Wednesday, July 12, 2017

உடல் எடையை குறைக்க

இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பல பேர் சந்திக்கும் பிரச்சனை. அதனை கட்டுப்படுத்த பல கடுமையான டயட்டுக்களில் பலர் ஈடுபடுகின்றனர். ஏனெனில் கடுமையான டயட்டுக்களை பின்பற்றினால், உடல் எடையானது வேகமாக குறையும் என்ற எண்ணம் தான் காரணம்.

அவ்வாறு கடுமையான டயட்டை மேற்கொள்ளும் போது, பசியுடன் பல உணவுகளை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அதனால் என்ன பயன்? காலப்போக்கில் மெதுவாக உடல் எடை மறுபடியும் கூடி விடும். ஆகவே உடல் எடையை மெதுவாக குறைக்க முயல வேண்டும்.

மேலும் வல்லுனர்களும் கடுமையான டயட் முறையை கையாளாமல், எளிய முறைகளின் மூலம் உடல் எடையை குறைக்க முயலுமாறு கூறுகின்றனர். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது தான்.

சரி, இப்போது உடல் எடையை குறைக்க கடுமையான டயட்டை பின்பற்றுவதை விட, கீழ்கூறிய எளிய வலியில்லா வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

  தினமும் காலை உணவை உண்ணுங்கள்:-

காலை உணவை தவிர்த்தால் கலோரிகளை எரிக்கலாம் என்று பலர் தவறாக நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறு தவிர்க்கும் போது ஏற்படும் பசியானது, மற்ற வேளைகளில் அதிகமாக உண்ணத் தூண்டும். காலை உணவை தவிர்ப்பவர்களை விட அதனை உண்ணுபவர்களுக்கே பி.எம்.ஐ குறைவாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. மேலும் பள்ளியிலோ அல்லது அலுவலகத்திலோ அவர்களால் தான் நன்றாக வேலை செய்ய முடியும். ஆகவே ஒரு கிண்ணம் நிறைய ஓட்ஸை நிறைத்து, அதில் பழங்கள் மற்றும் குறைவான கொழுப்பினை கொண்ட பால் பொருட்களை சேர்த்து காலையில் உண்டால் ஆரோக்கியமான நாள் தொடங்கும்.

உணவை நன்றாக மென்று உண்ணுங்கள்:-

சாப்பிடுவதற்கு 20 நிமிடம் என்று ஒரு நேரத்தை ஒதுக்கி மெதுவாக உண்ணுங்கள். இது டயட் மூலம் இல்லாமல் உடல் எடையை குறைக்க முதன்மையான வழியாகும். ஒவ்வொரு வாய் உணவையும் நிதானமாக மென்று உண்ணுங்கள்.

அதிகமாக தூங்கி எடையை குறையுங்கள்:-

தினமும் இரவு ஒரு மணிநேரம் கூடுதலாக தூங்கினால், ஒரு வருடத்தில் 7 கிலோ வரை உடல் எடை குறையும் என்று மிஷிகன் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார். இவரின் ஆராய்ச்சி படி, தூங்கும் போது உடல் எந்த வேளையில் ஈடுபடாமல் இருப்பதால், சுலபமாக 6 சதவீதம் வரை கலோரிகளை எரிக்கலாம்.

அதிக அளவில் காய்கறிகளை உண்ணுங்கள்:-

ஒவ்வொரு நாள் இரவும் ஒரே ஒரு காய்கறியை மட்டும் உண்ணுவதற்கு பதில் மூன்று காய்கறிகளை கலந்து உண்ணுங்கள். அதிக வகை இருந்தால் அதிகமாக உண்ணத் தூண்டும். அதனால் அதிகமான பழங்களையும், காய்கறிகளையும் உண்டு உடல் எடையை குறைக்கலாம்.

சூப் உள்ளே வரும் போது, உடல் எடை வெளியேறும்:-

ஒவ்வொரு உணவிற்கு முன்பும் சூப் குடியுங்கள். இது பசியை ஆற்றி குறைவாக உண்ண வைக்கும். கெட்டியான சூப்பை தவிர்க்கவும். ஏனெனில் அதில் அதிக கொழுப்பும், கலோரிகளும் அடங்கியிருக்கும்.

அளவு சிறியதாக உள்ள பழைய ஆடைகளின் மீது பார்வையை பதியுங்கள்:-

உங்களுக்கு பிடித்த சிறிய அளவை கொண்ட பழைய ஆடைகளை கண் பார்வையில் படும் படி மாட்டி வைத்து, அதனை தினமும் பாருங்கள். இவ்வாறு சிறிய அளவுள்ள ஆடையை மனதில் வைத்து பாடுபட்டால், அதை அணியும் அளவிற்கு எடையை குறைக்கலாம்.

