Wednesday, March 15, 2017

கேம்பஸ் தேர்வு : கவனிக்க வேண்டியவை.

சமீப காலமாக எல்லோரையும் வசீகரிக்கும் ஒரு துறை கணினி மென்பொருள் துறை என்பதில் சந்தேகமில்லை. மற்ற துறைகளுடன் ஒப்பிடுகையில் கணினி மென்பொருள் துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகம், கை நிறைய சம்பளமும் சாத்தியம் என்பதால் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கணினி மென்பொருள் துறையை மாணவர்கள் குறி வைக்கின்றார்கள்.

எம்.சி.ஏ, எம்.எஸ்.சி (ஐ.டி) , பி.இ  பி.டெக் போன்றவற்றில் கணினித் துறை சிறப்புப் பிரிவு போன்றவையே கணினி மென்பொருள் நிறுவனத்தினர் குறிவைக்கும் பட்டப் படிப்புகளாகும். இவை தவிர தேவைக்கேற்ப மற்ற துறை மாணவர்களும் கூட அணுகப்படலாம், ஆனால் அதற்கான வாய்ப்புகள் ரொம்பக் குறைவு !

மென்பொருள் துறையில் தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க கணினி துறைப் படிப்புகளும் வெகு வேகமாகப் பரவி விட்டன. இன்றைக்கு கணினி மென்பொருள் பட்டப் படிப்பு முடித்தவர்களால் நாடு நிரம்பி வழிகிறது. ஒரு காலத்தில் கணினி நுட்பத்தில் பி.ஜி.டி.சி.ஏ போன்ற டிப்ளமோ படித்தாலே வேலை கிடைக்கும் சாத்தியம் இருந்தது. ஆனால் இப்போது அப்படியில்லை. பட்டப்படிப்பு படித்தவர்கள் புற்றீசல் போலப் பெருகி விட்டதால் வேலையில்லாத் திண்டாட்டம் கணினிப் பட்டம் படித்தவர்களிடையேயும் வேகமாகப் பரவி வருகிறது.

பத்து பேர் தேவை என விளம்பரம் கொடுக்கும் நிறுவனத்துக்கு குறைந்த பட்சம் ஐநூறு பேர் விண்ணப்பிக்கின்றனர். முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு வேலை கிடைப்பது மிகப்பெரிய சவாலாக மாறி வருகிறது. புதியவர்கள் வேலைக்குத் தேவை என நிறுவனங்கள் அழைப்பு விடுத்தால் பத்தாயிரம் பேர் படையெடுக்கின்றனர். எத்தனை பேர் வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்த இதுவே போதும் !

கணினி மாணவர்களுக்கு மிகப்பெரிய போட்டிக் களம் உருவாகிவிட்டது. இத்தகைய போட்டி நிறைந்த உலகில் வேலை கிடைக்க மிகச் சிறந்த வழி “கேம்பஸ் தேர்வு” என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. கல்லூரியை விட்டு வெளியே வந்து முயற்சி செய்வதில் பத்து சதவீதம் கஷ்டப்பட்டாலே கல்லூரி கேம்பஸ் தேர்வில் வெற்றி பெற முடியும். எனவே கல்லூரி மாணவ மாணவியர் கேம்பஸ் தேர்வை மிக மிக சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

கேம்பஸ் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டீர்களெனில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மிக முக்கியமான எதையோ ஒன்றைச் சாதித்து விட்டீர்கள் என காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
கல்லூரியில் படிக்கும் காலத்தில் இன்டர்வியூ பற்றி முழுமையாய் தெரிந்திருக்காது. கேம்பஸ் இன்டர்வியூவில் என்ன நடக்கும் ? எப்படி அதை எதிர்கொள்ளவேண்டும் ? போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்வது அதில் வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்க உதவும்.

கேம்பஸ் தேர்வில் நாம் போட்டியிடப் போவது அதிகபட்சம் சில நூறு நபர்களுடன் தான். கல்லூரிக்கு வெளியே இந்தப் போட்டி சில பத்தாயிரங்கள் என எகிறும். எனவே அதிகபட்சக் கவனத்துடன் கேம்பஸ் இன்டர்வியூவை எதிர்கொள்ளுங்கள்.

வெற்றியாளனுக்கும், தோல்வியடைந்தவனுக்கும் இடையே இடைவெளி மிக மிகக் குறைவாகவே இருக்கும். அரை வினாடி நேரத்தில் கோப்பையை இழக்கும் விளையாட்டுப் போட்டிகளைப் போலவே கேம்பஸ் தேர்வையும் அணுகுங்கள். கொஞ்சமும் அலட்சியமோ, விளையாட்டுத் தனமோ வேண்டாம்.

மற்றவர்களை விட வித்தியாசமாய் உங்களிடம் என்ன இருக்கிறது ? அடுத்தவர்களை விட அதிகமாய் உங்களுக்கு என்ன தெரியும் என்பதை யோசித்துப் பாருங்கள். அது ஜாவா, டாட் நெட், மெயின்ஃப்ரேம் போன்ற ஏதோ ஒரு மென்பொருள் சார்ந்த தொழில்நுட்ப சான்றிதழாகவும் இருக்கலாம். அல்லது கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ், லீடர்ஷிப் ஸ்கில்ஸ் போன்ற மென் திறமையாகவும் இருக்கலாம் ! ஒரு ஸ்பெஷாலிடியாவது உங்களிடம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் !

பலரும் தங்களுடைய அறிவு என்பது தொழில் நுட்ப ரீதியான படிப்பு மட்டும் என நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறு ! கம்யூனிகேஷன், நட்பு, சமூக அனுசரிப்பு, மரியாதை, விவாதத் திறமை, பற்றுறுதி, உரையாடல் திறமை, தலைமைப் பண்பு என ஏகப்பட்ட விஷயங்கள் சாஃப்ட் ஸ்கில்ஸ் எனப்படும் திறமையின் கீழ் வரும். எனவே அவற்றிலும் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.

உங்கள் கையிலிருக்கும் மார்க் ஷீட் உங்களுடைய கண்ணாடி. உங்களுடைய படிப்பு ஆர்வத்தையும், கடின உழைப்பையும் அது தான் காட்டிக் கொடுக்கும். கல்லூரி காலம் முழுதும் ஒழுங்காகப் படித்து மதிப்பெண் பட்டியலில் ஒரு நல்ல ஸ்கோர் வைத்திருக்க வேண்டியது உங்கள் கடமை ! அதிக சதவீதம் வைத்திருக்கும் மாணவர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும் என்பது நீங்கள் அறிந்ததே !

ஆங்கில அறிவு மிக மிக அவசியம். அதற்காக நீங்கள் சேக்ஸ்பியரைப் போல கவிதை எழுத வேண்டுமென்பதில்லை. நீங்கள் சொல்ல வரும் விஷயத்தை மிகத் தெளிவாக சொல்லக் கூடிய அளவுக்கு அழகான ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். தொலைக்காட்சி, இணையம் போன்றவற்றையெல்லாம் ஆங்கிலம் கற்றுக் கொள்ளப் பயன்படுத்துங்கள். அது உங்களுக்குப் பயன் தரும்.

ஆங்கில அறிவைப் பொறுத்தவரையில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் மூன்று. முதலாவது நிறைய ஆங்கில வார்த்தைகள் அறிந்திருத்தல். அதாவது நல்ல ஸ்ட்ராங் வக்காபுலரி. இரண்டாவது சரளமாகப் பேசுதல். மூன்றாவது சரியான உச்சரிப்புடன் பேசுதல் ! இந்த மூன்று விஷயங்களையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆங்கில அறிவை வளர்த்தெடுக்க மிகச் சிறந்த இடம் கல்லூரி ! கல்லூரியில் நண்பர்களுடன் விளையாட்டாய் ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டிருந்தாலே உங்கள் ஆங்கில அறிவு  வளரும். ஆங்கில செய்திச் சேனல்களை கவனமாகப் பாருங்கள், ஆங்கில செய்தித் தாள்களைப் படியுங்கள். ஆங்கிலத்தில் நடக்கும் குவிஸ், பட்டிமன்றம் போன்றவற்றிலெல்லாம் கலந்து கொள்ளுங்கள். சின்னச் சின்ன குழுக்கள் அமைத்து ஆங்கிலத்தில் பேசும் போட்டிகள் வையுங்கள். இப்படி எத்தனையோ விதமாக விளையாட்டுத் தனமாகவே நீங்கள் ஆங்கிலம் கற்றுக் கொள்ள முடியும்.

நவீன முறையில் ஆங்கிலம் கற்க விரும்பினால் இன்டர்நெட் உங்கள் தோழன். ஆங்கில வார்த்தைகளை அதன் உச்சரிப்புடன் அழகாகச் சொல்லித் தரும் ஏராளமான வலைத்தளங்கள் உள்ளன. உதாரணமாக www.dictionary.cambridge.org போன்ற தளங்கள் உலகப் புகழ் பெற்றவை. இதில் வார்த்தைகள், அதன் பொருள், அதன் உச்சரிப்பு ஒலி என சர்வ விஷயங்களும் உண்டு. ஒரே வார்த்தையை அமெரிக்கர்கள் எப்படி உச்சரிப்பார்கள், இங்கிலாந்தில் எப்படி உச்சரிப்பார்கள் போன்ற நுணுக்கங்கள் கூட கற்றுக் கொள்ளலாம்.

இளைஞர்கள் அதிக நேரம் செலவிடும் யூ-டியூப், கற்றுக் கொள்ள ஏதுவான நல்ல இடம். ஸ்போக்கன் இங்கிலீஷ் என டைப் செய்து தேடினாலே ஏகப்பட்ட வீடியோக்கள் உங்கள் உதவிக்கு வரும். தினமும் கொஞ்ச நேரம் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு முன் உங்கள் இன்டர்நெட் பிளான் அன்லிமிடட் தானா என்பதைப் பாருங்கள். ரொம்ப நேரம் வீடியோ பார்த்தால் பில் வந்து உங்களை மிரள வைக்கலாம் !

கம்யூனிகேஷன் என்றதும் நமக்குத் தெரிவது பேச்சும், எழுத்தும் தான் இல்லையா ? இன்னொரு வகை உரையாடலும் உண்டு. அது உடல்மொழி ! வார்த்தைகளற்ற உரையாடல் அது ! 60 சதவீதம் செய்திகளை உங்கள் உடல்மொழியே சொல்லிவிடும் என்பது கணக்கு ! எனவே உடல் மொழியில் கவனம் தேவை. பதட்டம், பயம், தடுமாற்றம் போன்ற எதையும் உங்கள் உடல் மொழி பேசாதிருப்பது நல்லது !

உடல் மொழியில் சில அடிப்படை விஷயங்கள் உண்டு. கைகளை விரித்து வைத்துக் கொண்டு பேசினால் நீங்கள் உண்மையுள்ளவர், திறந்த மனமுடையவர் என்று பொருள். பின்னால் சாய்ந்து கொண்டு பேசினால் உங்களுக்கு விஷயத்தில் விருப்பமில்லை என்று பொருள். நேராக அமர்ந்து சிரித்துக் கொண்டே பேசினால் நீங்கள் ரொம்ப ஆர்வமாய் இருக்கிறீர்கள் என்று பொருள். விரல்களைத் தட்டிக்கொண்டே இருப்பது நீங்கள் பொறுமை இழந்து இருக்கிறீர்கள் என்று சொல்லும், நகம் கடிப்பது பதட்டம் என்று சொல்லும்.
தன்னம்பிக்கை இல்லாதவர்கள் தடுமாறிப் போவார்கள். உங்களுடைய கண்களில் தன்னம்பிக்கை ஒளிரட்டும். நேர்த்தியான உடை உடுத்திக் கொண்டு நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளுங்கள். ஒரு முக்கியமான விஷயம், தன்னம்பிக்கை என்பது செயற்கைத் தனம் இல்லாமல் வெளிப்பட வேண்டியது அவசியம். ‘நான் ரொம்ப தன்னம்பிக்கை உடையவன் சார்’ என சொல்லாமலேயே அது தெரியவேண்டும். ஒரு புன்னகை, ஒரு தைரியமான பதில், ஒரு பாசிடிவ் மனநிலை இவையெல்லாம் உங்கள் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும்.

நேர மேலாண்மை முக்கியம். காலம் தவறாமை என்றதும், இன்டர்வியூவுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடி போறது தானே அது ? என கேட்பவர்கள் உண்டு. எழுத்துத் தேர்வை நீங்கள் எதிர்கொள்ளும் விதம், குழு உரையாடலில் செயல்படும் விதம், இன்டர்வியூவில் நடந்து கொள்ளும் விதம் என எல்லாவற்றையும் அது  தொட்டுச் செல்லும் !

எழுத்துத் தேர்வு கேம்பஸ் இன்டர்வியூக்களில் முக்கியமான அம்சம். அதில் நீங்கள் பட்டையைக் கிளப்ப வேண்டியது அவசியம். உங்களுக்கு அதற்கான ஏகப்பட்ட வாய்ப்புகளை இணையம் வழங்குகிறது. இணையத்தில் ஏகப்பட்ட கேள்வித்தாள் மாதிரிகள் இருக்கின்றன. அவற்றை எடுத்து நீங்கள் பயிற்சி செய்யலாம். ஒரு பத்து மாதிரித் தேர்வுகளையாவது நீங்கள் செய்து பாருங்கள். உங்களுக்கு தானாகவே எழுத்துத் தேர்வு கைவந்து விடும்.

எழுத்துத் தேர்வில் ஆப்டிடியூட் தேர்வு ரொம்ப முக்கியம். உங்களுடைய பிராப்ளம் சால்விங் திறமை, லாஜிகல் அறிவு போன்ற விஷயங்களெல்லாம் சோதிக்கப்படும். பயந்து விடாதீர்கள். மிகவும் சுவாரஸ்யமான தேர்வு இது. சுடோகு பிரியர்கள் மிக விரைவாக சுடோகு போடுவது போல, சரியான பயிற்சி இருந்தால் இந்த தேர்வை எளிதில் ஊதித் தள்ளலாம். நிறைய நிறைய பயிற்சி அவசியம் !

நேர்முகத் தேர்வுக்குச் செல்வதற்கு முன் அந்த நிறுவனத்தைப் பற்றிய விஷயங்களையெல்லாம் தெரிந்து வைத்திருங்கள். அவர்களுடைய நோக்கம், எதில் முதன்மையாய் இருக்கிறார்கள், எதில் அவர்கள் ஸ்பெஷலிஸ்ட், அவர்களுடைய திட்டங்கள் என்ன போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். கூகிளிடம் கேட்டால் அவரே விஷயங்களைத் தருவார். அது உங்களுக்குக் கைகொடுக்கும். ஆர்வமுடைய மாணவர்களே நிறுவனங்களின் முதல் சாய்ஸ் !

சுருக்கமான ஒரு விஷயம். எல்லா நிறுவனங்களும் மூன்று விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு தான் இயங்கும். குவாலிடி, காஸ்ட், டைம் இவை தான் அந்த மூன்று விஷயங்கள். தரம், விலை, காலம் ! உயர்ந்த தரத்தில், குறைவான விலையில், சொன்ன நேரத்தில் வேலையை முடிப்பதே முக்கியம். இந்த தத்துவத்தை மனதில் வைத்திருங்கள். பயன்படும்.

நேர்முகத் தேர்வுக்கு நல்ல ஃபார்மல் ஆடை அணியுங்கள். கல்லூரி வாழ்க்கை வேறு இன்டர்வியூ வேறு. கல்லூரியில் போவது போல ஜீன்ஸ், சாயம் போன டீ-ஷர்ட் எல்லாம் ஒதுக்குங்கள். நேர்த்தியான ஆடை, டை இருந்தால் அணியலாம். நண்பர்கள் கிண்டலடிப்பார்கள் போன்ற சிந்தனைகளையெல்லாம் ஒதுக்குங்கள். “ஓவர் ஃபார்மல்” என்று எதுவும் கிடையாது என்பதை மனதில் கொள்ளுங்கள். பெண்கள் ரொம்ப ஃபேன்ஸியாகவோ, ரொம்ப இறுக்கமாகவோ இல்லாத நல்ல ஃபார்மல் உடைகளை அணிவது சிறப்பானது.

உங்களுடைய கல்விச் சான்றிதழ்கள், சாதனைச் சான்றிதழ்கள், பயோடேட்டாக்கள், புகைப்படங்கள், பேனா , பேப்பர் என அனைத்தையும் ஒரு ஃபைலில் போட்டு அழகாக நேர்த்தியாக வரிசையாக வைத்திருங்கள். உங்களுடைய ஒழுங்கு அதில் பிரதிபலிக்கட்டும். உங்களுக்கும் தேவையற்ற பதட்டம் குறையும்.

நேர்முகத் தேர்வுக்கு முந்தைய நாள் என்ன செய்வீர்களோ இல்லையோ, நன்றாகத் தூங்குங்கள். காலையில் சோர்வின்றி எழும்புங்கள். சிறிதாய் உடற்பயிற்சி செய்யுங்கள். தண்ணீர் குடியுங்கள். நல்ல உற்சாகமாய் நேர்முகத் தேர்வுக்கு வாருங்கள். எக்காரணம் கொண்டும் முந்திய இரவில் தூங்காமல் விழித்திருந்து சோர்வில் சிக்கி, சிக்கலில் மாட்டாதீர்கள்.

இன்டர்வியூவில் பேசுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் கேட்பது ! என்ன கேள்வி கேட்கப்படுகிறது என்பதைக் கேட்காமல் முந்திரிக் கொட்டை மாதிரி பதில் சொல்வது தப்பு. அதே போல கிணற்றில் போட்ட கல் போல பதிலே பேசாமல் இருப்பதும் ரொம்பத் தப்பு. கேள்விகளைச் சரியாகக் கேட்டு, அதற்கானப் பதிலை தெளிவாகச் சொல்லுங்கள்.

“உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்” என்பது தான் பெரும்பாலான நேர்முகத் தேர்வுகளில் கேட்கப்படும் முதல் கேள்வி. இந்தக் கேள்வி தான் நமக்கான துருப்புச் சீட்டு. இந்த கேள்விக்கான பதிலை ரொம்ப சூப்பராகத் தயார் செய்து கொள்ளுங்கள். நிறுவனம் எதை எதிர்பார்க்குமோ அதைச் சொல்லுங்கள். உங்கள் பிளஸ் பாயின்ட்கள் எல்லாம் அதில் வரட்டும். தேவையில்லாத விஷயங்களை ஒதுக்குங்கள். “அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் ஐயா தான் கிங்க்” என்பது போன்ற விஷயங்களை விட்டு விடலாம்.

கேள்விக்குப் பதில் சொல்லும் போது பராக்குப் பார்க்கவே கூடாது. கேள்விக்கும் பதிலுக்கும் ரொம்ப கவனம் செலுத்துங்கள். செல்போனை அணைத்து வைத்திருங்கள். ரொம்ப வேகமாகப் பேசாதீர்கள். “உங்களுக்கு ஏதாவது கேள்வி இருக்கா ?” என கேட்பார்கள். அதன் பொருள் நிறுவனத்தைப் பற்றி ஏதாவது கேள்வி இருக்கிறதா என்பது தான். “எந்த மாதிரி வேலை இருக்கும்” என்பது போன்ற கேள்விகள் ஏதெனும் இருந்தால் கேட்கலாம். அதை விட்டு விட்டு தனிப்பட்ட கேள்விகளைக் கேட்கவே கேட்காதீர்கள்.

சிலருக்கு ஒரு தப்பான அபிப்பிராயம் உண்டு. ‘கஷ்டமான வார்த்தைகளைப் பேசுவது தான் நல்ல ஆங்கிலத்தின் அடையாளம்’ என்று ! உலக மகா தவறான சிந்தனை அது. புரியாமல் எழுதி மூலையில் போட இது நவீன கவிதை அல்ல ! ரொம்பவே சிம்பிளான வார்த்தைகளே போதும் ! தெளிவாய், நீரோடையாய், சரியாய் பேசவேண்டும் அவ்வளவே !

‘நிறைய நேரம் பேசினா தான் நாம நல்லா பதில் சொன்னோம்ன்னு அர்த்தம்’ எனும் தப்பான அபிப்பிராயம் சிலருக்கு உண்டு. அதே போல ‘எல்லாம் தெரிந்த சகலகலா வல்லவனாய் தன்னைக் காட்டிக் கொண்டால் தான் வேலை கிடைக்கும்’ எனும் சிந்தனை சிலருக்கு உண்டு. வேறு சிலரோ ஆணவத்தில் பேசுவார்கள். ‘என்னை விட்டா உங்களுக்கு வேற ஆள் யாரு இருக்கா’ என்பது போல ! இதெல்லாம் தப்பு. நச்சுன்னு நாலு வார்த்தை தெளிவா, அழகா, பணிவா, நேர்மையா சொல்லுங்க. அதுபோதும்.

பேசும்போது குரலும், உடல்மொழியும் இணைந்தே பேச வேண்டும். ஒரு புன்னகை நிச்சயம் தேவை. கண்ணில் பார்த்து தன்னம்பிக்கையுடன் பேசுவது நல்லது. அதே போல பேசுவதை பாதி விழுங்கி மீதியை துப்பாமல் தெளிவாய்ப் பேசுங்கள். சொல்லும் விஷயம் தப்பாய் இருந்தால் கூட சொல்லும் முறை தப்பில்லாமல்  இருக்க வேண்டும் !

நீங்கள் எவ்வளவு தூரம் மாற்றங்களை ஏற்றுக் கொள்வீர்கள் என்பது கவனிக்கப்படும். சென்னை, பங்களூர், ஹைதராபாத் இப்படி எங்கே வேணும்னாலும் வேலை செய்வேன் என்பவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகம். ‘சென்னையைத் தவிர வேற எங்கேயும் போக முடியாது பாஸ்’ – என முரண்டு பிடித்தால் வாய்ப்புகள் குறையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களுக்கு தனித் திறமைகள் இருக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் நிறுவனங்களின் வெற்றி என்பது குழுவாக இணைந்து பணியாற்றுவதில் தான் இருக்கிறது. உங்களிடம் அந்த விருப்பமும், ஆர்வமும் இருக்க வேண்டும். குழுவாகப் பணி செய்த அனுபவங்கள் இருந்தால் அதை மறக்காமல் தெரியப்படுத்துங்கள். உதாரணமாக, என்.எஸ்.எஸ், என்.சி.சி, கலைக்குழு போன்றவை !

தலைமைப்பண்பு வசீகரமானது. உங்களிடம் அந்த பண்பு இருந்தால் அதை நேர்முகத் தேர்வு, குழு உரையாடல் போன்ற இடங்களில் வெளிப்படுத்துங்கள். தலைமைப் பண்புடன் கூடிய இளைய தலைமுறையை நிறுவனங்கள் இருகரம் விரித்து வரவேற்கும்.

அழுத்தமான சூழல்களை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பது முக்கியமாய் கவனிக்கப்படும். எளிதில் டென்ஷனாகும் பார்ட்டியா நீங்கள் ? கடினமான சூழல்களில் நீங்கள் சமாளிக்க முடியுமா ? அல்லது சவால்களை நீங்கள் விரும்பி ஏற்றுக் கொள்வீர்களா ?இந்த கேள்விகளுக்கான பதில்களை கண்டறியுங்கள். அழுத்தமான சூழல்களிலும் நிதானம் தவறாமல் இலட்சியங்களை நோக்கி உழைப்பவர்களையே நிறுவனங்கள் விரும்பும்.

அழுத்தமான சூழலை எப்படி சமாளிப்பீர்கள் என்பதைச் சோதிக்க சில தந்திரங்கள் வைத்திருப்பார்கள். பெரும்பாலும் ஒரே நேரத்தில் நான்கைந்து பேர் இன்டர்வியூ பேனலில் அமர்ந்து கேள்விகளை வீசுவார்கள். ஒரு பதில் சொல்லி முடிக்கும் முன் அடுத்த கேள்வியை தருவார்கள். உங்கள் பதிலை கொஞ்சம் கிண்டலடிப்பார்கள். என்னதான் நடந்தாலும் நிதானம் தவறாதீர்கள் !
பாசிடிவ் மனநிலையுடன் வாழ்க்கையை அணுகுபவர்களுக்கு நிறுவனங்கள் எப்போதும் முன்னுரிமை கொடுக்கும். “என்னத்த படிச்சு…” என ஒரு சோர்வு மனநிலையில் இருப்பவர்கள் நிராகரிக்கப்படுவார்கள். எதையெடுத்தாலும் எதிர்மறையாய்ப் பேசுபவர்களையும் நிறுவனங்கள் நிராகரிக்கும் !

“உங்களோட வீக்னெஸ் என்ன?” எனும் கேள்வி சாதாரணம். எல்லா மனிதர்களுக்கும் பலவீனங்கள் உண்டு. எனவே ‘எனக்கு வீக்னெஸே கெடையாது சார் என கதை விடாதீர்கள்”. பலவீனங்களைச் சொல்வதே நல்லது. அதையும் பாசிடிவ் ஆகச் சொல்லுங்கள். “எனக்கு இந்த பலவீனம் இருக்கு. ஆனா அதை நான் சீக்கிரம் வெற்றி கொள்வேன். அதற்காகத் தான் இன்னின்ன முயற்சிகளை எடுத்திருக்கிறேன்” போன்ற பதில்கள் சிறப்பானவை.

இரக்கத்தைக் காட்டி வேலையை இழுக்க முயலாதீர்கள். அது வெற்றியைத் தராது. குடும்ப கஷ்டம், அப்பாக்கு உடம்பு முடியல, நான் தான் அம்மாவைக் காப்பாத்தணும் எப்படியாச்சும் ஒரு வேலை கொடுங்க என சினிமா டயலாக் பேசுவது பெரும்பாலும் பயன் தராது. உங்கள் திறமையைக் காட்டி வசீகரியுங்கள்.ஐடி நிறுவனங்கள் தொண்டு நிறுவனங்களல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நேர்மையாய் இருக்க வேண்டியது மனிதத் தன்மை ! அதையே நிறுவனங்களும் எதிர்பார்க்கும். நேர்மையற்று நடப்பவர்களை நிறுவனங்கள் உடனுக்குடன் கழற்றி விடும். பொய்சொல்லி வேலையில் சேர்வது, அலுவலக பொருட்களைத் திருடுவது, தப்பான பில் கொடுத்து பணம் வாங்குவது போன்றவையெல்லாம் நிறுவனங்களுக்கு அலர்ஜி ஏற்படுத்தும் விஷயங்கள். வேலை பறிக்கப்படுவது சர்வ நிச்சயம். நீங்கள் நேர்மையானவராய் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமான எதிர்பார்ப்பு !

ஒவ்வொரு நிறுவனமும் சில சட்ட திட்டங்களை வைத்திருக்கும். அவற்றை நீங்கள் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். மனித வள இன்டர்வியூவில் அது சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். “இதெல்லாம் என்ன திட்டம், சரியில்லையே’ என்றெல்லாம் உங்கள் மேதாவித்தனத்தைக் காட்டாதீர்கள். நிறுவன விதிவரம்புகளுக்குள் செயல்படுவேன் எனும் உறுதியை மட்டும் அளியுங்கள் போதும்.

உங்களுடைய நீண்டகாலத் திட்டங்கள், வாழ்க்கை இலட்சியம் போன்றவற்றை நிறுவனம் கேட்கலாம். நிறுவனத்தின் கொள்கைகளுக்கும், இலட்சியங்களுக்குமேற்ற ஒரு பதிலைச் சொல்வது வசீகரிக்கும். நிறுவனத்தில் நிலைத்திருந்து, உங்கள் முழு பங்களிப்பையும் நல்கும் உறுதியையும் வழங்குங்கள்.

“என்ன எதிர்பார்க்கிறீங்க?” எனும் ஒரு கேள்வி கேட்கப்படும். பல மாணவர்கள் இது சம்பளத்தை மட்டுமே குறிக்கும் கேள்வி என நினைத்து விடுவதுண்டு. உங்கள் எதிர்பார்ப்பு எதுவாகவும் இருக்கலாம். நன்றாக வேலை கற்றுக் கொள்வதாகவும் இருக்கலாம். நல்ல வேலைச் சூழல், சவாலான வேலை, பிடித்தமான வேலை என விஷயங்கள் எதுவாகவும் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

“நாங்க ஏன் உங்களைத் தேர்வு செய்ய வேண்டும்?” எனும் கேள்வி திடீரென கேட்கப் பட்டால் என்ன செய்வீர்கள் ? தடுமாறுவீர்கள் தானே ? முதலிலேயே அந்த கேள்விகளை உங்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். நிறுவனங்கள் ஏன் உங்களைத் தேர்வு செய்ய வேண்டும் ? நீங்கள் பணக்காரர் என்பதாலா ? அழகானவர் என்பதாலா ? ஏழை என்பதாலா ? கிடையவே கிடையாது. அவர்களுக்கு ஆட்கள் தேவை. அவர்களுடைய பணிகளைச் செய்ய திறமையான ஊழியர்கள் தேவை. அவ்வள்வு தான். அதை மனதில் கொண்டு ,”உங்களுடைய பணித் தேவைகளை நிச்சயம் என்னுடைய முழுப் பங்களிப்பையும் செலுத்தி நிறைவேற்றுவேன்” என்பது போல பதில் சொல்வது நல்லது.

உங்களுடைய நீண்டகாலத் திட்டம், குறுகிய காலத் திட்டம் போன்றவற்றை ஹைச்.ஆர் இன்டர்வியூக்கள் கேட்கும். குறுகிய காலத் திட்டம் “நிறுவனத்துக்கு உங்களுடைய முழுமையான பங்களிப்பு !” எனுமளவில் இருப்பது நல்லது. நீண்டகாலத் திட்டம், நிறுவனத்தில் நல்ல வளர்ச்சி இருந்தால் நிறுவனத்தோடு இணைந்து வளர்வது எனும் பாணியில் இருப்பது சிறப்பு. எதுவானாலும், பணத்தை அடிப்படையாகக் கொண்டு உங்கள் திட்டங்களை வரையறுக்காதீர்கள்.

ஒரு சிக்கலான சூழலைச் சொல்லி இந்த சூழலில் நீ என்ன முடிவெடுப்பாய் ? என்பது போன்ற கேள்விகளை ஹைச்.ஆர் கேட்க வாய்ப்பு உண்டு. உங்களுக்குத் தோன்றும் ஒரு நல்ல பதிலைச் சொல்லுங்கள். பதிலைச் சொல்லும்போது இரண்டு விஷயங்களை மனதில் கொள்ளுங்கள். ஒன்று, அது நிறுவனத்தின் கொள்கைகள், மதிப்பீடுகளுக்கு எதிரானதாய் இருக்கக் கூடாது. இரண்டு, ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு பதிலாய் இருக்க வேண்டும். ஒருவேளை உங்கள் பதில் இன்டர்வியூ எடுப்பவரை “அட ! “ போட வைத்தால் உங்களுக்கு வாய்ப்பு பிரகாசம் !

நீங்கள் கல்லூரியில் செய்த புராஜக்ட் வேலை, தீசிஸ், பிராக்டிகல் போன்றவற்றையெல்லாம் நன்றாகப் படித்து வைத்திருங்கள். கேள்விகள் நிச்சயம். பயோடேட்டாவில் குறிப்பிட்டிருக்கும் எல்லா விஷயங்களையும் மிகச் சரியாகத் தெரிந்து வைத்திருங்கள்.

குழு உரையாடல் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? குரூப் டிஸ்கஷன் என ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஒரு குழுவாக சுமார் பத்து பேரை அமரவைத்து ஒரு தலைப்பைக் கொடுத்து பேசச் சொல்வார்கள். தைரியமாகப் பேசுபவர்கள் கவனிக்கப்படுவார்கள். தெளிவாக, தைரியமாக, கொடுக்கப்படும் தலைப்பின் கீழ் பேசுபவர்களுக்கு வெற்றி வாய்ப்பு நிச்சயம்.

பயிற்சியே உங்களை உயர்த்தும். எவ்வளவு பெரிய பேச்சாளராய் இருந்தாலும் அவர் மேடைக்குப் போகும் முன்னால் என்ன பேசப்போகிறோம் என்பதைப் பற்றி சின்ன ஒரு பயிற்சி எடுப்பார். ஆபிரகாம் லிங்கனே அதற்கு விதிவிலக்காய் இருக்கவில்லை. எனவே குழு உரையாடல், இன்டர்வியூ அனைத்துக்குமே நல்ல பயிற்சி எடுங்கள்.

குழு உரையாடலில் பேசும் முன்னர் ஒரு வரி சுய அறிமுகம் நல்லது. குழு உரையாடலில் முதலில் பேசுபவருக்கு ஸ்பெஷல் மதிப்பெண் உண்டு. மூன்று நான்கு முறை பேசுங்கள். ஒவ்வொரு தடவையும் ஒரு 15 – 20 வினாடிகள் பேசினாலே போதும். அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைக்காதீர்கள். அதே போல வலுக்கட்டாயமாய் பேசிக்கொண்டே இருக்காதீர்கள் ! பேச்சை தப்பான ஏரியாவுக்கு திசை திருப்பாதீர்கள். இவையெல்லாம் நெகடிவ் மதிப்பெண்களைத் தரும்.

ஒருவேளை உங்களுக்கு அறவே பரிச்சயமற்ற ஒரு தலைப்பைத் தந்தார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். கப்பலே கவிழ்ந்தது போல அமர்ந்திருக்கத் தேவையில்லை. மற்றவர்கள் பேசுவதை வைத்து சில பாயின்ட்களை உருவாக்கிப் பேசலாம். எதுவானாலும் நிச்சயம் பேசுங்கள். பேசாமல் இருந்தால் தோல்வி நிச்சயம் என்பதை மறக்க வேண்டாம்.

பயோடேட்டா பற்றிச் சொல்லத் தேவையில்லை. நேர்த்தியாக அதைத் தயாராக்க வேண்டியது அவசியம். எழுத்துப் பிழைகள் இல்லாமல், முக்கியமான தகவல்களுடன் இருக்க வேண்டும். ஒரு பயோடேட்டா வாசிப்பவரை 15 வினாடிகளுக்குள் வசீகரிக்க வேண்டும். எனவே ரொம்ப சிரத்தையெடுத்து செய்யுங்கள். எளிமையான ஃபாண்ட், தெளிவான அளவு, பளிச் என வசீகரிக்கும் தன்மை இது அவசியம். எப்போதும் சில காப்பிகளைக் கையிலேயே வைத்திருங்கள்.

நிறுவனம் எப்போதுமே ஆர்வமும், உற்சாகமும், திறமையும் உடையவர்களையே தேடும். நிறுவனத்தில் வேலை செய்ய விருப்பமுடையவர்களை விட, நிறுவனத்தின் பாகமாகவே மாறிவிடத் துடிக்கும் இளைஞர்கள் அவர்களை வசீகரிப்பார்கள். “நிறுவனத்தின் இந்த கொள்கைகள் என்னை வசீகரித்தன. அதனால் இந்த நிறுவனத்தில் இணைவதில் மிகுந்த ஆர்வமாய் இருக்கிறேன்” எனும் டைப்பில்மவர்களுடன் உரையாடுங்கள்.

நிறுவனங்களுக்கு கடின உழைப்பாளிகளை விட, ஸ்மார்ட் உழைபாளிகளை ரொம்பப் பிடிக்கும். புதுமையான சிந்தனைகள் ஐ.டி துறையில் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கப் படும். எனவே அதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் கல்லூரி காலத்தில் அப்படி ஏதேனும் செய்திருந்தால் குறிப்பிட மறக்கவேண்டாம்.

இந்த சில டிப்ஸ்களை மனதில் எழுதுங்கள். தன்னம்பிக்கை, தைரியம், உற்சாகம் இவற்றை மனதில் கொள்ளுங்கள். கேம்பஸ் தேர்வில் வெற்றி பெற்றே தீருவேன் எனும் முழுமையான அர்ப்பணிப்புடன் தயாராகுங்கள். இப்போது கஷ்டப்பட்டால் எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கை மிகவும் அழகானதாக இருக்கும். இப்போது நண்பர்களுடன் சேர்ந்து பொழுதை வீணடித்தால், பின்பு வேலை தேடும் போது நண்பர்கள் அருகில் இல்லாமல் இருக்கும் சூழலும் ஏற்படலாம்.

கடைசியாக ஒன்று ! வெற்றிக்காக முழுமையாய் உழையுங்கள். ஆனால் தோல்வி வந்தால் துவண்டு விடாதீர்கள்.  வாழ்க்கை தோல்விகளைத் தாண்டியும் உங்களை அரவணைக்கும். வாழ்க்கை அழகானது. ஒரு தோல்வியுடன் எதுவும் முடிந்து விடுவதில்லை.

வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துகள்.

No comments:

Post a Comment