கலாம்.

7.தனிப்பட்ட நேரம்

உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்குமான தனிபட்ட நேரத்துக்கு முக்கியத்துவமும், மதிப்பும் அளியுங்கள். அந்த நேரத்தில் வேறு வேலைகளோ, திசைதிருப்பும் விஷயங்களோ குறுக்கிட அனுமதிக்காதீர்கள்.

8.இந்தக் கணம் முக்கியம்

நீங்கள் அலுவலக வேலை பார்க்கிறீர்கள் என் றால், அந்நேரத்தில் அந்த மனநிலைக்கு மாறி விடுங்கள். அலுவலகத்தில் இருக்கும்போது வீட்டை பற்றியோ, வீட்டில் இருக்கும்போது அலுவலகத்தை பற்றியோ சிந்திக்கக் கூடாது.

குழந்தைகளுக்கு இலக்கு

குழந்தைகளுக்கு இலக்கு

பொதுவாக நம் ஒவ்வொருவருக்கும் ஓர் இலக்கு இருக்கிறது. ஏதேனும் ஓர் இலக்கை தீர்மானித்துக் கொண்டு அதை அடைய வேண்டும் என்றுதான் நாம் செயல்படுகிறோம். குழந்தைகளுக்கான இலக்கை அவர்களே தேர்வு செய்து கொள்ளும் பக்குவத்தை அவர்களுக்கு வளர்க்க வேண்டும். அவர்கள் தேர்வு செய்யும் இலக்கை அடைய அவர்களுக்கு நாம் உதவ வேண்டும்.

பொதுவாக நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும். அதற்கான படிப்பை படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் குழந்தைகளுக்கான நமது இலக்காக இருக்கும். அந்த இலக்கை அவர்களே சொந்தமாக அடைவதற்கான வழிமுறைகளை கற்றுக்கொடுக்க வேண்டும்.

விமானப்பள்ளியில் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர், விதிகளையெல்லாம் கற்றுக்கொடுத்து விட்டு இயக்குவதற்கு விமானத்தையும் தைரியமாக கொடுக்க வேண்டும். அவன் மாணவன், அவனிடம் கொடுத்தால் விபத்து ஏற்படும் என்று பயந்தால் அவன் எப்போதுமே விமானம் ஓட்ட முடியாது.

அதுபோலத்தான் உங்களது குழந்தைகளுக்குப் பறக்க கற்றுக் கொடுப்பதோடு உங்களது வேலை முடிந்தது. பறப்பது அவர்கள் பாடு. அவர்களது சொந்த சிறகுகளோடு அவர்களை பறக்கவிடுங்கள்.

குழந்தைகளின் படிப்பில் இலக்குகள் வேண்டும். எனது வீட்டுப்பாடத்தை யாரும் எனக்கு நினைவுபடுத்தாமலே நானே செய்து விட வேண்டும் என்று நினைப்பது கூட ஓர் இலக்குதான்.

பெரிய இலக்கை அடைவதற்கு சின்ன சின்ன இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை ஒவ்வொன்றாக அடைய வேண்டும்.

பொதுவாக இலக்குகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.

கல்வி மற்றும் வேலை சார்ந்த இலக்கு, செயல்முறை இலக்கு, குணாதிசய இலக்கு.

கல்வி மற்றும் வேலை சார்ந்த இலக்கு : ஐடி துறையில் நிபுணராக வேண்டும். பத்திரிகையாளராக வேண்டும். விஞ்ஞானியாக வேண்டும். ஆசிரியராக வேண்டும் என ஏதேனும் ஓர் இலக்கை உங்களது மகன் அல்லது மகள் நிர்ணயிப்பது கல்வி மற்றும் வேலை சார்ந்த இலக்கு ஆகும். இலக்கை அவர்கள் தீர்மானித்ததற்குப் பிறகு, அந்த இலக்கை அடைய அவர்களுக்குத் தகுதி இருக்கிறதா? இல்லையெனில் எப்படி வளர்ப்பது? போன்ற கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டியிருக்கும்.

செயல்முறை இலக்கு : ஒரு வேலையை எப்படி செய்வது என தீர்மானிப்பது செயல்முறை இலக்கு. எனது வீட்டுப் பாடத்தை குறித்த நேரத்தில் முடிப்பேன். கணக்கு பாடத்தை அழகான கையெழுத்தில் எழுதுவேன் போன்ற நிர்ணயிப்புகள் செயல்முறை இலக்கு ஆகும்.

குணதிசய இலக்கு : நன்றாக படிக்கக்கூடிய மாணவராக இருக்கலாம். நிறுவனத்தில் வேலைகளை சிறப்பாக செய்து முடிக்கக் கூடிய திறன் படைத்தவராக இருக்கலாம். ஆனால் அவர் நல்ல குணாதிசயம் உடையவராகவும் இருக்க வேண்டும். குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க உதவ வேண்டும். எப்படி படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க உதவ வேண்டும். எல்லாவற்றுக்கும் ஆதாரமாக படிப்பதற்கான ஆர்வத்தையும் நாம் வளர்க்க வேண்டும்.

அவனால் புத்தகம் இல்லாமல் இருக்க முடியாது என்று ஒரு சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைப் பற்றி சொல்வதை கேட்டிருப்போம். அந்த அளவிற்கு அவன் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறான்.

கணக்கு எனக்கு கடினம்தான். ஆனால் விடாப்படியாக அதை படிப்பேன். அது எனக்கு எளிமையாகும் வரை விடமாட்டேன் என்று உங்களது குழந்தை சொன்னால் அது அவனது உள்ள உறுதியையும் விடாப்படியான ஆரவத்தையும் காட்டுகிறது.

இந்த உறுதியை அடைவது குணாதிசய இலக்கு.

எனது ஆங்கில ஆசிரியரைப்பற்றி குறை சொல்வதை இனிமேல் நிறுத்திக் கொள்வேன் என்று நிர்ணயம் செய்வதும் ஒரு குணாதிசய இலக்குதான்.

ஆங்கில ஆசிரியரை பற்றி அந்த மாணவன் அல்லது மாணவி ஏன் குறை சொல்ல வேண்டும்? அவர் அவனை திடிக்கொண்டே இருக்கிறார். எதற்காக திட்டுகிறார். நன்றாக படிக்க வில்லை என்பதற்காக திட்டுகிறார். நன்றாக படித்து விட்டால் அவர் திட்டமாட்டார். அவர் திட்டவில்¬யெனில் குறை சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

நீங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்

உங்கள் குழந்தைகள் இலக்கு நிர்ணயித்து செயல்பட நீங்கள் அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

திவ்யாவின் அப்பா ஒரு விஞ்ஞானப் புத்தகத்தைப் படித்து முடிக்க வேண்டியிருந்தது. அந்த புத்தகத்தில் விண்வெளி பற்றிய பல விபரங்கள் அடங்கி இருந்தது. அதை படித்து தனக்கு சொல்ல வேண்டும் என்று திவ்யா அவரிடம் சொன்னாள். புத்தகத்தை 7 நாளில் படித்து முடித்து விடுவேன். அதற்குப்பிறகு சொல்கிறேன் என்றார் அப்பா. 70 பக்கங்கள் கொண்ட ஆங்கில புத்தகம் அது. ஒரு நாளைக்கு 10 பக்கங்கள் படித்து முடித்தார். 7 நாட்களில் புத்தகத்தை முடித்து விட்டு, திவ்யாவிற்கு அதில் உள்ள விண்வெளி விஷயங்களை அப்பா எடுத்து சொன்னார்.

திவ்யா 7&ம் வகுப்பு படிக்கும் மாணவி. 70 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை அப்பா எப்படி ஒரு நாளைக்கு 10 பக்கங்கள் என திட்டமிட்டு படித்தார் என்பதை பார்த்துக் கொண்டே இருந்தவள். தனது பள்ளி பாடங்களுக்கும் இதே போன்ற இலக்கை நிர்ணயித்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தாள்.

பெற்றோருக்கு பக்குவமான 10 டிப்ஸ்

பெற்றோருக்கு பக்குவமான 10 டிப்ஸ்

எல்லாக் குழந்தையும் நல்ல குழந்தைதான்…

விரல் சப்புவது என்பது குழந்தைகளின் தவிர்க்க முடியாத ஒரு செயலாக உள்ளது. அப்படி விரல் சப்பினால் குழந்தையின் பல் உயர்ந்துவிடும் என்று பயப்படும் பெற்றோர், அக்குழந்தையை அடிக்காத குறையாக கண்டிக்கும் நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள்.

சமீபத்தில் நடத்தபட்ட ஆய்வு ஒன்றில் 58.3 சதவீத பெற்றோர், தங்கள் குழந்தைகள் விரல் சப்பினால் கோபத்தில் சட்டென்று பிடித்து இழுத்துவிடுவதாக கூறினார்கள். அதே ஆய்வில், 18.8 சதவீத பெற்றோர், குழந்தையின் கை சப்பும் பழக்கத்தை தவிர்க்க, அக்குழந்தையின் கை விரல்களில் கசப்பு மருந்தை தடவி விட்டதை ஒப்புக் கொண்டுள்ளனர். 9.6 சதவீதம் பேர் விரல் சப்பும் தங்கள் குழந்தையை அடிப்பதாக குறிபிட்டுள்ளனர்.

மீதமுள்ள 13.3 சதவீதம் பேர்தான், விரல் சப்புவது குழந்தையின் வளர்ச்சியின் ஒரு கட்டம் என்பதை உணர்ந்துள்ளனர்.

ஒரு குழந்தையிடம் விரல் சப்பும் பழக்கம் ஆரம்பத்தில் இருந்தாலும், படிபடியாக அதில் இருந்து அதை விடுபட வைத்துவிடலாம். அதுவரை பெற்றோர்தான் கம்பை தூக்காமல் இருக்க வேண்டும், குழந்தையை அடிக்க!

பொதுவாக 3 வயதுக்குமேல் ஒரு குழந்தையின் முளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். 6 வயதுக்குமேல் அதன் குணம், செயல்பாடுகளில் புதுபுது மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். அதனால், குழந்தையை சரியாக ஹேண்டில் செய்வது அவசியமாகிறது.
பெற்றோருக்கு பக்குவமான 10 டிப்ஸ் :

1. ஒரு குழந்தைக்கு முதன் முதலில் கிடைக்க வேண்டியது முழுமையான அன்பு. குழந்தை கேட்கும் பொருளை வாங்கிக்கொடுத்தால்தான் அன்பு என்று கிடையாது. குழந்தையை மடியில் அமர வைத்து நல்ல கதைகள் சொல்வது முழுமையான அன்பை அதற்கு கிடைக்கச் செய்யும். இப்படிபட்ட பெற்றோரிடம் குழந்தைகள் மிக நெருக்கமாகி விடும்.

2. அடுத்ததாக குழந்தைக்கு நாம் கொடுக்க வேண்டியது நல்ல ஆரோக்கியம். குழந்தை பிறந்தது முதல் அதன் எடையை சரியாக `மெய்ன்டெய்ன்’ செய்து வரவேண்டும். 6 மாதத்திற்கு ஒருமுறை அதன் எடையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும் என்பதற்காக அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு பொருட்களை அதிக அளவில் திணித்து குண்டு குழந்தைகளாக மாற்றிவிடக் கூடாது.

3. முன்று வயது முதல் நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். நகத்தை வெட்டுவது, தலையை சுத்தமாக பேணுவது, உள்ளாடைகள் மற்றும் உடல் அந்தரங்க உறுப்புகளை எப்படி ஆரோக்கியமாக பராமரிப்பது என்று அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். 18 வயது ஆகும்வரை ஒரே டாக்டரிடம் அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டும்.

4. அடுத்து முக்கியமானது பணம். பணம் இன்றி இன்றைய வாழ்க்கை முறையே இல்லை. அதனால், பணத்தின் மதிப்பை சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். நம் குழந்தையுடன் படிக்கும் சக பெரிய இடத்து பிள்ளைகளிடம் பணம் அதிக அளவில் புழங்குகிறது என்பதற்காக நம் குழந்தைக்கும் பணத்தை அள்ளி செலவிடக்கூடாது. வீட்டின் சூழ்நிலையை பக்குவமாக புரிய வைத்து, தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. `பாக்கெட் மணி’ கொடுத்தால், அந்த பணத்திலும் சேமிக்கும் பழக்கத்தை குழந்தையிடம் உருவாக்க வேண்டும்.

5. குழந்தையுடன் நேரத்தை செலவிடுவதும் முக்கியமானது. குழந்தை என்ன பேசுகிறது என்பதை பெற்றோர் பொறுமையாக அமர்ந்து கேட்க வேண்டும். ஸ்கூல் டீச்சர், பக்கத்து வீட்டுக்காரர்கள் பற்றி குழந்தைகள் சொல்வதையும் ஆர்வமாக கேட்க வேண்டும்.

6. குழந்தையை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்க்கக்கூடாது. அவ்வப்போது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். தினமும் `வாக்கிங்’ அழைத்துச் செல்வதும் அவசியம்.

7. குழந்தைகள் முதன் முதலாக தோல்வியை சந்திக்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும். தோல்வி என்பது வெற்றியின் அடிப்படை என்பதை பக்குவமாக புரிய வைக்க வேண்டும். இதற்காக, அம்மா, அப்பா இருவரும் ஏதாவது ஒரு விளையாட்டு விளையாடி யாரேனும் ஒருவர் தோற்பதுபோல் நடித்து, `இதெல்லாம் சகஜம். தோல்வியை கண்டு துவளாமல் இருந்தால் அடுத்து வெற்றிதான்’ என்பதை உணர்த்த வேண்டும். முக்கியமாக, எதைம் `டேக் இட் ஈஸி’யாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை குழந்தையின் மனதில் பதிய வைக்க வேண்டும்.

8. பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தோடு குழந்தைகளை வளர்க்க வேண்டும். உன்னால் எதுவும் முடியும் என்று சொல்லி சொல்லி வளர்த்தால் குழந்தையிடம் தன்னம்பிக்கை தானாக வளர்ந்துவிடும். பிரச்சினை எப்படி வந்தது? ஏன் வந்தது? அதற்கு என்ன தீர்வு? – இந்த முன்று விஷயங்களையும் தைரியமாக அணுக குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

9. குழந்தை மற்றவர்களிடம் பழகும்போது, அவர்கள் எப்படி தன்னிடம் பழகுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளும் பக்குவத்தை வளர்க்க வேண்டும். எதிர் பாலினர் தன்னிடம் பேசும்போது, அவர்களது பேச்சு, பார்வை, தொடுதல் போன்றவற்றை ஒரு குழந்தை புரிந்துகொள்ளும் பக்குவத்தை பெறுவதும் அவசியம். மற்றவர்கள் தவறாக நடக்க முயற்சி செய்கிறார்கள் என்பதை எப்படி கண்டறிவது என்பதை சொல்லிக்கொடுக்கவும் தவறிவிடக்கூடாது.

10. கண்டிப்பு என்பதை குழந்தையிடம் முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். ஒரு பெற்றோர் தங்களது குழந்தையை அதிகம் கண்டித்தால், அவர்கள் குழந்தையிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் அர்த்தம். ஒரு குழந்தை அதன் சக்திக்கு தகுந்தவாறுதான் சிந்திக்கும். அதனால், எந்த சூழ்நிலையிலும் குழந்தையை கட்டாயபடுத்தக் கூடாது. மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடவும் கூடாது.

மொத்தத்தில், அறிவு, அன்பு, உணவு – இந்த முன்றையும் உங்கள் குழந்தைக்கு எப்பவும் கொடுக்க தயாராக இருங்கள். குழந்தை ஜெயித்தால் பாராட்டுங்கள். தோற்றால் தட்டிக்கொடுங்கள். உங்கள் குழந்தையும் நல்ல குழந்தைதான்!

வெற்றிக்கு ஒரு புத்தகம் – ஐந்து வில்லன்கள்

வெற்றிக்கு ஒரு புத்தகம் – ஐந்து வில்லன்கள்

ஆட்டிட்யூட்! இப்போதெல்லாம் இந்த வார்த்தையை அடிக்கடி கேட்கிறோம். பையன் நல்ல திறமைசாலிதான் ஆனா ஆட்டிட்யூட் சரியில்லையே! என்கிறார்கள்.

அதென்ன ஆட்டிட்யூட்?

தமிழில் இதனை மனப்பாங்கு என்கிறார்கள். அவ்வப்போது நம்மைச் சுற்றி நிகழ்கிற விஷயங்களை நமது மனம் எப்படி எதிர்கொள்கிறது, எப்படி எதிர்வினை (ரியாக்ட்) செய்கிறது… இவற்றின் தொகுப்பைத்தான் ஆட்டிட்யூட் (Attitude) என்கிறோம்.

சுமாரான திறமை கொண்டவர்கள்கூட, தங்களது மனப்போக்கைப் பொருத்தமானவகையில் அமைத்துக்கொண்டால் மிகப் பெரிய அளவு முன்னேறுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

அதேசமயம், இதற்கு நேர் எதிராக, பிரமாதமான திறமைசாலிகள் நல்ல ஆட்டிட்யூட் இல்லாமல் தடுமாறுவதும் உண்டு. இந்த ஆட்டிட்யூட்டை எப்படி சாதகமாக பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து தி டிஃப்ரன்ஸ் மேக்கர் (The Difference Maker) என்ற புத்தகம் வந்திருக்கிறது அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஜான் சி மேக்ஸ்வல்.

நல்ல ஆர்ட்டிட்யூட் வளர்த்துக்கொள்வது அத்தனை சிரமமில்லை. ஆனால், நீங்கள் அப்படி முன்னேறிவிட முடியாதபடி தடுக்கக்கூடிய ஐந்து வில்லன்கள் இருக்கிறார்கள் என்று மாக்ஸ்வெல் எச்சரிக்கிறார். நாம் இந்த ஐந்து பேரையும் புரிந்துகொண்டு முறியடிக்கப் பழகிவிட்டால், அதன்பிறகு அவர்கள் என்ன செய்தாலும் பப்பு வேகாது, நாம்தான் ஜெயிப்போம்!
மார்ஸ்வெல் சொல்லும் அந்த 5 வில்லன்கள்: ஊக்கமின்மை, மாற்றம், பிரச்னைகள், பயம் மற்றும் தோல்வி.
இப்போது, சினிமாவில் வருவதுபோல் இந்த வில்லன்களை ஒவ்வொருவராக எதிர்த்து நிற்போம், அவர்களை ஜெயிக்கக் கூடிய ஆயுதங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

1. ஊக்கமின்மை:
*நீங்கள் செய்கிற எதையும் மேலோட்டமாகப் பார்க்காதீர்கள், ஆழ்ந்து யோசித்து அதன் உண்மையான நோக்கத்தை உள்ளே பதிய வைத்துக்கொள்ளுங்கள்.
*சரியான நபர்களோடு பழகுங்கள். நீங்கள் செய்கிற எதுவும் உருப்படாது என்று சொல்கிறவர்களோடு எந்நேரமும் வளையவந்தால், உங்களைப் பற்றி உங்களுக்கே அவநம்பிக்கைதான் தோன்றும்.
*நெகட்டிவ் வார்த்தைகளைத் தவிர்த்துவிடுங்கள், உங்களுக்கே தெரியாமல் அவை ஏற்படுத்தும் அதிர்வுகள் உங்களைச் சோர்வாக்கும், முன்னேற்றத்தைப் பாதிக்கும்.

2. மாற்றம்:
* நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும் அதைப் புரிந்துகொள்ளுங்கள், முரண்டு பிடிக்காதீர்கள்.
* மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் இல்லை. இதை மனத்தில் வையுங்கள்.
* அதேசமயம், சில விஷயங்களை எப்போதும் மாற்றிக்கொள்ளக்கூடாது. அந்தக் கொள்கைகளில் உறுதியாக இருங்கள்.

3. பிரச்னைகள்:
*பிரச்னைகள் நிகழ்ந்தே தீரும், தயாராக இருங்கள், அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் என்று முன்கூட்டியே யோசித்துக் கொள்ளுங்கள், ஒன்று அல்ல, மூன்று தீர்வுகளைச் சிந்தித்துவையுங்கள்.
*பல சமயங்களில், நாம் பிரச்னை என்று நினைப்பது மேலோட்டமான ஒரு விஷயம், நிஜப் பிரச்னை ஆழத்தில் ஒளிந்திருக்கும். அதைக் கண்டுபிடியுங்கள்.
*அத்தனைப் பிரச்னைகளுக்குள்ளும் ஒரு புதிய வாய்ப்பு ஒளிந்திருக்கிறத, தேடிப் பிடித்து பயன்படுத்துங்கள்.

4. பயம்:
* பயம் இல்லாததுபோல் நடிக்காதீர்கள். எனக்கு இதை நினைத்து அச்சமாக உள்ளது என்று ஒப்புக்கொள்கிறவன் கோழை அல்ல, வீரன். அவனால்தான் அந்தப் பயத்தை வெல்லமுடியும்.
*உங்கள் பயத்தின் தொடக்கப் புள்ளி எது என்று யோசியுங்கள், அங்கே அடியுங்கள்.
* நேற்று, நாளை ஆகியவற்றைவிட இன்றுதான் மிக முக்கியம், அதை மறக்காமல் இருந்தால் எந்தப் பயமும் உங்களை எதுவும் செய்யாது.

5. தோல்வி:
* சறுக்கல்கள் வரும்போது, மாத்தி யோசியுங்கள். இந்தத் தோல்வியும் ஒரு வெற்றியாக இருக்கலாம்.
*உங்கள் மொழியையே மாற்றுங்கள். ச்சே இப்படி நடந்திருக்கலாம். என்பதைவிட அடுத்தமுறை இப்படிச் செய்வேன் என்பது பெட்டர்.
* சில விஷயங்களை நம்மால் கட்டுப்படுத்தமுடியும், மற்ற பல நம் கையில் இல்லை. அவற்றை மாற்ற நினைத்துப் பிரயோஜனம் இல்லை, நம்மால் முடிந்ததைமட்டும் தொடுங்கள், சரி செய்யுங்கள்.

உங்களுக்கு புகழ் தேவையா?

உங்களுக்கு புகழ் தேவையா?

புகழ்வது என்பது அடுத்தவரைப் பற்றி உயர்வாகப் பேசுவதுதான். ஒருவருடைய உன்னதமான செயலைப் பாராட்டும்போது தான் அவருக்கு புகழ் உண்டாகிறது.

புகழ்வது என்றால் முகஸ்துதி செய்வதல்ல. உண்மையற்ற, இனிமையான பேச்சு தான் முகஸ்துதி. உண்மையானதும், இனிமையானதுமே புகழ்ச்சி. புகழும்போது வரும் ஒருசில வார்த்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. புகழ்வது சக்தி வாய்ந்தது என்பதால் நாம் அதில் கஞ்சத்தனம் காட்டக் கூடாது.

ஒருவர் உயிரோடு இருக்கும்போது அவரை புகழ மறுப்பவர்கள், அவரது பிரிவிற்கு பின் புகழ்ந்து பேசுகிறார்கள். அதனால் தான் உயிரோடு இருக்கும்போது பலருடைய அருமை தெரியாமலேயே போய்விடுகிறது. பாரதியார், எம்.கே.தியாகராஜபாகவதரின் இறுதி ஊர்வலத்தின் போது அவர்களை மதிக்க மறந்தவர்கள் நிறைய பேர்.

`நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்’ என்ற கருத்தை ஆழமாக சிந்தித்துப் பாருங்கள். உங்கள் அருகில் கூட சாதனையாளர்கள் இருக்கலாம். அவரை இனம் கண்டு கொண்டு பாராட்டுங்கள். பாராட்டுவதற்கு ஒருபோதும் தயங்காதீர்கள்.

நாம் அனைவரும் பாராட்டுக்காக ஏங்குகிறோம். இதில் விதிவிலக்குகள் இல்லை. அடுத்தவரைப் பாராட்டினால், நமது மதிப்பு குறைந்துவிடும் என்று நாம் தவறாக நம்பு கிறோம். அல்லது பாராட்டுவதால் தலைக்கனம் அதிகமாகி விடும் என்று தவறாக நினைக்கிறோம்.

ஒரு நல்ல விஷயத்தை செய்தவரை உடனே பாராட்டுங்கள். ஒரு நல்ல வார்த்தை அல்லது செயலைக் கண்டவுடன் காலம் தாழ்த்தாமல் பாராட்டி விடுங்கள். காலம் தாழ்த்திப் பாராட்டுவது என்பது சூடான உணவை ஆறிய பின் பரிமாறியதற்குச் சமம்.

பாராட்டு என்பது பொதுவாக இல்லாமல் குறிப்பிட்டு இருக்க வேண்டும். நல்ல பேச்சு என்பது பொதுவானது. உனது பேச்சின் சாரம், அதை வடிவமைத்த விதம் எனக்குப் பிடித்திருந்தது. சொன்ன உதாரணங்கள் நன்றாக இருந்தன என்பது போன்று ஆழமாக பாராட்டு இருக்க வேண்டும்.

நேற்றைய சாப்பாடு இன்றைய பசியைத் தணிக்காது. பாராட்டியதற்கான பசி எப்போதும் தணியவே தணியாது. அடிக்கடி பாராட்டுங்கள். அப்படியானால் உங்களை பலரும் நேசிப்பார்கள்.

ஒரு கலைஞனுக்கு உண்மையான பாராட்டு என்பது ரசிகனின் கைதட்டல்கள்தான். அவர் தன் ரசிகன் ஒவ்வொரு முறை கைதட்டும் போதும், விசில் அடிக்கும் போதும் தான் சாதித்ததை விட இன்னும் அதிகமாக சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதனால் அவர் புதிய புதிய வழிமுறைகளைக் கையாண்டு ரசிகர்களிடம் இருந்து அளவு கடந்த அன்பை பெறுகிறார். பெரும்புகழ் அடைகிறார்.

சாதனை செய்பவரை மற்றவர்கள் முன்னால் வைத்து பாராட்டுங்கள். மற்றவர் முன்னிலை யில் அவரது மதிப்பு உயரட்டும். அது நீண்ட நாட்களுக்கு நினைவிருக்கும். பாராட்டுகள் உறவுகளையும் வளர்க்கும்.

யாரையும் தாழ்த்திப் பேச வேண்டாம். ஆனால், அதே நேரத்தில் அறிந்த நல்லவற்றை மட்டுமே எடுத்துக் கூறுங்கள் என்கிறார், பெஞ்சமின் பிராங்கிளின்.

பாராட்டுகள் காற்றைப் போன்றது. நமது வாழ்க்கை என்னும் நெடுஞ்சாலையில் இந்த காற்றைக் கொண்டுதான் வாகனங்களின் சக்கரங்களில் நிரப்பி நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. நீங்கள் தகுதியானவர்களை புகழ்ந்தால், நீங்களும் புகழ் பெற வாய்ப்பு ஏற்படும்.

திறமை அறிந்தவர்களிடம் திறமை காட்டினால்தான் பலன்

திறமை அறிந்தவர்களிடம் திறமை காட்டினால்தான் பலன்

“குருவே, எனக்கு ஒரு நல்ல வேலை அமையவில்லை’ என்று வருத்தத்தோடு சொன்ன இளைஞனை நிமிர்ந்து பார்த்தார் குரு.

“என்ன பிரச்னை?’ என்று கேட்டார்.

“என்னிடம் நிறைய திறமைகள் இருக்கிறது. ஆனாலும், எனக்கு வேலை கிடைக்கவில்லை’ என்றான் இளைஞன்.

வந்தவனின் பிரச்னை குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்லத் துவங்கினார்.

“ஒரு கிராமத்துக்கு பெரியவர் ஒருவர் அவரிடம் ஆசி பெற்றால் வாழ்வு சிறக்கும் என்ற ஊர் மக்கள் எல்லோரும் அவரிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கினர். அந்த ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். அவனும் பெரியவரிடம் சென்றான். அவனையும் அவர் ஆசிர்வதித்தார். ஆனால், அந்த இளைஞன் விடவில்லை. “பெரியவரே, இந்த ஆசிர்வாதத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது? என் பிழைப்புக்கு ஏதாவது கொடுங்கள்’ என்று கேட்டான். உடனே பெரியவர் தன்னுடைய பையைத் துழாவி ஒரு அழுக்கு மோதிரத்தை எடுத்து, “இதை விற்று உன் பிழைப்புக்க வைத்துக்கொள்’ என்றார்.

நூல் சுற்றி கரை படிந்த அந்த அழுக்கு மோதிரத்தை பார்த்த இளைஞனுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. என்றாலும், அந்த மோதிரத்தை எடுத்துக்கொண்டு போய் கிராமத்தில் தனக்குத் தெரிந்தவர்களிடம் விற்க முயன்றான். ஆனால், யாரும் அந்த அழுக்கு மோதிரத்தை வாங்க முன்வரவில்லை. இந்த மோதிரம் விலை போகாது என்ற முடிவுக்கு வந்த இளைஞன் மீண்டும் அந்தப் பெரியவரிடம் வந்து நடந்ததைச் சொன்னான்.

அப்போது அந்தப் பெரியவர், “இந்த மோதிரத்தை நகைக் கடையில் விற்க முயற்சித்தாயா? முதலில் போய் ஒரு நகைக் கடையில் கேள்’ என்று சொன்னார்.

பெரியவர் சொன்னது போல் ஒரு நகைக் கடையில் மோதிரத்தை காட்டியபோது. அவர்கள் உடனே அதன் அழுக்கை நீக்கி அதன் தரத்தை கண்டுபிடித்துவிட்டனர். அவனுக்கு நல்ல பணமும் கொடுத்தனர்.’

இந்தக் கதையைச் சொன்னதும் வேலை தேடி வந்திருந்த இளைஞனுக்கு தன்னுடைய தவறு புரிந்தது.

அப்போது அவனுக்கு குரு சொன்ன வின் மொழி:
திறமை அறிந்தவர்களிடம் திறமை காட்டினால்தான் பலன்.

தன்னம்பிக்கைக்கு 7

தன்னம்பிக்கைக்கு 7

உங்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்பட இதோ ஏழு எளிய வழிகள்…!

1 நீங்கள் உங்களை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக நேசிக்க ஆரம்பிக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு உங்களுக்குள் தன்னம்பிக்கை வேரூன்றும். விரைவாகவே அதன் பயனை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். எந்திரம்போல் எப்போதும் வேலை வேலை என்று அலையாமல் உடலுக்கும் உள்ளத்திற்கும் சற்று ஓய்வு கொடுத்து உங்களை நேசிக்கத்தொடங்கினால் மனதில் உற்சாகம் தோன்றி அமைதியும் தன்னம்பிக்கையும் ஏற்படும்.

2 உங்கள் மேனியழகு, உங்கள் உள்ளத்தில் தன்னம்பிக்கையை முழுமையாக மலரச் செய்யும். அதற்காக தினந்தோறும் உடற்பயிற்சி செய்யுங் கள். நிறைய தண்ணீர் பருகுங்கள். இனிப்பு பலகாரங்கள், கொழுப்புச்சத்துள்ள எண்ணெய் பலகாரங்களை தவிர்த்து புரோட்டீன் சத்து மிதமாக உள்ள உணவுவகைகளைத்தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். இரவில் நன்றாக தூங்குங்கள்.

3 உங்கள் முகத்திற்கும் மேனிக்கும் பொருத்தமான அழகுசாதன பொருட்களை மிதமாக பயன்படுத்துங்கள். அழகு உங்களை மகிழ்ச்சி நிறைந்த வராக மாற்றும்.

4 உங்களிடம் உள்ள சின்னஞ்சிறு குறைகளை பிறர்சுட்டிக்காட்டும் முன்பு நீங்களே அறிந்து, அவைகளை அகற்றும் வழிகளை ஆராய்ந்து வெற்றிகாணுங்கள். உங்கள்தோல்விகளை ஒப்புக்கொள்ள வெட்கப்படாதீர்கள். இப்படிச் செய்தால் தடைக் கற்கள் வெற்றி யின் படிக்கட்டுகளாக மாறுவதை உணர்வீர்கள்.

5 உங்கள் சொந்தவாழ்க்கை, தொழில், வியாபாரம், பணத் தேவை போன்ற அனைத்தையும் பற்றி முதலிலே ஒரு செயல்திட்டம் வகுத்துவிடுங்கள். அதற்கு தக்கபடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். இதன் மூலம் எதிர்காலம் வளமாக அமையும். வளமான வாழ்க்கை தன்னம்பிக்கையை வளர்க்கும்.

6 வாழ்க்கை எப்போதும் அமைதியாக ஓடவேண்டும் என்று நினைக்காதீர்கள். சில செயல்களில் டென்ஷன் ஆனாலும் பரவாயில்லை.கொஞ்சம் `ரிஸ்க்’ எடுங்கள்.ரிஸ்க்கான விஷயங்களை தைரியமாக எதிர்கொண்டு வெற்றிவாகை சூடும்போது உங்களிடம் தைரியம் பிறக்கும்.

7 உங்களை நீங்கள் நம்புங்கள்…! உங்கள் மீது நீங்கள் ஒருபோதும் அவநம்பிக்கை கொள்ளாமல் எப்போதும் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் திறமையை நீங்களே நம்பாவிட்டால் வேறு யார் நம்புவார்கள். நம்பிக்கையே உங்களின் திறமைக்கும், செயல்திறனுக்கும் சரியான அஸ்திவாரம்…!

நட்”பூ’விலும் உண்டு “முள்’!

நட்”பூ’விலும் உண்டு “முள்’!

யுத்த களத்தில் குதிரை மீது அமர்ந்து ஒரு வீரன் ஆவேசமாகப் போர் புரிந்து கொண்டிருக்கிறான். போர் பயங்கரமாக நடந்து கொண்டிருக்கிறது.

இன்னும் கொஞ்ச நேரத்தில் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் சமயத்தில்…

வீரன் ஏறியிருந்த குதிரை அவனைக் கீழே தள்ளி ஓடி விடுகிறது என்றால் அந்த வீரனின் கதி என்னவாகும்? வீரனை எதிரி கொன்று விடுவான் அல்லவா? இதே நிலைதான் நண்பனின் துரோகமும்!

“நட்டாற்றில் நழுவிவிடும் நட்பு நமக்கு இருப்பதைவிட, உயர்ந்த மனப்பான்மையுடைய நல்லவர்களின் விரோதம் மேலானது’ என்கிறார் மோலியர்.

இது எப்படியென்றால் எதிர்முனையில் நல்லவர்களைச் சந்திக்கும்பொழுது அவர்களின் நல்ல பண்பையும் சேர்த்துப் பார்க்கிறோம். அதன் விளைவு கூடவே இருந்து குழி பறிக்கும் நண்பர்களால் நாம் அடையும் பலன் வீழ்ச்சி அல்லவா?

நண்பன் வாழ்வின் துணைவன் என்று நினைத்துக் கொண்டிருக்கும்பொழுது நண்பனே நமக்கு எதிரியாகிவிடும் பொழுது அதனை எப்படி தாங்கிக் கொள்ள முடியும்?

நல்ல நண்பன் என்று எண்ணிப் பழகுகிறோம். நல்லவன் என்று நம்பி நட்பு கொள்கிறோம். நம்பிக்கையுடன் நல்லவிதமாகப் பற்று வைக்கிறோம்.

எதிர்பாராதவிதமாய் அந்த நண்பன் தகுதியற்றவன் என்று புரிந்தால் அது அவ்வளவாக நம் மனதை பவருத்தாது. சற்று ஏமாற்றம் ஏற்படும்.

“ஏமாற்றுக்காரர்களே சமூக உறுப்பினர்களில் மிகவும் அபாயமானவர்கள். நம் இயற்கையின் படி நாம் காட்டும் பிரியத்திற்கும், ஆதரவுக்கும் துரோகம் செய்துவிட்டால்… மிகவும் புனிதமாக இருக்கும் கடமையைக் கூட மீறி நடக்கும் அயோக்கியர்கள்’ என்கிறார் ஜெர்மன் நாட்டு அறிஞர் கிராப்.

“சந்தர்ப்பத்தில் நமக்குத் துரோகம் செய்துவிட்டு ஒதுங்கும் மனிதனின் நட்பை, உயிருக்கு மன்றாடியவாறு மரணப்படுக்கையில் கிடக்கும் சமயத்திலும் கூட நினைத்து விட்டால் உள்ளம் நடுங்கும். வேதனை தீயாக எரியும்’ என்கிறார் எபிக்டெட்ஸ்.
***

சிலரை நாம் நண்பர்கள் என்று கருதிப் பழகுவோம். அவர்களும் அவ்விதமே பழகுவார்கள். அவர்கள் பேச்சில் இனிமை இருக்கும். ஆர்வத்துடனும் அன்பு ததும்பும் மொழியிலும் பேசுவார்கள்.

நேரில் சந்திக்கும் பொழுது எல்லாம் முகம் மலர்ந்து அகங்குளிரும் வண்ணம் நமக்காகவே வாழ்வதுபோல நட்புடன் இருப்பார்கள்.

ஆனால் நம்மை விட்டு அடுத்தவரிடம் பேசும் பொழுது நம்மை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்வார்கள். இவர்கள் உண்மையான நண்பர்கள் அல்லர்!

இவர்கள் இவ்விதம் கூறுவதற்குக் காரணம் தாங்கள் அறிவாளி என்றும் உலகம் அறிந்த அறிஞர்கள் என்றும் மற்றவர்கள் எண்ண வேண்டும் என்ற அற்ப ஆசைதான்!

அற்பப் புகழ், போலிப் பெருமை போன்ற கீழ்த்தரமான மனோபாவத்தின் தூண்டுதலால்தான் அப்படி கூறுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்களை உண்மையான நண்பன் என்று எண்ணி ஏமாந்து போய்விடக்கூடாது.

இன்னும் சிலர் மிகவும் தந்திர குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். நம்மிடம் இருக்கும் புகழ், பணம் இவற்றிலேயே கவனத்தைச் செலுத்தியிருப்பது இவர்களுடைய நோக்கம்.

புகழையும் பொருளையும் கொள்ளையடிக்க இவர்கள் குள்ளநரித்தனம் செய்யத் தீர்மானிப்பார்கள். உயிர்த் தோழர்கள் போன்று வேடமிட்டு நம்மை நெருங்கி உற்ற நண்பராக நடித்து நமது மனதைக் கவர்ந்து தம்மீது நம்பிக்கை கொள்ளச் செய்வார்கள். நாம் பரிபூரணமாக அவர்களிடம் நம்பிக்கை வைக்கும் பொழுது நம்மைப் பற்றி வெளியே தாறுமாறாகப் பிரசாரம் செய்து நம்முடைய உழைப்பைத் தங்களின் சாதனையாக வெளியே பரப்பிப் பயனடைந்து விடுவார்கள். இப்படிப்பட்டவர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாகப் பழக வேண்டும்.
***

நட்டு என்ற உணர்ச்சி நம்மை வாழவைக்கும் ஒரு சஞ்சீவி மருந்து. அதனை மிகவும் யோசனையுடன் கையாள வேண்டும்.

நண்பன் என்று வேம் போட்டு நடிக்கும் நட்பே நமக்குத் தேவையில்லை. துரோகக் கூட்டுறவு நமக்கு வேண்டாம்.

“மனிதன் வீட்டில் வளர்கிறான். ஆனால் ஊரில்தான் வாழ்கிறான்.’ என்று அட்லர் கூறுகிறார். அதனால் நம்முடைய வாழ்வின் வளர்ப்புக்கு வீட்டுத் துணை மட்டும் போதாது. ஊரின் துணையும் வேண்டும்.

வீட்டில் மனைவியுடன் பேசி மகிழ முடியும். குழந்தைகளுடன் கொஞ்சி விளையாட இயலும். பெற்றோருடன் கலந்து சந்தோஷப்பட முடியும்.

உற்றார், உறவினருடன் விருந்துண்டு ஆனந்தப்படலாம். இந்தக் குடும்ப சூழ்நிலை நமக்கு மன அமைதியையும், இன்பத்தையும் தரும் என்பது உண்மைதான்.

“கூடி வாழும் இயல்பு இல்லாதவனுக்கு சமுதாய வாழ்வு சுகமாக இருக்காது’ என்கிறார் ஷேக்ஸ்பியர்.

வெளி உலகம் சென்று நாம் பாடுபட்டுப் பணம் தேடி வெளி உலகம் சென்று நாம் பாடுபட்டுப் பணம் தேடி வீட்டுக்குக் கொண்டு வந்த பிறகுதான் இல்லத்தில் இன்பம் உண்டாக முடியும்.

நம்முடைய குடும்ப சூழ்நிலை எளிதில் உணர்ந்து அதில் ஈடுபாடு கொள்ள வழி உள்ளது.

ஆனால், வெளி உலகத்தின் நிலைமை வேறு. பல வகையான மக்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. பலதரப்பட்ட வயதுள்ளவர்களைக் கண்டு பழகவும் அவசியமாகிறது.

சிலருடைய உதவியைக் கொண்டும், பலருடைய அனுதாபத்தின் மூலமும், அநேகருடைய ஆதரவினாலும் நம்முடைய வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்தே தீர வேண்டும்.
***

பிறரை நாம் கவர வேண்டுமானால் சிறப்பான அம்சம் இருந்துதான் தீர வேண்டும்.

கடல்போன்ற மக்கள் மத்தியில் நமக்கு ஆதரவு தருபவர்களை எப்படி கண்டுபிடிப்பது? இங்கேதான் நட்பு என்ற சக்தியின் முதன்மைத் தன்மையை நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.

அலைகடல் போன்ற ஜனத்திரளின் முன் பிறரின் ஆதரவுக்கு நாம் பாத்திரமாக வேண்டுமானால், நமக்கு என்று சில நண்பர்கள் அவசியம் இருந்தே தீர வேண்டும். லட்சக்கணக்கான மக்களையும் நம்மிடம் நட்பு கொள்ளும்படி செய்வது எளிதான செயல் அல்ல.

ஆனால் நண்பர்கள் என்ற ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டு அந்த வட்டத்துக்குள் நம்மையும் இணைத்துக் கொள்வது எளிதானது. இதனைச் செயல்படுத்தியும் காட்ட முடியும்.

வீட்டுக்குள் இன்பமும், மகிழ்ச்சியும் நிலைக்க வேண்டுமானால் வெளிஉலகில் நம்முடைய வாழ்வின் தரத்திற்கு ஏற்ப, பொருளைச் சம்பாதிக்க வேண்டும்.

நல்ல நண்பர்கள் அமையும்போதுதான் ஒழுங்கான முறையில் உயர்ந்து, வளமான வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும்.

வெளி உலகில் நண்பர்கள் நல்லவர்களாக ஏற்படும்பொழுது, நம்முடைய வாழ்க்கையும் உறுதியாக அமைய வழி வகுக்கும்.

வாழ்வின் சூழ்நிலையில் உறுதியான உண்மையான நண்பன் கிடைத்துவிட்டால் அதுவே இன்பத்தின் எல்லையாக இருக்கும். இதற்கு அடிப்படை நண்பர்களே!

இதனைப் புரிந்து கொண்டால்தான் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் வாழ முடியும்.

மாட மாளிகை கட்டி, கார் சவாரி செய்து, உல்லாசமாக வாழ முடியாவிட்டாலும், பசியின்றி சாப்பிட்டுப் பரிசுத்தமாக உடுத்திப் பக்குவமான நிலையில் இன்பமாக வாழமுடியும்.

வாழ்வை மாற்றும் `நட்பு’!

வாழ்வை மாற்றும் `நட்பு’!

`ஒரு நல்ல நண்பன் இருந்தாலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்’ – ஆங்கிலப் பழமொழி.

`அன்பாக இரு`. அனைத்து மதங்களின் போதனை இது. அன்புடன் இருப்பது என்பது பொறுப்புடன் கூடிய ஒரு முடிவு. இன்றைய நட்புகளை எடை போட்டால் பெருமூச்சுதான் பெரிதாய் வரும். `உல்லாசத்துக்காக ஒன்று சேர்ந்தவையே நட்பாக இருக்கின்றன’ என்ற ஒருவரின் விமர்சனம் இன்றைய நட்புலகத்துக்கு வெகுவாகப் பொருந்தும்.

இன்று பெரும்பாலானவர்களின் அன்பு பாரபட்சம் பார்த்தே ஏற்படுகிறது. தேவையானபோது தொடர்பு கொள்வதும், தேவைக்காக பழகுவதும், கூடிப் பொழுதுபோக்குவதுமே நட்பென்று புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நிஜத்தில் அது நட்புமல்ல, அன்புமல்ல, வெறும் சுயநலமே!

“பிறரைப் பார்த்து நீ புன்னகைப்பது கூட ஒரு அறச்செயல்” என்று நபிகள் நாயகம் சொல்கிறார். ஆனால் வாய்விட்டுச் சிரித்தாலோ, அனைவரிடமும் சிரித்துப் பழகினாலோ சமூக வழக்கில் தப்பாய்ப் பார்க்கும் கண்ணோட்டம் பரவி இருக்கிறது. அப்படி இருக்கும்போது நாமே வலியவந்து எல்லோரிடமும் சிரித்துப் பழகி தொடர்ந்து அன்புறவில் ஈடுபடுவது சாத்தியமற்ற ஒன்றுதான். இருந்தாலும் நாம் எத்தனை பேருடன் நட்புறவுடன் இருக்கிறோமோ, அதுவே நாம் அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்ததற்கான அடையாளம்.

`என்னை நேசிப்பவரை நான் நேசிப்பேன், எனக்கு உதவி செய்தவருக்கு நான் உதவி செய்வேன்’ என்பதுவே பலரின் எழுதப்படாத அன்பு இலக்கணம். பழிக்குப் பழி என்பதற்கும், இதற்கும் வித்தியாசமே இல்லை.

“மற்ற எல்லோருமே வெளியே செல்லும்போது உள்ளே வருபவன் தான் உண்மையான நண்பன்” என்று அறிஞர் டாக்டர் பில் மெக்கிராவ் சொல்வார். ஆமாம், உங்களிடம் எதைஎதையோ எதிர்பார்த்துப் பழகியவர்கள் எல்லாம் உங்களிடம் ஏதுமில்லை என்று அறிந்து விலகிச் செல்லும்போது, உங்களுடன் கரம் கோர்க்க, உங்களின் துயர் போக்க வருபவனே உண்மையான நண்பன் ஆவான். இதைத்தான் “இடுக்கண் களைவதே நட்பு” என்று வள்ளுவர் இலக்கணப்படுத்துகிறார்.

நீங்கள் நட்பு நிறைந்தவரா? என்பதை சோதிக்க உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய சில கேள்விகள்…

என்னிடம் எதுவுமே சரியில்லை என்கிறபோதும் அணுகிப் பேசும் நண்பனை பெற்றிருக்கிறேனா?

ஒத்துப்போகாத விஷயங்களின்போது அவனுக்கு தனித்தன்மை இருப்பதை ஆமோதிக்கிறேனா?

வருத்தத்தில் இருக்கும் நண்பனின் சூழலை சமாளிக்க எனக்குத் தெரிந்திருக்கிறதா?

நண்பனின் சில பழக்கங்கள் பிடிக்காதபோது அதைப்பற்றி அவனிடம் வெளிப்படையாக பேசுகிறேனா?

தேவையென்றால் நண்பனிடம் தயக்கமின்றி உதவி கேட்கிறேனா? உதவிக்கு நன்றி கூறுகிறேனா?

நண்பனின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் நடக்கிறேனா?

நண்பன் ஒரு புதிய நண்பனைச் சந்திக்கும்போது, நம் நட்புக்கு இடையூறு வந்துவிட்டது என்று எண்ணுகிறேனா?

கடைசி இரு கேள்விகளைத் தவிர மற்ற கேள்விகளுக்கு `ஆம்’ என்ற பதில் வராவிட்டால் நீங்கள் உண்மையான நண்பனை அடையவோ, உண்மையான நண்பனாக மாறவோ இன்னும் நிறைய பயணிக்க வேண்டும்.

உங்கள் நட்புறவை பரிசீலிக்க விரும்பினால் உங்கள் வாழ்வின் முக்கியமான 3 உறவுகளை பட்டியலிடுங்கள். அவர்கள் ஏன் உங்களுக்கு முக்கியமானவர்கள்? அவர்களுக்கு அந்த விசேஷ இடத்தைப் பெற்றுத் தந்த குணங்கள் என்ன? அவர்களின் கஷ்டங்களைப் போக்க நான் என்ன செய்ய தயாராக இருக்கிறேன்? என்று பட்டியலிடுங்கள். அவர்களின் சிறப்பு குணங்கள் உங்களுக்கு ஏற்படவும், அதே குணத்துடன் பிறருடன் நேசமாகப் பழகவும் முயற்சி செய்யுங்கள்.

ஒருவரோடு ஒருவருக்கு உள்ள உறவில் மட்டுமே நாம் முழுமையாக நாமாக இருக்கிறோம். நாமிலிருந்து பிரிந்த `நான்’ அழிந்து விடும். அப்படியென்றால் நட்பு எப்படி இருக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? முகம் மலர பேசுவதல்ல, அகம் மலர பழகுவதே நட்பு என்கிறார் வள்ளுவர். ஒருவனுக்கு எப்படிப்பட்ட நண்பன் தேவை என்பதை ஆங்கிலக் கவிதை ஒன்று இப்படி வரையறுக்கிறது…

“தன் மனத்தை அப்படியே வெளிப்படுத்த முடிந்தவன்;

எப்போது வாயை மூட வேண்டும் என்று அறிந்தவன்;

அன்புடன் உணவையும், நல்ல நகைச்சுவைகளையும், சூரிய அஸ்தமனத்தையும் பகிர்ந்து கொள்பவன்;

உங்களுடன் பெரியவனாகவோ, சிறியவனாகவோ நடிக்காமல் தோழமையுடன் இருப்பவன்;

நீங்கள் நீங்களாகவே இருக்க அனுமதிப்பவன் எவனோ அப்படிப்பட்ட நண்பனே உங்களுக்குத் தேவை”

நட்பு பேணுங்கள் நல்லவையெல்லாம் கூடும்!

உறவுகளை மேம்படுத்த உன்னத வழிகள்

உறவுகளை மேம்படுத்த உன்னத வழிகள்

உறவுகளை மேன்மைப்படுத்த தவறியதன் விளைவாக , வாழ்க்கையில் எல்லாமே நமக்கு எதிராக இருப்பதைப்போன்ற எண்ணம் ஏற்படுகிறது. அவசரத்தில் நாம் எடுக்கும் எந்த ஒரு சின்ன விஷயமும் நமக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிடுகிறது. நிதானமாக யோசித்தால், நாம் பெரிதுபடுத்திய பல விஷயங்கள் அற்ப விஷயங்கள் என்பது புலனாகும். எதையுமே சாதாரணமாக எடுத்துக்கொண்டால் வாழ்க்கை எளிமையாகி விடுகிறது. உறவுகளை மேம்படுத்த உளவியாலாளர்கள் கூறிய ஆலோசனை பின்பற்றுங்கள் வெற்றிப்பாதைகள் தானாகவே திறக்கும்.

தவறான மனோபாவம்

சின்ன விஷயங்களைச் சின்ன விஷயங்களாக நாம் பார்க்க முடியாதபோது இனிய உறவுகளைக்கூட அவை பாதித்து விடுகின்றன. நாம் சிறு விஷயங்களை அலட்சியப்படுத்தத் தொடங்கிவிட்டால், அவை சக்தி இழந்து செயலற்றுப் போய் விடுகின்றன. யோசித்துப் பார்த்தால் எல்லாமே சின்ன விஷயங்கள்தான். ஒரு விஷயத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே அதன் தன்மையும் அமையும். எல்லாவற்றுக்கும் நம்முடைய மனம்தான் காரணம். வாழ்க்கையில் ஏற்படுகின்ற பல இடர்ப்பாடுகளுக்கும் நம்முடைய தவறான மனோபாவங்களே காரணமாகின்றன.

முழுமையாக கேளுங்கள்

ஒருவருடன் பேச ஆரம்பிக்கும்போது, அவர் பேசுவதை முழுமையாகக் கேட்பது என்று முடிவு செய்து கொள்ளுங்கள். குறுக்கிட வேண்டும் என்று தோன்றினாலும் குறுக்கிடாதீர்கள். அவர் சொல்வதை நீங்கள் முழுமையாகக் கேட்ட பிறகு, நீங்கள் என்ன சொல்ல வேண்டுமென்பதைத் தீர்மானித்துத் தெளிவாகப் பேசுங்கள். மற்றவர்களை நீங்கள் பேச அனுமதித்து அக்கறையுடன் கவனிக்கின்றபோது, நீங்கள் சொல்வதையும் கவனிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கும் தானாகவே ஏற்பட்டு விடும். இதைக் கடைபிடிக்க ஆரம்பித்தால் கருத்துப் பரிமாற்றம் எளிதாகும். மற்றவர்கள் அன்பும் சுலபமாகக் கிடைக்கும்.

எதிராளியை சந்தோசப்படுத்துங்கள்

ஒவ்வொருவரையும் திருத்திக் கொண்டிருப்பது நம்முடைய வேலை அல்ல. அது சாத்தியமுமில்லை. நம்முடைய நேரம்தான் வீணாகும். நம்முடைய குறைபாடுகளே நிறைய இருக்கும்போது, அவற்றை திருத்திக்கொள்ள முயற்சிக்காமல் மற்றவர்களை விமர்சிப்பது வீண் வேலை.

எதிராளியை மகிழ்ச்சிப்படுத்துங்கள்

நாம் நினைப்பதுதான் சரியாகவே இருக்கும் என நிரூபிப்பது அவசியமில்லை. நம்முடையதும், பிறருடையதும் சரியாக இருக்கும். பல சந்தர்ப்பங்களில் இரண்டும் ஒரே சமயத்தில் நடப்பதில்லை. இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது அவசியம். நம்முடைய அளவுகோல்களை வைத்துக் கொண்டு பிறருடைய அபிப்ராயங்கள் நம்மைப் பாதிக்காதவரை அதை மறுக்க வேண்டிய அவசியமில்லை. அந்த நிலை மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்குமானால், அதைக் கெடுக்காமல் அதில் நாமும் பங்கு பெறலாம்.

வாழ்க்கை எளிதாகும்

திருப்தி என்பது தொடுவானம் போன்றது. நெருங்க நெருங்க தூர விலகிச் சென்று கொண்டே இருக்கும். எனவே கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும். நாம் விரும்பியது கிடைக்காமல் போகும் சந்தர்ப்பங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காக அதையே நினைத்துக் கொண்டு வாழ்க்கையை வீணாக்கி விடக்கூடாது. எது கிடைக்கிறதோ, அதை விரும்ப கற்று கொள்ள வேண்டும். விரும்புகின்றபடியே எல்லாம் நடக்காது என்ற யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு நமக்கக் கிடைத்ததை விரும்புகின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் வாழ்க்கை இலகுவாகி விடும்.

எதிர்மறைகளை விலக்குங்கள்

எதிர்மறையான, பலவீனமான எண்ணங்கள் மன அமைதியைத் தகர்த்து சீர்குலையச் செய்யும் சக்தி படைத்தவை. ஒரு எதிர்மறை எண்ணம் இன்னொரு எதிர்மறை எண்ணத்துக்கு உங்களை இட்டுச் சொல்கிறது. இதன் விளைவாக குழப்பம் மிக்க மனநிலைக்கு ஆளாவீர்கள். மேலும் மனமானது கவலை களும் வேதனைகளும் நிரம்பிய குப்பைத் தொட்டியாகி விடுகிறது. எதிர்மறை எண்ணங்கள் அல்லது கவலைகள் மனத்தில் வேகம் பெறுவதற்கு அனுமதிக்காதீர்கள். பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைப்பதற்குப் பதிலாக, பிரச்னைகள் பற்றிய கவலைகளே அதிகமாகி மனத்தில் பாரம் அதிகரித்து விடுகிறது.

நிதானத்தை கடைபிடியுங்கள்

நாம் விரும்புகின்ற விஷயங்களே நம்மைச் சுற்றி நிகழ வேண்டும் எதிர்ப்பார்ப்பது வீண். இருப்பதை அல்லது நடப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டால் பொறுமையினை இழக்க வேண்டிய அவசியமே இருக்காது. பொறுமை இல்லாமல் போனால் வாழ்க்கையே ஏமாற்றம் நிறைந்ததாகி விடும். மற்றவர்களின் செயல்களைக் கண்டு பொறுமை இழக்காதீர்கள். அவர்கள் செய்வது அறியாமையின் விளைவு என்று நீங்கள் நினைத்தால், பொறுமை இழக்க வேண்டிய அவசியம் இருக்காது.

மன அமைதியே மனித ஆற்றலின் ஊற்றுக் கண்ணாகவும் விளங்குகிறது. அமைதி நிலையில்தான் ஆற்றலை முழுமையாக ஒருமுகப்படுத்தவும் முடியும். எனவே, மன அமைதிக்கு முதலிடம் கொடுங்கள், உறவுகள் கூடிவரும், சாதனைகள் தொடரும்.

வாழ்க்கையில் வெல்ல `6′

வாழ்க்கையில் வெல்ல `6′

“தடம் பார்த்து நடப்பவன் மனிதன், தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்” என்று சொல்வார்கள். எல்லோருக்கும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையும், மற்றவர்கள் நம்மை விரும்ப வேண்டும் என்ற எண்ணமும் இருக்கத்தான் செய்யும். வெற்றிக்கு முயற்சியும், தன்னம்பிக்கையும் போதும். வெற்றி பெற்றால் மற்றவர் உங்களை திரும்பி பார்க்கலாம், ஆனால் எல்லோரும் உங்களை விரும்பியும், நெருங்கியும் வர வேண்டுமென்றால் 6 அடிப்படை விஷயங்கள் அவசியம். அவை இங்கே…

நம்பிக்கை:

நம்மிடம் இருக்கும் சிறந்த பழக்க வழக்கங்களே பிறரை நம்மை நோக்கி ஈர்க்கும். முதலில் நமக்கு நம் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். நான் அழகானவ(ன்)ள் என்ற எண்ணம் உங்கள் மனதில் எப்போதும் இருக்கட்டும். அழகு என்பது சருமத்தில் மட்டுமில்லை. சருமத்தை பராமரித்து அழகு படுத்திவிடலாம். கவர்ச்சியை விட நம்பிக்கை மேலானது. நம்பிக்கையின் பலனையும், ஈர்ப்பையும் உங்கள் வெற்றி தான் மற்றவர்களுக்கு உணர்த்தும்.

நேர்த்தியான உடை:

`நான் கலராக இல்லை. எலும்பும் தோலுமாக இருக்கிறேன். எனக்கு எந்த டிரெஸ் போட்டாலும் நல்லா இருக்காது` என்று எண்ணாதீர்கள். நேர்த்தியாக உடை அணியுங்கள். உடை அணிவது ஆளைக் கவர்வதற்கல்ல என்றாலும், பார்ப்பவர்களை மதிக்கத் தூண்டுவதும் நாம் அணியும் உடை தான். அது உங்களுக்கு வசதியானதாகவும் இருக்கட்டும். நல்ல மரியாதை, நல்ல நட்பு எல்லாவற்றையுமே நல்ல ஆடைகள் உருவாக்கித் தரும். நேர்த்தியான ஆடை உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

கனிவான பழக்கம்:

வீட்டுக்குள்ளேயே கிணற்றுத் தவளையாக முடங்கிக் கிடந்தால் இந்த உலகத்தின் அதிசயங்கள் உங்களுக்கு தென்படாமலே போகும். பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டால் தான் வெற்றியின் முகம் உங்களுக்கு காட்சி தரும். எனவே ஓய்வு நேரத்தை நண்பர்களுடன் இணைந்து சமூக சேவை செய்யும் விதமாக வெளியே கழித்தால் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்போது உங்களுக்கு புதிதாக பலர் அறிமுகமாகலாம். நீங்களும் முதலில் உங்களை அறிமுகம் செய்து பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பழக பழகத்தான் நம் பலமும், பலவீனமும் தெரியும். பிறகு நம் நடையை மாற்றி வெற்றி நடை போடலாம்.

நட்பை தேர்வு செய்யுங்கள்:

வெற்றிக்குத் துணை நம்பிக்கை மட்டுமல்ல, நட்பும் தான். யாருடன் சினேகிதம் கொள்கிறோமோ அவர்களின் பழக்கம் நமக்கும் ஒட்டிக் கொள்ளும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதனால் நட்பு கொள்வதில் அதிக கவனம் அவசியம். அதேபோல அருகில் இருப்பவர்கள், உடன் பணிபுரிபவர்கள் ஆகியோருடன் நட்புறவுடன் இணக்கமாக பழகுவதும் வாழ்க்கையில் வெற்றிக்கு உதவும். உங்களின் அழைப்பை மதிப்பவருடனும், மரியாதையுடன் பழகுபவருடனும், உங்கள் நலனில் அக்கறை கொள்பவருடனும் நட்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

விமர்சனத்தை எதிர்கொள்ளுங்கள்:

நீங்கள் நிறைவான தோற்றத்தில் இருக்கும்போது பலரும் உங்களைப் பற்றி பேசிக் கொள்வார்கள். அதுபோல குறையான தோற்றத்தில் இருந்தாலும் பலரும் விமர்சிப்பார்கள். புகழ் பேச்சில் மயங்காமலும், குறை காணும் விமர்சனங்களில் கலங்காமலும் இருங்கள்.

விலக்க வேண்டியவை:

வெற்றிக்காக விலக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு. முதலாவது எதிர்மறையாக பேசுபவர்களை விட்டு விலகுங்கள். அடுத்ததாக நேரத்தையும், செல்வத்தையும் விரயம் செய்யும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். நண்பர்களுடன் அதிகமாக அரட்டையடிப்பது, தூங்கிக் கழிப்பது, தியேட்டரில் கழிப்பது போன்றவற்றை விலக்குவதன் மூலம் நேரத்தையும், செல்வத்தையும் மிச்சப்படுத்தலாம். இந்த ஆறும் இருந்தால் வெற்றி உங்களைச் சேரும், மற்றவர்களும் உங்களிடம் விரும்பி நட்பு பாராட்டுவார்கள்.

உங்கள் மீதான நம்பிக்கையை இழக்காதீர்கள்!

உங்கள் மீதான நம்பிக்கையை இழக்காதீர்கள்!

உடல் ரீதியான, பாலுணர்வு ரீதியான துன்புறுத்தல்கள், வன்முறை, பொருளாதார ரீதியாக பாதுகாப்பற்ற நிலை, குறைந்த அந்தஸ்தில் இருப்பதை எண்ணி வருந்துதல், மற்றவர்களைப் பாதுகாப்பாக கவனித்துக் கொள்ள வேண்டுமே என்ற தொடர் பொறுப்பு ஆகியவற்றால் மன அழுத்தம் ஏற்படுகிறது.

சோகமான எண்ணங்கள், தினமும் ஒரு முறை யாவது, அனைவருக்கும் எழுந்து, அடங்குவது இயற்கையே. ஆனால், ஒரு சோக நினைப்பு, தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு மேல் ஒருவர் மனதை ஆக்கிரமிக்கும்போதோ, அன்றாட வேலைகளில் தடையை ஏற்படுத்தும்போதோ, அந்த நிலை தான், “மன அழுத்தம்’ என்றழைக்கப்படுகிறது.

பிரியமான நடவடிக்கைகளில் நாட்டம் இல்லாமல் இருப்பது, சோர்வு, சுறுசுறுப்பின்மை, தூக்கமின்மை, கவனத் தடுமாற்றம், முடிவு எடுப்பதில் குழப்பம், பசியின்மை அல்லது அளவுக்கு அதிகமாக உண்பது.

எந்த காரணமும் இன்றி, உடலில் எங்காவது வலி தோன்றுவது, எதிர்மறையான நிகழ்வுகளைத் தான் இனி சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணம் ஆகியவை, மன அழுத்தத்திற்கான அறிகுறிகள்.

தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றும்; அதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்று தோன்றும். பெண்களிடையே மன அழுத்தம் சர்வ சாதாரணமாகக் காணப்படுகிறது.

மன ஓட்டங்களை கட்டுப்படுத்த திணறும்போது...

* நம்பகமான, அக்கறை கொண்ட நண்பர் களிடம், மனக் குறைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.
* உடல் ரீதியான, பாலுணர்வு ரீதியான துன்புறுத்தல்கள், பொருளாதார ரீதியாக பாதுகாப்பற்ற நிலை, குறைந்த அந்தஸ்தில் இருப்பதை எண்ணி வருந்துதல், மற்றவர்களைப் பாதுகாப்பாக கவனித்துக் கொள்ள வேண்டுமே என்ற தொடர் பொறுப்பு ஆகியவை இதற்குக் காரணங்களாக அமைகின்றன.
* உங்கள் மனதை சாந்தப்படுத்தும் இசை, தோட்டப் பராமரிப்பு, நல்ல புத்தகங்கள் படிப்பது, மனதுக்குப் பிடித்த உணவு உண்பது.
* உங்கள் மீதான நம்பிக்கையை இழக்காமல் இருப்பது.
* யோகா, தியானம் இவற்றை நாள் தவறாமல் செய்து வருவது.
மேற்சொன்ன நடவடிக்கைகள், உங்கள் மனதை இதப்படுத்தி, மன அழுத்தத்திலிருந்து வெளி வர உதவும்.

மாத்திரையை தவிருங்கள்!

உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிந்தால், அதைத் தீர்க்க, நீங்கள் முழு முயற்சியில் இறங்க வேண்டும்.

மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெறும்போது, முதல் கட்டமாக அவர்கள் பிரச்னையைக் கேட்டுத் தெரிந்து கொள்ள முற்படுவர். இது நல்லது தான் என்றாலும், முன் பின் தெரியாத ஒருவரிடம், உங்கள் மனக் குறையைச் சொல்ல நீங்கள் தயங்கலாம்.

எனவே, மிக மிக நம்பிக்கையான நண்பர் ஒருவரிடம், உங்கள் பிரச்னையை எடுத்துச் சொல்லுங்கள்; மனதில் உள்ள அனைத்தையும், கொட்டி விடுங்கள். உங்கள் மீது அன்பு வைத்திருப்பவர், நிச்சயம் இதற்கான தீர்வு சொல்வார்.

“மன அழுத்தம் தீர்க்க, மாத்திரை சாப்பிடுகிறேன்’ எனக் கிளம்புவதை விட, தற்காலிக உபாயங்களை நாடுவதை விட, மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்ப்பது நல்லது.

உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..!

உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..!

நம்மில் பலருக்கும் உள்ள பிரச்சினையே நமக்கான திறமையை உரிய நேரத்தில் வெளிப்படுத்தத் தெரியாதது தான். அந்த வீட்டுக்கு புதிதாக வந்த மருமகள் பிரார்த்தனை அறையில் மனமுருக இறைவனை துதித்து பாடிக் கொண்டிருந்தாள். அப்போது வெளியில் வாக்கிங்கை முடித்து விட்டு வந்த மாமனார் தன் மகனிடம், “எத்தனை அருமையான பாட்டு… இன்னும் கொஞ்சம் டிவி வால்யூமை கூட்டி வை” என்றார்.

மகன் சொன்னபிறகு தான் தன் மனம் உருகப் பாடியது தன் அன்பான மருமகள் என்பதை தெரிந்து கொண்டார். “சினிமாவில் பாடியிருந்தால் திரைக்கு இன்னொரு பி.சுசிலா கிடைத்திருக்கக் கூடுமே! ஏன் மருமகளே உன் திறமையை இத்தனை நாளாக குடத்திலிட்ட விளக்காக வைத்திருந்தாய்?” என்று மருமகளிடம் கேட்டார், மாமியார்.

மருமகளோ, “எனக்கு எங்கள் வீட்டில் அந்த அளவுக்கு சுதந்திரம் இல்லை மாமா. நாளைக்கு இன்னொரு வீட்டில் போய் சமையலைக் கவனிக்கப் போகிற பெண்ணுக்கு பாட்டு என்ன வேண்டிக்கிடக்கிறது என்று அம்மா சொல்லி விட்டார். அதனால் என் பாட்டு `அதுபாட்டுக்கு’ இருந்து விட்டது என்றாள்.

இந்தப் பெண் என்றில்லை, பலரும் தங்கள் திறமையை சரிவர அரங்கேற்ற முடியாமல் கடைசி வரை தங்கள் திறமைகளை தங்களுக்குள்ளே புதைத்துக் கொள்ளும் அவலம் தான் நடந்து வருகிறது. சிலரது அபூர்வ திறமைகளை பள்ளிக்கூடம் தட்டிக் கொடுக்கும். கல்லூரி முத்தம் கொடுக்கும். ஆனால் கல்லூரிப்படிப்பை முடித்த பிறகு நண்பர்களிடம் இருந்து இந்தக் கலையாளர்கள் அந்நியமாகி விடுகிறார்கள். கடைசியில் எந்த கலைக்காக கல்லூரி முழுக்க அறியப்பட்டார்களோ, அந்தக் கலையை தங்களிடம் இருந்து முற்றிலும் விலக்கி வைத்தபடி கம்பெனி கம்பெனியாய் வேலைக்கு அலைந்து கொண்டிருப்பார்கள்.

இந்த நாட்களில் மறந்தும் அவர்கள் தங்கள் கலை பற்றிப் பேசுவதில்லை. அப்புறம் ஒருவழியாய் வேலை கிடைத்து கொஞ்சி மகிழ ஒரு குடும்பம் கிடைத்து அவர்கள் சந்தோஷத்தில், கவலையில் தங்கள் எஞ்சிய வாழ்நாளை கரைத்துக் கொண்டிருப்பார்கள். கடைசி வரை கலை மட்டும் அவர்களிடம் இருந்து விலக்கப்பட்ட கனியாகவே இருந்து விடும்.

இப்படித்தான் ஒரு வயலின் வித்வான் இருந்தார். அவர் குடும்பத்தின் அன்றைய சூழலில் `கலையாவது கத்தரிக்காயாவது’ என்ற சொல்லக்கூடிய அளவுக்கு குடும்பத்தில் வறுமை ஆட்டிப் படைத்தது. அதனால் வயலினை பரணில் தூக்கிப் போட்டவர், குடும்பத்துடன் கூலி வேலைக்குப் போய்விட்டார். அந்தக் கூலி வேலை முதலில் பெற்றோர் சார்ந்த குடும்பத்தையும், பிறகு மனைவி, பிள்ளைகள் கொண்ட குடும்பத்தையும் பொருளாதாரத்தில் சற்றே தாங்கிப் பிடிக்க உதவிற்று. அவ்வளவு தான்.

ஆனாலும் அவருக்குள் ஓரு ஏக்கம். நமக்குள் இருந்த வயலின் கலைஞனை தொலைத்து விட்டோமே என்று உள்ளுர மறுகிக் கொண்டிருந்தார்.

அன்று மாலையில் கிடைத்த நேரத்தில் பக்கத்து ஊரில் நடக்கும் வாரச்சந்தைக்கு போனார். அங்கே ஒரு இளைஞன் பழைய வயலின் ஒன்றை ஏலத்தில் விட இருந்தான். அந்த வயலினை வாசித்தே பல நாட்களாகி இருக்கலாம். விற்க வேண்டிய அவசியம் வந்தபோது சந்தைக்கு வந்து விட்டான். அவன் முதலில் பத்து ரூபாயில் இருந்து ஏலத்தை ஆரம்பித்தான். `பழமை மாறாத வயலின்’ என்று சொல்லி அவன் ஏலம் விட்டதில் அடுத்தவர் 20 ரூபாய்க்குக் கேட்டார். இன்னொருவர் ஏலத்தை 30 ரூபாயாக உயர்த்தினார்.

மேற்கொண்டு கேட்க ஆளில்லை. இளைஞனும் கிடைத்தவரை லாபம் என்ற எண்ணத்தில் ஏலத்தை முடித்துக் கொள்ளும் மனநிலைக்கு வந்தான்.

அப்போது தான் நமது வயலின் வித்வான் அந்தக் கூட்டத்திற்குள் நுழைகிறார். இளைஞனை நெருங்கியவர், `வயலின் ஏலம் விடும்போது அதை வாசித்துக் காட்டுவது தானே சரியாக இருக்கும்’ என்றபடி, தன் நெஞ்சோடு வயலினை அணைத்தபடி இசை மீட்டத் தொடங்கினார்.

அடுத்த சில நிமிடங்களில் அந்த இசை சந்தைக்கு வந்த மொத்தக் கூட்டத்தையும் அங்கே வரவழைத்து விட்டது. கேட்டவர்கள் மெய்யுருகினார்கள். அடுத்த பாட்டு, அடுத்த பாட்டு என்று தொடர்ந்து மூன்று பாட்டுக்கு வாசித்து முடித்தவர், ஜனங்களை நோக்கி, `இப்போது ஏலம்கேட்கிறவர்கள் கேட்கலாம். ஏலத்தை முதலில் இருந்து ஆரம்பிப்போம்’ என்றார். அவரே வயலின் ஏலம் நூறு ரூபாய் என்று ஆரம்பித்தார்.

வயலின் இசை கேட்டு ஏற்கனவே உருகிப் போயிருந்தவர்கள் பலரும் ஏலத் தொகையை கூட்டிக் கொண்டே போனார்கள். கடைசியில் எண்ணூறு ரூபாய்க்கு கேட்டவருக்கு வயலின் கிடைத்தது. இளைஞன் இப்போது அந்த பெரியவரை தன் வயலினை விற்றுத்தர வந்த தெய்வமாகவே கருதினான். ஏலப்பணத்தில் 300 ரூபாயை அவருக்கு கொடுக்க முன் வந்தான். அவரோ `என்ஆத்ம திருப்திக்கு இசைத்தேன். அதற்கு விலை வைக்காதே’ என்று பணத்தை வாங்க மறுத்து விட்டார்.

அது மன்னர் ஆட்சிக்காலம். அந்த பெரியவர் அங்கிருந்து நாலடி நடந்திருக்க மாட்டார்.அதற்குள் அரண்மனை வீரர்கள் அவரை சுற்றி வளைத்தார்கள். “எங்கள் மன்னரின் அரசவைக்கு தேர்ந்த இசைக்கலைஞர்கள் தேவை. அப்படி ஒருவருக்காக நாங்கள் நகரை வலம் வந்தபோது தான் உமது இசையை கேட்டோம். இப்போதே அரண்மனைக்கு எங்களுடன் வந்து எம் மன்னரை பார்க்கிறீர்” என்று அழைத்து சென்றார்கள். அவருக்குள் புகுந்து கொண்டிருந்த அந்தக் கலை கடைசியில் அவரை அரண்மனை இசைக்கலைஞராக்கி அழகு பார்த்தது. இது தான் கலையின் சிறப்பு.

கற்ற கலைக்கு காலம் கடந்தாலும் மரியாதை நிச்சயம். அதனால்கலை தெரிந்தவர்கள் அதை மறைபொருள் போல் மூடி வைக்காமல் வெளிப்படுத்துங்கள், வெளிப்படுங்கள். உலகை வெல்லுங்கள்.

பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்!

பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்!

புதிதாக ஒரு ஃப்ளாட் வாங்கியிருந்தேன். அதில் கெய்சர், வாஷிங்மெஷின், வாஷ்பேஸின் ஆகியவற்றை பொருத்தவேண்டியிருந்தது. எனக்கு ப்ளம்பர் நண்பர் ஒருவர் உண்டு. அவரை வீட்டுக்கு வரவழைத்தேன். அவர் நல்ல திறமைசாலிதான். ஆனால் அன்று ஏனோ கெய்சரை பொருத்தி டெஸ்ட் செய்த போது சூடு ஏறவில்லை. பிறகு தவறை கண்டுபிடித்து மீண்டும் பரிசோதிக்க முயற்சித்தபோது மின்சாரம் போய்விட்டது. பொருத்துவதற்காக ட்ரில்லிங் செய்தபோது, டிரில் பிட் உடைந்து விட்டது. வாஷிங்மெஷினில் நிப்பிள் மேட்ச் ஆகவில்லை. ஆக அவற்றை பொருத்த ஏதுவாக என்னையும் கடைக்கு அழைத்தார். கூடச் சென்று வாங்கி கொடுத்தேன். அவரது வீடு கடை அருகில் தான் இருந்தது. வீட்டிற்கு ஒரு நிமிடம் வாருங்கள் என அழைத்தார். நான் மறுத்தும் மிகவும் வற்புறுத்தி அழைத்து சென்றார். 

வீட்டுவாசலில் ஒரு செடி வளர்ந்திருந்தது. அதனை ஒரு நிமிடம் தொட்டவர், பிறகுஉள்ளே அழைத்து சென்றார். அவரை பார்த்ததும் குழந்தைகள் ஓடி வந்தன. ஒவ்வொன்றாக தூக்கி கொஞ்சி, இறக்கி விட்டார்.முகமலர்ச்சியுடன் வரவேற்ற அவரது மனைவி உள்ளே சென்று சில நிமிடங்களில் சூடான காப்பி கொண்டு வந்தார். இதனிடையே ப்ளம்பர் நண்பர், மனைவி, குழந்தைகள் பற்றி சுவையாக கூறி கொண்டிருந்தார். 

காப்பியை குடித்து விட்டு அவர்களிடமிருந்து விடைபெற்றேன். என் மனத்தில் ஒர சந்தேகம். ஏன் பிளம்பர் வாசலில் இருந்த செடியை நின்று தொட்டு சென்றார்? 

அடுத்தநாள் அவர் வந்ததும் என் சந்தேகத்தை கேட்டேன். நேற்று நான் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இதனால் டென்ஷனானேன். ஆனால் அதே பதற்றத்துடன் வீட்டுக்குள் சென்றாள் என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அதனால் என் கவலை. டென்ஷன் எல்லாவற்றையும் அந்த செடியில் இறக்கிவிட்டு நாளை மீண்டும் எடுத்து கொள்கிறேன் எனக்கூறி இலேசான மனத்துடன் உள்ளே சென்றேன் என்றார். நான் வியந்து நின்றேன். 
இது உணர்த்துவது என்ன? 

பிரச்னைகள், எப்போதுமே நம்மை விட்டு விலகுவதில்லை. õக நாம்தான் சில நேரம் அதனை விலக்கி வைக்க வேண்டும். 

ஆபீஸில் பிரச்னையா? பொது வேலைக்குசென்ற இடத்தில் பிரச்னையா? அதனை மறந்தும் வீட்டுக்குள் கொண்டு செல்லாதீர்கள். அந்த பிரச்னைகளை, வாசலிலேயே மாட்டி வைத்து, மனைவி, குழந்தைகளை சந்திக்கபோகிறோம் என்ற மகிழ்ச்சியில் தினமும் மாலையில் புது மனிதராக நுழையுங்கள். இரவு நல்லபடி கழியும். அடுத்த நாள் புதுத்தெம்புடன் பிரச்னைகளை சமாளிக்க ஆரம்பித்து விடுவோம்.

பெற்றோரை மதிப்பவரா நீங்கள்?

பெற்றோரை மதிப்பவரா நீங்கள்?

பெற்றோருக்கு வயதாகிவிட்டால், அதிலும் தள்ளாமை வந்து விட்டால், அவர்களுடைய நிலைமை பரிதாபத்துக்குரியதாகி விடுகிறது. புண்ணிய வசத்தால் சத்புத்திரனைப் பெற்றிருந்தால், அவர்களை அவன், அன்பும், ஆதரவும் காட்டி சந்தோஷமாக வைத்திருப்பான். இப்படிப்பட்ட நல்ல பிள்ளைகளை தான் சத்புத்ரன் என்கின்றனர். இன்னும் சில புத்திர ரத்தினங்களும் இருக் கின்றனர்… பெற்றோர் படாதபாடு பட்டு, படிக்க வைத்து ஆளாக்கி, உத்தியோகம் கிடைக்க செய்து, ஒரு கல்யாணத்தையும் முடித்து வைக்கின்றனர். 
பையன் கல்யாணமாகி, மாலையும் கழுத்துமாய் வந்து நமஸ்காரம் செய்யும்போது, உள்ளம் பூரித்து, அகமகிழ்ந்து ஆசீர்வதிக் கின்றனர். அதன் பிறகு தான் பிரச்னையே ஆரம்பமாகிறது. மனைவியின் பின்னாடியே சுற்ற ஆரம்பித்து விடுகிறான் பையன். மனைவி சொல்லே மந்திரமாகி, பெற்றோர் இரண்டாம் பட்சமாக போய் விடுகின்றனர். மனைவி நல்ல குணம் உள்ளவளாக இருந்தால், மாமியார், மாமனாருக்கு மரியாதை கிடைக்கும். எதைச் செய்வதானாலும் அவர்களிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செய்வாள். எது நல்லது, எது வேண்டாதது என்று கேட்டு செய்வாள். 
கொஞ்சம் வசதியுள்ள குடும்பத்திலிருந்து வந்த பெண்ணானால் மாமியாரை, மாமனாரை அவ்வளவாக மதிக்க மனமிராது. "அவர்களை என்ன கேட்பது, எனக்குத் தெரி யாதா?’ என்பர். இவள் சொல்கிறபடி ஆடுகிறவனாக கணவன் இருந்து விட்டால், வயதான பெற்றோர் பாடு பரிதாபகரமாகி விடுகிறது. பெற்ற பிள்ளை கூட, மனைவியின் பக்கம் சேர்ந்து, இவர்களை ஒரு பாரமாக நினைக்க ஆரம்பித்து, இரவு, பகலாக ஆலோசித்து, இவர்களை ஏதாவது, "முதியோர் இல்லத்தில்’ சேர்த்து நாம் நிம்மதியாக இருக்கலாம், நினைத்த சினிமாவுக்கு போகலாம், இஷ்டம் போல் வரலாம், சந்தோஷமாக இருக்கலாம்…’ என்று தீர்மானம் போடுவான். 
"முதியோர் இல்லம்’ எங்கே இருக்கிறது என்று சிரத்தையாக விசாரித்து பெற்றோருக்கு ஆயிரம் சமாதானம் சொல்லி, அவர்களை அங்கே கொண்டு போய் சேர்த்து, பணத்தையும் கட்டி விட்டு வந்து விடுவான். பெற்றோரும் மனம் நொந்து போய் அந்த இல்லத்தில் தங்கி, திரும்பிப் போகும் பிள்ளையை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டே கண்ணீர் சிந்துவர். 
ஆனால், பெற்றோரின் வயோதிக காலத்தில் அவர்களுக்கு வேண்டிய சவுகரியங்களைச் செய்து கொடுத்து, அன்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதை விட சிறந்த தர்மம் வேறு எதுவுமில்லை. ஆலயங்களுக்குப் போக வேண்டாம், தீர்த்த யாத்திரை செய்ய வேண்டாம், ஷேத்ராடனம் செய்ய வேண்டாம், இவைகளில் கிடைக்கும் புண்ணியத்தை விட, மிக அதிகமான புண்ணியம் பெற்றோரின் வயோதிக காலத்தில் மனம் குளிரும்படி நடந்து கொண்டாலே கிடைத்து விடும். 
பிள்ளையைப் பெற்று, வளர்த்து, ஆளாக்க என்னவெல்லாம் செய் திருப்பர் என்பதை பிள்ளைகள் எண்ணிப் பார்க்க வேண்டும். இவன் பிறந்தவுடன் அனாதை இல்லத்திலா கொண்டு போய் சேர்த்தனர். கண்ணும், கருத்துமாய் பாதுகாத்து, இரவு, பகல் பாராமல் ஊட்டி வளர்த்தனர். அப்படிப்பட்ட தாய், தந்தையருக்கு கடைசி காலத்தில், "முதியோர் இல்லம்’ தானா கதி! தாய், தந்தையருக்கு வயோதிக காலத்தில் பணிவிடை செய்வது எவ்வளவு பெரிய புண்ணியம்.

