பயத்தை வெல்வது எப்படி?
பயம் மனித உணர்ச்சிகளில் மிக இயல்பானது. அது தேவையானதும் கூட. பல சந்தர்ப்பங்களில் அது நம் பாதுகாப்பிற்கு உதவுகிறது. முட்டாள்தனமாகவும், கண்மூடித் தனமாகவும் நாம் நடந்து கொள்ளாமல் இருக்க உதவுகிறது. ஆபத்தான சூழ்நிலைகளில் அஜாக்கிரதையாய் இருந்து விடாமல் நம்மைத் தடுக்கிறது. எனவே தான் “அஞ்சுவது அஞ்சாமை பேதைமை” என்றார் திருவள்ளுவர்.
பலரும் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க முக்கியக் காரணம் தண்டனைக்குப் பயந்து தான். அந்தப் பயம் இல்லா விட்டால் சமூகத்தில் சீரழிவே ஏற்படும். எனவே பயப்பட வேண்டியதற்கு பயப்பட்டுத் தான் ஆக வேண்டும். தவறுகள் செய்ய அஞ்சவே வேண்டும். விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் ஆபத்தான செயல்களில் ஈடுபட பயப்படுவதே புத்திசாலித்தனம். குற்றங்களில் ஈடுபட அஞ்சவே வேண்டும். இதில் எல்லாம் பயம் ஏற்படுவது இயற்கை நமக்கு அளித்திருக்கும் பாதுகாப்பு அரணே. தோன்றியபடியெல்லாம் நடந்து கொள்ளாமல் தடுத்து நம்மை சிந்திக்க வைப்பதால், நம் வேகத்தைப் பல சந்தர்ப்பங்களில் கட்டுப்படுத்துவதால் பயம் நமக்கு நன்மையை செய்கிறது என்பதில் சந்தேகமேயில்லை.
ஆனால் பயம் ஒரு எல்லையை மீறும் போது, அறிவு சாராமல் இருக்கும் போது அது நமக்கு நன்மையை விட அதிக தீமையையே செய்வதாகிறது. அந்த சமயங்களில் அது பாதுகாப்பு அரணாக இருப்பதற்குப் பதிலாக அடிமைச்சங்கிலியாக மாறி நம்மை செயலிழக்க வைத்து விடுகிறது.
நம்மை செயலிழக்க வைக்கும் பயத்திற்கு மிக முக்கிய காரணம் விளைவுகளைக் குறித்து நமக்கு ஏற்படும் விபரீதக் கற்பனைகளே. என்ன எல்லாம் நேரக் கூடும் என்று ஒருவன் கற்பனைக் குதிரையைத் தட்டி விடும் போது அவன் மனம் வரக் கூடிய பயங்கர விளைவுகளை எல்லாம் பட்டியல் இட ஆரம்பித்து விடுகிறது. இப்படி எல்லாம் ஆனால் என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பிக்கும் போது பயம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்து விடுகிறது. சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் அவன் ஸ்தம்பித்துப் போகிறான்.
அதே போல் புதியதாக ஒன்றைத் தொடங்கும் முன் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற பயம், குறைத்து மதிப்பிட்டு விடுவார்களோ என்கிற பயம், தோற்று விட்டால் என்ன செய்வது என்கிற பயம் ஏற்பட்டு அந்த செயலை ஆரம்பிக்கவே விடாமலும் செய்து விடுகின்றது. வெற்றிக்காகவே முயல்கிறோம் என்றாலும் தோல்வி வெட்கப்பட வேண்டிய ஒன்றல்ல.
உலகில் மிக உயர்ந்த வெற்றிகளைக் குவித்த வெற்றியாளர்களை ஆராய்ந்தவர்கள் அவர்கள் கூட 60 சதவீத முயற்சிகளில் தான் வெற்றி அடைந்து இருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறார்கள். அதாவது நாம் போற்றும் பெரிய வெற்றியாளர்களே பத்து முயற்சிகளில் நான்கு முயற்சிகளில் தோற்றுப் போகிறார்கள் என்றால் தோல்வி சாதாரணமான ஒன்று தானே. அதில் வெட்கித் தலைகுனிய என்ன இருக்கிறது?
இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் அமெரிக்கா பொருளாதார நிலையில் மிகவும் சீரழிவை சந்திக்க வேண்டி வந்தது. வேலையில்லா திண்டாட்டம், வங்கிகளில் பணமில்லாமை எல்லாம் மக்கள் மனதில் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி பெரியதொரு பயத்தை ஏற்படுத்தியது. அப்போதைய ஜனாதிபதி பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். ”இப்படிப்பட்டவராலேயே நம் நாட்டின் இன்றைய நிலையைத் தவிர்க்க முடியவில்லையே, இனி நம் எதிர்காலம் என்ன?” என்ற பயம் மக்களிடம் பரவி இருந்தது.
அந்த சமயத்தில் தான் ஃப்ராங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார். அவர் தன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் உரையில் சொன்ன செய்தி வரலாற்று சிறப்பு மிக்கது. “நாம் பயப்பட வேண்டிய ஒரே விஷயம் பயமே. ஏனெனில் அந்த இனம் புரியாத, ஆதாரமற்ற, உண்மையைச் சார்ந்திராத பயம் நம் பின்னடைவை மீறி முன்னேற விடாமல் நம்மை செயலிழக்க வைப்பதில் வல்லதாக இருக்கிறது”
அவர் அதிபராக இருந்த காலத்தில் இரண்டாம் உலகப் போரையும் மீறி அமெரிக்கா பொருளாதாரத்தில் முன்னேறியதோடு வல்லரசு நாடாகவும் உருமாறியது. அதற்கு மிக முக்கிய காரணம் பயத்தை நிராகரித்து தைரியத்தைத் துணை கொண்டு செயல்படும் ஒரு தலைமை அந்த நாட்டிற்கு இருந்தது தான் என்பதில் சந்தேகம் இல்லை.
