Tuesday, June 4, 2013

வெற்றிக்கு வழி என்ன?

* குறிக்கோளில் செலுத்தும் கவனத்தை போலவே, அதை அடையும் பாதையிலும் கருத்தைச் செலுத்துங்கள்.
* ஒவ்வொரு உயிரிலும் உறைந்திருக்கும் தெய்வீக சக்தியை வெளிக்கொண்டு வருவது தான் நம் வாழ்வின் லட்சியம்.
* தன்னை அடக்கியாளப் பழகியவன் ஒருபோதும் புற உலக விஷயங்களுக்கு அடிமையாக மாட்டான். அத்தகையவனே உலகில் வாழத் தகுதி படைத்தவன்ஆகிறான்.
* ஒருவன் நெருப்பில் கூட தூங்க முடியும். ஆனால், வறுமை நிலையிலோ கணப்பொழுதும் கண்மூடித் தூங்க முடியாது.
* மனமும், உடலும் ஒருமித்து இருக்கும் போது எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதில் வெற்றியே கிடைக்கும்.
* பெரிய விஷயங்களை நிறைவேற்றும்போது இடையூறுகள் குறுக்கிடவே செய்யும். அதனால் ஆண்மையோடு தொடர்ந்து முயற்சியுங்கள்.
* பசியால் நலிந்து வாடும் ஏழைகளிடம் ஆன்மிகம் பேசுவது அவர்களை அவமதிப்பதாகும். 
- விவேகானந்தர்

மனதின் சுமைகளை இறக்கி வைக்கப் பழகிக் கொள்ளுங்கள் !!!

ஒரு மனோதத்துவ வகுப்பில் ஒரு பேராசிரியர் ஒரு தம்ளரில் சிறிது தண்ணீரை ஊற்றிக் கையில் ஏந்தியபடி மாணவர்களிடம் கேட்டார். “இந்தத் தம்ளர் எவ்வளவு கனம் இருக்கும்?”

மாணவர்கள் பக்கத்தில் இருந்து பல உத்தேச பதில்கள் வந்தன. ”ஐம்பது கிராம்... எழுபது கிராம்.... நூறு கிராம்.... நூற்றி இருபது கிராம்....”

பேராசிரியர் சொன்னார். “இதை எடை போட்டால் தான் உண்மையான எடை நமக்குத் தெரியும். ஆனால் இது ஒருவரால் மிக சுலபமாக சுமக்கும் கனம் தான், இல்லையா?”

“ஆமாம்” என்று மாணவர்கள் ஒருமித்த குரலில் சொன்னார்கள்.

பேராசிரியர் கேட்டார். “இதை நான் சில நிமிடங்கள் கையில் ஏந்திக் கொண்டிருந்தால் என்ன ஆகும்?”

”ஒன்றும் ஆகாது” மறுபடி ஒருமித்த குரலில் பதில் வந்தது.

”இதை நான் ஒரு மணி நேரம் அப்படியே பிடித்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்”

“கை வலிக்கும்” என்று ஒரு மாணவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

“உண்மை தான். சரி, நான் இதை ஒரு நாள் முழுவதும் இப்படியே பிடித்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்”

”தாங்க முடியாத வலி ஏற்படும்”, “கை தசைகள் இறுகி கையை நகர்த்த முடியாமல் போய் விடும்”, “ஆஸ்பத்திரிக்குத் தான் போக வேண்டி வரும்”
என்று பதில்கள் வந்தன.

”அந்தப் பிரச்சினை ஏற்படுவது தம்ளரின் கனம் கூடுவதாலா?”

“இல்லை நீங்கள் தொடர்ந்து அதை பிடித்துக் கொண்டிருப்பதால் தான்”

”இந்தப் பிரச்சினை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?”

