Friday, July 26, 2013

கடவுள் என்னைக் காப்பாற்றுவார்

ஒரு கிராமத்திற்கு வெள்ளம் வரலாம் என்று முன் கூட்டியே எச்சரிக்கப்பட்டு இருந்தது. அனைவரும் பாதுகாப்பாக வெளியேறி பக்கத்து நகரத்தில் தங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. கிராம மக்கள் ஒரே ஒருவனைத் தவிர மற்ற அனைவரும் வெளியேறி விட்டிருந்தனர். வெளியேறாமல் இருந்தவன் கடவுளின் பக்தன். அவனுக்குக் கடவுள் மீது அபார நம்பிக்கை. ”கடவுள் கண்டிப்பாக என்னைக் காப்பாற்றுவார்” என்று முழு மனதுடன் நம்பினான்.

வெள்ள நீர் கிராமத்திற்குள் வர ஆரம்பித்தவுடன் ஒரு ஜீப் அவனை அழைத்துப் போக வந்தது. “கடவுள் என்னைக் காப்பாற்றுவார்” என்று கூறி அவன் ஜீப்பில் போக மறுத்து விட்டான். வெள்ளம் அதிகரிக்க ஆரம்பித்தவுடன் அவனுக்குத் தன் குடிசையினுள்ளே இருக்க முடியவில்லை. கூரையின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். அடுத்ததாக அவனை அழைத்துக் கொண்டு போக படகொன்று வந்தது. கடவுள் மீது மாறாத நம்பிக்கை கொண்டிருந்த அவன் அப்போதும் அந்த படகில் போக மறுத்து விட்டான். வெள்ள நீர் அதிகரித்து கூரையும் மூழ்கியது. அவன் வெள்ளத்தில் மூழ்கி இறந்து விட்டான்.

மேலுலகம் போன போது அவனுக்குக் கடவுள் மீது தீராத கோபம். அவன் கடவுளைக் கேட்டான். “உங்கள் மீது நான் முழு நம்பிக்கை வைத்திருந்தேனே கடவுளே, இப்படி என்னைக் கை விட்டு விட்டீர்களே இது நியாயமா?”

கடவுள் கேட்டார். “வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்ததும், ஜீப் வந்ததும், படகு வந்ததும் யாரால் என்று நீ நினைக்கிறாய்?”

இந்த உதாரணக் கதையில் வெள்ளத்தில் மூழ்கி இறந்து போன கிராமவாசி கடவுள் புஷ்பகவிமானத்தை இறக்கி அதில் அவனை அழைத்துப் போவார் என்று நினைத்தானோ என்னவோ? இது கற்பனைக்கதை என்றாலும் நிஜத்தில் கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் இதை விட வேடிக்கையான முட்டாள்தன மனோபாவம் பலரிடம் இருக்கிறது.

கடவுள் மனிதன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவனுக்கு அறிவைக் கொடுத்திருக்கிறார். அவன் கற்றுக் கொள்ள எத்தனையோ சந்தர்ப்பங்கள் கொடுத்திருக்கிறார். அவன் கண்முன்னால் எத்தனையோ உதாரணங்கள் கொடுத்திருக்கின்றார். உழைக்கின்ற சக்தியைக் கொடுத்திருக்கிறார். எதைத் தெரிந்து கொள்ள அவன் விரும்பினாலும் அதைத் தெரிந்து கொள்ள எத்தனையோ வழிகள் ஏற்படுத்திக் கொள்ளார். மனிதன் அத்தனையையும் முதலில் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி பயன்படுத்தி மனிதன் தன் அறிவுக்கும், சக்திக்கும் ஏற்ப அனைத்தையும் செய்து விட்டு பிறகு அதையும் மீறி வரும் பிரச்னைகளில் இருந்து அவனைக் கடவுள் காப்பாற்றுவார் என்று நம்புவது தான் சரி.

எனவே கடவுள் நம்பிக்கை என்பது கடவுள் கொடுத்த அறிவை மழுங்கடித்துக் கொள்வதல்ல. முயற்சியே எடுக்காமல் முடங்கிக் கிடப்பதல்ல. சோம்பித் திரிய கிடைக்கும் அனுமதியும் இல்லை. பொறுப்பற்று அலட்சியமாக இருந்தாலும் நல்லதே நடக்கும் என்பதற்கு உத்திரவாதமுல்ல. ஆனால் பலரும் கடவுளை வணங்கினால் அது ஒன்று போதும், எல்லாம் தானாக நடந்து விடும், என்று நினைத்து விடுவது தான் வேடிக்கை.

குழந்தை பிறக்கின்ற போது தாயின் மார்பகங்களில் பாலைத் தயாராக வைத்திருக்கும் கருணையுள்ள கடவுள் நம் உண்மையான தேவைகளுக்கு வேண்டியதைக் கண்டிப்பாக மறுக்கப் போவதில்லை. ஆனால் கடவுள் நம் அடியாள் போல இருந்து நம் குறிப்பறிந்து அனைத்தையும் செய்து வந்து நம்மைக் கடைசி வரை காப்பாற்ற வேண்டும், அதற்குக் கூலியாக நாம் சும்மா அவரைக் கும்பிட்டுக் கொண்டு இருப்போம் என்ற அபிப்பிராயத்தில் யாரும் வாழ்ந்து விடக் கூடாது.

முயற்சிகளின் ஒரு பகுதியாகத் தான் பிரார்த்தனை இருக்க வேண்டுமே ஒழிய முயற்சிக்குப் பதிலாக பிரார்த்தனையில் ஈடுபடுவது முட்டாள்தனமான செய்கையாகும். கடவுள் அளித்த எத்தனையோ வரப்பிரசாதங்களை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளாமல், கடவுளிடம் மீண்டும் மீண்டும் பிரார்த்திப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயலே தவிர வேறில்லை.

“கடவுள் நிச்சயம் கரை சேர்ப்பார். ஆனால் வழியில் புயலே வராது என்ற உத்திரவாதம் தர மாட்டார்” என்று ஒரு பொருள் பொதிந்த பழமொழி உண்டு.
பல நேரங்களில் பிரச்னைகளும், சிக்கல்களும் நமக்கு வாழ்க்கைப் பாடங்களாக இருக்கின்றன. அதை சமாளித்து முடிக்கையில் நாம் அறிவிலும், சக்தியிலும் நாம் மேம்படுகிறோம். வாழ்க்கை என்ன என்பதை அப்போது தான் உண்மையில் பலரும் உணரவே ஆரம்பிக்கிறோம். அதனால் அந்தப் பாடங்களே வேண்டாம் என்று மறுப்பது நம் முன்னேற்றத்தையே மறுப்பது போலத் தான். 

எனவே அறிய வேண்டியதை அறியவோ, செய்ய வேண்டியதைச் செய்யவோ சோம்பி இருக்காமல் அறிந்து, அறிவார்ந்த முயற்சிகள் எடுத்து உங்கள் வேலையை நீங்கள் செய்யுங்கள். ஆனால் எல்லாமே நம் அறிவுக்கும் முயற்சிக்கும் உட்பட்டு நடந்து விடுவதில்லை என்பதும் உண்மையே. அப்படிப் பட்ட நிலையில் செய்ய வேண்டியதைச் செய்து விட்டு, நம்மை மீறிய விஷயங்களுக்கு கடவுளைப் பிரார்த்தியுங்கள். கடவுள் நிச்சயம் காப்பாற்றுவார்.

கடவுளின் அணுத் துகள்

அணுவுக்கு நிறையைத் தரக்கூடியதாகக் கருதப்படும் கண்ணுக்குத் தட்டுப்படாத ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) எனப்படும் நுண் துகள் உண்மையிலேயே இருக்கிறது என்பது ஊர்ஜிதமாகியுள்ளதாகத் தெரிகிறது.

இது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள விஞ்ஞானிகள் வரும் புதன்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளனர். இந்த அறிவிப்புக்காக உலகமே ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.

ஹிக்ஸ் போஸான் என்பது எல்லா அணுக்களுக்குள்ளும் இருப்பதாகக் கருதப்படும் ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள். ஆனால், அதை யாரும் பார்த்தும் இல்லை, அது இருப்பதாக நிரூபித்ததும் இல்லை.

ஆனால், இந்த துணைத் துகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால் இந்த பிரபஞ்சம் உருவானது தொடர்பாக சொல்லப்படும் தியரிகள் முழுமை பெறுவதும் இல்லை. கிட்டத்தட்ட பிளாக் ஹோல், டார்க் மேட்டர் மாதிரி இது தியரியிலேயே இருக்கிறது.

இப்படி கண்ணுக்குப் புலப்படாத இந்த அதிசயத்தைத் தான் விஞ்ஞானிகள் 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்கிறார்கள். இந்தத் துகள் இருப்பதாக முதலில் சொன்னவரான ஒருவரான (பீட்டர்) ஹிக்ஸ்சின் பெயரையே அதற்கு வைத்துவிட்டார்கள்.

கூடவே போஸான் என்ற பெயரும் இருக்கிறதே. அது நம் நாட்டைச் சேர்ந்த மாபெரும் இயற்பியல் வல்லுனர் சத்யேந்திர நாத் போஸின் பெயரிலிருந்து வந்தது. அதாவது சப் அடாமிக் பார்ட்டிகிள் எனப்படும் அணுவில் உள்ள துணைத் துகள்களில் 2 வகை உண்டு. ஒன்று நமது போஸ் மற்றும் ஐன்ஸ்டீனின் கோட்பாடுகளுக்குள் அடங்கும் துகள்கள். அவற்றுக்குப் பெயர் தான் 'போஸான்'.

(இந்த கோட்பாடுகளுக்குள் அடங்காத துகள்களுக்கு பெர்மியான் (fermions) என்று பெயர். அதைப் பற்றி சமயம் வரும்போது பார்ப்போம். இப்போ வேணாம்!).

இவ்வாறு போஸான் கோட்பாடுகளுக்கு, விதிகளுக்கு உட்பட்ட துணைத் துகள்களில் முக்கியமானவை photons, gluons மற்றும் ஹிக்ஸ் போஸான் ஆகியவை. இதில் போட்டான், குளுயான்கள் இருப்பதை நிரூபித்தாகிவிட்டது. ஆனால், ஹிக்ஸ் போஸான் இன்னும் விஞ்ஞானிகளுக்கு 'விக்கல்' தந்து கொண்டே இருக்கும் ஒரு ரகசியமாகவே உள்ளது.

இந் நிலையில் தான் இதைக் கண்டுப்பிடித்தே தீருவது என்ற முடிவில் களத்தில் குதித்தனர் உலக விஞ்ஞானிகள். பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்த மாபெரும் வட்ட சுரங்கத்தில் இந்த சோதனை நடந்து வருகிறது.

சோதனை என்றால் நாம் சினிமாக்களில் பார்ப்பது மாதிரி ஒரு டெஸ்ட் டியூபில் 2,3 கலர் கலர் திரவங்களைக் கலந்துவிட்டு அதே வேக வைத்து, வடிகட்டி.. ரசம் தயார் செய்வது மாதிரியான சமாச்சாரமல்ல இது.

பூமிக்கு அடியில் சுமார் 27 கி.மீ. வட்டப் பாதைக்குள் (Large Hadron Collider-LHC) புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் ஒளியின் வேகத்தில் பயங்கரமாக மோதவிட்டு அலற வைக்கும் அடாவடியான விஷயம் இது.

1,800 'சூப்பர் கண்டக்டிங்' காந்தங்களின் உதவியோடு வினாடிக்கு 600 மில்லியன் முறை புரோட்டான்- நியூட்ரான் கதிர்கள் எதிரெதிர் திசையில் நேருக்கு நேர் மோதி அவை குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், போட்டான், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என சிதறின.

கூடவே புரோட்டான்களுக்குள் இருந்த ஹிக்ஸ் போஸானும் எட்டிப் பார்த்ததாக சொல்கிறார்கள். அதைத் தான் வரும் புதன்கிழமை விஞ்ஞானிகள் சொல்லப் போகிறார்களாம்.

2008ம் ஆண்டு செப்டம்பரிலேயே இந்த சோதனைகளுக்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கிவிட்டன. விஞ்ஞானிகள் 2 குழுக்களாகப் பிரிந்து இந்த சோதனையை நடத்தினர்.

ஒரு குழுவுக்கு 'அட்லஸ்' (A Toroidal LHC Apparatus) என்று பெயர். இன்னொரு குழுவுக்கு 'சிஎம்எஸ்' (Compact Muon Solenoid) என்று பெயர். ஒரு குழுவுக்குக் கிடைக்கும் ரிசல்டை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவே இந்த இரு குழுவினரும் தனித்தனியே இந்த சோதனைகளை நடத்தினர்.

