Friday, November 9, 2018

வாழ்க்கை தத்துவங்கள்....

அறிந்ததை உலகுக்கு சொல்வோம்!! அறியாததை அறிந்து சொல்வோம்!!

வாழ்க்கை தத்துவங்கள்....


புரியாத வார்த்தை இருந்தும் பயன் இல்லை! புரியாத வாழ்க்கை வாழ்ந்தும் பயன் இல்லை....

அழுது நீ கோழையாகாதே! உனக்கு நண்பன் நீயே! உன்னை காப்பற்ற வருபவர் எவர் உளர்? நீயே உன் காவலன்....ஆதலினால் யாரையும் எதற்கும் எதிர்பார்க்காதே!

உனது வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்! ஆனால் எல்லைக்குள் ஒரு போதும் வாழ்க்கையை அமைத்து விடாதே....!

* இதுவரை ஆராய்ச்சிக்கு உட்ப்படுத்தாத ஒன்று எது தெரியுமா அன்பு. காரணம் அன்பென்றால் அகிலமும் அடங்கிவிடும் என்பதனால்.

*ஒருவனின் வார்த்தை தரும் வலியை விட அவன் செய்யும் செயலின் வலி அதிகம்.

* அன்பானவர்களிடம் உன் மனதை மறைத்து விடாதே. உன் மனதில் உள்ளதை மறைப்பதாயின் அன்பாய் இருப்பது போல் நடித்து வாழாதே.

* கற்பனையில் சித்திரத்தை வரைந்து விடலாம், ஆனால் ஒருவனின் மனதை புரிந்து கொள்ளாமல் நண்பன் ஆகி விட முடியாது.

* ஒரு மனிதனின் அதீத அன்பானது தாயிடம் மட்டுமே உள்ளது..

* ஒன்றை நாம் பார்க்கும் விதத்தில் அது சரி தப்பு என்று முடிவு எடுத்து விடுகிறோம். அதை நாம் எப்போது சரியா தவறா என்று ஆராய்ந்து பார்ப்பதில்லை அப்படி நாம் ஆராய்ந்து பார்த்து விட்டால் சந்தேகங்கள் மனிதர் இடையே தோன்றாது.

* ஆயிரம் தடவை உன் சந்தேகத்தை நேரே கேள் அது சிறிய கோபத்தை உருவாக்கும் ஆனால் பதில் கிடைத்து விடும், ஆனால் உன் சந்தேகத்தை நேரே கேட்க்காமல் உன்னுள் வைத்து மறை முகமாய் ஒருவனைக் காயப் படுத்தாதே அது உனக்கு எல்லையற்ற துன்பத்தை தந்துவிடும்...

* இழப்பு அல்லது பிரிவின்றி எவரும் ஒன்றின் அருமையை உணருவதில்லை.

* நான் என்று சொல்லும் போது எனது அகத்தில் இருப்பதையே கூறுகிறோம், எனது என்று சொல்லும் போது எனக்காக புறத்தில் இருப்பதை கூறுகிறோம். இதை எல்லாம் தாண்டி நாம் என்று கூறும் பொழுதே வெளியில் எமக்காக காத்திருக்கும் வாழ்க்கையைப் பெற்றுக் கொள்கிறோம்.

* மனிதனாய் பிறந்து மிருகத்தின் குணத்தைக் கொண்டிருப்பதை விட. மிருகமாய் பிறந்து அது தன் இனத்தின் மீது காட்டும் அன்பு போல் காட்டி வாழ்ந்து விடு மனிதா!

* நிஜங்கள் பலவற்றை கண்ணெதிரே தொலைத்து விட்டு இருளெனும் கனவில் தேடுகிறேன். நீண்ட நாட்களாக, பல மாதங்களாக, சில வருடங்களாக....

* கல்லைச் சலவை செய்யும் அருவியே இந்த மனிதனின் மனதையும் ஒரு முறை சலவை செய்து விட்டு செல்வாயா?.

* மனதில் பூக்கும் மல்லிகை பூ அன்பு. அதனைத் தூக்கி குப்பையில் போட்டால் கூட நறுமணம் வீசும்.

* ஆயிரம் தடவை யோசித்து முடிவெடுப்பதை விட எடுத்த முடிவில் நிரந்தாரமாய் இருப்பதே அழகு.நேரத்திற்கு தகுந்த மாதிரி செயற்ப்படாதே.

* திட்டமிடல் வாழ்கையில் அவசியாமாய் இருக்கிறது, ஆனால் திட்டமிட்டபடி வாழ்வு செல்லாவிடின் வெறுப்பு ஏற்படுகிறது. உங்கள் அத்தியாவசியத் தேவைக்கு திட்டமிடுங்கள் வாழ்க்கையை திட்டமிடாதீர்கள்.

* ஆயிரம் பேரின் கண்கள் உன்னை நோக்கினாலும் இரு கண்கள் மட்டுமே என்றும் உன்னை அன்பாக நோக்கும் உன்னைப் பெற்றவள், நீ அவதரிக்க காரணமாய் இருந்தவர்.

* கோபம் வருகின்ற பொழுது வார்த்தையின் அளவுகள் அதிகரிக்கின்றன. அன்பானவர்களைக்(அன்பானவரைக்) கூட எதிர்த்து விடுகின்றது..

* கெட்டவனாக இருந்து கொண்டு நல்ல பெயர் எடுப்பதைவிட.. நல்லவனாய் இருந்து கெட்ட பெயர் எடுப்பது எவ்வளவோ மேல்..