ஒரு மாணவன் சுலபமாகச் சொன்னான். “அந்தத் தம்ளரை கீழே வைத்தால் போதும்”

பேராசிரியர் சொன்னார். “மிகவும் உண்மை. ஒன்றுமே இல்லை என்று சொல்லக்கூடிய ஒரு எடையைக் கூட தொடர்ந்து நிறைய நேரம் கையில் ஏந்திக் கொண்டே இருந்தால் அது உடலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த வல்லது. வாழ்க்கையில் எல்லா பிரச்சினைகளும் அப்படித்தான். அவற்றை உங்கள் மனதில் சிறிது நேரம் வைத்திருந்தால் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் அவற்றை நிறைய நேரம் சுமக்க ஆரம்பித்தால் சின்னப் பிரச்சினை கூட உங்களுக்கு வலியை ஏற்படுத்தி விடும். அதையே நாள் கணக்கில் சுமக்க ஆரம்பித்தால் அது உங்களை வாழ்க்கையையே ஸ்தம்பிக்க வைத்து விடும். அதனால் எந்த சுமையையும் இரவு தூங்கப் போகும் முன் கீழே இறக்கி வைத்து விட்டு உறங்கச் செல்லக் கற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கை எளிதாக இருக்கும். மறு நாளைய பிரச்சினைகளைச் சமாளிப்பது சுலபமாகும்”

மிக அழகான ஒரு உவமை இது. நமக்கு மனதில் சுமைகளை ஏற்றிக் கொண்டே போகத் தெரிகிறதே ஒழிய இறக்கி வைக்கத் தெரிவதில்லை. சுமைகள் கூடிக் கொண்டே போகும் தான் நம்மால் புதியதாக சின்னப் பிரச்சினை வந்தால் கூட அதை சமாளிக்கத் தெரிவதில்லை. ”ஐயோ இதுவுமா” என்று மலைத்துப் போய் விடுகிறோம். ஒவ்வொரு பிரச்சினையாக எடுத்துப் பார்த்தால் அதை சமாளிப்பது சுலபமாக இருக்கும். பெரும்பாலானவை தனித்தனியாக அணுகும் போது அப்படி சமாளிக்க முடிந்தவையே. ஆனால் பிரச்சினைகளை சேர்த்து வைத்துக் கொண்டே சுமந்து நின்றால் அதன் பின் கூடும் எல்லாச் சின்னப் பிரச்சினைகளும் தாங்க முடியாதவையாக மாறி விடுகின்றன.

ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. சுமந்து கொண்டே இருப்பதால் கனம் கூடுமே ஒழிய குறையாது. இறக்கி வைத்தால் மட்டுமே கனம் குறையும். எனவே அவ்வப்போது மனதின் சுமைகளை இறக்கி வைக்கப் பழகிக் கொள்ளுங்கள். புதிதாக வருவதை சமாளிப்பது சுலபமாகும். வாழ்வின் இனிமைகளை ரசிக்க மனதில் இடம் பாக்கி இருக்கும்!

பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்!

புதிதாக ஒரு ஃப்ளாட் வாங்கியிருந்தேன். அதில் கெய்சர், வாஷிங்மெஷின், வாஷ்பேஸின் ஆகியவற்றை பொருத்தவேண்டியிருந்தது. எனக்கு ப்ளம்பர் நண்பர் ஒருவர் உண்டு. அவரை வீட்டுக்கு வரவழைத்தேன். அவர் நல்ல திறமைசாலிதான். ஆனால் அன்று ஏனோ கெய்சரை பொருத்தி டெஸ்ட் செய்த போது சூடு ஏறவில்லை. பிறகு தவறை கண்டுபிடித்து மீண்டும் பரிசோதிக்க முயற்சித்தபோது மின்சாரம் போய்விட்டது. பொருத்துவதற்காக ட்ரில்லிங் செய்தபோது, டிரில் பிட் உடைந்து விட்டது. வாஷிங்மெஷினில் நிப்பிள் மேட்ச் ஆகவில்லை. ஆக அவற்றை பொருத்த ஏதுவாக என்னையும் கடைக்கு அழைத்தார். கூடச் சென்று வாங்கி கொடுத்தேன். அவரது வீடு கடை அருகில் தான் இருந்தது. வீட்டிற்கு ஒரு நிமிடம் வாருங்கள் என அழைத்தார். நான் மறுத்தும் மிகவும் வற்புறுத்தி அழைத்து சென்றார்.

வீட்டுவாசலில் ஒரு செடி வளர்ந்திருந்தது. அதனை ஒரு நிமிடம் தொட்டவர், பிறகுஉள்ளே அழைத்து சென்றார். அவரை பார்த்ததும் குழந்தைகள் ஓடி வந்தன. ஒவ்வொன்றாக தூக்கி கொஞ்சி, இறக்கி விட்டார்.முகமலர்ச்சியுடன் வரவேற்ற அவரது மனைவி உள்ளே சென்று சில நிமிடங்களில் சூடான காப்பி கொண்டு வந்தார். இதனிடையே ப்ளம்பர் நண்பர், மனைவி, குழந்தைகள் பற்றி சுவையாக கூறி கொண்டிருந்தார்.

காப்பியை குடித்து விட்டு அவர்களிடமிருந்து விடைபெற்றேன். என் மனத்தில் ஒர சந்தேகம். ஏன் பிளம்பர் வாசலில் இருந்த செடியை நின்று தொட்டு சென்றார்?

அடுத்தநாள் அவர் வந்ததும் என் சந்தேகத்தை கேட்டேன். நேற்று நான் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இதனால் டென்ஷனானேன். ஆனால் அதே பதற்றத்துடன் வீட்டுக்குள் சென்றால் என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அதனால் என் கவலை. டென்ஷன் எல்லாவற்றையும் அந்த செடியில் இறக்கிவிட்டு நாளை மீண்டும் எடுத்து கொள்கிறேன் எனக்கூறி இலேசான மனத்துடன் உள்ளே சென்றேன் என்றார். நான் வியந்து நின்றேன்.

இது உணர்த்துவது என்ன?

பிரச்னைகள், எப்போதுமே நம்மை விட்டு விலகுவதில்லை. நாம்தான் சில நேரம் அதனை விலக்கி வைக்க வேண்டும். ஆபீஸில் பிரச்னையா? பொது வேலைக்குசென்ற இடத்தில் பிரச்னையா? அதனை மறந்தும் வீட்டுக்குள் கொண்டு செல்லாதீர்கள். அந்த பிரச்னைகளை, வாசலிலேயே மாட்டி வைத்து, மனைவி, குழந்தைகளை சந்திக்கபோகிறோம் என்ற மகிழ்ச்சியில் தினமும் மாலையில் புது மனிதராக நுழையுங்கள். இரவு நல்லபடி கழியும். அடுத்த நாள் புதுத்தெம்புடன் பிரச்னைகளை சமாளிக்க ஆரம்பித்து விடுவோம்.

வெற்றி இரண்டு விதம்

வழியில் வருகிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு வெற்றி காண்பது ஒருவிதம்.

மற்றவர்கள் கண்களுக்கு எளிமையாய்த் தென்படும் விஷயங்களில் கூடப் பெரிய வாய்ப்புகளைக் கண்டறிந்து, அதன் வழியே வெற்றிபெறுவது இன்னொருவிதம்.

பாறைகள் குவிந்துகிடக்கிற இடம், பார்ப்பவர் கண்களின் தன்மைக்கேற்ப கலைக்கூடமாகவோ குவாரியாகவோ மாறுகிறது. ஆள்நடமாட்டமில்லாத இடத்தில், விவசாயத்திற்கும் பயனில்லாத வெற்றிட.ம்,சிலர் கண்களில் மட்டும் ஓய்வு நேர இல்லங்கள் உருவாக்குவதற்குறிய இடமாகத்தெரிகிறது.

மறந்துவிடாதீர்கள்! ஒரு பொருளோ, இடமோ, மனித ஆற்றலோ நிகழ்காலத்தில்என்னவாக இருக்கிறது என்பதல்ல முக்கியம். எதிர்காலத்தில் என்னவாக வளரும்என்பதுதான் முக்கியம். வாய்ப்புகள் வழியில் வரும்வரை காத்திருக்காமல்,விலகிச் செல்லும் வாய்ப்புகளைக்கூட வழிமறித்துப் பயன்படுத்தும் துடிப்புஇருந்தால் இத்தகைய புதுமைகள் புத்தியில் உதிக்கும்.இப்படிப் புதுமையாய் சிந்திப்பதில் முதல்தடை…

விமர்சனங்கள். ஆர்வமாய்ப்புதிய விஷயங்களைச் சொல்ல வருபவர்கள்கூட, விமர்சனங்கள் வந்ததும்துவண்டுவிடுவார்கள்.அதனால்தான் ஓர் அறிஞர் சொன்னார், “புதுமையாய் சிந்திக்க அறிவு மட்டும்போதாது, துணிவும் அவசியம்” என்று. சமுத்திரம் என்பது குடிக்கப் பயன்படாததண்ணீர் என்று பார்த்து ஆதிகாலத்தில் அநேகம்பேர் அலட்சியம்செய்திருப்பார்கள்.

அதில் உப்பு இருக்கிறது என்று ஒருவன் முதலில் கண்டுபிடித்திருப்பான்,முத்து கிடைக்கிறது என்று இன்னொருவன் கண்டுபிடித்திருப்பான். மீன்பிடித்துச் சாப்பிடலாம் என்று மற்றொருவன் கண்டுபிடித்திருப்பான்.

காலகாலமாய் இருக்கிற கடல், தேவையில்லாத தண்ணீர்ப்பரப்பு என்று விலகிநடக்காமல் வித்தியாசமாய்ச் சிந்தித்தவன்தான் இந்தப் புதுமைகளையெல்லாம்பூமிக்குக் கொடுத்தான்.இந்தப் புதுமைக் கண்ணோட்டம் என்பது, பணம் சம்பாதிக்கும் முறை என்றுமட்டும் பார்த்தால், வளர்ச்சி இருக்காது. புதுமைக் கண்ணோட்ட வழிகள்வாழ்க்கையை சுவாரசியமாக்கிக் கொள்கிற முறை. அதுவே ஒரு வாழ்க்கை முறை.

கண்ணில்படுகிற எதிலும் எண்ணிலடங்காத வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறநம்பிக்கை இதற்கான முதல் தேவை. சாதாரணமான ஒன்றைக்கூட சுவாரசியமாய்மாற்றுகிற படைப்பாற்றல் இதற்கான இரண்டாவது தேவை. படைப்பாற்றல் என்கிறகண்ணுக்குத் தெரியாத சக்திக்கு சொல்வடிவம் கொடுக்கிற திறமை, இதற்கானமூன்றாவது தேவை. ஒன்றை சுவாரசியமாக சிந்தித்து, செயல்படுத்தும் வரையில்பின்வாங்காத முயற்சியும் உழைப்பும் நான்காவது தேவை.

இந்த அம்சங்களை யாரெல்லாம் வளர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள், அதிசயமானவெற்றிகளை அனாயசமாகப் பெற்று விடுகிறார்கள். உங்களுக்குள் ஒரு தீப்பொறி இருந்தால், ஊதி ஊதி வளர்க்க வேண்டியவர்நீங்கள்தான். அது பெருநெருப்பாக உருவம்பெறும்வரை உங்களால்தான் அதைக்காப்பாற்ற முடியும். அதுவரையில் அதன் வெளிச்சம் ஊருக்குத் தெரியாது.

உங்களுக்குள் உதிக்கிற புதிய கண்ணோட்டங்கள் ஒவ்வொன்றுமே அத்தகையதீப்பொறிகள்தான்.

உற்சாமாய் ஊதி ஊதிப் பெருக்குங்கள்உங்களால் முடியும்….

Sunday, June 2, 2013

கருட தரிசனம்

மகாவிஷ்ணு பல்வேறு விதமான வாகனங்களில் அருள்பாலித் தாலும் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது மிகவும் சிறப்பானதாகும். விஷ்ணு ஸ்தலங்களில் கருடாழ்வார் `பெரிய திருவடி' என்று அழைக்கப்படுகிறார். இவர் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குகிறார். 

ஒரு காலை முழங்காலிட்டு மற்றொரு காலை ஊன்றி அமர்ந்த நிலையில் இரு கரங்களையும் எம்பெருமானின் திருப்பாதங் களை தாங்குவதற்காக நீட்டியிருப்பார். இரு புறமும் பெரிய இறக்கைகள் இருக்கும். பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம் பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. 

பெருமாள் கருடனை வாகனமாக ஏற்றபோது, `வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்' என்று வரமளித்தார். கருட தரிசனம் சுப சகுனமாகும். 

கருடன் மங்கள வடிவினன். வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. கோயிலில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது, கோயிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம்.

மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்

அழகிய காடு அது. அதில் வசித்துவரும் சிறிய முயல் ஒன்று முதன் முறையாக பெற்றோர் துணையின்றி இரை தேட வந்தது.

வெகுநேரம் தேடியதற்குப் பின், மண்ணில் புதைத்திருந்த கிழங்கினைக் கண்டது.

இருப்பினும்,

அது சிறிய முயல் ஆனதாலும், களைப்பினாலும் அந்தக் கிழங்கினை அதனால் தோண்டி எடுக்க இயலவில்லை.

என்ன செய்யலாம் என்று அந்த முயல் குட்டி யோசித்துக் கொண்டிருக்கும் போது,

அருகில் பசுந்தழைகளை மேய்ந்து கொண்டிருந்த இரண்டு மான்களைக் கண்டது. உடனே, ஓடிச்சென்று,

அந்த மான்களிடம் நிலைமையை சொல்லி, தனக்கு உதவுமாறு வேண்டியது.

அதில் ஒரு மான்,

உனக்கு ஏன் நாங்கள் உதவ வேண்டும்;

உதவினால் எங்களுக்கு என்ன பயன்..? என்றும் கேட்டது..

குட்டி முயலால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

எனவே வருத்தத்துடன் தலையை குனிந்து கொண்டது.

அருகிலிருந்த மற்றொரு மான்,

முயலிலின் வருத்தமான முகத்தை பார்த்துவிட்டு, அந்த முயலிடம் தான் உனக்கு உதவுவதாக சொன்னது.

சொன்னது போல்,

அந்த மான் பெரிதாய் வளர்ந்திருந்த தனது கொம்பினால் நிலத்தைக் கீறி அந்த கிழங்கை எடுத்து முயல் குட்டிக்குக் கொடுத்தது.

முயல்குட்டியும் மகிழ்ச்சியுடன் அந்த மானுக்கு தனது நன்றியைத் தெரிவித்தது.

இந்நேரத்தில்,

உதவ வராமல் மேய்ந்து கொண்டிருந்த மான்,

வேடன் ஒருவன் விரித்து வைத்திருந்த வலையில் சிக்கிக் கொண்டது.

எவ்வளவோ முயன்றும், அதனால் அந்த வலையை விட்டு வெளியே வர முடியவில்லை.

இதைக் கண்ட மற்றொரு மானும் செய்வதறியாது தவித்தது.

உடனே முயல் குட்டி விரைவாக ஓடிச்சென்று தனது முயல் கூட்டத்தாரை அழைத்து வந்தது.

அனைத்து முயல்களும், தங்களின் கூரிய பற்களால், வலையைக் கடித்துக் குதறி, மானை விடுவித்தன.

வலையில் இருந்து வெளிவந்த மான், தன்னைக் காப்பாறிய முயல் கூட்டத்திடம் நன்றியைத் தெரிவித்தது.

மேலும், தான் உதவ மறுத்த தவறுக்காக மனம் வருந்தி,

அந்த முயல் குட்டியிடம் மன்னிப்பும் கேட்டது.

நீதி:

தன்னால் ஆன உதவியை,எந்தவித பிரதிபலனை எதிர்பார்க்காமல் மற்றோருக்கு செய்ய வேண்டும்.

ஒருவர் நமக்கு உதவாமல் போனாலும், அவருக்கு நம்மால் ஆன உதவியை செய்ய வேண்டும்.

தவறுகளை ஒப்புக் கொள்ளுவோம்

மனிதனாக பிறந்தவர் எவருமே தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் அல்ல.

ஆனால் தவறு என்று உணர்ந்த பின்,

அந்த தவற்றை ஒப்புகொள்ளத் தயாராக இருக்கிறின்றோமோ என்பது தான், நம்மை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தும்.

செய்தது தவறா, தவறில்லையா என்பது கூட பிரச்சனையல்ல..

அதை ஒப்புக்கொள்கிற அகங்கார நினைப்புதான் நமக்கு பிரச்னை!

குழந்தையாக இருந்தபோது எவ்வளவு வளைந்து கொடுத்தோம்?

நம்மை அடித்தவரிடமே கூட எந்த வன்மமும் இல்லாமல் திரும்ப அவர்களிடம் சென்றோம்...

அப்போது அந்த சந்தோசம் எப்படி இருந்தது..?

ஆனால் இப்போது வளர, வளர உடல் அளவிலும், மனதளவிலும் நாம் இருகி விட்டோம்.

சமூகத்தில் நமக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு விட்டோம்.

அதனால் தான் நாம் நமது தவறுகளை ஏற்றுக்கொள்ளும் அடிப்படை குணத்தைக் கூட இழந்துவிட்டோம்..!

தவறை உணர்ந்த பின்னும், வெளிப்படையாக ஏற்கத் துணிவில்லாமல்,

மேலும் அதை நியாயப்படுத்திகொண்டு இருப்பது தான் தவறு.

நாம் செய்த தவறை மற்றவர்கள் கையும்கள‌வுமாகப் பிடிபட்டாலும்,

நம் தவற்றை ஒப்புக்கொள்ளாமல் அதை நியாயப்படுத்த மேலும் மேலும் வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போகின்றோம் நம்மில் சிலர்.

இந்த மனப்பான்மை மிகவும் அபாயகரமானது!

என்ன தவறு செய்தாலும் அதை நேர்மையாக ஒப்புக் கொள்ளுவோம்.

அது நம்மைப் பற்றிய நன்மதிப்பைத் தான் கூட்டும்.

ஒருவரின் காலை தெரிந்தோ,தெரியாமலோ

மிதித்து விடுகின்றோம்.

மன்னிப்புக் கேட்பதை விடுத்து,

"வேண்டுமென்றா நான் மிதித்தேன்?" என்று விவாதிப்பது எப்படி நியாயமாகும்...?

"மன்னித்துவிடு!

தெரியாமல் நடந்துவிட்டது,

அறியாமல் செய்துவிட்டேன்! என்று பணிந்து சொல்வதால், நாம் என்ன குறைந்தா போய்விடுவோம்.

சிலர் நம் தவறுகளை பூதக் கண்ணாடியால் பார்க்கக்கூடும்,

பார்த்துவிட்டு தான் போகட்டுமே!

நாம் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால், நம் யுத்தம் அங்கேயே முடிந்து,

நம் மீது குற்றம் சுமத்தியவர் அல்லவா குற்ற உணர்வை சுமப்பார்?

புரிந்துகொள்ளுங்கள்..

இது விட்டுக் கொடுப்பதோ,

தோற்றுப் போவதோ அல்ல!

நம் மனம் பக்குவப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்....

வியாபாரம் செய்தாலும்,

விளையாட்டாக இருந்தாலும்,

தவறுகளை எற்றுக்கொள்ளவதைப் பொறுத்து்த்தான் வாழ்க்கையில் வெற்றி அமைகிறது.

தவற்றை ஒப்புக்கொள்ளாதவரை,

மனதிற்க்குள் சிலுவை போல் நம் குற்ற உணர்வைத் தேவையின்றி சுமக்க நேரிடும்.

நமது அலட்சியமான குணத்தினால் அதைப் பற்றி அப்போது (தவறிழைக்கும் போது) உணர்ந்தாலும்,

கவலைப்படாமல், செயல்பட்டாலும்,

காலம் வரும்போது அந்தக் குற்றஉணர்வு நம்மை துரத்தும்.

தவறுகளை ஒப்புக்கொள்வது என்பது,

எதிரிகளையும் நண்பர்களாக்கித் தரும் பலம்.

எதிர்த்து வீழ்த்த முடியாத பலம்.

வாழ்க்கையில் நம்மை அடுத்த படிக்கு அழைத்துச் செல்லும் பலம்!

அதுபோலவே,

*மற்றவர்களின் தவறுகளை மன்னித்து விடுவோம்.

*மற்றவர்களைப் பற்றி குறை சொல்வதை நிறுத்துவோம்..

*எல்லோரிடமும் பேதம் பார்க்காமல் பழகுவோம்..

*புதிய நட்புகளை ஏற்படுத்திக் கொள்ளுவோம்.