2008ம் ஆண்டிலேயே ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கினாலும் உண்மையான சோதனைகள் ஆரம்பித்தது 2010ம் ஆண்டு மார்ச் இறுதியில் தான். ஆனால், சோதனைகள் நடக்க ஆரம்பித்தவுடனேயே ஆராய்ச்சிகளுக்கும் 'சோதனை' வந்துவிட்டது.

ஆராய்ச்சிகள் நடக்கும் சுரங்கத்தில் குளிர்விப்பான்கள் செயல்படுவது பாதிக்கப்பட்டதால், அதை சரி செய்து சோதனைகளை ஆரம்பிக்க மேலும் ஓராண்டு தாமதம் ஆகிவிட்டது. குளிர்விப்பான்களை ரிப்பேர் செய்ய ஒரு வருஷமா என்று கேட்கலாம்.

LHCயின் உள் வெப்பநிலை -271.3°C. ஹீலியம் வாயு உதவியோடு கிரையோஜெனிக் சிஸ்டத்தை பயன்படுத்தி இந்த குளிர்ச்சியை ஏற்படுத்தப்பட்டது.

காரணம், புரோட்டான்கள் மோதும்போது சூரியனின் வெப்பத்தை விட 100000 மடங்கு வெப்பம் உருவாகும். அதை குளிர்விக்கவே இத்தனை ஜாக்கிரதை. இவ்வளவு டெக்னிகலான விஷயத்தில் ரிப்பேர் வந்தால் சரி செய்ய ஒரு வருடம் ஆகாதா!.

எப்படியோ இந்த ஆராய்ச்சி மூலமாக ஹிக்ஸ் போஸானை விஞ்ஞானிகள் பார்த்துவிட்டார்கள் என்பது தான் இப்போதைய லேட்டஸ்ட் அறிவியல் கிசுகிசு.

இசை எளிமையானது... - இளையராஜா

இசை எளிமையான விஷயம்தான். ஆனால் அதைச் சிக்கலாக்கியது நாமே என்றார் இசைஞானி இளையராஜா.

இளையராஜாவின் பால்நிலாப் பாதை, எனக்கு எதுவோ உனக்கும் அதுவே ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு விழாவில், அனைத்து சிறப்பு விருந்தினர்களும் பேசி முடித்த பிறகு, இசைஞானி வழங்கிய ஏற்புரை:

"ஏற்புரை என்றால்.. இங்கே என்னவெல்லாம் நடக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வது. சின்ன வயதில் வாத்தியார், ‘முட்டாளே... அறிவுகெட்டவனே...' என்றார். அது பிடித்ததோ பிடிக்கவில்லையோ ஏற்றுக்கொண்டேன். வீட்டிலும் அண்ணன் மிகவும் திட்டுவார்கள், ‘கருவாயா, மடையா, அறிவிருக்கா உனக்கு?' என்று. ஏற்றுக்கொண்டேன். இன்று இங்கும் நிறைய விஷயங்கள் நடந்தன. எப்போதும் புகழ் மொழிகள் மனதுக்கு இதமாகத்தான் இருக்கும்.

ஒருமுறை தேவர்களுக்கும் ஒரு அரக்கனுக்கும் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சண்டை பல வருடங்களாக நடந்துகொண்டிருக்கிறது.
அந்த அரக்கனை எப்படி வீழ்த்துவது என்று யாருக்கும் தெரியவில்லை. அதனால் தேவர்கள் கிருஷ்ண பரமாத்மாவிடம் சென்று வழி கேட்கின்றனர். 'அவனை புகழத் துவங்குங்கள். ஏனென்றால் ஒருவனைப் புகழப் புகழ அவனுக்குத் தான் பெரிய ஆள் என்ற நினைப்பு வந்துவிடும். அதுவே அவன் வீழ்ச்சிக்கு வித்திடும்' என்றார் கிருஷ்ண பரமாத்மா.

இதை ஏன் சொல்கிறேனென்றால், புகழ் என்பதைத் தாங்கிக் கொள்வது மிகவும் கஷ்டம். இந்தப் புகழ் என்பது ஒன்றுமில்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

இங்கே பேசிய கவிஞர் முத்துலிங்கம் சாதாரணமான ஆள் இல்லை. ஓலைச் சுவடியில் எழுத்தாணி கொண்டு ‘அ.. ஆ...' எழுதிப் படித்த தலைமுறையின் கடைசி ஆள் அவர். ஒரு பாடலில் எப்போதும் கருத்தைப் பளிச் என்று சொல்ல வேண்டும். அப்படி சிறப்பாக எழுதுவதில், இங்கே பேசிய கவிஞர் மு. மேத்தாவும் சரி, கவிஞர் முத்துலிங்கமும் சரி, இருவருமே வல்லவர்கள். பல சிறப்பான பாடல்களை இருவருமே எழுதியுள்ளனர்.

மொழியை விட இசை உயர்ந்தது என்று சொல்லலாம். உதாரணத்திற்கு ‘கமல்ஹாசன்' என்று இருக்கும் பெயரை நீங்கள் தலைகீழாக படிக்க முடியுமா? அல்லது அப்படித் தலைகீழாகத்தான் அவரை பெயர் சொல்லி அழைக்க முடியுமா? ஆனால் ‘ச.. ரி.. க.. ம' என்ற ஸ்வரத்தை ‘ம.. க.. ரி.. ச..' என்று பாடலாம். இசையால் கடந்த காலத்துக்கும் போகலாம். எதிர்காலத்துக்கும் போகலாம். மேலேயும் போகலாம். கீழேயும் போகலாம். இந்தப் பக்கமும் போகலாம். அந்தப் பக்கமும் போகலாம்.

எந்தப் பக்கமும் போகலாம்.. என்று ஆகிவிட்டது இசை. எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாம் ரெடியாக இருக்கிறது. சமைத்துவைத்து ரெடியாக இருக்கிறது. அதை எடுத்து மேடையில் வைத்து சாப்பிடவேண்டியதுதான் என்று ஆகிவிட்டது இசை. தாய் நமக்கு எப்படி உணவு கொடுத்தாளோ... அப்படிக் கொடுத்த காலங்கள் முடிந்துவிட்டது. ஒரு தாய் தரும் வெறும் தயிர் சாதத்தில் இல்லாத அன்பா ஃபாஸ்ட் ஃபுட்'டில் இருக்கிறது? எவனுக்கோ செய்ததை நீ போய் சாப்பிடுகிறாய். அது உனக்காகப் பண்ணப்பட்டதில்லை.

