Thursday, August 29, 2013

ஏற்றுக்கொள் அல்லது ஒதுங்கி நில் !!!

! Water Formula for stress management!!

ஒரு நண்பர் ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் பற்றி எழுதுமாறு கேட்டு உள்ளார்...

இந்த விசயத்தில் நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்று என் மனதிற்கு தெரிந்தாலும்...
அவருக்காக... 

ஸ்ட்ரெஸ் = அழுத்தம், அதாவது மனஅழுத்தம்..
எப்போதெல்லாம் நாம் மனஅழுத்தத்தை உணர்கிறோம்???

*வேலை பளு கூடும் போது...
*உயர் அதிகாரிகளுக்கு பயந்து நிர்பந்தங்களுக்காக  சில வேலைகளை செய்யும் போது.. 
*மனைவி / காதலி / பெற்றோர் /நண்பர்களிடம் கருத்து ஒத்து போகாத போது...
*எதிர்பார்த்த ஒன்று எதிர்மறையாக நடக்கும் போது...
*இழப்புக்களின் போது...
*ஏமாறும் போது...
*இயலாத போது...
*தோற்கும் போது...
 இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம் ...

அதற்கு முடிவில்லை..
அவற்றை மூன்றாக பிரித்து கொள்வோம்...
1. Personal 
2. Social 
3. Professional 

Personal--- பெரும்பாலும் கருத்தொற்றுமை இல்லாத போது மனஅழுத்தம் ஏற்படும்... வாழ்க்கை ஒன்றும் நேர்கோட்டில் செல்லும் ரயில் கிடையாது. அவர் அவர்களுக்கு என்று தனிப்பட்ட கருத்துகள் இருக்கும். 

Opinions are like  Hand Watches. 
Everyone's watch shows different time from others. 
But, Everyone believes that their time is correct.!

என்ன செய்வது???

ஏற்றுக்கொள் அல்லது ஒதுங்கி நில்! (Water Formula)
என்ற கொள்கை மிக ஏற்புடையதாக இருக்கும்.. 

Lovely formula to learn from water: 
adjust yourself in every situation...
 in any shape and most importantly...
 - always find ur way out to every problem ! 

உறவுகளிடம் எடுத்து சொல், புரிய வைத்து உன் வழிக்கு கொண்டு வா அல்லது ஏற்றுக்கொண்டு அவர்கள் வழியில் செல்வது மனதிற்கு அமைதி தரும்.. 

Troubles r part of Life,
If u don’t share them with the people who LOVE u n CARE for u,...
In reality U take away a chance from them to LOVE u MORE...

நம் சமுதாய வாழ்வில் பல வகையில் நாம் மன அழுத்தத்தை அடைவோம்.. உதாரணமாக நண்பன் ஒருவன் நல்ல வேலையில் சேர்ந்து நம்மை விட அதிகமாக சொத்து சேர்க்கும் போது, நம் இயலாமை நம்மை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும்.

எப்படி சமாளிப்பது???

"தியானம் செய்"--- மிகவும் பிரபலமான மிக கடினமான அறிவுரை, எல்லாராலும் இலவசமாக தரப்படும்..

தியானம் செய்தால் மன அழுத்தம் குறையுமா?? -- குறையும்  
இது மட்டும் தான் ஒரே வழியா?? -- இல்லை 
 இதற்கு அறிவியல் விளக்கம் என்னவெனில்...
மனதை அலைபாய விடும் போது நரம்புகளில் உள்ள உற்சாக வேதிபொருட்களின் அளவு கடுமையாக குறையும். அதனால் டிப்ரெசன் அதிகமாகும்..
தியானம் மூலம் மனதை ஒருமுக படுத்தும் போது உடலில் என்டோர்பின் எனப்படும் வேதிபொருள் உற்பத்தி ஆவதுடன் மற்றவை வீணாவதும் குறையும்.. 

எனக்கு தியானம் தெரியாது... வேறு எப்படி குறைக்கலாம்.
முதலில் உங்களுக்கு மனஅழுத்தம் தரும் சூழலில் இருந்து வெளியேறிவிடுங்கள்.
மாடிபடி இருந்தால் நான்கு தடவை ஏறி இறங்குங்கள்... அல்லது 
பதினைந்து நிமிடம் நடங்கள்.. அல்லது 
பாடத்தெரிந்தால் பாடுங்கள்... அல்லது  
ஆடதெரிந்தால் ஆடுங்கள்... அல்லது 
ரூமில் கதவை அடைத்துவிட்டு கத்துங்கள்... அல்லது 
தலையணையை குத்துங்கள்... அல்லது 
மேற்கூறியவற்றை கவனித்து பாருங்கள்...
ஒரு குழந்தை தனக்கு கோபம் வந்தால், பிடித்ததை செய்வதை உணர்வீர்கள்..

குழந்தைக்கு மகிழ்ச்சியாக மட்டுமே இருக்க தெரியும்..

கோபம்
எரிச்சல்
பொறாமை
கள்ளத்தனம் 
                           எல்லாம் நாம் இந்த உலகில் இருந்து எடுத்துகொண்டு நம்மையே கஷ்டப்படுத்தி கொள்கிறோம்!

ஆனால் இந்த வாழ்க்கை மிக சிறந்த ஆசிரியன்!!

எல்லா வாத்தியார்களும் பாடம் சொல்லி தந்த பிறகு தேர்வு நடத்துவார்கள்..
வாழ்க்கை தேர்வு வைத்தபின் தான் பாடம் சொல்லி தரும்!!!

எதிர்கொள்ளும் அனைத்து சூழலையும் நம்மால் மாற்ற இயலாது ஆனால் உங்கள் அணுகுமுறையை மாற்றலாம்...

You can not tailor -make the situation in life,
 but you can tailor -make the attitudes...
 to fit those situations ! 

எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் நம்முடைய தவறை கவனிக்காமல் அடுத்தவர் தவறை பெரிது படுத்துவதால் தான் எல்லா பிரச்சினைகளும்... மன்னிக்க பழகினால் வாழ்வு இனிமையே!!!

தன்னம்பிக்கை Vs கர்வம்

தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் இருக்கிறது. 

"என்னால் முடியும்" என்று நினைப்பது தன்னம்பிக்கை. "என்னால் மட்டுமே முடியும்" என்று நினைப்பது கர்வம். தன்னம்பிக்கை எல்லா சாதனைகளுக்கும் மூல காரணமாக உள்ளது. கர்வம் எல்லா அழிவுக்கும் காரணமான விஷமாக உள்ளது. இதை விளக்க உதாரணங்களுக்குப் பஞ்சமில்லை என்றாலும் இந்த இரண்டுமே ஒரே நபரிடத்தில் எப்படி விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதைக் காண வேண்டுமென்றால் ஹிட்லரின் வாழ்க்கையைப் பார்த்தால் போதும். 

அசாதாரணமான அறிவும், தன்னம்பிக்கையும் கொண்ட ஹிட்லர் நாட்டின் நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ளும் முன் ஜெர்மனியில் வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக இருந்தது. நாட்டின் பொருளாதார நிலைமை மிக மோசமாக இருந்தது. ஆனால் தன்னால் நாட்டை நல்ல நிலைமைக்குக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை திடமாக அவரிடம் இருந்தது. 1933ல் ஹிட்லர் தன் நாட்டு மக்களிடம் கூறினார். "எனக்கு நான்கே நான்கு வருடங்களைக் கொடுங்கள்." சொன்னபடி நாட்டின் தலைவிதியை மாற்றிக் காட்டினார். 

எழுபது லட்சம் பேர் வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்த நாட்டில் தொழிற்சாலைகளையும், வாணிப அபிவிருத்தியையும் ஏற்படுத்தி வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கினார். நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மிக நல்ல உயர்த்தினார். எல்லாம் அவரது தன்னம்பிக்கை செய்து காட்டியது. 

ஆனால் அதே தன்னம்பிக்கை கர்வமாக மாற ஆரம்பித்தவுடன் அழிவும் ஆரம்பித்தது. தன்னை மிஞ்ச ஆளில்லை என்ற எண்ணம் வலுப்பட ஆரம்பித்தவுடன் அவர் எடுத்த முடிவுகள் அவரது நாட்டை மட்டுமல்லாமல் உலகத்திலேயே பேரழிவுகளை ஏற்படுத்தின. இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவுகளை இன்னமும் கூட சரியாக கணிக்க முடியவில்லை என்று வரலாற்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். 

தன்னம்பிக்கை ஏற்படுத்திய வளர்ச்சியையும், கர்வம் ஏற்படுத்திய பேரழிவையும் ஒரே மனிதனின் வாழ்க்கையில் ஆதாரபூர்வமாக சரித்திரம் சொல்கிறது. ஹிட்லரின் வாழ்வில் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையிலும் இந்த இரண்டுமே இதே விளைவுகளையே ஏற்படுத்தக் கூடியவை. அதுவே இயற்கையின் நியதி. 

எனவே தன்னம்பிக்கையுடன் இருங்கள். அது தான் உங்களை உயர்த்தக் கூடியது. உங்கள் வாழ்க்கையை ஒளிமயமாக்கப் போவதும் அந்த தன்னம்பிக்கை தான். ஆனால் அது கர்வம் என்ற விஷமாக மாறி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தன்னை உயர்வாக நினைக்கும் அதே சமயம் மற்றவர்களைத் தாழ்வாக நினைக்கவும் ஆரம்பித்தால் கர்வம் நுழைய ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். 

தன் சாதனைகளைப் பெருமைப்படுத்தியும், மற்றவர் சாதனைகளை சிறுமைப்படுத்தியும் நினைப்பதும் கர்வமே. தன் தவறுகளை தவறுகளே அல்ல என்று சாதிப்பதும் கர்வத்தின் ஒரு குணமே. மற்றவர்களுடைய சிறு தவறுகளையும் சுட்டிக் காட்டி மகிழ்வதும் கர்வத்தின் தன்மையே. தனக்கு எதிரான எதையும் சகிக்க முடியாததும், மற்றவர் சாதனையை ரசிக்க முடியாததும் கர்வத்தின் செயல்களே. 

அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது போல, மேலே சொன்ன கர்வத்தின் அடையாள குணங்கள் நம்மிடம் இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்வது நல்லது. அடைந்த உயர்வில் இருந்து சறுக்கி விழாமல் இருக்கவும் மேலும் உயரவும் அது தான் ஒரே வழி.

புத்திசாலித்தனம்

நீங்கள் எப்போதும் மற்றவர்கள் உங்களை முட்டாள் என்று நினைத்து விடுவார்களோ என்று பயப்படுகிறீர்கள்.மற்றவர்கள் உங்களை முட்டாள் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டால் அது உண்மையாக இருக்குமோ என்று சந்தேகப் பட ஆரம்பித்து விடுகிறீர்கள்.அநேகர் உங்களை முட்டாள் என்று நினைத்தால் நீங்கள் தன்னம்பிக்கையை இழந்து விடுகிறீர்கள்.புத்திசாலியை மட்டும் ஏமாற்ற முடியாது.அவன் பார்ப்பதற்கு முட்டாள் போன்று தோன்றுவான்.

நீங்கள் உங்களைக் கவனித்திருக்கிறீர்களா?நீங்கள் எப்போதும் உங்கள் புத்திசாலித்தனத்தை வெளிக்காட்டவே முயற்சி செய்கிறீர்கள்.உங்கள் அறிவாற்றலைக் காட்ட யாரையாவது தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.உங்களை விடக் குறைவான புத்திசாலித்தனம் உடையவரைத் தேடி அலைகிறீர்கள். அம்மாதிரி ஆள் கிடைத்தவுடன் உங்கள் அறிவுத் திறமையை அவரிடம் காண்பிப்பதில் பெருமை கொள்கிறீர்கள்.ஒரு புத்திசாலி தனது புத்திசாலித்தனத்தை வெளிக்காட்ட வேண்டிய அவசியமில்லை.அவன் எப்படி இருக்கிறானோ அப்படியே இருக்கிறான்

மனிதன் எத்தனை வகை!

மற்றவர்களிடம் பழகும் விதத்தை வைத்து மனிதனை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1.Introverts:மற்றவர்களிடம் அதிகம் பழக மாட்டார்கள்.தனிமையை ரசிப்பார்கள். அதற்காக மற்றவர்களை அவர்களுக்குப் பிடிக்காது என்று அர்த்தம் இல்லை.அன்பும் பாசமும் இருந்தாலும் வெளிப்பாடு வெளிப்படையாய் இருக்காது..

2.Extroverts:எப்போதும் சகஜமாகப் பழகுவார்கள்.ஆட்கள் இருக்கும் சூழலையே விரும்புவார்கள்.வெளிப்படையாகத் தங்கள் உணர்வுகளைக் காட்டுவார்கள்.

3.ambiverts:மேலே கூறிய இருவகையினருக்கும் இடைப்பட்டவர்கள்.

மனிதனின் புத்தியின் தன்மை கொண்டு மனிதர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

தைல புத்தி:ஒரு பாத்திர நீரில் எண்ணெயை விட்டால் நீரின் மேல் எண்ணெய் அப்படியே பரவும்.அதுபோல கேட்ட விஷயத்தை நன்கு புரிந்து கொண்டு இதரர்களுக்கும் சொல்லித் தெளிய வைப்பார்கள்.

கிரத  புத்தி: நெய்யை வழித்து ஒரு பாத்திர நீரில் போட்டால் அந்த நெய் அப்படியே மிதக்கும்.பிறரிடம் கேட்பதை அப்படியே தான் அறிந்து கொள்வர்.பிறர் கேட்டால்  சொல்லத் தெரியாது.
கம்பள புத்தி:விழாவில் கம்பளம் விரித்து,விழா முடிந்தவுடன் ஒரு உதறு உதறி வைப்பதுபோல வரும்போது ஒன்றும் தெரியாமல் வந்து திரும்பப் போகும்போது உதறிய துப்பட்டி போல ஒன்றும் தெரிந்து கொள்ளாமல் பொய் விடுவர்.

களி மண்  புத்தி: எந்த விசயமும் இவர்களுக்குப் புத்தியில் ஏறாது.

தெளிவான முடிவு

எந்த ஒரு விசயத்தையும் சில கோணங்களில் ஆராய்ச்சி செய்து முடிவு எடுத்தால்  அம்முடிவு தெளிவான முடிவாக இருக்கும்.

1.நான் இப்போது எடுத்துள்ள முடிவு உணர்ச்சி பூர்வமான முடிவா,அல்லது அறிவு பூர்வமான முடிவா?

2.இந்த நிலைப் பாட்டிலிருந்து நான் பின் வாங்குவது எனக்குப் பெருமையா, பின்னடைவா?

3.இந்த முடிவின் விளைவுகள் என்னவாக இருக்கும்?அவற்றை எதிர் கொள்ளும்  திறன் நமக்கு உண்டா?

4.இந்த முடிவின் மீது விமரிசனங்கள் எப்படி இருக்கும்?அவை புறக்கணிக்கத்
தக்கவையா,ஏற்கத் தக்கவையா?

5.எதிராளி இதற்கு எத்தகைய பதிலடி கொடுப்பான்?அவனை நாம் எடுக்கும் முடிவு, சாய்க்க வல்லதா,பணிய வைப்பதா,முன்னிலும் வீறு கொண்டு எழச் செய்வதா?

6.எதிராளி இதனால் துன்பப் படுவாரா?இதில் நம் மகிழ்ச்சி மட்டும் முக்கியமா?

7.இது பற்றி ஒரு சிலரிடம் கலந்து ஆலோசித்தால் என்ன?

8.முடிவுக்கு வர இன்னும் கால அவகாசம் இருக்கிறதா?ஆம் எனில்,அந்தக் கால அவகாசத்தை நாம் இன்னும் நன்றாக சிந்திக்கப் பயன் படுத்திக் கொண்டால் என்ன?

வீட்டு செலவை குறைக்க முத்தான பத்து தகவல்கள!

1.கேஸில் மிச்சமாக்கலாம் காசு!

அடுப்பை முறையான இடைவெளியில் நன்கு பராமரித்தாலே கேஸ் கணிசமான அளவு மிச்சமாகும். தீயின் ஜுவாலை நீல நிறமாக இருக்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு வண்ணத்தில் இருந்தால், பர்னரில் கோளாறு மற்றும் கேஸ் விரயம் என்று தெரிந்து கொள்ளலாம். இயன்றவரை ‘சிம்’மில் வைத்து சமைத்தால் காய்கறிகளின் சத்தும் வீணாகாது. கேஸும் மிச்சமாகும். அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு கடுகு, எண்ணெய் என்று பொருட்களை எடுக்க அலைமோதாதீர்கள். சமையலுக்குத் தேவையான அனைத்தையும் கையருகில் வைத்துக்கொண்டு அடுப்பைப் பற்றவையுங்கள். ஃப்ரிட்ஜில் இருந்து பொருட்களை எடுத்தவுடன் சமைக்க ஆரம்பித்தால்… எரிபொருள் அதிகம் செலவாகும்.

2.மொத்த விற்பனைக் கடையை நாடுங்கள்!

பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்காமல், கடைவீதியில் மொத்தமாக மளிகைப் பொருட்கள் விற்கும் கடைகளில் மாதத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கினால்… 10 சதவிகிதத்துக்கும் அதிகமாகப் பணம் மிச்சமாகும். மேலும் பெரும்பாலான சூப்பர் மார்க்கெட் கடைகளில் பல பொருட்களுக்கு எம்.ஆர்.பி விலையில் இருந்து சல்லிக்காசுகூடக் குறைக்கமாட்டார்கள். ஆனால், மொத்த விற்பனைக் கடைகளில், தங்கள் லாபத்தில் சிறு பகுதியை விட்டுக்கொடுத்து விலை குறைவாக விற்பனை செய்வார்கள்.

3.பெட்ரோல் சிக்கனம்!

சிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தால் இன்ஜினை அணைத்து விடுங்கள். வாகனங்களை ஒழுங்காகப் பராமரித்தால் வாகன எரிபொருள் செலவு மட்டுப்படும். கிளட்ச், பிரேக் போன்றவற்றை தேவை இல்லாமல் அழுத்திக் கொண்டிருந்தாலும் மளமள என்று எரிபொருள் காலியாக ஆரம்பிக்கும். வெளிவேலைகளைக் குறித்து வைத்துக் கொண்டு, ஒரு முறை வாகனத்தை எடுக்கும்போதே அனைத்து வேலைகளையும் முடிக்கப் பாருங்கள். ஒரே திசையில் ஒரே நேரத்தில் பயணம் செய்யும் நண்பர்கள் இருந்தால், பயணத்தையும், எரிபொருள் செலவையும் பகிர்ந்துகொள்ளுங்கள். நிழலில் வாகனத்தை நிறுத்தினால்… பெட்ரோல் ஆவியாவது பெருமளவு தவிர்க்கப்படும்.

4. ‘ஸ்விட்ச் ஆஃப்’ செய்ய மறக்காதீர்கள்!

ஆளில்லாத அறைகளில் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறி, விளக்குகள், தொலைக்காட்சிப் பெட்டி, கணிப்பொறி போன்றவற்றை அணையுங்கள். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மின்சாதனங்களின் ஸ்விட்ச்கள் அணைக்கப்பட்டு இருக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். குறிப்பாக, மின்வெட்டு சமயங்களில் இதை நிச்சயமாக கடைப்பிடிப்பதன் மூலம், கரன்ட் போகும்போது ‘ஆன்’ ஆகியிருந்த சாதனங்கள், கரன்ட் வரும்போது செயல்பட்டு மின்சாரம் வீணாவதைத் தடுக்கலாம்.

5.தவறான பழக்கத்துக்கு ‘தடா’ போடுங்கள்!

உங்களது குடும்ப அங்கத்தினர் யாருக்கேனும் புகை மற்றும் குடிப்பழக்கம் இருப்பின் அதை கைவிட உங்களால் ஆனதைச் செய்யுங்கள். உடல் நலன் பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதோடு… இந்த பழக்கங்களுக்கு செய்யப்படும் மிக அதிகமான செலவையும் கட்டுப்படுத்தி, அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படுத்தலாம்.

6.தண்ணீர்… தண்ணீர்!

வேலைகளைச் செய்யும்போது குழாய்களை திறந்து வைத்துக் கொண்டு செய்யாமல், சில நொடிகளே என்றாலும்… தேவை இல்லாதபோது, குழாய்களைச் சரியாக மூடினாலே பெருமளவு தண்ணீரைச் சேமிக்கலாம். மிகச் சரியான முறையில் திட்டமிட்டுக் குளித்தால் அரை வாளி முதல் ஒரு வாளிவரை தண்ணீரே சுத்தமாகக் குளிப்பதற்குப் போதும். இதுபோல நாம் யோசித்து செயல்பட்டால், சமையலறை பயன்பாடு உட்பட பல வழிகளிலும் தண்ணீரை மிச்சப்படுத்தலாம்.

7.குண்டு பல்பு வேண்டாமே!

குண்டு பல்புகள் அதிகம் மின்சாரத்தை உறிஞ்சும். எனவே, குறைந்த மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் சி.எஃப்.எல். வகை பல்புகளுக்கு மாறுங்கள். இதன் மூலம் மின்சாரம் 70% அளவுக்கு சேமிக்கப்படுகிறது. சி.எஃப்.எல். பல்புகளின் ஆயுட்காலமும் அதிகம்.

8. கிச்சன் இருக்க ஹோட்டல் எதற்கு?

அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுவது இப்போது ஃபேஷன் ஆகி வருகிறது. வெளியில் சாப்பிட்டால் ஒரு நபருக்கு 100 ரூபாய்க்கும் குறைவில்லாமல் செலவு ஆகும். புத்தகம், டி.வி-யில் இடம்பெறும் தரமான ரெசிபிகளை முயற்சித்துப் பாருங்கள். நீங்களே தயாரித்தது என்ற பெருமிதமும் இருக்கும்; வெளியில் செல்லும் அலைச்சலும், பண விரயமும் தவிர்க்கப்படும். இது, ஆரோக்கியத்துக்கும் நல்லது.

9.நேரத்தை பணமாக்குங்கள்!

வெட்டி அரட்டை, அதிகப்படியான தூக்கம் போன்றவற்றில் விரயமாகும் நேரத்தை சேமித்து, உருப்படியான வழியில் செலவிடுங்கள். படைப்பாற்றல், புதிய தொழில் கற்றுக்கொள்ளுதல், ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ளுதல் இவற்றின் மூலம் உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

10.செலவு குறைக்கும் செல்போன் ‘பேக்கேஜ்’!

குடும்ப அங்கத்தினர் அனைவர் கையிலும் தனித்தனி செல்போன் இருக்கும் காலம் இது. அப்புறம் வீணாக லேண்ட் லைன் தொலைபேசி எதற்கு? மேலும் குடும்ப அங்கத்தினர் அல்லது அடிக்கடி நாம் பேசும் நபர்களுடன் குறைந்த செலவில் தொடர்பு கொள்ள பலவிதமான பேக்கேஜுகள் இருக்கின்றன. அவற்றில் எது சிறந்தது, சிக்கனமானது என்பதைத் தேர்வு

இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது!

சில பொதுவான குறிப்புகள்:

1. விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. (விநாயக சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்)

2. பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, பில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியனவற்றாலும் அர்ச்சிக்கலாம்.

3. விஷ்ணுவை அட்சதையால் அர்ச்சிக்கக் கூடாது.

4. அம்பிகைக்கு அருகம்புல் உகந்ததல்ல.

5. லட்சுமிக்குத் தும்பை கூடாது.

6. பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.

7. விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவ சம்பந்தமுடைய தெய்வங்களுக்கே வில்வார்ச்சனை செய்யலாம்.

8. சாமந்திப்பூவை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.

9. மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாக கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.

10. வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.

11. அன்றலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.

12. ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. பில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.

13. தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்ற விதி இல்லை.

14. வாசனை இல்லாதது: முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது. வாடியது: தகாதவர்களால் தொடப்பட்டது; நுகரப்பட்டது: ஈரத்துணி உடுத்திக் கொண்டு வரப்பட்டது. காய்ந்தது. பழையது. தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாது.

15. சம்பக மொக்குத் தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.

16. மலர்களை கிள்ளி பூஜிக்கக் கூடாது. வில்வம். துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.

17. முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா - இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.

18. துளசி, முகிழ் (மகிழம்) செண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுரவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் (இலை) பத்ரங்கள் பூஜைக்கு உகந்தவை.

19. பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புலியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம்.

20. திருவிழாக் காலத்திலும், வீதிவலம் வரும் போதும், பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும், மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாதென விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.

21. அபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.

22. குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்து, குடுமியை நீக்கிவிட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.

23. பெருவிரலும் மோதிரவிரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது.

24. கோயில்களில், பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ள கூடாது.

25. பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும்; தூப தீபம் முடியும் வரையிலும் பலிபோடும் போதும் கை மணியை அடிக்க வேண்டும். மணியின் சப்தமில்லாவிடில் அச்செயல்கள் பயனைத் தரமாட்டா

26. ஒன்று, மூன்று, ஐந்து, ஒன்பது, பதினொன்று அடுக்குகள் கொண்ட தீபத்துக்கு மஹாதீபம் அல்லது மஹாநீராஜனம் என்ற பெயர்.

வெற்றிக்கு வழி..!

 How to success in life?

தன்னம்பிக்கை என்பது என்ன? 

தன்னுள்ளே எழும் நம்பிக்கையைத்தான் தன்னம்பிக்கை என்கிறோம். ஒரு மனிதன் தன்னுடைய எண்ணத்தில் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்து முடித்துவிடுவோம் என்று உறுதியாக எண்ணுவதே தன்னம்பிக்கை. 

அந்த எண்ணம் தொடர.. தொடர.... அது வலுப்பெற்று, எந்த தடை வந்தாலும் அதைச் சமாளிக்கும் ஸ்திரத் தன்மையைப் பெற்றுவிடுகிறது. எனவே அந்த எண்ணத்தை (மனதை) எந்த ஒரு தடையாலும், சக்தியாலும் தகர்க்க முடியாது. அதுதான் தன்னம்பிக்கை. 

ஊக்கம்: 

சில சமயங்களில் புறச்சூழல் மற்றும் அகச்சூழலால் தன்னம்பிக்கையில் தளர்வு ஏற்படும். அவ்வாறு தளர்வு ஏற்படும்பொழுது மீண்டும் அதை வலுப்பெறச் செய்து, அதனுடைய ஸ்திரத்தன்மை மீட்டுக்கொண்டுவரப் பயன்படுவதுதான் ஊக்கம். ஊக்கம் ஒருவருடைய மனநிலையை அப்படியே முழுமையாக மாற்றிவிடக் கூடிய சக்தியுடையது. 

இதை தடகளப் போட்டிகளில் நாம் கண்கூடாக காண முடியும். ஒருவர் எட்ட முடியாத உயரத்தை தாண்ட நினைக்கிறார். அவருள் இருக்கும் சக்தியை குறிப்பிட்ட உயரம் வரை மட்டுமே எம்பி குதிக்க முடியும் என்ற நிர்ணயம் செய்துவிடுகிறது. என்றாலும் சுற்றி இருக்கும் பார்வையாளர்களை கைத்தட்டி ஆரவாரம் செய்யச் சொல்கிறார். காரணம் அவருள் இருக்கும் மாபெரும் சக்தி திரட்டுவதற்காக. அவ்வாறு கைத்தட்டி ஆரம்வாரம் செய்யும்பொழுது அவருடைய சாதாரணமான மனநிலையில் ஒரு உந்துதல் ஏற்பட்டு, புதிய சக்தி பிறக்கிறது. இறுதியில் அந்த வீரர் உலகே வியக்கும் வண்ணம் புதிய உலகசாதனையை படைத்துவிடுகிறார். 

இதுதான் ஊக்கத்தின் மகிமை. 

விடா முயற்சி: 

முயற்சி என்பது எல்லோரிடத்திலும் உள்ளது.. விலங்குகளிடம் கூட இந்த முயற்சி உண்டு. ஆனால் விடா முயற்சி? 

அது ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது.. ஒரு சில தோல்விகளிலேயே மனம் உடைந்து போனவர்கள் மீண்டும் அம் முயற்சியை தொடர்வதில்லை.. காரணம் அவர்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட எதிர்மறையான முடிவு. 

'இனிமேல் நம்மால் அது முடியாது' என்று அவர்கள் மனதில் அவர்கள் எடுத்துக்கொண்ட முடிவு. 

ஆனால் விடாமுயற்சி என்பது சாகும்வரை, தன்னுடைய எல்லையை அடையும் வரை, நினைத்ததை சாதித்து முடிக்கும் வரை ஒருபோதும் சோர்ந்துவிடுவதில்லை. 

உறுதியான முடிவு அங்கே நிலைப்பெற்றிருக்கும். எப்படியும் வென்றுவிடுவோம்.. எப்படியவும் இலக்கை அடைந்துவிடுவோம் என்ற ஒரு வெறியுடன் கூடிய திடமான முடிவு மனதில் இருந்துகொண்டே இருக்கும். 

இவ்வாறானவர்கள் விரைவில் வென்றுவிடுவார்கள். காரணம் விடாய முயற்சியே!

மேற்கண்டவைகளைப் பின்பற்றினாலே வாழ்க்கையில் வென்று சாதனை புரியலாம். ஒவ்வொரு வார்த்தையையும் செயல்படுத்த வேண்டும்.. செயல்படுத்தினால் நிச்சயம் வெற்றி நம்மைத் தேடிவரும். 

பதிவைப் படித்தோமா, கருத்தை பகிர்ந்தோமா.. என்றிராமல் பதிவில் உள்ள சொற்களை உள்வாங்கி, அவற்றை அப்படியே செயல்படுத்துதலில் வெற்றி அடங்கியுள்ளது. 

இந்த பதிவைப் படித்த முடித்துவிட்டீர்களா? அட.. நீங்களும் ஒரு வெற்றியாளர்தான்.. எப்படி என்றால் பதிவை முழுமையாக படித்து முடித்ததே ஒரு வெற்றிகரமான செயல்தானே.. !

இப்படி ஒவ்வொரு செயலிலும் வெற்றி... வெற்றி.... என்று மகிழ்ச்சியான, நேர்மறையான எண்ணத்துடன் செயல்பட்டாலே, விரைவில் நினைத்ததை அடைய முடியும். இதுதான் வெற்றிக்கு வழியும் கூட.

தன்னம்பிக்கையை மேம்படுத்தும் பொன்மொழிகள் !

 உங்களுக்காகவே  சிறப்பு தன்னம்பிக்கை பொன்மொழிகள்

 ஒருவனிடம் துக்கமும் தூக்கமும் எப்போது குறையுமோ, அப்போதே அவன் மேதையாகிறான்.

- காந்திஜி

நாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ, அந்நிலையை நமக்கு அளித்தது நமது எண்ணங்கள்தான். நமது இன்றைய நிலை நமது எண்ணங்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது.

- புத்த பகவான்

ஆழ்மனதின் சக்தியை அதிகப்படுத்துங்கள். அப்படி அதிகப்படுத்தியதால்தான் ஐசக் நியூட்டன், பெல், விவேகானந்தர், காந்திஜி போன்ற பல மனிதர்கள் உருவானார்கள். எனவே நல்லதைச் செய்துகாட்ட என்னால் முடியும் என்பதை ஆழ் மனதிற்குச் சொல்லிச் சொல்லி உங்கள் மன உறுதியைப் பலப்படுத்துங்கள்.

-ரான் ஹாலன்ட்

செயல்படும்போது அதற்குத் தேவையான சக்தி கிடைக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த நினைவில் உங்களுடைய சிந்தனையையும் செயலினையும் ஒருமுகப்படுத்துங்கள். வெற்றி நிச்சயம் உண்டு.

- எம்.ஆர். காப்மேயர்

தன்னம்பிக்கை, துணிவு, பயம் - இந்த மூன்றில் முதல் இரண்டும் அழகான, உயர்வான வாழ்க்கையை அமைத்துத் தருகின்றன. தன்னம்பிக்கை இருந்தால் துணிந்து காரியத்தில் இறங்கி செயல்பட முடியும்.

தன்னம்பிக்கை இல்லையென்றால் அது பயத்தைத்தான் பரிசாகத் தருகிறது. பயந்தவர்கள் எதிலும் ஈடபடமாட்டார்கள். துணிச்சலுடன் காரியத்தில் ஈடுபட்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும்.

- நிசாமி

தனக்குத்தானே உதவிக்கொள்ளாமல் எவனாலும் அடுத்தவனுக்கு உதவ முடியாது என்பது உலகின் மிக அழகிய இயல்புகளில் ஒன்று.

- எமர்சன்

உங்களைத் தவிர வேறு எதுவும் உங்களுக்கு அமைதியைத் தர முடியாது. மற்றவரை அறிந்தவன் புத்திசாலி; தன்னைத்தான் அறிந்தவன் ஞானி.

-லா ஓட்ஸ்

எக்கணமும் சுறுசுறுப்பாக இருப்பவர்களிடம் திறமைகள் தாமே வந்து ஒட்டிக்கொள்ளும். தங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகளை பயன்படுத்திக் கொள்பவர்கள் மட்டுமே நிலையான புகழை ஈட்ட முடியும்.

-ஹெரால்டு

தர்மன் நினைத்திருந்தால்?

மகாபாரத யுத்தம் முடிந்து பாண்டவர்கள்
அரியணை ஏறிய பிறகு, பகவான் கிருஷ்ணரிடம்
ஒரு கேள்வி கேட்கபட்டதாம்....
கிருஷ்ணா... நீ பாண்டவர்கள் மேல்
அளவில்லா அன்பு கொண்டவன். அவர்கள் நலனில்
அக்கறை உள்ளவன். உன் தங்கை சுமித்ராவை கூட ,
அர்சுனனுக்கு திருமணம்
செய்து கொடுத்து இருக்கிறாய்.
இப்படி இருக்க....பாண்டவர்கள் சூதாடி,
நாட்டை இழந்து, நாடோடியாய் காட்டில்
அலைந்தார்கள். நீ நினைத்து இருந்தால்
இதை தடுத்து இருக்க முடியாதா.
அதற்கு கிருஷ்ணன் சொன்ன பதில் இதுதான்.
சூதாடுவது என்பது அரச தர்மம். தர்மன்
சூதாடியத்தில் தவறு இல்லை. ஆனால் துரியோதனன்
சூதாட அழைத்த போதே என் சார்பாக
மாமா சகுனி ஆடுவார் என்று திரியோதனன்
சொன்னான்.
ஆனால் தர்மனோ தான் என்ற எண்ணம் கொண்டு தானே ஆட
முனைந்தான். தர்மன் என் சார்பாக கிருஷ்ணன் ஆடுவார்
என்று சொல்லி இருந்தால்,
முடிவு வேறு மாதிரியாக இருந்து இருக்கும்.
தர்மன் செய்த தவறுதான் இந்த நிலைமைக்கு காரணம்
என்றார்.

ஆசை அழித்து விடும் ....பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொன்ன கதை ......

ஆசை அழித்து விடும் ....

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொன்ன கதை ......

முனிவர் ஒருவரின் தவத்தை மெச்சி கடவுள் அவருக்கு காட்சி கொடுத்து, "என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டார்....

“தங்கள் தரிசனமே எனது தவத்தின் நோக்கம்; வேறெதுவும் வேண்டாம்” என்றார் அந்த முனிவர்.
கடவுள், “நான் உனக்கு ஒரு விருஷத்தை வரமாக தருகிறேன். கற்பக விருஷம் மாதிரி. இதனிடம் கேட்கக் கூட வேண்டாம். அதனடியில் நின்று கொண்டு யார் என்ன நினத்தாலும் அது உடனே நடக்கும்” என்று அருளினார் .

இந்த மரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இது நமக்கு ஆசையை வளர்த்து நம்மை பாவம் செய்ய வைக்கும் என்று சிந்தித்த முனிவர் அங்கிருந்து ஓடி விட்டார்.ஒரு நாள் அந்த வழியே ஆடு மேய்த்துக் கொண்டு வந்த ஒரு இளைஞன் வந்தான். அந்த மரத்து நிழலில் கொஞ்சம் படுத்து ஓய்வெடுக்க நினத்தான்.அந்த மரத்தடியில் வந்து படுத்துக் கொண்டே யோசித்தான், “இது என்ன பொழைப்பு; தினம் தினம் ஆட்டை மேய்ச்சிட்டு, ஒரு நல்ல சாப்பாடு கூட சாப்பிட்ட முடிவதில்லை. அரண்மனையில் சாப்பிடற விருந்து மாதிரி சாப்பாடு கிடைச்சா தேவலை”அந்த மரத்தினடியிலிருப்பவர் எதை நினைத்தாலும் மரம் தரக்கூடியது என்பதால் அவன் கண் முன்னே அவனுக்கு ராஜோபசார விருந்து படைக்கப்பட்டிருந்தது. அவன் பயந்து போய் விட்டான். இது ஏதாவது பிசாசு அல்லது பூதத்தின் வேலையாக இருக்குமோ என்று அந்த மரத்தை சுற்றி சுற்றி வந்தான். ஒன்றுமில்லாததால், பயம் தெளிந்து அந்த விருந்தை ஆவலுடன் சாப்பிட்டா ன்.

அவன் மீண்டும் யோசித்தான், “சாப்பிட்டதுக்குப் பின்னால் வசதியாகப் படுக்க வேண்டும்”அந்த மரம் அவன் நினைத்தபடி அவனை நல்ல கட்டில் மெத்தையில் படுக்க வைத்தது.

தூக்கத்திலிருந்து விழித்த அவன், “நான் நடுக்காட்டில இப்படி மரத்துக்கடியில் படுத்திருக்கிறேனே திடீரென்று புலி வந்து நம்மை அடிச்சுக் கொன்று விட்டால் ….”. அவன் எண்ணப்படியே புலி வந்து அவனை அடித்துக் கொன்றது.

ஆசை மட்டும் ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாய் வந்து நம்மை அழித்துவிடுகிறது

இதுவும் கடந்து போகும்

ஒரு ஊரில் மக்கள் மத்தியில் புத்தர் பேசத் தொடங்கினார். ஒரு குரல் அவர் பேசுவதை இடைமறித...்தது. 

தொடர்ந்து புத்தரை நோக்கி, 

“புத்தரேÐ நாங்கள் உங்களைப் போன்ற எத்தனையோ ஞானிகளைச் சந்தித்தும், அவர்களது பிரசங்கங்களை கேட்டும் விட்டோம். 

ஆனால் எங்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. இப்போதும் எங்களுக்கு பிரச்சனை இருக்கிறது. 

எங்களுக்கு மட்டுமல்ல இவ்வுலகில் உள்ள அனைவருக்குமே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது.

அதனால் எல்லோருடைய சிக்கலும் தீரும்படியாக, அனைத்து மனிதர்களுடைய வாழ்விலும் பிரகாசம் தெரியும்படி மந்திரங்களைச் சொல்லித் தாருங்கள். 

தேவையற்ற பிரசங்கம் வேண்டாம். நாங்கள் மனப்பாடம் செய்து எல்லோருக்கும் சொல்லத்தக்க அளவில் சிறியதாக இருக்க வேண்டும். 

நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான மந்திரத்தைச் சொல்லுங்கள். உங்களைக் குருவாக ஏற்றுக்கொள்கிறோம்” என்றது அக்குரல்.

மௌனமாக சிரித்த புத்தர், 

“இதுவும் கடந்து போகும்” என்று அழுத்தம் திருத்தமாகச் 

சொன்னார். 

அந்த கணமே அக்கூட்டம் ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்தது. புத்தரின் மந்திரத்தை மனசுக்குள் அசைபோட்டது.

நன்றாகப் படித்திருந்தும் பணம் சம்பாதிக்க முடியாமல் தாழ்வு மனப்பான்மையால் உழன்று கொண்டிருந்த இளைஞனுக்கு தன்னம்பிக்கையைத் தந்தது அந்த வார்த்தை.

“இதுவும் கடந்து போகும்” என்ற வார்த்தையால் என்னுடைய நிலை கண்டிப்பாக மாறிவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. 

இம்மந்திரத்தைத் தினந்தோறும் உச்சரித்து இன்னமும் எனக்கு வேண்டிய பலம் பெற்றுக்கொள்வேன்” என்று உரக்கச் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.

“இம்மந்திரத்தால் என்னுடைய நீண்ட கால நோய் கண்டிப்பாகத் தீர்ந்துவிடும். இனிமேலும் எனக்கு இந்நிலை தொடராது. இது மிகவும் நல்ல மந்திரம் என்று கூறிச் சென்றான்” நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தவன்.

“இந்த பணம் தொடர்ந்து என்னுடன் இருக்காது என்பதைப் புத்தர் எனக்கு இம்மந்திரத்தின் மூலம் புரிய வைத்துவிட்டார். இனி இந்தப் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன்” என்று கூறிச் சென்றான் பணக்காரனாக இருந்தவன்.

அடுத்து இருந்த அழகான பெண்,

“என்னுடைய அழகு எப்போதும் என்னுடன் வராது என்பதை இம்மந்திரம் எனக்குப் புரிய வைத்துவிட்டது” என்று கிளம்பினாள்.

கடைசியாக, தினந்தோறும் உழைத்து ஓடாய்த் தேய்ந்த பெண்மணி கிளம்பும் போது,

“இத்தனை நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். மரணம் வரையிலும் உழைக்கத்தான் வேண்டியிருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த மந்திரத்தின் மூலம் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. என்னுடைய நிலையும் மாறிவிடும்” என்று நம்பிக்கையுடன் சென்றார்..

ஆம்,நண்பர்களே.,

தோல்விகள் தழுவும்போது “இதுவும் கடந்து போகும்” 

என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சோர்ந்து விட மாட்டீர்கள்.

நல்ல மனிதர்களும்,நண்பர்களும் உங்கள் வாழ்வில் 

வரும்போது ‘இதுவும் கடந்து போகும்” என்பதை நினைவில்

கொள்ளுங்கள்.

அவர்கள் இருக்கும்போது போது கொளரவிப்பீர்கள்.

அவர்கள் விலகும்போது பாதிக்கடைய மாட்டீர்கள்.

எத்தனையோ மனிதர்களை மாற்றிய இந்த உன்னத சொல் 

உங்கள் வாழ்விலும் இனி ஒளி ஏற்றும். 

“இதுவும் கடந்து போகும்” என்பதை 

உறுதியுடன் நம்புங்கள். கண்டிப்பாக மாறிவிடும். 

தோல்வியைச் சந்திப்பவர்கள், 

நோயில் இருப்பவர்கள், 

சிக்கலில் மாட்டியவர்கள், 

திசை தெரியாமல் இருப்பவர்கள் அனைவரும் தினமும் 

இதை மனதில் சொல்லிக்கொண்டே இருங்கள். 

ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியே..,

உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

இன்றைய நாள் உற்சாகமும், உத்வேகமும்

தரும் நாளாக உங்களுக்கு அமையட்டும்..

இன்றைய சிந்தனை..

Wednesday, August 28, 2013

முதலாளிகள் வேலையாட்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

ஒரு நிறுவனமோ அல்லது கடையோ செழிப்பாக இருக்க, செம்மையான முறையில் செயல்பட முதலாளியும், தொழிலாளியும் ஆரோக்கியமான மனோநிலையில் இருக்க வேண்டும். முதலாளிகள் சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் வேலையாட்கள் அற்புதமாக செயல்படுவார்கள். அதற்கான சில டிப்ஸ் பின்வருமாறு:

1. வெற்றிக்கான 80/20 சட்டத்தை எப்போதும் நினைவில் கொண்டிருங்கள். அதாவது எண்பது சதவீத நேரங்களில் நான் சரியான தீர்மானங்களை எடுப்பேன். ஆனால் இருபது சதவீத நேரங்களில் நானும் தவறான தீர்மானங்கள் எடுக்கிறேன். தவறுகளைச் செய்கிறேன். அல்லது சிறப்பாக செய்திருக்க மாட்டேன். என்னுடைய பணியாளர்களுக்கும் இதே 80/20 சட்டத்தின்படியான சுதந்திரத்தை அளிக்கிறேன். அவர்கள் தவறு செய்யவும் வாய்ப்புண்டு என்பதை அறிகிறேன்.

2. நம் பணியாளர்களின் முன்னேற்றத்தை சோதிக்கலாம். தவறில்லை. ஆனால் எப்போதும் அவர்களையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இப்படித்தான் வேலை செய்ய வேண்டுமென கூறக் கூடாது. நம்முடைய ‘நிபுணத்துவ’ அணுகுமுறைக்குச் சாதகமாக அவர்களின் வேலையைத் தள்ளிவிடக் கூடாது. தலைவராக நீங்களிருப்பதால் மற்றவர்களுக்கு சாதகமாக இருக்கும் பொருட்டு அவர்களுடைய தீர்மானங்களை மாற்றக் கூடாது. 

3. நீங்கள் அதிகாரம் அளிப்பவரிடம் (வேலையாளிடம்) நம்பிக்கையுடனிருக்க வேண்டும். 

4. உங்கள் முறைப்படிதான் அது செய்யப்பட வேண்டும் என்ற முறையிலிருந்து விடுபட்டு இளைப்பாறுங்கள்.

5. வேகமாகச் செய்யும் ஆசையிடமிருந்து பொறுமையுடனிருங்கள்.

6. அதிகாரத்தை அளிப்பதில் உள்ள உங்கள் சுதந்தரத்தின் மூலம் மற்றவர்களின் முன்னேற்றத்தைக் காணுங்கள்.

7. தகுதியுள்ள மக்களைத் தேர்ந்தெடுங்கள். 

8. அவர்கள் மீதுள்ள உறுதியை வெளிப்படுத்துங்கள். 

9.அவர்களுடைய கடமைகளைத் தெளிவாக்குங்கள். 

10. சரியான அதிகாரத்தை அவர்களுக்கு அளியுங்கள். 

11. எப்படி வேலை செய்ய வேண்டுமென அவர்களுக்கு அடிக்கடி கூறாதீர்கள்.

12. எதற்கெல்லாம் உங்களுக்கு கணக்கு கூறவேண்டுமென்பதை அவர்களுக்கு கூறுங்கள்.

13. அவர்கள் செயல்படும் முறையைக் கவனியுங்கள்.

14. எப்போதாவது தவறு செய்வதற்கு இடமளியுங்கள். சாத்தியமிருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.

15. சிறப்பாக செய்யப்பட்ட வேலைகளுக்கு புகழையும், பெருமைகளையும் அளியுங்கள்.

இந்த வழிமுறைகளையெல்லாம் கடைப்பிடித்துப் பாருங்கள். உங்கள் வேலையாட்கள் மிகச்சிறப்பாக செயல்படுவார்கள்.

பதினாறு செல்வங்கள் எவை எவை?

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே. அந்தப் பதினாறு எவை எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா? அதன் விளக்கம் பின்வருமாறு:-

பதினாறு செல்வங்கள்:

1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)
2.குறையாத வயது (நீண்ட ஆயுள்)
3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)
4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)
5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)
6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)
7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)
8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)
9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத 
குழந்தைகள்)
10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)
11.மாறாத வார்த்தை (வாய்மை)
12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)
13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)
14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)
15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)
16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)


இந்த பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் அறுதியிட்டு கூறினர். உண்மைதானே? என்ன நான் சொல்றது?

வாழ்க நலமுடன்...!

சீக்கிய மதத்தைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

இந்தியாவில் இன்று கிட்டத்தட்ட ஒரு கோடி மக்களால் பின்பற்றப்பட்டு வரும் சீக்கிய மதம் சீக்கியர் என்னும் மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. 

சீக்கியர்கள் யார்?

கி.மு. 2000-க்கும் கி.மு. 1500-க்கும் இடையே ஆரியர் இந்தியாவில் வந்து குடியேறினர். இவர்களில் பஞ்சாப் பகுதியில் குடியேறிய ஆரியர், போர்த்தொழிலில் முதிர்ச்சி பெற்ற சத்ரியர்கள் எனவும், விவசாயத்தில் ஆர்வமிக்க இராஜபுத்திரர் எனவும் இரு பிரிவினராய் பிரிந்தனர். இந்த சத்ரியரிலிருந்து ‘கட்ரி’ என்ற இனத்தவரும், இராஜபுத்திரர் பிரிவிலிருந்து ‘ஜாட்’ என்ற இனத்தவரும் தோன்றினர். இந்த கட்ரி மற்றும் ஜாட் இனங்களின் கூட்டமைப்பில் உருவான கலப்பு இனமே சீக்கியர் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பொதுவாக இவர்கள் கீழ்க்காணும் குணநலன் உடையவர்களாய் காணப்படுகின்றனர்.

1. பக்தியில் ஊறிப்போனவர்கள்
2. துறவறம் வெறுத்து குடும்பப் பற்றுடையோராய் குடும்பத்தோடு சேர்ந்து 3. வாழ்கின்றனர்.
4. பிறரிடம் பரஸ்பர அன்பு காட்டும் இவர்கள் குருக்களின் 5. போதனைக்குக் கட்டுப்பட்டவர்கள்.
5. சமுதாயத் தொண்டும், பிறருக்கு சேவை செய்யும் மனப்பான்மையும் உடையவர்கள். 
6. கடவுளின் சித்தமே நடக்கும் என மதிக்கும் தலைவிதி வாதிகள்.
சுதந்திர உணர்ச்சி மிக்கவர்கள். 

தோற்றம்

சீக்கிய மதத்தை உருவாக்கியவர் குருநானக் ஆவார். எனினும் அவருக்கு முன்பே அது தோன்றுவதற்கு வித்திட்டவர் கபீர் என்பவராவார். முகம்மதிய மார்க்கத்திலும், இந்து மார்க்கத்திலும் நாட்டமுடைய கபீர் என்பவர் இரண்டு மார்க்க கருத்துகளையும் சேர்த்து பொதுவான கருத்து ஒன்றை வெளியிட்டார். இதுவே சீக்கிய மார்க்கமாக உருவாயிற்று. இக்கெள்கைகளை குருநானக் எடுத்துரைத்து அதற்கு மார்க்க உருவம் கொடுத்தமையால் சீக்கிய மார்க்கத்தின் முதல் குரு ஆனார். அவரைத் தொடர்ந்து ஒன்பது குருக்களின் தொண்டுகளால் சீக்கிய மார்க்கம் வளர்ந்தது. குருநானக் முதலான பத்து குருக்களின் போதனையே இன்று சீக்கிய மதத்தின் போதனையாய் விளங்குகிறது. 

சீக்கிய மதத்தின் பத்து குருக்கள்

1. குருநானக், 2. குரு அங்கத், 3. குரு அமர்தாஸ், 4.குரு ராம்தாஸ், 5.குரு அர்ஜூன், 6. குரு ஹர்கோபிந், 7. குரு ஹார்ராய், 8. குரு ராம்ராய், 9. குரு தேஜ்பகதூர், 10. குரு கோபிந்த் சிங்.

மேற்கூறிய பத்து குருக்களின் போதனைகளைப் பின்பற்றுகிறர்வகளே சீக்கியர் எனப்பட்டாலும் இன்று அவர்களின் சீக்கியர் மற்றும் சிங் என இரு பிரிவினர் இருப்பதைக் காணலாம். ஒரே மார்க்கத்தைப் பின்பற்றினாலும் இவர்களிடையே வித்தியாசங்கள் இருப்பதைக் காணலாம். 

வித்தியாசங்கள்

சீக்கியர்

1. நம்மைப் போல் சாதாரணத் தோற்றமுள்ளவர்.
2. ‘சீக்’ என்பதற்கு ‘கற்பவன்’ என்று பொருள்.
3. பூணூல் அணிந்திருப்பவன்.
4. புகை பிடிக்கும் பழக்கமுடையவன்.
5. ஒரே பரம்பரையினர். உயர்குடிப் பிறந்தவர்கள்.

சிங்

1. சீக்கிய மார்க்கத்தில் இணைந்து தலைப்பாகை வைத்திருப்பான்
2. ‘சிங்’ என்பதற்கு ‘வீரம் மிக்கவன்’ என்று பொருள்.
3. பூணூல் அணியமாட்டான்.
4. புகையிலை வஸ்துக்களை பயன்படுத்த மாட்டான்
5. பல இனத்தவர்களிடமிருந்து வந்தவர்கள்.

வேத நூல்

ஆதிகிரந்தம் அல்லது கிரந்தசாஹிப். புத்தகம் என்பது இதன் பொருள். சீக்கியரின் ‘குருமுக்கி’ எனும் மொழியில் எழுதப்பட்டது. கபீர் முதல் 5-ம் குருவின் காலம் வரையுள்ள போதனைகள் பாடல்களாக இதில் இடம் பெறுகின்றன. அத்துடன் இந்து, இஸ்லாமிய மார்க்க பாடல்களும் இடம் பெற்றுள்ளன. 

கடவுள்

சத்நாம் என்பவரே கடவுள். இவர் எல்லாம் அறிந்த ஒரே கடவுள். ‘சத்நாம்’ என்பதற்கு ‘உண்மையுள்ள நாமம்’ என்பது பொருள். எங்கும் நிறைந்த இவர் இரக்கமும் அன்பும் மிகுந்தவர் என்பது இவர்களின் நம்பிக்கையாகும்.

வழிபாட்டு முறைமை

குருத்துவாரம் (மக்கள் கூடும் இடம்) வழிபடும் இடமாக இருக்கிறது. மக்கள் கூட்டமாய் வந்து அமர்ந்து குருவிடம் உபதேசம் கேட்பர். உள்ளே ஆதி கிரந்தம் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு நேராய் தலை சாய்த்து வணங்க வேண்டும். நாள்தோறும் கிரந்தத்தை காலை அல்லது மாலையில் திறந்து இடது பக்க ஓரத்திலிருந்து ஒரு பகுதியை வாசிக்க வேண்டும்.

பிற முக்கிய கொள்கைகள்

1. ஆணோ, பெண்ணோ காது அல்லது மூக்கில் துளையிடுதல் கூடாது.
2. திருமணத்தில் ஜாதி, இனம் பார்க்கக் கூடாது. சீக்கியருக்குள்ளேதான் திருமணம் செய்ய வேண்டும்.
3. பலதார மணம் கூடாது. இறந்தவர்கள் தகனம் செய்யப்பட வேண்டும்.
4. நினைவுச் சின்னமோ தூணோ நாட்டக் கூடாது.
5. பயணம் புறப்படும் முன்னும், புதுத்தொழில் ஆரம்பிக்கும் முன்னும் ஆதிகிரந்தம் வாசிக்கப்பட வேண்டும்
6. ஒவ்வொரு சீக்கியனும் குடும்பஸ்தனாய் வாழ்ந்து குடும்பத்தை நன்கு பராமரிக்க வேண்டும். 

பொற்கோவில்

குரு இராம்தாஸ் என்ற 4-வது குருவிற்கு மொகலாய அரசர் அக்பர் பெரும் நிலம் ஒன்றை தானமாக் கொடுத்தார். அதில்தான் குரு தமது பெயரால் இராம்தாஸ்பூர் என்ற நகரத்தை நிர்மாணித்தார். இதுவே இன்று அமிர்தசரஸ் என்று அழைக்கப்படுகிறது. 5-வது குருவாகிய குரு அர்ஜூன் இங்கு சீக்கியர்களின் பொற்கோவிலைக் கட்டினார். சீக்கியர்களிடம் வசூலிக்கப்பட்ட வரிகளால் வந்த பெரும் செல்வம் பொற்கோவிலில் சேர்த்து வைக்கப்பட்டது. இதுவே பிற்காலத்தில் ‘அழியாத சிம்மாசனம்’ என்ற அர்த்தம் கொள்ளும் ‘அகால் தாஹ்ட்’ அல்லது ‘அகாலிதளம்’ என்று அழைக்கப்பட்டது. (இதன் பெயரில் இன்று ஒரு அரசியல் கட்சியும் உள்ளது). 

இந்திய விடுதலைப் போரில் சீக்கியர்களின் பங்கு இன்றியமையாததாக இருந்தது. பொதுவாக சீக்கியர்கள் மதப் பற்றை விட குடும்பப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் அதிகமுடையவர்கள். 

வாழ்வை வளமாக்கும் பொன்மொழிகள்

நாம் அறிந்திராத அற்புதமான பொன்மொழிகள் சிலவற்றை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். வாசியுங்கள். கடைப்பிடியுங்கள். வாழ்வை வளமாக்குங்கள்.

1. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்

2. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ 
தெரிந்துகொள்.

3. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.

4. தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை 
ஆரம்பிக்கிறது. 

5. அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும்.

6. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. கெட்ட மனைவியை விட 
மோசமான சாபமும் இல்லை.

7. முதலில் மனிதன் மதுவைக் குடிக்கிறான். பின்பு மது மனிதனை குடிக்கிறது.

8. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டி விடலாம். ஒரு 
வீட்டைக் கட்ட ஒழுக்கமான ஒரு பெண் வேண்டும்.

9. இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால் இரண்டு கை 
உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது. 

10. உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும்.

11.ஒருவன் தான் செய்த தவறை ஒத்துக்கொள்ள வெட்கப்படக் கூடாது. 
ஒப்புக்கொள்வதன் பொருள் என்ன? அவன் நேற்றைவிட இன்று அதிக அறிவு 
பெற்று விட்டான் என்பதே.

12. வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதை நரகமாக்கி 
விடாதீர்கள். 

13. பிறரைப் பாராட்டுங்கள். பாராட்டு கிடைக்கும். பிறரை மதியுங்கள். மதிப்புக் 
கிடைக்கும். அன்பு செலுத்துங்கள். அன்பு தேடி வரும். இவை ஒற்றைவழிப் 
பாதைகள் அல்ல. இரட்டை வழிப் பாதைகள். அன்பில் வணிகத்திற்கு 
இடமில்லை. வணிகத்தில் அன்புக்கு இடமில்லை.

14. தனக்கென வாழ்ந்தவன் தாழ்ந்தவன் ஆகிறான். பிறருக்கென வாழ்பவன் 
பெருவாழ்வு வாழ்கிறான். அடக்கம் அணிகலன் மட்டுமல்ல. அறத்தின் 
காவலன். 

15. சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும், 
கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது. 

16. சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு 
எல்லாமே எளிதாகத் தோன்றும்.

17. எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் 
கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.

18.எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ அந்த 
சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும். அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன் 
ஆவான்.

19. பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல 
பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய்.

20. இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ 
விரும்பியதைச் செய்வதில் அல்ல. நீ செய்வதை விரும்புவதில்தான்.

ஆரோக்கிய வாழ்வுக்கு அற்புத பழமொழிகள் இருபது

நம் முன்னோர்கள் கடைப்பிடித்த இயற்கையோடிணைந்த வாழ்வு நமக்கு ஒரு பாடம். அவர்கள் எழுதிவைத்த அற்புத பழமொழிகள் கீழே:-

1. ஒல்லியான உடம்பு உறுதியான உடம்பு.

2. கொழுப்பு மண்டி குண்டி பெருத்தால் குந்தி எழுந்தால் கூட கூப்பாடு போடணும்.

3. அன்றே கொல்வது காட்டுப்புளி. நின்று கொல்வது வீட்டுப் புளி.

4. அளவான உறக்கம் வளமான வாழ்வு

5. உழைக்காத உடம்பு உழுத்துப்போன உலக்கை.

6. மூன்று வேளை உள்ளே. மூன்று வேளை வெளியே.

7. சாப்பிடும்போது தண்ணீரைத் தடை செய்.

8. உண்ணா நோன்பு உயிர் வாழும் நோன்பு

9. உடற்பயிற்சி உடம்புக்கான கவசம்.

10. வெயிலை மறந்தால் வாழ்வெல்லாம் துயரே.

11. சனி நீராடு

12.வெள்ளைச் சீனி வெள்ளை நிற நஞ்சு

13. இயல்பான வாழ்வுக்கு இயற்கை உணவு.

14. பசியோடு அமர்ந்து பசியோடு எழு.

15. நீரை அருந்து. உணவைக் குடி.

16. உண்ணும் உணவே மருந்து.

17. முப்போதும் மோர் குடி.

18. ஆண் பெண் உறவு முறிந்தால் உறவும் திரிஞ்சு போகும்.

19. கலவி நுணுக்கம் வாழ்க்கையின் பேரின்பம்

20. உட்காரும் இடத்தில் உறங்கி எழு.

முன்னோர்கள் கடைபிடித்த பழக்கவழக்கங்கள்

01.வயிறு பசித்தால்  மட்டுமே உணவினை உண்ண வேண்டும், பிறரின்
    கட்டாயத்திற்காக உணவினை உண்ணக்கூடாது.

02.உணவினை வியாதிக்கு மருந்து உண்ணுவது போல உண்ணவேண்டும்.
    ருசிக்காக உண்ணக்கூடாது. அது உடல் நலனை பாதிக்கும். உண்ணும் போது
    மகிழ்வுடன் உண்ண  வேண்டும்.

03.குழந்தைகளுக்கு முன் எதையும் அவர்களுக்கு தராமல் உண்ணக்கூடாது.
    அதிலும் புகைத்தல், மது அருந்துதல் நிச்சயம் கூடாது.

04.எந்த பானத்தையும் எச்சில் செய்து குடிக்க கூடாது. நாம் குடித்த எச்சில்
    பானத்தையோ அல்லது உணவையோ நம்மை விட பெரியவர்களுக்கு
   தெரிந்தே தரக்கூடாது.

05. உணவினை நிந்திக்க கூடாது , உணவினை வீணாக எறிதல் கூடாது . 
    அன்னதானம் செய்பவர்களை எந்த காரணம் கொண்டும் இழிவாகப் 
    பேசக்கூடாது.

06. பந்தியின் நடுவே எழுந்திருக்கக்  கூடாது, சாப்பிடும் போது
     கோபப்படக்கூடாது, உண்ணும் போது குழந்தைகளை விரட்டுவது, அழுவது
    கூடாது .உண்ணும் போது புறங்கையை நக்குவது, மிக சப்தத்துடன்
    உறுஞ்சுவதுக்  கூடாது.

07. உணவு உண்ணும் போது படுத்துக்கொள்ளக் கூடாது, கால்களை
     நீட்டிக்கொண்டு உண்ணக்கூடாது. முதியவர்களை தவிர மற்றவர்கள்
     தரையில் அமர்ந்துதான் உண்ண  வேண்டும்.

08. ஈராமான ஆடைகளையோ அல்லது ஒற்றை ஆடையுடனோ உணவு 
      உண்ணக்கூடாது.(இவை ஓரளவு வசதியுள்ளவர்களுக்கு, உண்ண
      உணவில்லாத பரம ஏழைக்கல்ல ).

09. நிச்சயம் பாதுகை அணிந்துகொண்டு உணவு உண்ணக்கூடாது. உண்ணும்
      போது முகம்,கைகால்கள் சுத்தம் செய்த பின்னரே உணவருந்த வேண்டும்.

10. தரமான நல்ல நிலையிலுள்ள பொருட்களை மட்டுமே தானமாக
     தரவேண்டும்.தரமில்லாத மற்றும் பாழான பொருட்களை யாருக்கும்
     தானமாக தரக்கூடாது.

11. வயது வந்த பெண்களை தகுந்த காலத்தில்,தகுந்த வரனுக்கு தங்களின்
     வசதிக்கு ஏற்ப திருமணம் செய்து தந்துவிடவேண்டும். பலனை
     எதிர்ப்பார்த்து அவர்களின் திருமணத்தை தள்ளி வைத்தல் கூடாது.

12. கர்ப்பமாக உள்ள பெண்கள் சூரியன் மறையும் நேரத்தில் உணவு
      உண்ணக்கூடாது. ஆடையில்லாமல் வெற்று உடலுடன் குளித்தல் கூடாது.
     மாலை நேரத்தில் உறங்குதல் கூடாது.

13. கர்ப்பமான பெண்கள் மன அமைதித்தரும் பாடல்கள் மற்றும் அன்பு
      பாசம்,தைரியம் வளர்க்கும் கதைகள் கேட்பது,படிப்பது  போன்றவற்றில்
     இடுபாடுக்காட்டவேண்டும்.

14. பொதுவாக பெண்கள், அதிலும்  குறிப்பாக கர்ப்பமான பெண்கள்  நடுநிசியில்
      மயானம் மற்றும் பாழடைந்த கிணறு உள்ள பகுதிக்கு செல்லக்கூடாது.
      கிரஹண காலங்களில் கர்ப்பிணிகள் வீட்டை விட்டு  வெளிவருதல்
      கூடாது.

15. கிரஹண காலங்களில் வயிற்றில் உணவு இருத்தல் கூடாது.
     கிரஹணத்திற்கு  8 மணிநேரத்துக்கு முன்பாக உணவு
     உண்டு  விடவேண்டும்.

16. பெண்கள் பூசணிக்காயை சுற்றி உடைக்க கூடாது, மனைவி கர்ப்பமான
      காலத்தில், கணவன் பிணம் சுமக்கக்கூடாது மற்றும் சுடுகாட்டிற்கு
     செல்லக்கூடாது.

17. எந்த மதத்துடைய புராண,இதிகாசங்களையும் பழித்தலோ அல்லது கேலி
     செய்தலோ நிச்சயம் கூடாது.

18. வழிப்பாட்டு தளங்கள் மற்றும் பாதைகளில் அசுத்தம் செய்தல் கூடாது.
     ஆண்டவன் வழிப்பாட்டு தளங்கள் உள்ள மலைகளில் மற்றும் அதன் வேறு
     எந்த பகுதியலும் சிறுநீர் மற்றும் மலம் கழித்தல் கூடாது.

19. பள்ளிகள்,மருத்துவமனைகள் மற்றும் ஆலயங்கள் அமைந்துள்ள
     இடங்களில் அசுத்தம் செய்வதோ ,சத்தம்செய்வதோ  மற்றும்  மதுபானக்    .
     கடைகள் அமைத்தலோ  கூடாது.

20. ஆண்டவனின் பெயர் அல்லது படங்கள் உள்ள ஆடைகளை அணிந்து
      கொள்ளக்கூடாது. விளம்பரப் பொருட்களில் எந்த கடவுள் படங்களையும் 
      அச்சடித்து வியாபாரம் செய்தல் கூடாது. அது கடவுளை இழிவு செய்யும்
      செயலாகும்.

21. நகங்களை அளவுக்கு அதிகமாக வளர்தலும், அதனை பற்களால் கடித்து
     துப்புதலும் செய்யக்கூடாது. இதன் மூலம் கண்களுக்கு புலப்படாத
    தேவையில்லாதா கிருமிகள் பரவும்.

22. வாங்கிய கடனை திருப்பிதராமல் ஏமாற்றக்கூடாது. கடன் தருவதையும்,
     பெறுவதையும் தவிர்க்க வேண்டும் அது இருவருக்கும் நன்மை பயக்கும்.

23. பிணத்தின் புகையும்,காலை வெயிலும் மற்றும் இரவில் தயிரும் கூடாது.

24. ஜீவன்களின் முட்டைகளையோ அல்லது அதன் சிசுகலையோ கொள்வது
     கூடாது.

25. காமந்தகாரன், துறவிபோல் வேஷம் போடுபவன், தேசவிரோதி,தர்ம
     சிந்தனை இல்லாதவன், மற்றவர்களை குற்றம் கூறுபவன்,பெண்களிடம்
     தேவையில்லாமல்  சிரித்து சிரித்து பேசுபவன், கடவுளை இழிந்து பேசி
     தன்னை  உயர்த்தி கொள்பவன் இவர்களை வீட்டில் சேர்க்கக்கூடாது.

26. விடிகாலை 5 மணிக்கு விழித்தெழ வேண்டும், விழித்தவுடன் நம்மை .
     தாங்கும் பூமித்தாயை வணங்கி எழ வேண்டும்.

27. தினமும் நீரால் உடல் சுத்தம் மிக்க அவசியம்,வாரம் ஒருமுறை
     கட்டாயமாக தலைகுளியலும் செய்தல் வேண்டும்.

28. காலை, மாலை இரு வேளையிலும் தீபமேற்றி வீட்டின் முன் வாசலை
      திறந்த நிலையிலும், பின் வாசலை மூடிய நிலையிலும் வைத்தல்
     வேண்டும்.

29. வீட்டில் இரு வேலைகளிலும் மணி சப்தத்துடன் கூடிய பூஜை செய்தல்
      வேண்டும்.

30. வாழை இலைகளில் உணவு பரிமாறும் போது உப்பிட்ட பதார்த்தங்களை
      நடு மட்டைக்கு மேலேயும், உப்பில்லாதவைகளை நடு மட்டைக்கு 
     கீழேயும் பரிமாறவேண்டும்.

31.கோவில் இல்லா ஊரில் குடியிருக்க  கூடாது, ஆலய பிரசாதங்களை
     அலட்சியம் செய்தலோ அல்லது வீண் செய்தலோ கூடாது. ஆலயங்களில்
     நுழைந்து விட்டால் வீண் பேச்சுக்கள் மற்றும் அரட்டைகள் கூடாது(
     இக்காலத்தில் செல்போன் பேசக்கூடாது).

32. மனைவி கணவனை பற்றியோ அல்லது கணவன் மனைவியை பற்றியோ
     அடுத்தவரிடம் தவறாக பேசக்கூடாது.

33. இல்லறம் என்ற வண்டிக்கு கணவன் மனைவி என்ற சக்கரம் சீராக
      இருந்தால் தான் பயணம் வெற்றிப்பெறும். கணவன் மனைவியிடையே   
      விட்டுக்கொடுத்தல் வேண்டும்.

34. காமம் என்பது பெண்ணின் மீது வைப்பது மட்டும் அல்ல. காமம் என்பது ஒரு
     பொருளின் மீது வைக்கின்ற அதிகப்படியான ஆசையும்  காமம் எனப்படும்.
     காமத்தின் மகன் கோபம், கோபத்தின் குமரன் மயக்கம்.

35. வசதியில்லாத புதுமண தம்பதியினர் கடவுள் படம் நிறைந்த அறையில்
     தாம்பத்தியம் வைக்க நேரிட்டால் அது தவறில்லை. 
     கணவனும்,மனைவியும் வாழ்வது பிழையன்று. "இல்லறம் அல்லது
     நல்லறமன்று" என்கிறார் ஔவையார் .

36. இறைவன் அனைத்து உயிரிலும் உள்ளான் எனவே கோவில்களில்
      உயிரினங்களை பலியிடக்கூடாது அது மிக பெரிய பாவமாகும் .

37. கோழி முட்டை சைவ உணவாகாது. அதில் கரு இருப்பதினால் அது மாமிச
      உணவே ஆகும். ( காந்தியடிகள் மருத்துவர் கூறியும் கோழி முட்டையை
      உண்ண  மறுத்தார் என்பதை அவரின் வரலாறு மூலம் அறிய முடிகிறது.)

38. பிறர் மனைவியை மனதினால்  கூட நினைக்கக்கூடாது, பிறர் சொத்தினை
     அபகரிக்க கூடாது, தேவையின்றி பருவ பெண்களை தொட்டு பேசக்கூடாது 
     அது நமது சகோதிரியாக இருந்தாலும் கூட.

39. எப்பொழுதும் பிறர் மனம் புண்படும்படி பேசக்  கூடாது. வாயில்லா
     ஜீவன்களை  துன்புறுத்தக்கூடாது.

40. தாய்,தந்தை, குரு  மற்றும் வயது முதிர்ந்த பெரியவர்களின்  சாபத்திற்கு
     ஆளாகக்கூடாது.

41. நமது கடமையை பிறர் செய்விக்க கூடாது.

42.தானம் தர யோசிக்கக்கூடாது, தந்தபின் தந்ததிற்காக வருந்தக்கூடாது,
     பெற்றவரின் சொத்தாக மாறிய பின் நாம் சொந்தம் கொண்டாட கூடாது.

43. இளைஞ்சர்கள் சிறிது நேரமாவது குழந்தைகள் மற்றும் உறவினருடன் பேசி
      பழகி இன்பதுன்பங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும்.

44. தீண்டாமையை ஒரு போதும் ஏற்கக்கூடாது. யாரையும் தள்ளிவைத்து   
      வாழ்தல் கூடாது.

45. அரசாங்க நெறிமுறைகளை தவறாமால் கடைபிடிக்க வேண்டும்.
      அரசாங்கத்துக்கு புறம்பாக நடக்க கூடாது. தவறை அகிம்சைவழியில்
      சுட்டிக்காட்டலாம், அதிகாரத்தை நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது.

46. வயதானவரையும், நோய்வாய்பட்டவரையும் அலட்சியம்  செய்தல்                       கூடாது. 

47.சாலை விதிகளை மீறக்கூடாது . சட்டம் பொதுவானது எந்த ஒரு தனி
     மனிதனும் அதனை மீறி நடக்க உரிமையில்லை.

48. இயற்கை வளங்களை அழித்தல் கூடாது.வாழும் காலத்தில் நம்மால் 
     முடிந்தது ஒரு மரமாவது வளர்க்கவேண்டும். நமக்கென என இருத்தல்   
      கூடாது.
49. மனைவியை தவிர பிற பெண்களிடம் உறவு வைத்தல் கூடாது.   
     ஒருவனுக்கு ஒருத்தி என மரபு மீறாமல் வாழ்தல் வேண்டும். பகல்
     பொழுதில் கணவன்,மனைவி உறவு வைத்தல் கூடாது. பெற்றோர்,   
     பெரியவர்கள்  மற்றும் குழந்தைகள் இருக்கும் போது கணவன்,  மனைவி 
     கண்ணியமின்றி  நடத்தல் கூடாது.

50. உணவு  பொருட்களில்  ஏமாற்றுதல் கூடாது. கையூட்டு பெறுதல்   பாவம்
      அதனை செய்யக் கூடாது.அது நேரடியாக இல்லாமல் மறைவாக பிறருக்கு
      செய்யும் துரோகம்.

நட்பு


வாழ்க்கை - முயற்சி

எல்லோருக்குமே வாழ்வில் சிறந்த நிலையை அடைய வேண்டும் என்ற ஆசை உண்டு. பெரும்பாலான மக்களின் மனநிலையை ஒட்டி கீழே சில கேள்விகளும் அதற்கான பதில்களும்:

1 வாழ்க்கையில் சீக்கிரம் நல்ல உயரத்திற்குச் செல்ல என்ன வழி?

2 சில வாரங்களிலேயே கோடீஸ்வரன் ஆவது எப்படி?

3. உலகம் முழுவதும் உங்கள் பெயரை உச்சரிக்க என்ன செய்ய வேண்டும்?

4. கின்னஸ் புத்தகத்தில் உங்கள் பெயரும் இடம் பெற என்ன செய்ய வேண்டும்?

அதற்கான பதில்கள்:

1. ஒரு விமானத்தில் (டிக்கெட் எடுத்துதான்) ஏறினால் நல்ல உயரத்தை எளிதில் அடைந்து விடலாம்.

2. சட்டத்தில் சொல்லியுள்ளபடி (வீடுதிரும்பல் மோகன் இதற்கு உதவுவார்) உங்கள் பெயரை "கோடீஸ்வரன்" என்று மாற்றிக் கொண்டால் போதும், நீங்கள் கோடீஸ்வரன் ஆகிவிடுவீர்கள்.

3. இன்றைய தேதியில் உலகம் யாருடைய பெயரை உச்சரிக்கிறதோ, அந்தப் பெயரை உங்கள் பெயராக மாற்றிக்கொள்ளுங்கள். உலகம் உங்கள் பெயரைத்தான் உச்சரிக்கிறது என்று சொல்லிக் கொள்ளலாம்.

4. ஒரு கின்னஸ் புத்தகத்தை வாங்கி உங்கள் பெயரை ஏதாவது ஒரு பக்கத்தில் (நீங்கள் விரும்பும் துறை உள்ள இடத்தில்) எழுதிவிடுங்கள். உங்கள் பெயரும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று விடும்.

மொக்கை போடுவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.  கஷ்டப்பட்டு அடைய வேண்டிய நிலைகளை சுலபத்தில் அடைய நினைக்கக் கூடாது என்பதற்காகத்தான் இப்படி எழுதினேன்.

வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் வாழ்க்கை கதையை படித்துப் பாருங்கள். அவர்கள் இந்நிலையை அடைய எத்தகைய தியாகங்களைக் கொடுத்து, எப்படி உழைத்து முன்னேறினார்கள் என்பதை உணரலாம்.

சினிமாவில் மட்டும்தான் ஒரே பாட்டில் ஒரு ஏழை பணக்காரன் ஆக முடியும் என்பார்கள்.  நான் அதைக் கூட  ஒப்புக்  கொள்ள  மாட்டேன்.  நன்றாகக் கவனித்துப் பாருங்கள். அந்த ஒரு பாடலிலேயே, ஹீரோ முதலில் நடந்து செல்வார், சைக்கிளில் செல்வார், மொபெட்டில் செல்வார். பிறகு காரில் செல்வார். அதன் பிறகு, அநேகமாக பாட்டின் முடிவில் ஒரு பங்களாவில் நுழைவார்.  ஆக, அதில் கூட ஒரு லாஜிக் சொல்லாமல் அப்படிக் காட்ட முடியாது.

நம்முடைய குறிக்கோள் எதுவாக வேண்டுமானால் இருக்கலாம், அது நல்ல குறிக்கோளாக இருக்க வேண்டும், அது ரொம்ப முக்கியம்.  பிறகு, அதை அடைய வேண்டிய வழிகள் எத்தனை உள்ளனவோ, அத்தனையையும் பரிசீலியுங்கள்.  வழிகளும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவையாக இருப்பது மிகவும் அவசியம்.  அதில் உங்களுக்கு ஏற்ற வழி என்று ஒன்றிரண்டு இருக்கும், அதைத் தேர்ந்தெடுக்கவும்.

இப்போது முழு மூச்சாக அந்த வழியில் பயணிக்கவும்.  

முக்கியமாக இப்போதுதான் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.  உங்கள் வளர்ச்சியில் பொறாமைப் படுபவர்கள், உங்களை ஏளனமாக நினைப்பவர்கள், உங்கள் எதிரிகள், மறைமுக துரோகிகள் எல்லோரும் தங்களால் இயன்ற அளவு, உங்கள் முயற்ச்சிகளுக்கு தடை போடுவார்கள் .

“உனக்கு இதெல்லாம் தேவையா?”

“உள்ளூர்ல கோழி பிடிக்க முடியாதவன், வெளியூர்ல வேலை தேடித் போகலாமா?”

“இருக்கறவன் அள்ளி முடிஞ்சுக்கறான், நீ அதுக்கெல்லாம் ஆசைப் பட முடியுமா?”

என்றெல்லாம் உங்களிடம் நேரடியாகவும்,

“இதைப் பாருடா, இவனுக்கெல்லாம் இந்த ஆசை வருது, இவனுக்கு இருக்கற யோக்கியதைக்கு இது ரொம்பவே அதிகம்தான்”

“நான் எழுதித் தர்றேன், இவன் மட்டும் இதை செய்து முடிச்சுட்டா, நான் ஏன் பெயரை மாத்திக்கறேன்”

“நான் நினைக்கிறேன், இவன் மூளை மழுங்கிப் போச்சு, அதான் இப்படி பைத்தியமா அலையறான்”

என்றெல்லாம் உங்கள் முதுகுக்குப் பின்னாலும் எதிரிகளும், துரோகிகளும் உங்களைப் பற்றி விமரிசிப்பார்கள்.

நீங்கள் அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு உங்கள் முயற்சியைத் தொடருங்கள்.

நினைவில் வையுங்கள், இதே விமரிசகர்கள்தான், நீங்கள் நாளை உங்கள் லட்சியத்தை அடைந்தவுடன்,

“எனக்கு அப்பவே தெரியும்டா, உனக்கு ஏத்த லட்சியத்தைத் தான் நீ தேர்ந்தேடுத்திருக்கே, கங்கிராட்ஸ்!”
“உன் திறமைக்கு இதுவே லேட்தான், இன்னும் சீக்கிரமாவே இது உனக்கு கிடைச்சிருக்கணும்”

“உன்னோட பிரெண்ட் என்பதில் எனக்கு எப்பவுமே மகிழ்ச்சிதான்”

என்று உங்களிடமே, வழிய வழியப் பேசுவார்கள்.  இந்த உலகமே உங்களைக் கொண்டாடும்.

எனவே, குறுக்கு வழியை யோசிக்காமல், நேர்வழியில் நல்ல ஒரு நிலையை அடைய இன்றே திட்டமிடுங்கள்.

இறுதியாக  ஒன்று,

உங்கள் வாழ்க்கை உங்கள் வெற்றியில் தான் உள்ளது.

உங்கள் வெற்றி உங்கள் லட்சியத்தை அடைவதில் உள்ளது.

உங்கள் லட்சியம் உங்கள் திறமையைப் பொறுத்துள்ளது.

உங்கள் திறமை உங்கள் எண்ணங்களைப் பொறுத்தது.

உங்கள் எண்ணங்களை சீர்படுத்துவது உங்கள் கையில் உள்ளது.

எனவே, உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் உள்ளது.

திட்டமிடுங்கள், வெற்றி பெறுங்கள்
வாழுங்கள், வாழ விடுங்கள்!