பிட்சா உண்டாலும் ஆரோக்கியம் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்:-

பிட்சா சாப்பிடும் போது மாமிசத்திற்கு பதில் காய்கறிகளை தேர்வு செய்யுங்கள். இதனாலும் கூட 100 கலோரிகளை எரிக்க முடியும்.

சர்க்கரை பயன்பாட்டை குறைக்கவும்:-

சோடா போன்ற சர்க்கரை கலந்த பானங்களை பருகுவதற்கு பதிலாக, தண்ணீர் அல்லது கலோரிகளற்ற பழச்சாறுகளை பருகுங்கள். இதனால் ஒரு 10 டீஸ்பூன் அளவிலான சர்க்கரையை தவிர்க்கலாம்.

நீளமான மெல்லிய டம்ளரை பயன்படுத்துங்கள்:-

குட்டையான அகலமான டம்ளரை பயன்படுத்துவதற்கு பதிலாக, நீளமான மெல்லிய டம்ளரை பயன்படுத்துங்கள். இது டயட் இருக்காமல், உங்கள் கலோரிகளை குறைக்க துணை புரியும். இதனை பின்பற்றினால் ஜூஸ், சோடா, ஒயின் அல்லது மற்ற பானங்கள் பருகும் அளவை 25%-30% வரை குறைக்கலாம்.

மதுபானம் குடிப்பதை குறைக்கவும்:

மதுபானத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தை விட, கலோரிகள் தான் அதிகமாக உள்ளது. அது ஒருவரது சுய கட்டுப்பாட்டை இழக்க வைப்பதால் சிப்ஸ், நட்ஸ் மற்றும் இதர நொறுக்குத் தீனியை அதிக அளவில் உட்கொள்ள வைக்கும்.

க்ரீன் டீ பருகுங்கள்:-

தினமும் 1-2 டம்ளர் க்ரீன் டீ பருகுவதால் கூட உடல் எடை குறையும்.

யோகாவை தேர்ந்தெடுங்கள்:-

யோகா செய்யும் பெண்கள், மற்றவர்களை விட குறைந்த எடையுடன் இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. உடல் எடை குறைவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லையா? சீரான முறையில் யோகா செய்பவர்களுக்கு சாப்பிடுவதில் ஒரு மன கட்டுப்பாடு ஏற்படும். உதாரணத்திற்கு, அதிக உணவு இருக்கும் ஒரு உணவகத்திற்கு சென்றாலும் கூட, அளவாக தான் உண்ணுவார்கள். ஏனெனில் யோகாவால் கிடைக்கும் அமைதி, உணவு உண்ணுவதில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும்.

வீட்டில் உண்ணுங்கள்:-

வாரம் ஐந்து முறையாவது வீட்டில் சமைத்து உண்ணுங்கள். நல்லபடியாக உடல் எடை குறைப்பவர்களின் இரகசியத்தில் இதுவும் ஒன்று என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதை பற்றி யோசிப்பதை விட சமைப்பதே சுலபம்.

உண்ணும் போது சிறிய இடைவேளை தேவை:-

சிலர் இயற்கையாகவே ஒரு வாய் உணவிற்கும் அடுத்த வாய் உணவிற்கும் சிறிய இடைவேளை விடாமல் சாப்பிடுவார்கள். இந்த இடைவேளையில் பொறுமையாக இருங்கள், வேகமாக அடுத்த வாய் உணவை திணிக்காதீர்கள். பேசி கொண்டே பொறுமையாக தட்டை காலி செய்யுங்கள். இது வயிற்றை அடைக்காமல் பசியை போக்கும். பலர் இதை தவறவிடுவார்கள்.

வீரியமிக்க புதினா சூயிங் கம்மை மெல்லுங்கள்:-

நொறுக்குத் தீனி உண்ண தூண்டும் போது, சர்க்கரை இல்லாத வீரியம் அதிகமுள்ள சூயிங் கம்மை மெல்லுங்கள். வேலை முடிந்த நேரம், பார்ட்டிக்கு செல்லும் நேரம், தொலைகாட்சி பார்க்கும் நேரம் அல்லது இணையதளத்தில் உலாவும் நேரம் போன்றவைகள் எல்லாம் கணக்கில்லாமல் நொறுக்குத் தீனியை உண்ணத் தூண்டும் நேரமாகும். அதிலும் பிடித்த சுவையுள்ள சூயிங் கம்மை உண்ணுவதால் மற்ற நொறுக்குத் தீனிகளை மறப்பீர்கள்.

உணவு தட்டின் அளவை குறைக்கவும்:-

உணவு தட்டை 12 இன்ச்-க்கு பதிலாக 10 இன்ச்சாக மாற்றுங்கள். தானாகவே குறைத்து உண்ண ஆரம்பித்து விடுவீர்கள். தட்டின் அளவு கூட கூட உண்ணும் உணவின் அளவும் அதிகரிக்கும் என்று கார்னெல் ப்ரையன் வான்சிக் கூறியுள்ளார்.

உண்ணும் அளவை சற்று குறைக்கவும்:-

வேறு ஒன்றுமே செய்ய தோன்றவில்லையா? பேசாமல் நீங்கள் உண்ணும் அளவை 10%-20% வரை குறையுங்கள், உடல் எடையும் குறையும். வீட்டிலும் சரி, உணவகத்திலும் சரி நம் தேவைக்கு அதிகமாகவே பரிமாறப்படுகிறது. ஆகவே உண்ணும் உணவின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க அளந்து உண்ணுங்கள்.

உணவை அதிகமாக சமைக்காதீர்கள்:-

உணவை நீண்ட நேரம் சமைத்தால், அதிலுள்ள ஊட்டச்சத்து அனைத்தும் வெளியேறிவிடும். போதுமான ஊட்டச்சத்து இல்லாத போது, உண்ட திருப்தி உங்களுக்கு ஏற்படாது. அதனால் மீண்டும் உண்ணத் தூண்டும். ஆகவே முடிந்த வரை பச்சை காய்கறிகள் மற்றும் சாலட்களை உண்ணுங்கள். அவித்த வேக வைத்த காய்கறிகள் மற்றும் மாமிசங்களை உட்கொள்ளுங்கள். குறிப்பாக மைக்ரோ ஓவனில் சமைப்பதை தவிர்க்கவும்.

உணவிற்கு முன் பழங்கள்:-

உணவை உண்ணுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு பழங்களை உண்ணுங்கள். இதனால் பழங்கள் வேகமாக செரிமானம் ஆகும். வெறும் வயிற்றில் பழங்களை உண்டால், உடலின் நச்சுத்தன்மை நீங்கி, அதிக ஆற்றல் கிடைத்து உடல் எடை குறையும்.

தக்காளி சாஸை பயன்படுத்துங்கள்:-

கொழுப்புச்சத்து உள்ள மற்ற சாஸ்களை விட, தக்காளி சாஸில் கலோரிகளின் அளவு குறைவாக உள்ளது. இருப்பினும் அதனை அளவாக பயன்படுத்துங்கள்.

மாமிசத்தை குறைக்கவும்:

அதிக அளவில் சைவ உணவை உட்கொண்டால், அது உடல் எடை குறைய உதவி புரியும். அசைவ உணவை உண்ணுபவர்களை விட, சைவ உணவை உண்ணுபவர்கள் தான் வேகமாக ஒல்லியாவார்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பயறு வகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு காரணம் அதில் அடங்கியுள்ள நார்ச்சத்து.

100 கலோரிகளை எரிக்கவும்:-

தினமும் 100 கலோரிகளை எரித்தால், எந்தவித டயட் முறையை பின்பற்றாமல் ஒரு வருடத்தில் 5 கிலோ வரை குறைக்கலாம். இந்த நடவடிக்கைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றுங்கள்: 20 நிமிடங்களுக்கு 1 மைல் தூர நடை, 20 நிமிடங்களுக்கு தோட்டத்தில் களை எடுத்தல் அல்லது செடிகள் நடுதல், 20 நிமிடங்களுக்கு புல் தரையை ஒழுங்குபடுத்துதல், 20 நிமிடங்களுக்கு வீட்டை சுத்தப்படுத்துதல் அல்லது 10 நிமிடங்களுக்கு ஓடுதல்.

இரவு 8 மணிக்கு மேல் உண்ணாதீர்கள்:-

இரவு உணவை 8 மணிக்கு முன்பே உண்ணுங்கள். அதனால் உணவு நேரத்திற்கு முன்பு நொறுக்குத் தீனியை நொறுக்கமாட்டீர்கள். இதனை பின்பற்ற கஷ்டமாக இருந்தால், இரவு உணவை முடித்ததும் மூலிகை தேநீர் பருகுங்கள் அல்லது பற்களை துலக்குங்கள். இது கண்டதை உண்ண தூண்டாது.

உணவு ஏடு தயார் செய்துக் கொள்ளுங்கள்:-

தினமும் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை நேர்மையாக எழுத ஆரம்பியுங்கள். இது தினமும் எவ்வளவு உண்ணுகிறீர்கள் என்பதை தெளிவாக எடுத்துரைக்கும். நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்களில் இதுவும் ஒன்று. இதை பலர் செய்வதற்கு அலுத்து கொள்வதும் உண்டு. அதற்கு காரணம் இதனை அவர்கள் ஒரு கடினமான வேலையாக பார்ப்பதால் தான். ஆனால் இதற்கு சில நிமிடங்களே ஆகும்.

கொண்டாட்டம்:-

சோடா குடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டீர்களா? அதிகமாக உண்ணும் பழக்கத்தை கைவிட்டு விட்டீர்களா? உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். இதனால் உடல் எடையை குறைக்கும் பணியில் வெற்றிப் பெற போவது உறுதி.

புத்திசாலித்தனம்

ஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தார்.அவரிடம் இருந்த ஒரு பெரிய கப்பல் பழுதாகி விட்டது.ஊரில் உள்ள பெரிய பெரிய மெக்கானிக் எல்லாம் வரவழைத்து கப்பலின் இஞ்சினை சரி செய்ய சொன்னார் ஆனால் யாராலும் இஞ்சினில் என்ன பழுது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு வயதான மெக்கானிக் தான் அதை பழுது பார்த்து தருவதாக சொன்னார்.சரி என்று அவரும் ஒப்புக் கொண்டார்.மெக்கானிக் பெரிய பையில் பழுது பார்க்கும் பொருட்கள் எல்லாம் வைத்து இருந்தார்.கப்பல் வியாபாரிக்கு இவர் மேல் நம்பிக்கை வந்து விட்டது.

அந்த வயதான மெக்கானிக் இஞ்சினை நன்றாக நாலா பக்கமும் சுற்றி வந்து பார்த்தார் .பிறகு தன் பையில் இருந்து சுத்தியை எடுத்து ஒரு இடத்தில் ஓங்கி அடித்தார்.இஞ்சினை ஸ்டார்ட் பண்ணி பார்த்தார் அதுவும் வேளை செய்ய ஆரம்பித்துவிட்டது.

கப்பல் வியாபரியிடம் அந்த மெக்கானிக் நாளை என் கடையில் வேலை செய்யும் பையனிடம் பில் கொடுத்து அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

அடுத்தநாள் ஒரு பையன் பில் எடுத்து வந்து நீட்டினான்.அதை பார்த்த கப்பல் வியாபாரி அதிர்ச்சி அடைந்தார்.அதில் 1 லட்சம் ரூபாய் என்று போட்டு இருந்தது, அவர் அந்த பையனிடம் தெளிவாக பில் போட்டு கொண்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அடுத்த நாள் வேறு ஒரு பில்லுடன் வந்து இருந்தான்,அதில்

1-சுத்தியலால் அடித்ததற்கு 5 ரூபாய்.
2-எங்கு அடிக்க வேண்டும் என்று கண்டுபிடித்தற்கு 99,995 ரூபாய்

என்று எழுதி இருந்தது.

மண்டையில மூளை இருந்தா மட்டும் போதாதுங்க அதை எப்படி பயன்படுத்தனும்னு தெரிஞ்சிருக்கனும்…

நல்ல குடும்பத்திற்கு வேண்டிய 10 லட்சணங்கள் :

1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.

2. கணவன் – மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.

3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியை குலைக்கும்.

5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது, பெரும்பாலானோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம், சிலர் குறைவாக சம்பாதிக்கலாம். எப்படி இருந்தாலும் அதை காப்பது, நுகர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.

6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிரச்சினைகளுக்கு இடம்தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் அங்கே தெய்வீக உறவு இருக்காது.

7. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகிய மூன்றையும் கடைப்பிடித்து வர வேண்டும்.

8. பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிவகுக்கும்.

9. தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர் அடிமனமே இதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

10. நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி இன்றியமையாததாகும்.

மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை!!!

அந்த சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது.

இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.
வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது.

எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.

ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.

அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது..

காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன. அவரிடம் குருவி வழி கேட்டது.

“எனக்கு முழு விபரம் தெரியாது. தெரிந்த வரை சொல்கிறேன்.
அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர்.

ஒரேயோரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது. குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது.

குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,
அந்த வழியே ஒரு பாம்பு வந்தது. பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி, “அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்” என்றது.

பாம்பு “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும். சொல்கிறேன்.

பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய். உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது.

இன்னொரு சிறகுதானே, தந்தால் போச்சு என்று குருவியும் சம்மதித்தது.

பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை.

இப்படியே அந்தக் குருவி, அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது.