நாம் எவ்வளவோ படிக்கிறோம். ஆனால் எது நம் மனதில் நிற்கிறது? அதுதான் உண்மையான விஷயம். 'இவர் பாமரனுக்கும் புரியும்வகையில் இசையமைத்தார்' என்று ஏதோ பெரிய மலையை நான் முறித்துவிட்டது போலப் பேசுகின்றனர்.

ஆனால் இசை என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. இசை எளிமையானது... அதை நாம்தான் சிக்கலாக்கிவிட்டோம்!

போன மாதம் எனக்கு லண்டனில் ரெக்கார்டிங் இருந்தது. ஒரு நாலுபேர் பாடுவதற்கு வந்திருந்தனர். அவர்கள் காலையிலேயே வந்துவிட்டனர். அவர்கள் மொத்தம் பாடவேண்டியிருந்த பகுதி ஒரு எட்டு 'பார்' மட்டுமே. அதைப் பாடுவதற்கு அவர்கள் காலையில் இருந்து பயிற்சி எடுத்து எடுத்து, கடைசியில் மைக் முன்னால் வந்து நின்றதும் நான் எழுதியிருந்ததைப் போல அவர்களால் பாட முடியாமல் போயிற்று.

அதன்பின்பு நான் அவர்களை அனுப்பச் சொல்லிவிட்டு அந்த நாலு குரல்களையும் நானே நான்கு ட்ராக்குகளில் பாடிமுடித்துவிட்டு ஐந்து நிமிடங்களில் வெளியே வந்துவிட்டேன். அங்கே எனக்கு 3 உதவியாளர்கள் இருந்தனர். அவர்கள் மூவரும் கம்போஸர்கள். அவர்களுள் ஒரு பெண்மணி பிராட்வே மியூசிக்கில் கம்போஸ் செய்பவர். நான் பாடி முடித்து வெளியே வந்து பார்த்தால், அந்தப் பெண்மணி அழுதுகொண்டிருந்தாள். முகமெல்லாம் சிவந்திருந்தது. "You made it very simple. Music is that much simple. They made it complicated. They wasted the whole day just for 8 Bars" என்றாள் அழுதுகொண்டே!

ஆக, இசை என்பது எளிமையாகத்தான் இருக்கிறது. எளிமையான விஷயத்தைப் புரிந்து கொள்வதில் என்ன கஷ்டம்? 'என் பாடல்களைக் கேளுங்கள்' என்று நான் யாரிடமாவது போய்ச் சொல்ல முடியுமா? அல்லது யாருமேதான் அப்படிச் சொல்லிவிடமுடியுமா? 'என் பாடல்களைக் கேளுங்கள்' என்று நான் எப்போதாவது உங்களிடம் கேன்வாஸ் பண்ணி சொல்லியிருக்கிறேனா? வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.

உங்களுக்குத் தெரியாத பல விஷயங்களை ஒரு 'தொடராக' எழுதுவதாக நான் முடிவு செய்திருக்கிறேன்.

இங்கே எனக்கு என் அம்மாவின் படத்தைப் பரிசாகக் கொடுத்தார்கள். எந்தப் புகைப்படத்தைப் பார்த்து அதை வரைந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். அது நான் எடுத்த புகைப்படம். அதை வரைந்து எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். அது எந்த சூழ்நிலையில் எடுக்கப்பட்டப் புகைப்படம் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

எனக்குச் சிறுவயதிலிருந்தே உடம்பு சரியில்லாமல் போனதே கிடையாது. ஆனால் மிகவும் பிஸியாக இருந்த ஒரு நேரத்தில் எனக்குத் தலைவலி வந்துவிட்டது. முதல்முறையாக அந்தச் சின்னத் தலைவலிக்காக டாக்டர் வந்து வீட்டில் பார்த்துவிட்டுச் சென்றார். 'டாக்டர் வந்தார்' என்றவுடன் அம்மா பதறிவிட்டார்கள். 'ஏம்ப்பா.. உனக்குத் தலைவலியா?' என்று கண்ணீர் விட ஆரம்பித்துவிட்டார்கள். 'ஏம்மா? இந்தச் சின்ன விஷயத்துக்கு அழுகிறீர்கள். எனக்கு ஒன்றுமில்லை' என்று நான் அவர்களைச் சமாதானப்படுத்தி அமர வைத்து ஒரு புகைப்படம் எடுத்தேன். அந்தப் புகைப்படத்தைத்தான் வரைந்து இங்கே எனக்குக் கொடுத்திருக்கிறார்கள்.

அந்தத் தாய் எதற்காக என்னை ஈன்றார்கள் என்று எனக்குத் தெரியாது. சின்ன வயதில் நிறைய ஆசைகள் இருக்கும். படிக்கவேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் படித்து என்ன செய்யப்போகிறேன், என்ன உத்தியோகத்துக்குப் போகப் போகிறேன் என்று தெரியாது. இசைகற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் எங்கே சென்று யாரிடம் கற்றுக்கொள்வது என்று தெரியாது. நான் பிறந்த கிராமத்தில் இசையைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைத்தால் கூட அதைச் சொல்லிக்கொடுப்பதற்கு யாரும் இல்லை. அதனால்தான் 'தாகத்தை உண்டுபண்ணத் தண்ணீர் கொடுக்காதே' என்று நான் சொல்வதுண்டு.

ஒருவேளை என் கிராமத்தில் இசை கற்றுக்கொடுப்பதற்கு யாரேனும் இருந்திருந்தால் நான் இசையமைப்பாளர் ஆகாமலேயே போயிருக்கலாம். இது நன்றாய் இருக்கிறதே.. அது நன்றாய் இருக்கிறதே.. என்று இசையைத் தேடிச் சென்று கேட்டுக் கேட்டுத் தாகத்துடன் வளர்ந்ததுதான் என்னை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

'அம்மா.. நாங்கள் சென்னைக்குப் போகவேண்டும். எங்களுக்குப் பணம் கொடுங்கள்' என்று அம்மாவிடம் கேட்டபோது, வீட்டில் இருந்த ரேடியோவை விற்று 400 ரூபாய் கொடுத்தார்கள். அந்த 400 ரூபாயில் ஒரு 50 ரூபாயை தனக்கென்று வைத்துக்கொண்டு மிச்சத்தை எங்களிடம் கொடுத்திருக்கலாம் அல்லவா அந்தத் தாய்?

ஆனால் அப்படிக் கொடுக்கவில்லை. இதுதானே கல்வி. இதை யார் கற்றுக் கொடுத்துவிட முடியும்? எந்த யுனிவர்சிட்டியால் கற்றுத் தந்துவிடமுடியும்? அந்தத் தாயின் வயிற்றில் பிறந்த எங்களுக்கும், அந்த 400 ரூபாயில் ஒரு 200 ரூபாயை எடுத்து அம்மாவிடம் செலவுக்குக் கொடுத்துவிட்டு வருவோம் என்று தோன்றவில்லை. அந்தப் பண்பு வரவில்லை. அம்மா.. என்பது அம்மாதான். ஒரு வருடம் கோமாவில் இருந்து என் தாய் மரித்துப் போனார்கள். அத்துடன் என் கண்ணீர் எல்லாம் போய்விட்டது!

இதை எல்லாம் நான் உங்களிடம் பகிர்ந்து கொள்வது எதற்கென்றால், பிறந்த நாள் என்று சொல்லி என்னை அழைத்துவிட்டார்கள். இந்த நாளில் என்னைப் பெற்றவளை நினைக்காமல் நான் எப்படி இருக்க முடியும்?

கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் நான் எழுதிய பாமரவெண்பா ஒன்றை அடிக்கடிக் குறிப்பிடுவார்...

'வேதந் தெரிஞ்சிருந்தா வெம்பயனா ஓதுவேன்
ஓதும் தெரியவக ஓதியதத் தேடுவேன்
ஏதுந் தெரியலையே எப்படி நான் தேறுவேன்
போதும் பொலம்பும் பொழப்பும்'

வெண்பா என்பது புலவர்களுக்குப் புலி. அதாவது புலி மாதிரி புலவர்களை அடித்துவிடுமாம் இந்த வெண்பா. நானும் எழுதிப்பார்த்தேன். சரியாக வரவில்லை. அப்படியே தூக்கிப் போட்டுவிட்டேன். பின் மீண்டும் இதில் என்னதான் இருக்கிறது என்று எண்ணி எழுதிப் பார்த்தேன். வந்துவிட்டது. அதுதான் இந்தப் புத்தகமாக வெளிவருகிறது.

இந்த உலகம் கருத்துக்கள் சொல்பவர்களால் நிரம்பி வழிகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்கிறார்கள். எதை எடுத்துக்கொள்வது... எதைத் தள்ளுவது என்று தெரியவில்லை. இதெல்லாம் இல்லாமல் இறைவன் இசையைக் கொடுத்து 'இங்கேயே கிட' என்று என்னைப் பணித்துவிட்டான். அதற்கு நான் இறைவனுக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்?

இங்கே இறைவணக்கம் பாடிய குழந்தை மிகவும் அழகாகப் பாடினாள். இப்படிப்பட்ட இசை இருந்தால் இறைவன் அதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும்.

இசையைத் தவிர வேறு ஒன்றும் எனக்குத் தெரியாது. நாம் பாடவேண்டாம். ஒரு இசையை மனதில் நினைத்தாலே எவ்வளவு இன்பம் பிறக்கிறது? 'தாலாட்ட வருவாளா'வாக இருக்கட்டும், 'தென்றல் வந்து தீண்டும்போது'வாக இருக்கட்டும், 'அம்மா என்றழைக்காத'வாக இருக்கட்டும், 'ஜனனி ஜனனி'யாக இருக்கட்டும்... பாடல்களை நினைத்தவுடனேயே உங்களுக்கு இன்பம் பிறக்கிறதா இல்லையா? அந்தப் பாடல் உங்களுக்கு உள்ளே ஓடுகிறதா இல்லையா? அதுதான் தியானம்.

நீங்கள் கோவிலுக்குச் சென்று இறைவனைக் கும்பிட்டாலும், ஒரு நிமிஷம் உங்கள் மனது உங்களிடத்தில் நிற்கிறதா? நம் மனது நிற்பதில்லை. ஆனால் நான்கு நிமிடம் ஒரு பாடலைக் கேட்டு உங்கள் மனது அப்படியே நிற்கிறது என்றால், அதை என்னவென்று சொல்வது? இது எப்படி நடக்கிறது? நான் நடத்துகிறேனா? 'நான்கு நிமிடங்கள் நீங்கள் வேறெதுவும் நினைக்காமல் பாடலைக் கவனியுங்கள்' என்று நான் உங்களிடம் சொல்கிறேனா? அந்தப் பாடல் உங்களைப் பிடித்து இழுக்கிறது.

இசை என்பது அப்படிப்பட்ட சக்தி வாய்ந்தது. அது சுத்தமாக இருந்தால் அந்த சக்தி இருக்கும். சுத்தமாக இல்லையென்றால் அந்த சக்தி இருக்காது. எது சுத்தம், எது அசுத்தம் என்பது இசையில் கிடையாது. அபஸ்வரம் இல்லையென்றால் இசையே இல்லை. ஆனால் அபஸ்வரம் எந்த இடத்தில் இருக்கவேண்டுமோ அந்த இடத்தில் இருக்கவேண்டும். தூரத்தில் இருக்கவேண்டும்.

ஒரு கோபக்காரர் நம் எதிரில் வந்தால், 'இந்த ஆள் எதற்கு வந்தான்?' என்று நமக்குக் கோபம் வருகிறது. அந்தக் கோபம் அவனிடமிருந்தா நமக்கு வருகிறது? அந்தக் கோபம் அவன் நமக்குக் கொடுப்பதில்லை. தீதும் நன்றும் பிறர் தர வாரா.

இசை என்பது உலகில் உள்ள சகல ஜீவராசிகளின் இதயத் துடிப்பு. இதயம் என்பது ஒரு சீரான கதியில் துடிக்க வேண்டும். ஒருவருக்கு வேகமாக, ஒருவருக்கு மெதுவாக என ஏதாவது ஒரு தாளத்தில்தான் இதயம் துடிக்கிறது.
இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக நடத்துவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் எதிர்பார்த்ததற்கும் மேலாக மிகவும் அமைதியாக, மனதுக்கு நிறைவாக நடந்தது. என் நன்றிகள்," என்றார் இளையராஜா.

