Friday, January 15, 2016

மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?

நண்பர்களே...! இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது? என்பதைப் பற்றி.....கடந்த பதிவுகளில் (1) மனித வாழ்க்கையில் கஷ்டமான விஷயம் என்ன? என்பதைப் பார்த்தோம். அதைப் படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும். அடுத்து (2) மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன? என்பதையும் பார்த்தோம். இதைப் படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்.

நண்பர்களே..... ஏன் மேலே கூறிய படி முந்தைய பதிவுகளைப் படிக்கச் சொல்கிறேனென்றால், அந்த இரண்டு பதிவுகளுக்கும் இன்று நாம் அலசப் போகும் பதிவிற்கும் சம்பந்தமுள்ளது. மேலே கூறிய (1) மனித வாழ்க்கையில் கஷ்டமான விஷயம் என்ன? என்பதில் மனிதன் ஒரு வேளை மாறா விட்டால் என்ன நடக்கும்..? என்பதை யோசித்ததின் விளைவே என்னுடைய அடுத்தப் பதிவு (2) மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன? என்று எழுதினேன். அதே போலத் தான் இன்றைய பதிவும். மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை என்ன? என்பதைப் பற்றி அலசுவோமா?

நண்பர்களே.. பல பதிவுகள் விடுகதை மாதிரி உள்ளது என்று நினைப்பீர்கள். வாழ்க்கையே ஒரு விடுகதை தானே! இவையாவும் என் சொந்த கருத்துக்கள். நான் படித்த புத்தகங்கள் மூலமும் என் வாழ்வில் பழகிய /சந்தித்த நண்பர்களிடமிருந்தும் அறிந்து கொண்ட விஷயங்கள். தவறு இருந்தால் அல்லது உங்களின் கருத்துக்கள் வேறு மாதிரி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். யாருக்கும் எதற்கும் பயப்படாத நிறையப் பேர் இதற்கு மட்டும் பயந்து (அல்லது மதித்து) நிம்மதியாக வாழ்கிறார்கள். அது என்ன தான் என்று பார்ப்போம். அதற்கு முன் நம்ம மனிதர்கள் என்ன சொல்கிறார்கள்...? :

1. "என்னை ஏமாத்திட்டு அவங்க மட்டும் நல்லா இருக்க முடியுமா?"
2. எவ்வளவோ உதவி செய்தேன். நன்றி கெட்ட மனுசங்க. நல்லா இருக்க மாட்டாங்க..."
3. "சொன்ன பேச்சை கேட்க மாட்டான். கஷ்டப்பட்டா தான் தெரியும்."
4. "பொறுப்பே இல்லே. எங்கே அவன் உருப்படப் போறான்?"
5. "எல்லாமே தனக்குத் தான்னு வச்சிக்கிறான். போகும் போது என்னத்த கொண்டு போகப் போறானோ?"
6. "இப்ப கையிலே நிறையப் பணம் வருதில்லே... அதான் இந்த ஆட்டம்."
7. "தப்பு செஞ்சே இல்ல நீ. இப்போ நல்லா அனுபவி."
8. "வேணும்... வேணும் ... அவனுக்கு இன்னும் நல்லா வேணும்.
9. "எனக்குன்னு ஒரு நேரம் வரும். அப்ப பாரு அவனுக்கு ஆப்பு வைக்கிறேன்.
10. "இவனெல்லாம் திருந்தவே மாட்டாங்க..... சாவட்டும்... "
11, 12, 13, 14, 15..... இது ஒரு மெகா தொடர் நண்பர்களே.....

இப்படித்தான் மனிதர்கள் கோபத்தால், பொறாமையால், ஏக்கத்தால், விரக்தியால், (இன்னும் பல....) மற்றவர்களுக்குச் சொல்கிறார்கள். - அல்லது - இதே போல் மற்றவர்களின் சொல்லுக்கு ஆட்படுகிறார்கள். இவர்கள் இந்த மாதிரி சொல்வதினால் ஏதாவது நடக்கப் போகிறதா? இல்லை. சிறிது நாட்களுக்குப் பின் மற்றவர்களைப் பற்றி உண்மை தெரிந்த பிறகு, வருத்தப் படுகிறார்கள் அல்லது புலம்பவும் செய்கிறார்கள். கவிஞர் கண்ணதாசன் அன்றே சொல்லி விட்டார். "வாழ்ந்தாலும் ஏசும்... தாழ்ந்தாலும் ஏசும்... வையகம் இது தானடா...." என்று...! நமது திருவள்ளுவர்

சினத்தைப் பற்றி... குறள் எண் 305-இல்
தன்னைத் தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம். பொருள் : ஒருவன் தன்னைக் காக்க விரும்பினால் சினம் எழாமல் காத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அந்தச் சினமே அவனை முடிவில் கொன்று விடும்.

பொறாமையைப் பற்றி... குறள் எண் 165-இல்
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது. பொருள் : பொறாமை உடையவரைக் கெடுப்பதற்கு எந்தப் பகையும் வேண்டாம். அதுவே போதும். பகைவர்கள் கேடு செய்யத் தவறினாலும், அந்தப் பொறாமையே கேட்டைத் தந்து விடும்.

சிறந்த அறிவைப் பற்றி... குறள் எண் 203-இல்
அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல். பொருள் : நமக்குத் தீமையைச் செய்தவருக்கும், நாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

மற்றவர்களைக் கேவலமாகப் பேசுபவனைப் பற்றி... குறள் எண் 186-இல்
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன் தெரிந்து கூறப் படும். பொருள் : பிறரைப் பின்னால் பழித்துப் பேசுபவன், அவனுடைய பழிச் செயல்களுள்ளும் இழிவானதைத் தெரிந்தெடுத்துக் கூறிப் பிறரால் மிகவும் பழிக்கப்படுவான்.

எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய குறள் எண் 314-இல்
இன்னாசெய் தாரை ஒருத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல். பொருள் : துன்பம் செய்தவரைத் தண்டித்தல், அவர் தம் செய்கையை நினைத்து வெட்கப்படும்படியாக அவருக்கு நன்மைகளைச் செய்து விடுதல் ஆகும்.

எவ்வளவு அழகாகச் சொல்லி விட்டார் திருவள்ளுவர். நான் என்னத்த சொல்ல? பிறரிடம் நீங்கள் எதை வேண்டுகிறீர்களோ அதையே முதலில் நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் அதைக் கற்றுக் கொடுங்கள். குடும்பங்களில் பிரிவினை வருவது சகஜம் தான். நாம் ஜெயித்தோமா இல்லை அவர்கள் தோற்றார்களா என்பது முக்கியமில்லை. அவர்களும் சந்தோஷமாக வாழ்கிறார்களா? என்று பாருங்கள். முடிந்தளவு உதவி செய்யுங்கள். உங்களுக்குத் தீமை செய்தவர்களுக்கும் நன்மையே செய்யுங்கள். அப்படியும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா? பரவாயில்லை. என்றைக்காவது ஒரு நாள் அவர்களுக்கு உண்மை தெரியும். அப்போது அவர்கள் கண்ணில் சின்னதாகக் கண்ணீர் வருமே... அந்தக் கண்ணீர் தாங்க மனச்சாட்சி....

இல்லை என்றால் நாம் யாருக்காவது தீமை செய்திருப்போம். அவர்கள் அதை மறந்து ஒரு நாள் நம்மிடம் வந்து உதவும் போதோ அல்லது பேசும் போதோ, நம் மனதில் ஒரு சின்ன வலி வருமே.... அதாங்க மனச்சாட்சி....ஆம் நண்பர்களே! என்னைப் பொறுத்தவரை.....

மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை அவனின் மனச்சாட்சி தான்
(அந்த மனச்சாட்சி அவன் திருந்தவும், மற்றவர்களைத் திருத்தவும் உதவட்டும்)

இந்த தண்டனை ஏன் கிடைக்கிறது 

No comments:

Post a Comment