* கடற்கரையில் இருக்கும் கப்பலை விட கடலினுள் இருக்கும் படகின் பெறுமதி அதிகம். அது போல் மனிதா நீ உருவாக்கும் பொருள் உபயோகாமானால் சிறப்பு.

* பெருங் கடலுக்கு எல்லை சிறிய நிலப்பரப்பு..உனக்கு எல்லை உனது பெற்றோர்.

கடல் எல்லையைத் தாண்டினால் நிலம் அழிந்துவிடும். நீ எல்லையத் தாண்டினால் நீ அழிந்து விடுவாய்.

* தந்தையின் நம்பிக்கை இருக்கும் வரை தனயன்(மகன்) வழிதவறான்.

தாயின் அன்பு இல்லையானால் தனபதியாய்(குபேரன்) இருந்தும் பயன் இல்லை.

சகோதரர் துணையிருப்பின் ஒரு போதும் தனியன்(தனித்த ஆள்) ஆகான்.

இத்தனையும் என்னிடம் உண்டு... உன்னிடம் உண்டா??

* வாழ்ந்தவனுக்கு அனுபவம் பதில் சொல்லும்

வாழ்பவனுக்கு காலம் பதில் சொல்லும்

வாழப் போறவனுக்கு மனம் பதில் சொல்லும்.

* அன்பின் ஆழம் தெரியாத மனிதா.

நீ உன் தாயின் அரவணைப்பை அறிந்திருக்க மாட்டாய்.

நட்பின் ஆழம் தெரியாத மனிதா.

நீ உன் தந்தையின் பாசத்தை அறிந்திருக்க மாட்டாய்.

காலப் போக்கில் உன் வாழ்வே தெரியாது இருந்து விடுவாய்....

* கண்ணை மூடும் போது தூங்குகிறோம். கண்ணைத் திறக்கும் போது எழுகிறோம். அது போல் விழுகிற போது எழுந்துவிடு எழும் போது விழுவது சகஜம் அதற்காக விழுந்த படியே இருந்து விடாதே..

* குறை உடலில் இருந்தால் அதை நீ பொருட்ப்படுத்தாதே. உள்ளத்தில் உள்ளதா முதல் அதை நிவர்த்தி செய்து விடு நீ உன்னை நேசிப்பாய் பின் மற்றவர்கள் உன்னை நேசிப்பர்.

* கனவு இல்லம் கனவாகலாம்... ஆனால் இல்லம் ஒரு போதும் கனவாகி விடக்கூடாது..

* இமைகள் திறக்கின்றன நீ பார்ப்பதற்கு, இமைகள் மூடிவிட்டால் பார்வையை இழந்துவிடுவாய்

உதடுகள் திறக்கின்றன மனதில் இருப்பதை வெளியிட, உதடுகள் மூடிவிட்டால் உமையாகிவிடுவாய்.

பிரிவுகள் ஏற்படும்போதே நீ வெளிச்சத்தை சந்திக்கிறாய் வாழ்வில்.

* ஒருவன் எப்பொழுது தனக்கு ஏற்படும் தடைகளையும் துன்பங்களையும் கருத்திற்க் கொள்ளாமல் வாழ்கிறானோ அவனே வாழ்வில் நிறையத் தோல்விகளைச் சந்தித்தவனாவான். வெற்றி பெற்றவன் துன்பத்தையும் தடங்களையுமே வாழ்வில் கொண்டவனாக இருப்பான். பல தடவை தோற்றுவிடு நீ உன் வாழ்வை வென்று விடுவாய்.


* காற்றின்றி படகுகள் அசைவதில்லை

தாயே நீ இன்றி எனக்கு முன்னேற்றம் ஏது?

கடல் அலையே அசையாதிருக்கும் படகை மூழ்கடிக்காதே.

* உனக்கு ஒரு பொருள் பிடித்திருந்தால் உன் பெற்றோரைத் தானே முதல் கேட்க்கிறாய்.. என் நீ வளர்ந்த பிறகு அவர்களிடம் கேட்பதை விட்டு உன்வழி போகிறாய். நீயும் ஒரு நாள் பெற்றோர் ஆவாய் என்பதை மறந்து விட்டாயோ?...

* பெற்றோரின் பெறுமதி என்ன தெரியுமா? நீ வாழும் வரை அவர்களுக்கு துன்பம் கொடுக்காது அவர்களது மரியாதையை இழக்க விடாது காப்பது. இல்லையேல் உன் பெறுமதி உன்னை விட்டு சென்று விடும்...

* காதலிப்பதால் ஏற்படும் நன்மையை விட அக் குறுகிய காலத்தில் ஏற்றப்படும் தீமை அதிகம்...நான் காதலித்தவனும் அல்ல காதலிப்பவனும் அல்ல..

* கனவே உன் கடலில் என்னை முழ்கடித்து விடாதே எனக்கு நீந்த தெரியும். அவ்வாறு நான் நீந்தித் தப்பி விட்டால் நீ தோற்று விடுவாய்.

* நம்பிக்கை நற்கனவை நனவாக்கிவிடும். அவநம்பிக்கை உன் வாழ்க்கையையே கனவாக்கிவிடும்.....

* ஒருவரின் அன்பு பற்றி நீ அறிய வேண்டுமா.. ஒரு முறை பிரிவை சந்தித்து விடு...

* பொய்யை அறிந்து கொள்வதை விட உண்மையை அறிந்து கொள்வது இலகு.

* தோல்வி ஏற்ப்படின் தோற்று விட்டோமே என்று எண்ணாதே நீ ஒரு நாள் வென்று விடுவாய், ஆனால் நேரத்தை வீணாக்காதே அது உன் தோல்வியை பல மடங்கு அதிகரித்து விடும்.

* உனது பொறுமையே உன் வயதினை சித்தரிக்கும்..

* இரவில் கண்ணை முடிய போது கனவுகள் தோன்றுகிறது. உண்மையில் நடப்பது போன்று மனதில் தோன்றும். கண் விழித்த பிறகுதான் தெரிகிறது கண்டது கனவு என்று. அக் கனவு நிஜமாக வேண்டுமெனின் நம் முயற்சி பல மடங்காக வேண்டும்.

கனவு காண் அது நற்கனவாயின் நிகழ்த்தி முடி....

* தோல்வி உன்னை சந்திக்க சிந்திக்கிறதா? ஒரு கணம் நீ ஏன் தோற்றாய் என்று சிந்தி. அதன் பிறகு உன்னை தோல்வி சந்திக்க சிந்திக்கும்.

* அன்பு என்பது சிறந்த ஒன்று அது அழிவதற்கு நீங்கள் காரணம் ஆகி விடாதீர்கள்...

* புரியாத வாழ்க்கைப் பாதைகள்....... தொடரும் பயணங்கள் முடியும் இடம் தெரியாமல் தவிக்கும் உள்ளம்.......

* அழுவதற்கு எனக்கு மனம் இல்லை காரணம் நான் அழுதால் என் தாய் அழுது விடுவாளே என்று..

* உனக்கு அடுத்தவனை பிடிக்கவில்லையா ஒதுங்கிகொள். உன்னைப் பிடிக்கவில்லையா நீ தலை சிறந்தவன் என நிரூபித்து விடு. அதன் பின் அவர்கள் தாமே வருந்துவார்கள் உன்னை எண்ணி..

* வானம் பூமியைத் தொட்டால் அது அதிசயம் ஆனால் மனிதன் வானத்தை தொட்டால் அது

சாதனை. அதிசயத்தை பார்த்துக் கொண்டிருப்பதை விட வானத்தை தொட முயற்சிப்பவனாக

இருந்தால் அதுவே உன் வாழ்வை வெற்றி பயணத்தில் தொடக்கி வைக்கும்...

* வாழ்க்கையில எவ்வளவு தான் உச்சிக்கு போனாலும் கடைசில ஒரு பெட்டிக்க தான் முடியும்.

* படிப்பதற்காக எல்லா சந்தர்ப்பங்களையும்

இழக்கத் தயாராக இருங்கள்.

எந்த சந்தர்ப்பத்திற்காகவும் படிப்பை

இழக்கத் தயாராகி விடாதீர்கள்!

எனில்

நீங்கள் எங்கிருந்து வந்தாலும்

எங்கு வேண்டுமானாலும் போகலாம்...

* இன்பம் என்பது கானல் நீர் போன்றது ஒரு சில மணித்துளிகளுக்கு மட்டும் இருக்கும் ஆனால் துன்பம் என்பது வாழ்க்கையில் மரம் போன்று வளர்ந்தே செல்லும்...கானல் நீரைக் கண்டால் எம் மனதில் பூரிப்பு தோன்றும் அது போன்று கிடைக்கும் இன்பத்தை நீ வீணாக்காதே...வாழ்வில் துன்பம் வருவது சகஜமே...அதைக் கண்டு துவண்டு விடாதே பிறகு அது உன்னை வாழ விடாது.......( கானல் நீர் குளிர் நாடுகளில் தெரிவதில்லை காரணம் குளிர் நாடு என்பதால்.)

* பொறுமை, விட்டு கொடுத்தல் இரண்டும் மிக முக்கியம் மனித வாழ்வில்... ஆனால் இவை இரண்டிற்கும் எல்லைகள் உண்டு.... அன்புக்கு மட்டும். என்றும் எல்லையும் இல்லை எதிரியும் இல்லை... மற்றவரின் பொறுமையை சோதிக்காதீர் அவ்வாறு சோதித்து பொறுமை இழந்தால் பிரச்சனை நமக்கு தான் அதிகம்..

* கலகலப்பாய் இருங்கள் வேண்டாம் என்று ஒரு போதும் உங்களுக்கு சொல்லவில்லை

ஆனால் மற்றவனை கலங்கப்படுத்தாது இருங்கள் ..அவ்வாறு இருப்பீர்கள் ஆனால்

நீங்கள் என்றுமே புன்னகை நிரம்பிய முகத்தோடு இருப்பீர்கள....

* நாம் எப்போதும் மேலே போகும் விமானத்தை அண்ணார்ந்து பார்த்து கழுத்தை நோக வைப்பதை விட நேரே பார்த்து எமது முன்னேற்றத்தை பார்த்திருந்தால் என்றோ வாழ்க்கையில் முன்னேறியிருப்போம். இது மேல் அண்ணார்ந்து பார்க்கும் விமானத்துக்கு மட்டும் அல்ல அடுத்தவனை பார்த்து செய்வதற்கும் பொருந்தும்...

* நல்ல நண்பன் உனக்கு வேண்டும் ஆனால் நீ நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது நீ உண்மையாகவும் இருக்கவேண்டும்..