யாரிடமும் எதையும் எதிபார்க்கமாட்டேன்

உங்களுக்குக் கிடைக்கக்கூடிய பாக்கியம் எல்லாம், முன்னே நீங்கள் இதுவரை செய்த வினையின் விளைவு, செயலின் விளைவு, என்று தெரிந்து கொண்டு அதனுடைய பயனாக இனிமேல் நல்ல காரியங்களையே செய்வோம் என்று எண்ணிக்கொண்டு நலமுள்ள காரியத்தைச் செய்வேன், நலமுள்ள காரியத்தை நினைப்பேன், அதற்கு என்னுடைய ஆற்றல் முழுவதும், உடல்சக்தி முழுவதும் செயல்படட்டும் என்று எண்ணினீ ர்களானால் அதுதான் Positive thinking, positive side. Positive side என்றால், தமிழில் "ஆக்கத்துறை" என்று பெயர். "Negative" என்றால் "முறித்தல்", "எதிர்த்தல்", என்று பொருள். எதிர்ப்பின்றி "ஆக்கம்" என்றால் மேலும் மேலும் நலன் அளிக்கக் கூடியதுதான் அந்த ஆக்கம். அந்த முறையிலே நீங்கள் எப்படி எண்ணுகின்றீர்களோ அப்படித்தான் நலம் விளையும். ஆகவே, எல்லோரும் எண்ணத்தை நல்லதாக்கிக் கொண்டு வரவேண்டும். "பிறர்க்கு உதவி செய்வேன், ஒவ்வொருவருக்கும் என்னால் இயன்றதைச் செய்து கொண்டே இருப்பேன்", என்று சொல்லும் போது அது ஊற்று மாதிரியாகவே வற்றாது சுரக்கும். அவ்வாறு பிறர்க்கு உதவி செய்யும் போது எங்கிருந்து செய்யப் போகிறீர்கள்? இருப்பிலிருந்து தான் கொடுக்கிறோம், இருப்பதைத் தான் செய்கிறோம். அங்கே இல்லையானால் செய்ய முடியாதல்லவா? ஆகையினால் செய்யச் செய்ய வந்து கொண்டேதான் இருக்கும்; நல்ல முறையிலே அது வளர்ந்து கொண்டே தான் இருக்கும். எப்பொழுதும் அந்த மெய்யுணர்வு வந்துவிட்டது என்றால், மெய்யுணர்வினை பயன்படுத்துவோம் என்றால் சேவையிலே நிறைவு வரும்; வாழ்விலும் ஒளி பெருகும்.

மனிதன் நல்ல எண்ணத்தோடு, முயற்சியோடு, ஒரு அடி எடுத்து வைத்தால் இறைவன் பத்து அடி எடுத்து வைப்பான் என்று சொல்லப்பட்டுள்ளது. இதன் பொருள் என்ன என்றால் நீங்கள் உங்களுடைய மனம் நாடினால் போதும். Fraction demands and Totality supplies. ஏனென்றால் அங்கு தான் இருப்பு இருக்கிறது. நான் யாரிடமும் எதையும் எதிபார்க்கமாட்டேன் என்ற நிலைக்கு வந்தோமானால் என்ன ஆகும்? நல்ல எண்ணம், மனத் தூய்மை, கொண்ட ஒருவர் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு எல்லாம் வல்ல இறைவன் என்னைக் கவனித்துக் கொள்வான் என்றிருந்தால் அவரது தேவையை நிறைவேற்ற உதவிகள் எல்லாத் திசையிலிருந்தும் வந்து சேரும்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

மனிதனின் முடிவுகள்

கதை மிகவும் எளிமையானது. ஒரு கிராமத்தில் வயதான ஏழை ஒருவன் இருந்தான். ஆனால் அரசர்களே பொறாமை கொள்ளுமளவு அழகான வெண் குதிரை ஒன்று அவனிடம் இருந்தது. யாரும் அப்படிப்பட்ட அழகான, வலிமை பொருந்திய, அம்சமான. கம்பீரமான குதிரையை அதற்குமுன் பார்த்திருக்க முடியாது. அரசன் அந்த குதிரையை என்ன விலை கொடுத்தாவது வாங்க தயாராக இருந்தான். ஆனால் அந்த மனிதன், “இந்த குதிரை என்னை பொருத்தவரை வெறும் குதிரையல்ல, என் குடும்பத்தில் ஒருவன். நான் எப்படி மனிதர்களை விற்கமுடியும்? அவன் ஒரு நண்பன். அவன் ஒரு உடமையல்ல, உன்னால் நண்பனை விற்க முடியுமா? அது சாத்தியமில்லை.” என்று கூறி விட்டான். அவன் மிகவும் ஏழை, எல்லா வழியிலும் சபலம் வர வாய்ப்பிருந்தது. ஆனால் அவன் அந்த குதிரையை விற்கவில்லை.

ஒருநாள் காலை லாயத்தில் குதிரை இல்லை என்பதை அவன் கண்டான். முழு கிராமமும் ஒன்று திரண்டு, “நீ ஒரு முட்டாள் கிழவன். இப்படி நடக்குமென்று – என்றாவது ஒருநாள் யாராவது குதிரையை திருடி விடுவார்கள் என – எங்களுக்கு முன்பே தெரியும். நீயோ மிகவும் ஏழை – இப்படிப் பட்ட அரிதான ஒன்றை உன்னால் எப்படி பாதுகாக்க முடியும்?இதற்கு பதிலாக அதை நீ முன்பே விற்றிருக்கலாம். நீ என்ன விலை கேட்கிறாயோ அந்த விலைக்கு விற்றிருக்கலாம். நினைத்து பார்க்க முடியாத விலை கிடைத்திருக்கும். இப்போது குதிரை போய்விட்டது. உனக்கு இது ஒரு கெட்டநேரம், இது ஒரு சாபம்” என்றனர்.

அந்த கிழவன், “அதிகம் பேச வேண்டாம் – குதிரை லாயத்தில் இல்லை என்று மட்டும் கூறுங்கள். இதுதான் உண்மை மற்ற அனைத்தும் அனுமானங்களே. இது அதிர்ஷ்டமா இல்லையா என்பது யாருக்கு தெரியும்? எப்படி உங்களால் முடிவு செய்ய முடியும்?” என்றான்.

மக்கள், “எங்களை முட்டாளாக்காதே. நாங்கள் சிறந்த தத்துவவாதிகளல்ல, ஆனால் இதற்குத் தத்துவம் எதுவும் தேவையில்லை. அரிதான ஒன்று காணாமல் போய்விட்டது. அது கெட்டநேரம் என்பது மிக சாதாரண உண்மை.” என்றனர்.

அந்த கிழவன், “லாயம் காலியாக உள்ளது, குதிரை போய்விட்டது என்பது உண்மை என நானும் ஒத்துக்கொள்கிறேன். மற்றபடி எதுவும் எனக்குத் தெரியாது – அது கெட்டநேரமா நல்லநேரமா – ஏனெனில் இது நிகழ்வின் ஒரு பகுதியே. இதை தொடர்ந்து என்ன நடக்குமென்பது யாருக்கு தெரியும்?” என்றான்.

மக்கள் சிரித்தனர். கிழவனுக்கு புத்தி பிசகிவிட்டதென அவர்கள் நினைத்தனர். அவன் எப்போதும் கொஞ்சம் கிறுக்கனாகவே இருப்பான். அது எல்லோருக்கும் தெரியும். இல்லாவிடில் இந்த குதிரையை நல்ல விலைக்கு விற்று பணக்காரனாகி இருக்கலாம். ஆனால் அவன் விறகுவெட்டியாகவே வாழ்ந்துவந்தான். அவனுக்கும் மிக வயதாகிவிட்டது. இருப்பினும் காட்டுக்கு சென்று மரங்களை வெட்டி கொண்டுவந்து விற்றுக் கொண்டிருந்தான். அவன் சம்பாதிப்பது கைக்கும் வாய்க்குமே போதவில்லை. அவன் வறுமையிலும் வேதனையிலும் வாடிக் கொண்டிருந்தான். இப்போது அவன் ஒரு கிறுக்கன் என்பது மிகவும் ஊர்ஜிதமாகிவிட்டது.

பதினைந்து நாட்களுக்கு பிறகு, திடீரென ஒரு இரவில் அந்த குதிரை திரும்பி வந்துவிட்டது. இது திருடப்பட வில்லை. அது காட்டுக்கு தப்பி ஓடிவிட்டது. இப்போது தான் மட்டுமின்றி அது தன்னுடன் கூட தன் இனத்தைச் சேர்ந்த ஒரு டஜன் குதிரைகளையும் கூட்டிக் கொண்டு திரும்பி வந்துள்ளது. திரும்பவும் கிராமத்து மக்கள் திரண்டு வந்து,“அந்த கிழவனிடம், பெரியவரே, நீங்கள் சொன்னது சரிதான், நாங்கள் கூறியது தவறாகிவிட்டது. அது கெட்டநேரமல்ல. அது நல்லநேரம்தான் என்பது நிருபணமாகிவிட்டது. நாங்கள் வலியுறுத்தி கூறியதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள்.” என்றனர்.

அந்த கிழவன், “மறுபடியும் நீங்கள் அதிகமாக யோசிக்கிறீர்கள். அந்த குதிரை திரும்ப வந்துவிட்டது என்றும் அதனுடன் இன்னும் பனிரெண்டு குதிரைகள் வந்துள்ளன என்று மட்டும் கூறுங்கள்.- ஆனால் தீர்மானிக்காதீர்கள். இது ஆசீர்வாதமா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. இது ஒரு நிகழ்வின் ஒரு பகுதியே. முழு கதையும் தெரியாமல் எப்படி உங்களால் முடிவு செய்ய முடிகிறது? ஒரே ஒரு பக்கத்தை படித்துவிட்டு முழு புத்தகத்தையும் எப்படி விமர்சனம் செய்ய முடியும்? ஒரு பக்கத்தில் ஒரே ஒரு வரியை படித்துவிட்டு எப்படி அந்த பக்கத்தை பற்றி பேச முடியும்? ஒரே ஒரு எழுத்தை மட்டும் பார்த்துவிட்டு எப்படி அந்த வரியை பற்றி கூற முடியும்? நமது கையில் அந்த எழுத்து அளவு கூட இல்லை, வாழ்வு மிகப் பெரியது – எழுத்தின் பகுதிதான் இருக்கிறது. நீங்கள் முழு வாழ்வையும் பற்றி முடிவெடுக்கிறீர்கள். இது ஒரு ஆசீர்வாதம் எனக் கூற வேண்டாம், யாருக்கும் தெரியாது. முடிவெடுக்காமல் இருப்பதே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதனால் என்னை தொந்தரவு செய்யாதீர்கள்.” என்றார்.

இந்த முறை மக்கள் எதுவும் கூறவில்லை. அந்த பெரியவர் சொல்வது சரியாக இருக்கலாம். அதனால் அவர்கள் மெளனமாக இருந்துவிட்டனர், ஆனால் உள்ளே இவன் கூறுவது தவறு என நினைத்துக் கொண்டனர். பனிரெண்டு குதிரைகள் அந்த குதிரையுடன் வந்திருக்கின்றன. சிறிதளவு பயிற்சி கொடுத்தால் போதும் அவைகளை விற்று ஏகப்பட்ட பணம் சம்பாதிக்கலாம் என நினைத்தனர்.

அந்த பெரியவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவன் இளஞன். இவன் அந்த குதிரைகளுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தான். ஒரு வாரத்திற்க்குள் ஒரு குதிரை மேலிருந்து விழுந்து அவனது கால் எலும்பு முறிந்துவிட்டது. மக்கள் திரும்பவும் கூடி –மக்கள் எப்போதும் எங்கும் ஒரே மாதிரிதான், உங்களைப் போலவே தான் – தீர்மானித்தனர். அவர்களின் முடிவு மிக எளிதாக வந்துவிடக் கூடியது. அவர்கள், “நீங்கள் கூறியது சரிதான். மறுபடியும் நீங்கள் சொல்வதுதான் சரி என நிருபணமாகியிருக்கிறது. இது ஒரு வரப்பிரசாதமல்ல, இது ஒரு கெட்டகாலம்தான். உனது ஒரே மகன் தனது கால்களை இழந்துவிட்டான். உன்னுடைய வயதான காலத்தில் அவன்தான் உனக்கு ஒரே ஆதரவு. இப்போது நீ மிகவும் கஷ்டப் படப் போகிறாய்.” என்றனர்.

அந்த வயதானவன், “நீங்கள் முடிவெடுப்பதற்க்கு மிகவும் ஆவலாக உள்ளீர்கள். வெகுதூரம் நினைப்பை ஓடவிட வேண்டாம். எனது மகன் தனது கால்களை ஒடித்துக் கொண்டான். என மட்டும் கூறுங்கள். இது ஒரு சாபமா வரமா என யாருக்குத் தெரியும்?– யாருக்கும் தெரியாது. மறுபடியும் இது நிகழ்வின் ஒரு பகுதியே, முழுமையாக கொடுக்கப்படவில்லை. வாழ்க்கை பகுதிகளாகத்தான் நிகழ்கிறது, முடிவு முழுமையை ஒட்டித்தான் எடுக்க முடியும்.” என்றான்.

இது நிகழ்ந்து சில வாரங்களுக்குப் பின் இந்த நாடு பக்கத்து நாட்டுடன் சண்டையிட சென்றது. நகரத்தின் அனைத்து வாலிபர்களும் படைக்கு வலுக்கட்டையமாக அழைத்து செல்லப்பட்டனர். அந்த பெரியவரின் மகன் மட்டும் விட்டுவைக்கப் பட்டான். ஏனெனில் அவன் முடமானவன். மக்கள் எல்லோரும் அழுது அரற்றினர். ஏனெனில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கூட்டிச் செல்லப் பட்டனர். அவர்கள் திரும்பி வருவதற்க்கான சாத்தியக் கூறே இல்லை, ஏனெனில் அவர்கள் சண்டையிடப் போகும் நாடு மிகப் பெரியது. இந்த சண்டை தோல்வியுறப் போகும் சண்டைதான். அவர்கள் திரும்பி வரப் போவது இல்லை. அந்த நகரம் முழுவதும் அழுது கொண்டும், அரற்றிக் கொண்டும் விம்மிக் கொண்டும் இருந்தது.  அவர்கள் அந்த வயதானவனிடம் வந்து, “நீங்கள் சொன்னது சரியே பெரியவரே!கடவுளுக்குத்தான் தெரியும்! நீங்கள் கூறியது மிகவும் சரிதான் – இது வரம்தான் என்பது நிருபணமாகிவிட்டது. உனது மகன் முடமாகி இருக்கலாம், ஆயினும் அவன் உன்னுடன் இருப்பான். எங்களது மகன்கள் ஒரேயடியாக போகப் போகிறார்கள். குறைந்தபட்சம் இவன் உயிருடன் உன்னோடு இருப்பான், மெது மெதுவாக நடக்கக் கூட ஆரம்பிக்கலாம், சிறிதளவு நொண்டி நடப்பானாக இருக்கலாம், ஆனாலும் அவன் சரியாகி விடுவான்.” என்றனர்.

அந்த வயதானவன், “உங்களுடன் பேசவே முடியாது. நீங்கள் மேன்மேலும் கற்பனை செய்துகொண்டே போகிறீர்கள். – முடிவெடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். யாருக்கும் தெரியாது உங்களது மகன்கள் வலுக்கட்டாயமாக படைக்கு போர்முனைக்கு இழுத்துச் செல்லப் படுகிறார்கள்., என்னுடைய மகன் இழுத்துச் செல்ல பட வில்லை என்பதை மட்டும் கூறுங்கள். இது வரமா சாபமா என்பது யாருக்கும் தெரியாது. யாராலும் தெரிந்து கொள்ளவும் முடியாது. கடவுளே அறிவார்.” என்றார்.

நாம் கடவுளே அறிவார் எனக் கூறுவதன் அர்த்தம் முழுமைக்கு மட்டுமே தெரியும் என்பதுதான். முடிவெடுக்காதே, முடிவெடுத்தால், தீர்மானித்தால், ஒருபோதும் உன்னால் முழுமையுடன் ஒருங்கிணைய முடியாது. நிகழ்வின் பகுதிகளால் கவரப்பட்டு விடுவீர்கள். சிறிய விஷயங்களின் மூலம் முடிவெடுக்கவும் தீர்மானிக்கவும் ஆரம்பித்து விடுவீர்கள்.

இயற்கை என்றும் இனிமை




விவேகானந்தரின் பொன்மொழிகள்

1.சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும்.

2.இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி.

3.யார் ஒருவன் தனக்குள் கௌரவமும் மரியாதையும் போய்விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ அத்தகையவன் அவமானத்தை தான் அடைகிறான்.

4.மனிதனாக வாழ முயற்சி செய். தோல்விகளை ஒரு போதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை கைக்கொள்ள முயற்சி செய்

5.ஒருவன் நன்மையிலிருந்து அறிவைப் பெறுவது போலவே, தீமையிலிருந்து அறிவைப் பெறுகிறான்

6.பிறருடைய உத்தரவுக்குப் பயந்து பயந்து நடப்பவர்கள் நாளடைவில் சிந்திக்கும் சக்தியை இழந்து விடுகிறார்கள். உங்களுக்குள் இருப்பதை உங்கள் உழைப்பாலே வெளிக்கொணர முயலுங்கள். பிறரைப் பார்த்து நடிக்காதீர்கள். 

7.பிறரிடம் காணப்படும் நல்ல பண்புகளைப் கற்றுக் கொள்ளுங்கள்.
எந்த ஒரு காரியத்தை தொடங்கும் பொழுதும், தவிர்க்க முடியாத தவறுகள் சில ஏற்படவே செய்யும்.

8.விட்டுக் கொடுத்து, எவன் பிறருடைய கருத்துகளை ஏற்க ஆயத்தமாய் இருக்கிறானோ இறுதியில் அவனுடைய கருத்துகள் வெற்றி அடைகின்றன.

9.ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம்தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த முடியும்

10.மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்

11.எல்லாப் பேய்களும் நம்முடைய மனத்திலே தான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கியிருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் அது சொர்க்கமாக மாறிவிடும்.

12.மனிதன் இயற்கையை எதிர்த்துப் பொராட ஆரம்பிக்கிறான். அதில் அவன் பல தவறுகளைச் செய்கிறான். அதனால் துன்பப்படுகிறான்.

13.காயம்படாதவன் தான் தழும்மைக் கண்டு நகைப்பான்.

14.அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம். அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்.

15.துருப்பிடித்தத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது