Tuesday, December 30, 2014

தன்னம்பிக்கை தரும் பலன்

தன்னம்பிக்கை தரும் பலன் 

அணைத்து சக்திகளும் உன்னில் உள்ளன; உன்னால் எதையும், எல்லாவற்றையும் சாதிக்க முடியும்; இதில் நம்பிக்கை கொள்ளுங்கள், பலவீனன் என்று ஒரோபோதும் நம்பாதீர்கள். எழுந்திருங்கள், உங்களுக்குள் இறுக்கும் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்துங்கள். ”  
                                                                                                     -  சுவாமி விவேகனந்தர்.

வாழ்வில் விரக்தி என்று சொல்லாதீர்கள் அதில் தான்  தன்னம்பிக்கை உள்ளது . தோல்வி- விரக்தி- வேதனை- சோதனை- சோகம் -தனிமை- கடன்-  பயம் -  ஆதரவின்மை -ஏமாற்றம்- பசி- விரட்டியடிப்பு - ஊதாசினம் - இல்லாமை - கோழை குணம் - வெறுப்பு - நம்பியவர் கைவிட்டது - மோசம்போனது- மன நோய்  இவைகளையெல்லாம் ஒட்டு மொத்தமாக 35 வயதிற்க்குள்ளேயே சந்தித்தவன் நான் ஆனால் இவைகளால் எனக்கு கிடைத்த சக்தி தன்னம்பிக்கை ஒன்றுதான் . இதை ஒன்றை வைத்து எல்லாவற்றையும் வெற்றிகொள்ளலாம் என்பதை அறிந்தேன் . இப்போது நான் வெற்றியுடன் நிம்மதியாக இருக்கிறேன் . இந்த தன்னம்பிக்கையின் மகத்துவம் ஆரம்ப காலத்தில் புரியவில்லை ஆனால் வேதனையிலும் வாழ்வை வாழ்ந்து காட்டவேண்டும் என்று முனைந்த போதுதான் தன்னம்பிக்கையின் அர்த்தம் புரிந்தது . ஆனால் எனக்குண்டான தன்னம்பிக்கையை வைத்து யாரையும் பழிவாங்க முயன்றதில்லை திருத்த முயன்றிருக்கிறேன் .
                                                                            பிரம்ம வித்யா சிம்ஹம்  மோஹனவேல்

 வாழ்க்கை வளத்திற்கான பத்து அடிப்படை கோட்பாடுகள் முதலில் அறியுங்கள் பிறகு தன்னம்பிக்கையை அதில் கூடுதலாக வளர்த்துக்கொள்ளுங்கள்:

1. உயரிய எண்ணங்கள் - Mindfulness
2. வாழ்கையின் நோக்கம் - Life's Purpose
3. சுய உணர்வு - Self Awareness
4. குறிக்கோள் - Goals
5. செயல் - Action
6. ஆற்றல் - Energy
7. ஞானம் - Wisdom
8. தன்னம்பிக்கை - Self Confidence
9. அன்பு - Love
10. கடவுள் நம்பிக்கை - En*theos

1 . உயரிய எண்ணங்கள்:

நாம் நமது எண்ணங்களை மேன்படுத்தாவிட்டால் நமது வாழ்க்கை முன்னோக்கி செல்லாது. நமது வாழ்க்கையின் அடிப்படை நமது எண்ணங்களை பொறுத்தே அமைகிறது. இதையே புத்தர் "நமது எண்ணங்களே நாம்" என்று கூறுகிறார்.

2 . வாழ்கையின் நோக்கம்:

நமது வாழ்கையின் நோக்கம் என்னவென்று நாம் அறிந்துகொள்ள வேண்டும். நாம்  எதை செய்தால் நமது மனம் மகிழ்ச்சி அடைகிறது ? நாம் எதை செய்தால் நமது மனம் முழுவதுமாக முழ்கிவிடுகிறது, புத்துணர்ச்சி அடைகிறது என்று அறிந்துகொள்ள வேண்டும். 

3 . சுய உணர்வு:

"நீ உன்னை அறிந்தால்...உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்..." என்ற பாடல் தான் நினைவிற்கு வருகிறது. ஒருமுறை டெல்பி-யின் ஆரக்கிள் சாக்கரடிஸ் தான் உலகத்தின் தலை சிறந்த ஞானி என்று உரைத்தது, ஏன் என்றால் அவருக்கு தான்  தனக்கு என்ன தெரியாது என்று தெரியும் என்று கூறியது. நாம் நம்மை பற்றி எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறோம் என்பதை பொறுத்தே நம் வாழ்கையின் வெற்றி தோல்வி அமைகிறது.

4 . குறிக்கோள்: 

குறிக்கோள் இல்லாத வாழ்க்கை இருட்டில் விளக்கு இல்லாமல் நடப்பதற்கு சமம். நமக்கு குறிக்கோள் இல்லாவிட்டால் வாழ்க்கை என்னும் ஓடத்தில் காய்ந்த இலைகளை போல நாம் அடித்து செல்லப்படுவோம். குறிக்கோள் ஒரு கலங்கரை விளக்காக இருந்து நமது செயல்களை ஒருமுகப்படுத்துகிறது. 

5 . செயல்:

"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 
சொல்லிய வண்ணம் செயல்"
இதற்கு மேல் "செயல்"-லை நான் சொல்ல என்ன இருக்கிறது. 

6 . ஆற்றல்:

நமக்கு அளவிட முடியாத ஆற்றல் இருப்பதாக நம்மில் பலர் தவறாக எண்ணி கொண்டிருக்கிறோம். ஆற்றலுக்கு வரையரை உள்ளது. ஆற்றலை கையாளும் அறிவு நமக்கு தேவைபடுகிறது. தேவையில்லாத சொற்ப காரியங்களில் நமது ஆற்றலை செலவிட்டால் நாம் எவ்வாறு நமது குறிக்கோள்ளை அடையமுடியும்.
  
7 . ஞானம்:

நமக்கு வயது கூடி கொண்டே போனால் ஞானமும் அதிகரித்து கொண்டே செல்லும் என்பது சாத்தியம் அல்ல. நமக்கு வாழ்க்கை தரும் அனுபவங்களை அலசி ஆராய்ந்த பின்னரே நமக்கு ஞானம் தோன்றும்.

8 . தன்னம்பிக்கை: 

தன்னம்பிக்கை என்பது தூண். அதுவே நம்மை தோல்வியை கண்டு துழன்று விடாமல் நம்மை தாங்கி நிற்கும். தன்னம்பிக்கை என்பது ஒரு திறமை அதை நம்மால் வளர்த்து கொள்ள முடியும். 

9 . அன்பு:

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
பண்பும் பயனும் அது" - அன்புள்ள வாழ்கையே பயண்ணுள்ள வாழ்க்கை என்கிறார் உலகத்தின் முதல் சுய முன்னேற்ற நூலை எழுதிய நமது திருவள்ளுவர்.

10 . கடவுள் நம்பிக்கை:

மனிதனுக்கு இறை நம்பிக்கை மனித வாழ்க்கைக்கு தேவை. நமது வாழ்கையின் பல்வேறு இடங்களில் நாம் இறைவனை பார்க்கலாம். உன் மீது நம்பிக்கை கொண்டுள்ள இறையாற்றலின் மீது நீ நம்பிக்கைவை.

தன்னம்பிக்கையும்- வெற்றியும்- ஆரோக்கியமும்

உலகில் வாழும் எந்தவொரு சிறு உயிரினமும் தான் வாழும் சூழலில்  போராடி தான் உயிர் வாழ வேண்டும். போராடினால் தான் உயிர் வாழ முடியும். இது இயற்கை விதி. உலக பொது   நியதி.

*இதில் தன்னம்பிக்கை ஒன்றுதான் நம்மை வாழவைக்கும். உறவு பணம் பலம்  எல்லாம் இரண்டாம் பட்சமே .

*உன்னுள் இருக்கும் உன்னை நம்பினால் உன்னாலும் வெற்றிபெற முடியும். 

*நான் ஜெயிப்பேன் என்ற சொல்லும். என்னால் முடியாது என்ற சொல்லும் உன்னிடம் இருந்து தான் வருகிறது . உன் மனம் உறுதி பட்டால் உடல் தன்னால் ஒத்துழைக்கப்போகிறது பிறகு வெற்றி நிச்சயம் 

*நீ எதை கண்டும் பயந்து போகாதே . உன்னை சோர்வடைய எப்பொழுதும் அனுமதிக்காதே . 

*உனக்குள் ஒரு லட்சியத்தை வை அதற்க்காக பாடுபடு . பல தடைகள் வரத்தான் செய்யும் தடைகளை உடைத்துவிட்டுத்தான் செல்லவேண்டும் என்ற அவசியமில்லை தடைகளை எளிதாக தாண்டிச்செல் .முன்னேறு முன்னேறு முன்னேறிக்கொண்டே இரு . 

*ஒரு வெற்றிகிடைத்தால் அடுத்த வெற்றிக்கு உடனே ஆயுத்தமாகிவிடு.

*யாராவது தனக்கு உதவுவார்களா என எதிர்பார்க்காதே . நீச்சல் தெறியாதவன் தண்ணீரில் விழுந்தால் தன்னை காப்பாற்றிக் கொள்ள என்ன முயற்ச்சி செய்வானோ அதை நீ செய் .

*மற்றவர் உண்னை வெற்றிக்கொள்ள பார்க்கிறார்கள் நீ அவர்களை முந்திச்செல் . 

*உன் தன்னம்பிக்கையை விட சிறந்த தோழன் யாருமே இல்லை . தன்னம்பிக்கை இருந்தால் தான் இறைசக்தியும் வேலைசெய்யும் என்பதை நினைத்து பார் . தன்னம்பிக்கை சக்தி எவ்வளவு வலிமையானது என்று உனக்கே புரியும் . 

*மனதில் கொஞ்சம் தன்னம்பிக்கையை வை அது ஆயிரமாயிரம் தைரியத்தை உன்னுள் சேர்க்கும் . முயன்று பார் தெறியும் . முடங்கிவிடாதே . 

*உன் இறப்பு இப்போதைக்கு இல்லை அதுவரையில் வாழத்தான் போகிறாய் தன்னம்பிக்கையின் துனண கொண்டு வெற்றியை பதிவிட்டுச் செல்லேன் . 

*வெறுமனே சாவது ஒரு வாழ்க்கையா? . வாழ்க்கையை தோல்வியோடு முடிப்பதை விட கடைசி வரை வெற்றிக்காக போராடி மடிவதே மேல் . மடிவது குற்றமல்ல.அது போர்க்களமாக இருக்கட்டும்.

தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி?

ஒரு மனிதன் உயர்வதற்கான குணநலன் எது?

விடாமுயற்சி, கடின உழைப்பு, திட்ட மிடல் போன்ற பல குணநலன்கள் கூறப்படலாம். ஆனால் அவை எல்லாமே ‘தன்னம்பிக்கை’ என்ற அடித்தளத்திலிருந்து தான் உருவாகி வெளி வருகின்றன.

தன்னம்பிக்கை என்றால் என்ன?

“தன்னம்பிக்கை” என்பது ஓர் உந்து சக்தி – வாழ்வதற்கும், வாழ்வில் உயர்வதற்கும், எல்லோருக்கும் தன்னம்பிக்கை இருக்கிறதா? என்றால் இருக்கிறது!! ஆனால் அது போதுமான அளவு இருக்கிறதா? என்றால் இல்லை!! நம்மை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும் தன்னம்பிக்கை நிரம்பப்பெற்றவர்கள் சோர்வு அடைவதில்லை. துவண்டு போவதில்லை. தோல்வியானது நம்மைத் துவண்டு போகச் செய்கிறது என்றால், நம்முடைய தன்னம்பிக்கை யின் அளவு குறைவாக இருக்கிறது என்று பொருள். தாழ்வு மனப்பான்மை, தம்முடைய முயற்சியின் மீது நம்பிக்கையின்மை, மற்றவர் களுடைய வெற்றியைக் கண்டு வெதும்புதல், சோம்பேறித்தனம், மற்றவர்களோடு கலகலப்பாக இல்லாமல் இருத்தல் போன்றவை தன்னம்பிக்கை குறைவாக இருப்பதின் வெளிப்பாடு ஆகும். எனவே தன்னம்பிக்கையை அதிகப்படுத்தலும் (Increasing the self confidence) அவ்வாறு வளர்ச்சியுற்ற தன்னம்பிக்கையைக் குறைய விடாது நிலைநிறுத்திக் கொள்வதும் (Sustaining the increased self confidence) மிகமிக முக்கியம்.

தன்னம்பிக்கையை அதிகப்படுத்த SWOT

S ‘ Strength (பலம்), W ‘ Weakness (பலவீனம்), O ‘ Oppurtunity (வாய்ப்பு), T ‘ Threat (தடை).

உங்கள் பலம், பலவீனம் இவைகளைச் சரியாகப் பட்டியலிடுங்கள். உங்கள் வாய்ப்பு களையும் அவைகளைப் பயன்படுத்துவதில் உள்ள தடைகளையும் பட்டியலிடுங்கள். நீங்கள் பட்டியலிட்டுள்ள பலவீனங்களில் சிலவும், தடை களில் சிலவும் உண்மையிலேயே பலவீனமோ அல்லது தடையோ அல்ல என்பதை உணரலாம். எஞ்சியுள்ள பலவீனங்களையும், தடைகளையும் வெல்வதற்குண்டான முயற்சியில் முழுமூச்சுடன் இறங்குங்கள். இதற்கு உங்கள் பலங்களையும், வாய்ப்புகளையும் ஏற்கனவே உங்களிடம் இருக்கும் தன்னம்பிக்கையையும் பயன் படுத்துங்கள். இவ்வாறு உங்கள் பலத்தைக் கூட்டி, பலவீனத்தைக் கழித்து, வாய்ப்பினைப் பெருக்கி, தடைகளை வகுத்தால் தன்னம்பிக்கை தானாக வளரும். பலவீனங்களைக் குறைத்துத் தடைகளைத் தகர்க்கும் போது உங்கள் பலங்களும், வாய்ப்புகளும் தன்னம்பிக்கையை பலமடங்கு அதிகப்படுத்தும்.

தன்னம்பிக்கையைத் தக்க வைத்துக்கொள்ள…. TWOS

T ‘ Trust Yourself (உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்)

வெற்றிகளை வரிசையில் நிற்க வைக்க “என்னால் முடியும்” என்றநம்பிக்கை உங்கள் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருக்கட்டும்.

W ‘ Weakly review (வாரந்தோறும் உங்கள் வளர்ச்சியை மதிப்பீடு செய்தல்)

பலம், வாய்ப்புக்களைப் பெருக்கி, பலகீனம் தடைகளைத் தகர்த்து எறிந்ததன் மூலம் உண்டான உங்களது முன்னேற் றத்தை வாரந் தோறும் மதிப்பீடு செய்து, அது மென்மேலும் மேல்நோக்கிச் செல்லுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

O ‘ Observing your target schedule (இலக்கை எட்டுவதற்கான திட்டங்களைக் கடைப்பிடித்தல்)

நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதற் கான திட்டங்களை முறை யாகக் கடைப்பிடிக்க வேண்டும். உங்களது அதிகரிக்கப்பட்ட தன்னம்பிக்கை இதற்குப் பெரிதும் உதவும்.

S ‘ Setting your Sub-Conscious Mind (ஆழ் மனதை முறைப்படுத்துதல்)

“”என்னால் முடியும்”

“”என் இலக்கை அடையத் தேவையான முயற்சியும் தெம்பும் என்னிடம் உள்ள தன்னம் பிக்கையினால் கைகூடும்”.

“என் தன்னம்பிக்கை குறைவதில்லை”

இவைகள் அடிக்கடி உங்கள் ஆழ்மனதில் படிய வையுங்கள். மேற்கண்டவை உங்கள் அதிகரிக் கப்பட்ட தன்னம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள உதவும்.