( நீ உனது நண்பனை பற்றி கதைப்பதாக இருந்தால் அவன் உன்னருகே இருக்கும் போது கதை அவன் சென்ற பிறகு கதைக்காதே அவ்வாறு கதைப்பாயாக இருந்தால் நீ உனது நண்பனை இழந்து விடுவாய்)

* நட்பின் இலக்கணம் தெரிய வேண்டுமானால் உங்கள் நட்பை நேசியுங்கள் அதன் இலக்கணம் மட்டுமல்லாது அதன் ஆழத்தையும் புரிந்து கொள்ளவீர்கள்.

* எதையும் தூரத்தில் இருந்து பார்த்து நம்பாதீர்கள்.........அங்கே என்ன

நடக்குது என்ன நடந்தது என்று தெரியாமல் கதைக்காதீர்கள்.............

இதுக்கு தான் சொல்வார்கள் காதால் கேட்பதும் பொய் கண்ணால் பார்ப்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று..

* கடன் கொடுங்கள் அதை திரும்பப் பெற்று விடுவீர்கள் ஆனால் களவு கொடுத்து விடாதீர்கள் அதை திரும்பப் பெற முடியாது...

* கண்கள் எமது முதுகை பார்த்ததில்லை கால்த் தடங்கல் கூட மாறிப் பதிவதில்லை ஆனால் மனிதன் மட்டும் மாறுகிறான் காரணம் மட்டும் புரியவில்லை ஏனோ ..

* நட்பு என்பது என்றும் அழியாச் சொத்து குடும்பம் என்பது பெரிய சொத்து ஆசிரியர் என்பது கிடைத்த சொத்து இச் சொத்துக்களை இழந்து விடக் கூடாது.......

மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ 8 பழக்கங்கள்!

மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ 8 பழக்கங்கள்!

சாதனையாளர்கள் மற்றவர்களை விட தங்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி தங்களின் மன நிலைகளை சரியான முறைகளில் தக்க வைத்து கொள்வது மட்டுமல்லாமல், தங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதனை திறம்பட வெளிப்படுத்துகின்றனர். சாதனையாளர்களிடமிருந்து கவனிக்கப்பட்ட 8 பழக்கங்களை இங்கே பார்ப்போம். அந்த பழக்கங்களை நாமும் கற்றுக்கொண்டு மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழ்வோம்.

1) ஃபோகஸ்; கவனத்தை சிதறவிடக்கூடாது

சாதனையாளர்கள் தங்களின் கவனத்தை சிதறவிடமாட்டர்கள். ஒரு நேரத்தில் ஒரு பிரச்சினை மட்டும் தான் பார்ப்பார்கள். ஒரே நேரத்தில் பல பிரச்சனைகளை பார்ப்பது மன அழுத்தத்திற்கு பெரிய காரணமாக அமைகிறது. அதனால் மற்ற பிரச்சனைகளை பிறகு பார்த்துக்கொள்வதுதான் நல்லது. எனவே நீங்கள் நிகழ்கால பிரச்சனைகளை மட்டும் நிலைநிறுத்திக்கொள்ளுங்கள், கடந்த காலம் மற்றும் எதிர்கால பிரச்சனைகளை யோசித்து கவலைக்கொள்ளாதீர்கள். இதுவே மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த வழி ஆகும்!

2) பிரச்சனைகளை பார்த்து கவலை வேண்டாம்; 

நமது செயல்களில் ஏதேனும் தவறு ஏற்படும் என்று நினைத்தால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ள வேண்டும், நம்முடைய செயல்கள் சரியான இலக்கை அடைய விழிப்புணர்வோடு செயல்பட வேண்டியது மிக முக்கியமானதாகும். நம்முடைய எல்லா பிரச்சனைகளை பற்றி கவலை அடைவதே நம மன அழுத்தம் அதிகரிக்க காரணமாக உள்ளது. 

3) போராடுங்கள், விட்டு கொடுக்க கூடாது!

ஒரு சில நேரங்களில் நமக்கு எதிராக எல்லா செயல்களும் நடப்பது போல் அமையும். அந்த நேரத்தில் மனதை தளரவிடாமல் போராடி நமது இலக்கை அடைய வேண்டும். இந்த மனப்பக்குவமே சாதனையாளர்கள் மற்றும் சாதனையற்றவர்களை வேறுபடுத்திக் காட்டுகிறது. 

4) மற்றொரு கோணத்தில் பாருங்கள்!

ஒரு பிரச்சினை நம்மை சூழ்ந்திருக்கும்போது, சில நேரங்களில் அது பெரியதாக தோன்றும். அந்த நேரத்தில் அந்த பிரச்சனைகளிலில் இருந்து விலகியிருந்து மற்றொரு கண்ணோட்டங்களில் பார்த்துக்கொள்வது மிக முக்கியமானதாகும். எனவே பிரச்சனைகள் எழும்போது நாம் அமைதியாக தூங்கி எழுந்தால் அந்த பிரச்சனைகள் மிக எளியதாக தோன்றும். மற்றொரு கண்ணோட்டத்தில் பிரச்சனைகளை பார்ப்பதன் மூலம் புதிய கோணத்தில் அதற்கொரு முடிவு கிடைக்கிறது. 

5) எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; தயாராக இருக்க வேண்டும்.

சிறந்த வாசிப்பு, புரிந்துகொள்ளுதல் மற்றும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். மேலும், மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைத்தால், மன அழுத்த காலங்களில் அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.

6) அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்

நீங்கள் ஓய்வெடுக்கவும் மற்றும் உங்களின் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கவும் நேரத்தை ஒதுக்க வேண்டும். உங்களுடைய நம்பிக்கை உரியவர்களிடம் உங்களின் நேரத்தை ஒதுக்கி செலவிடுவது, நீங்கள் ஓய்வெடுத்து கிடைப்பதைவிட மிக நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். 

7) உறங்குதல். உடற்பயிற்சி, தியானம்

உங்களின் உணர்வுசார் நுண்ணறிவை அதிகரித்து மூளையை ரீசார்ஜ் செய்வதன் மூலம் மன நிலைகளை நிர்வகிப்பதில் தூக்கம் முக்கியமானதாகும். உங்களுடைய சுய கட்டுப்பாடு, கவனம், மற்றும் நினைவகம் ஆகியவை உங்களின் மன அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். பிரச்சனைகள் அதிகமாக இருக்கும் போது, உங்களின் கண்களை மூடிக்கொண்டு, உட்கார்ந்து, மூச்சு சுவாச பயிற்சியை மேற்கொள்ளவும். இதன் மூலம் உங்கள் மனம் அமைதி அடையும்.

8) தாழ்வாக நினைப்பதை நிறுத்தவும்

நம்மளை பற்றி நாமே எதிர்மறையாக அல்லது தாழ்வாக நினைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏதாவது தவறாக சென்றாலும் அதை பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் இதோடு உலகம் முடிவதில்லை. எப்போதும் உங்களை உயர்த்தியே எண்ணுங்கள். 

Monday, November 13, 2017

#உண்மைகள்_உபதேசமாய்!!!

1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.
2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.
3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.
4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.
5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.
8. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை.
9. கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.
10. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்.
மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.
11. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.
12. கூப்பாட்டால் சாப்பாடாகுமா?
13. எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல,
கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல,
சில்லரைக் கடன் சீரழிக்கும்.
14. சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
15. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
(எத்தனை பெரிய உண்மை. போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு நிலைக்கும். கொடுத்த கடனைக் கேட்டுக் கொண்டே இருந்தால் தான் திரும்பக் கிடைக்கும்).
16. அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமிர்தமுமா?
(இன்று பலரும் இப்படித்தானே இருக்கிறார்கள்?)
17. ஆனை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது!
(எல்லாம் காலத்தின் கோலம்!)
18. அறப்படித்தவன் அங்காடிக்குப் போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.
(அதிகமாய் படித்தவர்கள் பலரும் இப்படித்தான்).
19. உள்ள பிள்ளை உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்கு திருப்பதிக்கு நடக்கிறாள்.
(இருக்கிற குழந்தைக்கு சோறு போடாமல் அது உரலில் ஒட்டிக் கொண்டிருக்கும் தானியத்தை நக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையில் அடுத்த பிள்ளை வேண்டும் என்று திருப்பதிக்கு வேண்டிக் கொண்டு நடக்கிறாளாம். இப்படியும் இருக்கிறார்கள்).
20. இறுகினால் களி. இளகினால் கூழ்.
21. ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது.
(யாருக்கு உதவுகிறோம் என்று சிந்தித்து உதவா விட்டால் இப்படித்தான்)
22. எடுப்பது பிச்சை. ஏறுவது பல்லாக்கு.
(பலருடைய போக்கு இப்படித்தான் இருக்கிறது)
23. எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?
(எட்டி பழுத்தாலும் அதன் கசப்பால் சாப்பிட உதவாது. கஞ்சனுக்கு எத்தனை செல்வம் வந்தாலும் அதில் யாரும் பலன் அடைய முடியாது).
24. விசாரம் முற்றினால் வியாதி.
(கவலை அதிகமானால் வியாதியில் தான் முடியும்).
25. பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.
(நிதானமாக சிறிது சிறிதாக மென்றால் பனையைக் கூட மென்று விடலாம். அதாவது நிதானமாக தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடித்து விடலாம்.)
26. காற்றில்லாமல் தூசி பறக்காது.
(நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு இணையான இன்னொரு பழமொழி)
27. பண்ணின புண்ணியம் பலனில் தெரியும்.
(நாம் அனுபவிக்கும் பலன்களைப் பார்த்தாலே சேர்த்திருக்கும் புண்ணியம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்).
28. பிடித்த கொம்பும் ஒடிந்தது, மிதித்த கொம்பும் முறிந்தது.
(துரதிர்ஷ்டம் எப்படி எல்லாம் சோதிக்கிறது என்பதற்கு அழகான பழமொழி. ஒரு மரத்தில் ஏறி ஒரு கொம்பைப் பிடித்துக் கொள்ளும் போது அது ஒடிந்து போக, கீழே விழாமல் இருக்க இன்னொரு கொம்பில் காலை வைத்து ஊன்றினால் அந்தக் கொம்பும் முறிந்தால் எப்படி இருக்கும்?)
29. பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.
(பதர் என்பதே அரிசி இல்லாத நெல் தான். அதனால் என்ன தான் குத்தினாலும் அதில் அரிசி கிடைக்க வாய்ப்பில்லை. மனிதனின் பயனில்லாத முட்டாள்தனமான முயற்சி குறித்துச் சொல்லும் பழமொழி)
30. இட்டதெல்லாம் பயிராகாது. பெற்றதெல்லாம் பிள்ளையாகாது.
(விதைத்ததெல்லாம் பயிராகி பலன் தருவதில்லை. அது போல பெற்றதெல்லாம் பிள்ளையாகி நல்லபடியாக நம்மைப் பார்த்துக் கொள்ளும் என்று நினைத்துவிட முடியாது).
31. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான்.
(தயிரில் வெண்ணெய் எடுத்த பிறகு தான் மோராகிறது. அந்த மோரிலேயே மீண்டும் வெண்ணெய் எடுக்கும் அளவு சாமர்த்தியம் வாய்ந்தவர்களைப் பற்றி இந்தப்பழமொழி சொல்கிறது.
32. வாங்குகிற கை அலுக்காது.
(வாங்கிக் கொண்டே இருப்பவர்களுக்கு அலுப்பே இருக்காது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் என்றே சொல்லப்பட்ட பொருத்தமான பழமொழியோ?)
33. அடுத்த வீட்டுக்காரரே பாம்பைப் பிடியுங்க. அது அல்லித்தண்டு போல ஜில்லென்றிருக்கும்.
(என்ன சாமர்த்தியம் பாருங்கள்!)
34. உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?
35. அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.
36. அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.
37. அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.
38. ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான்.
ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.
39. ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான்,
அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.
40. ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா?
41. இந்த எலும்பைக் கடிப்பானேன், சொந்தப்பல்லுப் போவானேன்?
42. இந்தக் கூழுக்கா இத்தனை திருநாமம்?
43. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
44. இடுகிறவள் தன்னவள் ஆனால் முதல் பந்தியில் உண்டால் என்ன, கடைப் பந்தியில் உண்டால் என்ன?
45. உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது..

Wednesday, November 8, 2017

"தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது"

டெல்லியில் ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார்.
அந்த வட்டாரத்தில் இவர் கடை பிரபலம்....
ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே....
"நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க....
தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க...
இதுவே என்னைப் போல பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேரிருக்கலாம் இல்ல" என்றார்....
பெரியவர் புன்னகைத்துவிட்டு சொன்னார்...
"இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேரிருக்கேன்"
"எப்படி?"
"பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த தொழிலில் நுழைந்து கூடையில் சமோசா விற்ற போது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க...
அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபா...
உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்...
நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க...
மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க....
இப்போ எனக்கு சொந்தமா இந்த கடை இருக்கு...
இந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு...
நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதைவிட அதிகமாகவே சிலசமயம் சம்பாரிக்கிறேன்....
நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை நான் தர முடியும்...
அவர்கள் என்னைப்போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம்...
நேரடியாக முதலாளியாக வந்து கடையை வளர்த்தால் போதும்...
ஆனால் உங்களுக்கு அப்படியில்லை...
உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது...
உங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்குத்தான் போகும்....
உங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து துவங்க வேண்டும்...
நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான்....
உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக்கோங்க....
ஒருவேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம்" என்றார்....
மேனேஜர் சமொசாவுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்...
நீதி:
"தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது"

படித்ததில் பிடித்தது! வெற்றி

✌ *4 வயதில்*, தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி !
✌ *8 வயதில்*, தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !
✌ *12 வயதில்*, நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !
✌ *18 வயதில்*, வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !
✌ *22 வயதில்*, பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி !
✌ *25 வயதில்*, நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !
✌ *30 வயதில்*, தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி !
✌ *35 வயதில்*, போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !
✌ *45 வயதில்*, இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது வெற்றி !
✌ *50 வயதில்*, தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !
✌ *55 வயதில்*, நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி !
✌ *60 வயதில்*, ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !
✌ *65 வயதில்*, நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
✌ *70 வயதில்*, மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
✌ *75 வயதில்*, பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி !
✌ *80 வயதிற்கு மேல்* மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !
*Be defeated to become victoriuos.*
தோற்று போனால்
வெற்றி கிடைக்குமா ?
✌ *அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்..*
✌ *அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்..*
✌ *துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..*
✌ *பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..*
✌ *சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..*
✌ *நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்..*
✌ *ஆகவே தோற்று போ,*
தோற்று போனால் வெற்றி கிடைக்கும்
அன்புடன் வாழுங்கள்.மற்றவரை அன்புடன் வாழ வழி வகுப்போம்..
......

Monday, November 6, 2017

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும் இவ்வார்த்தை பகவத்கீதையில் அர்ஜீனனுக்கு பகாவான் கண்ணன் சொன்னது.

எவ்வளவு அழகான உணர்வுபூர்வமான வார்த்தை.இதன் தத்துவத்தை புரிந்து கொண்டால் வாழ்க்கை தத்துவமே விளங்கி விடும்.இன்பம் துன்பம் அனைத்தும் சமமாக தெரியும்.

இன்று நாம் சந்தோசம் என்று நினைக்கும் ஒரு விசயம் வருத்தமான செய்தி வந்ததும் சந்தோசததை மறந்து கவலை பட ஆரம்பித்து விடுகிறோம்.அதே போல் வருத்தமான நேரத்தில் சந்தோச செய்தி வந்தவுடன் வருத்தத்தை மறந்து சந்தோச பட ஆரம்பித்து விடுகிறோம்.

மகிழ்ச்சியோ வருத்தமோ எதுவும் நிரந்தரம் இல்லை எல்லாம் கடந்து போகும்.அதனால் தான் இந்து சமுதாயத்தில் ஒருவர் இறந்து விட்டால் காரியம் முடிந்ததும் சம்பந்தி விருந்து வைத்து இறந்தவரின் குடும்பத்தை சந்தோசபாதைக்கு திசை திருப்புகின்றனர்.

இன்றைய இளைஞர்கள் இத்தத்துவத்தை மிக அழகாக புரிந்து உள்ளனர் அதனால் தான் ஓரு பெண் அவனது காதலை நிராகரித்தால் உடனே அடுத்த பெண்ணை தேடி  போகின்றனர் எவ்வித வருத்தமும் இல்லாமல்.

இன்று நாம் பெரிய பிரச்சினை என்று நினைக்கும் ஒரு விசயம் அதை காட்டிலும் பெரிய பிரச்சினை வந்ததும் பழையதை மறந்து புது பிரச்சினை பெரியது என்று  பழைய விசயங்களை மறந்து விடுகிறோம்.இது தான் வாழ்க்கை அனைத்தும் கடந்து போகும்

இறந்தவர்களுடன் சுடுகாட்டுக்கு செல்லும் பொழுது நாமும் ஒரு நாள் இங்கே வரவேண்டியவர்கள் தான் என நினைத்தாலே சண்டை சச்சரவு இல்லாமல் வாழலாம்.

இதுவும் கடந்து போகும்.

இதுவும் கடந்து போகும்! - உழைத்தேன்... உயர்ந்தேன்..!

தொழில் செய்ய களம் இறங்கிவிட்டாலே வரிசைகட்டி பிரச்னைகள் தொடுத்து நிற்கும். அதிலும் எந்தப் பின்புலமுமே இல்லாதவர்களுக்கு சொல்ல தேவையில்லை. அத்தகையதொரு நிலையிலிருந்து வந்து, தன் உழைப்பை மட்டுமே மூலதனமாக வைத்து வளர்ந்திருக்கிறார் சாத்தூர் க.பொன்ராஜ். 

சுவர்களில் குழாய்கள் பதிக்க உதவும் கிளாம்ப் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்திருக்கும் பொன்ராஜை சந்தித்தோம். பிஸியான வேலைகளுக்கு இடையே வரவேற்றவர், தான் புதிதாக வாங்கவிருக்கும் மாருதி சுஸூகி (Maruthi Suzuki) எர்டிகா காருக்கு முகவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொன்னபடி நம்முடன் பேச ஆரம்பித்தார் பொன்ராஜ்,    
                                                  
“எனக்கு சொந்த ஊர் சாத்தூர். என்னுடன் பிறந்தவர்கள் மூன்று அண்ணன், ஒரு அக்கா. நான் கடைசி பையன். என் ஒன்றரை வயதிலே அப்பா கதிரேசன் இறந்துவிட்டார். அதன்பிறகு எங்கள் அம்மா சுப்புதாய் எங்களை எல்லாம் வளர்த்தார். 

என் பள்ளிக்கூட நாட்களில் நன்றாகப் படித்துக்கொண்டு இருந்தேன்.  எட்டாம் வகுப்பு வரை படித்தேன். மேலும் படிக்க குடும்ப சூழ்நிலை ஒத்துழைக்கவில்லை. பின் விடுமுறையிலிருந்து நிப் கம்பெனிக்கு வேலைக்கு சென்றேன். விடுமுறை முடிந்த கையோடு ஆசிரியர்கள் வந்து அழைத்தனர். ஆனால், வறுமை காரணமாக என் அண்ணன்கள், ‘விடு, டூடோரியல் எழுதிக்கிடலாம்’ என்று சொல்லிவிட்டனர்.

நாட்கள் சென்றன. சைக்கிள் கடையில் சில நாட்கள், கட்டுமானத் தொழிலில் சில நாட்கள், கேரளாவில் வைக்கத்தில் உள்ள ஒரு  ஹோட்டலில் சில நாட்கள் என அடுத்துவந்த காலம் பல்வேறு  வேலை களில் கழிந்தது. எனக்குக் கிடைத்த ஊதியத்தின் சிறு தொகையை வீட்டுச் செலவுக்கு அம்மாவிடம் கொடுத்ததுபோக, மீதிப் பணத்தை ஏலச் சீட்டுக்கு கட்டிவிடுவேன். இவ்வாறு சிறிது, சிறிதாக பணத்தை சேமித்து வைத்தேன்.

2003-ல் ஏலச்சீட்டு எடுத்து என் நண்பர் சீனிவாசன் உதவியுடன் ரூ.6,900 செலவில் கிளாம்ப் மெஷினை சொந்தமாக வாங்கினேன். இரண்டு ஆண்டு காலம் இரவு, பகல் பார்க்காமல் உழைத்தேன். அதில் கிடைத்த சிறிய அளவிலான லாபத்தை தேனீயை போன்று சேகரிப்பேன். பின் 2005-ல் ஆறு மெஷின்களை வாங்கினேன். 

அந்த சமயத்தில், இரண்டு பேர் எனக்கு நல்லது செய்வதாக சொல்லி, என் தொழிலில் சிறிது முதலீடு செய்துவிட்டு, என்னுடன் இணைந்துக் கொண்டனர். நல்ல லாபம் கிடைத்ததைப் பார்த்த அவர்கள், ‘உனக்கு மெஷினுக்கான முழு தொகையையும் தந்துவிடுகிறோம். எங்களிடம் பணி ஆளாக மட்டும் இருந்துகொள்’ என்று கூறினர். நான் ‘முடியாது’ என்றேன். ஆனால், அப்போது நான் 18 வயது பையன் என்பதால், என்னை எளிதாக ஏமாற்றிவிட்டார்கள்’’ என்று கூறியவர், புது காருக்கான புக்கிங் புத்தகத்தில் கையெழுத்து போட்டு, முகவரை அனுப்பி விட்டு,  தொடர்ந்து பேசினார். 



‘‘சொந்தத் தொழில் கைதவறிப் போனதால், வேறு வழியின்றி ஓராண்டு காலத்துக்கு கிளாம்பினை சாத்தூரிலிருந்து கேரளாவுக்குக்  கொண்டு செல்லும் முகவர் வேலை செய்தேன். மிகவும் கஷ்டப்பட்டுத்தான் அந்த வேலையைச் செய்ய வேண்டியிருந்தது. ஏனெனில், சாத்தூரில் கிளாம்பினை வாங்கி, இரவு 12.45 மணிக்கு  கொல்லம் பாசஞ்சர் ரயிலில் ஏறி, அதிகாலை கேரளாவில் உள்ள பரவூரில் இறங்கி, ஆட்டோவில் பயணம் செய்து, உரியவரிடம் கொண்டு சேர்ப்பேன். உடனே அடுத்த நாளுக்கான ஆர்டர் எடுத்துவிட்டு, பரவூரில் ரயில் ஏறி கொல்லம் சென்று, அங்கிருந்து புனலூர் ரயில் நிலையம் வழியாக சிவகாசி வழியாக மதுரை செல்லும் ரயிலினைப் பிடித்து சாத்தூர் வந்துவிடுவேன். மீண்டும் அன்றிரவே கிளாம்பினை எடுத்துக் கொண்டு, கேரளா செல்லும் ரயிலில் ஏறிவிடுவேன். இப்படி  தொடர்ந்து வேலை இருக்கும். சிறிது நேரம்கூட தூங்க முடியாது’’ என்று கூறியவருக்கு வந்த போனை அழுத்தி மலையாளத்தில் பேசிவிட்டு நம்மிடம் தொடர்ந்தார். 

‘‘பிறகு 2006-ல் நாமே சொந்தமாக செய்தால் என்ன? என்று தோன்றியது. ஹரிபாலகிருஷ்ணன் என்பவரிடம் மூன்று மெஷின்களை ரூ.2,000 அட்வான்ஸ் செலுத்தி, மாதம் ரூ.200 வாடகைக்கு வாங்கினேன். அந்த சமயத்தில் என்னை வளர விடாமல் தடுக்க பல இடையூறுகள் வந்தன. எனினும் உழைத்துக்கொண்டே இருந்தேன். இரவு, பகல் பார்க்காமல் உழைத்தால் மாதம் ரூ.8,000 வருமானம் வரும். அதில் ரூம் வாடகை ரூ.350, மின் கட்டணம்  ரூ.250 என பல வழிகளில் செலவாகும். அந்த சமயத்தில் வங்கியில் கடன் கேட்டேன். நல்ல பின்புலம் இல்லாத காரணத்தால் தவிர்த்தனர். 

‘‘அதன்பிறகு விற்பனை முறையில் சிறிது மாற்றத்தை கொண்டுவந்தேன். நானே நேரடி யாக கடைகளுக்குப் போய் விற்றேன். நல்ல லாபம் கிடைத்தது. சிறிது, சிறிதாக பணம் சேமித்து படிப்படியாக மெஷின்களை வாங்க ஆரம்பித்து வேலைக்கு ஆட்களை அமர்த்தினேன். இன்று வங்கிகள் என்னைத் தேடி வந்து கடன் கொடுக்கின்றன. மின்சாரத்தில் இயங்கும் ஒரு மெஷின் உட்பட 65 மெஷின்கள் உள்ளன. என் தொழிற்சாலையில் 25 ஆண்கள், 30 பெண்கள், 22 வெளி மாநிலத்தவர்கள பணியாற்றுகிறார்கள். அதில் மாற்றுத் திறனாளிகளும் அடங்கும்’’ என கூறியதைத் தொடர்ந்து, ஒரு மணிச் சத்தம் கேட்க, அவரது தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மதிய உணவு சாப்பிட சென்றனர். 

‘‘எனது தொழிற்சாலையில் தயாரிக்கக்கூடிய கிளாம்புகள் கேரளா, ஆந்திரா, சென்னை, பெங்களுரு என செல்கிறது. நாம் தொழிலில் உயர வேண்டுமெனில், யார் புகழ்ந்தாலும், திட்டினாலும் செவி சாய்க்கக் கூடாது’’ என்று தொழிலில் வளர உதவும் மந்திர சொல்லுடன் முடித்தார் பொன்ராஜ்.

‘‘அப்பா சாப்பிட வாங்க’’ என்ற குரலுடன் மகன் விஸ்வாதன், தனது அக்கா வினுஜா மற்றும் தாய் பிரியாவுடன் அழைக்க, நாம் விடை கொடுத்துவிட்டுப் புறப்பட்டோம்.