நாம் அறிமுகப்படுத்துவது, ‘தி டென் கோல்டன் ரூல்ஸ் ஆஃப் லீடர்ஷிப்’ என்னும் எம்.ஏ.சூப்பியஸ் மற்றும் பனோஸ் மோர்டொவ்கோட்ஸ் எழுதி, அமெரிக்கன் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் வெளியிட்ட புத்தகத்தை.
ஒரு சிறந்த தலைவனாகத் திகழ என்னென்ன குணாதிசயங்கள் வேண்டுமோ, அவை அத்தனையுமே கொண்டிருந்தால் மட்டுமே, வெற்றி பெற முடியும். ஏனென்றால், தெளிந்த டெக்னிக்கல் அறிவை மட்டுமே வைத்துக்கொண்டு ஒருவரால் எதிர்காலத்தைக் கணித்து, அதற்கேற்ப கூட இருக்கும் பணியாளர்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்திக் கடலளவுக்குப் போட்டிகள் நிறைந்த இந்த உலகில் நம் கம்பெனி என்ற கப்பலை முன்னோக்கிச் செலுத்தி வெற்றி கண்டுவிட முடியாது. இதில் கொடுமை என்னவெனில், லீடர்ஷிப் குறித்த சில எதிர்த்துப் பேசமுடியாத, அதேசமயம் தவறான கோட்பாடுகள் சிலவற்றை (மூடநம்பிக்கை என்று கூடச் சொல்லலாம்) நாம் கொண்டிருப்பதுதான்.
முதலாவதாக, யார் வேண்டுமானாலும் லீடராகலாம் என்ற எண்ணம். ஒரிஜினல் லீடர்ஷிப்புக்கான சில சிறப்பான குணாதிசயங் களை அனைவரும் பெற்றிருப்பதில்லை என்ற உண்மையை நாம் ஒட்டுமொத்தமாக மறந்தே போய்விடுகின்றோம். லீடர்ஷிப் குணம் சற்றும் இல்லாத, அதேநேரம் திறமையாகச் செயல்படும் ஒரு மேனேஜரை நாம் லீடர் என்று சொல்வதும் கோமாளித்தனமே. அவர் அவருடைய கடமையை சிறப்பாகச் செய்கின்றார் என்றே கொள்ள வேண்டும். சரியாக வேலை செய்பவரெல்லாம் லீடர் இல்லை. குறிப்பாகச் சொன்னால், நிர்வாகம் செய்வது வேறு. லீடர்ஷிப் என்பது வேறு என்கிறார்கள் ஆசிரியர்கள்.
இரண்டாவது, லீடர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதை நாம் நம்புவது. இதற்கான உற்பத்தி செய்யும் டெக்னிக்குகளின் விற்பனை வேறு கொடிகட்டிப் பறக்கின்றது. இத்தனை மில்லி பால், இத்தனை மில்லி டிக்காஷன், இவ்வளவு சர்க்கரை, இவ்வளவு சூடு போன்றவை இருந்தால் அது சூப்பர் காபி ஆவதுபோல் இந்திந்த டெக்னிக்குகளையெல்லாம் ஒருவருக்குக் கற்றுக்கொடுத்தால், அவர் லீடராக மாறிவிடுவார் என்று நினைப்பதெல்லாம் கட்டுக் கதை என்கின்றனர். எத்தனை பெரிய மேனேஜ்மென்ட் ஸ்கூலில் படித்தாலும் லீடர்ஷிப் குணாதிசயம் எள்ளளவும் இல்லாத ஒருவர் லீடராக மாறிவிட முடியாது என்றே சொல்லலாம்.
அப்புறம் எப்படி லீடராக மாறுவது என்று கேட்கின்றீர்களா?
லீடர்ஷிப் எனில், என்ன என்று முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். திறமை, அனுபவம் மற்றும் பழுத்துப் பக்குவப்பட்ட தொலைநோக்கு என்ற மூன்றின் அளவான கலவைதான் லீடர்ஷிப் என்கின்றனர் ஆசிரியர்கள். பழுத்துப் பக்குவப்பட்ட தொலை நோக்கற்ற, ஆனால், அதேசமயம் திறமையும் அனுபவமும் கொண்ட நன்கு பணிபுரியும் மேனேஜர்கள் அனைவருமே லீடர்கள் இல்லை. ஒருவர் பழுத்துப் பக்குவப்பட்ட தொலை நோக்கைப் பெற, முதலில் சுயமாக தெளிவாக இருக்க வேண்டும். அப்போதுதான் கையில் இருக்கும் சவால்களின் மீது முழுக்கவனம் செலுத்த முடியும்.
இதைப் பெற ஒரு மனிதனுக்கு வாழ்க்கையின் தத்துவம் (பிலாசபி ஆஃப் லைஃப்) முதலில் தெளிவாய்ப் புரிய வேண்டும். வாழ்க்கையின் தத்துவம் தெளிவாய்ப் புரிந்த ஒருவனால் மட்டுமே தொழிலில் சிறப்புடன் செயல்பட்டு ஒரு லீடராய்த் திகழ முடியும் என்கின்றனர் ஆசிரியர்கள்.
ஆனால், வேலை பார்க்கும் இடத்தில் இருக்கும் குறைபாடுகளுக்கெல்லாம் மூலகாரணமே வாழ்க்கையின் தத்துவத்தைப் புரிந்துகொள்ளாமல் செயல்படுவதுதான் என்பதை நாம் முதலில் உணர வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள். இதனாலேயே இந்தப் புத்தகத்தில் அரிஸ்டாட்டில், பிளாட்டோ போன்ற பல பேரறிஞர்களின் கருத்துக்களை உங்களுக்கு வரிசைப்படுத்தித் தந்துள்ளோம் என்கின்றனர் அவர்கள்.
லீடர்ஷிப் என்றால் என்ன என்பதற்கான பதிலை இப்போது பார்ப்போம்.
லீடர்ஷிப் என்பது நிர்வாக ரீதியான வெற்றி கரமான மேலாண்மையல்ல. லீடர்ஷிப்புக்குத் தேவையான குணாதிசயங்கள் என்பது மிகமிகச் சிறப்பானதும், மாறுபட்டதும் ஆகும். அதனால், எல்லோராலும் லீடராக முடியாது.
அதேபோல், லீடர்களை உற்பத்தி செய்ய முடியாது. சில ஃபார்முலாக்களை வைத்து லீடர் களைத் தயாரிக்க முடியாது. திறமை, அனுபவம் மற்றும் மனித வாழ்க்கையின் நுட்பமான வேறுபாடுகள் மற்றும் உணர்வுப்பூர்வமான சிக்கல்கள் குறித்து பழுத்துப் பக்குவப்பட்ட தொலைநோக்கு என்பவற்றின் கலவையே லீடர்ஷிப் ஆகும்.
ஆணோ, பெண்ணோ ஒரு லீடாராக வேண்டுமென்றால் வாழ்க்கையின் தத்துவத்தை அவர்கள் முழுமையாகப் புரிந்துகொண்டேயாக வேண்டும். அதன் பின்புதான் அவர்கள் உண்மையான லீடராக மாற முடியும்.
இந்த லீடர்ஷிப் குணாதிசயத்தைப் பெற்று வளர்த்துக்கொள்ள பத்து எளிமையான சட்டங்கள் இருக்கின்றன.
1.உன்னை அறிந்துகொள்!
உன்னை முழுமையாக நீ அறிந்துகொள். உன்னுள் இருக்கும் நல்லது - கெட்டது, உன்னுடைய பலம் - பலகீனம் போன்றவற்றைத் தெளிவாய் புரிந்துகொள். சுயபுரிதல் என்பதுதான் லீடர்ஷிப்புக்கான முதல் அஸ்திவாரம்.
2. அதிகாரம் ஆளை அடையாளம் காட்டும்!
அதிகாரம் கிடைத்தால் நாம் எப்படி நடந்து கொள்கின்றோம். அதிகாரத்தைப் புத்திசாலித் தனமாக உபயோகித்தால் உண்மையான லீடர். அதிகாரத்தை அலுவலகம் சிறப்பான நிலையை அடைய உபயோகப்படுத்துவது. உதாரணத்துக்கு, மேனேஜர் என்றாலும்கூட அலுவலகத்துக்குக் குறித்த நேரத்துக்கு வருவது போன்றது. போலியான லீடரோ அதிகாரத்தைத் தண்டனை தருவதற்கு மட்டுமே உபயோகப்படுத்துவார். பிடிக்காதவன் லேட்டாய் வந்தால் மெமோதான்.
3.தோழமை உணர்வை வேலை பார்க்கும் இடத்தில் வரவழைத்தல்!
ஆண்டான், அடிமை என்பதைப்போல் இல்லாமல் எல்லோருடைய முன்னேற்றமும் நமக்கு முக்கியம் என்ற தோழமை உணர்வை வேலை பார்க்கும் இடத்தில் கொண்டுவரத் தெரிந்தவரே உண்மையான லீடராவார். இதில் முக்கியச் சிக்கலே ‘நான்’ என்பதிலிருந்து ‘நாம்’ என்று மாறுவதில்தான். கார்ப்பரேட் உலகத்தில் இது சாத்தியமாவது கடினம். வெற்றி வரும்போது அதைத் தன்வசமாக்கிக்கொள்ளாமல் மொத்த டீமுமே இதற்குக் காரணம் என்பதை உணரச் செய்பவரே உண்மையான லீடர்.
4. நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களில் நேரத்தையும் சக்தியையும் செலவிடுவதைத்தவிர்ப்பது!
இதெல்லாம் என் கட்டுப்பாட்டில் இருப்பது. இவற்றின் மீது நமக்குக் கட்டுப்பாடு கிடையவே கிடையாது என்ற புத்திசாலித்தனமான தெளிவை உண்மையான லீடர் தன்வசம் கொண்டிருக்க வேண்டும். இது தெரிந்துவிட்டால் எனர்ஜியும் நேரமும் பெருமளவில் சேமிக்கப்படும்.
5. எப்போதும் உண்மையை வரவேற்பது!
லீடர் என்பவர் உண்மையை எப்போதும் வரவேற்பவராய் இருக்க வேண்டும். பிழைகள் இருந்து அவைகுறித்து யார் சொன்னாலும் கேட்டு அதைச் சரிசெய்துகொள்ளும் குணம் உடையவராய் இருக்க வேண்டும். போலியான லீடர்கள், சுற்றியிருப்பவர்கள் தங்கள் செயல்பாடு குறித்துக் குறைகளைச் சொல்லாமல் இருக்கத் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துவார்கள்.
6.போட்டி, திறமையை வெளிக்கொணரும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருத்தல்!
போலி லீடர்கள் போட்டி உருவானால் அதை அழிக்கவே முயல்வார்கள். உண்மையான லீடர்களோ போட்டியை வரவேற்பார்கள். ஏனென்றால், போட்டி என்பதே உண்மையான திறனை வெளிக்கொணரும் என்பதில் அவர்கள் நம்பிக்கைக் கொண்டிருப்பார்கள்.
7. ஓர் உயரிய வாழ்க்கை முறையை வாழ்தல்!
தனிமனித நடத்தை என்பதில் ஓர் உயரிய வாழ்க்கையை வாழ்பவர்களே உண்மையான லீடர்களாவார்கள். எதிரிகள் குறித்து காழ்ப்பு உணர்ச்சியும், அவர்கள் கெட்டழிய வேண்டும் என்ற எண்ணமும் கொண்டு திரிபவர்கள் போலி லீடர்களே.
8. தகவல்களை எப்போதும் திறனாய்வு செய்த பின்னரே ஒப்புக்கொள்ளுதல்!
இன்னார் சொன்னார், இப்படித்தான் செய்து வருகின்றார்கள், காலங்காலமாய் இப்படித்தான் என்பது போன்றவற்றை விட்டுவிட்டுப் பெறப் படும் இந்தத் தகவல்களால் என்ன நன்மை. சொல்பவர் யாராக இருந்தாலும் உண்மை எவ்வளவு, பொய் எவ்வளவு போன்ற திறனாய்வு செய்பவரே உண்மையான லீடராவார்.
9. தனிமனித ஒழுங்கின் சக்தியைக் குறைத்து மதிப்பிடாமல் இருத்தல்!
எப்போதுமே ஒரு நல்ல எண்ணத்துடன் செயல்களைச் செய்யுங்கள். ஒரு புரபஷனலாகத் திகழுங்கள். பொய்யையும் திருட்டுத்தனத்தையும், இந்தக் காலகட்டத்தில் இதுதான் சரி என்று சப்பைக்கட்டு கட்டாதவரே உண்மையான லீடர்.
10. நற்குணங்களே தலைவிதி (ஊழ் வினை) என்று நினைத்தல்!
ஒரு நிறுவனத்தின் தலைவிதி என்பது ராசி/நட்சத்திரத்தால் வருவது இல்லை. அதன் குணாதிசயங்களால் மட்டுமே நிர்ணயிக்கப் படுகின்றது என்பதை உண்மையான லீடர்கள் முழுமையாக உணர்ந்திருப்பார்கள்.
இதெல்லாம் எழுதவும் படிக்கவும் நன்றாக இருக்கிறது. நடப்பில் எத்தனை கத்திகள், எத்தனை ஆப்புகள், எத்தனை பாலிடிக்ஸ், எத்தனை கழுத்து நெரிசல், எத்தனை கால்வாரல்கள் என்பீர்கள். சூழலுக்கேற்ப நல்லது கெட்டதை மாற்றிக்கொள்ள வேண்டியதுதான் என்ற வாதத்தைக்கூட நீங்கள் வைக்கலாம். அப்படி மாற்றிக்கொண்டால் அந்தச் சூழலில் மட்டுமே வெற்றி பெறலாம்.
ஆனால், நிறுவனங்கள் நீண்ட நாள் அடிப்படையில் தொடர்ந்து வெற்றிபெறவல்லவா பாடுபடுகின்றன. அந்த நீண்ட நாள் தொடர் வெற்றியை அடைய மேலே சொன்ன குணாதிசயங்களைக் கொண்ட லீடர்களை நிறுவனங்கள் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள்.
No comments:
Post a Comment