Monday, April 24, 2017

உங்களுக்குள் இருக்கும் எதிரி யார் என்று தெரியுமா?

கடினப்பட்டு வேலைசெய்து உங்கள் இலக்கை அடைய நினைத்தாலும் அடைய முடியவில்லையா... செய்யும் வேலைகளில் உங்களுக்கே நிறைவு இல்லையா? அப்படியெனில், உங்களுக்குள் மிகப்பெரிய ஓர் எதிரி இருக்கிறான். அவனை அழித்தால் மட்டுமே உங்களால் கனவு வாழ்க்கையை நினைவாக்கிட முடியும். அதற்கான #Morningmotivationதான் இது.

அந்த எதிரியின் பெயர் 'Sleep Inertia' என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் `தூக்கமின்மை'. இது, உங்கள் வேலையை மட்டும் பாதிக்கவில்லை... உங்களின் உடல்நலத்தையும் கடுமையாகப் பாதிக்கிறது. `பல் பிரச்னையில் தொடங்கி இதயப் பிரச்னை வரை பல நோய்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுப்பதே இந்தத் தூக்கமின்மைதான்' என்று பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தத் தூக்கமின்மையை வெல்ல, ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது அதிகாலையில் எழுவது. “சீக்கிரம் எந்திரிச்சா எப்படிங்க நல்லா தூக்கம் வரும்? செம உடான்ஸா இருக்கே!” என்கிற உங்கள் மைண்ட்வாய்ஸ் எனக்கும் கேட்கிறது. ஆனால், அதுதான் உண்மை.  அப்படி அதிகாலையில் எழுவதற்கும், தூக்கமின்மையை வெல்வதற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அவை....

1. தேவை ஆழ்ந்த தூக்கம்:  முக்கியமான டிப்ஸ் என்பது, சீக்கிரம் தூங்குவது. “தூக்கம் வந்தா தூங்க மாட்டோமா... என்ன பாஸ்!” என உங்களின்  ஆதங்கம் புரிகிறது. ஆனால், தூக்கத்தை வரவழைக்க இன்றைய நவீன வாழ்க்கையில் சில விஷயங்களைச் செய்தாலே போதும். அதில் முதலில் செய்யவேண்டியது, உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே இரவு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.  ஆழ்ந்த தூக்கம்கொள்ளும் பெரும்பாலானோர், இந்த முறையைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். 

2. நெட்டு கட்டு: படுக்கைக்குப் போவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் சாப்பிடுவது எவ்வளவு நல்லதோ, அதே அளவுக்கு மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்வதும் நல்லது. ஆஃப் செய்ய முடியாது என்பவர்கள், குறைந்தபட்சம் வைஃபை மற்றும் மொபைல் டேட்டாவையாவது தயவுதாட்சண்யம் இல்லாமல் நிறுத்திவைப்பது நல்லது. கண்கள் சொருகும் நேரத்தில் அலெர்ட் டோனோ, நோட்டிஃபிகேஷன் சவுண்டோ அன்றைய தூக்கத்தின் பாதியைக் குறைக்கலாம். மேலும், தூங்கப்போகும் இரண்டு மணி நேரத்துக்கு முன் மொபைலை அப்பால் வைத்தால் தூக்கமின்மையை விரட்ட முடிகிறது என ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

3. கொட்டாவிப் படிப்பு: `சாப்பிட்டாயிற்று... மொபைல் நெட் இல்லாமல் செய்தாயிற்று, தூக்கம் வரும் வரை டிவி பார்க்கலாம்' என ப்ளான் போடுகிறீர்களா? அதுவும் கூடாது. ஆனால், படிக்கலாம். இதுதான் சாக்கு எனக் கிண்டில், இ-புக் என எலெக்ட்ரானிக் ஏரியா பக்கம் போகவே கூடாது. புத்தகத்தில் வாசிக்கலாம். இல்லையென்றால் குடும்பத்துடன் பேசிக்கொண்டிருக்கலாம்.

4. ஆரோக்கியமான உடற்பயிற்சி: இதுவரை நாம் படித்த  மூன்றையும் செய்யத் தொடங்கினாலே அதிகாலை விழிப்பு இலகுவாகிவிடும். 

இனி, காலையில் எழுந்தவுடன் செய்யவேண்டியது. உடனே ஃப்ரெஷ்ஷாகி வாங்கிங், ஜாக்கிங் அல்லது சைக்கிளிங் என உடலுக்குப் பயிற்சி கொடுப்பது. உடலில் உள்ள கலோரிகள் காலையில் செய்யும் உடற்பயிற்சிகளால்தான் அதிகம் எரிக்கப்படுகின்றன. 

5. சன்னுக்கு ஹாய்:  காலையில் எழுந்தவுடன் வெளிச்சத்தை நோக்கிப் போக வேண்டும். வெளிச்சத்தை உணர்ந்தவுடன்தான் உங்கள் மனம் அலெர்ட் நிலைக்கு வரும். என்னதான் காலையில் சரியான நேரத்துக்கு எழுந்து யோகா, உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டாலும் இது முக்கியம். காலையில் எழுந்தவுடன் வெளிச்சத்தைப் பார்ப்பது இரவில் சரியான நேரத்துக்குத் தூக்கத்தைக் கொடுக்கும்.

6. ஹெவி பிரேக்ஃபாஸ்ட்: முதல் நாள் இரவு எட்டு மணிக்குச் சாப்பிட்டிருப்பீர்கள். காலையில் பெயருக்கு எதையாவது வயிற்றுக்கு அள்ளிப் போட்டுக்கொண்டு, லன்ச் பாக்ஸில் சோற்றை அடைத்துக்கொண்டு ஓடாதீர்கள். காலையில் விரைவாக எழுவதால் பரபரப்பு இருக்காது. எனவே, காலையில் நிதானமாகச் சாப்பிடவும். மதியம் அளவாகச் சாப்பிட்டு வெயிட்டை பேலன்ஸ் செய்யலாம். 

மேலே தூங்குவதற்கான ஐடியாக்கள் மூன்று, தூங்கி எழுந்த பிறகு செய்யவேண்டிய மூன்று என ஆறு பாயின்ட்கள் உள்ளன. இவற்றில் மொபைல் நெட்டை எட்டு மணிக்கு கட் செய்தாலே தூக்கம் தன்னால் வந்துவிடும் என்பது சொந்த அனுபவம்.

No comments:

Post a Comment