Friday, January 15, 2016

நீயே உனக்கு என்றும் நிகரானவன்

வணக்கம் நண்பர்களே... நமக்குள் சொல்லக்கூடாத ரகசியம் : தோல்விகள் மட்டுமல்ல... துன்பங்களும் தான்... படிக்காதவர்கள் பதிவை படித்து முடிவதற்குள் லோட் ஆகி விடும்... துன்பங்களை மறக்க எனக்கு நானே சிலவற்றை சொல்லிக் கொள்கிறேன்... இதோ :

உங்களுடைய தோல்விகளுக்கும், பலவீனங்களுக்கும் காரணங்களைத் தேடி உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். வெற்றியின் வித்துக்கள் நீங்கள் பிறக்கும் போதே உங்களுக்குள் தூவப்பட்டன என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்த விதைகளை வளரச் செய்யும் சக்தி உங்களுடையதே. உங்கள் வெற்றிக்கு உங்கள் தந்தையோ, தாயோ, சமூகமோ அல்லது முதலாளியோ, சுற்றியுள்ள நண்பர்களோ அல்லது வியாபாரத்தில் உங்களது கூட்டாளிகளோ பொறுப்பல்ல. வெற்றியின் விதைகளும், அவற்றை வளரச் செய்யும் சக்தியும், மனித மனம் என்னும் அற்புதமான இயந்திரத்தில் புதைந்து கிடக்கின்றன. வெற்றியின் இலக்குகளை நிர்ணயிப்பதிலோ, அவற்றை நோக்கி அடையும் வழிமுறைகளிலோ, முற்றிலும் நவீனமான கணினி கூட மனித மனதிற்கு ஈடாகாது. 

வெற்றி ஒரு தேர்ந்தெடுப்பு, அது ஒரு வாய்ப்பல்ல...
நீங்கள் வெற்றி வீரர்களாக அல்லது செல்வந்தர்களாக பிறந்தீர்கள் என்று வைத்துக் கொள்வோம்... நீங்கள் வெற்றியாளராவது உங்களின் சரியான தேர்ந்தேடுப்பதிலே உள்ளது. வெற்றி என்பது மேதாவிகளுக்கு ஒதுக்கப்பட்டது அல்ல. உறுதியுடன், தொலை நோக்குடனும் வெற்றியடைய நினைக்கும் எல்லோருக்கும் அது சொந்தம். உன்னுடைய சுயமதிப்பை வளர்த்துக் கொள்ளாமல் உன்னால் வெற்றி அடைய முடியாது. உன்னுடைய சுயமதிப்பு, உன் மீதும், உன் வாழ்க்கையின் மீதும், நீ எவ்வளவு கட்டுப்பாடு வைத்திருக்கிறாயோ, அதைப் பொறுத்தே அமைகிறது. தாழ்வு மனப்பான்மையுள்ளவர்களும், தன்னால் எதுவும் சாதிக்க முடியாது என்று நினைப்பவர்களுக்கும், தன்னுடைய நிலைமைக்கு தான் பொறுப்பல்ல என்று அலுத்துக் கொள்பவர்களுக்கும், வாழ்க்கையில் வெற்றி என்ன என்பதே அறிய முடியாது. காற்றாடியை போல இங்கும் அங்கும் தள்ளப்பட்டு, இவர்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொள்கிறார்கள். உன்னுடைய வாழ்க்கையில் நடப்பவை யாவற்றிக்கும், எந்த அளவிற்கு நீ பொறுப்பானவன் என்று நினைக்கிறாயோ, அந்த அளவிற்கே உன்னுடைய வாழ்க்கையை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். தோல்வியாளர்கள் எல்லாம் சந்தர்ப்பம், சூழ்நிலையால் நிகழ்கின்றன என்று நினைக்கிறார்கள். 

நம் வாழ்க்கையில் நிகழும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் மூல காரணம், ஏதோ ஒன்று இருக்கிறது என்பதில் ஐயமில்லை. இந்த காரணத்தை நாம் ஆராய்ந்து தெரிந்து கொண்டால், அதனுடைய விளைவுகளை நாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும். எண்ணங்களும், நம்பிக்கைகளுமே எதையும் நிகழ்விக்கின்றன. நாம் எதை எண்ணுகிறோமோ, எதை நம்புகிறோமோ, அதற்கு நாமே பொறுப்பு. நமது இலட்சியம் எதுவென்பதை நமது எண்ணங்களே தீர்மானிக்கிறது. நாம் தான் குறிக்கோள்களை நிர்ணயிக்க வேண்டும். ஒருவனுடைய வெற்றி அவனுடைய தன்னம்பிக்கையின் அளவே பொறுத்தே. நம்முடைய வெளி மனது எவற்றை நடத்த முடியும் என்று நம்புகிறோதோ, அவற்றை உள்மனது நடத்த விரைகிறது. நம்முடைய வெளிமனதால் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்கிறோம். 

நம்முடைய மனப்பாங்கும், செயல்களும், ஒரு கால வரம்பிற்குள் நம்மால் ஏற்படுத்திக் கொள்ளபட்டுள்ள பழக்கங்களை பொறுத்தே அமைகின்றன. நல்ல பழக்கங்களை வலுப்படுத்திக் கொள்ளவும், பழைய பழக்கங்களிலிருந்து விடுபடுவதும், புதிய பழக்கங்களை நடைமுறையில் கொண்டு வருவதற்கும் நாமே பொறுப்பு. வெற்றியையே குறிக்கோளாக கொண்டுள்ளவரிடம், நீ கூட்டு சேர்ந்தால், அதுவே உனது வெற்றிக்கு முதற்படியாகும். மாறாக தோல்வி மனப்பான்மை உடையவர்களிடம் சேர்ந்தால் உனது தோல்வியையே உறுதிப்படுத்தும். நம்முடைய சிறிய தோல்விகளில், எதிர்காலத்தின் பெரிய வெற்றிகள் அடங்கியிருக்கும். தோல்விக்கான காரணங்களை கண்டுபிடித்து 'களை' எடுத்து வெற்றியின் விதைகளை வளர்ப்பது நம் கையில் அன்றோ உள்ளது. சுருக்கமாக கூறினால் நம்முடைய வாழ்க்கையாகட்டும், நம்முடைய ஆரோக்கியமாகட்டும், செல்வமாகட்டும், உணர்வுகளாகட்டும் அல்லது ஆன்மீக வளர்ச்சி ஆகட்டும், எல்லாவற்றிக்கும் நாமே பொறுப்பு. இதை நாம் உணர்ந்து கொண்டு, ஏற்றுக் கொண்டு, உறுதியாக நம்பினால், நாம் வெற்றிப் பாதையில் காலடி வைக்கிறோம். இந்த அடிப்படையான உண்மையை நாம் ஏற்க மறுத்தால், முடியும் என்றால் முடியும், முடியாது என்றால் முடியாது, நடப்பவை யாவும் மனதின் நினைப்புகளே... வெற்றி என்பது நமது தேர்ந்தெடுப்பே... 

உன் வாழ்க்கை உன் மனதில்
________________________________________

துதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காதையா... வெறும் தூபத்தில் உன் இதயம் மயங்காதையா... விதி கூட உன் வடிவை நெருங்காதையா... வினை வென்ற... மனம் கொண்ட... இனம் கண்டு, துணை சென்று, வென்ற தெய்வமலர்... 

நீயே உனக்கு என்றும் நிகரானவன்

No comments:

Post a Comment