வீழ்வது இழிவன்று! வீழ்ந்தே கிடப்பதுதான் இழிவு.

எழுந்து நில்லுங்கள் – மீண்டும் முயலுங்கள்.

தன்னம்பிக்கை உங்களைத் தைரியப்படுத்தட்டும்

எடுத்த காரியங்கள் யாவினும் ஏற்றமிகு வெற்றி கிட்டும்.
தன்னம்பிக்கை வளர்ப்பது எப்படி?

வெற்றி என்பது, எது பலன் தராது என்பதைக் கண்டுபிடிப்பது மட்டுமல்ல, எது பலன் தரும் என்பதைக் கண்டறிவதும்தான். வெற்றிப் படிக்கட்டுகளில் வீறுநடைபோடத் தேவை தன்னம்பிக்கை. தன்னைப் பற்றியும், தனது திறமையைப் பற்றியும், தனது பலம், பலவீனம் பற்றியும் சரியாக மதிப்பீடு செய்வதால் உருவாகும் நம்பிக்கை இது.

தன்னம்பிக்கை உள்ளவர்கள் தங்களையே குறைகூறிக் கொண்டிருக்க மாட்டார்கள். அதைப் போலவே தங்களைப் பற்றி சுயபுராணம் பாடுவதை ஒரு கலையாகக் கொண்டிருக்க மாட்டார்கள். தன்னம்பிக்கையை குழந்தை பருவத்திலேயே வளர்க்க முடியும். குழந்தைகளை சுதந்திரமாக வளரவிட்டு அவர்களுக்கு இளம் பருவத்திலேயே தன்னம்பிக்கையூட்டி அவர்களை வளர்க்க முடியும். குழந்தைகளைச் சுயமாக எதையும் செய்ய விடாமல், யாருடனும் பழகவிடாமல் கட்டுக்குள்ளேயே வளர்ப்பது நாளடைவில் அந்தக் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை இல்லாமல் தாழ்வு மனப்பான்மை உருவாக வழி ஏற்பட்டுவிடும்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புதைந்து கிடக்கும் திறமைகளை வெளியே கொண்டுவரத் தன்னம்பிக்கை அவசியம். நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை ஒரு செயலை வெற்றிகரமாக செயல்படுத்த உற்சாகத்தை அளிக்கிறது. இந்தக் காரியம் வெற்றிபெறாது, பிறகேன் முயற்சிகள் வேண்டும் என்று நினைத்துக் கொண்டு காரியங்களை அணுகினால் அந்தக் காரியம் வெற்றி பெறாது. நினைக்கிற எந்த முயற்சியும் நடந்தே தீரும். முயற்சி தோற்காது என்ற எண்ணங்களும் சிந்தனைகளும் எப்போதும் தேவை.   தன்னம்பிக்கையின் மிகப்பெரிய எதிரி பயம்தான். எந்தக் காரியத்தையும் செய்யவிடாமல் தடுக்கக்கூடிய மிகப் பெரிய சக்தி இது. பயத்தை வெல்ல நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

முடிவு எடுக்கத் தயங்குபவர்கள், எடுத்த முடிவை அமுல்படுத்தத் தயங்குபவர்கள், மற்றவர்கள் சொல்படி முடிவெடுப்பவர்கள் பெரும்பாலும் தன்னம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பார்கள். தெரிந்தவர்களிடம் ஆலோசனை கேட்பது தவறு கிடையாது. எந்தக் கருத்தையும் பரிசீலிப்பதும் தவறல்ல. ஆனால் முடிவு நாம் சிந்தித்து எடுக்க வேண்டும். சிறிய சிறிய விஷயங்களில் சுய சிந்தனையுடன் முடிவெடுக்கும் பழக்கம் வந்தால், பெரிய விஷயங்களில் முடிவு காண்பது எளிது. தன்னம்பிக்கை மனதில் இருந்தால் மட்டும் போதாது. செயலிலும் பிரதிபலிக்க வேண்டும். மற்றவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொண்டு அவர்களுக்கு யோசனைகளைக் கூறி உதவுவது நம்மிடம் படிப்படியாக தன்னம்பிக்கையை வளர்க்கும். அது போன்ற பிரச்சனைகள் நமக்கு வரும் போது அவற்றை எளிதாக எதிர்கொள்ள முடியும்.   யதார்த்த அறிவு, தெளிவான குறிக்கோள், அதை நோக்கியச் செயல்பாடு, தோல்வியைக் கண்டு தடுமாறாத மனம், எந்த இடையூறு வந்தாலும் பாதையிலிருந்து விலகிவிடாத மன உறுதி, கடும் உழைப்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றுடன் எந்தக் காரியத்தில் இறங்கினாலும் வெற்றி நம் கையில்!

தன்னம்பிக்கை!

புயலில், மரத்தைத் தாங்கி நிற்கும் ஆணிவேர் போல், வாழ்க்கைப் புயல் நம்மைச் சாய்த்து விடாமல் காப்பது தான் தன்னம்பிக்கை. உலகமே ஏசினாலும், தூற்றினாலும், நம்மைத் தளர விடாமல் தாங்கிப் பிடிப்பது தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை, நம் சுயத்தின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை; நம் பலத்தின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை.

எது நம் தன்னம் பிக்கையை தீர்மானிக்கிறது?

நாம் இதுவரை சாதித்த சாதனைகள், பெற்ற விருதுகள், கிடைத்த பாராட்டுக்கள், நம் குடும்ப மற்றும் சமூகப் பின்னணி, நாம் படித்த பள்ளி மற்றும் கல்லூரியின் தரம், நம்மைப் பற்றி நாம் வரைந்து வைத்திருக்கும் சுயசித்திரம், எல்லாவற்றிக் கும் மேலாக, "நான் சாதிக்கப் பிறந்தவன், எப்படியும் சாதித்துக் காட்டுவேன்' என்கிற வைராக்கியம், இவையெல்லாம் நம் தன்னம்பிக்கையைத் தீர்மானிக்கிறது.

தன்னம்பிக்கை எதற்கு வேண்டும்?

தன்னம்பிக்கை ஊன்று கோல் போன்றது. கால் தடுக்கும்போது, கீழே விழுந்து விடாமல் ஊன்று கோல் தாங்கிப் பிடிப்பது போல, நாம் தோல்வியைச் சந்திக்கும் போதும், நம்முடைய முயற்சி, நாம் எதிர்பார்க்கும் பலனைத் தராத போதும், நம்மைச் சுற்றியுள்ள உலகம், நம் தகுதிக்கும், திறமைக்கும் உரிய அங்கீகாரம் தராத போதும், நம்மை மனம் தளர விடாமல் தாங்கிப் பிடிப்பது தன்னம்பிக்கைதான்.

தன்னம்பிக்கையை வளர்க்க முடியுமா? முடியும். இதோ சில ஆலோசனைகள்:

* இன்னொரு மனிதனால் சாதிக்க முடிந்த எந்தச் செயலையும், நம்மாலும் சாதிக்க முடியும் என்கிற எண்ணத்தை, நம் ஆழ்மனதில் பதிய வைக்க வேண்டும். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், முதன் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் மோதுவதற்காக, மேற்கிந்திய தீவுகளுக்குச் சென்றிருந்தார். அப்போது, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர், "வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள், அசுரத்தனமாகப் பந்து வீசுவர்... நீங்கள் சற்று எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்' என்று சொன்னதற்கு, சுனில் கவாஸ்கர், "என்னால் பந்தைப் பார்க்க முடியும்தானே...' என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தாராம். என்ன ஒரு தன்னம்பிக்கை பாருங்கள்.
* பொறுத்தார் பூமி ஆள்வார். நம் இலக்கை அடையும் வரை, பொறுமை காக்க வேண்டும். முதல் முயற்சியிலேயே சோர்ந்து விடக்கூடாது. மலை உச்சியை அடைவதற்கு, படிப்படியாகத்தான் ஏற முடியும். ஒரே தாவலில் அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்குச் செல்ல முடியாது.

* நம்முடைய இலக்கை நோக்கி முன்னேறும் வெற்றிப் பாதைகளில், ஒவ்வொரு மைல் கல்லை கடக்கும்போது, முதுகில் தட்டிக் கொடுக்கலாம். வெற்றியை அடக்கமாகவும், எளிமையாகவும் கொண்டாடலாம். அப்போது உற்சாகமும், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

* நாம் எடுத்த முயற்சியில் பலன் கிட்டும் வரை, உறுதியாக இருக்க வேண்டும். மொபைல் போனை தினமும் ரீசார்ஜ் செய்வது போல, தினமும் பத்து நிமிடம், தனியே அமர்ந்து நம் முயற்சி, வெற்றியில் முடியும் என்று திரும்பத் திரும்ப நமக்கு நாமே சொல்லிக் கொள்ள வேண்டும்.

* நம்முடைய பலம் மற்றும் பலவீனத்தை சீர்தூக்கிப் பார்த்து, ஒரு செயலில் இறங்கிய பின், "என்னால் முடியுமா?' என்ற சந்தேகம் எழக்கூடாது.

* நம்முடைய உடை, சூழ்நிலைக்கு ஏற்ப இருக்க வேண்டும். ஆள்பாதி, ஆடைபாதி. உடை நம் வேலையை, பதவியை, அந்தஸ்தை, எல்லாவற்றிற்கும் மேலாக தன்னம்பிக்கையை பிரதிபலிக்கட்டும்.

* நம்முடைய முயற்சியில் தடங்கல் ஏற்படும்போது, தலையில் கையை வைத்து, "ஐயோ இப்படி ஆகிவிட்டதே!' என்று புலம்பும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

தன்னம்பிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருப்பவை எவை? அதை எப்படிக் களைவது:

* அவநம்பிக்கை, என்னால் எப்படி முடியும்? நான் எடுத்த காரியம் கைக்கூடாமல் போய் விடுமோ என்கிற எண்ணங்களை மனதிலிருந்து அறவே அகற்ற வேண்டும்.

* தாழ்வு மனப்பான்மை, வறுமை மற்றும் வளர்ந்த சூழ்நிலையால் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள், முதல் தலைமுறை செல்வந்தர்களின் வரலாற்றைப் படித்துப் பாருங்கள். பெரும்பாலானோர் சிறுவயதில், கடும் வறுமையில் வாடியிருப்பர். பல அவமானங்களைச் சந்தித்திருப்பர். ஆக, வறுமை நம்முடைய வளர்ச்சிக்கு உத்வேகமாக இருக்க வேண்டுமே தவிர, முட்டுக் கட்டையாக இருக்கக் கூடாது. அதுபோல, குறைவான கல்வியறிவு, எளிமையான குடும்பச் சூழ்நிலை, வழி நடத்த யாரும் இல்லை போன்ற காரணங்கள், நம்முடைய வைராக்கியத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டுமே தவிர, நம்மை பலவீனப் படுத்தக் கூடாது.

* வறுமை - நம்மையும், நம் அடுத்த தலைமுறையினரையும் வளர விடாமல் வாட்டி வதைக்கும் ஒரு நோய். இந்த நோய்க்கான காரணத்தை ஆராய்ந்து, அதிலிருந்து மீள வழிகளை ஆராய வேண்டும்.

* தோல்வி - நாம் எடுக்கும் முயற்சிகளில், சில தோல்வியடையலாம். ஆனால், நாம் வாழ்க்கையில் வெற்றி பெற்றோமா என்பதில் தான், கவனம் இருக்க வேண்டும்.

* நாம் வளர்ந்த சூழ்நிலை - இது முடியும், இது முடியாது என்று சொல்லி வளர்க்கப்படும் போது, சிலருக்குத் திறமையும், தகுதியும் இருந்தும், முயற்சி செய்யாமல் இருந்து விடுகின்றனர்.

நம்முடைய வளர்ச்சியைத் தீர்மானிப்பது - தன்னம்பிக்கை:

நம்மைச் சுற்றியுள்ள உலகம் நம்மை ஏளனப்படுத்தலாம், உதாசீனப்படுத்தலாம், நம் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடலாம், நம்மைப் பலவீனப்படுத்தலாம், நமக்கு உதவிக் கரம் நீட்டத் தயங்கலாம், நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய சன்மானம், பாராட்டு, அங்கீகாரத்தைக் கொடுக்க மறுக்கலாம். ஆனால், நம் தன்னம்பிக்கை, ஆசை, கனவு, வைராக்கியம், சுயமரியாதையை யாராலும் தட்டிப் பறிக்க முடியாது.
மனித மூளை அற்புதமானது. நாம் யாராக வேண்டும் என்று திரும்பத் திரும்ப நினைக்கிறோமோ அவராக மாறுவது உறுதி. "நம்மால் இயலாதது' என்று தான் நமக்கு நாமே எல்லைக் கோட்டைக் கிழித்துக் கொள்கிறோம்.

நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது எப்படி?

மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வெற்றிகரமான முடிவுகளை எதிர்பார்க்கும் ஒரு சிறந்த அணுகுமுறையே நேர்மறை எண்ணங்கள் (positive thinking) எனப்படுகிறது. எல்லோரும் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறோமா என்றால் பலரிடம் பதிலிருக்காது. வாழ்க்கையில் பல பேர் பத்து சதவிகிதமாவது எதிர்மறை எண்ணங்களை (negative thinking) கொண்டிருப்நேர்மறை எண்ணங்களால் பல நல்ல விஷயங்கள் ஒருவரது வாழ்வில் நடைபெறுகின்றன. 

நேர்மறை எண்ணங்களால் ஆயுள் காலம் அதிகரிக்கிறது. மன அழுத்தம் குறைகிறது. துன்பங்களை தாங்கும் உந்துசக்தி கிடைக்கிறது. நல்வாழ்வு அமைகிறது. இதயநோயினால் ஏற்படும் இறப்பு ஆபத்து குறைகிறது. கஷ்டமான காலங்களில் கஷ்டங்களை தாங்கி, மன அழுத்தத்தை சமாளிக்கும் திறனை அளிக்கிறது. இப்படி நேர்மறை எண்ணங்களை பற்றி பல சிறந்த விஷயங்களை கூறிக்கொண்டே போகலாம். இனி எவ்வாறெல்லாம் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு வாழ்வில் மகிழ்ச்சியை அனுபவிக்கலாம் என்பதை இங்கு பார்ப்போம். 

1. நகைச்சுவை உணர்வை வெளிக்கொண்டு வரவும்: 

தினசரி நிகழ்வுகளில் ஒரு நகைச்சுவையான விஷயத்தை நாட வேண்டும். வாழ்க்கையில் சிரிக்க முடிந்த அளவில் சிரித்தால், குறைந்த மன அழுத்தத்தை உணர்வோம். 

2. நேர்மறை எண்ணங்களை கொண்ட மனிதர்களை அமைத்துக் கொள்ள வேண்டும்: 

வாழ்க்கையில் வரும் மனிதர்கள் நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு ஆதரவாக நல்ல பல அறிவுரைகளை தந்து, உங்களது கருத்துக்களை காது கொடுத்து பொறுமையுடன் கேட்பவராக இருப்பவர்களோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும். இதனால் அவர்கள் மூலம் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள முடியும். ஆனால் எதிர்மறை எண்ணங்களை உடையவர்களோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டால், அவர்கள் மூலம் மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பை பெறுவீர்கள். இதனால் மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிவிடும். 

3. சுய சிந்தனை மூலம் நேர்மறை எண்ணங்களை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்: 

நேர்மறை எண்ணங்களை சிந்திக்க சில வழிகளை பின்பற்றலாம். உதாரணத்திற்கு ‘இதற்கு முன் நான் இந்த செயலை செய்ததே இல்லை' என்று ஒரு விஷயத்தை யோசிப்பதை விட, ‘புதிதாக ஒரு விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது' என்று நேர்மறையாக சிந்திக்க வேண்டும். அதேபோல் ‘இந்த செயலை செய்ய மிகவும் கடினமாக இருக்கிறது' என்று எண்ணாமல், நேர்மறையாக ‘நான் வேறொரு கோணத்தில் இதை அணுகி சமாளிப்பேன்' என்று சிந்திக்க வேண்டும். இப்படி எதிர்மறையாக சிந்திக்காமல் நேர்மறையாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும். 

4. மற்றவர்களுக்கு உதவலாம்: 

மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்களை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காமல், அதிலிருந்து விடுபட மற்றொரு நபருக்கு ஏதாவது நன்மை செய்ய முயற்சி செய்யலாம். இவ்வாறு செய்யும் போது உங்களது தவறான எண்ணங்களிலிருந்து கவனத்தை வேறு நல்ல விஷயத்தில் திசை திருப்ப முடியும். மற்றவருக்கு செய்யும் நன்மைகளால் மனத்திருப்தியும் ஏற்படும். இதனால் நல்ல எண்ணங்கள் மனதில் உருவாக ஒரு வாய்ப்பு கிடைக்கும். 

5. நேர்மறையான மேற்கோள்களை படிக்கவும்:

நேர்மறையான மேற்கோள்களை உங்களது கணிணியில், பிரிட்ஜ் கதவுகளில் மற்றும் முகம் பார்க்கும் கண்ணாடியில் காகிதத்தில் எழுதி ஒட்டி வைக்கலாம். இதனால் ஒவ்வொரு முறையும் இவற்றை பார்க்கும் போது அவற்றை படித்து நல்ல எண்ணங்களை மனதில் விதைக்கலாம். 

6. தியானம் செய்யவும்: 

மனதை அமைதிப்படுத்தி நல்ல எண்ணங்களை உருவாக்குவதில் தியான முறையை பின்பற்றலாம். அதற்கு அமைதியாக கண்களை மூடிக் கொண்டு ஒரு மணி நேரம் எந்த கவலை தரும் விஷங்களை பற்றி சிந்திக்காமல் ஒரே விஷயத்தை நேர்மறையாக சிந்திக்க வேண்டும். ஆரம்பத்தில் இது கடினமாக இருக்கும். ஆனால் தொடர்ந்து செய்து வர நேர்மறையான எண்ணங்களால் மனம் சூழப்பட்டு எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையில் வாழலாம்.

எதிர்மறை எண்ணங்களை தொடர்ந்து வளர்த்துக் கொள்பவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் திணறுவர். ஆனால் நேர்மறை எண்ணங்கள் நம்பிக்கையை ஆதாரமாக பயன்படுத்தி மன அழுத்தத்தை போக்க பேருதவி புரிகிறது.

தன்னம்பிக்கை சந்தோசம் பெற சிந்தனை துளிகள்

01.வேலை செய்யச் செய்ய உங்கள் நடத்தை மேம்படும். சுய கட்டுப்பாடு, சுறுசுறுப்பு, மன உறுதி, திருப்தி போன்ற நூற்றுக்கணக்கான நல்ல குணங்கள் ஏற்படும்.

02. வாழ்வின் பெருமைக்கும், இனிமைக்கும் காரணமான மாபெரும் எண்ணங்களை மாபெரும் மனங்கள் இந்தப் புவியில் விட்டுச் சென்றுள்ளன. அவற்றை தேடிப் பெறுவது நமது கடமை. அதைச் செய்யாவிட்டால் இழந்துவிடுவோம்.

03. நீங்கள் நூல்களைப் படிக்கும்போது சில நல்ல வார்த்தைகள் உங்களைப் பாதிக்கும், அவை உங்களுக்காகவே எழுதப்பட்டது போலிருக்கும். அவற்றை மறவாது இதயச் சுவரில் பதித்து வையுங்கள்.

04. நமக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் எப்படி வாழ வேண்டும், எப்படி சாக வேண்டும் என்பதை கற்றுத்தந்துவிட்டே இறந்துள்ளார்கள், அவற்றை அறிந்தும் கடைப்பிடிக்க மறுப்பதே சோகமான விடயம்.

05. சிறந்த சிந்தனைகளுக்கு ஒரு காலமும் வயதாகாது. சொல்லப்பட்ட காலத்தில் எப்படி புதுமையாக இருந்ததோ அப்படியே இன்றும் வீரியத்துடன் இருக்கும்.

06. நமக்கு முன்னர் வாழ்ந்த சரித்திரகால புருஷர்களை மனதின் முன் நிறுத்தி வாழ்ந்தால் அவர்களுடைய சக்தி எங்களை பாதுகாக்கும்.

07. வாழ்வின் அர்த்தமும் தேடலும் சந்தோஷம்தான், மனித வாழ்வின் நோக்கமும் இறுதி இலட்சியமும் அதுதான்.

08. திருப்தியான மனமே சந்தோஷத்தின் அடிப்படை, அந்த அடிப்படை உருவாவது விருப்பமாக செய்யும் வேலையில் இருந்துதான்.

09. வேலையைச் சார்ந்துதான் சந்தோஷம் இருக்கிறது என்பதை ஒரு சிலர்தான் உணர்ந்திருக்கிறார்கள். சந்தோஷம் உங்களை விஞ்ச வேண்டும் நீங்கள் அதை விஞ்சக்கூடாது.

10. ஒவ்வொரு நாள் காலையிலும் புன்னகையுடன் விழித்தெழுந்து, ஒவ்வொரு நாளும் தரப்போகும் நல்ல வாய்ப்புக்களை வரவேருங்கள். காலை எழுந்ததும் உங்களுக்கு செய்வதற்கு ஒரு வேலையைத் தந்த இறைவனுக்கு நன்றி கூறுங்கள்.

11. சிறந்த சிந்தனைகளால் உங்கள் மனதை செழுமையாக்குங்கள். ஒவ்வொரு தலைமுறையும் பழமை தந்த புதையலை சந்தோமாக அனுபவிக்கிறது. பின்னர் புதிய சொற்களை அந்தச் சொற்களில் சேர்த்து பெரியதாக்கி எதிர்கால தலைமுறைக்கு வழங்குகிறது.

12. நம்மிடம் இருப்பதில் திருப்தியடைவதுதான் உன்னதமான மிகவும் பாதுகாப்பான செயலாகும். நீங்கள் எல்லாவற்றிலும் முதலிடம் பிடிக்க இயலாது என்பதை உணர்வீர்களாக.

13. நிகழ்காலத்தை சந்தோஷமாகக் கழிக்க வேண்டும். கடவுளுக்கும், மனிதனுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை செய்வதுதான் சந்தோஷம்.

14. எப்போதும் நம்மிடம் கவனம் இருக்க வேண்டும், படபடப்பு இருக்கக் கூடாது. அளவற்ற செல்வம் நம்மிடம் இருக்கிறதோ இல்லையோ சமமான மன நிலையுடன் வாழ வேண்டும்.

15. நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்களோ அதே நிலையில் திருப்தியடையக் கற்றுக் கொள்ளுங்கள்.

16. நாம் எங்கும் வாழலாம் ஆனால் நாம் தேர்ந்தெடுத்த சூழல்தான் நமக்கு வாழ்வில் இன்பம் தரும்.

17. நமது நிலை இந்தப் பிரபஞ்சத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடாது என்பதை புரிந்து, தனது சொந்த சக்தியை அறிந்து அமைதியாக வாழப் பழக வேண்டும்.

18. ஒரு மனிதனோ அல்லது ஓர் இனமோ சந்தோஷமின்றி இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அவர்களுடைய சொந்தத் தவறுதான் என்று உணர வேண்டும். காரணம் கடவுள் எல்லோரையும் சந்தோஷமாகத்தான் படைத்திருக்கிறார்.

19. நீங்கள் யார்.. என்னவாக இருக்கிறீர்கள் என்பதில் சந்தோஷம் இல்லை, இப்போது என்ன செய்கிறீர்கள் என்பதில்தான் சந்தோஷம் இருக்கிறது.

20. நீங்கள் உங்களுக்காக மட்டும் சுயநலத்துடன் வாழ்ந்தால் ஒரு கட்டத்தில் களைப்பு ஏற்படும், ஆகவே சக மனிதர்களுக்காகவும் அர்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.

21. காலம் கடப்பதற்கு முன்னதாக உங்கள் சக்தியை இந்தச் சமுதாயத்திற்காகப் பயன்படுத்துங்கள்.

22. அறிவோடு அன்பைக் கலந்து, நகைச்சுவை உணர்வோடு, எதிர்கால நம்பிக்கையோடு ஒரு வார்த்தை சொன்னால் அதைவிட பெரியது வேறெதுவும் இருக்க முடியாது.

23. பெறுவதிலோ வைத்திருப்பதிலோ அல்ல தருவதில்தான் சந்தோஷமே இருக்கிறது.

24. சந்தோஷம் என்பது நறுமணம் போன்றது. அது உங்களிடம் இல்லாவிட்டால் உங்களால் மற்றவருக்கு ஒரு துளிகூட தெளிக்க இயலாது.

25. தனக்குத்தானே திருப்தியாக இருக்க முடியாத ஒரு மனிதனால் சந்தோஷமாக இருக்க முடியாது, சந்தோஷத்தை மற்றவர்களுக்கு வழங்கவும் முடியாது.

எதையம் வெல்லும் நட்பு ஒன்றே
            
* தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன் வேறு எதற்கும் வசப்படமாட்டான். அவனே வாழத் தகுதியுள்ளவன்.

* நம்மை நாமே வெறுக்காமல் இருப்பது முதற்கடமை. முன்னேற்றமடைவதற்கு முதலில் சுயநம்பிக்கை அவசியம்.

* உலக நன்மைக்காக அவசியமாயின் உங்களிடமுள்ள அனைத்தையும் தியாகம் செய்யுங்கள், தூய்மை உடையவன் தான், நல்ல சிந்தனையாளனாக, பகுத்தரவாளனாக, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக ஆகிறான்.

* உங்களை ஓர் ஏழை என்று எப்போதும் நினைக்காதீர்கள், பணம் சக்தியல்ல, பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால் அது தவறான வழியிலேதான் தேடப்படும்.

பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை விற்று விடாதே.

பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம். அது இல்லாத வனுக்குக் கவலை சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை.. பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள்

* வேலை செய்யாமல் பிறரிடம் பணம் பெறுவது பிச்சை எடுப்பதற்கு சமம். எவ்விதமான வேலையும் இல்லாமல் இருப்பவனைப் பார்ப்பது கூட, நமக்குத் தீமையை உண்டாக்கும்.
...
* பழிக்குப்பழி வாங்கியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் தண்டனை தரும் அதிகாரம் மனிதர் யாருக்கும் கிடையாது.

* பிறர் குற்றங்களை மன்னிக்கும் உயர்ந்த குணம், குற்றமற்ற நல்லவர்களிடம் மட்டுமே இருக்கும்.

* நியாயத்தராசை வைத்திருப்பவனின் கையில் ஆள்பலம், சொல்வலிமை, பணம் போன்ற எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

* பிச்சை எடுப்பவனிடம் மான உணர்வு இருக்காது. உள்ள உறுதி மிக்கவன் யாரிடமும் இலவசமாக எதையும் பெற விரும்புவதில்லை.

* வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு. முதலில் தன்னம்பிக்கை வேண்டும். அடுத்தபடியாய் உங்களுக்கு இறை நம்பிக்கை கூட அவசியம் இல்லை.. உங்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.

விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி

* உடலை வெற்றி கொள்ள முயலுங்கள். அது எப்போதும் நீங்கள் இட்ட கட்டளைக்குப் பணியும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

* அகங்காரத்தைக் களைந்தால் நல்ல சிந்தனையும் பகுத்தறிவும் , ஞானமும் ஏற்படும். அகங்காரத்தைக் களைந்ததால் தான் புத்தருக்கு ஜானம் பிறந்தது,

ஆரோக்கியம் வரி கட்டத் தேவையில்லாத செல்வம்.

நாம் பேசுவது விதைப்பதற்குச் சமம். கேட்பதோ அறுவடைக்கு சமம்.

உண்மையை மிதித்தால் அது உடனே வாளாக மாறிவிடும்.

சிரிப்பதற்காக செலவிடப்பட்ட நேரம் கடவுளுடன் செலவிடப்பட்ட நேரமாகும்.

பத்து முறை வெற்றி பெறுவதைக் காட்டிலும் ஒரு முறை சமாதானம் காண்பது மேல்.

புத்தகங்களும்,நண்பர்களும் குறைவாக இருந்தாலும் நல்லவைகளாக இருக்கட்டும்.

எப்போதும் தோல்வியை தனியே பிரித்துப் பார்க்காதீர்கள். அது வெற்றியின் ஒரு அம்சம் என்பதை உணருங்கள்.

சிறிய மீன்களுக்குப் பேசக் கற்றுக் கொடுத்தால் அவை தங்களைத் திமிங்கலங்கள் என்று நினைத்துக் கொண்டு பேசத் துவங்கும்.

வயிறு நிறைந்துள்ள போதும் உண்பவன் தன பற்களாலேயே தனக்கு சவக்குழி தோண்டுபவன்.

கடைக்காரனிடம்  தவணைக்குப் பதில் சொல்லி அவமானப்படுவதை விட உன் வயிற்றுக்குத் தவணை சொல்லி உணவைக் குறைத்துக் கொள்.

வாசலில் நல்ல வரவேற்பு இல்லாத விருந்துக்கு செல்வதை விட பட்டினியாக இரு.

கசாப்புக் கடைக்காரனிடம் பல் இளிப்பதை விட  மாமிசம் உண்பதைவிட்டுவிடு.

பிச்சை கேட்பது குற்றமல்ல.அது அறிவுப் பிச்சையாக இருக்கட்டும்.

தேடுவது குற்றமல்ல.அது புதிய கண்டு பிடிப்பாக இருக்கட்டும்.

மடிவது குற்றமல்ல.அது போர்க்களமாக இருக்கட்டும்.

மாபெரும் சக்தி கொண்டவன்...
மனமே உன்னை 
புரிந்து கொண்டேன் 
நீ மாபெரும் 
சக்தி கொண்டவன் 
தினமும் என்னை திசை 
மாற்றுகிறாய் 
கணத்தில் நான் 
கவிழ்ந்து விடுகிறேன் 
குணத்தில் எனக்கு 
குறை நேர்கிறது 
பணத்தால் முடியாதது 
ஒன்று தான், மனமே 
உன்னை வெல்ல!!!

நாம் வெற்றி பெற முதல் தேவை என்ன? முயற்சியா? பணமா? சிபாரிசா? என்றால் முதலில் இவைகளை விட மிக மிக முக்கிய தேவை மன தைரியம் – தன்னம்பிக்கை. முயற்சி செய்து செய்து ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது என்று மனம் தளர்ந்தால் வரப் போகிற வெற்றி, தோல்வியாக மாறி விடும். மன தைரியம் இருந்தால்தான் தோல்வியை கூட தோல்வியாக எண்ணாமல் அனுபவ பாடமாக்கி வெற்றியை கிடைக்கச் செய்யும். மன தைரியம், உடல் பலத்தை தரும். எந்த செயலையும் ஈடுபாடுடன் செய்ய வைக்கும். உடல் நலம் சரியில்லாமல் மருத்துவரிடம் சென்றால் அங்கே அந்த மருத்துவர் கேட்கும் முதல் கேள்வி, உங்களுக்கு நன்றாக தூக்கம் வருகிறதா,? நன்றாக பசி எடுக்கிறதா? என்றுதான் கேட்பார். இவை இரண்டும் சரியாக இருந்தால் உடலில் பெரிய பிரச்னை இல்லை. மன அமைதியோடு இருக்கிறீர்கள் என்பதை மருத்துவர் புரிந்துக்கொள்வார். மனஅமைதி இருந்தால்தான் தூக்கம் வரும், சோறும் வயிற்றில் இறங்கும். மருத்துவர்கள் நோய்களுக்கு கொடுக்கும் மருந்தும் வேலை செய்யும். மனகவலை உடலை மட்டும் கொல்லாது. வாழ்க்கையில் கிடைக்கும் சின்ன சின்ன சந்தோஷத்தையும் சேர்த்து கொன்றுவிடும். ஒரு அரசர் தன் மந்திரிகளை அழைத்து, “நான் கேட்கும் கேள்விக்கு யார் சரியான பதில் சொல்கிறீர்களோ அவர்களுக்கு சிற்றரசர் பதவி தருகிறேன்.” என்றவர், “என் கேள்வி இதுதான்” என பேச தொடங்கினார். “ஒருவர் வெற்றியடைந்த பிறகு, அந்த நபரிடம் ஒரு வார்த்தை சொன்னவுடன் அந்த வெற்றியை பெற்ற நபர் மனம் கலங்க வேண்டும். அதே வார்த்தையை தோல்வியடைந்த நபரிடம் சொன்னால், அந்த தோல்வியடைந்த நபர் அந்த வார்த்தையை கேட்டு மகிழவேண்டும். அப்படி என்ன வார்த்தை சொல்வீர்கள்.?” என கேட்டார் மன்னர். இதை கேட்ட மந்திரிகளுக்கு குழப்பம். “அது எப்படி? ஒரே வார்த்தையை வெற்றி பெற்றவனிடம் சொன்னால் அவன் கலங்க வேண்டும், தோல்வியடைந்தவனிடம் சொன்னால் அவன் மகிழவேண்டுமா? அது என்ன வார்த்தையாக இருக்கும்?” என்று தலையை பீய்த்துக் கொண்டு யோசித்தார்கள். அப்போது ஒரு மந்திரி மட்டும் எழுந்து, “அரசே, வெற்றியடைந்தவனிடமும் தோல்வியடைந்தவனிடமும், “இதுவும் மாறும்” என்ற இந்த வார்த்தையை சொன்னால் போதும். வெற்றி பெற்றவன் வருங்காலத்தை நினைத்து அஞ்சுவான், தோல்வியடைந்தவன் மன தெளிவும் நம்பிக்கையும் பெற்று மகிழ்ச்சி அடைவான்.” என்றார். அரசர், அந்த அமைச்சரை பாராட்டி பரிசுகளை தந்து, சிற்றரசர் பதவி வழங்கி கௌரவித்தார். ஆம். வாழ்வில் எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறும். அந்த மாற்றத்தை சர்வ சாதாரணமாக எடுத்துக்கொண்டோம் என்றுச் சொன்னால், தோல்வியை கண்டு கலங்கி, மனம் துவண்டு போகாது. மனஅழுத்தம் என்பதும், குழப்பம் என்பதும் வாழ்நாள் முழுவதும் நம்மை நெருங்காது. “வருவதை கண்டு மயங்காதே. போவதை கண்டு கலங்காதே மனமே“ என்றார் ஒரு கவிஞர். ஏற்றமும் – இறக்கமும் – வருவதும் – போவதும் காலத்தால் நிகழும் சாதாரண விஷயங்கள். எதையும் நல்லநோக்கத்தோடு அணுக வேண்டும். இதனால் எடுக்கும் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும். இல்லை என்றாலும், “மீண்டும் போராடி வெற்றி பெறுவேன்.” என்ற மன தைரியத்தை வளர்க்க வேண்டும். செடிக்கு உரம் போல், மனதிற்கு நல்ல எண்ணங்கள்தான் உரம். இந்திய ஒலிம்பிக் போட்டியில் குத்து சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற மேரிகோம் என்ற அந்த பெண், இரண்டு குழந்தைகளுக்கு தாய். உங்கள் வெற்றிக்கு என்ன காரணம்? என்று பத்திரிக்கை நிருபர்கள் கேட்டபோது, என்ன சொன்னார் தெரியுமா?, “ஆரம்பத்தில் எதிராளியை அடிக்கவே பயப்படுவேன். ஆனால் என் கோச்தான், “நீ ஏன் பயப்படுகிறாய்.? உன்னோடு மோதுபவரை ஆண் என்று நினைத்துக்கொள். பெண் என்று நினைக்காதே. உன்னைவிட பலமான ஆண் உன் எதிரில் நிற்பதாக நினைத்து, ஓங்கி குத்தினால்தான் வெற்றி. இல்லாவிட்டால் உன் முகம் காணாமல் போய்விடும்.” என்று சொல்லி அவர் தீவிரமாக பயிற்சி கொடுத்ததால்தான் 5 முறை உலக சாம்பியன் ஆனேன். அதுவே நம் நாட்டுக்கு ஒலிம்பிக் பதக்கத்தை பெறக் காரணம்.” என்றார் மேரிகோம். நமக்கு வெகு தூரத்தில் இல்லை வெற்றி. அது நம் மனதுக்குள்தான் – நம் சிந்தனையில்தான் இருக்கிறது. வெற்றியை தேடி நீங்கள் ஓடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் முயற்சியும் நல்ல நம்பிக்கை மட்டுமே. இவையே வெற்றியை உங்களை நோக்கி ஓடி வர செய்யும். நம்பிக்கையோடு செயல்படுங்கள். “சிறுதுளி பெரு வெள்ளம்” என்பதை வார்த்தை ஜாலத்திற்காக நம் முன்னோர்கள் சொல்லவில்லை அது அனுபவ உண்மையும் கூட. தன்னம்பிக்கையுடன் நாம் செய்யும் சின்ன சின்ன நல்ல முயற்சிகள்தான், ஒருநாள் நாமே எதிர்பாரததைவிட பெரிய அளவில் சாதனை மனிதர்களாக நம்மை மாற்றும்.!

தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். ஒருவேளை தோல்வி அடைந்தால் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று எண்ணினால் எதையும் செய்ய முடியாது – சாதிக்கவும் முடியாது. சாதிக்கவேண்டும் – வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் – வெற்றிபெறலாம். வீரசிவாஜி இளம்வயதில் சாதித்தார். கடும்போராட்டத்திற்கு பிறகு வயது முதிர்ந்தாலும் மனம் தளராமல் காந்தியடிகள் சாதித்தார்கள். அதுபோலதான் கரிகாலசோழனும். ஒரு வழக்குக்கு தீர்ப்பு சொல்ல வேண்டும். ஆனால் வயதில் பெரியவர்கள் தீர்ப்பு சொன்னால் சரியாக இருக்கும் என்று சபையில் இருப்பவர்கள் நினைத்தார்கள். அதனால் கரிகாலசோழன், வயதான பெரியவரின் வேடம் அணிந்து தீர்ப்பு சொன்னார். அந்த தீர்ப்பை கேட்ட சபையோர்கள் ஆச்சரியமும் பாராட்டும் தெரிவித்தார்கள். ’கரிகாலசோழன் அரசராக இருந்தாலும் இளம் வயதாக இருப்பதால் அனுபவம் இருக்காது. அதனால் அவர் வந்து இந்த வழக்குக்கு தீர்ப்பை சொல்லி இருந்தாலும் இந்த அளவுக்கு சரியாக இருந்திருக்காது’ என்று பேசினார்கள் மக்கள். சில நாட்கள் ஆனபிறகுதான், அன்றைய தினம் பெரியவராக வந்து நல்ல தீர்ப்பு சொன்னதே மன்னர் கரிகாலசோழன்தான் என்பதை தெரிந்துக்கொண்டார்கள். ஆகவே நல்ல விஷயத்தை சொல்ல வயதோ, சாதனை செய்ய வயதோ அவசியம் இல்லை. சர்க்கரை தண்ணீரில் குலோப்ஜாம் ஊற வைப்பதுபோல, தன்னம்பிக்கையை ரத்தத்தோடு ஊற வைக்கவேண்டும். எந்த காரணத்தாலும் மன தைரியத்தையும், தன்னம்பிக்கையும் இழந்துவிடக் கூடாது. தன்னம்பிக்கை உள்ளவர்கள்தான் சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்கள். – சாதிக்க தகுதியானவர்கள். நாம் சாதிக்க பிறந்தவர்கள். அதனால் எக்காரணம்கொண்டும் மனம் தளராமல் இருந்தால் சிகரத்தை அடைவோம்.

தளராத மனமே சிகரத்தை அடையும் : எண்ணம்தான் வாழ்க்கை. நாம் எண்ண நினைக்கிறோமோ அதன்படிதான் நடக்கும். அதனால்தான் பெரியவர்கள் சொல்வார்கள், “நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்” என்று. வெற்றி வெற்றி என்று நினைத்தால் வெற்றிகிட்டிவிடுமா?. முயற்சி செய்ய வேண்டாமா? என்பதும் பலரின் கேள்வி. முயற்சிக்கு முதலில் மனதில் உற்சாகம் தேவை. அந்த உற்சாகம் இருந்தால்தான் வெற்றி கிட்டும். காட்டில் இருக்கும் மரம், யார் உதவியும் இல்லாமல் பிரம்மாண்டமாக வளர்வதுபோல் மனித வாழ்க்கையும் மற்றவர் உதவி இல்லாமல் வாழ்ந்து சாதிக்க முடியும். ஆனால் இதற்கு தேவை மன தைரியம், தன்னம்பிக்கை, துணிச்சல். இவை இருந்தால் வெற்றி என்பது எட்டாதகனியல்ல அது நம் காலடியில் அடங்கிவிடும் நிழல் போல்தான். வீர சிவாஜி, முகலாய வீரர்கள் தங்கிருந்த கொண்டனா கோட்டையை எப்படியாவது கைப்பற்றினால் அது தமக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று நினைத்தார். ஆனால் அந்த கோட்டையில் தங்கிருந்த போர்படை வீரர்களோ அதிகமான அளவில் இருந்தார்கள். ஆனால் வீரசிவாஜியிடம் அந்த அளவுக்கு படை வீரர்கள் இல்லை. இருந்தாலும் போருக்கு தயாரானார். அந்த போருக்கான திட்டம் சிவாஜியின் தளபதி தானாஜி மலுசரே, அவரது சகோதரர் சூர்யாஜி தலைமையில் நடந்தது. சில நாட்களாக, கொண்டனா கோட்டையையும், அதன் பாதுகாப்பையும் கணக்கிட்டார் தானாஜி மலுசரே. அக்கோட்டையில் நன்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.. அந்த கோட்டைக்குள் எப்படி நுழைவது என்று சிந்தித்தார். அப்போது ஒரு பாறை தெரிந்தது. அந்த பாறையோ செங்குத்தான பாறை. அதன் மேல் ஏறிவிட்டால் கோட்டைக்குள் சென்றுவிடலாம் என்று முடிவு செய்தார். ஆனால் செங்குத்தான பாறையின் மேல் எப்படி ஏறுவது என்று நினைத்தபோது, உடும்பை அந்த பாறைமேல் ஏற பயன்படுத்தலாம் என முடிவு செய்தார். எதிரி நாட்டு கோட்டையை தாக்க தங்களிடம் இருந்த சிறிய போர்படை வீரர்களை அழைத்துக்கொண்டு, அவர்களுடன் உடும்பையும் எடுத்து சென்றார்கள். உடும்பின் உடலில் கயிற்றை கட்டி மறுகயிற்றை தானாஜி பிடித்துகொண்டு செங்குத்தான பாறை மேல் ஊடுருவி சென்றார். அந்த உடும்பு அந்த கோட்டையின் மீது ஏறியதும் மற்ற போர்வீரர்களும் ஏறுவதற்காக கயிற்றை வீசினார் தானாஜி. அந்த கயிற்றின் வழியாக மற்ற போர்வீரர்களும் ஏறினார்கள். அப்போது இதை எதிரிகள் பார்த்துவிட்டார்கள். கோபத்தில் ஆவேசமாக வீரசிவாஜியின் படை வீரர்களுடன் கடுமையாக போர் செய்தார்கள். அந்த போரில் வீரசிவாஜியின் தளபதி தானாஜி கொல்லப்பட்டார். விரக்தியில் முரட்டு தைரியம் வரும் என்பார்கள் அல்லவா. அது போல தானாஜியின் வீர மரணம், சூர்யாஜியை ஆவேசமாக்கியது. கடுமையாக போரிட்டார். மூர்த்தி சிறியதாக இருந்தாலும் கீர்த்தி பெரியது என்பதுபோல, வீரசிவாஜியின் சிறிய அளவிலான போர் படைவீரர்கள், எதிரிநாட்டின் மெகா போர்படையை கொன்று வீழ்த்தி, “கொண்டனா கோட்டையை“ கைப்பற்றினார்கள். எடுக்கும் காரியம் முடியும் என்று மனதைரியத்தோடு செய்தால் முடியாதது என்பது எதுவுமே இல்லை. மனம்தான் சக்தி வாய்ந்த கத்தியின் முனை.

1. மற்றவர்களால் முடியாத செயல்களை நம்மால் முடியும் என்று தன்னம்பிக்கையோடும், விடா முயற்சியோடும், எடுக்கும் செயலை விரும்பியும் செய்தால், வானம் கூட தூரமில்லை. 2. தன்னை தானே தாழ்மைபடுத்திக்கொள்பவன் பாதாளத்தில் வீழ்கிறான். தன்னம்பிக்கையில் சிறந்தவன், எப்படியும் போராடி சிகரத்தை அடைகிறான். 3. பூக்களுக்குள் இருக்கும் நறுமணத்தை வெளிப்படுத்தி எல்லோரையும் அறிய வைக்கும் காற்றை போல, இந்த சமுதாயத்தில் ஒருவருக்கு நல்ல பெயர் – புகழ் என்பது, அவர் செய்யும் நற்செயலால்தான் கிடைக்கிறது. 4. தன்னம்பிக்கை விடாமுயற்சி இவை இரண்டும் ஒருவரின் வளர்ச்சிக்கு முக்கிய நண்பர்கள். இந்த நண்பர்களை போன்று வேறு யாரும் ஒருவரை வெற்றி பெற செய்ய முடியாது. 5. முயற்சியில் தோல்வி ஏற்பட்டால் மற்றவர்கள் மத்தியில் கேவலமாகிவிட்டதே என்று கருதாமல், கரையை தொட நினைக்கும் கடல் அலைகளின் முயற்சிபோல் முயற்சியை தொடர்ந்து கொண்டே இருந்தால் வெற்றி நிச்சயம். 6. குடையினால் சூரியனை எப்படி மறைக்க முடியாதோ அதுபோல தன்னம்பிக்கை உள்ளவரை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது. 7. தவழும் குழந்தை நடக்கும் போது, பலமுறை கீழே விழுந்தாலும் மீண்டும் எழுந்து நடக்க முயற்சிக்கும். தோல்வி என்பது நிரந்தரம் அல்ல. அது தற்காலிகம்தான். தொடர் முயற்சி ஒருநாள் வெற்றி தரும் என்று பெரியோர்களுக்கு சொல்லாமல் செயலில் காட்டுகிறது குழந்தை.

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 முறைகள்

தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி எனலாம். பல வழிகளில் நாம் தன்னம்பிக்கையை இழக்க நேரிட் டாலும் கீழ்கண்ட எளிய முறைகளை நாம் பின்பற்றினால் நமது லட்சியத்தை எளிதில் எட்ட முடியும்.

ஆடை

உங்கள் ஆடையில் கவனம் செலுத்த வேண்டும். மலிவு விலையில் ஆடைகள் பல வாங்குவதற்கு பதில் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு அணியக்கூடிய நல்ல தரமான ஆடைகளை உடுத்தலாம். அவை எளிதில் கிழியாது. பார்க்கவும் எடுப்பாக இருக்கும். ஆடையை மாற்றி எளிய ஸ்டைலுக்கு மாறினால் நீங்கள் நினைப்பது நடக்கும். தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்தும் குணம் நாம் அணியும் ஆடைகளுக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. உங்கள் காலணியிலும் கவனம் செலுத்தவும்.

வேக நடை

அட வேக நடையில் என்ன ஆகப்போகிறது என்று தானே நினைக்கிறீர்கள். ஒருவரது நடையை வைத்தே அவர் தெம்பாக வருகிறாரா, சோம்பலாக வருகிறாரா என்று கண்டு பிடித்து விட முடியும். சற்று வேகமான நடையை பார்த்ததுமே எதிரே இருப்பவருக்கு நம்மால் எதையும் சுறுசுறுப்பாக முடித்துவிட முடியும் என்றநம்பிக்கையை ஏற்படுத்தும். ஆகவே இன்றிலிருந்து 25 சதவிகித வேகத்தை உங்கள் வழக்கமான நடையில் கூட்டுங்கள்.

நிமிர்ந்த நிலை

எப்போதுமே நிமிர்ந்த நிலையில் நிற்கவோ, அமரவோ வேண்டும். தோள்களை தொங்கிய படியே வந்தால் அவரால் தன்னம்பிக்கையோடு எதையும் செய்யமுடியாது என பார்ப்பவர் எண்ணிவிடுவர். நிமிர்ந்து நிற்பது, தலையை தொங்கப்போடாமல் இருப்பது, எதிர் உள்ளவர் களின் கண்களை நேரே பார்த்து பேசுவது போன்றவை தன்னம்பிக்கை உள்ளது என்பது சொல்லாமல் சொல்லும் குணமாகும். பார்ப்பவருக்கும் நாம் நல்ல தன்னம்பிக்கை உடையவர் என்ற உணர்வை உண்டாக்கும். ஆகவே சரியான நிலையில் நடப்பது, உட்கார்வது, நிற்பது நல்லது.

கேட்பது

கேளுங்க! கேளுங்க! நல்ல பாசிடிவ் ஆன விஷயங்களையும், தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல பேச்சாளர்களின் பேச்சை அடிக்கடி கேட்கவும். 30 – 60 நொடிக்குள் உங்களது லட்சியம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி சிறு குறிப்பு எடுத்து கண்ணாடி முன் நின்று தினமும் சப்தமாக பேசி பழகுங்கள். அல்லது எவ்வப்போது தன்னம்பிக் கையை தூண்டவேண்டுமோ அப்போது இவ்வாறு பலமுறை சொல்லிப் பார்க்கவும்.

நன்றி

உங்களது வாழ்க்கையில் எவ்வளவோ நல்லதும் வெற்றியும் கிடைத்திருக்கும். அவற்றை பட்டியல் இடுங்கள். அது உங்களது படிப் பாகட்டும், உங்களது திறமையாகட்டும், நல்ல உறவாகட்டும், அவ்வாறு பட்டியல் இடும்போது தான் எத்தனை விதமான நல்ல வாய்ப்புகள் மற்றும் தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய விஷயங் கள் நம் வாழ்வில் நடந்து உள்ளது என்பது தெரியும். இவை நமது மனச்சோர்வை அகற்றி தன்னம்பிக்கையோடு வாழ உதவியாக இருக்கும்.

மனதார பாராட்டுங்கள்

நம்மை நாமே “நெகட்டிவ்”வாக நினைக்கும் போது, மற்றவர்களை பார்ப்பதும், பேசுவதும் கூட நெகட்டிவ்வாக இருக்கும்! இதிலிருந்து விடுபட முதலில் மற்றவர்களை மனதார பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். சின்ன விஷயமாக இருந்தாலும், பெரிதாக பாராட்டுங் கள், மற்றவர்கள் பற்றி குறைகூறுவதை விடுங்கள். இப்படி நடந்து கொண்டால் உங்களை மற்றவர்களுக்கு பிடித்துப் போகும். இதனால் நமக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மற்றவர்களின் நல்ல குணாதிசயங்களை காணும் போது, நமக்குள்ளே மறைந்திருக்கும் நல்ல குணாதிசயங்களும் தானே தெரியவரும்.

முன்னாலே

பள்ளி, கல்லூரி, விழா மற்றும் கூட்டங்களில் அமரும் போது, எப்போதும் பின் இருக்கையில் அமரவே விரும்புவர். இது தன்னம்பிக்கை குறைபாடாகும். ஆகவே இனிமேல் எங்கு சென்றாலும், முன் இருக்கையில் தைரியமாக உட்காருங்கள். இதனால் உங்கள் மனதில் உள்ள பயம் போய்விடும். தன்னம்பிக்கை கூடும்.

பேசுங்க

சிலர் பலர் கூடி இருக்கும் போது பேசவே தயங்குவர். மற்றவர்கள் நம்மை முட்டாள் என நினைத்து விடுவார்களோ என்ற பயம்தான். இனி பயம் இன்றி உங்கள் மனதில் பட்டதை தைரியமாக சபைகளில் எடுத்துப் பேசவும். இதனால் நமது எண்ணத்தில் ஒரு நம்பிக்கை பிறக்கும். மற்றவர்களும் உங்களை தலைவராக ஏற்றுக் கொள்வர். எல்லோரிடத்திலும் தைரியமாக பேச ஆரம்பித்தாலே, தன்னம்பிக்கை உங்களை தேடி, ஓடி வரும்.

உடல்வாகு

நமது உடையும், உடல் வனப்பும், தன்னம்பிக்கைக்கு கை கொடுக்கும். அளவுக்கு மீறி குண்டாகவோ, மிக ஒல்லியாகவோ இருந்தால் நம்மீதே நமக்கு நம்பிக்கை இழக்க நேரிடும். சக்தி குறையும். ஆகவே உடற்பயிற்சி செய்து, நமது உடலை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால், தன்னம்பிக்கை உங்களுக்கு கிரீடமாக அமரும்!

நாடு

நாடென்ன செய்தது நமக்கு… என கேள்விகள் கேட்பது எதற்கு? நாம் என்ன செய்தோம் அதற்கு என்று சற்று சிந்தித்தால் பலன் கிடைக்கும். நம்மை பற்றியே எப்போதும் சிந்திக்கக்கூடாது. நம்மை சுற்றி உள்ளவர்கள் பற்றியும், சமுதாயத்தைப் பற்றியும் சிந்தித்து, நம்மை ஈடுபடுத்திக் கொண்டால், தன்னம்பிக்கை வளரும். இதனால் ஏற்படும் தன்னம்பிக்கை நமது எல்லாத் திறனையும் வெளிக்காட்ட உதவியாக இருக்கும் என சொல்லவும் வேண்டுமோ?

இவற்றை நாளைக்கு என தள்ளிப்போடாமல் இன்றே முடிவு செய்து, துவக்குங்கள் இனி வெற்றி உங்கள் பக்கமே!!

வாழ நினைத்தால் வாழலாம்

போர்க்களத்தில் ஏறிப்போரிட்டுக் கொண்டிருந்த பழகாத குதிரை களத்தைவிட்டு ஓடிப்போய்விட்டால் அந்த வீரன் எவ்வளவு  துன்பப்படுவான் தோல்வியைத் தழுவுவான்.அவமானப்படுவான். அப்படி வாழ்வில் தம்மை நம்பியிருப்பவர்களைக் காலைவாரிவிட்டாற் போன்று சிலர் துறவு மேற்கொண்டுவிடுவார்கள்.அல்லது சோர்ந்துபோய் குடிகாரராகி விடுவார்கள். இன்னும் சிலர் ஒன்றுக்கும் உதவாத தண்டச் சோறாகி விடுவார்கள். இவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்றால் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் சவால்கள் இவைகளைக் கண்டு அஞ்சித்தான்.,அவற்றை எதிர்கொள்ள முடியாது என்ற தன்னம்பிக்கைக் குறைவால்தான். இவர்களுடைய இத்தகைய செயலால் எத்தனைபேர் துன்பமுறுவார்கள்? மனைவி மக்கள் பெற்றோர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இவர்களுக்குத் தக்க நேரத்தில் தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் ஊட்டியிருந்தால் அவர்கள் இப்படி நடந்திருக்க மாட்டார்கள்.

வாழ்க்கையில் நாம் விலங்குகள் பறவைகள் போன்றவற்றிட மிருந்து கற்றுக் கொள்னவேண்டியன நிறைய உண்டு. வண்டிகளும் மனிதர்களும் எந்நேரமும் போய்க்கொண்டிருக்கும் சாலையிலே நடக்கும் போது எத்தனை எறும்புக் கூட்டங்கள் சாரிசாரியாகப் போகின்றன.எத்தனை அட்டைகள் நத்தைகள் நசுங்கிச் சாவோம் என்று தெரிந்தோ தெரியாமலோ அணிவகுத்துச் செல்கின்றன.புலி வாழும் காட்டிலே மானும் அப்படித்தானே.தேனடையைச் சிதறிவிடுவார்கள் கூட்டைப் பிரித்து எறிந்து விடுவார்கள் என்று தெரிந்தும் தேனீயும் தூக்கணாங்குருவியும் கூடு கட்டவில்லையா?

இவைகள் எல்லாம் பயந்து சாகாமல் வாழ்வை எதிர் கொள்வதைப் பார்த்தாவது மனிதன் அச்சத்தைத் தவிர்த்துத் தன்னம்பிக்கையோடு வாழப் படித்துக் கொள்ளவேண்டும்.ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பதை நினைத்துக் கொள்ளவேண்டும்.

மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு நம்மை நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளக் கூடாது.பருந்து பறக்கிற ஆகாயத்தில் ஈயும் பறக்கிறதே.நாம் பறக்கக் கூடாதா?பறக்கலாம்.மனம் வைத்தால் போதும்.

வாழ்க்கை என்பது போராட்டம்தான்.நாம் துய்க்கும் இன்பம் நிலையற்றதுதான். துன்பம் என்பது மனத்தில் தோன்றும் ஒரு கருத்துருவம்தான்.உண்மையில் அது இல்லை.என்று நினைத்தால் இல்லாமல் போய்விடும்.  எனவே மனதை உறுதிப்படுத்துக..துன்பம் கண்காணாமல் ஓடிவிடும்.

மனம் என்ற சர்வ சக்தி படைத்த கருவி நம் கையில் இருக்கும்போது நாம் எதற்கு அஞ்சவேண்டும்.துன்பத்தைப் பற்றிய அச்சம் நம் மனதில்தான் இருக்கிறது  என்பது மட்டுமல்ல.செயலில் ஈடுபடும் ஆற்றலும் செயல் வன்மையும் நம் மனதிற்குள்தான் குடிகொண்டிருக்கின்றன.

வாழ்க்கை அஞ்சத்தக்கதல்ல.நாம் கடலாக இல்லை என்றாலும் ஏரியாக
இருக்கலாம்.பருந்தாக இல்லை எனினும் ஈயாக இருக்கலாம்.
வெட்கப்படவேண்டாம்.மனம் என்ற தோணி இருக்கப் பயம் ஏன்?

கவலையை மறந்து கடவுளை நினைத்திடு

துன்பத்தை தொலைத்திடு!

துணிச்சலோடு செயல்படு!

அன்பாக மற்றவர்களிடம் பழகிடு!

ஆரோக்கியமாக வாழ்ந்திடு!

கவலையை மறந்திடு!

கடவுளை நினைத்திடு!

தவளை போல் தாவிடு!

தன்னம்பிக்கையோடு வாழ முயற்சிடு!

மன அழுத்தத்தை குறைப்பது எப்படி

இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எல்லாத் துறையிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவித மான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண் டிருக்கிறார்கள். மனிதனுக்கு வரும் நோய் களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்த மானசூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது. இதுவே மன அழுத்தத் தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது. சக மனிதன் மீதான கரிசனையும், ஆத்மார்த் தமான அக்கறையும் விலகி சுயநலச் சிந்த னைகள் விஸ்வரூபமெடுக்கும் போது இத்த கைய இறுக்கமான சூழல்கள் உருவாகின்றன.மேலதிகாரிகளின் கெடுபிடிகளால் தொல் லைகளுக்கு ஆளாகும் ஊழியர்கள், வாழ்க் கைத் துணையின் விட்டுக் கொடுத்தல் அல்லது புரிந்து கொள்ளல் இல்லாத சூழலில் உரு வாகும் மன அழுத்தம், சாதீய, மத, இன ரீதி யாக அழுத்தமானசூழலுக்கு உள்ளாகும் பொது மக்கள். என எந்த ஒரு துறையை எடுத் துக் கொண்டாலும், அல்லது எந்த ஒரு சூழலை எடுத்துக் கொண்டாலும் இன்று மக்கள் ஒருவித மன அழுத்தத்துடனேயே வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். மன அழுத்தம் மிகவும் கொடுமையானது. இயல்பான வாழ்க்கையைப் பறித்து நிம்மதி யற்ற பொழுதுகளையும், நோய்களையும் தந்து செல்லும் இந்த மன அழுத்தம் களையப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

மன அழுத்தத்தைக் குறித்து மருத்துவர்கள் குறிப்பிடுகையில் எதிர்பாராத சூழலுக்கு மனிதன் தள்ளப்படும் போதே அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகிறான் என்கின்றனர். எதிர்பார்ப்புகளைக் குறைக்கும் போது மன அழுத்தம் பெருமளவில் குறைந்து போவதாக வும் அவர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகள், எதிர்பார்ப்புகள் அதிகம் இல் லாதவர்கள், அவர்கள் எதையும் ஆனந்தத்து டன் பெற்றுக் கொள்ளும் தன்மையுடையவர் கள் எனவே அவர்களால் மன அழுத்தம் இல் லாமல் வாழ முடிகிறது. ஆனால் பெரியவர்கள் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துவதும், கிடைப்பதில் திருப்தி பெறாத நிலையையும் கொண்டிருப்பதால் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகிறார் கள் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக சிரத்தை, குழப்பம் இவை யெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணிகள். சிலருக்கு அதிக வெளிச்சம், அதிக சத்தம் இவை கூட மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். பிறப்பு, இறப்பு, போர்கள், திருமணங்கள், விவாகரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, பெயர் இழத்தல், கடன், வறுமை, பரீட்சை, போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் நம்மை இட்டுச் செல்ல முடியும். புகை பிடித்தல், சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, போதைமருத்துப் பழக்கம், குடிப்பழக்கம், சரியான தூக்கம் இல்லாமை இவையெல்லாம் மன அழுத்தத்தை நாம் விலை கொடுத்து வாங்கும் செயல்கள். புகை பிடிக்கும்போது உடலில் கலக்கும் நிக்கோட்டி னுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.முதுமை நிலையை அடைபவர்களிடமும், மாதவிடாய் காலத்தில் பெண்களிடமும் இந்த மன அழுத்தம் அதிகமாய் இருக்கும் என்றும் அத்தகையவர்களிடம் அன்புடன் உரையாடி மன இறுக்கத்தைத் தணிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மன அழுத்தம் நல்ல செயல்களில் கூட வரும் என்கிறது ஒரு ஆய்வு. திருமணம் போன்ற நிகழ்வுகள், பதவி உயர்வு, இவை யெல்லாம் ஒருவகையில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் அதை சரியான விதத்தில் கையாள்வதில் நம்முடைய கவனத்தைச் செலுத்தவேண்டும் என்கிறது அதே ஆய் வறிக்கை. எல்லா பாதைகளையும் மெத்தைகளால் அலங்கரிப்பது இயலாது என்பதால் செருப்பு அணிகிறோம். அது போலவே மன அழுத் தத்தை உண்டாக்கும் காரணிகளை ஒழிப்பது என்பது இயலாத காரியம் ஆனால் நம்முடைய மனதை திறமையாகக் கையாள்வதன் மூலமாக மன அழுத்தத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க முடியும். மன அழுத்தத்தைக் கையாள்வதற்கு நம் முடைய மனதின் சிந்தனைகளை தூய்மைப் படுத்த வேண்டும். எதிர்மறைச் சிந்தனைகள் பெரும்பாலும் மன அழுத்தத்தையே அளிக் கின்றன. எனவே நல்ல சிந்தனைகளை வளர்த் துக் கொள்வதன் மூலம் மன அழுத்தத்தைக் கையாள முடியும்.

தியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்துவதும், ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளில் சில என்கின்றனர் பயிற்சியாளர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகளும் நல்ல பலனைத் தருகின்றன. அமைதியான குடும்பச் சூழல் பெரும் பாலான மன அழுத்தத்தைக் குறைக்கிறது. அலுவலகத்தின் குழப்பங்களையோ, எரிச்சல் களையோ குவிக்கும் இடமாக குடும்பம் இருக்கக் கூடாது, மாறாக அவற்றை அழிக்கும் இடமாகவே குடும்பம் இருக்க வேண்டும் என்பதனை குடும்பத்தினர் புரிந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் நுழைந்தவுடன் மனம் மகிழ்ச்சியடையும் வகையில் குடும்பத்தின ரோடு அன்பான வாழ்க்கை வாழ்தல் மிகவும் முக்கியம்.

ஆவேசம், கோபம் இவை மன அழுத் தத்தின் வெளிப்பாடுகள், தெளிவான அமைதி யான மனம், ஞானம் இவற்றைக் கொண்டு அவற்றை அடக்க வேண்டும். மன அழுத்தம் பல நோய்களைக் கொண்டு வரும். குறிப்பாக மைக்ரேன் எனப்படும் ஒற் றத் தலைவலி, ஸ்ட்ரோக், எஸீமா உட்பட பல நோய்களை மன அழுத்தம் கொண்டு வருகிறது.தாய்மை நிலையிலிருக்கும் பெண்களுக்கு மன அழுத்தம் மிகப்பெரிய எதிரி. அது தாயை யும், கருவில் இருக்கும் குழந்தையையும் நேரடியாகப் பாதிக்கிறது என்கிறார் அமெரிக் காவின் மாயோ கிளினிக்ஸ் எனும் மருத்துவர் , எனவே தான் தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் நல்ல புத்தகங்கள் படிப்பது, நல்ல இசை கேட்பது என மனதை இலகுவாக வைத் துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள். சரியான திட்டமிடல் இல்லாமல் செயல்படு பவர்களை இந்த மன அழுத்தம் எளிதில் பிடித்துக் கொள்கிறது. எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துபவர்கள் மன அழுத்தம் உருவாகும் சூழலை பெரும்பாலும் விலக்கி விடுகிறார்கள். செய்ய முடியாத வேலைகளை "முடியாது' என்று மறுத்து விடும் உள்ள உரம் மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க மிகவும் அவசி யம். எல்லா வேலைகளையும் இழுத்துப் போடுபவர்கள் பிரச்சினையிலிருந்து தப்ப முடியாது. உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அழுத்தம் மனிதனுக்கு பல இன்னல்களைத் தருகிறது. சிறு சிறு அழுத்தமான சூழல்களைத் தவிர்க் காத போதோ, அல்லது தீர்க்காத போதோ அழுத்தம் அதிகரித்து பெரிய இன்னலுக்கு ஆளாக்கி விடுகிறது.

அழுத்தம் இருவகையில் வரலாம். ஒன்று நம்மைச் சூழ்ந்த சமூகத்தின் செயல் பாடுகளால் நமக்குள் வருவது. இன்னொன்று நம்முடைய வாழ்க்கை முறை, சிந்தனைகளினால் வருவது.நேர் சிந்தனை உள்ளவர்கள் எல்லாவற்றையும் நல்ல விதமாகப் பார்க்கிறார்கள். அதிக நேரப் பயணிக்க வேண்டியிருந்தால் அதிக நேரம் இசை கேட்க முடியுமே என்று நினைக்கக் கூடிய அளவுக்கு மனதை இலகுவாக வைத்திருக்க வேண்டும்."இந்த வேலை எனக்குப் பிடிக்கவேயில்லை..' அல்லது "என்னை யாருக்கும் பிடிக்கவில்லை' இது போன்ற சிந்தனைகள் பரிதவிக்க வைத்து மன அழுத்தத்துக்குள் இட்டுச் செல்கிறது.

கனக் குறைவு, முடிவுகள் எடுப்பதில் சிக்கல், ஞாபக மறதி, குழப்பம், எதிர் மறை சிந்தனைகள், தெளிவற்ற சிந்தனைகள், தவறான முடிவுகள், தப்பித்தல் முயற்சிகள் என மன அழுத்தம் மனதைப் பாதிக்கும் செயல்களைப் பட்டியலிடலாம்.தலைவலி, அஜீரணக் குறைபாடுகள், தூக்கமின்மை, தசைப்பிடிப்பு, உடல் வலி, நெஞ்சு வலி, சீரற்ற இதயத் துடிப்பு, உயர் இரத்த அழுத்தம், உடல் எடை அதிகரித்தல், குறைதல், ஆஸ்த்மா, மூச்சுத் திணறல், தோல் நோய்கள், தாம்பத்தியக் குறைபாடுகள், புற்று நோய், அல்சர், சர்க்கரை நோய், என மன அழுத்தம் தரும் உடல் நோய்களும் ஏராளம்.இந்த மனம் உடல் சார்ந்த பாதிப்புகளினால் தன்னம்பிக்கைக் குறைபாடு, கோபம், எரிச்சல், சீரற்ற உணவு உண்தல், சீரற்ற தூக்கம், தனிமை விரும்புதல், கடமைகளைத் தவிர்த்தல், பதட்டம் உட்பட ஏராளமான செயல்களுக்கும் நம்மை அறியாமலேயே தள்ளப்பட்டு விடுகிறோம்.மன அழுத்தத்தை மருத்துவம் பல விதமாகப் பிரிக்கிறது. திடீரென நிகழும் ஒரு நிகழ்வினால் ஏற்படும் ஒரு மன அழுத்தத்தை அக்கியூட் ஸ்ட்ரெஸ் என்கிறார்கள். இதன் காரணம் நமக்கு தெரிந்ததாகவே இருக்கும். இது விரைவிலேயே காணாமல் போய் விடுகிறது.தொடர் நிகழ்வுகளினால் ஏற்படும் மன அழுத்தத்தை எபிசாடிக் அக்யூட் ஸ்ட்ரெஸ் என்கிறார்கள். அதிகப்படியான வேலை. ஏராளமான பணிகள், தினமும் தாமதாய் வருவதால் வரும் பிரச்சனை, அவசரம் போன்ற தொடர் காரணிகளால் வருவது இது.இயல்பிலேயே வறுமை, நீண்டகால வேலையின்மை, குடும்பசூழல், அவஸ்தையில் மாட்டிக் கொண்டது போன்ற சூழல் இவையெல்லாம் தரும் மன அழுத்தத்தை குரோனிக் ஸ்ட்ரெஸ் என்று அழைக்கிறார்கள்.ட்ராமிக் ஸ்டெரெஸ் என்பது இன்னொரு வகை. ஏதோ ஒரு அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வராமல் இருக்கும் நிலையே இப்படி அழைக்கப்படுகிறது. கணினித் துறையில் இந்த மன அழுத்தம் அதிகமாக இருப்பதால் பெரும்பாலான அலுவலகங்கள் ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன.

இறுக்கமற்ற சூழலை குடும்பங்களில் குழந்தைகளிடம் உருவாக்க அமெரிக்க மருத்துவர்கள் ஆய்வறிக்கையில் கீழ்க்கண்டவை பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. தினமும் குழந்தைகளுடன் உரையாடுங்கள். அவர்களுடைய தினம் எப்படி செலவழிந்தது. என்னென்ன செயல்கள் நடந்தன என்றெல்லாம் உரையாடுங்கள். அழுத்தமான சு??ழல் இருப்பது போல உணர்ந்தால் அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். உங்கள் பிரச்சனைகளை குழந்தைகள் மேல் எக்காரணம் கொண்டும் திணிக்காதீர்கள். அவர்களுக்கு குடும்பத்தின் தேவை மற்றும் அமைதியான வாழ்க்கையின் அவசியத்தை வலியுறுத்துங்கள்.குழந்தைகள் எதையாவது செய்யும் போது மனம் விட்டுப் பாராட்டுங்கள். அவர்களை அரவணைத்துச் செல்ல மறக்காதீர்கள். அவர்கள் இசை, பெயிண்டிங், நடனம் போன்றவற்றில் ஈடுபட தூண்டுங்கள்.நகைச்சுவை உணர்வுள்ள குழந்தையாக உங்கள் குழந்தையை வளர்க்க முயலுங்கள். அது இறுக்கமான சு??ழல்களை குழந்தைகள் சமாளிக்க பிற்காலத்தில் பயன்படும்.

குழந்தைகள் எப்போதும் எதிலும் முதன்மையாக வரவேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். அது தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கி விடும். எல்லோரும் முதலாவதாக வருவது நடப்பதில்லையே. விடுமுறைகள், மாலை வேளைகளை சற்று இலகுவாகவே வைத்திருங்கள். அதிகப்படியான கல்வியும் மன அழுத்தத்தை நல்கும் என்பதை மறவாதீர்கள். தோல்வியும் வெற்றியும் சகஜம் என்னும் மனநிலையைக் கொண்டிருங்கள் அல்லது எதிர்காலத்தில் குழந்தை தோல்விகளைச் சந்திக்கும் போது உடைந்து போகும் வாய்ப்பு உண்டு.உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஒரு நல்ல முன்மாதிரியாக இருங்கள். குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் தந்தை குழந்தை குடிக்கக் கூடாது என அறிவுரை சொல்வது பாதிப்பை ஏற்படுத்தாது. குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதும், அவர்கள் பதின் வயது எட்டுகையில் நல்ல நண்பர்கள், உறவினர்களுடன் ஆரோக்கியமான நட்பு வைத்துக்கொள்ள தூண்டுவதும், உடற்பயிற்சிகள் செய்யத் தூண்டுவதும் மன அழுத்தத்தைக் குறைக்கும். மன அழுத்தம் சிலவேளைகளில் நாமாகவே கர்ப்பித்துக் கொள்ளும் தவறான சிந்தனைகளின் மூலமாகவும் வரும் என்பது கண்கூடு. தேர்வை நன்றாக எழுதிய மாணாக்கர் கூட மன அழுத்தத்துடன் திரிவது இதனால் தான்.எத்தனை இறுக்கமான சூழலாக இருந்தாலும் சிரிக்கக் கற்றுக் கொண்டால் பிரச்சனைகள் பல காணாமல் போய்விடும். நல்ல நகைச்சுவை உரையாடல்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். தசைகளை இறுக்கமற்ற நிலைக்கு கொண்டு செல்லும். நுரையீரலுக்கு சுத்தமான காற்றை கொண்டு செல்லும் எனவே மன அழுத்தத்தைக் குறைக்க சிரியுங்கள் என்கிறார் மனோ தத்துவ நிபுணர் லீ பெர்க். குடும்பங்களில் பிரச்சனைகள் வருவது சகஜம். கணவன் மனைவியரிடையே பிரச்சனை வரும்போது "உன்னால் தான் வந்தது' என்று பழியை மாறி மாறி சுமத்தாமல் "நமக்கு பிரச்சனை இருக்கிறது' எப்படி தீர்வு காண்பது எனும் கண்ணோட்டத்தில் பேச வேண்டும் என்கிறான் பிரபல அமெரிக்க உளவியலாளர் வில்லார்ட் எஃப் ஹார்லே. மன அழுத்தத்தை சூழ்நிலைகள் பத்து விழுக்காடும் நாம் எப்படி அதை எதிர்கொள்கிறோம் என்பது தொன்னூறு விழுக்காடும் நிர்ணயிக்கின்றன என்கிறார் சார்லஸ் ஸ்விண்டால். எதையும் எதிர்கொள்ளும் மனநிலை கொண்டவர்களுக்கு மன அழுத்தம் குறைவாக இருக்கும் காரணம் இது தான்.பெண்களுக்கு வேலை, குடும்பம் என இரட்டை அழுத்தமான சூழல்கள் இருப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். அதை சரியான முறையில் கையாள குடும்ப சூழல் அமைதல் அவசியம்.

அலுவலகத்தில் இறுக்கத்தைத் தளர்த்த சரியான திட்டமிடுதல், காலத்தை சரியாக அட்டவணையிட்டு பயன்படுத்துதல், அவ்வப்போது மூச்சை இழுத்து விடுதல், இடையிடையே ஓய்வு எடுத்தல், மனதை தளர்வாக வைத்திருத்தல், நேர் சிந்தனை நண்பர்களுடன் நிறைய நேரம் செலவிடுதல், ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்தல், முக்கியமான பணிகளை முதலில் முடித்தல், பகிர்ந்து கொள்ள ஒரு நண்பனைக் கொண்டிருத்தல், அவ்வப்போது விடுப்பு எடுத்தல் இவை பயன்படும். மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்:

* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். * எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.

* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

* வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்ய முயலுங்கள் காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக் கூடும்.

* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

*கோப்பி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.

* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன்?? என்பது போன்றவை.

* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

*சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி.

* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் "மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது' என்று சொல்லப் பழகுங்கள்.

* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

எளிமையாக வாழுங்கள்.

* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும். வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.

* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

* என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.

* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

* மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும்

எல்லோரிடமும் இரக்கம் காட்டு,ஆனால் ஏமாந்துவிடாதே.

பணிவாய் இருங்கள் ஆனால் கோழையாய் இராதீர்கள்.

வீரனாய் இரு,ஆனால் போக்கிரியாய் இராதே.

சிக்கனமாய் இருங்கள், ஆனால் கஞ்சனாய் இராதீர்கள்.

சுறுசுறுப்பாய் இருங்கள், ஆனால் பதட்டப்படாதீர்கள்.

தர்மம் செய்யுங்கள், ஆனால் ஆண்டியாகிவிடாதீர்கள்.

பொருள் தேடப் புறப்படு, ஆனால் பேராசைப்படாதே.

உழைப்பை நம்புங்கள், ஆனால் கடவுளை மறந்துவிடாதீர்கள்.

நம்பிக்கைவாதி ரோஜாச் செடியில் மலரையே பார்க்கிறான்;
முட்களை அல்ல.

நம்பிக்கை இல்லாதவன் முட்களையே பார்க்கிறான்;
மலர்களை அல்ல.

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்.

துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும் நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்.

உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை. தீமையையும் விரட்டுகிறது.

அழகான பெண் கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம். இரண்டாமவள் ஒரு புதையல்.

ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கி விடுகிறாள்.

பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும், மதிப்பு இல்லாதவை!

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது.

நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே.

செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை.

பறக்க விரும்புபவனால் படர முடியாது.

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால் நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

தன்னம்பிக்கையுடன் வாழ உடல் ஆரோக்கியமாய் இருப்பதுடன் நல்ல குணங்களும் அவசியம் தேவைப்படுகிறது.

மிகுந்த தன்னம்பிக்கையுடன் திட்டமெல்லாம் தீட்டி, ஏற்பாடுகள் செய்து, செயல்படச் செல்லும்போது அவரிட் ஒருவர் “நீ வெட்டி முறித்த மாதிரி தான்” என எதிர்மறையாக கூறிவிட்டால், அச் சொற்கள் அவரது தன்னம்பிக்கையையே அசைந்துவிடும்.

வாதம் என்பது நம் உடலில் ஓடும் மூன்று பூதங்களில் ஒன்றான காற்றைக் குறிக்கும் சொல். மற்ற இரண்டு நீரும் வெப்பமும், காற்று இல்லாமல் எந்த உயிரினமும் வாழ முடியாது. அத்தகைய அத்தியாவசியச் சிறப்புடையது காற்று. பிடிவாதம் என்ற சொல்லையே இங்கு வாதம் எனக் குறிப்பிடுகிறோம். பெரும்பாலோனோருக்கு வாயுத்தொல்லை இருக்கும். அதனால் மிகவும் சிரமப்பட்டு வருவர். அதேபோல்தான் பிடிவாதம் என்ற குணமும் வாழ்க்கையில் பல சிக்கல்களை உண்டாக்கும்.

பிடிவாதம்

மற்றவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளாமல் தனது கருத்தே சரியென வலியுறுத்தி, அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனநிலைதான் பிடிவாதம். முதுமொழி ஒன்று உண்டு. “வாதத்துக்கு மருந்து உண்டு; பிடிவாத்த்துக்கு மருந்து இல்லை” என்று, “பிடித்த முயலுக்கு மூன்றே கால்” என்று மொழியையும் பிடிவாதம் தொடர்பாய் கிராமப்புறங்களில் கூறுவர். தனது எண்ணம், பேச்சு, செயல் எல்லாவற்றையுமே எவ்வித மாற்றுக் கருத்தும் கூறாமல் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென கட்டாயப்ப படுத்துவர். இதற்கு அவர்களது சிறு வயது முதலேயான பழக்கம், குடும்பத்தில் அவரது வருமானம் ஆகியவை காரணமாகும். சில சமயங்களில் பிடிவாதம் பிடிப்பதால், வெற்றி நிலையை அடையலாம். ஆனால், சுற்றியிருப்பவர்கள் மத்தியில் இவருக்கு கெட்ட பெயர் உண்டாகும். இருந்தாலும் தனது தவறை ஏற்காமல், தன் செயலுக்கு நியாயமான காரணங்களைத் தேடிக் கூறுவர்.

வாதம்

கலந்துரையாடலில் ஒரு வகை விவாதம். தனது கருத்தை வலியுறுத்திக் கூறுவதே விவாதம். அது உண்மையாகவும் இருக்கலாம்; வேறானதாகவும் இருக்கலாம். இதனை “சொற்போர்” என்றும், DEBATE என்றும் கூறுவர். பட்டிமன்றங்கள் வழக்காடு மன்றங்களில் இவ்வகையான சொற்போரைக் கேட்கிறோம். தமது கருத்தை வலியுறுத்தி பேசும் அணியினர் மாற்றணியினரைத் தாக்கி அனல்தெளிக்கப் பேசுவர். இறுதியில் நண்பர்களாய் உரையாடிச் செல்வர்.

ஆனால், நடைமுறை வாழ்க்கையில் விளைவு வேறாக இருக்கிறது. ஒருவர் தவறான ஒரு செய்தியைத் தெரிவிக்கும் போது, நமக்கு அது தவறு எனத் தெரிந்து சரியானது இது எனக் கூறினால், அதை அவர் ஏற்றுக் கொள்ளாமல் தான் கூறுவது சரியெனத்திரும்பக் கூறுவர். ஒரு வழியாக கடைசியில் பல உதாரணங்களுடன் எடுத்துக் கூறி எல்லோரையும் ஒப்புக்கொள்ளச் செய்து விடலாம். ஆனால், இந்த விவாத்தத்தின் மூலம் தனி நபருடனான நட்புக்கு பின்னடைவு உண்டாகிவிடும்.

விதண்டாவாதம்

பேச்சு வழக்கில் ஒரு சிலரைக் கூறுவோம். “சரியான விதாண்டாவாதம்” என்று. பிடிவாதம் என்பது வேறு; விவாதம் என்பது வேறு. இரண்டுக்கும் அடிப்படை நோக்கம் ஒன்றே ஆனாலும். பிடிவாதம் நெருங்கியவர்கள் மத்தியில்தான் செல்லுபடியாகும். விவாதம் என்பது பேச்சுத்திறனை வைத்து, பொருள் ஞானத்தை வைத்து எங்கும் செல்லுபடியாகும். நியாயத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து தனது நிலையிலேயே இருந்து பேசுவதை விதண்டாவாதம் என்று கூறுகிறோம்.

மொழியும் பேச்சும்

தங்கள் கருத்தை, எண்ணத்தை வெளிப்படுத்தும் வழிதான் மொழி. முதலில் உடல் உறுப்புகளின் அசைவைக் கொண்டு (body language) தங்கள் கருத்தை வெளியிட்ட மக்கள், மொழியைப் பயன்படுத்த ஆரம்பித்த பின், சிந்திக்க ஆரம்பித்தார்கள். சிந்தனையின் வெளிப்பாடுதான் பேச்சாக வெளி வந்தது. தனது கருத்தைத் தெளிவாக, மற்றவர்கள் புரிந்து கொள்ளுமாறு கூறுவதே சிறந்த பேச்சு. அதேபோல் மற்றவர்கள் கூறுவதைச் சரியாகக் கவனித்து, உரிய பதில் கூற வேண்டும். ஆனால் பிடிவாதக்காரர்கட்கு மற்றவர்களது பேச்சைப் பற்றிய கவலையே கிடையாது. தான் சொல்வதே சரியெனக் கூறுவர். விவாதத்தில் நிலைமை வேறு. பிறர் என்ன சொன்னார்களோ, அதை ஆதாரத்துடன் மறுத்துப்பேச வேண்டும். இரண்டுக்குமே அடிப்படை பேச்சாக இருந்தாலும், பிடிவாதத்தில் ஒரு கட்டத்தில் சர்வாதிகாரம் தலைதூக்கி, “இப்படித்தான்” என முடித்துவிடுவர். விவாதங்களில் தங்கள் புலமையை, ஞானத்தை வெளிக்காட்டும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

தன்னம்பிக்கைக்கு பாதிப்பு

பிடிவாதமும் , விவாதமும் தன்னம்பிக்கையை எவ்வகையில் பாதிக்கிறது? அடிப்படையில் பிடிவாத குணம் உள்ளவர்கள் தைரியசாலிகள் அல்லர். வறட்டு கௌரவம் பார்ப்பவ்கள் எளிதில் கற்பனையாக எதையாவது நினைத்து வருத்தப்படுவார்கள். தன்னால் இது முடியாது என்ற தன்னம்பிக்கையின்மையை மறைப்பதற்காகவே ‘பிடிவாதம்’ என்ற வேடத்தை போட்டுக் கொண்டவர்கள். இவரால் தனித்து எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியாததால்தான், பிறரது துணையை ஆதரவைத் தனது பிடிவாதத்தால் பெற முயற்சிக்கிறார்.

விவாதங்களில் கலந்து கொள்வோர் ஒரு பொருள் தொடர்பாகப் பல விபரங்களைச் சேகரிக்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் தனது கருத்தை மாற்றிக் கொள்ளாமல் உரிய ஆதாரங்களுடன் பேச வேண்டும். இம் மாதிரி பேசும் போது எதிரில் இருப்பவரை வெற்றி கொள்ளலாம். ஆனால் இருவருக்கும் இடையிலான நட்புக்கு கேடு உண்டாகும்.

நடைமுறை

பொதுவாக நமது வீடுகளில், பணி புரியும் அலுவலகங்களில், அல்லது நண்பர்களுடன் உரையாடும்போது இது போன்ற விவாதங்கள் நடைபெறுகின்றன. குடும்பத்தலைவர் அல்லது குடும்பத்துக்கு அதிக அளவு பொருள் தருபவர் அல்லது அந்தக் குடும்பத்தில் மிக அதிகமாகப் படித்தவர் என்ற நிலையில் நல்ல கருத்துக்களைப் பிடிவாதமாய் கூறுவதை விட, எல்லோருடைய கருத்தையும் கேட்ட பின் தனது கருத்தைக் கூறினால் ஏற்றுக்கொள்வார்கள்.

தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வழிகள்

அனைவருக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும். அவர்கள் சிறியவர்களானாலும், கல்வியறிவு இல்லாதவர்களாயிருந்தாலும், அவர்கட்கும் திறமைகள் உள்ளன என்பதை ஏற்றுக் கொண்டு அவர்களது கருத்தையும் கேட்டு ஆலோசிக்க வேண்டும். நான்தான் இங்கு எல்லாமே என்ற தன் முனைப்பை விட வேண்டும்.பிறரது கருத்துக்கள் தவறு என்றால் விளக்கமாக அவர்களிடம் எடுத்துக் கூறும் பொறுமை வேண்டும். நல்ல கருத்துக்களைக் கூறுவோர்க்கு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தலாம்.

அதேபோல விவாதங்கள் என்று எடுத்துக்கொண்டால், யாருடன் என்பதை முதலில் அறிய வேண்டும். ஒது நிகழ்ச்சியெனில் ஆணித்தரமாய் பேசத் தயார் செய்ய வேண்டும். தனிப்பட்ட முறையில் என்றால், பிறர் கூறும் ஏற்க முடிந்த கருத்துக்களை ஏற்கும் மனப்பக்குவமும், தவறென்றால் அவர் மனம் புண்படாமல் தவறு எனக்கூறும் சாந்த நிலையும் பெறவேண்டும்.

பொதுவாகவே தனியே தவறை ஒப்புக்கொள்ளும் நாம், பிறர் முன்னிலையில் அது சரியென்றே கூறுவோம். இம்மாதிரி சிக்கலான சூழ்நிலைகளை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். பல புத்தகங்கள் படிக்க வேண்டும். இவ்வாறெல்லாம் செய்தால் பிடிவாதமும், விவாதமும் நமக்கு தன்னம்பிக்கையை குறைக்காது. ஏனெனில் நாம் பிடிவாதத்தை விட்டு விடுவோம். பிறரது உணர்வுகட்கு மதிப்பு தருவோம். அதனால் நமது தன்னம்பிக்கையுடன் மற்றவர்களுடைய தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். 

கவலை இன்றி, மகிழ்ச்சியுடன் வாழ வழி 

1. தினமும் 10 முதல் 30 நிமிடங்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். அதுவும் புன்னகையோடு! இவை இரண்டும் சிறந்த மனச்சோர்வு நீக்கும் மருந்துகள்!

2. தினமும் 10 நிமிடம் அமைதியாக உட்காருங்கள்!

3. காலையில் கண் விழிக்கும் போது, இன்று நான் ………. இதைச் செய்து முடிப்பேன் என்று உறுதி கொள்ளுங்கள்.

4. ஆற்றல், ஆர்வம், கருணை இவை மூன்றையும் கைக்கொள்ளுங்கள்

5.  மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

6. கடவுள் வழிபாட்டுக்கும், தியானத்திற்கும் நேரம் ஒதுக்குங்கள். நம் பரபரப்பான வாழ்க்கைப் பயணத்தில் மன ஒருமைப்பாட்டை வளர்க்க இவை உதவும்.

7. 5 வயதுக்குக் குறைவான குழந்தைகளிடம், அதிக நேரம் செலவழியுங்கள்.
(ஏன்னா இவர்கள் கல் நெஞ்சம் அற்றவர்கள்)

8.விழித்திருக்கும் போது நிறைய கனவு காணுங்கள்.
(கலாம் சொன்னது போல)

9. தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உணவுகளை விட இயற்கையாக மரம், செடிகளில் விளையும் உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள்.

10.அதிகமாக தண்ணீர் மற்றும் மூலிகைத் தேயிலை அருந்துங்கள்
(இங்கு தண்ணீர் என்பது ”H2O” வை மட்டும் குறிக்கும்)

11. உங்கள் நகைச்சுவை உணர்வால், தினம் ஒருவரையாவது சிரிக்க வையுங்கள். 

12. கன்னா பின்னாவென்று கிடக்கும் உங்கள் வீடு, கார், மேசை ஆகியவற்றை ஒழுங்காக வைத்துக் கொள்ளுங்கள்.

13. தேவையில்லாத கிசு கிசுக்கள், ”மொக்கைகள்”, எதிர்மறை சிந்தனைகள், உங்களால் கட்டுப்படுத்த இயலாத நிகழ்வுகள் இவற்றில் உங்கள் பொன்னான நேரத்தினை வீணாக்காதீர்கள். நேர்மறை சிந்தனைகளில் உங்கள் நேரத்தை முதலீடு செய்யுங்கள்.

14. வாழ்க்கைப் பாடத்தில் பிரச்சினைகள் ஏற்படுவது சகஜம்… அதை மறந்து விடுங்கள்! ஆனால் அது கற்றுத்தந்த படிப்பினையை ஒரு நாளும் மறவாதீர்கள்!

15. காலை உணவை ராஜா போலவும், மதிய உணவை ராணி போலவும், இரவு உணவை கல்லூரி மாணவி போலவும் உண்ணுங்கள்.

16.எப்பொழுதும் புன்முருவலுடன் சிரித்துக் கொண்டே இருங்கள்!

17. வாழ்க்கை எப்போதும் நியாயமானதல்ல எனினும் சிறந்தது.

18. வாழ்க்கை மிகவும் குறுகியது. மற்றவர்களை வெறுப்பதில் நேரத்தை வீணடிக்காதீர்கள்

19. எதற்க்கும் கவலைப்படாதே . சிறு எரும்புக்கும் வாழ்க்கை உண்டு . 

தன்னம்பிக்கையுடன் நோயின்றி வாழ நடைப்பயிற்சி

நாம் உண்ணும் உணவுப்பழக்க வழக்கங்களினால் மிக சிறிய வயதில் உடல் பருமண், இரத்தக் கொதிப்பு, சர்க்கரை, நீரழிவு நோய் என்று கேள்விப்படாத நோய்கள் எல்லாம் வருகின்றன.இதனால் நமக்கு வெகுவாக தன்னம்பிக்கை குறைகிறது . ஒரு நோய் எத்தனை கோடி பணம் இருந்தாலும் . எத்தனை உறவு இருந்தாலும் பலனற்றது போல் தோற்றமளிக்கச்செய்யும் . எந்த மருத்துவரிடம் சென்றாலும் அவர் மாத்திரை மருந்து என நிறைய செலவு வைத்துவிட்டு கடைசியாக சொல்வது நடைப்பயிற்சி செய்யுங்கள். நடைப்பயிற்சி இன்று அந்த அளவிற்கு முக்கியமாகிவிட்டது.நோயின்றி வாழ நடைப்பயிற்சி அவசியமான ஒன்றாகிவிட்டது . 

நடைப்பயிற்சி:

கீழ் காணும் முறையில் நடந்தால் நடைப்பயிற்சியின் முழுப்பயனையும் பெறலாம்.

1. நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கிப் பார்த்தவராக (தரையை பார்க்காமல்) இருபது அடி முன்னோக்கியவாறு நடங்கள்.

2. நெஞ்சை உயர்த்தியவாறு தோள்களைச் சாதாரணமாகவும் கைகளைத் தளர்வாகவும் வைத்திருங்கள்.

3. கைகளை முன்னும் பின்னும் ஒரே சீராக ஆட்டியவாறு (பக்கவாட்டில் ஆட்டாமல்), அதேவேளை நெஞ்சுப் பகுதியை விட உயர்த்திவிடாமல் நடந்து செல்லுங்கள். அதற்கேற்றவாறு உங்கள் கால்களும் பின் தொடரும்..

4. உங்கள் அடி வயிற்றை கெட்டியாகவும் உறுதியாகவும் வைத்த நிலையில் முதுகை சமமாக நிமிர்த்தியவாறு உடலைச் சற்றே முன்புறம் சாய்த்தவாறு நடங்கள்.

5. ஒரு நேர்கோட்டில் நடப்பதை போல் பாவனை செய்யுங்கள். அடிகளை சற்று அதிகமாக எட்டி வைத்து நடப்பதைக் கட்டுப்படுத்துங்கள். வேகமாக செல்ல வேண்டுமானால், காலடிகளை அருகருகே வைத்து விரைவாக நடங்கள்.

6. நடக்க காலை உயர்த்தும் போது உங்கள் முன்னங்கால் விரல்களால் உடலை உந்தித் தள்ளியவாறும், காலை பூமியில் வைக்கும் போது குதிகாலை பூமியில் முதலில் பதிய வைத்தவாறும் இதே சுழற்சியாக முன்னங்கால் விரல்களையும் இயற்கையான ஸ்ப்ரிங் போன்ற நரம்புகளின் உதவியால் உடலை முன்னோக்கி செலுத்துங்கள்.

7. இயல்பாக சுவாசியுங்கள். நடக்கும் போது ஆழமாக ஒரே சீரான வேகத்தில் சுவாசித்து உயிர்வளி (Oxygen) அதிகமான அளவில் உட்செலுத்திக்கொள்ளுங்கள். நடக்கும் போது வேகமாகவும் அதே நேரத்தில் மூச்சிறைக்கும் அளவிற்கு இல்லாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.

நடைப்பயிற்சியின் வகைகள்:

நடைப்பயிற்சில மூணு வகை உண்டு. முதல் வகை மெதுவாக நடக்கிறது. நாம எப்பவும் நடக்கிற மாதிரி எந்த ஒரு வேகமும் சிரமமும் இல்லாம சாதாரணமா நடக்கிறது இந்த வகை.

உடல்வலிகளை, சோர்வுகளைப் போக்க இந்தவித நடை உதவறதோட, உடம்புல உள்ள தசைகளையும், எலும்பு இணைப்புகளையும் இதமாக்கி, காயங்கள் வராமலும் பாதுகாக்கும். உடல் பருமன் உள்ளவங்களுக்கு ஏற்ற நடை இது.

அடுத்து பவர் வாக்கிங்னு சொல்ற வேக நடை. கைகளையும் கால்களையும் வேகமா வீசி நடக்கிறது. இப்படி வேகமா நடக்கிறப்ப, உடம்புல உள்ள கழிவுகள் எரிக்கப்படும்.

வியர்வை அதிகம் வெளியேறி, உடம்பு சுத்தமாகும். தசைகளும் எலும்புகளும் அதிக வலுவைப் பெற்று, தன்னம்பிக்கையை உயர்த்தி, உடம்புக்கு அதிக சக்தியைக் கொடுக்கும் இந்த நடை. நீரிழிவுக்காரர்களுக்கு ஏற்ற நடை இது.
மூணாவது ஜாகிங்னு சொல்ற மெதுவான ஓட்டம். வேகமா நடக்கிறவங்க, சில மாசங்களுக்குப் பிறகு வேகத்தைக் கொஞ்சம் கூட்டும்போது மிதமான, மிகமிக மெதுவான ஓட்டமா அது மாறும். இதனால நிறைய ஆக்சிஜன் நுரையீரலுக்குள்ள போய், அதன் விளைவா இதயத்துக்கு அதிக சுத்த ரத்தத்தை அனுப்பி, தேவையில்லாத அத்தனை கழிவுப் பொருள்களையும் வெளியேற்றி, உடம்புல உள்ள ஒவ்வொரு அணுவையும் சுத்தம் செய்யும். இள வயதுள்ளவர்களுக்கு ஏற்ற நடை இது. தினமும் அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை நடக்கலாம். இளம் வயதுள்ளவர்கள்1 மணி நேரமும், 30&40 வயதுள்ளவர்கள் 45 நிமிடங்களும், 40 ப்ளஸ்ல உள்ளவர்கள் அரை மணி நேரமும், 50&60 வயதுள்ளவர்கள் 20 நிமிடங்களும் நடக்கலாம்.

எப்பொழுது நடக்கலாம்:

அதிகாலையில் நடப்பது நல்லது. அது முடியாதவர்கள் இரவு சாப்பாட்டுக்கு அரை மணி நேரத்துக்குப் பிறகு நடக்கலாம். நடக்க தொடங்கிய பொழுது, சிலருக்கு கஷ்டமா இருக்கலாம். முதலில் வாரத்துக்கு இரண்டு முறை நடந்து, பின்னர் தினசரி நடக்க உடலை தயார்படுத்தலாம்.

நடைப்பயிற்சி தொடங்கும் முன்:

எக்காரணம் கொண்டும் வெறும் வயிற்றுடன் நடக்கக் கூடாது.

அதிகாலையில் நடக்கிறவர்கள், அதற்கு முன்பாகஅரை லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு நடக்க ஆரம்பிக்கலாம்.

உடற்பயிற்சி தொடக்கமாக ஒரே வேகத்தில் சுமார் 5 நிமிடங்கள் நடந்து பின்னர் கைகால்களை நீட்டவும். இதன்மூலம் நரம்புகளில் ஏதும் சோர்வோ அல்லது வீக்கமோ ஏற்படுவதிலிருந்து காத்துக்கொள்ளலாம்.

தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் பயன்கள்:

    இரத்த ஓட்டம் சீரடையும்
    நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும்
    நாளமில்லா சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும்.
    அதிகப்படியான கலோரிகளை (Calories ) எரிக்க உதவுகிறது
    முதுகு நரம்புகளை உறுதியாக்குகிறது
    அடிவயிற்றுத் தொப்பையைக் குறைக்கிறது
    மூட்டுக்களை இலகுவாக்குகிறது
    எலும்புகளுக்கு உறுதியளிக்கிறது
    உங்கள் கால்களையும் உடலையும் உறுதியான அமைப்பில் வைக்கிறது
    கெட்ட கொழுப்புச்சத்தின் (Cholestrol) அளவை குறைக்கிறது
    மாரடைப்பு சர்க்கரை நோய் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது
    உடல் மற்றும் மனச்சோர்வை குறைக்கிறது
    நல்ல தூக்கம் வர உதவுகிறது
    நல்ல கண்பார்வையை வழங்குகிறது

முறையாக நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நலமாக வாழலாம். வீண் மருத்துவச் செலவை குறைப்பதோடு தன்னம்பிக்கையோடு வாழலாம் . 

பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி...?

தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும்.

1. சுயமாக சிந்திக்க, சுயமாக செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

2. படிப்பில், அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்கு பெற்றோர் போதிய  பயிற்சி அளிக்க வேண்டும்.

3. குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டு விடவும் கூடாது.

4. குழந்தைகளுக்கு அன்புப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப்படுத்தவேண்டும்.

5. ’நீ ராசா அல்லவா..? ராசாத்தி அல்லவா..?’ என்கிற வாசகங்கள் பெற்றோர் 
வாயிலிருந்து வர வேண்டும்
.
6. “மக்கு,மண்டு,மண்டூகம்” போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.

7. பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

தன்னம்பிக்கையை வளர்க்கும் மேலும்சில வழிகள்
1.      பெற்றோர்கள் எப்போதும் குழந்தைகளின் முன் தாங்கள் முடிவெடுக்கும் திறன் மற்றும் சமுதாயத்தின் பங்களிப்பு மூலமாக உங்கள் தன்னம்பிக்கையை நிரூபிக்க முடியும். குறிப்பாக குழந்தை முன், உங்களை தாழ்த்திப் பேசுவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக பிரச்சனைகளில் இருந்து விலகி செல்வதற்கு மாறாக, அவற்றை ஒரு மரியாதையான முறையில் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு தன்முனைப்பை உங்களிடம் இருந்து அவர்கள் கற்று கொள்ள வேண்டும் 2. குழந்தையின் பல்வேறு நடவடிக்கைகளில் திருப்தியை வெளிப்படுத்துங்கள். அதிலும் குழந்தையின் திறமை அல்லது திறனை புகழ்வதற்கு பதிலாக, அவர்களது நடவடிக்கைகள் நினைத்து பெருமை அடைந்திருப்பதை வெளிப்படுத்துங்கள். "நீ மிகவும் புத்திசாலி" என்று சொல்வதை விட "நீ பள்ளியில் கடினமாக வேலை செய்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன்." என்று சொல்லலாம். 3. குழந்தைகளது கலைத்திறன் படைப்புகள் அல்லது வெற்றிகரமாக முடித்த பள்ளி திட்டங்களை வீட்டில் காட்சிக்கு வைப்பதால், அவர்களது பணியின் மதிப்பை காண்பிக்கலாம். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் அவர்களின் நேர்மறையான சாதனைகளை பகிர்ந்து கொள்வதின் மூலம் அவர்களுக்கு ஒரு புகழ்ச்சி கிடைக்கும். அவர்களின் சாதனைகளை ஒரு நினைவக புத்தகம் அல்லது பத்திரிக்கையில் பதிவு செய்து பிற்காலத்தில் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். 4 பெற்றோர்கள் திறந்த மனதுடன் குழந்தையின் கவலைகளை கேட்க வேண்டும். குழந்தைகள் சிறிய கவலைகளினால் தன்னை ஒரு வேடிக்கையாக உணர்வதை தவிர்க்கவும். சில நேரங்களில் அவர்கள் கவலையடைவதை நியாயப்படுத்த திறந்த மனதோடு பேசுமாறு உற்சாகப்படுத்தவும். 5. மூளையை குழப்பும் யோசனைகள் நிறைந்த வேலைகளை குழந்தையுடன் சேர்ந்து செய்யுங்கள். அது சூழ்நிலைகளை மாற்றுவதோடு, அவர்களை கவலையில் இருந்து விடுதலை அளிக்கும். அவர்கள் போர் அல்லது பஞ்சம் போன்ற உலகளாவிய பிரச்சினைகள் பற்றி கவலைப்பட்டால், இந்த பிரச்சினைகள் தனிப்பட்ட முறையில் அவர்களை எப்படி பாதிக்கும் என்று அவர்களோடு கலந்துறையாடி அதில் அவர்கள் எவ்வாறு தன்னை ஈடுபடுத்தி கொள்ளலாம் என்பதை அவர்களுக்கு உணர்த்தலாம். 6. குழந்தைக்கு ஒரு வலுவான தலைவராக உங்கள் பங்கை நிறைவேற்றுங்கள். பெற்றோர்கள் பயம் மற்றும் சந்தேகம் அடைவதை, குழந்தைகள் முன்பு தணிக்கை செய்யுங்கள்.

தன்னம்பிக்கை உண்டாக நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?

“நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை. தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்”.நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு ஆறு முக்கிய கோட்பாடுகள் காரணமாக இருக்கின்றன. அவை;

1. தன்னம்பிக்கை
2. ஆர்வம்
3. செயல் ஊக்கம்
4. விழிப்புணர்வு
5. புரிந்துகொள்ளல்
6. உடல் நலம்.

இவை ஒவ்வொன்றைப் பற்றியும் சிறிது விளக்கமாகப் பார்க்கலாம்.

1. தன்னம்பிக்கை (Self Confidence)

“என்னால் செய்திகளை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். எனது மூளைத்திறன் நன்றாக இருக்கிறது. எனக்கு மன ஆற்றல் நன்றாக இருக்கிறது” என்ற நம்பிக்கை முதலில் வேண்டும். “நான் எப்படித்தான் இவற்றையெல்லாம் படித்து நினைவில் வைக்கப் போகிறேனோ, எனக்கு ஞாபக சக்தியே சற்று குறைவாகத்தான் இருக்கிறது. அடிக்கடி எனக்கு மறந்து போய்விடுகிறது” – என்று தங்களைப் பற்றியே தாங்கள் கொள்கின்ற அவநம்பிக்கையை விட வேண்டும்.

“நினைவாற்றல்” என்பது மூளையின் ஒரு திறமை. அதனை பயன்படுத்தப் பயன்படுத்த, பயிற்சியாலும் முயற்சியாலும் அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். இந்த உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொண்டு, நினைவாற்றலை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால் அற்புத நினைவாற்றல் பெறமுடியும்!

2.ஆர்வம் (Interest)

ஆர்வம் காட்டுகிற விசயங்கள் நினைவில் நன்றாகப் பதியும். இயற்கையாக ஆர்வம் இல்லாவிட்டால் கூட ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு கவனித்தால், பதியவைத்தால் நினைவில் நிற்கும்.

3. செயல் ஊக்கம் (Motivation)

இந்தச் செய்திகளை ஏன் நான் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு எவ்வகையில் இது பயன்படும் என்று உங்களோடு இணைத்து தெளிவுபடுத்திக் கொண்டால் செய்திகள் நன்றாகப் பதியும்.

உதாரணத்திற்கு “ஹோட்டல் ரெசிடென்ஸிக்கு நாளை காலை 4 மணிக்கு நீங்கள் வந்தால் உங்களுக்கு 5 லட்ச ரூபாய் கொடுக்கப்படும்” என்று ஒருவர் உங்களிடம் சொன்னால் நீங்கள் மறந்து விடுவீர்களா?

தேவையை, அவசியத்தை நன்றாக உணர்ந்த விசயங்கள் நன்றாகப் பதிகின்றன.

4. விழிப்புணர்வு (Awareness)

மனம் விழிப்பு நிலையில் இருக்கும்பொழுது கவனமும், ஒருமைப்பாடும் மிகச்சிறந்து இருக்கும் விழிப்புணர்வு அதிகரிக்க தியானப் பயிற்சிகளும், யோகாசனப் பயிற்சிகளும் துணைபுரியும்.

உங்களுக்குப் பிடித்த எந்த அமைப்பின் மூலமும் இவற்றைக் கற்று முறைப்படி பயிற்சி செய்தால் மனத் தெளிவும், அமைதியும், விழிப் புணர்வும் பெறலாம். வேதாத்திரி மகரிஷி அவர் களின் பயிற்சிகளும், சமர்ப்பண் – வாழும் கலைப் பயிற்சிகளும், ஈசா யோக மையப் பயிற்சிகளும், ஓசோ ரஜினிஷ் பயிற்சிகளும், கிருஷ்ணமாச்சார்ய யோகமந்திரம் (சென்னை) முதலிய அமைப்பு பயிற்சிகள் விஞ்ஞானப்பூர்வமானதாக அற்புத மானவையாக இருக்கின்றன.

5. புரிந்துகொள்ளல் (Understanding)

புரிந்து கொண்ட விசயங்கள் நினைவில் நன்றாக இருக்கின்றன. புரியாவிட்டால் – தெரியாவிட்டால் கூச்சம், அச்சம், தயக்கம் இல்லாமல் ஏன்? எதற்கு? எப்படி? எவ்வாறு? எங்கு? யார்? என்று கேள்விகளைக் கேட்டு புரிந்து கொள்ளுங்கள்.

6. உடல் ஆரோக்கியம் (Health)

உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது நினைவாற்றல் நன்றாக இருக்கும். ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு தளர்ந்திருக்கும் நேரத்தில் செய்திகளை நினைவில் வைப்பதே சிரமமாக இருக்கும். ஆரோக்கியமான உடலில் மூளைக்கு நிறைய இரத்த ஓட்டம், காற்றோட்டம் சென்று மூளை சுறுசுறுப்புடன் இயங்கும். தக்க உணவு, சரியான உறக்கம், முறையான பயிற்சிகள் மூலம் உடலை நன்கு பேணிப் பாதுகாத்தால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.
சத்தான உணவுகளை கொடுப்பதன் மூலம் அனைவருக்கும் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

மூளைச் சோர்வை தடுக்கும்
அன்றாடம் வீட்டு சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும். இவை குழந்தைகளின் மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன. பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிடக் கொடுக்கவேண்டும்.

ஊறவைத்த பாதாம் பருப்பு
பாதாம் பருப்பில் பாஸ்பரஸ்,தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது.எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும்

அக்ரூட், திராட்சை
அக்ரூட் பருப்புகளுடன் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும்.அதேபோல் வேர்க்கடலை சாப்பிட்டாலும் நினைவாற்றல் அதிகரிக்கும்.

மூளைக்கு சுறுசுறுப்பு
நினைவாற்றல் அதிகரிக்க வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் குழந்தைகளும், பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். திப்பிலியை வல்லாரை சாறில் ஊற வைத்து காய வைத்து பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். பப்பாளிப் பழம் தினமும் சாப்பிட்டால் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம்.

பசலைக்கீரை 
பசலைக்கீரையை வாரம் ஒரு நாள் உணவில் சேர்த்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்

நெல்லிக்காய் 
மாணவர்கள் நெல்லிக்காய் தவறாது உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் கண்பார்வை தெளிவாகும்.