அவர்களும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள்.

குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.

முடிவாக, அதோ….கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது.

வந்து விட்டோம்…..வந்தே விட்டோம்……இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்.

குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.

ஆனால், இதென்ன….ஏன் என்னால் பறக்க முடியவில்லை. ஐயோ, என் உடம்பெல்லாம் கனக்கிறதே. கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லையே என்று கதறியது.

மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது. பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது.

குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம்.

ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன்.
அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது. அந்தக் குருவி.

இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது.

“நவீன வசதிகளே சந்தோஷம்” என்று அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.

குடும்பத்துடன் வெளியே செல்வது, பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது, பிடித்த புத்தகம் படிப்பது, பிடித்த படம் பார்ப்பது, பிடித்த கோவிலுக்கு போவது, பிடித்த உடை உடுத்துவது, பிடித்த உணவு உண்பது என்று எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம்.

கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது.

சுய அனுபவமே உண்மையானது.

ஒரு இளம் சன்னியாசி ஒரு குருவின் ஆசிரமத்தில் தங்கியிருந்து துறவறம் பற்றி அறிந்துகொள்ள முயன்று வந்தார். ஆனால் அந்த குருவோ எப்போதாவது ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்வார். அவர் சொல்வதும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக இருக்காது. இதனால் மனம் வெறுத்த அந்த துறவி அங்கிருந்து வெளியேற முடிவு செய்தார்.
ஆனால் அவர் வெளியேறும் முன்பாக அங்கு ஒரு நிகழ்வு நடந்தது. அதன் பிறகு அந்த துறவி அங்கிருந்து வெளியேறவேயில்லை. அதாவது, அன்றைய தினம் மற்றொரு இளம்
துறவி அந்த ஆசிரமத்திற்கு வந்தார். அங்கிருந்தவர்களுடன் பேச ஆரம்பித்த அவர் பல்வேறு ஆழமான கருத்துக்களை பேசினார். ஆன்மீகத்தின் பல கோணங்களை ஆராய்ந்து ஏறக்குறைய 2 மணிநேரம் பேசினார். அந்த ஆசிரமத்தின் குரு கண்களை மூடியவாறு  அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
அந்தப் பேச்சைக் கேட்ட இளம் துறவி, “குரு  என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்”   என்று முடிவு செய்தார். அவருடன் சென்று  விட முடிவு செய்தார். அவரது பேச்சைக் கேட்ட அனைவரும் அவரைப் பாராட்டினார்கள்.
பேசி முடித்த அந்த புதிய துறவி  அருகேயிருந்த குருவிடம் தனது பேச்சு எப்படி
இருந்தது என்று சிறிது கர்வத்துடன் கேட்டார்.  கண் விழித்த அந்த குரு, நீ எப்போது
பேசினாய்? நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் 2 மணிநேரமாக நீ பேசாமல்
அமர்ந்து கொண்டிருக்கிறாயே என்றார்.  அப்போ, இதுவரை பேசியது யார் என்று அந்த  புதிய துறவி கேட்டார்.  “சாஸ்திரங்கள் பேசின, நீ படித்த புத்தகங்கள்
பேசின, நீ உன் சுய அனுபவத்தைப் பற்றி ஒரு  வார்த்தை கூட பேசவில்லை“ என்று குரு  சொன்னார்.
இப்படித்தான் பலரும் தாங்கள்  மற்றவரிடமிருந்து கேட்ட கற்ற விஷயங்களை
பேசி வருகின்றனர். சுய அனுபவத்தைப்  பேசுவதில்லை. சுய அனுபவமே உண்மையானது.

எல்லா துக்கங்களும் முடிவுக்கு வரும்

சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ”மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது” என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.

அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது.
காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.

மரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. ‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’’ என்று பலமுறை கத்திப் பார்த்தான். பயனில்லை.

சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல். என்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான். இப்படியே இரவு கழிந்தது. விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான். சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான். கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! அழுகையே வந்துவிட்டது. ‘’அப்பா’’ என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான்.

‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ”நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’’ என்றார். இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?’’ என்று கேட்டான்.

‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்’’ என்றார் தந்தை. மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது.

கடவுளும் அந்தத் தந்தையைப் போலத்தான், நம்மோடு இருக்கிறார். துன்பத்திலும் சோகத்திலும் தவிக்கும்போது துவண்டுவிடாமல், நாம் தீரர்களாக வேண்டும் என்பதற்காகவே பல நேரங்களில் மெளனம் காத்து வெறும் பார்வையாளரைப் போல் இருக்கிறார்.