அதெல்லாம் சரி, பயம் இயல்பாகவே வந்து விடுகிறதே, அதை விலக்கி வெற்றி பெறுவது எப்படி என்று கேட்போருக்கு சில ஆலோசனைகள்-
முதலில் பயத்திற்கான காரணங்கள் கற்பனையா இல்லை உண்மை தானா என்று அலசுங்கள். அந்த காரணங்கள் உண்மைக்குப் புறம்பான அனுமானத்தின் அடிப்படையில் ஏற்பட்டவையாக இருந்தால் உறுதியான மனத்தோடு புறக்கணியுங்கள். அந்த கற்பனை காரணங்களிலும், அனுமானங்களிலும் அதிக நேரம் எண்ணங்களைத் தங்க விடாதீர்கள். ஏனென்றால் அதிக காலம் அந்த எண்ணங்களிலேயே இருந்தால் அதையே உண்மை என மனம் நம்ப ஆரம்பித்து விடும். பின் பயம் நம்மை ஆட்கொள்ளவும் ஆரம்பித்து விடும்.
ஒருவேளை அந்தக் காரணங்கள் கற்பனை அல்ல, உண்மையின் அடிப்படையில் தான் எழுந்தவை என்றானால் அந்தக் காரணங்களை அங்கீகரியுங்கள். உண்மையை புறக்கணிப்பது எக்காலத்திலும் நல்லதல்ல. ஆனால் பயத்தினால் செயலிழப்பதும் புத்திசாலித்தனமல்ல என்பதை மறந்து விடாதீர்கள். பயப்படும் படியான விளைவுகளையும், சூழலையும் மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவுபூர்வமாக சிந்தியுங்கள்.
மனம் உடனடியாக அந்த செயலை செய்யாமல் இருப்பதே சிறந்தது என்று உடனடியாகச் சொல்லும். அந்த செயல் தேவையற்றதாகவும், எவ்விதத்திலும் நம் முன்னேற்றத்திற்கு உதவாததாகவும் இருந்தால் இரண்டாவது சிந்தனையே தேவையில்லை. அச்செயலைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம். ஆனால் அந்த செயல் நம்மை நல்ல சூழலுக்கு மாற்ற உதவுவதாகவும், உண்மையான முன்னேற்றத்திற்கு உதவக்கூடியதாகவும் இருந்தால் செயல்படாமல் இருப்பது
ஒரு புத்திசாலித்தனமான தீர்மானம் அல்ல என்பதை உணருங்கள். அதிகம் பாதிக்கப்படாமல் செயலைச் செய்து முடிக்கும் வழிகளை சிந்தியுங்கள். இந்த சூழ்நிலைகளை சமாளித்து வென்றவர்கள் என்ன செய்தார்கள், எப்படி சமாளித்தார்கள் என்றும் கவனியுங்கள். அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
தோல்வியைப் பற்றிய பயம் என்றால் ஒரு உண்மையைத் திரும்பத் திரும்ப மனதில் பதியுங்கள். ”இந்த உலகில் எதிலுமே தோல்வி அடையாதவன் இது வரை தோன்றவில்லை. இனி தோன்றப் போவதுமில்லை”. நீங்களும் விதிவிலக்கல்ல என்பதை உணருங்கள். முன்பு கூறியது போல மாபெரும் வெற்றியாளர் கூட பத்து முயற்சிகளில் சராசரியாக நான்கு முயற்சிகளில் தோல்வி அடைகிறார்கள் என்றால் தோற்பதில் வெட்கப்பட என்ன இருக்கிறது?
மரியோ புஸோ எழுதிய “காட் ஃபாதர்” நாவலில் முக்கிய கதாபாத்திரமான காட் ஃபாதர் பயத்தையே அறியாதவனாக படைக்கப்பட்டது. அதற்கு முக்கியமான காரணம் அவன் ”ஒரு மனிதனுக்கு ஒரு விதி தான் இருக்க முடியும்” என்று விஷயத்தை உறுதியாக நம்பியது தான். என்ன நடக்குமோ அது நடந்தே தீரும் என்றால் பின் பயந்து நடுங்க என்ன இருக்கிறது? இது கூட ஒரு வகையில் பயத்தைப் போக்கும் சித்தாந்தமல்லவா?
நீங்கள் இறை நம்பிக்கை உடையவராக இருந்தால் உங்களுக்கு கடவுளின் துணை என்றும் இருப்பதாக நம்புங்கள். கடவுள் துணையாக இருக்கையில் எது தவறாகப் போக முடியும்? தன்னம்பிக்கையைக் குறைக்க முடிந்த பயம் கடவுள் நம்பிக்கை முன் சக்தியற்றுப் போவது நிச்சயம்.
அப்படியும் பயம் போகவில்லை என்றாலும் பயந்து கொண்டே ஆனாலும் செய்ய வேண்டியதைச் செய்ய ஆரம்பியுங்கள். செயல் புரிய ஆரம்பித்தவுடனேயே பெரும்பாலான பயங்கள் நம்மை விட்டு தானாக அகல ஆரம்பிக்கின்றன. சூரியனைக் கண்ட பனித்துளி போல அவை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகின்றன.
மொத்தத்தில் எப்படியாவது பயம் உங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முன் பயத்தை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள். முடிவில் பயம் அர்த்தமற்றது என்பதை நீங்கள் கண்டிப்பாக உணர்வீர்கள்.