இரண்டும் பெண் குழந்தையா? சந்தோஷப்படுங்க..!

இரண்டும் பெண் குழந்தையா? சந்தோஷப்படுங்க..!

- புதிய ஆய்வில் சுவாரஸ்ய உண்மைகள்

2 பெண் குழந்தைகள் இருக்கும் வீடுதான் ஆனந்தமயமான வீடு என்கிறது புதிய ஆய்வு.

`ஆசைக்கொரு பெண், ஆஸ்திக்கு ஒரு ஆண்’ என்று நம்மூரில் பழமொழி சொல்வார்கள். முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்தால் `மகாலட்சுமியே வந்துவிட்டாள்’ என்று மகிழும் பெற்றோர் இருக்கிறார்கள். ஆனால் அடுத்த குழந்தையும் பெண்ணாகப் பிறந்தால், `ஏழு லோகத்திலும் இல்லாத சங்கடம் எனக்கு வந்துவிட்டது’ என்று வருந்த தொடங்குவார்கள். இனி அப்படி சங்கடப்பட வேண்டியதில்லை. இரண்டும் பெண் குழந்தைகள் உள்ள வீடுதான் மிகமிக சந்தோஷமான குடும்பம் என்று புதிய ஆய்வில் கண்டுபிடித்திருக் கிறார்கள்.

ஆயிரக்கணக்கான குடும்பங்களை ஆய்வு செய்ததில் கிடைத்த சுவாரஸ்ய தகவல்கள் இங்கே…

ஒரு வீட்டில் இரண்டுமே பெண் குழந்தைகளாக இருந்தால் அந்தக் குழந்தைகள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்ளாதாம். ஒருவருடன் ஒருவர் இணைந்து விளையாடுவார் களாம். அரிதாகத்தான் அம்மா, அப்பாவுக்கு தொல்லை தருவார்கள். நீங்கள் போகக்கூடாது என்று தடுக்கும் மண்மேடு, புழுதியில் எல்லாம் சென்று விளையாடாமல் சமர்த்து என்று பெயர் வாங்குவார்களாம்.

அதேபோல பெண் குழந்தைகள் அதிகமாக கூச்சல் போடுவதில்லை. அவர்கள் ஒருவரை யொருவர் கண்டு கொள்ளாமல் முகத்தை திருப்பிக் கொள்வது ரொம்ப அபூர்வம். அவசர நேரத்தில் அம்மாவிடம் செல்லமாக இருக்கும் குழந்தையை அப்பாவிடம் விட்டுச் சென்றாலும் அடம்பிடித்து அழ மாட்டார்களாம். அந்த சூழலுக்கேற்ப பெற்றோருடன் அடம்பிடிக்காமல் பிரியமாக இருந்து ஒத்துழைப்பார்களாம்.

அக்கம் பக்கத்தவர்கூட இந்த சகோதரிகளை விரும்ப தொடங்கிவிடுவார்கள் என்கிறது ஆய்வு முடிவு. இந்த குழந்தைகளின் கலகலப்பான பழக்கவழக்கங்களும், சுற்றி இருப்பவர்களுக்கு உதவும் குணம், ஒத்துழைக்கும் குணம் போன்றவை மற்றவர்களையும் கவர்ந்துவிடுகிறது. அதனால் சுற்றியுள்ளவர்களும் இவர்களின் `விசிறி’ ஆகிவிட, வீட்டிலும், வீட்டுக்கு வெளியிலும் ஒரு சந்தோஷமான சூழல் உருவாகிவிட வாழ்வே வசந்தமாகிவிடுவதாக தெரிய வந்துள்ளது.

இரண்டு பெண் குழந்தைகளுக்கு அடுத்தபடியாக ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ள வீடு ஓரளவு சந்தோஷமாக இருக்கிறதாம். இந்தக் குழந்தைகள் 86 சதவீத அளவில் ஒருவருக்கொருவர் பாசத்துடன், இணக்கமான நட்பு காட்டுவதாக தெரிய வந்துள்ளது.

சந்தோஷம் அனுபவிப்பதில் மூன்றாவது நிலையில் இருக்கிறார்கள் 2 ஆண் குழந்தைகள் உள்ள குடும்பத்தினர். மற்றவருக்காக பல விஷயங்களை புரிந்து கொண்டு விட்டுக் கொடுப்பதில் ஆண் குழந்தைகள் கெட்டிக்காரர்களாம். ஆனால் இவர்கள் தாய் அல்லது தந்தை யாராவது ஒருவர் அரவணைப்பைத்தான் விரும்புவதாக தெரிகிறது. மற்றவர் பொறுப்பில் விட்டுவிடும் சூழல் வந்தால் அடம்பிடிப்பார்கள் என்கிறது, ஆய்வு.

நேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ்!

நேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ்!

நேரத்தின் அருமையை உணர்ந்து வெற்றியுடன் செயல்பட 10 எளிமை யான டிப்ஸ்கள் இதோ உங்களுக்காக…

1 உங்களுடைய பொன்னான நேரம் எங்கு வீணாகச் செலவாகிறது என்பதைக் கண்டறிய உங்களின் ஒருவார கால நடவடிக்கைகள், எண்ணங்கள் மற்றும் உரையாடல்களைப் பதிவு செய்து ஆராயுங்கள். உதாரணத்துக்கு, தேவையில்லாமல் நீங்கள் பேசும் செல்போன் உரையாடல் கள், டிவி பார்ப்பதில் நேரம் கழித்தல், இணையத்தில் மிகுந்த நேரத்தைச் செலவிடுதல் ஆகியவைகளைக் கண்ட றிந்து அவைகளைத் தவிர்க்க முயற்சி எடுங்கள்.

2 வெற்றிக்கு முக்கியமான ஒவ்வொரு நடவடிக்கையும் உரையாடலும் சரியான கால அளவைப் பின்பற்றி இருப்பது மிக அவசியம். உங்கள் மிக முக்கியமான வேலைகளைத் தொடங்கும் நேரத்தையும்; முடியும் நேரத்தையும் அளவிட்டு, அதைக் கச்சிதமாக அமைத்துக்கொள்வது அவசியம். இதை மற்றவர்கள் விமர்சித்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் வேலையைக் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என்று திட்டம் போட்டுச் செயல்படுத்தினால், எந்த வேலையிலும் தோல்வி என்பது இருக்கவே இருக்காது.

3 உங்களை வாழ்க்கையில் முன்னேற்றும் எண்ணங்கள், நடவடிக்கைகள் மற்றும் உரையாடல் களுக்கு உங்களது 50 சதவிகித நேரத்தையாவது செலவிடுங்கள். தேவையற்ற வேலைகளில் கவனம் சிதறாமல் இருத்தல் மிகவும் நல்லது.

4 தினமும் அலுவலகத்துக்கு அரை மணி நேரம் முன்னதாக வந்து உங்களது அன்றைய பணிகளை முழுமையாகப் பட்டியலிடுங்கள். இதை ஒரு முக்கியமான முதல் பணியாக உங்களின் ஒவ்வொருநாள் தொடக்கத்திலும் மேற்கொள்ளுங்கள். அன்றாடப் பணிகளைப் பட்டியலிடும் போது முக்கியமான பணிகளை முதன்மைப்படுத்துதல் அவசியம்.

5 வேலையையும் வாழ்க்கையையும் சமன்படுத்திக்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். தினமும் எழும் நேரம் மற்றும் தூங்கச் செல்லும் நேரம் இரண்டையும் சரியாக வகைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏழு முதல் எட்டு மணி நேர தூக்கமும், தினசரி உடற்பயிற்சியும் புத்துணர்ச்சியுடன் நாம் வேலையில் ஈடுபட இன்றியமையாததாகும்.

6 மிகவும் முக்கியமான வேலைகளில் கவனம் செலுத்தும்போது, மற்றவர்கள் உங்களைத் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதுமாதிரியான சமயங்களில் ‘do not disturb’ என்று உங்கள் அறை அல்லது மேஜையின் மீது எழுதிவைத்துவிட்டு, வேலை பார்க்கலாம். அப்படி செய்யும்போது மற்றவர்கள் நீங்கள் செய்யும் வேலை யின் முக்கியத்துவத்தைச் சரியாகவே புரிந்துகொள்வார்கள்.

இதுமாதிரியான சமயங்களில் எந்தவித சமூக வலைதளங்களிலும் கவனம் சிதறாமல் இருத்தல் அவசியம். உங்களின் வேலைக்கு உதவுவதாக இருந்தால் மட்டுமே அத்தகைய வலைதளங்களை உபயோகிக்கலாம். தொலைபேசி / கைப்பேசி அழைப்பு களுக்கும் மெயில்களுக்கும் தனியாக நேரம் ஒதுக்குங்கள். உங்கள் வேலை நேரத்தில் வரும் அழைப்புகளையோ, மெயில்களையோ மிக முக்கியமான தாக இருந்தால் மட்டுமே பதிலளியுங் கள். அவற்றுக்குப் பிற்பாடு, அதாவது நீங்கள் ரிலாக்ஸ்டாக இருக்கும் நேரத்தில் பதில் அளித்துக்கொள்ளலாம்.

7 சிலர் காலை நேரங்களில் வேலைகளைச் சிறப்பாகச் செய்வார்கள்; இன்னும் சிலர் மாலை நேரங்களில் அதிகக் கவனம் செலுத்துவார்கள். அவரவருக்கு ஏற்றமாதிரி முக்கியத்துவம் வாய்ந்த வேலைகளை அந்தந்த நேரங்களில் செய்யலாம். கடிகாரத்துடன் போட்டிபோட்டு வேலை செய்வது நம்பிக்கையைக் கொடுக்கும். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை பத்து நிமிடமாவது இடைவேளை எடுத்துக்கொள்வது உடல்நலத்துக்கும் மனதுக்கும் மிக, மிக அவசியம். ஏனென்றால், உடலும் மனதும் தொடர்ச்சியாக உழைக்க ஒத்துழைக்காது. ஆனால், இடைவேளைவிட்டு முக்கியமான வேலைக்குத் திரும்பும்போது அதை மட்டும் செய்தால், கவனம் சிதறாமலும் தடம் மாறாமலும் வேலையைச் செய்துமுடிக்கலாம்.

8 எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்ய முடியாமல் திணறுவதைத் தவிர்க்க வேண்டும். நேரத்தை திறம்பட நிர்வகித்து வேலைகளைச் செய்து முடிக்க, தேவையில்லாத வேலைகளைப் பக்குவமாக நிராகரிக்கவும், சரியானவர்களிடம் ஒப்படைக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இது உங்கள் வேலையை நீங்கள் திறம்படச் செயல்படுத்தவும் மற்றவர்களின் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பு இடம் பெறவும் உதவும்.

9  நீங்கள் பட்டியலிட்டுள்ள வேலைகளை ஒவ்வொன்றாக முடிக்கும்போது அதை ‘டிக்’ செய்து கொள்ளுங்கள். இது உங்களின் வேலைகளைச் சிறப்பாக விரைந்து முடிக்க ஊக்குவிக்கும். அது மட்டுமல்லாமல், இது நாம் தயாரித்து வைத்திருக்கும் வேலை முதன்மை பட்டியலை மாற்றியமைக்கவும், புது வேலைகளைச் சேர்க்கவும் உதவும்.

10 உங்கள் கணினியின் டெஸ்க்டாப்பிலும் சரி, நீங்கள் உபயோகிக்கும் பணி மேஜையானாலும் சரி, அதில் பராமரிக்கும் கோப்புகளை ஒழுங்குபடுத்தி வைப்பது நீங்கள் அவைகளைத் தேடும் நேரத்தை மிச்சமாக்கும். இதனால் மற்ற வேலைகளை விரைந்து முடிக்க முடியும். நமக்குக் கிடைக்கும் காலநேரத்தின் அருமையை உணர்ந்து நாம் செய்யும் வேலையைச் சிறப்பாகவும் துரிதமாகவும் சரியான நேரத்தில் செய்து முடித்து எல்லோரது பாராட்டுக்களைப் பெற்று முன்னேறுவதே இன்றைய புரஃபஷனல் வாழ்க்கைக்கு அவசியம்.

முடிவுகளை உங்கள் நிறுவனத்தின் நன்மைக் காகவும் உங்களின் வேலையின் தேவைக்காவும் சரியான நேரத்தில் எடுக்கத் தெரிந்திருப்பது உங்கள் முன்னேற்றத்துக்குத் தேவையான சூட்சுமம். நேரத்தை நிர்வகிக்கும் திறனை கற்றுக் கொண்டால், வெற்றி நிச்சயம்.

பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்?

பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்?

‘பொறாமை என்பது கோழைகளின் கோபம்’ என்றார் ஓஷோ. ரத்த உறவுகளாகவே இருந்தாலும் பொறாமை இல்லாமல் இருக்காது. அதன் அளவு வேண்டுமானால் வேறுபடலாமே தவிர, பொறாமை அறவே இல்லை என்பதை ஏற்க முடியாது. அண்ணன் – தம்பிக்கி டையே… அக்கா – தங்கைக்கிடையே… நண்பர்களுக்கிடையே… மேலதிகாரிக்கும் ஊழியருக்கும் இடையே… இப்படி எல்லா இடங்களி லும், எல்லார் மனங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிற உணர்வு பொறாமை. ரத்த பந்தங்களுக்கிடையிலேயே பொறாமை இருக்கும் என் கிற போது, சம்பந்தமே இல்லாத வேறு வேறு சூழலில் பிறந்து, வளர்ந்து, வாழ்க்கையில் இணைகிற இருவருக்கிடையே அது இருக்காதா என்ன? ‘பொறாமை’ என்று சொன்னால் கொஞ்சம் கடுமையாகத் தெரியலாம். ‘பொசசிவ்னஸ்’ என்கிற போது, அதன் கடுமை மாறிப் போ கும். காதலிக்கிற போதும், கல்யாணத்துக்குப் பிறகும் ஆணும் பெண்ணும் பல வழிகளில் பொசசிவ்னஸை வெளிப்படுத்துகிறார்கள். அது பொறாமையின் வெளிப்பாடே அன்றி வேறில்லை. அதாவது, தன் துணையின் மீது அதீத ஆர்வம் காட்டுகிற துணைக்கு நிச்ச யம் அங்கே பொறாமை இருக்கும். நம்முடைய சமுதாயத்தில் பொறாமை கொள்ளக் காரணங்களுக்கா பஞ்சம்? மனைவி தன்னைவிட நல்லவேலையில் இருந்தாலோ, அதிகம் சம்பாதித்தாலோ, அழகாக இருந்தாலோ கணவருக்குத் தன்னையும் அறியாமல் பொறாமை தலைதூக்கும். அதன் வெளிப்பாடாக, மனைவி வேலைக்குப் போவதைத் தடுப்பார்கள். மனைவியுடன் வெளியே செல்வதை விரும்ப மாட்டார்கள். இப்படி இல்லாமல், சில நேரங்களில் பொறாமை தெளிவாகத் தெரியாமல், வெறும் கோபமாகவும் வெளிப்படலாம். தம்பதிக்கிடையே காரணங்களே இல்லாமல் பிரச்னைகள் வெடிக்கும். பொறாமைப்படுவோருக்கு மட் டுமே அது புரியும். அதை எதிர்கொள்வோருக்குக் காரணம் தெரியாது. இருவருக்கும் இடையில் அன்பு குறைந்து, வெறுப்பு அதிகரித்து, ஒருகட்டத்தில் உறவே ஆட்டம் காணவும் அந்தப் பொறாமை காரணமாகும். அரிதாக சில சந்தர்ப் பங்களில் அந்தப் பொறாமையின் விளைவாக, ஆத்திரம் உச்சத்துக்குப் போய், அடி, உதை என வன்முறையில் இறங்கவும்,அதையும் தாண்டி கொலை, தற்கொலை என அத்துமீறவும் கூடும். பொறாமை என்பது பல நேரங்களில் உண்மையாக இல்லாமல், அப்படி நினைப்பவரின் தனிப்பட்ட உணர்வாக இருக்கலாம். நம்மு டைய துணை, நம்மைத் தவிர வேறு யாராலும் ஈர்க்கப்படக் கூடாது என்கிற ஆழ்மன பயம் பதிந்து போயிருக்கும். யதார்த்தமோ அப்படி இருக்காது. திருமணத்துக்குப் பிறகும் ஆண்-பெண் இருவரின் நட்புகளும் உறவுகளும் தொடரத்தான் செய்யும். அதன் விளை வாக, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்கிற விதிமுறைகள் துணையின் மீது திணிக்கப்படும். அதாவது, துணையை அப்படிக் கட்டுப்படுத்தி, கைக்குள் வைத்திருக்கும் போதுதான் நமக்குள் ஒரு பாதுகாப்பான, நிம்மதியான உணர்வு ஏற்படும். ஆணோ, பெண்ணோ – யாருக்கும் நட்பென ஒன்று நிச்சயம் இருக்கும் என்பது இயல்பு. திருமணத்துக்குப் பிறகும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள ஒரு பக்குவம் வேண்டும். அதைத் தவிர்த்து, ‘எனக்குப் பிடிக்கலை… நீ உன் நட்பை விட்டு விலகி னாதான் என் மனசு நிம்மதியாகும்’ எனக் கட்டுப்படுத்த நினைப்பது முழுக்க முழுக்க பொறாமையின் வெளிப்பாடு மட்டுமே. பொறாமை யின் காரணமாக துணையைக் கட்டுப்படுத்துவதற்குப் பதில், அதை ஏற்றுக் கொள்ளக் கற்றுக் கொள்வதுதான் இதிலி ருந்து மீள முதல் வழி. பொறாமை என்கிற உணர்வு உண்டாக, நமது எண்ணமும் நம்பிக்கையும்தான் அடிப்படை. அதை மாற்றிக் கொண்டாலே பொறாமை காணாமல் போய் விடும். உதாரணத்துக்கு, ‘என் மனைவி வேலைக்குப் போறா… நிறைய சம்பாதிக்கிறா… அதனால அவளுக்குத் திமிரு’ என்கிற எண்ணம் பல ஆண்களுக்கு இருக்கும். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அவர்களது மனைவிகளுக்கு உண்மையிலேயே அப்படி எந்தத் திமிரும் இருக்காது. கணவர்களின் கற்பனையாக மட்டுமே இருக்கும்! சில பெண்களுக்கு தனது அழகிலும் ஆளுமையிலும் தாழ்வு மனப்பான்மை இருக்கலாம். அது காலம் காலமாக சிந்தனையில் உறைந்து போனதன் விளைவாக, திருமணத்துக்குப் பிறகு, தனது கணவர், இன்னொரு பெண்ணிடம் லேசாக சிரித்துப் பேசினாலே, பொறாமை எட்டிப் பார்க்கும். ‘நான் அவளை மாதிரி அழகில்லை. எனக்கு அவளைப் போல பர்சனாலிட்டி இல்லை…’ என வார்த்தைகளில் விஷம் கக்கி, பைசா பெறாத விஷயத்தைப் பெரிதாக்கி, பிரச்னையை உண்டு பண்ணுவார்கள். அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, சந்தேகமாக உருவெ டுத்து, ஒரு கட்டத்தில் பிரிவுக்குப் பாதை காட்டலாம். அதற்காக எல்லா பொறாமைகளையும் சந்தேகங்களையும் அர்த்தமற்றவை என ஒதுக்கவும் முடியாது. உங்கள் துணை, உங்கள் மீது பொறாமை கொள்கிறாரா? அதன் பின்னணி என்ன என ஆராயுங்கள். துணையின் பொறாமையில் நியாயம் இருப்பது தெரிந்தால், உங்களை சரி செய்து கொள்ளப் பாருங்கள். அர்த்தமற்ற காரணங்களால் உண்டாகும் பொறாமையை எப்படிக் கையாளலாம்? ஒரு உதாரணத்துடன் பார்ப்போமா? உலக அழகி ஐஸ்வர்யா ராயை பிடிக்காதவர்கள் யாரேனும் இருப்பார்களா? திருமணத்துக்கு முன், ஐஸ்வர்யாவை அவரது அழகுக் காகவும் ஆளுமைக்காகவும் ரசித்த மக்கள், திருமணத்துக்குப் பிறகும் அப்படியேதான் ரசிக்கிறார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங் கள்… திருமணத்துக்குப் பிறகு என் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும் என ஐஸ்வர்யாவை, அபிஷேக் வெளியே விடாமல் வீட்டுக்குள் சிறை வைத்திருந்தால், அந்த இருவருக்கும் இடையிலான காதல் காணாமல் போயிருக்காதா? அவர்களது உறவு அர்த்தமற் றதாகி இருக்காதா? அபிஷேக் அப்படிச் செய்யாமல், ஐஸ்வர்யா தனது மனைவியாக அமைந்ததைப் பாராட்டுதலோடும் பெருமையோ டும் ஏற்றுக்கொண்டதுதான் அவர்களது அன்யோன்யத்தின் அடிப்படை. உலகமே கொண்டாடும் ஒரு உன்னத மனுஷி, தனது மனைவி என்பதில் அவருக்கு அளவுகடந்த கர்வம் கூட இருக்கக்கூடும். அதே அணுகுமுறைதான் நமக்கெல்லாமும் அவசியப்படுகிறது. காதலிக்கிற போது எந்த அழகுக்காக ஒரு பெண்ணிடம் நீங்கள் மயங்கினீர் களோ, எதற்காக போராடி அவரைக் கல்யாணம் செய்தீர்களோ, அந்த அழகை, கல்யாணத்துக்குப் பிறகும் கொண்டாடப் பழகுங்கள். கல்யாணத்துக்கு முன் உங்கள் மனைவியை நீங்கள் ரசித்தது போல, கல்யாணத்துக்குப் பிறகு மற்றவர்களின் பார்வையும் அவரை அப் படித்தான் ரசிக்கும். அதற்காக உங்கள் மனைவியை சந்தேகப்படுவதோ, அவர் மீது பொறாமை கொள்வதோ எந்த வகையில் நியாயம்? பெண்களுக்கும் இதே அட்வைஸ்தான். காதலிக்கிற போதோ, திருமணத்துக்கு முன்போ உங்கள் துணையின் நகைச்சுவை உணர்வையும் எல்லோரிட மும் கலகலப்பாகப் பேசிப் பழகும் குணத்தையும் ரசித்திருப்பீர்கள். திருமணத்துக்குப் பிறகு அவர் அப்படி இருப்பதை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல் போவது ஏன்? தன் துணை தன்னைவிட்டு விலகி விட்டால்? இந்தப் பயம்தான் இருவரின் பொறாமை உணர்விலும் மறைந்திருக்கிற காரணம். பயத்தை முதலில் தூக்கி எறியுங்கள்.பொறாமையை பாராட்டாக மாற்றப் பழகுங்கள்.பொறாமையைத் தவிர்த்து விருப்பமாக பார்க்கப் பழகுங்கள். உங்களுக்குக் கிடைத்த வாழ்க்கைத்துணையை நன்றியுடன் நோக்க முயற்சி செய்யுங்கள்! நம் ஒவ்வொருவருக்கும் நமது பெற்றோர், சுற்றம், உறவுகள் என நாம் வளர்கிற சூழல் சில பயிற்றுவிப்புகளைத் தருகிறது. உதாரணத் துக்கு அமெரிக்காவில் பிறந்து வளர்கிற குழந்தைக்கு விவாகரத்து என்பது சர்வசாதாரணமான நிகழ்வாகத் தோன்றலாம். நம்முடைய சூழலில் அதைப் பற்றிய பார்வையே வேறு. இந்தப் பயிற்றுவிப்புகள் நமக்கு சில நம்பிக்கைகளை உருவாக்குகின்றன. சிறியதாகவோ, பெரியதாகவே பல நம்பிக்கைகளுடன் வாழ்கிறோம். அவற்றில் பெரும்பாலானவை நிரூபிக்கப்படாதவையாகவும் இருக்கலாம். அந்த நம்பிக்கைகள் நமக்கொரு மனப்போக்கை ஏற்படுத்தும். பெண்கள் என்றால் அடக்க, ஒடுக்கமாகத்தான் இருக்க வேண்டும் என சில ஆண்கள் நினைப்பதுகூட அத்தகைய மனப்போக்கின் அடிப்படை யில்தான். அந்த மனப்போக்கானது உணர்வுகளை உருவாக்கும். உணர்வுகள் நமது நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும். நட வடிக்கைகள்தான் நமது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் விளைவுகளுக்குக் காரணம். பயிற்றுவிப்பில் தொடங்கி, நடவடிக்கைகள் வரை எல்லாமே பாசிட்டிவாக இருந்துவிட்டால், உறவுகளுக்கிடையில் பிரச்னைகள் முளைக்கவே வாய்ப்பில்லை. பயிற்றுவிப்பை மாற்றுவதென்பது அத்தனை எளிதல்ல. ஆனாலும், அதன் மூலம் உருவாகக்கூடிய நம் பிக்கைகளை நாம் மனது வைத்தால் மாற்றிக் கொள்ளலாம். பாசிட்டிவான நம்பிக்கை, பாசிட்டிவான மனப்போக்கைத் தரும். பாசிட்டிவான மனப்போக்கு, நல்ல உணர்வுகளை உண்டாக்கும். உணர்வுகள் அழகானால், நடவடிக்கைகளில் நாகரீகம் வரும். அது நல்ல விளைவுகளுக்கும் வழி காட்டும். பொறாமைக்குக் காரண மாக கட்டுரையின் தொடக்கத்தில் நாம் பேசிய அத்தனையிலிருந்தும் விடுபடவும் இதுவே தீர்வு! ( வாழ்வோம்!)