முதல் ஐந்து படிகள் பஞ்சேந்திரியங்கள் என்று சொல்லப்படுகின்ற மெய் ,வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றை குறிப்பிடுகின்றன.
அடுத்த எட்டு படிகள் அதாவது ஆறாவது படி முதல் பதிமூன்றாவது படி வரை அஷ்டராகங்கள் என்று சொல்லப்படுகின்ற காமம் ,குரோதம், லோபம், மோகம், மதம் ,மாச்சரியம், அகந்தை, பொறாமை ஆகிய எட்டையும் குறிப்பிடுகின்றன.
அடுத்த மூன்று படிகள் அதாவது பதிநான்கு படி முதல் பதினாறாவது படி வரை முக்குணங்கள் என்று சொல்லப்படுகின்ற சத்துவ குணம், ரஜோ குணம் ,தமோ குணம் ஆகிய மூன்றையும் குறிப்பிடுகின்றன.
அடுத்த இரண்டு படிகள் அதாவது பதினேழாவது படி மற்றும் பதினெட்டாவது படி ஆகியவை கல்வி (ஞானம்) ,அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றை குறிப்பிடுகின்றன.
மேலே சொல்லப்பட்டவைகளை ஒருவர் உணர்ந்து புண்ணிய பாவங்களை பிரித்து அறிந்து நடப்பவரால் மட்டுமே பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுதலை பெற்று முக்தி அடைய முடியும் என்பதை இந்த 18 படிகள் தத்துவ ரீதியாக விளக்குவதாக சிலர் கூறுகின்றனர்.
தத்துவம்
18 படிகளில் ஒவ்வொரு படியாக நாம் அடி எடுத்து வைக்கும் பொழுது பிறப்பு இறப்புக்கு காரணமான பிறவிப் பெருங்கடலை கடக்க விடாமல் செய்து முக்தி அடையாமல் தடுத்து வாழ்க்கையோடு ஒட்டி நம் கூடவே இருந்து கர்மவினைகளை உண்டாக்கும் பழக்கங்கள் நம்மை விட்டு விலகுவதாக சொல்லப்படுகிறது .
அதாவது 18 படிகளில் ஒவ்வொரு படியாக ஐயப்ப பக்தர் அடி எடுத்து வைக்கும் பொழுது கர்மவினைகளை உண்டாக்கும் ஒவ்வொரு பழக்கமும் நம்மை விட்டு விலகுவதாக நம்பப்படுகிறது.
1ம் படி-காமம் 11 ம் படி----இல்லறப்பற்று
2ம் படி----குரோதம் 12 ம் படி----புத்திரபாசம்
3 ம் படி---லோபம் 13 ம் படி----பணத்தாசை
4 ம் படி---மோகம் 14 ம் படி---பிறவி வினை
5 ம் படி---மதம் 15 ம் படி----செயல்வினை
6 ம் படி---மாச்சர்யம் 16 ம் படி----பழக்கவினை
7 ம் படி---வீண்பெருமை 17 ம் படி----மனம்
8 ம் படி---அலங்காரம் 18 ம் படி-----புத்தி
9 ம் படி---பிறரை இழிவுபடுத்துதல்
10 ம் படி---பொறாமை
18 ம் படிக்கு மேலும் பலப்பல விளக்கங்கள் சொல்லப்படுகிறது
அதைப்பற்றியும் நாம் பார்ப்போம்:--
தமிழ் இலக்கியங்கள்
தமிழ் இலக்கியங்களில் எண் 18 ஒரு முக்கிய எண்ணாகக் கருதப்படுகிறது
பிங்கள நிகண்டு 18 தேவர்களையும் ,18 தர்ம சாஸ்திரங்களையும் ,18 யுகங்களையும், 18 குற்றங்களையும் பற்றி பேசுகின்றது.
மூலகுரு சுருக்கமும் ,அகத்தியர் பரிபாஷையும் 18 மொழிகளைக் குறிக்கின்றன.
அகஸ்தியர் கௌமுதி 18 நோய்களைக் குறிப்பிடுகின்றது.
அகஸ்தியர் வைத்திய சூரணம் 18 ஜாதிகளைப் பற்றி இயம்புகிறது.
சுப்பிரமணியர் ஞானம் 18 யுகங்களை விவரிக்கின்றது.
தாண்டகம் 18 வகையான இசைக்கருவிகளைப் பற்றி பேசுகிறது.
தமிழில் 18 மெய்யெழுத்துக்கள் இருக்கிறது.
தமிழ் ஆதாரங்கள் பெரும்பாலும் பதிணென் சித்தர்கள் என்ற பதினெட்டுச் சித்தர் வரிசையைக் குறிப்பிடுகின்றன
சித்த மருத்துவம்
சித்த மருத்துவத்தில் 18 என்ற எணணுக்கு ஒரு சிறப்பான இடம் கொடுக்கப்பட்டு ஒரு முக்கியமான எண்ணாகக் கருதப்படு வருகிறது
மச்சமுனி என்ற சித்தர் 18 மூலிகைகளைப் பற்றி தன்னுடைய மச்சமுனி - மெய்ஞ்ஞானப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்
சித்த மருத்துவத்தில் தேகம் என்பது கீழ்க்கண்ட 18 உறுப்புக்களைக் கொண்டதாகும் என்று சொல்லப்படுகிறது :
பஞ்ச பூதங்கள் 5 :- நிலம் ,நீர் , நெருப்பு, காற்று, விண்
ஞானேந்திரியங்கள 5: - மெய், வாய் ,கண், மூக்கு, செவி
பஞ்ச தன் மாத்திரைகள் 5: - அழுத்தம் ,ஒலி, ஒளி, சுவை ,மணம்
இவற்றோடு 3: -மனம் ,புத்தி, அகங்காரம் என்று மொத்தம் 18
உலக அளவில்
பதினெட்டுச் சூனியங்களின் கோட்பாட்டின் நிலைகளை அசங்கரும் ,திக் நாகரும் வரிசைப் படுத்தி இருப்பதாக சசிபூஷண்தாஸ் குப்தா தன்னுடைய நுhலில் குறிப்பிட்டிருக்கிறார்.
சீன புராண இலக்கியங்களின் படி 18 லோஉறன்கள் (அருகதர்கள்) இருப்பதாகக் கூறப்படுகிறது.
ராஸேஸ்வர தரிசனம் என்ற புத்தகத்தில் பாதரசத்தை 18 முறைகளில் விரிவு படுத்தும் செய்தி பேசப்படுகிறது.
ஷ்யாம் சுந்தர் கோஸ்வாமி என்பவர் சாண்டில்ய உபநிஷத்திலிருந்து ஒரு மேற்கோள் காட்டுகிறார் . அதன்படி நம் தேகத்தில் 18 இடங்களில் உணர்வுக் கட்டுப்பாட்டு மையங்கள் இருக்கின்றன.
இந்தியா
தேவாசுர யுத்தம் 18 ஆண்டுகள் நடந்தது.
ராம ராவண யுத்தம் 18 மாதங்கள் நடந்தது.
பாண்டவ கொளரவ யுத்தம் 18 நாட்கள் நடந்தது.
குருஷேத்திரப் போர் 18 நாட்கள் நடைபெற்றது அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்டப் பட்டது என்பதன் அடிப்படையில் 18 நாட்கள் நடைபெற்ற போரை குறிப்பிடும் படியாக அதன் அடையாளமாக 18 படிகள் அமைக்கப் பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர்.
பகவத் கீதையில் உள்ள 18 அத்தியாயங்கள் 18 படிகளைக் குறிப்பிடுவதாக சிலர் கூறுகின்றனர்.
18 ஆகமங்கள் உள்ளது.
சோதிடம்
18 என்ற எண்ணில் உள்ள 1 என்ற எண்ணையும் 8 என்ற எண்ணையும் கூட்டினால் 9 என்ற எண் வரும் சோதிடத்தில் 9 என்ற எண் கேதுவைக் குறிக்கிறது .
அது ஞானக்காரகன் ,மோட்சக்காரகன் என்று அழைக்கப்படுகிறது கேது ஞானத்தைக் குறிக்கும் ஒரு கோளாகும்.
எனவே 18 என்ற எண்ணும் உயர்ந்த ஞானத்தை உணர்த்துவதாகக் கருதப்படுகிறது.
நவக்கிரகம்
18 என்ற எண்ணில் உள்ள 1 என்ற எண்ணையும் 8 என்ற எண்ணையும் கூட்டினால் 9 என்ற எண் வரும் சோதிடத்தில் 9 என்ற எண் நவக்கிரகங்களைக் குறிக்கிறது
நவக்கிரகங்கள் எனப்படுபவை சூரியன் ,சந்திரன் ,செவ்வாய், புதன் ,குரு, சுக்ரன், சனி, ராகு ,கேது ஆகியவை ஆகும்
நவக்கிரகங்கள் தான் மனிதனுடைய வாழக்கையில் நடைபெறக்கூடிய இன்பம், துன்பம், அமைதி ,பேரின்பம் என்ற பல்வேறு நிலைகளுக்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது நவக்கிரகங்கள் தான் ஒரு மனிதனை ஆட்டி வைக்கிறது என்று சோதிடம் கூறுகிறது.
முடிவான கருத்து
உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு இடங்களில் 18 என்ற எண்ணிற்கு பல்வேறு சிறப்புகள் சொல்லப்பட்டாலும் நம்முடைய அறிவு வளர்ச்சிக்கும் ஆன்ம நிலை விழிப்பிற்கும் ஏற்ற வகையில் ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் 18 படிகள் எதைக் குறிக்கிறது என்பதை அவர்கள் தான் முடிவெடுத்துக் கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment