Tuesday, November 1, 2016

*சிவபெருமானின் அவதாரங்கள் !*

விஷ்ணு பெருமானின் தசாவதாரம் தெரியும். சிவபெருமானின் அவதாரங்கள் தெரியுமா...?

பொதுவாக அவதாரம் எடுப்பது என்பது கடவுள் பூமியில் தீமைகள் அதிகரிக்கும் போது அவைகளை அழித்து மக்களை காப்பாற்றுவதற்காக மனிதனாக பிறப்பெடுப்பது என்பதாகும்.

சிவபெருமானின் எடுத்துள்ள அவதாரங்கள் பற்றி
16ஆம் நூற்றாண்டில் அதிவீரராம பாண்டியனால் எழுதப்பட்டது கூர்ம புராணம் ஆகும். வட மொழியில் இருந்த பாயிரத்தை தமிழில் இவர் மொழி பெயர்த்ததாகக் கூறப்படுகிறது. கூர்ம அவதாரம் எடுத்த விஷ்ணு பெருமான் சிவ பெருமானின் பெருமைகளை எடுத்துரைத்ததாக இது சொல்லப்படுகிறது. இந்த புரானமானது இரண்டு பகுதிகளாக உள்ளது. ஒன்று, பூர்வகாண்டம். மற்றொன்று உத்தர காண்டம். பூர்வ காண்டமானது 48 அத்தியாயங்களாக 2729 பாடல்கள் உள்ளது. உத்தர காண்டமானது 47 அத்தியாயங்களாக 899 பாடல்கள் உள்ளது.

சிவபெருமானின் அவதாரங்கள் அதில் 27 என சொல்லப்படுகிறது.
1. ஸ்வேதா
2. சுதாரா
3. மதனன்
4. சுஹோத்திரன்
5. கங்கணன்
6. லோகாக்ஷி
7. ஜெய் கிஷ்ஹவ்யன்
8. தாதிவாகன்
9. ரிஷபன்
10. பிருகு
11. உக்கிரன்
12. அத்திரி
13. கவுதமன்
14. வேதசீர்ஷன்
15. கோகர்ணன்
16. ஷிகந்தகன்
17. ஜடமாலி
18. அட்டஹாசன்
19. தாருகன்
20. லங்காலி
21. மகாயாமன்
22. முனி
23. ஷுலி
24. பிண்ட முனீச்வரன்
25. ஸஹிஷ்ணு
26. ஸோமசர்மா
27. நகுலீஸ்வரன்
(19 அவதாரங்கள் உள்ளன என்றும் பலரால் சொல்லப்படுகிறது. அவற்றைப்பற்றியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.)
1 – பிப்லாட் அவதாரம்
2 – நந்தி அவதாரம்
3 – வீரபத்திர அவதாரம்
4 – பைரவ அவதாரம்
5 – அஸ்வத்ஹமா
6 – ஷரபா அவதாரம்
7 – க்ரஹபதி அவதாரம்
8 – துர்வாசா
9 – அனுமான்
10 – ரிஷப அவதாரம்
11 – யாதிநாத் அவதாரம்
12 – கிருஷ்ண தர்ஷன் அவதாரம்
13 – பிக்ஷுவர்யா அவதாரம்
14 – சுரேஷ்வர் அவதாரம்
15 – கீரத் அவதாரம்
16 – சுண்டன்டர்கா அவதாரம்
17 – பிரமச்சாரி அவதாரம்
18 – யக்சேஷ்வர் அவதாரம்
19 – அவதுட் அவதாரம்

Monday, October 31, 2016

மூன்று வகை தவங்கள்

தவம் என்றால் ஆன்மீகப் பயிற்சி எனப் பொருள்படும். ஆழ்ந்த தியானம் மற்றும் முறையான ஒழுக்கநெறிகள் ஆகியவை “தவம்” என்று கூறப்படுகின்றன. தவம் என்பதற்கு நடைமுறையில் ‘விரதம்’ அல்லது ’நோன்பு’ எனவும் பொருள் கொள்ளலாம். தவம் மேற்கொள்பவர் “தபஸி” (ஆண்) அல்லது ”தபஸ்வினி” (பெண்) என்றழைக்கப்படுவர்.

பெரும்பாலும் உடலை வருத்திக் கொள்வது தான் ‘தவம்’ என்று தவறாக கருதப்படுகின்றது. ஆயினும் இந்துதர்ம நூல்களில் உடலை வருத்தி செய்யப்படும் தவங்கள் ‘தவிர்க்கப்படவேண்டியவை’ என அறிவுரை செய்யப்படுகின்றது.

பகவத் கீதை உட்பட இதர இந்துதர்ம நூல்கள் தவமுறைகளை மூன்று வகையாகப் பகுத்துக் காட்டுகின்றன.

1) தூய நிலையிலான தவமுறை (சத்வம்)
2) ஆசை அல்லது தற்பெருமை நிலையிலான தவமுறை (ரஜஸ்)
3) அறியாமை மற்றும் மூட நிலையிலான தவமுறை (தமஸ்)

இவற்றுள் சத்வ தவமுறை தான் ஊக்குவிக்கப்படுகின்றது. சத்வ தவமுறையைக் கடைப்பிடிப்பவர் இறைவனின் அருளைப் பெறுவர். சத்வ தவமுறையை உடல், வாக்கு, மனம் என மூன்றாகப் பிரிக்கலாம். அவை:

|| உடல்

1) தினமும் தவறாமல் தெய்வங்களை வழிபட வேண்டும்.
2) பெற்றோர், குரு மற்றும் சான்றோர்களை மதித்து போற்றவேண்டும்.
3) உடல் தூய்மையைப் பேண வேண்டும்.
4) எளிமையான வாழ்க்கையை வாழ பழகிக் கொள்ளவேண்டும்.
5) தன்னடக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
6) மற்றவர்களுக்குக் கேடு விளைவிக்கும் செயல்களைத் தவிர்க்க வேண்டும்.

|| வாக்கு

1) பொய்யானவற்றை தவிர்த்து உண்மையைப் பேச வேண்டும்.
2) கடுமையான சொற்களைத் தவிர்த்து இனிமையாகப் பேச வேண்டும்.
3) மற்றவர்களுக்கு நன்மை விளைவிக்கும் விஷயங்களைப் பேச வேண்டும்.
4) நல்லவர்களை நோகடிக்காமல் பேச வேண்டும்.
5) வேதங்கள் கூறும் உண்மைகளை மற்றவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.

|| மனம்

1) இருப்பதைக் கொண்டு மனதில் திருப்தி கொண்டிருக்க வேண்டும்.
2) மனத்தைக் கட்டுப்படுத்த பழக வேண்டும்.
3) தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்த்து மனத்தில் மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
4) எண்ணங்கள் தூய்மையானதாக இருக்க வேண்டும்.

இறைவனின் அருளைப் பெறுவதற்கு இதுபோல எத்தனையோ எளிதான வழிகள் நம் இந்துதர்மத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன. எனவே, தனக்கும் மற்றவருக்கும் துன்பத்தை தரும் கடுமையான மற்றும் தவறான வழிகளில் செல்லாமல் மேற்கூறிய தவமுறைகளைக் கடைப்பிடிப்பது சாலச் சிறந்தது.

யார் இந்த நரகாசுரன்?

முக்கிய கருக்கள்:-

1) மஹாவிஷ்ணுவின் புதல்வன் தான் நரகன் எனப்படும் நரகாசுரன்.
2) தற்போதைய அஸ்ஸாம் மாநிலத்தை இராஜ்ஜியமாக கொண்டு ஆட்சி புரிந்தவன்.
3) தவறான நட்புறவால் சீரழிந்து, மாய இருளில் சிக்குண்டு அக்கிரமங்கள் புரிந்தவன்.
4) மஹாவிஷ்ணு தம் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரனை வதம் புரிந்து, அவனுக்கு வீடுபேறு அருளினார்.
5) அவனின் விருப்பப்படி மக்கள் யாவரும் அவனையும் அவன் புரிந்த தீமைகளையும் அதனால் அவனுக்கு நிகழ்ந்த முடிவையும் என்றும் நினைவில் கொண்டிருக்க, ஒவ்வொரு ஆண்டும் ‘நரக சதுர்த்தசி’அனுசரிக்கப்படுகின்றது.

நரகாசுரன் தமிழனா?

திராவி(மூ)டர்கள் நரகாரசுரனை ‘தமிழன்’ என்று பொய்யாக கதை உருவாக்கி, சிறுபான்மையினரிடம் புகழ் பெறுவதற்காக, இந்து சமயம் சார்ந்த எல்லாவற்றையும் எதிர்க்கும் வாடிக்கையாக தீபாவளி பண்டிகையையும் எதிர்த்து எந்தவொரு பிரயோஜனமும் இல்லாத ஒரு கோசத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அரசியல் லாபத்திற்காக அவர்கள் புரியும் இச்செயலின் முதல் நோக்கமே, இந்து-சமயத்தை சாராத சிறுபான்மையினர்களைக் கவர்வதற்காக தான். மற்றொரு நோக்கம் இந்தியாவை கூறுபோட்டு, இந்தியர்களின் ஒற்றுமையை குலைத்து, இந்துக்களின் நம்பிக்கையைச் சிதைத்து, இந்திய நாட்டை பலவீனமாக்கி, அடிமைப்படுத்துவது.

உண்மையில். புராணக் கதைகளின் படி, நரகாசுரன் என்பவன் விஷ்ணுவின் மகன். பாகவத புராணத்தின் படி, மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தின் போது, அவரின் புதல்வனாக நரகன் எனப்படும் நரகாசுரன் கூறப்படுகின்றான். இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தின் காமரூபா எனும் இராஜ்ஜியத்தை ஆண்டு வந்தவன். இன்னமும் அஸ்ஸாம் மக்களிடையே நரகாசுரனைப் பற்றிய பல்வேறு கதைகள் பேசப்படுகின்றன. அஸ்ஸாமின் புராண வரலாற்றில் நரகாசுரனைப் பற்றிய பல்வேறு குறிப்புகள் உள்ளன. அஸ்ஸாம் இலக்கியங்களிலும் நரகாசுரன் அஸ்ஸாமின் சிறந்த அரசனாகவும், பின்னாளில் பேராசையினால் அழிந்தவனாகவும் சித்தரிக்கப்படுகின்றான்.

பாணாசுரன் என்பவனுடன் ஏற்பட்ட நட்புறவால் நரகாசுரன் தீமைகளைச் செய்ய ஆரம்பித்தான். பாணாசுரன் தற்போதைய அஸ்ஸாம் மாநிலத்தின் மத்தியில் அமைந்திருக்கும் சொனித்பூரை (தற்போது தெஸ்பூர்) இராஜ்ஜியமாக கொண்டவன் என கூறப்படுகின்றது. எனவே, பாணாசுரனும் தமிழனாக இருக்க வாய்ப்பில்லை.

நரகாசுரன் பதவி பேராசையாலும் ஆதிக்க ஆசையாலும் உலகத்தையே ஆள பேரவா கொண்டான். பல இராஜ்ஜியங்களின் மீது போர் தொடுத்து தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான். பின்னர், சுவர்கலோகங்களின் மீதும் போர் தொடுக்க ஆரம்பித்தான். அக்கிரமங்களுக்கும் அநியாயங்களுக்கும் உவமையாக நரகாசுரன் காட்டப்படுகின்றான். அவனை மாய இருளிலிருந்து நீக்கி, கிருஷ்ண பகவான் ஆட்கொள்கின்றார். பகவான் அவனுக்கு மோட்சம் தந்து, அவனின் விருப்பப்படி, அவன் இறையருள் பெற்ற நாள் ‘நரக சதுர்த்தசி’ என்று அனுசரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடபடுகின்றது. நரகாசுரனைப் போல பெயர், புகழ், பதவி போன்றவற்றின் மீது பேராசை கொண்டு எந்தவொரு மனிதரும் ஆத்மநாசத்திற்கு ஆளாக கூடாது என்பதற்காக இந்த கதை மீண்டும் மீண்டும் நமக்கு நினைவு படுத்துகின்றது.

ஒருவேளை நரகாசுரன் தமிழன் என்றால், அவனின் தந்தையாக காட்டப்படும் மகா விஷ்ணுவும் தமிழர் தானே? ஆகையால், கிருஷ்ணரும் தமிழர் தானே? கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்வது எவ்வகையில் ஆரிய-திராவிட போர் எனப்படுகின்றது? நரகாசுரனை கறுப்புத் தோலுடன் சித்தரிப்பதால், அவன் தமிழன் என சொல்வது முட்டாள்தனம். நரகாசுரனை ‘இருள்’ மற்றும் ‘அறியாமை’ ஆகியவற்றிற்கு உவமையாக காட்டுவதால் அவனை கறுப்பாக காட்டுகின்றனர். இருளின் நிறம் கறுப்பு தான். இருளில் நம்மால் பார்க்க முடியாது. ஆகையால், அறியாமை (பார்க்க முடியாமை)க்கு உவமையாக கறுப்புநிறம் உள்ளது. எனினும் புராணங்களின் படி, நரகாசுரன் கறுப்புத் தோலுடையவன் என்ற எந்தவொரு குறிப்பும் கிடையாது. ஆனால், கிருஷ்ணர் என்ற சொல்லே ‘கறுப்பானவன்’ எனப் பொருள்படும். கிருஷ்ணர் கறுப்புத் தோலுடையவர் என்ற குறிப்புகள் சாஸ்திரங்களில் மிகுதியாக உள்ளன. ‘காக்கையின் சிறகினிலே’ எனும் பாரதியார் பாடல் கூட கிருஷ்ணரை கறுப்பானவர் என்றே கூறுகின்றன.

தமிழர்கள் எல்லோரும் கறுப்புத் தோலுடையவர்களா? தமிழர்கள் பல்வேறு தோல் நிறங்களிலும் காணப்படுகின்றனர். ஆப்பிரிக்கர்களைப் போல ஒட்டுமொத்த தமிழர்களும் கறுப்பர்கள் கிடையாது. அதேபோல தான் எல்லா இந்தியர்களும். வட இந்தியர்களிலும் கறுப்புத் தோல் உடையவர்கள் உள்ளனர். மனிதனின் தோல்நிறம் உணவுப்பழக்கம், சீதோஷ்ண நிலை, புவிவியல் மாற்றங்கள் ஆகிய காரணங்களினால் வேறுபடுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை ஒரே தாய்க்குப் பிறந்த பிள்ளைகள் கூட ஒரே நிறங்களில் இருப்பதில்லை.

பல்வேறு புராணங்களின் குறிப்புகள் படி, நரகாசுரன் அஸ்ஸாமை ஆண்ட அரசன். அவனுக்கும் தமிழ்நாட்டிற்கும் துளியும் தொடர்பு கிடையாது. நரகாசுரனைப் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் கிடையாது. ஒரு பொய்யான விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்வதால் அது உண்மையாகி விடாது. புராணங்களில் அக்கிரமங்களுக்கும் அநியாயங்களுக்கும் உவமையாக கூறப்படும் பல்வேறு அசுரர்களை ‘தமிழர்கள்’ எனக் கூறி, ஒட்டுமொத்த தமிழினத்தையும் காட்டுமிராண்டிகள் என திராவிட அரசியல்வாதிகள் காட்ட முயற்சி செய்கின்றனர். இதன்மூலமாக, ஈ.வே.ராமசாமி கூறியது போல ‘தமிழர்கள் காட்டுமிராண்டிகள்’ என்பதை அவர்கள் நிரூபிக்க கடுமையாக முயல்கின்றனர்.

நரகாசுரன் உண்மையில் வாழ்ந்தானா?

நரகாசுரன் உண்மையாக வாழ்ந்திருந்தால், அதனால் நமக்கு வரப்போவது என்ன? அல்லது அவன் ஒரு கற்பனையானவனாக இருந்தால், அதனால் நாம் இழப்பது என்ன? இவ்வுலகில் பதவி பேராசையாலும் ஆதிக்கத்தாலும் மக்களை அனுதினமும் கொடுமை செய்யும் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் உருவத்திலும் நரகாசுரன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றான். மக்களாகிய நாம், கிருஷ்ணரின் சொற்களைக் கேட்டு அதன்படி நடந்து கொண்டு, நரகாசுரனாக இருக்கும் அரசியல்வாதிகளை ஒதுக்குவோம்.
பாரதியார் கூறியது போல, புராணக் கதைகள் ஒரு நுட்பமான விஷயத்தை எளிதான முறையில் புரிந்து கொள்வதற்காக சொல்லப்படுபவை. அவை உண்மையா அல்லது பொய்யா என ஆராய்வதை விட, அவற்றிலிருந்து கிடைக்கும் நன்னெறிகளையும் நல்லறிவையும் நாம் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். வேதங்களான உபநிடதங்கள் தான் நித்திய சத்தியமானவை. அவற்றையே நாம் முடிவான ஆதாரமாக கொள்ள வேண்டும்.

‘எல்லா உயிர்களும் சமம்’ என்றே வேதங்கள் பல்முறை பறைசாற்றுகின்றன. எனவே, பிரிவினை எனும் இருளை விலக்கி ‘ஒற்றுமை’ எனும் ஒளியை ஏற்றுவோம்!

இந்து தர்மத்தை அறிவோம் யார் இந்து?

மேற்கத்தியர்கள் ‘இந்து’ என்பதை ஒரு மதமாக கருதினாலும், இந்து என்பது ஒரு மதமல்ல. ஒரு குறிப்பிட்ட மதநூல், ஒரு குறிப்பிட்ட மதபோதகர், எல்லைக்குட்பட்ட கோட்பாடுகள் போன்றவற்றை சார்ந்திருக்கும் வழிகள் தான் ’மதம்’ ஆகும். இந்து அப்படியல்ல. எல்லையற்ற நூல்கள், ஏராளமான ஞானிகள், முனிவர்கள், சித்தர்கள், யோகிகள், எல்லையற்ற சிந்தனைகள் பரந்த கோட்பாடுகள். எனவே இந்துவை தருமம் எனக் குறிப்பிடலாம். தருமம் என்பது யாராலும் தோற்றுவிக்கப்படாதது; எதையும் யாரையும் சார்ந்திருக்காதது, அதேவேளை எல்லோரிடமும் இருப்பது, எல்லோர்க்கும் உரியது. தருமம் என்பது எல்லையற்றது (infinity). செடிகொடியாகினும், மிருகங்களாயினும், உயிரற்றவைகளாகினும், சூரிய சந்திரனாகினும் அனைத்துமே தர்மத்தின்படி தான் செயல்படுகின்றன. மனிதர்கள் மட்டும் மனம் மற்றும் புலன்களின் படி செயல்பட்டு தர்மங்களை அடிக்கடி மறக்கின்றனர்.

பாரதமண்ணில் தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட பல சமயங்களும், மார்கங்களும் தோன்றின. ஒரே இறைவனைக் கொண்ட மார்கங்களான சைவமும் வைணவமும், பல தெய்வங்களைக் கொண்ட மார்கங்களான ஸ்மார்த்தம், பெண் தெய்வங்களைக் கொண்ட சாக்தம், இயற்கையை வணங்கும் மார்கங்கள், சூரியனை வணங்கும் சௌரம், சமணம் போன்ற நாத்தீக மார்கங்கள், மனிதநேய மார்கம், பிரம்ம சமாஜ் போன்ற அருவ மார்கம் என பல்வேறு மார்கங்கள் தர்மத்தை அடிப்படையாக கொண்டு உருவாகின. பாரத நாட்டின் மற்றொரு பெயர் ஹிந்துஸ்தானம், இங்கு தோன்றிய சமயங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக ‘ஹிந்து’ என இந்திய அரசியல் சட்டம் குறிக்கின்றது. ஆகவே, சைவராக இருந்தாலும், வைணவராக இருந்தாலும், சமணராக இருந்தாலும், வேதாந்தனாக இருந்தாலும், யோகியாக இருந்தாலும், கிராமதேவதைகளை வணங்குபவர்களாக இருந்தாலும் எல்லோரும் இந்துவே. இந்த மண்ணில் தோன்றிய நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்கள், இந்து. இந்தியாவிற்கு வெளியே தோன்றிய மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்து-அல்லாதவர். இந்துக்களை சனாதன தருமிகள் என்று குறிப்பிடலாம்.

இந்து எனும் சொல்லுக்கு மற்றொரு அர்த்தமும் உண்டு. இம்+து = இந்து. மற்றவர்கள் அனுபவிக்கும் இம்சைகளை துடைப்பவன் எனப் பொருள்படும். இன்றைய நிலையில் இந்து எனும் சொல் சனாதன தருமத்தைக் குறிக்கப் பயன்படுகின்றது. சனாதன தர்மம் என்பது தர்மநியதி, கர்மநியதி, எங்கும் நிறைந்த பரம்பொருள், பிறவிச்சுழற்சி, மறைநூல்கள் போன்ற அடிப்படையை உடையது. சமணமும் பௌத்தமும் நாத்தீக மதங்கள் என்பதால் அவை சனாதன தர்மம் அல்ல. முன்பு சொல்லியது போலவே இங்கு அசைவன, அசையாதவன என எல்லாமே தருமத்தின்படி தான் செயல்படுகின்றன. இந்து என்றால்

தர்மத்தின்படி செயல்படுபவன். தருமம் என்பது இறைவனின் நியதி. ஆகவே, இந்த பிரபஞ்சத்தின் எல்லா உறுப்பினரும் உண்மையில் ஓர் இந்து தான். ஆனால் உலகவாழ்க்கையில் அவர்கள் தங்களின் சூழல்களுக்கு ஏற்ப மாறி சில சமயங்களில் வழித்தவறி அதர்மமான நம்பிக்கைகளில் சிக்குண்டு உலகத்திற்குப் பேரழிவை ஏற்படுத்துகின்றனர். ஆனால் அவர்கள் அதர்மபாதையில் பயணிக்கிறோம் என்ற பக்குவம் ஏற்பட்டவுடன் தர்மபாதைக்குத் திரும்புகின்றனர். பக்குவம் ஏற்பட சில ஆண்டுகளும் ஆகலாம்; சில பிறவிகளும் ஆகலாம். இந்தியாவிற்கு வெளியே உள்ளவர்கள், இந்தியாவிற்குள் வந்து தர்மத்தை உணர்ந்து இந்துதர்மத்தை ஏற்கும் போது அதனை நாம் “தர்மத்திற்குத் திரும்புதல்” எனவே குறிப்பிடுகின்றோம். அது மதமாற்றம் அல்ல.

மெய்யுணர்வு அடைய ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்பவன் எல்லாமே இந்துதான். இந்துதர்மம் பற்பல பாதைகளையும், ஒவ்வொரு பாதைகளிலும் பற்பல சாஸ்திரநூல்களையும், குருமார்களையும் கொண்டு திகழ்கின்றது. எப்படியெல்லாம் வாழவேண்டும்; எப்படியெல்லாம் வாழக் கூடாது என வரையறுத்துக் காட்டுகின்றது. எது நல்லது, எது கெட்டது, எது தர்மம், எது அதர்மம் என துல்லியமாக விளக்குகின்றது. அத்தனையையும் கற்றுக் கொடுத்துவிட்டு, இனி உன் வாழ்க்கை உன் கையில், எப்படி வாழப் போகிறாய் என முடிவுசெய் என்று சொல்கின்றது. கட்டாயம் எதுவுமில்லை; கடவுளை நம்பிதான் ஆகவேண்டும் என்று எதுவுமில்லை. கோவிலுக்குச் செல்லவேண்டும் என்றும் எதுவுமில்லை. கோவில்வழிபாடு பக்தியோகத்தின் ஓர் அங்கமே. ஒவ்வொன்றும் ஊக்குவிப்பு நிலையிலே அமைந்துள்ளன. தினமும் சில கிலோமீட்டர் ஓடினால் உடல் நலமாக இருக்கும் என மருத்துவர் ஊக்குவிக்கலாம், நீ ஓடாவிட்டால் நீ நரகத்திற்குப் போவாய் என பயம் காட்டலாமா? அல்லது நீ ஓடியே ஆகவேண்டும் என கட்டாயப்படுத்தலாமா? அல்லது நீ வேறு டாக்டரை நாடி சென்றால் உனக்கு மரணதண்டனை என விதிக்கலாமா?

இந்துதர்மம் கடவுளை நம்ப ஊக்குவிக்கின்றது. சாஸ்திரங்களைக் கற்க, அதன்படி நடக்க ஊக்குவிக்கின்றது. கோவிலுக்குச் செல்ல, பூஜைகள் செய்ய, தியானம் மேற்கொள்ள, யோகா பயில ஊக்குவிக்கின்றது. பின்பற்றினால் நமக்கு பயன் கிடைக்கும்; பின்பற்றாவிட்டால் இழப்பு நமக்கு தான்.

இந்துதர்மம் ஐந்து விஷயங்களை ஆழமாக போதிக்கின்றது.

1) ஐம்புலன்களையும் மனத்தையும் அடக்கவேண்டும்.

2) யோகாப்பயிற்சி மற்றும் தியானத்தில் ஈடுபட்டு உடலையும் மனத்தையும் உறுதியாக வைத்திருக்க வேண்டும்.

3) நல்லஞானத்தைப் புகட்டும் நூல்களைக் கற்கவேண்டும், பிறருக்கும் கற்பிக்கவேண்டும்.

4) மனத்தில் இறைபக்தி கொண்டிருக்கவேண்டும்.

5) சுயநலமின்றி செயல்புரிய வேண்டும்.

இந்த ஐந்தில் ஏதேனும் ஒன்றை உடையவனாக இருந்தாலும், அவன் இந்துவே.

கர்மா

கர்மா என்பது மிக எளிதான, அதேவேளையில் மிக நுட்பமான வகையில் நிலைபெற்றிருக்கும் பிரபஞ்ச நியதி ஆகும். சனாதன தர்மத்தின் அடிப்படை போதனைகளுள் ஒன்றுதான் 'கர்மநியதி'.

"நல்லதை செய்தால், நல்லதே நடக்கும்.
கெட்டதை செய்தால், கெட்டதே நடக்கும்"

இது கர்மாவைப் பற்றிய எளிதான விளக்கம். நம்மில் அனைவரும் இந்த விளக்கத்தை நன்கு அறிந்திருப்போம். ஆனால், கர்மாவைப் பற்றிய நுட்பமான அறிவியல் என்ன? இதை ஆங்கிலத்தில் 'The Science of Action' (செயல் அறிவியல்) என்பார்கள். இப்போது அதை நாம் அறிவோம்.

கர்மா என்றால் செயல் அல்லது வினை எனப் பொருள்படும். 'எண்ணித் துணிக கருமம்' என்றார் ஐயன் வள்ளுவர். ஒரு செயலை செய்வதற்கு முன்னர், அச்செயலின் நோக்கத்தை நன்கு ஆராய்ந்து உணரவேண்டும். ஒரு செயலை விட அதன் நோக்கமே மிக முக்கியமாகும்.

|| காரணமும் விளைவும்

காரணம் மற்றும் விளைவு ஆகிய இரண்டு விதிகளையும் அடிப்படையாகக் கொண்டு கர்மநியதி இயங்குகின்றது.

* காரணம் (ஆங். cause) என்றால் ஒரு செயலின் பின்னால் இருக்கும் காரணம் அல்லது நோக்கம்

* விளைவு (ஆங். effect) என்றால் ஒரு செயலை ஆற்றிய பின்னர் அச்செயலைப் பொறுத்து வருங்காலத்தில் ஏற்படும் விளைவுகள்

|| செயலாற்ற ஆறு விதிமுறைகள்

ஒரு செயலை செய்வதற்கு முன்னர், 'இதை நான் ஏன் செய்கிறேன்?' என்று தன்னிடம் கேட்டுக் கொள்வதன் மூலமாக ஒரு செயலின் காரணத்தை நாம் அறியலாம். அந்த காரணம் ஆறு விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். அவை:

அ) தர்மமுடைய செயல்

ஆ) பிறர் பொருளை அபகரிக்காத செயல்

இ) சுயநலமற்ற செயல்

ஈ) தனக்கும் மற்ற அப்பாவி உயிர்களுக்கும் தீமை விளைவிக்காத செயல்

உ) விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்ட செயல்

ஊ) பிறருக்கு நன்மை பயக்கும் செயல்

*விதிமுறைகள் என்பவை ஒரு நாட்டின் சட்டத் திட்டங்களைக் குறிக்கும்

இவ்வாறு ஆறு விதிமுறைகளுக்கும் உட்பட்ட செயலை காலம் தாழ்த்தாமல் மன உறுதியுடன் செய்ய வேண்டும்.

உதாரணமாக, நம் தேசத்தைப் பாதுகாக்கும் இராணுவ வீரர்கள் தீவிரவாதிகளைக் கொல்கிறார்கள். கொல்வது தீவினை என்ற பட்சத்தில் அவர்களை தீவினை சூழ்வதில்லை. 'தீயவரை அழிப்பதே வீரனுக்கு அறம்' ஆகும். நம் நாட்டு மக்களைக் காக்க வேண்டிய நன்நோக்கத்தில், சுயநலமின்றி, தியாக மனப்பான்மையுடன் நம் இராணுவ வீரர்கள் செயல்படுகின்றனர். நாட்டைக் காப்பதும் கொடியவர்களை அழிப்பதும் அவர்களின் கடமையாகும். கடமையை செய்வதால் அவர்கள் கர்ம வீரர்களாகின்றனர்.

|| மூன்று வகை கர்மா

ஒரு செயலின் விளைவுகள் பெரும்பாலும் உடனுக்குடனே விளைவதில்லை. பல பிறவிகளுக்கு பின் கூட விளையலாம். ஒருவன் பல பிறவிகளில் செய்த செயல்களின் மொத்த விளைவுகள் 'சஞ்சித கர்மா' எனப்படுகின்றன. இப்பிறவியில் புதிதாக சேர்க்கும் விளைவுகள் 'ஆகாமி கர்மா' எனப்படுகின்றன. ஒருவன் தற்போதைய பிறவியில் அனுபவிக்கும் விளைவுகள் 'பிராரப்த கர்மா' எனப்படுகின்றன.

ஒரு பழமரத்தின் விதையை விதைத்த உடனே கனி கிடைத்துவிடாது. விதை முளைத்து செடியாகி, செடி மரமாகி, மரம் பூத்து அதன்பின்னரே கனி வரும். அதுபோல ஒரு செயலை செய்தவுடன் அதற்கான விளைவு, காலம் தாழ்த்தினாலும் கண்டிப்பாக விளையும். ஒருவன் தன் வாழ்நாளில் அனுபவிக்கும் இன்பதுன்பங்களுக்கு பெரும்பாலும் அவனின் முந்தைய கருமங்களே முக்கிய காரணமாகும்.

|| செயல் சுதந்திரம்

தாவரங்கள், மிருகங்கள் போன்ற மற்ற உயிரினங்களுக்கு செயல் சுதந்திம் கிடையாது. அவை தன்னுடைய மரபணுவில் பதிவு செய்யப்பட்டிருக்கும் 'விதிக்கப்பட்ட செயல்களை' ஆற்றிவிட்டு உடலிலிருந்து விடைபெறும். இதனால் மற்ற உயிரினங்களை கர்மநியதி சீண்டுவதில்லை. ஆனால், மனிதர்களுக்கு செயல் சுதந்திரம் உள்ளது. மனிதனுக்கு தன் விருப்பப்படி செயல்பட சுதந்திரம் இருக்கின்றது. அளவற்ற அறிவுத்திறன் உடைய மனிதன் பலவிதமான செயல்களை செய்கிறான். மனிதன் தன் அறிவுக்கூர்மையைப் பயன்படுத்தி ஆக்கமுடைய செயல்களை ஆற்றவேண்டுமே தவிர அழிவை ஏற்படுத்தும் செயல்களை அல்ல. மனிதனுக்கு செயல் சுதந்திரம் இருந்தாலும் செயலின் விளைவுகளை மாற்றும் வலிமை கிடையாது. இதை தான் 'விதியை மாற்ற முடியாது' என்று சொல்வார்கள்.

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய செயலின் விளைவுகளை அனுபவித்து, அதனால் பக்குவநிலை அடையவே மீண்டும் மீண்டும் பூலோகத்தில் பிறப்பிக்கப்படுகின்றான். மனிதனுக்கு 'விதி' என சொல்லப்படும் கர்ம விளைவுகளை மாற்றிட ஆற்றல் இல்லை; ஆனால் மனிதன் ஆன்மிக ஈடேற்றம் அடைந்து ஆன்மநிலை எய்துவிட்டால் கர்ம விளைவுகளை தன் பக்குவநிலையின் சக்தியால் 'சாம்பலாக்கிவிடும்' வல்லமையை அடைவான்.

பக்தி, யோகம், தியானம், ஞானம் - ஆகிய நான்கு வழிகளைப் பின்பற்றுவதால் ஒருவன் கர்மவிளைவுகளிலிருந்து மீளலாம். எப்போதும் தவறாமல் இந்த நான்கையும் பயிற்சிப்பதே கர்மவிளைவுகளிலிருந்து மீள்வதற்கான வழியாகும்.

"ஞானம் எனும் தீயில் கர்மவிளைவுகள் எல்லாம் சாம்பலாகிவிடும்" (பகவத் கீதை)

Friday, October 21, 2016

கர்ணனை விட வலிமையானது கர்மவினை

நாம் யாருக்கேனும் தீங்கு இழைத்தால் அதற்கான பலனை பின்னாளில் நாம் அனுபவித்தே தீர வேண்டியிருக்கும். இதுதான் கர்மநியதி.

கர்ணன் வாழ்க்கையிலும் அப்படி நடந்தது, அதுவே இக்கதையாகும். முனிவர் ஒருவர் காட்டில் தியானம் செய்து கொண்டிருந்தார். அவரது ஆசிரமத்தைச் சேர்ந்த பசுவும், கன்றும் அருகே புல்லை மேய்ந்து கொண்டிருந்த நேரத்தில், கன்றின் மீது அம்பு ஒன்று பாய்ந்தது. அக்கன்று துடிதுடித்து இறந்தது.

இறக்கும் தருவாயில் அக்கன்றின் வேதனைக் கதறல் கேட்டு முனிவர் தியானம் கலைந்தது. அவர், இறந்த கன்றையும், தாய்ப்பசு கண்ணீருடன் நிற்பதையும் பார்த்தார். அம்பு எய்தி பசுவைக் கொன்றவனைத் தேடினார்.

அப்போது ஒரு வீரன் கையில் வில்லுடன் அங்கு வந்தான். அவன்தான் அம்பை எய்திருக்க வேண்டும் என முனிவர் கண்டுபிடித்தார். அவரது கோபம் அந்த வீரன் மீது சாபமாக அமைந்தது. "சிறு கன்றின் மீது அம்பு எய்தி கொன்றவனே! அதற்கான கர்மபலனை நீ அனுபவித்தே தீரவேண்டும்! உனக்கு முடிவுகாலம் வருகையில், உன் தேரில் நின்று நீ போர் புரிகையில், தேரின் சக்கரங்கள் மண்ணுக்குள் புதையும். அந்த நேரமே உனக்கு மரண நேரமாய் அமையும் என்பதை உணர்வாயாக!" என்றார்.

அந்த வீரன் தான் கர்ணன். கன்றைக் கொன்ற தன் செயலால் வருந்தினான் கர்ணன். ஆனாலும், கர்மவினையின் செயல் இது என தன்னை தேற்றிக் கொண்டான். அந்த முனிவர் கூறியபடியே பாரதப் போரில் கர்ணனின் மரணம் நிகழ்ந்தது.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் கண்டிப்பாக பலன் உண்டு. ஆகையால், நாம் செய்யும் செயல் யாரையும் பாதிக்காதபடி இருக்கவேண்டும். நன்றும் தீதும் பிறர் தர வாரா.

உலகத்திலே மிக உயரமான முருகபெருமான்

உலகிலேயே மிக உயரமான முருகப்பெருமான் திருவுருவம் மலேசியாவின் பத்துமலையில் அமைந்துள்ளது. இதன் உயரம் 42.7 மீட்டர் (140அடி).

பத்துமலையைப் பற்றிய சில தகவல்கள்

*பத்துமலை திருக்கோயில் சுண்ணாம்புக் குன்றுகளில் இயற்கையாக அமைந்த குகைகளில் அமைந்துள்ளது.
*இங்குள்ள சுண்ணாம்புக் குன்றுகள் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை.
*பத்துமலையின் சிகரத்தில் இருக்கும் முருகப் பெருமானின் சன்னிதானத்தை அடைய 272 படிகளை ஏறிச் செல்ல வேண்டும்.
*கே.தம்புசாமி எனும் செல்வந்தரால் 1891ஆம் ஆண்டு முருகப்பெருமானின் திருவருளால் இந்தப் பத்துமலைக் கோயில் எழுப்பப்பட்டது.
*அதற்கு முன்னர் 1890-இல் மதிப்பிற்குரிய கே.தம்புசாமி அவர்கள் கோலாலம்பூரில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலை எழுப்பினார்.
*1892-இல் இருந்து பத்துமலையில் தைப்பூசம் கொண்டாடப்பட்டு வருகிறது.
*1920- இல் குகைக் கோயிலுக்குச் செல்ல மரக் கட்டைகளிலான 272 படிக்கட்டுகள் கட்டப்பட்டன. குகைக் கோயில் 100 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.
*பத்துமலையின் அடிவாரத்தில் கலைக்கூட குகை, அருங்காட்சியகக் குகையென இரு குகைக்கோயில்கள் உள்ளன. இந்தக் குகை மையங்கள் 2008 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டன.
*பத்துமலையின் ஆக இடது புறத்தில் இராமாயண குகை உள்ளது. இந்த இராமாயண குகைக்குச் செல்லும் வழியில் 50 அடி உயரம் உள்ள ஓர் அனுமார் திருவுருவத்தைக் காண முடியும். 
*பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் கோவிலின் கலை ஓவியத்தை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெறச் செய்ய முயற்சி நடந்து வருகிறது. முருகப்பெருமான் திருவுருவம் ஏற்கனவே மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
*தமிழ்நாடு, திருவாரூரைச் சேர்ந்த சிற்பி ஆர்.தியாகராஜன் தலைமையில் முருகன் திருவுருவம் உருவாக்கம் கண்டது. அவருக்கு உதவியாக 14 சிற்பிகள் பணி புரிந்தனர்.
*தைப்பூசத் திருநாள் பத்துமலையில் ஏராளமான பக்தர்கள் திரள்வர். 2012ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவில் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
*குகைக் கோயிலுக்குக் கீழே இருண்ட குகை உள்ளது. மலேசியாவில் வேறு எங்கும் இல்லாத சில அரிதான விலங்குகள் இங்கு காணப்படுகின்றன.
*மலேசிய வாழ் இந்துக்களின் அடையாளச் சின்னமாக பத்துமலைத் திருத்தலம் திகழ்கின்றது.

உலகிலே மிக நீளமான காவியம் மகாபாரதம்

பாரத தேசத்தின் மகா காவியமான ‘மகாபாரதம்’ தான் உலகிலேயே மிக நீளமான மற்றும் அதிக சுலோகங்களைக் கொண்ட காவியம் ஆகும். பண்டைய கிரேக்க காவியங்களான ஒடிஸி மற்றும் இலியத் ஆகிய இரண்டு காவியங்களையும் விட மகாபாரதம் பல மடங்கு பெரியதாகும். அதேபோல இராமாயணத்தை விட நான்கு மடங்கு பெரியது மகாபாரதம்.

ஒடிஸி : 12,110 சுலோகங்கள்
இலியத் : 15,693 சுலோகங்கள்
இராமாயணம் : 24,000 சுலோகங்கள்மகாபாரதம் : 100,000 சுலோகங்கள்

சில குறிப்புகள்:

1) மகாபாரதத்தின் சுலோகங்கள் எல்லாம் இரட்டையாக அமைந்துள்ளதால், உண்மையில் மகாபாரதம் 200,000 சுலோகங்களைக் கொண்டுள்ளதாகும். 

2) இருபெரும் இதிகாசங்களில் ஒன்றுதான் மகாபாரதம். இதிகாசம் என்றால் வரலாற்று நிகழ்வு எனப் பொருள்படும்.

3) இது சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது. மகாபாரத நிகழ்வுகள் சுமார் 5000 முதல் 8000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததாகும். நிகழ்வுகளை வியாசர் கணேசருக்குச் சொல்ல கணேசர் இதனை இயற்றி அருளினார்.

4) கணேசர் அருளிய மகாபாரதம் ஆரம்பகாலத்தில் 8,800 சுலோகங்களை தான் கொண்டிருந்தது என மகாபாரதத்தின் ஆதிபர்வத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர், சில கூடுதலான நிகழ்வுகள் சேர்க்கப்பட்டு 24,000 சுலோகங்கள் ஆனது. சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்பு இது 100,000 சுலோகங்களுடம் நிறைவு பெற்றது.

5) மகாபாரதம் 18 பர்வங்களைக் கொண்டது.
ஆதி பர்வம், சபா பர்வம், வன பர்வம், விராத பர்வம், உத்யோக பர்வம், பீஷ்ம பர்வம், துரோண பர்வம், கர்ண பர்வம், ஷால்ய பர்வம், சௌப்திக பர்வம், ஸ்திரி பர்வம், சாந்தி பர்வம், அனுஷாசன பர்வம், அஷ்வமேதிக பர்வம், ஆஷ்ரமவாசிக பர்வம், மௌசால பர்வம், மகாபிரஸ்தானிக பர்வம், சுவர்கரோகன பர்வம்.

தாய்மை – இந்துதர்மம்

வலியும் இன்பமும் ஒருசேரும் ஓரிடம், ஒரு குழந்தையை ஈன்றெடுக்கும் தாயிடம். ஒரு பெண் தாய் எனும் மிக உயர்வான ஒரு ஸ்தானத்தை அடையும் போது, தெய்வத்தின் மிக முக்கிய அம்சத்தை பெறுகிறாள். அதுவே, தாய்மை எனும் அம்சம். உலக உயிர்களுக்கெல்லாம் தாய் ஆதி பராசக்தி. ஆனால் ஒவ்வொரு குழந்தைக்கும் கண்கண்ட முதல் தெய்வம், அக்குழந்தையை இவ்வுலகிற்கு தந்த தாய் தான். இதனாலே, யஜுர்வேதம்

“மாத்ரு தேவோ பவ” – தாய் தெய்வத்திற்கு ஒப்பானவள் என கூறுகின்றது. தாயிற் சிறந்த ஒரு கோயிலுமில்லை. ஒருகுழந்தைக்குத் தாயை விட உயர்வான ஒரு சொந்தமும் இல்லை. தாயும் தந்தையுமே ஒவ்வொரு பிள்ளைகளின் முதல் தெய்வம்.


மகாபாரதத்தின் ஷாந்தி பர்வத்தில் பீஷ்மர் கூறுகிறார்:

“ஒருவனுக்கு திருமணமாகி பல குழந்தைகள் இருந்தாலும், அவனுக்கு முதுமைப் பருவம் வந்து விட்டாலும் அவன் தாய்க்கு அவன் எப்போதுமே ஒரு குழந்தை தான். ஒரு தாய்க்கு தன் குழந்தையை விட மிக உயர்ந்த செல்வம் இந்த உலகில் எதுவுமே இல்லை. அவன் எப்படிபட்ட பலமுடையவனாக இருந்தாலும், தாய்க்கு அவன் எப்போதும் செல்லக் குழந்தை தான். தாயைச் சிறந்த ஓர் அடைக்கலம் உலகில் இல்லை. தாயைச் சிறந்த ஓர் அன்புள்ளம் உலகில் இல்லை. தாயை விட வலிமையான பாதுகாப்பு ஒரு குழந்தைக்கு இல்லை. ஒருவனின் ஜனனத்திற்குக் (பிறப்புக்கு) காரணமான தாய் தான் அவனுக்கு ‘ஜனனீ’.”

இராமாயணத்தில் ஸ்ரீராமர் கூறுகிறார்:

“ஜனனீ ஜன்மபூமிஷ் ச ஸ்வர்காதபி கரியஸி” – “தாயும் தாய்நாடும் சொர்க்க லோகங்களை விட மேலானது”.

தாயின் குணங்கள்

தாய் எனும் ஸ்தானம் தான் உலகிலே மிகவும் மேன்மையானதாகும். தாயிடமிருந்து தியாக உணர்வையும் தன்னலமற்ற உள்ளத்தையும் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ளலாம். தாயின் அன்புக்கு நிலையானது இவ்வுலகில் வேறெதுவும் கிடையாது. தாய் எப்போதுமே தன்னை விட தன் பிள்ளைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பாள். அதுவே அவளின் இயல்பான குணமாகும். தன் பசி, தாகம், தூக்கம், வலி எதையுமே பெரிதாக அவள் கருதுவதில்லை. மாறாக குழந்தையின் பசி, தாகம், தூக்கம், வலி அனைத்துமே அவளை வருத்தும்.

தாய்க்கு நன்றி செலுத்துவோம்

இவ்வளவு அரிய பல தியாகங்கள் செய்த தாய்க்கு நம்மால் நன்றிகடன் என்ன செய்ய முடியும்? திருவள்ளுவர் கூறுகிறார், ஒரு தாய் தன் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது அனுபவித்த இன்பத்தை விட அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகி மற்றவர் போற்றும் சிறந்தவனாக ஆகும் போதும் பலமடங்கு இன்பத்தைப் பெறுவாள். எனவே, சமுதாயத்தில் ஒரு சிறந்த மனிதனாக இருந்து தாய்க்கு நம்மால் முடிந்த மகிழ்ச்சியையும் மனதிருப்தியையும் அளிக்க வேண்டும். இதுவே ஒரு தாய்க்கு மக்கள் (பிள்ளைகள்) ஆற்றவேண்டிய புத்திர-தர்மம்.

பெண்கள் மதிப்பிற்கு உரியவர்கள்

தாய் மட்டுமல்ல, எல்லாப் பெண்களுமே மரியாதைக்கு உரியவர்கள். ஓர் ஆண் மற்றப் பெண்களை தாயாகவும், தங்கையாகவும், தன் மகளாகவும் கருத வேண்டும் என்பது ஆணின் முக்கிய தர்மமாகும். இறுதியாக,

”எங்கே பெண்களுக்கு தக்க மரியாதையும் மதிப்பும் தரப்படுகின்றதோ, அங்கே தெய்வங்கள் மகிழ்ச்சி அடைகின்றன. எங்கே பெண்களுக்கு அவமரியாதையும் அவமதிப்பும் மட்டுமே கிடைக்கின்றதோ, அங்கே எந்த நன்மையும் நிகழாமல் போகின்றன.” (மகாபாரதம் 13:45:5)

ஓம் தத் ஸத்

மனிதனின் ஆறு எதிரிகள்

அரிஷத்வர்கம் என சொல்லப்படும் மனிதனின் ஆறு எதிரிகளும், மனிதனின் மனதினுள்ளேயே மறைந்திருந்து அவனை மெல்ல மெல்ல அழிக்கின்றன. அரி என்றால் எதிரி எனவும், ஷத் என்றால் ஆறு எனவும், வர்கம் என்றால் குழு எனவும் பொருள்படும்.

ஒவ்வொன்றும் மனிதனின் வாழ்க்கையில் மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தும் இயல்புடைய குணங்களாகும்.

பக்தி நிலையைப் பொறுத்தவரை இந்த ஆறு குணங்களும் மனிதன் இறைவனின் திருவருளைப் பெற விடாமல் தடுக்கும் ‘எதிரிகள்’ என சொல்லப்படுகின்றது.

1) காமம் – தீவிர ஆசை
2) குரோதம் – கோபம்
3) லோபம் - பேராசை
4) மோகம் - மருட்சி
5) அகங்காரம் – இறுமாப்பு
6) மதஸர்யம் – பொறாமை

ஆறு எதிரிகளை அழித்திடுக

௧) காமம் என்றால் “அவா” அல்லது “ஆசை” எனப் பொருள்படும். தர்மநியதிக்கு உட்பட்ட ஆசை ஆக்கத்தை தரும். அதுவே தர்மநியதிக்கு எதிரான ஆசை அழிவையே தரும். பணம், பொருள், புகழ், பதவி போன்றவற்றின் மீது தீவிர ஆசை கொள்வது குற்றமாகும். எனவே, ஆசையை அடக்கிடுக.

௨) குரோதம் என்றால் ”கோபம்” அல்லது ”சினம்” எனப் பொருள்படும். ஆசைபட்ட ஒரு பொருளை அடைய முடியாமல் போய்விட்டால், அந்த ஆசை கோபமாக மாறும். கோப உணர்ச்சி மனத்தின் செயல்பாடுகளில் சஞ்சலங்களை ஏற்படுத்தி, வாக்கையும் செயலையும் பாதிக்கும். கோபத்தால் எழும் வாக்கும் செயலும் எப்போதும் சரியானதாக இருப்பதில்லை. எனவே, சினத்தைப் போக்கிடுக.

௩) லோபம் என்றால் “பேராசை” அல்லது “வெஃகுதல்” எனப் பொருள்படும். தேவைக்கு அதிகமான ஒன்றை அடைவதற்காக ஆசை கொள்வது பேராசை எனப்படுகின்றது. அதேபோல மற்றவருக்கு சொந்தமான ஒன்றை அடைய முயல்வது வெஃகுதல் எனப்படுகின்றது. வேண்டியது கிடைத்தால் அதைக் கொண்டு திருப்தி கொள்ள வேண்டும். அதைப் போலவே மேலும் மேலும் வேண்டும் என்று பேராசை கொள்ளக் கூடாது. ஆகவே, பேராசையைத் தவிர்த்து விடுக.

௪) மோகம் என்றால் “மருட்சி”, “பற்றுதல்” அல்லது “மயக்கம்” எனப் பொருள்படும். ஒரு பொருளின் மீது கொண்ட அளவற்ற பற்றுதலினால் அதை எப்படியாவது அடைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகின்றது. இதுவே ஒருவனை பல தீயசெயல்களிலும் ஈடுபடத் தூண்டுகின்றது. எனவே, மருட்சியை நீக்கிடுக.

௫) அகங்காரம் என்றால் “இறுமாப்பு” அல்லது “செருக்கு” எனப் பொருள்படும். பதவி, கல்வி, அறிவு, செல்வம் போன்றவற்றை ஒருவன் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக கொண்டிருக்கும் போது அவனிடம் செருக்கு ஏற்படுகின்றது. அகங்காரம் என்ற எதிரி ஒருவனின் மனத்தில் அவன் மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையைத் தூண்டுகின்றது. இதனால் அவன் சக மனிதர்களிடம் மரியாதை, கருணை போன்ற அடிப்படை நற்குணங்கள் இன்றி செயல்படுகின்றான். ஆகவே, செருக்கை ஒழித்திடுக.

௬) மத்ஸர்யம் என்றால் “பொறாமை” எனப் பொருள்படும். தன்னை விட வேறு எவனும் கல்வி, பதவி, அறிவு, செல்வம் போன்றவற்றில் உயர்ந்து விட கூடாது என்ற ஓர் எண்ணம் தான் பொறாமை ஆகின்றது. மற்றவர்களின் அறிவாற்றல், திறமைகள், செல்வம் போன்றவற்றைக் கண்டு பொறாமை கொள்பவர்கள் அவற்றை எப்படியாவது அழித்துவிட எண்ணம் கொள்வர். இத்தகைய ஓர் எண்ணம் உண்மையில் தன்னைத் தானே அழித்துக் கொள்ள விதைக்கப்பட்ட விதை என்பதை அவர்கள் அறிகிலர். எனவே, பொறாமையை அகற்றிடுக.

முடிவுரை

இறைவனின் முழுமையான திருவருளை அடையும் எண்ணம் உள்ளவர்கள், முதலில் இந்த ஆறு தீய குணங்களையும் “கழுவி” விடவேண்டும். அன்றாடம் இறைவனின் நாமத்தை ஜபம் செய்தலும், மந்திர உச்சாடனம் செய்தலும், தேவாரம் மற்றும் பிரபந்தம் பாடுதலும், பகவத் கீதையைக் கற்றலும் ஒருவனின் மனதிலிருக்கும் ஆறு எதிரிகளையும் அழித்து விடுகின்றன.

ஒரு நாட்டு தலைவனின் தர்மம் என்ன?

இன்றைய காலத்தில் தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. ஆனால் அப்பாவி மக்களிடம் இருக்கும் அறியாமை மட்டும் இன்னும் நீங்கவில்லை. மேடைகள் அமைத்து வாயினிக்க பேசுபவரெல்லாம் முதல்வராகி விடலாம் என நம்பி அவர்களுக்கு வாக்களித்து இறுதியில் ஏமாற்றம் அடைகின்றனர். யார் வேண்டுமானாலும் தலைவராகலாம் என்ற ஒரு தவறான கொள்கையை நாம் கைவிட வேண்டும். தகுதியுடைய ஒருவர் மட்டும் தான் தலைவராக வேண்டும். ஒரு நாட்டின் தலைவன் என்னென்ன தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என மகாபாரதம், பகவத் கீதை, திருக்குறள் உட்பட இதர இந்துதர்ம நூல்களில் கூறப்படுகின்றது.

சத்திரியன்

சத்திரியன் (க்‌ஷத்ரியன்) என்றால் வீரமும் உறுதியும் உடையவன் எனப் பொருள்படும். ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவனாக இருக்கவேண்டும் என தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். எந்த பிறப்பை சேர்ந்தவனாக இருந்தாலும் அவன் ஒரு சத்திரியனுக்கு உடைய பண்புகளையும் செயலாற்றும் வினைத்திட்பமும் கொண்டிருக்க வேண்டும். அரசு தர்மத்தை உணர்ந்தவனாகவும் மனதில் இறைபக்தி உடையவனாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக, மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்தின் பிரதமராக இருந்த விதுரன்.

மகாபாரதம் (சாந்தி பர்வம்)

1) மனதில் இறைபக்தியும் இறைத்தொண்டில் ஈடுபாடும் கொண்டவனாக இருக்க வேண்டும்
2) மக்களுக்கு கொடுப்பவனாக இருக்க வேண்டும், மக்களிடமிருந்து பறிப்பவனாக இருக்க கூடாது
3) தேசபக்தி மிக்கவனாகவும் தியாக மனப்பான்மை கொண்டவனாகவும் இருக்க வேண்டும்
4) தன் நாட்டு மக்களுக்காக காலம், குடும்பம், வயது, ஆசை அனைத்தையும் அர்ப்பணிப்பவனாக இருக்க வேண்டும்
5) தர்மநியதிகளையும் அரசியல் பாடங்களையும் கற்று அறிந்தவனாக இருக்க வேண்டும்
6) எந்தவொரு சமயத்திலும் மனதில் பயம் கொள்ளாதவனாக நாட்டு மக்களைக் காக்க துணிந்தவனாக இருக்க வேண்டும்
7) நாட்டைக் கொள்ளையடிப்பவர்களையும் நாட்டிற்கு கேடு விளைவிப்பவர்களையும் அழிக்க தயக்கம் கொள்ள கூடாது
8) நாட்டுக்கு ஆபத்து நேரும்போது முன்னிலையில் நின்று மக்களுக்கு உதவ வேண்டும்

இந்த எட்டு பண்புகளையும் உடைய ஒருவனே ஒரு நாட்டிற்கு தலைவனாக தகுதி உடையவன் என மகாபாரதம் கூறுகின்றது. அரசியல் பாடங்கள் என்பது இன்று ”Science of Politics” எனப்படுகின்றது. முன்பு அர்த்தசாஸ்திரம் எனும் நூல் ஒருவனுக்கு அரசியல் பாடங்களைப் போதிக்க பயன்பட்டது.

பகவத் கீதை (18:43)

1) வீரம்/துணிவு
2) சுறுசுறுப்பு
3) உறுதியுடைமை
4) தாராளகுணம்
5) தலைமைத்துவம்
6) நாட்டை வளமாக்கும் திறமை
7) அஞ்சாமை/ பின் வாங்காமை

திருக்குறள் (382-383)

1) அஞ்சாமை
2) தாராளகுணம்
3) அறிவுடைமை
4) ஊக்கமுடைமை
5) சுறுசுறுப்புடைமை
6) கல்வியுடைமை
7) துணிவுடைமை

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட ஒருவரை தலைவனாக தேர்ந்தெடுக்க வேண்டியது நம் கடமை. அத்தகைய ஒருவரால் தான் நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு, வாழ்க்கைத்தரம், கல்வி, ஒழுக்கம் ஆகியவை மேன்மை பெறும்.

அன்னபூரணியின் அன்ன நியதி

அன்னபூரணி தேவி, பார்வதி சக்தியின் ஓர் அம்சமானவள். அன்னம் என்றால் உணவு எனவும் பூரணம் என்றால் முழுமை, நிறைவு எனவும் பொருள்படும். ஈசனின் ஒருபாதியான பார்வதி, அன்னபூரணியாக இருந்து உலக உயிர்களுக்கு நிறைவான உணவை தந்தருள்கிறார்.

அன்னபுரணி எல்லா உயிர்களுக்கும் போதுமான உணவை அளிக்கிறாள். அவள் எப்போதும் தன் குழந்தைகளிடம் வேறுபாடு காட்டுவதில்லை. எல்லா குழந்தைகளுக்கும் தேவையான உணவுகளை அவள் தர தவறியதில்லை. ஆனால் அவளின் குழந்தைகளில் மூத்தவர்களான மனிதர்கள் மட்டும் மற்ற குழந்தைகளின் உணவுகளைத் தட்டிப் பறித்து விடுகின்றனர். இதனால் தான் இன்று உலகில் ஏழை மனிதர்களும் மற்ற உயிர்வாழிகளும் உணவின்றி வாடுகின்றனர்.

உலகில் உணவுக்குப் பஞ்சமில்லை; ஆனால் மனிதர்களிடம் “கொடுக்கும் மனப்பான்மை” பஞ்சமாகி விட்டதே இந்த கலியுகத்தின் கசப்பான உண்மை. உணவின்றி உயிர்கள் வாழ இயலாது. உணவு என்பது உலக உயிர்களுக்கு அடிப்படைத் தேவையாகும். ஆகையால் இந்துதர்மத்தைப் பொறுத்தவரை உணவு மதிக்கத்தக்கது. உணவை வீணடித்தல் தீவினையாக கருதப்படுகின்றது. அதேவேளை உணவை பகிர்ந்து உண்ணுதல் பெரிதளவும் போற்றப்படுகின்றது. தர்மசாஸ்திரங்களைப் புரட்டிப் பார்த்தால் உணவை பகிர்ந்து உண்ணுவது எவ்வளவு மேலாகப் போற்றப்படுகிறது என்பதை நாம் காணலாம்.

“உணவை அவமதிக்க கூடாது. உணவை வீணடிக்க கூடாது. மற்றவர்களுடன் உணவைப் பகிர்ந்து உண்ண வேண்டும். உணவு தேவைபடுபவருக்கு அது மறுக்கப்படக் கூடாது. இதுவே அன்ன நியதி” (யஜுர்வேதம், தைத்திரீய உபநிடதம் 3-7)

“பகுத்துஉண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” (குறள் 322)தானத்தில் சிறந்தது அன்ன தானம்

அன்னபூரணி தேவி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வீற்றிருக்கிறாள். அட்சய திருதியை திருநாளை அன்னபூரணியின் அவதார நன்னாளாக கடைப்பிடிக்கிறோம். இந்நன்னாளில் தேவைபடுவோருக்கு உணவு வழங்குவது மிகவும் உயர்ந்த செயலாகும். தங்கத்தையும் பணத்தாளையும் கொண்டு சென்று கோவிலில் கொட்டுவதால் அன்னபூரணி மனம் குளிரமாட்டாள். அதே பணத்தைக் கொண்டு தேவைபடுவோருக்கு ஒரு வேளை வயிறு நிறைய உணவு கொடுத்தாலும் அவள் மனம் மகிழ்ந்து அருள்புரிவாள்.

“பசித்தவருக்கு உணவு வழங்குபவனை பசி என்று சொல்லப்படும் கொடிய நோய் எந்த பிறவியிலும் வாட்டாது” என்று தர்மநூல்கள் குறிப்பிடுகின்றன.

தானங்களில் சிறந்த தானமாக அன்னதானம் அமைந்துள்ளது. அன்னதானத்தின் இன்றியமையாத இயல்பைப் பற்றி பத்ம புராணம் பகர்கின்றது. பார்வதியின் அம்சமாகிய அன்னபுரணியைத் தொழும் போது ஈஸ்வரனான சிவனையும் கருத்தில் கொண்டு வழிபட வேண்டும். “மாதா பார்வதி தேவி; பிதா தேவோ மஹேஷ்வர:” என்று ஆதிசங்கரர் குறிப்பிடுகிறார். அன்னை பார்வதி உலக உயிர்களின் அன்னை, மகேசுவரனான சிவபெருமான் உலக உயிர்களின் தந்தை என்பதே இதன் பொருள்.

உணவு உட்கொள்ளும் முன் பிரார்த்தனை அவசியம்

ஒவ்வொரு நாளும் நாம் உட்கொள்ளும் உணவு அன்னபூரணி தேவியின் திருவருளாலே நமக்கு கிடைத்தது. அதற்கு நாம் மறவாமல் அவளுக்கு நன்றி சமர்பிக்க வேண்டும். உலகவாழ்க்கைக்கு அன்னையும் தந்தையும் ஆகிய பார்வதி சிவனுக்கு மனமுருகி பக்தியும் நன்றியும் சமர்பிக்கும் வகையில் ஆதிசங்கராச்சாரியர் இயற்றிய அன்னபூரணி ஸ்தோத்திரம் திகழ்கின்றது. அந்த ஸ்தோத்திரத்தின் ஒரு ஸ்லோகம் உணவு உட்கொள்வதற்கு முன்னர் செப்பிக்கவேண்டிய முக்கிய மந்திரமாக அமைந்துள்ளது.

“ஓம் அன்னபூர்ணே சதாபூர்ணே
ஷங்கர பிராண வல்லபே
ஞான வைராக்ய சித்யார்த்தம்
பிக்‌ஷாம் தேஹி ச பார்வதி”

பொருள் - பிரணவ மந்திரம். அன்னபூரணி தேவியே, எப்போதும் நிறைவானவளே. சங்கரனாகிய சிவபெருமானுக்கு உயிரானவளே. எங்களுக்கு (எல்லா மனிதர்களுக்கும்) ஆன்மிக அறிவாற்றல், மனத்தெளிவு, நற்பேறு, ஆன்மிக ஈடேற்றம் ஆகியவற்றை பிச்சையாக தந்தருள்வாய் பார்வதி தாயே.

கண்களை மூடிக் கொண்டு, “அன்னபூரணி தாயே. இன்று உன் திருவருளால் எனக்கு உணவு கிடைத்துள்ளது. இதுபோல எல்லா உயிர்களுக்கும் நிறைவாக உணவு கிடைக்க வேண்டும். சிவன் சக்தியின் பிள்ளைகளாகிய எங்களை நீ எப்போதும் எந்த குறையும் இல்லாமல் காத்தருள்வாயாக” என்றும் பிரார்த்தனை செய்யலாம்.

அன்ன நியதி (உண்ணுதல் நெறிகள்):

1) உணவை வீணாக்க கூடாது - பசித்த போது தான் உணவு உட்கொள்ள வேண்டும். எனவே போதுமான அளவு உணவை தட்டில் போட்டு உட்கொள்ள வேண்டும். இன்னும் பசித்தால் பிறகு சேர்த்துக் கொள்ளலாம்.

2) உணவை பகிர்ந்து உண்ண வேண்டும் - நமக்கு கிடைத்த உணவை நம்முடைய நண்பர்களோடும் சுற்றத்தாரோடும் பகிர்ந்து உண்ணலாம். இது நமக்கிடையே உள்ள ஒரு நல்ல உறவை மேலும் வலுவாக்கும். மற்ற வேளைகளில் நாம் தயாரித்த உணவை அண்டை வீட்டுக்காரர்கள் போன்றவர்களுக்கு கொடுக்கலாம்.

3) அன்போடு வழங்கப்பட்ட உணவை அலட்சியப்படுத்தக் கூடாது – ஒருவர் அன்போடு நமக்கு கொடுக்கும் உணவை நாம் ஏற்றுக் கொண்டு அவருக்கு நன்றி கூறவேண்டும். பிறகு அந்த உணவை இல்லத்தாரோடு பகிர்ந்து உண்ணவேண்டும். இவர் வேண்டாதவர், இவர் கொடுத்த உணவை உண்டால் ‘தீட்டாகிவிடும்’ என்று அந்த உணவை அலட்சியப்படுத்துவது மிகப்பெரிய தீவினை.

4) ஆரோக்கியமற்ற உணவை உண்ண வேண்டாம் – ஆரோக்கியமற்ற உணவை நாமும் உண்ணக் கூடாது மற்றவர்களுக்கும் கொடுக்க கூடாது. உணவை வீணாக்க கூடாது என்ற பட்சத்தில் ஆரோக்கியமற்ற உணவை நாம் உண்ணுதல் நம் உடலைப் பாதிக்கும். உடலை பாதிக்கும் இயல்புடையது ‘அன்னம்’ அல்ல. உடலுக்கு ஊட்டத்தை அளிப்பதே அன்னம் ஆகும். எனவே, அதை நாம் தூக்கிவீசுவதில் எந்தவொரு பிழையும் இல்லை.

5) புலால் உணவுகளைத் தவிர்க்க அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும் – புலால் என்றால் இறைச்சி எனப் பொருள்படும். இறைச்சி என்பது யாதெனில் அது பிறிதொரு உயிரினத்தின் சதை ஆகும். மற்ற உயிரினத்தின் உடலை உண்பதால் அதன் உள்ளுணர்வுகளும் நம் உணர்வுகளில் கலக்கின்றன. இது மனிதர்களிடம் இருக்கும் தெய்வீக குணங்களை முடக்கி மெல்ல மெல்ல மிருக குணங்களை உருவாக்கும். கட்டுப்பாடில்லாத புலால் உணவு நாளடைவில் பெரிய அளவிலான நோய்களை ஏற்படுத்தி மனிதனைக் கொல்கின்றன. மனரீதியிலும் உடல்ரீதியிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் புலால் உணவுகளை குறைத்துக் கொள்வது ஆரோக்கியமாகும். ஆன்மீக வாழ்வில் புலால் உணவுகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆன்மீகப் பயிற்சிக்கு புலால் மறுத்தல் மிக முக்கியமான ஒழுக்கநெறியாகும். மற்றபடி இந்துக்களாகிய நாம் புலால் உணவுகளை குறைத்துக் கொண்டு தாவர உணவுகளை மிகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். சிலருக்கு புலாலை முழுவதுமாக மறுக்க அடிப்படையான பயிற்சி தேவைபடும். அதனால் தான் நம் முன்னோர்கள் வெள்ளிவிரதம், புரட்டாசிவிரதம் என அறிமுகப்படுத்தினர். ஆகவே முடிந்தவரை சில முக்கிய நாட்களில் விரதமிருந்து புலால் மறுத்தலைக் கடைப்பிடியுங்கள்.

ஓம்

சப்தபதி (ஏழு வாக்குறுதிகள்)

திருமணத்தின் போது அவரவரின் மரபு படி நிறைய சடங்குகள் அமைந்திருந்தாலும், சனாதன தர்மத்தின் படி ஒருசில பொதுவான சடங்குகள் அமைந்துள்ளன. அதிலொன்றுதான் சப்தபதி எனும் சடங்கு ஆகும். இந்த சடங்கில் கணவனும் மனைவியும் கைக்கோர்த்து அக்கினி சாட்சியாக “ஏழு அடிகள்” வலம் வருவர். திருமண வைபவத்தில் அக்கினி என்பது ஜோதிவடிவான பரம்பொருளைக் குறிக்கின்றது. ஒவ்வொரு திருமணத்திற்கும் இறைவனே சாட்சியாக அமைந்துள்ளார். எனவே, இந்த ஏழு வாக்குறுதிகளையும் கடைப்பிடிக்க வேண்டியது கணவன் மனைவியின் தர்மம் ஆகும்.

1) கணவனும் மனைவியும் எப்போதும் தங்கள் வாழ்க்கையில் சுக துக்கங்களையும் குடும்ப சுமையையும் சரிசமமாக பகிர்ந்து கொள்ளவேண்டும்.

2) இருவரும் ஒரே மனதாக இணைந்திருந்து, இருவருக்கும் ஒப்புதலுடைய செயல்களையே செய்யவேண்டும்.

3) இருவரும் தங்களின் குடும்பத்தினரை மதித்து நடக்கவேண்டும்.

4) இருவரும் ஒன்றாக இருந்து அவர்களின் குழந்தைகளை வளர்த்து, குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து, நிறைவான கல்வியை அளிக்கவேண்டும்.

5) இருவரும் குடும்ப பொருளாதாரத்தை சரிசமமாக கவனித்துக் கொள்ள வேண்டும்.

6) இருவரும் பதி-பதினி தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பதி என்றால் தலைவன், பதினி என்றால் தலைவி. ஒரு குடும்பத்தின் தலைவன் கணவன், தலைவி மனைவி. கணவன் மனைவியை தவிர மற்ற பெண்களிடமும், மனைவி கணவனைத் தவிர மற்ற ஆண்களிடமும் தகாத உறவு வைத்துக் கொள்ள கூடாது. இதுவே பதி-பதினி தர்மம் ஆகும்.

7) கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மனதாலும், வாக்காலும், செயலாலும் நோகடிக்க கூடாது. ஒருவருக்கொருவர் அன்பு, இனிமை, அரவணைப்பு ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

மூவகை தவம்

தவம் என்றால் ஆன்மீகப் பயிற்சி எனப் பொருள்படும். ஆழ்ந்த தியானம் மற்றும் முறையான ஒழுக்கநெறிகள் ஆகியவை “தவம்” என்று கூறப்படுகின்றன. தவம் என்பதற்கு நடைமுறையில் ‘விரதம்’ அல்லது ’நோன்பு’ எனவும் பொருள் கொள்ளலாம். தவம் மேற்கொள்பவர் “தபஸி” (ஆண்) அல்லது “தபஸ்வினி” (பெண்) என்றழைக்கப்படுவர்.

பெரும்பாலும் உடலை வருத்திக் கொள்வது தான் ‘தவம்’ என்று தவறாக கருதப்படுகின்றது. ஆயினும் இந்துதர்ம நூல்களில் உடலை வருத்தி செய்யப்படும் தவங்கள் ‘தவிர்க்கப்படவேண்டியவை’ என அறிவுரை செய்யப்படுகின்றது.

பகவத் கீதை உட்பட இதர இந்துதர்ம நூல்கள் தவமுறைகளை மூன்று வகையாகப் பகுத்துக் காட்டுகின்றன.

தூய நிலையிலான தவமுறை (சத்வம்)
ஆசை அல்லது தற்பெருமை நிலையிலான தவமுறை (ரஜஸ்)
அறியாமை மற்றும் மூட நிலையிலான தவமுறை (தமஸ்)

இவற்றுள் சத்வ தவமுறை தான் ஊக்குவிக்கப்படுகின்றது. சத்வ தவமுறையைக் கடைப்பிடிப்பவர் இறைவனின் அருளைப் பெறுவர். சத்வ தவமுறையை உடல், வாக்கு, மனம் என மூன்றாகப் பிரிக்கலாம். அவை:

உடல்

1) தினமும் தவறாமல் தெய்வங்களை வழிபட வேண்டும்.
2) பெற்றோர், குரு மற்றும் சான்றோர்களை மதித்து போற்றவேண்டும்.
3) உடல் தூய்மையைப் பேண வேண்டும்.
4) எளிமையான வாழ்க்கையை வாழ பழகிக் கொள்ளவேண்டும்.
5) தன்னடக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
6) மற்றவர்களுக்குக் கேடு விளைவிக்கும் செயல்களைத் தவிர்க்க வேண்டும்.

வாக்கு

1) பொய்யானவற்றை தவிர்த்து உண்மையைப் பேச வேண்டும்.
2) கடுமையான சொற்களைத் தவிர்த்து இனிமையாகப் பேச வேண்டும்.
3) மற்றவர்களுக்கு நன்மை விளைவிக்கும் விஷயங்களைப் பேச வேண்டும்.
4) நல்லவர்களை நோகடிக்காமல் பேச வேண்டும்.
5) வேதங்கள் கூறும் உண்மைகளை மற்றவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.

மனம்

1) இருப்பதைக் கொண்டு மனதில் திருப்தி கொண்டிருக்க வேண்டும்.
2) மனத்தைக் கட்டுப்படுத்த பழக வேண்டும்.
3) தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்த்து மனத்தில் மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
4) எண்ணங்கள் தூய்மையானதாக இருக்க வேண்டும்.

இறைவனின் அருளைப் பெறுவதற்கு இதுபோல எத்தனையோ எளிதான வழிகள் நம் இந்துதர்மத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன. எனவே, தனக்கும் மற்றவருக்கும் துன்பத்தை தரும் கடுமையான மற்றும் தவறான வழிகளில் செல்லாமல் மேற்கூறிய தவமுறைகளைக் கடைப்பிடிப்பது சாலச் சிறந்தது.

இந்துக்கள் கடைப்பிடிக்கவேண்டிய நன்னெறிப் பண்புகள்

இந்துக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறிப் பண்புகளை இந்து தர்ம நூல்கள் இயமம் மற்றும் நியமம் என்று குறிப்பிடுகின்றன. நன்னெறி பண்புமிக்க ஒரு மனிதனை உருவாக்கவும், ஆன்மிக வளர்ச்சியின் ஆரம்பப்படியாகவும் இவை அமைந்துள்ளன. ரிக்வேதம் முதற்கொண்டு ஐம்பதிற்கும் அதிகமான இந்துதர்ம நூல்கள் இயம-நியமங்களை விளக்குகின்றன. எனவே, இந்துதர்மத்தின் மிக முக்கியமான போதனைகளில் ஒன்றாக இயம-நியமம் விளங்குகின்றது.
இயமம் – செய்யக்கூடாதவை (தவிர்க்க வேண்டியவைகள்)
நியமம் – செய்யக்கூடியவை (கடைப்பிடிக்க வேண்டியவைகள்)

இயமம்

பதஞ்சலி யோகசூத்திரம் (2:30) குறிப்பிடும் ஐந்து இயமங்கள்
அஹிம்சை – கொல்லாமை/இன்னா செய்யாமை
சத்தியம் – வாய்மை/பொய்யாமை
அஸ்தேயம் – கள்ளாமை/திருடாமை
பிரம்மச்சரியம் - அடக்கமுடைமை
அபரிகிரஹம் – வெஃகாமை/பிறர்பொருளை அபகரிக்காமை

நியமம்

பதஞ்சலி யோகசூத்திரம் (2:32) குறிப்பிடும் ஐந்து நியமங்கள்

ஷௌச்சம் - தூய்மை
சந்தோஷம் – மனநிறைவு
தபஸ் – தவம்
ஸ்வாத்யாயம் – நூல்கற்றல்
ஈஷ்வரபிரணிதானம் – ஈஸ்வரனிடம் சரண்புகுதல்

செய்யக் கூடாத ஐந்து

அப்பாவி உயிர்களை துன்புறுத்தல்/கொல்லுதல்
பொய் பேசுதல்
திருடுதல்
அடக்கமின்றி நடத்தல்
மற்றவர் பொருளை அபகரித்தல்

செய்ய வேண்டிய ஐந்து

தூய்மையைப் பேணுதல்
மனதிருப்தி கொண்டிருத்தல்
விரதம், தவம் மேற்கொள்தல்
நல்ல நூல்களைக் கற்றல்
இறைவனிடம் சரணடைதல்

திருமூலர்

திருமூலர் பத்து இயமங்களையும், பத்து நியமங்களையும் குறிப்பிடுகிறார்.

இயமங்கள் : கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, அடக்கமுடைமை, வெஃகாமை, பொறையுடைமை, உறுதியுடைமை, அருளுடைமை, நேர்மை, மிதமான உணவுமுறை. 

நியமங்கள் : தவம், நாமஜெபம், மனநிறைவு, இறைநம்பிக்கை, தானம், விரதம், நூல்கற்றல், தியாகம், சிவபூஜை, பேரொளி தரிசனம்.

ஐந்து நிலை தூய்மை

தூய்மை என்பது சுத்தம் அல்லது ஷௌச்சம் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இந்துதர்மத்தைப் பொறுத்தவரை தூய்மை என்பது ஐந்து நிலைகளில் அமைந்துள்ளது.

அவை:

1) சுற்றுச்சூழல்
2) உடல்
3) மனம்
4) செயல்/வினை
5) வாக்கு

சுற்றுச்சூழல் தூய்மை

ஒருவர் வசிக்கும் பகுதி தான் சுற்றுச்சூழல் எனப்படுகின்றது. இந்துதர்மத்தைப் பொறுத்தவரை ஒருவனின் சுற்றுச்சூழல் சுத்தமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். தூய்மையான சுற்றுச்சூழல் தான் ஒருவனுக்கு மனநிம்மதியையும் ஆரோக்கியத்தையும் அளிக்கின்றது. ஒருவன் தன்னுடைய வீடு, தெரு, வசிப்பிடம், ஊர் போன்றவற்றை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். இந்துதர்மத்தைப் பொறுத்தவரை உலகம் உயிருடையது. இந்த உலகத்தின் ஒவ்வொரு அங்கமும் உயிரோட்டம் உடையது. இயற்கையால் வாய்திறந்து பேசமுடியாவிட்டாலும் அதற்கு உயிர் உள்ளது. உயிரோட்டம் இருப்பதால் தான் மனிதர்கள் உட்பட இதர ஜீவராசிகளும் இந்த புவியில் நிலைபெற்று வாழ்கின்றனர். ஆதலால் இந்த பூமியை தூய்மையாக பராமரிக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.

கோயில் வளாகத்தை சுத்தபடுத்தல்

கோயில், குளங்கள் மற்றும் இதர பொது இடங்களை சுத்தம் செய்யும் நற்பணியில் ஈடுபடுவதால் ஒருவனுக்கு நிறைய நல்வினைகள் வந்து சேர்கின்றன. கோயிலை சுத்தபடுத்துவதால் அங்கு வரும் பக்தர்கள் அனைவரும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் தங்கள் வழிபாட்டை மேற்கொள்வார்கள். இதனால் கோயிலை சுத்தபடுத்திய செயல் அந்த பக்தர்கள் அனைவருக்கும் செய்த சேவையாக அமையும். ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்பது பொன்மொழி.

ஒவ்வொரு மனிதனும் குப்பைகளை முறையான வழியில் அப்புறப்படுத்தவேண்டும். ஆற்றில் வீசுதல், தெருவில் வீசுதல், கண்ட இடங்களில் வீசுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடுவதால் அவை முறையான வழியில் நீக்கப்படுகின்றன. இதனால் நாம் இயற்கைக்கு எந்தவொரு இம்சையும் விளைவிப்பதில்லை. இயற்கைக்கு இம்சை விளைவித்தல் இந்துதர்மம் குறிப்பிடும் மிக கொடிய தீவினைகளில் ஒன்றாகும். இயற்கைக்கு நாம் இம்சை விளைவித்தால் அதன் விளைவு மோசமாக இருக்கும். எனவே நம்முடைய சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.

உடல் தூய்மை

உடல் தூய்மை எனப்படுவது பொருள் உடலை சுத்தமாக பராமரித்தல் எனப் பொருள்படும். தினசரி தவறாமல் உடலைத் தேய்த்து குளித்தல், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்தல், போதுமான யோகாசன பயிற்சி மேற்கொள்தல் ஆகியவை உடலைத் தூய்மைப்படுத்தும் வழிகளாகும். ஆரோக்கியமான உணவு என்பது ஒருவனுக்கு உடல்நலம், வலிமை, திருப்தி மற்றும் மகிழ்ச்சியை தரக்கூடிய உணவே ஆகும். (பகவத் கீதை) யோகாசனப் பயிற்சியால் உடலிலிருக்கும் தேவையற்ற கொழுப்புகளும் மாசுக்களும் நீங்கி புத்துணர்ச்சி அடைகிறோம்.

காய்கறிகளும் பழங்களும்

மதுப்பழக்கம், புகைப்பழக்கம், உடலை சீரழிக்கும் மற்றப் பழக்கங்கள் யாவும் தவிர்க்கப்படவேண்டியவை. எப்படியும் இறக்க தான் போகிறோம் என்ற எண்ணத்தில் உடலை முறையாக பராமரிக்காமல் இருப்பது தவறாகும். எப்படியும் இறக்க தான் போகிறோம் என்பதை விட எப்படி இறக்கப் போகிறோம் என்பது தான் முக்கியம். நோய்வாய்ப்பட்டு, துன்பப்பட்டு, மோசமான நிலையில் இறக்க யாரும் விரும்புவதில்லை. வாழ்க்கையில் சாதிக்கவேண்டியது ஏராளமானவை உள்ளன. அதையெல்லாம் நிறைவேற்ற ஆரோக்கியமான உடல் தேவையாகும். சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது; எனவே உடலுக்கு கேட்டை விளைவிக்கு தீயப் பழக்கங்களை எல்லாம் நீக்கிவிட்டு ஆரோக்கியமான மற்றும் தூய்மையான ஒரு வாழ்க்கைநெறியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

மனத் தூய்மை

பொறாமை, பேராசை, கோபம், பயம், பழியுணர்ச்சி, பகைமை, வெறுப்பு போன்றவை மனத்தில் இருக்கும் அழுக்குகளாகும். இவற்றை நீக்கிவிட்டு அன்பு, கருணை, அறிவு, பக்தி, சமநோக்கு, பிறர்பொருள் மீது ஆசை கொள்ளாமை, துணிச்சல் போன்ற நற்குணங்களை மனத்தில் விதைக்க வேண்டும்.

“உடல் நீரால் தூய்மை அடைகின்றது. மனம் தியானத்தால் தூய்மை அடைகின்றது”

மனத்தை சுத்தபடுத்தும் தியானப் பயிற்சி

என தர்மநூல்கள் தெரிவிக்கின்றன. முறையான தியானத்தால் ஒருவனின் மனம் தூயநிலை அடைகின்றது. பல நாட்கள் குளிக்காமல் இருப்பதால் எத்தகைய விளைவுகள் நேரிடுமோ அதைவிட மோசமான விளைவுகள் ஒருவன் தன் மனத்தை தூய்மைப்படுத்தாதலால் நேரிடும். கைகளில் அழுக்குப் பட்டுவிட்டால் எப்படி நீரைக் கொண்டு சுத்தம் செய்கிறோமோ அவ்வாறு மனத்தில் தீய எண்ணங்கள் எழும்போதெல்லாம் “நமசிவாய”, “நாராயணாய” என சொல்லி நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும்.

“மனத்தைக் கட்டுப்படுத்தியவனுக்கு மனம் சிறந்த நண்பன், கட்டுப்படுத்த தெரியாதவனுக்கு மனம் தான் கொடிய பகைவன்”
என பகவத் கீதை கூறுகின்றது.

வினைத் தூய்மை

வினைத் தூய்மை எனப்படுவது செய்யும் செயல்களில் இருக்கவேண்டிய தூய்மையைக் குறிக்கும். மற்றவர் பொருள்களை அபகரிக்க கூடாது, அப்பாவி உயிர்களுக்கு துன்பம் விளைவிக்க கூடாது, நேர்மையாக இருக்க வேண்டும், கடமையிலிருந்து பின்வாங்க கூடாது போன்றவை வினைத் தூய்மை ஆகும்.

ஒருவரின் தொழில் கழிவறையைக் கழுவுவதாக இருந்தாலும் அதில் அவர் நேர்மையாகவும் நியாயமாகவும் செயல்பட்டால் அதுதான் தூய்மையானது எனப்படுகின்றது. அதேவேளை ஒருவர் காவல்துறை அதிகாரியாக வேலை செய்தாலும் அவர் நேர்மையில்லாமலும் கடமையை நிறைவேற்றாமலும் செயல்பட்டால் அது தூய்மையற்றதாகும். தூய்மையற்ற செயல்களை செய்வதால் ஒருவன் பின்னாளில் அதை எண்ணி வருந்தும்படியான நிலைக்கு ஆளாகுவான் என கூறப்படுகின்றது. செயல்கள் தான் ஒருவனுடைய உண்மையான சொத்து என்ற பட்சத்தில், வினைத்தூய்மை இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது.

வாக்கு தூய்மை

வாக்கு தூய்மை என்பதை தமிழில் ‘வாய்மை’ என்பர். இதுவே ‘சத்தியம்’ எனவும் சொல்லப்படுகின்றது. எது நன்மையானதோ, எது இனிமையானதோ, எது நல்லவர்களுக்கு துன்பம் தராததோ, எது உண்மையானதோ அதுதான் ‘சத்தியம்’ எனப்படுகின்றது. ஒருவன் இனிமையான சொற்களை உபயோகித்துப் பேசவேண்டும். ஒருவருடன் பேசும்போது கசப்பான வார்த்தைகளை முற்றிலும் தவிர்த்து விடவேண்டும்.

மேலும் மற்றவர்களுக்கு நன்மையைத் தரக் கூடியதை பேசவேண்டும். தன்னுடைய சுயலாபத்திற்காக யாருக்கும் எந்தவொரு நன்மையும் விளைவிக்காத ஒன்றைப் பேசுவது பயனற்ற செயலாகும். இவ்வாறு பலர் முன்னிலையில் பயனற்ற சொற்களைப் பேசுபவர் எல்லோராலும் இகழப்படுவார் என வள்ளுவர் கூறுகிறார்.


“ஒருவன் நல்ல செயல்களை செய்வதால் அவன் மட்டுமே நன்மையை அடைகின்றான்; ஆனால் நல்ல விஷயங்களை மற்றவர்களுக்குக் கூறுவதால் அவற்றைக் கடைப்பிடிக்கும் மற்றவர்களும் நன்மையை அடைகின்றனர்.”
என சாணக்கியர் தம் அர்த்தசாஸ்திர நூலில் கூறுகின்றார்.

நன்மைகள் செய்வோருக்கு துன்பம் விளைவிக்கும் வார்த்தைகளைப் பேசக் கூடாது. ஒருவன் நெருப்பினால் சுட்ட காயம் கூட ஆறலாம் ஆனால் சொல்லினால் சுட்ட காயம் ஆறாது என்பர்.

முடிவுரை

இந்துக்கள் சுற்றுச்சூழல், உடல், மனம், செயல், வாக்கு ஆகிய ஐந்தையும் எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால், தூயநிலை தான் ஒருவனை இறைநிலைக்கு கொண்டு செல்கின்றது

கணவன் மனைவி உறவு

திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம் மட்டுமல்ல. இரு மனம் ஒன்றாகி ஒரு மனமாக கலப்பதே திருமணம் எனப்படுகின்றது. ஓரிருநாள் சடங்கில் முடிந்து போவது திருமணம் அல்ல. வாழ்க்கை முழுவதும் ‘திரு’வாளனும் ‘திரு’மதியும் சில நெறிகளைக் கடைப்பிடித்து வாழ வேண்டும். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை தான், தெய்வீக நறுமணம் வீசும் திருமண வாழ்க்கையாக அமையும்.

திருமணம்

ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்க்கையின் முதல் பருவமான பிரம்மச்சரிய பருவத்தில் ஆற்றவேண்டிய கடமைகளையும் கற்கவேண்டிய பாடங்களையும் சிறப்பாக முடித்து விட்டு, இரண்டாவது பருவமான கிரகஸ்த (குடும்பவாழ்க்கை) பருவத்தில் அடியெடுத்து வைப்பதே திருமணம் ஆகும். திருமணத்தின் போது ஒவ்வொருவரின் மரபுவழியிலும் நிறைய சடங்குகள் இருந்தாலும், சனாதன தர்மத்தைப் பொறுத்தவரை சப்தபதி எனப்படும் சடங்கு மிக முக்கியமாகும். இந்த சடங்கில், கணவனும் மனைவியும் அக்கினி சாட்சியாக கைக்கோர்த்து ஏழு அடிகள் அல்லது ஏழு சுற்றுப்பாதைகள் வலம் வருவர். இந்த ஏழு அடிகளும் ஏழு வாக்குறுதிகளைக் குறிக்கின்றன.

அவை:

1) கணவனும் மனைவியும் எப்போதும் சுகதுக்கங்களையும் குடும்ப சுமையையும் பகிர்ந்து கொள்ளவேண்டும்.

2) கணவனும் மனைவியும் ஒரே மனதாக இணைந்திருக்கவேண்டும், மனைவிக்கு விருப்பமில்லாததை கணவனும், கணவனுக்கு விருப்பமில்லாததை மனைவியும் விட்டுவிடவேண்டும்.

3) கணவன் மனைவியின் குடும்பத்தினரையும், மனைவி கணவனின் குடும்பத்தினரையும் மதிக்க வேண்டும்.

4) கணவனும் மனைவியும் ஒன்றாக இருந்து தம் மக்களை வளர்த்து, குழந்தைகளுக்கு நிறைவான கல்வியை தரவேண்டும்.

5) கணவனும் மனைவியும் குடும்ப பொருளாதாரத்தை சரிசமமாக இருந்து பேணவேண்டும்.

6) மனைவியைத் தவிர மற்ற பெண்ணிடமும், கணவனைத் தவிர மற்ற ஆணிடமும் தகாத உறவு வைத்துக் கொள்ளக் கூடாது.

7) கணவன் தன் மனைவியை (வாக்காலும், மனத்தாலும், செயலாலும்) நோகடிக்க கூடாது, மனைவியும் தன் கணவனை (வாக்காலும், மனத்தாலும், செயலாலும்) நோகடிக்க கூடாது.

சப்தபதி - ஏழு வாக்குறுதிகள்
இந்த ஏழு வாக்குறுதிகளையும் ஒவ்வொரு கணவனும் மனைவியும் கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும்.

குடும்பவாழ்க்கை

ஒரு குடும்பவாழ்க்கையில் கணவனும் மனைவியும் உடல்ரீதியில் மட்டுமல்லாமல் மனத்தாலும், செயலாலும், வாக்காலும் ஒன்றாகியவர்கள் ஆவர். கணவன் மனைவியைத் துன்புறுத்துவதும், மனைவி கணவனை துன்புறுத்துவதும் உண்மையில் தம்மை தாமே துன்புறுத்திக் கொள்வதற்கு ஒப்பாகும். ஒரு குடும்பவாழ்க்கையில் கணவனும் மனைவியும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சில முக்கிய உறவுகளைப் பிரதிபலிக்கின்றனர்.

உதாரணமாக:

1) தோழன் தோழி = கணவனும் மனைவியும் எப்போதும் எந்தவொரு ஒளிவும் மறைவும் இல்லாமல், தங்களின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு வாழ வேண்டும்.

2) மறுமகன் மறுமகள் = மனைவி என்பவள் தன் கணவனின் பெற்றோருக்கு இன்னொரு மகளாகவும், கணவன் என்பவன் தன் மனைவியின் பெற்றோருக்கு இன்னொரு மகனாகவும் இருந்து அவர்களை நல்ல முறையில் அன்புடனும் அரவணைப்புடனும் பாதுகாக்க வேண்டும்.

3) குரு சிஷ்ய = குடும்பவாழ்க்கையை துவங்குவதற்கு முன்னரே, பிரம்மச்சரிய பருவத்தில் குடும்பவாழ்க்கையைப் பற்றிய போதுமான அறிவைப் பெற்றிருக்க வேண்டும். எனவே, கணவனும் மனைவியும் தம் துணையார் வழிதவறி போனால் அவருக்கு நல்லறிவைப் புகட்டி மீண்டும் நல்ல பாதைக்குத் திருப்பி கொண்டு வர வேண்டும். ’கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என்று வாழாமல், கணவன் தப்பு செய்தால் மனைவி அவனைக் கண்டிக்க வேண்டும்.

4) தலைவன் தலைவி = ஒரு குடும்பத்தைப் பொருளாதார அளவில் உயர்த்த கணவனும் மனைவியும் சேர்ந்தே பாடுபட வேண்டும். எப்படி ஒரு நாட்டை அரசனும் அரசியும் நல்ல முறையில் வழிநடத்துவார்களோ, அதுபோல ஒரு குடும்பத்தை கணவனும் மனைவியும் வழிநடத்த வேண்டும். நம்முடைய பாரம்பரியத்தில், ஒரு குடும்பம் ஒரு நாட்டின் பிரதிபலிப்பாக திகழ்கின்றது. கணவனும் மனைவியும் அந்த குடும்பத்தின் அரசனாகவும், அரசியாகவும் அமைந்துள்ளனர். அவர்களின் பிள்ளைகளே அக்குடும்பத்தின் ‘மக்கள்’ ஆவர். குடும்பத்தில் உள்ளவர்களிடம் சகிப்புத்தன்மையுடனும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் வாழ்ந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

5) தாய் சேய் = குடும்பவாழ்க்கையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அரவணிப்புடனும் அன்புடனும் வாழவேண்டும். கணவனுக்கு முடியாத நிலையில் மனைவி அவனுக்கு பணிவிடை செய்தலும், மனைவிக்கு முடியாத நிலையில் கணவன் அவளுக்குப் பணிவிடை செய்தலும் வேண்டும். இதனாலே திருமண சடங்கின் போது, புரோகிதர் சொல்லித்தர கணவனும் மனைவியும் சேர்ந்து மனதார உச்சரிக்கும் மந்திரத்தில் “சுபஹே த்வம் ஜீவ சரத சதம்” என காலம்வரை உடனிருந்து (தன் துணையை) கவனித்துக் கொள்வேன் என வாக்குறுதி எடுத்துக் கொள்கின்றனர்.

6) சகோதரன் சகோதரி = சண்டைகளும் மனசஞ்சலங்களும் இல்லா குடும்பவாழ்க்கை கிடையாது. எவ்வளவு சண்டைகள் போட்டாலும், எப்போதும் தன் துணையை விட்டுக் கொடுக்க கூடாது. கணவன் மனைவி ஆகிய இருவரில் யாராவது ஒருவர் மனமிறங்கி வந்து சமாதானம் பேசவேண்டும். இருவரும் ஒத்த மனத்துடன் கலந்துரையாடி பிரச்சனையைக் கலைந்து இனிதான ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

7) தாய் தந்தை = குடும்பவாழ்க்கையின் மிக முக்கிய நிலை தாய் தந்தை உறவு ஆகும். கணவனும் மனைவியும் குழந்தையை ஈன்றெடுத்தப் பின்னர் (அல்லது தத்தெடுத்தப் பின்னர்) அவர்கள் தாய் தந்தை என்ற நிலையை அடைகின்றனர். அந்த குழந்தைக்கு தேவையானவற்றையும் முழுமையான அறிவையும் அளிக்கவேண்டிய கடமையில் அவர்கள் ஈடுபடுவர். தம் மக்களைச் சான்றோர் மத்தியில் மதிக்க தக்கவர்களாக ஆக்கவேண்டியது பெற்றோர்களின் மிக முக்கிய கடமையாகும்.

8) மாமனார் மாமியார் = ஒரு தம்பதியரின் மக்களின் துணை அவர்களுக்கு மறுமக்கள் ஆகின்றனர். இதனாலே நம் பாரம்பரியத்தில், மகளின் கணவன் மறுமகன் என்றும் மகனின் மனைவி மறுமகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஒருவர் தன் மகன் அல்லது மகளிடம் எவ்வளவு அன்பும் அரவணைப்பும் செலுத்துவாரோ அதேபோல தன் மறுமக்களிடமும் செலுத்த வேண்டும்.

இதுபோல குடும்பவாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய நெறிகள் உள்ளன. இவை ஒரு சிறப்பான குடும்பவாழ்க்கையைப் பேண ஒரு வழிகாட்டல்களாக அமைக்கப்பட்டவை ஆகும். புராண கதைகளிலும் நம் முன்னோர்கள், தெய்வங்களை மையமாகக் கொண்டு சில நன்னெறிகளை உரைத்திருப்பார்கள். ஒரு குடும்பத்தின் பதி-தர்மத்தை கணவனும், பதினி-தர்மத்தை மனைவியும் கடைப்பிடிக்க வேண்டும். பிறனில் நோக்காமல் தன் துணையை உயிராக நேசிப்பவரே கற்புடையர் எனப்படுவர்.

இந்துதர்மத்தில் தூய்மை

இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய 10 ஒழுக்கநெறிகளை பதஞ்சலி யோகசூத்திரம் உட்பட இதர சனாதன தர்ம நூல்கள் பகர்கின்றன. அந்த பத்து ஒழுக்கநெறிகளில் ஒன்றுதான் “தூய்மை”. தூய்மை என்பது சுத்தம் அல்லது ஷௌச்சம் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இந்துதர்மத்தைப் பொறுத்தவரை தூய்மை என்பது ஐந்து நிலைகளில் அமைந்துள்ளது.

அவை:

சுற்றுச்சூழல்
1) வசிப்பிடத்தை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்
2) கண்ட இடங்களில் குப்பை போடுவதை தவிர்க்க வேண்டும்
3) கோயில்களை மாசுபடுத்தாமல் சுத்தமாக பராமரிக்க வேண்டும்

உடல்
1) தினந்தோறும் தவறாமல் குளிக்க வேண்டும்
2) ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்
3) புகை/மது போன்ற உடலுக்குப் பாதிப்பை தரும் பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்
4) யோகாசனம் போன்ற உடலுக்கு வலிமை தரும் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்

மனம்
1) மன அழுக்குகள் என சொல்லப்படும் பொறாமை, பேராசை, கோபம், பயம், வெறுப்பு, பழியுணர்வு, பகைமை ஆகிய ஏழு குணங்களையும் நீக்க வேண்டும்
2) அன்பு, கருணை, பொறுமை, சாந்தம், சமநிலை, திருப்தி, திடம் ஆகிய ஏழு நற்பண்புகளை மனதில் விதைத்திட வேண்டும்

செயல்
1) மற்றவர்களுக்கு சொந்தமான பொருள்களை அவர்களிடமிருந்து அபகரிக்க கூடாது
2) அப்பாவி உயிர்களுக்கு எந்தவகையிலும் துன்பம் விளைவிக்க கூடாது
3) எல்லா செயல்களிலும் நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்
4) கடமையை செய்வதில் கருத்தாக இருக்க வேண்டும்

வாக்கு
1) நன்மை, இனிமை, உண்மை – ஆகிய மூன்றையும் மட்டுமே பேச வேண்டும்
2) தீமை, கடுமை, பொய்மை – ஆகிய மூன்றையும் பேசக் கூடாது

அஷ்டாங்க யோகத்தின் நியமங்களில் ஒன்றாக தூய்மை விளங்குகின்றது. இந்து தர்மநூல்களிலும் தூய்மையைப் பற்றிய ஏராளமான குறிப்புகள் உள்ளன. பகவத் கீதையின் படி, தூய்மை எனப்படுவது ஒருவன் உடலால், மனதால், வாக்கால் மேற்கொள்ள வேண்டிய தவம் (ஆன்மீகப் பயிற்சி) எனக் கூறப்படுகின்றது.

