Friday, January 15, 2016

மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

நண்பர்களே...! இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ? என்பதைப் பற்றி... இவையாவும் என் சொந்த கருத்துக்கள். நான் படித்த புத்தகங்கள் மூலமும் என் வாழ்வில் பழகிய /சந்தித்த நண்பர்களிடம் இருந்தும் அறிந்து கொண்ட விசயங்கள். தவறு இருந்தால் அல்லது உங்களின் கருத்துக்கள் வேறு மாதிரி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்... இனி...

மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ? நண்பர்களின் கருத்தைப் பார்ப்போம்...

01 : நிறைய உதவி செய்தேன்... இப்ப..? நன்றி கெட்ட மனுசங்க தான்.
02 : அடுத்தவனை ஏமாற்றி விட்டு வாழ்கிறானே... அவன் தான்.
03 : எல்லாமே தனக்குத் தான் என்று நினைக்கிற சுயநலக்காரன் தான்.
04 : கர்வம் அல்லது அகங்காரம் உள்ள மனுசங்க தான்.
05 : பொறாமை குணம், பேராசை உள்ள மனுசங்க தான்.
06 : பொய்யைத் தவிர எதுவுமே பேசுவதில்லை. அவங்க தான்.
07 : விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாதவங்க தான்.
08 : தவறு செய்ததை மன்னிக்கத் தெரியாத கோபக்கார மனுசங்க தான்.
09 : எல்லாவற்றிக்கும் சந்தேகப்படும் மனுசங்க தான்.
10 : நம்ப வைத்து கழுத்தரிக்கும் துரோகிங்க தான்.
11 : பணத்தால் மாறுகிற, பணம் தான் எல்லாமே என்று வாழும் மனுசங்க.
12 : எனக்கு ஜால்ரா அடிப்பவனைத் தவிர, என் கருத்தை எவன் ஏற்றுக்
       கொள்ளவில்லையோ அவன் தான்.
13 : பாராட்டோ, வெற்றியோ அல்லது ஒரு அங்கீகாரம் வந்தவுடனே தலை
       கால் புரியாமே ஆடுகின்ற மனுசங்க தான்.
14 : வாழ்க்கையில் பல தவறுகள் செய்து கொண்டு, தினமும்
       மணிக்கணக்கில் தன்னைப் பற்றிப் பிரார்த்தனை செய்கின்ற
       "பசுத்தோல் போர்த்திய புலி" வேசம் போடும் நயவஞ்சகக்காரன் தான்.
15 : எல்லாக் கெட்ட பழக்கங்களையும் (புகை, பாக்கு, மது, மாது, etc,) செய்து
       கொண்டு, தன்னையும், தன் குடும்பத்தையும் கெடுக்கிறது இல்லாம,
       அடுத்தவனையும் கெடுக்கிறானே... அவன் தான்.
16, 17, 18, 19, 20, ................ இது ஒரு மெகா தொடர் நண்பர்களே...

இவையெல்லாம் எதனால் வருகிறது...? நம் மனத்தினால் தானே... ஆகவே மனிதனின் மிகப் பெரிய எதிரி அவரவர் மனம் தான்... { ஐ... நான் வந்துட்டேன்... உன் மனச்சாட்சி தான்... அதுக்குள்ளே முடிவு சொன்னா எப்படி...? ரொம்ப சீரியஸ்யா எழுதுறே மாதிரி இருக்கு. எப்பவும் பாட்டு பாடிக்கிட்டே வேலை செய்வே... சந்தோசமா இல்லேனா அது மனிதனுக்கு மிகப்பெரிய எதிரி ஆச்சே... சரி...சரி... நீ எழுது, பாட்டு பாடுறதை குறைச்சிக்கிறேன்... }

"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே... அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னையின் வளர்ப்பினிலே..." என்று கவியரசர் கண்ணதாசன் சொன்னாரே... அன்பையும், பல நல்ல விசயங்களையும் ஊட்டி வளர்கிறார்களே, பிறகெப்படி மனித மனம் மாறுகிறது...? { என்னது...? அன்னையின் வளர்ப்பினிலேயா..? அது அந்தக் காலம்... இப்போ ஆயாவின் வளர்ப்பினிலே தான்... இது பரவாயில்லே, சில வீடுகளில் போகோவும், கார்ட்டூன் நெட்வொர்க்கும் தான், குழந்தைகளை வளர்க்கிறது - இதனாலே பல "ஆட்டிசம்" (மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு கோளாறு) குழந்தைகள் உருவாகப் போகுது. }

குழந்தை கருவில் வளரும் போது, தாய் எது பற்றி அதிகம் நினைக்கிறாரோ அதன் தாக்கம் இருக்கும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஒரு குழந்தையின் ஐந்து வயது வரை என்னென்ன பார்க்கின்றதோ / கேட்கின்றதோ / ரசிக்கின்றதோ / ருசிக்கின்றதோ / இன்னும் என்னென்ன நடக்கின்றதோ, அவை தான் பெரியவனாக வளர்ந்த பிறகும், அந்தக் குணம் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அப்போ, இதற்கு முழுக் காரணம் பெற்றோர்கள் என்று சொல்லி விடலாமா ? அந்தக் குணத்தை மாற்ற முடியாதா ? { சின்னச் சந்தேகம் : அம்மா குழந்தையின் மத்தியப் பிரதேசத்தைக் கவனிப்பாங்க... (வயிறு அதாவது உடல்நலம்) அப்பா குழந்தையின் உத்தரப் பிரதேசத்தைக் கவனிப்பாங்க... (மூளை அதாவது அறிவு) அப்போ, இதற்கு யார் யார் காரணம் ? அம்மாவா ? அப்பாவா...? இல்லை குழந்தையா ? "பத்துத் திங்கள் சுமந்தாளே, அவள் பெருமைப் படவேண்டும்... உன்னைப் பெற்றதனால் அவள், மற்றவராலே போற்றப்பட வேண்டும்... கற்றவர் சபையில் உனக்காக, தனி இடமும் தர வேண்டும்... உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும், உலகம் அழ வேண்டும்..." (படம் : நான் ஏன் பிறந்தேன்) }

நம் அறிவை வளர்த்துக் கொள்ளத் தான் படிக்கிறோம். {அப்படியா ? படித்தால் மட்டும் போதுமா ?} நிறைய விசயங்களையும் அனுபவம் மூலம் பெறுகிறோம். {இது சரி... படிக்காத மேதைகள் பல பேர் உண்டு...} இதனால் நல்ல பண்புகளும், குணங்களும் தானே மேம்பட வேண்டும் ? அல்லது வளர்த்துக் கொள்ள வேண்டும் ? "நிறைகுடம் தளும்பாது" என்பார்களே ! {காலி குடமும் அப்படித்தான்} "உன் நண்பர்களைப் பற்றிச் சொல், நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்." என்று சொல்வார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் நண்பர்களிடம் மட்டும் இருக்கும் காலம் உண்டு... அதாவது படிக்கும் பருவத்தில். அப்போது ஏற்படும் காதலைக் கூட நண்பர்கள் சொல்வது படி அல்லது நண்பரையே தூது விடுவது. { அந்த வயதில் காதல் வருவது சகஜம் தானே... முடிவில் காதலிப்பவருக்குக் கல்யாணம் ஆகிவிடும். சில சமயம் தூது விட்ட நண்பருடன் கல்யாணம் ஆகி விடும்...! வெண்ணிலவே... வெண்ணிலவே... விண்ணைத் தாண்டி வருவாயா...? விளையாட ஜோடி தேவை...! (படம் : மின்சார கனவு) } நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களைப் பொறுத்தே நம் குணமும் மாறுகிறது. அது நண்பர்கள் மட்டுமல்ல, யாராக இருந்தாலும்... இரட்டை வேசம் போடும் மனிதர்களிடமிருந்து ஒதுங்கி இருந்தாலே போதும். { "வந்த நாள் முதல் இந்த நாள் வரை... வானம் மாறவில்லை... வான்மதியும், மீனும், கடல் காற்றும், மலரும், மண்ணும், கொடியும், சோலையும், நதியும் மாறவில்லை... மனிதன் மாறிவிட்டான்" (படம் : பாவ மன்னிப்பு ) }

சரி, அவர்களை எவ்வாறு கண்டுபிடிப்பது ? அதற்குப் பல வழிகள் உள்ளன... பேசுபவரின் கண்ணைப் பார்த்து, பேச்சை வைத்து, செய்கைகளை வைத்து... இன்னும் நிறையச் சொல்லலாம். இதற்கு நாம் பகுத்தறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக "நான் இருக்கிறேன் கவலைப்படாதே / நான் உதவி செய்கிறேன்" என்று ஒன்றுக்கு நான்கு முறை சொல்பவர்களை (யாராக இருந்தாலும்) நம்பவே கூடாது. சொல்பவர்கள் யாரும் செய்வதில்லை. செய்பவர்கள் யாரும் சொல்வதில்லை. { அடடே ! பஞ்ச் எல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டியா ? "நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும், நல்லவர் கெட்டவர் யாரென்றும், பழகும் போதும் தெரிவதில்லை, பாழாய்ப் போன இந்தப் பூமியிலே... முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள், முதுகுக்குப் பின்னால் சீரும்... முகஸ்துதி பேசும், வளையும் குழையும், காரியமானதும் மாறும்..ம்... காரியமானதும் மாறும்" (படம் : நாடோடி) }

நம்ம திருவள்ளுவர் "தெரிந்து தெளிதல்" அதிகாரத்தில், (குறள் எண் 501 முதல் 510 வரை) இந்த இரட்டை வேசம் போடும் ஆசாமிகளை எவ்வாறு கண்டு கொள்வது, யார் யார் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், யார் யாரை நம்ப வேண்டும், நம்பிய பின் என்னென்ன செய்யக்கூடாது - என்று பல விசயங்கள் சொல்லி இருந்தாலும், அவற்றில் இரண்டு குறள்கள் மட்டும் (குறள் எண் : 502 மற்றும் 504)

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு. பொருள் : நல்ல குடியிலே பிறந்து {நல்ல மனிதனாக பிறந்து}, குற்றங்கள் இல்லாதவனாய், பழிச்சொல் வரக் கூடாதென்று அஞ்சும் மானமுள்ளவனிடத்திலேயே நம்பிக்கை வைக்க வேண்டும்.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். பொருள் : ஒருவனது குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து, அவை இரண்டினுள் மிகுதியானவற்றைத் தெரிந்து, அதற்குத் தகுந்தபடியே அவனைக் கொள்ள வேண்டும்.

நண்பர்களே, நாம் இருக்கும் இடம் பொறுத்து தான் நம் குணம் நல்லதாகவோ, கெட்டதாகவோ மாறுகிறது... அது நம் மனம் தான் தீர்மானிக்க வேண்டும். {அவனால் தான், நான் கெட்டேன் என்பதை விட என்னால் அவன் திருத்தினான் என்பது சிறப்பு.} உண்மையான ஆன்மீகம் என்பதே பிறரிடம் நம்மைக் காண்பது தான் - ஞாபகம் இருக்கட்டும். ஆக என்னைப் பொறுத்தவரை,

மனிதனின் மிகப்பெரிய எதிரி : அவரவர் மனம் தான்.

{ "பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு... கண் மூடி போகிறவர் போகட்டுமே... என் மனதை நான் அறிவேன், என் உறவை நான் மறவேன், எது ஆன போதிலும் ஆகட்டுமே... நன்றி மறவாத நல்ல மனம் போதும், என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்... கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்... உன்னை ஏமாற்றும், நீ காணும் தோற்றம்... உண்மை இல்லாதது... அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும், அடையாளம் காட்டும்... பொய்யே சொல்லாதது (படம் : நினைத்ததை முடிப்பவன்)" }
மனித வாழ்க்கையில் கஷ்டமான விஷயம் என்ன...? 

No comments:

Post a Comment