தூய்மை ஏன் அவசியம்?

உடல்நலம், மகிழ்ச்சி மற்றும் தரமான வாழ்க்கை ஆகிய மூன்றிற்கும் தூய்மை என்பது அவசியமான ஒன்றாகும். மகாபாரதத்தில் பல இடங்களில் தூய்மையின் அவசியத்தைப் பற்றி விளக்கப்படுகின்றது. அஷ்வமேதிக பர்வத்தின் 14:38:5-8-இல் இடம்பெறும் கூற்று தூய்மை என்றால் என்ன என்பதை மிக துல்லியமாக விளக்குகின்றது.

“உண்மையில் தூய்மையானவன் என்பவன் யாரென்றால் - பேராசைகுணத்தில் இருந்து விடுபட்டவன், இறுமாப்பில் இருந்து விடுபட்டவன், எதிலும் குற்றத்தையே காணும் குணத்தில் இருந்து விடுபட்டவன், ஏற்றத்தாழ்வுகளை விடுத்து எல்லாரையும் சமநோக்குடன் அரவணிப்பவன், அது வேண்டும் இது வேண்டும் என்ற தீராத ஆசைகளில் இருந்து விடுபட்டவன் - ஆவான். அவனிடம் தன்னம்பிக்கை, பரிசுத்தம், மனவலிமை, பொறுமை, திருப்தி, அன்புடைமை, மயக்கமின்மை, எல்லா உயிர்களிடமும் அருளுடைமை போன்ற நற்குணங்கள் நிறைந்திருக்கும். அவன் அமைதியானவன், அவன் ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்படுவதில்லை. எது சரி எது தவறு, எது செய்யத்தக்கது எது செய்யத்தகாதது என்பதில் தெளிவான புத்தியையுடைய அவனின் செயல், வாக்கு மற்றும் மனம் ஆகிய மூன்றும் மிக தூய்மையான நிலையை அடைந்து தூயவடிவான பரம்பொருளுடன் நிலைபெற்று விடுகின்றது.” 
(மகாபாரதம் 14:38:5-8)

இந்து தர்மத்தை அறிவோம் (நான்கு ஆஷ்ரமங்கள்)

ஆஷ்ரமங்கள் என்பவை இந்துதர்ம நூல்களில் மனித வாழ்க்கையின் நான்கு நிலைகளைக் குறிக்கின்றன. இந்த நான்கு நிலைகளும் ஒருவனின் வயது அடிப்படையில் வகுக்கப்படுகின்றது. ஒவ்வொரு நிலையிலும் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய கடமைகள் தனித்தனியே அமைந்துள்ளன. அவை: பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வனபிரஸ்தம், சன்யாசம்.

பிரம்மச்சரியம் என்பது மாணவப் பருவம் எனப் பொருள்படும். இந்த நிலை பொதுவாக ஒருவன் தனது 24 வயதுவரை கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்த நிலை கல்வி மற்றும் அடக்கம் ஆகிய இரண்டையும் ஊக்குவிக்கின்றது. பண்டைய பாரத தேசத்தில் மாணவர்கள் குறிப்பிட்ட ஒரு வயதில் குருகுலத்தில் சேர்க்கப்படுவர். அங்கு அவர்கள் குருவுடனே தங்கியிருந்து அறிவியல் ஞானம், தத்துவ ஞானம், சாஸ்திரங்கள், தன்னடக்கப் பயிற்சி, தர்மநெறி போன்றவற்றைக் கற்றுக் கொள்வார்கள். குருகுலத்தில் சேர்வதற்கு முன் உபநயனமும் குருகுலத்தில் தேர்ச்சிப் பெற்று வெளிவரும் போது சமாவர்தனமும் மேற்கொள்ளப்படும். இது ஏறக்குறைய இன்று குழந்தைகள் பாலர்பள்ளியில் சேர்க்கப்பட்டு பட்டப்படிப்பு முடித்து ‘graduation’ அடைவது போலவாகும். பிரம்மச்சரிய நிலையில் தேர்ச்சிப் பெற்ற ஒருவனே அடுத்த நிலையான கிரகஸ்த நிலைக்கு முழுமையாக தயாரானவன்.

கிரகஸ்தம் என்பது இல்லறப் பருவம் ஆகும். இந்த நிலை 48 வயதுவரை நீடிக்கும். இந்த நிலையில் ஒரு குடும்பத்தை ஒழுங்குமுறையாக நடத்த அவன் பின்பற்ற வேண்டிய கடமைகள், குடும்பத்தினருக்குத் தேவையானவற்றை செய்தல், பிள்ளைகளுக்கு முழுமையான கல்வியை அளித்தல், குடும்பத்தை தர்மநெறியில் செயல்படுத்துதல் ஆகியவை மையமாக அமைகின்றன. இவை ஒரு கிரகஸ்தன் (குடும்பஸ்தன்) கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள் ஆகும். இந்த நிலையில் தான் ஒருவன் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் கடைப்பிடிக்க வேண்டிவரும். தர்மநெறியிலிருந்து நழுவாத வாழ்க்கைமுறை, நியாயமான முறையில் ஈட்டப்படும் பொருள், ஒழுக்கமான இன்பவாழ்க்கை ஆகியவை இந்த நிலையில் பின்பற்றப்படவேண்டும்.

வனபிரஸ்தம் என்பது பணிஓய்வு பெற்ற நிலையைப் போன்றது. இது ஒருவனின் 48 வயதுக்கு மேல் ஆரம்பிக்கின்றது. தன் பிள்ளைகளுக்குச் செய்யவேண்டிய எல்லாக் கடமைகளைச் செய்துமுடித்து, அவர்கள் சுயகாலில் நிற்கும் நிலையை அடைந்த பின்னர் ஒருவன் இல்லறவாழ்வில் இருந்து ஓய்வு பெறுகிறான். இப்போது அவனுக்கு தன் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்து நல்லறிவை அளிக்கவேண்டிய கடமை உள்ளது. இந்த நிலையில் ஒருவன் தன்னுடைய பொருள் மற்றும் இன்பம் ஆகிய இரண்டையும் மெல்லமெல்ல துறந்து முழுமையாக ஆன்மிகத்தில் ஈடுபடவும் மோட்சத்துக்கான வழியை நாடவும் ஊக்குவிக்கப்படுகின்றான். பண்டைய காலங்களில் வனபிரஸ்த நிலையை அடைந்தவர்கள், குடும்பவாழ்க்கையைத் துறந்துவிட்டு முழுமையாக தவத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். குடும்ப வாழ்க்கையின் போது ஒருவன் அனைத்தையும் துறக்கமுடியாது. குடும்பவாழ்க்கையில் அவன் தன் கடமைகளை எல்லாம் முடித்தப் பின்னரே வனபிரஸ்த நிலையில் அடியெடுத்து வைக்கவேண்டும். குடும்பவாழ்க்கையில் மேற்கொள்ளும் தவம் மனநிம்மதி அடைவதற்காகவும், வனபிரஸ்த நிலையில் மேற்கொள்ளும் தவம் மெய்யுணர்வு அடைவதற்காகவும் அமைந்திருக்கும்.

சன்யாசம் என்பது ஆன்மிக முதிர்ச்சிப் பெற்ற நிலையைக் குறிக்கின்றது. இவ்வாறு ஆன்மிக முதிர்ச்சிப் பெற்றவர்கள் சன்யாசிகள் என்றறியப்படுகின்றனர். சன்யாசிகளுக்கு உலக ஆசைகள், பற்றுகள் போன்ற அனைத்திலும் ஈடுபாடின்றி முழுக்கமுழுக்க மோட்சத்தின் மீதே எண்ணம் அமைந்திருக்கும். சிலர் குடும்பவாழ்க்கையில் ஈடுபடாமல் பிரம்மச்சரியம் முடிந்ததும் நேராக தவநிலையில் ஈடுபட்டு சன்யாச நிலையை அடைவர்.

இவ்வாறு மனித வாழ்க்கையை நான்காக பிரித்து ஒவ்வொரு நிலையிலும் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள் மற்றும் கடமைகள் ஆகியவற்றை இந்துதர்ம நூல்கள் வரையறுத்துக் காட்டுகின்றன. ஒருநிலையில் அவன் கடைப்பிடிக்க வேண்டிய கடமைகள் மற்றொரு நிலையில் ஒத்திருப்பதில்லை. ஆனால் எல்லா நிலைகளில் தர்மநெறியைக் கடைப்பிடிக்க வேண்டியது மிக அவசியமாக உள்ளது. உதாரணமாக, கிரகஸ்த பருவத்தில் ஒருவன் தன் புலனின்பத்தைப் பூர்த்தி செய்துகொள்ள முனைந்தாலும் அவன் தர்மநெறியை மீறக்கூடாது. தர்மநெறியை மீறிய இன்பம் அழிவையே தரும். அதேவேளையில் பிரம்மச்சரிய நிலையில் ஒருவன் புலன்களை அடக்கியாளவும் கல்வியின் மீது முழுமையான கவனம் செலுத்தவும் ஊக்குவிக்கப்படுகின்றான். வனபிரஸ்த நிலையில் ஒருவன் ஆசைகளை எல்லாம் துறந்து, தவம் மேற்கொள்வதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்த ஊக்குவிக்கப்படுகின்றான்.

இந்து தர்மத்தை அறிவோம் (தமிழ் நூல்கள்)

தமிழ் இலக்கியங்களும் தர்மத்தை உயர்வாகப் போற்றுகின்றன. அறம் எனும் சொல் தர்மத்தைக் குறிக்கும். தமிழ் இலக்கியங்களுள் மிகப் பழைமையானது அகத்தியம். இதை இயற்றியர் அகத்திய மாமுனிவர். பின்னர், தொல்காப்பியம் எனும் நூலை அகத்தியரின் பன்னிரு மாணவர்களுள் ஒருவரான தொல்காப்பியர் இயற்றினார். அகத்தியத்தின் சில வரிகளும் குறிப்புகளும் மற்றமற்ற தமிழ்நூல்களில் காணப்பட்டாலும், தற்போது அகத்தியம் எனும் நூல் இல்லை. தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைக்கின்றது. இதுதான் இன்னமும் கிடைக்கப்பெறும் தமிழ் இலக்கியங்களிலே மிகவும் பழைமையானது.

தொல்காப்பிய நூல் மூன்று அதிகாரங்களை உடையது. அவை: எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் மற்றும் பொருளதிகாரம். ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது தலைப்புகளை உடையது. எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் தமிழ் இலக்கணத்தை போதிக்கின்றன. பொருளதிகாரம் நிலத்திணைகள், பருவநிலைகள், அக்கால மனிதர்கள் போன்ற பல கருத்துகளை விவரிக்கின்றது. முல்லை நிலத்து தெய்வமாக திருமாலும், குறிஞ்சி நிலத்து தெய்வமாக முருகனும், மருதநிலத்து தெய்வமாக இந்திரனும், பாலை நிலத்து தெய்வமாக காளியும், நெய்தல் நிலத்து தெய்வமாக வருணனும் குறிப்பிடப்படுகின்றனர். இவ்வாறு நாட்டியசாஸ்திரம், வர்ணாஷ்ரம தர்மம் போன்ற குறிப்புகளும் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன.

அடுத்தப்படியாக, எட்டுத்தொகை நூல்களான ஐங்குறுனூறு, புறநானூறு, குறுந்தொகை, பரிபாடல், அகநானூறு, கலித்தொகை, நற்றினை மற்றும் பதிற்றுப்பத்து ஆகியவை அமைந்துள்ளன. பத்துப்பாட்டு எனப்படும் திருமுறுகாற்றுப்படை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம், பொருணராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு, பெரும்பாணாற்றுப்படை ஆகியவை அமைந்துள்ளன. ஐங்குறுநானூற்றின் முதல் பாடலை இயற்றியவர் பெருந்தேவனார். இவர் தான் வியாசர் மகாபாரதத்தை தமிழில் அருளியவர். இந்த நூல்களில் எல்லாம் இந்துதர்மத்தைப் பற்றிய ஏராளமான குறிப்புகளை நாம் காணலாம். பதினெண்மேல்கணக்கு என்று அறியப்படும் இந்த பதினெட்டு நூல்களும் மிகவும் பழைமையான நூல்கள். இவற்றில் அடங்கியிருக்கும் 2279 பாடல்களை 473 வெவ்வேறு புலவர்கள் இயற்றியுள்ளனர். மேலும், 102 பாடல்களை இயற்றியவர்கள் யாரென்று தெரியவில்லை.

அடுத்தப்படியாக, பதினெண்கீழ்கணக்கு நூல்கள் அமைந்துள்ளன. அவை: திருக்குறள், நாலடியார், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, ஆசாரக்கோவை, சிறுபஞ்சமூலம், ஏலாதி, நான்மணிக்கடிகை, களவழி நாற்பது, திணைமொழி ஐம்பது, திணைமலை நூற்று ஐம்பது, திரிகடுகம், பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, கைநிலை ஆகிய பதினெட்டு நூல்கள். இந்த நூல்கள் நன்னெறி மற்றும் நல்வாழ்வு ஆகிய இரண்டையும் புகட்டுகின்றன. அதன்பிறகு ஐம்பெரும் காவியங்கள் தோன்றின.

பக்தி நூல்கள் - சைவம் மற்றும் வைணவம் எனும் இருபெரும் பக்தி மார்கங்களைச் சேர்ந்த நூல்களும் பக்திசுவை மணக்க தர்மத்தைப் போதிக்கின்றன. தமிழ் மண்ணில் தோன்றிய பக்திமார்கம் தான் பின்னர் பாரத தேசமெங்கும் பரவியது. பன்னிரு ஆழ்வார்களும் சைவ அடியார்களும் திவ்ய பிரபந்தம் மற்றும் திருமுறை நூல்களை அருளினர். மேலும் கம்பராமாயணமும் பெரியபுராணமும் கம்பர் மற்றும் சேக்கிழார் ஆகியவர்களால் அருளப்பட்டது. திருமுறை சைவர்கள் இடையேயும் திவிய பிரபந்தம் வைணவர்கள் இடையேயும் மிகவும் புகழ்ப்பெற்றவை.

தமிழ் நூல்களில் மிகவும் முக்கியமானவையாகவும் எங்கும் கிடைப்பதாகவும் சில நூல்கள் அமைந்துள்ளன. அவை: திருக்குறள், திருமுறை, திவிய பிரபந்தம் ஆகும். திருக்குறள் ஒரு தர்மநூல் என்பதால் ஆங்கில இந்துக்களிடமும் இது பிரபலமடைந்து வருகின்றது. தர்மத்தை இரண்டடியில் இனிமையாக விளக்கும் இயல்புடைய திருக்குறளை இந்துக்கள் அவசியமாக கடைப்பிடிக்க வேண்டும்.

இந்து தர்மத்தை அறிவோம் (இரண்டாம் தர நூல்கள்)

ஸ்மிரிதி வகை நூல்கள் ஒரு குறிப்பிட்ட நபரால் எழுதப்பட்டவை. ஸ்மிரிதி வகை நூல்கள் இந்துதர்மத்தின் இரண்டாம் நிலை அடிப்படை நூல்கள். ஸ்மிரிதிகள் ஸ்ருதி வகை நூல்களுக்கு முரணாக இருக்க கூடாது. நான்கு வேதங்களையும் (அவற்றின் உள்ளடக்கங்களை) தவிர மற்ற இந்துதர்ம நூல்கள் யாவும் ஸ்மிரிதி வகையைச் சேர்ந்தவையே. உதாரணமாக உபவேதங்கள், வேதாங்கங்கள், இதிகாசங்கள், புராணங்கள், ஆறுதரிசனங்கள், தர்மசாஸ்திரங்கள் மற்றும் பல.

|| உபவேதங்கள் என்பவை:

உபவேதம் என்றால் செயல்முறை அறிவு எனப் பொருள்படும். உபவேதங்கள் நான்கு.
1) தனுர்வேதம் (போர் மற்றும் தற்காப்புக் கலை அறிவியல்)
2) ஆயுர்வேதம் (மருத்துவ அறிவியல்)
3) காந்தர்வ வேதம் (கலை அறிவியல்)
4) ஸ்தபத்ய வேதம் (கட்டடம் மற்றும் சிற்ப அறிவியல்)

|| வேதாங்கம் என்பவை:

வேதங்களின் அங்கம் (உறுப்பு) எனப் பொருள்படும். வேதங்களை எளிதாகக் கற்பதற்காக இவை அமைக்கப்பட்டன. வேதாங்கங்கள் ஆறு.
1) ஷிக்‌ஷா (ஒலியியல், சந்தி)
2) கல்பம் (சடங்குகள்)
3) வியாகரணம் (இலக்கணம்)
4) நிருக்தம் (சொல்லிலக்கணம்)
5) சந்தம் (சந்த அளவு)
6) ஜோதிஷம் (கால அளவு; சூரியன், சந்திரன், கிரகங்கள் நகர்வுகள்; வானவியல்)

|| இதிகாசங்கள் என்பவை:

இதிகாசம் என்றால் வரலாற்று நிகழ்வு எனப் பொருள்படும். இதிகாசங்கள் இரண்டு.
1) வால்மிகியின் இராமாயணம்
2) வியாசரின் மகாபாரதம்

|| புராணங்கள் என்பவை:

புராணம் என்றால் பண்டையது; பழையது எனப் பொருள்படும். 18 மகாபுராணங்களும் (பிரபலமானவை) 18 உபபுராணங்களும் (குறைந்த பிரபலமானவை) உள்ளன. இவற்றைத் தவிர்த்து சிவதல வரலாற்றைக் கூறும் 275 ஸ்தல புராணங்களும் உள்ளன.

மகாபுராணங்கள்
1) அக்கினி புராணம் – 15,400 சுலோகங்கள்
2) பாகவத புராணம் – 18,000 சுலோகங்கள்
3) பிரம்ம புராணம் – 10,000 சுலோகங்கள்
4) பிரம்மாண்ட புராணம் – 12,000 சுலோகங்கள்
5) பிரம்மவைவர்த்த புராணம் – 17,000 சுலோகங்கள்
6) கருட புராணம் – 19,000 சுலோகங்கள்
7) கூர்ம புராணம் – 17,000 சுலோகங்கள்
8) லிங்க புராணம் – 11,000 சுலோகங்கள்
9) மார்கண்டேய புராணம் – 9,000 சுலோகங்கள்
10) மட்ச புராணம் – 14,000 சுலோகங்கள்
11) நாரத புராணம் – 25,000 சுலோகங்கள்
12) பத்ம புராணம் – 55,000 சுலோகங்கள்
13) சிவ புராணம் – 24,000 சுலோகங்கள்
14) ஸ்கந்த புராணம் – 81,100 சுலோகங்கள்
15) வாமண புராணம் – 10,000 சுலோகங்கள்
16) வராக புராணம் - 24,000 சுலோகங்கள்
17) வாயு புராணம் – 24,000 சுலோகங்கள்
18) விஷ்ணு புராணம் - 23,000 சுலோகங்கள்

|| ஆறு தரிசனங்கள் என்பவை:

ஆறு தரிசனங்கள் என்றால் ஆறு பார்வைகள் எனப் பொருள்படும். இவை வேதகாலத்தைச் சேர்ந்த ஆறுவகை தத்துவங்கள். இவை: சாங்கியம், யோகம், மிமாம்சம், நியாயம், வைஷேஷிகம் மற்றும் வேதாந்தம் ஆகும். இவற்றுள் தற்போது நிலைத்திருப்பது வேதாந்தமும் யோகமும் தான்.

வேதத்தின் இறுதிபகுதியான ஞானகாண்டத்தை (உபநிடதங்கள்) அடிப்படையாகக் கொண்டது வேதாந்தம். முக்கிய உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதை ஆகியவை வேதாந்தத்தின் அடிப்படை நூல்கள்.

யோகம் என்பது மனம், உடல், ஆன்மா ஆகிய மூன்று நிலையிலும் அமைந்திருக்கும் நுட்பமான கல்வி முறையாகும். இதன் அடிப்படை நூலாக பதஞ்சலி முனிவரின் யோகசூத்திரம் அமைந்துள்ளது.

|| தர்ம சாஸ்திரங்கள் என்பவை:

தர்ம சாஸ்திரம் என்றால் அறநெறி நூல் எனப் பொருள்படும். தர்ம சாஸ்திரங்களை இரண்டாகப் பிரிக்கலாம். அவை: தர்மசூத்திரம் மற்றும் ஸ்மிரிதி.

தர்மசூத்திரங்கள் நான்கு. அவை: அபஸ்தம்பர் சூத்திரம், கௌதமர் சூத்திரம், பௌதாயன சூத்திரம், வாசிஷ்டர் சூத்திரம்.

ஸ்மிரிதிகள் தர்மசூத்திரங்களுக்குப் பிறகு எழுதப்பட்டவை. அவை: யாக்ஞவல்கயர் ஸ்மிரிதி, நாரதர் ஸ்மிரிதி, விஷ்ணு ஸ்மிரிதி, பிரகஸ்பதி ஸ்மிரிதி, காத்யாயன ஸ்மிரிதி.

இந்து தர்மத்தை அறிவோம் (அடிப்படை நூல்கள்)

ஸ்ருதி வகை நூல்கள் என்பவை இந்துதர்மத்தின் மூலதரமான மற்றும் அடிப்படையான நூல்கள் ஆகும். இவை சான்றுவலிமை மிக்கவை; அதிகாரப்பூர்வமானவை; மனிதரால் உருவாக்கப்படாதவை (அபௌருஷெயம்) மற்றும் இறைவனிடமிருந்து பெறப்பட்டவை. இவற்றை உணர்ந்து உலகிற்கு வெளிபடுத்தியவர்கள் வேதரிஷிகள். இவை வேதம் என்றழைக்கப்படுகின்றன.

வேதம் என்றால் அறிவு, ஞானம் எனப் பொருள்படும். வேதங்கள் நான்காகும். ஒவ்வொரு வேதமும் நான்கு பகுப்புகளைக் கொண்டது.
** நான்கு வேதங்கள் :- ரிக், சாம, யஜுர், அதர்வண.
** நான்கு பகுப்புகள்:- சம்ஹிதை, பிரமாணம், ஆரண்யகம், உபநிடதம்.
|| வேதங்களும் மற்ற மதநூல்களும் ஒன்றா?

வேதங்களை மற்ற மதங்களின் மதநூல்களோடு ஒப்பிடுவது அறியாமை ஆகும். வேதங்கள் வெறும் அதை செய்யவேண்டும்; இதை செய்யக்கூடாது எனவும், இதை செய்தால் நரகம்; அதை செய்தால் சொர்க்கம் என்றும் பேசவில்லை. மாறாக வேதங்கள் மிக ஆழ்ந்த, அகன்ற, நுண்ணிய கருத்துகளை எல்லாம் நமக்கு அளிக்கின்றன. வேதங்கள் எந்த மதகுருவையும் வைத்து தொடங்கப்படவில்லை. நியூட்டன் புவியீர்ப்பு சக்தியைப் பற்றிய விதியினை எப்படி படைக்கவில்லையோ, அப்படித் தான் வேதத்தையும் எவரும் படைக்கவில்லை. வேத உண்மைகள் யாவும் கண்டு கொள்ளப்பட்டவையே தவிர உண்டாக்கப்பட்டவை அல்ல; வெளிப்படுத்தப்பட்டவையே தவிர படைக்கப்பட்டவை அல்ல. எனவே அவை தனிநபர் தொடர்பற்றவை. ’அபௌருஷெயம்’ காலத்திற்குட்பட்டு கடந்து போகும் விதிகளைப் போலில்லாமல், வேத உண்மைகள் யாவும் ஆன்மிகத்துறையைச் சார்ந்தவை. அவற்றுக்கு என்றுமுள்ள தன்மையும் (நித்யம்) மதிப்பும் உண்டு.

முதலாவது வேதமான ரிக் வேதம் மிக முக்கியமானது. ஏனென்றால் அதன் மந்திரப் பாடல்கள் பலவற்றை மற்றைய வேதங்களுக்கு அது தந்துள்ளது. அதுதான் தொன்மையான தொகுப்பு.
|| ரிக் வேதம்

பல நூறு ரிஷிகளால் உணரப்பட்ட மிக அரிய மந்திரங்களையும், ஆழ்ந்த தத்துவங்களையும் கொண்டுள்ளது. உலகிலேயே மிகப் பழைமையான நூல் ரிக்வேதம். இந்த வேதம் தான் இந்துதர்மத்தின் ஆணிவேர். ரிக்வேதத்தின் வானவியல் சார்ந்த குறிப்புகளைக் கொண்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்களும், இந்துதர்ம யோகிகளும் ரிக்வேதத்தை 12,000 ஆண்டுகளுக்கு முந்தையது எனக் குறிப்பிடுகின்றனர். ஆயினும் அது காலவரையற்றது. எப்போதும் இருந்தது. அதை ரிஷிகள் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் உணர்ந்துள்ளனர். ரிக்வேதம் இறைதுதிகளை உள்ளடக்கியது. ’ரிக்’ என்றால் போற்றுதல் எனப் பொருள்படும். ரிக்வேதத்தில் 33 தெய்வங்களைப் (11 ருத்திரர்கள், 12 ஆதித்யர்கள், 8 வசுக்கள், 2 அஸ்வின்கள்) போற்றி பாடல்கள் உள்ளன. இவர்களே 33 பிரம்மாண்டமான தெய்வங்கள் ஆவர். வேதஞானம் இல்லாதவர்கள் 33 பிரம்மாண்டமான தெய்வங்கள் என்பதை 33 கோடி தெய்வங்கள் எனக் கருதி இந்துதர்மத்தைப் பற்றி பொய்யான பிரச்சாரம் செய்கிறார்கள். ரிக்வேதத்தின் ஒவ்வொரு எழுத்தும் மிகவும் சக்திவாய்ந்த முறையில், ஒலியியல் ஞானம் பொருந்திய வகையில் உள்ளன. ரிக்வேதம் 10 மண்டலங்களை உடையது. 1028 மந்திரங்களும், 10,600 வரிகளையும் உடையது. ரிக்வேதத்தை அடிப்படையாகக் கொண்டே மற்ற மூன்று வேதங்களும், இந்துதர்ம நூல்களும் அமைக்கப்பட்டுள்ளன. வேதங்களுக்கெல்லாம் வேதமாக ரிக்வேதம், அழிவற்ற பேரறிவு பெட்டகமாக அமைந்துள்ளது.
|| சாம வேதம்

சாம வேதத்தை (The Veda of Song) என ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றனர். அதாவது பாடல் வேதம். ரிக்வேத மந்திரங்களை எல்லாம் பாடல் வடிவில் வடிவமைத்துக் காட்டும் வேதம் இது. சாமவேதத்தின் மறைபொருள் அதன் இனிமையான இசைவடிவில் ஒளிந்துள்ளது. ”ரிக்வேதம் சொல் என்றால், சாமவேதம் பாடல். ரிக்வேதம் மெய்ஞானம் என்றால், சாமவேதம் மெய்யுணர்வு. ரிக்வேதம் மனைவி என்றால், சாமவேதம் கணவன்.” என உபநிடதம் குறிக்கின்றது. சாமவேதம் ஆன்மீக அறிவையும் பக்தியின் வலிமையும் பற்றி கூறுகின்றது.
|| யஜுர் வேதம்

யஜுர் வேதம் சடங்குகளின் வேதம் என கூறப்படுகின்றது. பல்வேறு சடங்குகளைப் பற்றிய அறிவுரைகளை இந்த வேதம் நமக்கு அளிக்கின்றது. உள்ளுணர்வுகளை தட்டியெழுப்பவும், மனத்தை பரிசுத்தமாக்கவும் தேவையான வழிகளை இந்த வேதம் மிக துல்லியமாக வரையறுத்துக் காட்டுகின்றது. யஜுர்வேதத்தில் குறிப்பிடப்படும் தெய்வங்கள் ரிக்வேத தெய்வங்கள் ஆவர். பல்வேறு வகையான வேள்விகளையும் அதன் செயல்முறைகளையும் யஜுர்வேதம் விளக்குகின்றது. வேள்விகள் செய்யப்படுவது தெய்வங்களுக்காக எனவும், வேள்விகளில் உயர்ந்தது ஆன்மவேள்வியே (ஆத்மயக்ஞம்) என்றும் கூறப்படுகின்றது. நெஞ்சகத்திலே தீமூட்டி ஞானம் எனும் வேள்வியை வளர்த்து, அகங்காரத்தை அதிலிட்டு, மெய்யுணர்வு எனும் அமுதைப் பெறுவதே ஆன்மவேள்வி எனக் கூறப்படுகின்றது.
|| அதர்வண வேதம்

இதுவே நான்காவது வேதமாகும். ரிக்வேத மந்திரங்களில் பலவற்றை அதர்வண வேதம் கொண்டுள்ளது. மேலும், சில தாந்திரீக மந்திரங்களையும், தடையிற்குட்பட்ட சடங்காராய்ச்சிகளையும் உடைய வேதம் இது. அணுகுண்டை தவறான செயல்களுக்கு உபயோகிப்பதால் அதை சில நாடுகளில் தடை செய்துள்ளனர். அதேபோல், அதர்வண வேதத்தில் அடங்கியிருக்கும் சில சடங்குகளை தவறான நோக்கத்தில் உபயோகிக்க கூடாது என்பதற்காக அவற்றை தடை செய்து விட்டனர். ஆனாலும் அதர்வண வேதத்தில் அடங்கியிருக்கும் தந்திரங்களை முந்தைய முனிவர்கள் பின்பற்றி பல நன்மைகளைச் செய்துள்ளனர். இராவணன் நான்குவேதங்களையும் கரைத்துக் குடித்த பிராமணன் ஆவான். அவன் அதர்வண வேத ஞானத்தை தவறான நோக்கத்தில் உபயோகித்தான். அதனால் அவனுக்கு அவனே அழிவைத் தேடிக் கொண்டான். அதர்வண வேதத்தை நெருப்புடன் ஒப்பிடலாம். நெருப்பை நன்மையாக பயன்படுத்தினால் சமைக்கலாம், குளிர் காயலாம். அதே தவறாக உபயோகித்தால் ஒரு வீட்டையே கொளுத்தலாம்.

|| வேதத்தின் நான்கு பிரிவுகள்

ஒவ்வொரு வேதமும் நான்கு பிரிவுகளை உடையது. அவை:- சம்ஹிதை, பிரமாணம், ஆரண்யகம், உபநிடதம்.

*சம்ஹிதை என்பது தெய்வங்களுக்கென்று அமைக்கப்பட்ட துதிப் பாடல்கள். இம்மையிலும், மறுமையிலும் சுபிட்சம் பெறுவதற்கென்று தெய்வங்களிடம் செய்யப் படும் பிரார்த்தனைகள் அவை.

*பிரம்மாணம் என்பது யாகங்கள் செய்வதற்கு அனுஷ்டிக்கப் பட வேண்டிய சடங்குகள் பற்றிக் கூறுவது.

*ஆரண்யகம் என்பது தியானம், தவம் போன்றவற்றின் மேற்கோளாகவும் வழிகாட்டியாகவும் திகழ்கின்றது.

*உபநிடதம் வேதத்தின் இறுதிப் பகுதியாகும். இவை ’வேதாந்தம்’ என்றும் அழைக்கப்படுகின்றன. இவை மிகவும் புகழ்ப்பெற்றவையாகவும், இந்துதர்மத்தின் மிக உயரிய உண்மைகளின் உறைவிடமாகவும் விளங்குகின்றன. இவை தத்துவ ஆராய்ச்சிகளை உள்ளடக்கியிருக்கும் பகுதிகள் ஆகும்.
|| நான்கு பிரிவுகள் – நான்கு வகைகள்

வேதத்தின் ஒவ்வொரு பகுதியும் மனித வாழ்க்கையின் நான்கு நிலைகளுக்கும் பொருந்துமாறு அமைந்துள்ளது. பிரம்மச்சரிய (மாணவன்) நிலைக்கு சம்ஹிதைகள், கிரஹஸ்தம் (இல்லறத்தான்) நிலைக்கு பிரமாணம், வனப்பிரஸ்தம் (தவம் புரிபவன்) நிலைக்கு ஆரண்யகம், சன்னியாசம் (துறவி) நிலைக்கு உபநிடதம்.

வேதத்தில் அடங்கியுள்ளவற்றை வேறு ஒரு வகையாகவும் பிரிக்கலாம். சம்ஹிதையும் பிரமாணமும் - கர்ம காண்டங்கள் அல்லது சமய சடங்குகள் பற்றியவை. ஆரணயகம் - உபாசனைக் காண்டம் அல்லது தியானத்திற்குரியவை. உபநிடதம் - ஞான காண்டம் அல்லது அறிவு தரும் பகுதி.