உலகின் தீமைகள் ஒரு எதிர்மறை எண்ணத்தில் தான் தோன்றுகின்றன. அதற்கு நியாயமான காரணங்கள் கூட இருக்கலாம். ஆனால் தீமைகள் கண்டிப்பாக ஒரு ஆரோக்கியமற்ற சிந்தனையில் தான் உருவாகின்றன. ஒரு மனதில் வரும் ஒரே எண்ணம்தான் விதை. அது வெளியில் சொல்லாய்ச் செயலாய் மாறுகையில் பலரைப் பாதிக்கிறது. பின் அது சங்கிலித் தொடராகிச் சரித்திரமாய் மாறுகிறது. ஆரம்ப எண்ணம் மட்டும் மட்டுப்பட்டிருந்தால் பல எதிர்வினைகள் நிகழாமல் மட்டுப்பட்டிருக்கும். உறவுச் சிக்கல்கள் வெறுப்பு, நிராகரிப்பு, அச்சம், சந்தேகம், ஆத்திரம், பொறாமை என ஏதோ ஒரு எதிர்மறை உணர்வுடன் தான் முதல் எண்ணம் பிறக்கிறது. உங்கள் உணர்வு எதிர்மறையாக இருந்தால் எண்ணம் நிச்சயம் எதிர்மறையாகத்தான் இருக்கும். கடுங்கோபத்திலோ அல்லது துக்கத்திலோ நேர்மறை எண்ணங்கள் வர முடியுமா என்ன?
ஒருவர் உணர்வும் சிந்தனையும் இன்னொருவரைத் தீவிரமாகப் பாதிக்கிறது. இதனால்தான் நம் உறவுகள் நம் உணர்வுகளைப் பல சமயம் தீர்மானிக்கின்றன. உறவுகளில் காயங்களும் விரிசல்களும் பிளவுகளும் நிகழ்வதற்கும் ஆயிரம் நிகழ்ச்சிகளைக் காரணமாகச் சொல்லலாம். ஆனால், அத்தனைக்கும் மூலக் காரணம் சில ஆதார எதிர்மறை உணர்வுகளும் எண்ணங்களும்தான். இன்றைய சந்ததியினரிடம் உறவுச் சிக்கல்கள் ஏராளமாக உள்ளன. பெற்றோர்கள், வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், உறவினர்கள், பணியிடத் தோழர்கள் என அனைவரிடமும் கருத்து வேறுபாடுகளும் ஒவ்வாமைகளும் பெருகி வருகின்றன. காப்பது எம்பதி குடும்ப வாழ்க்கை பெரிதும் மாறிவிட்டது.
மனிதர்களின் எண்ணிக்கையை விட அறைகளின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. நாமே சுவர்களை எழுப்பிக்கொண்டு நாமே தனிமையில் வாடுவதாகப் புலம்புகிறோம். எல்லா மனிதர்களின் மேலும் புகார் பட்டியல் இருக்கிறது. நீங்கள் யாருடனும் நிம்மதியாய், அமைதியாய் இல்லை என்பது உண்மை என்றால் ஒன்று தான் நிஜம். நீங்கள் உங்களிடம் மனதளவில் நிம்மதியாய், அமைதியாய் இல்லை! உறவுகள் யாரையும் தனியாகக் குற்றம் சொல்ல முடியாது. உங்களைப் போலவே உங்கள் எதிராளியும் அமைதி கெட்டுப்போய்ப் புகார் பட்டியலோடு சுற்றிக்கொண்டிருக்கிறார் என்பதுதான் பல நேரங்களில் நிஜம். யாரோடு பிரச்சினையோ அவரிடம் பேசினால் அவர் தரப்பு நியாயங்களைப் புட்டு புட்டு வைப்பார். யாராவது அதை முதலில் தனியாகக் கேட்டிருந்தால் உங்களைத் தான் குற்றவாளியாகப் பார்ப்பார்கள். உறவுகளைப் புரிந்து கொள்ளப் பிறர் நிலையில் தன்னை வைத்துப் பார்க்கும் திறன் வேண்டும். உறவுச் சிக்கல் வரும் நேரத்தில் அடுத்தவர் நிலையில் நம்மை நிறுத்திப் பார்ப்பது தான் புரிதலை ஏற்படுத்தும்.
இது சுலபமல்ல. ஆனால் சற்று முயன்றால் சாத்தியப்படும். அதற்கு முதலில் சில பலபாடங்கள் அவசியம். பார்வைக் கோணம் எந்த விஷயத்திலும் ஒருவர் மட்டும் சரி, மற்றொருவர் தான் தவறு என்ற நிலையிலிருந்து விலகி வர வேண்டும். இருவரும் சரியாகவோ அல்லது இருவரும் தவறாகவோ கூட இருக்கலாம். அதனால் குற்றத்தை யார் மீது திணிக்கலாம் என்ற பார்வையை விடுத்து நடுநிலைக்கு வாருங்கள். பிறரைக் குற்றம் சொல்லுமுன் அந்த நிலையில் நாம் இருந்தால் என்ன செய்வோம் என்று கற்பனை செய்து பார்ப்பது நல்லது இது பிறர் குற்றங்களை நியாயப்படுத்தும் செயலில்லை. பிறர் சூழலைப் புரிந்து கொள்ளும் முயற்சி. அவ்வளவு தான். எல்லா மனிதர்களும் தங்களுக்கு அந்த நேரத்தில் சரி என்று படும் விஷயங்களைச் செய்கிறார்கள். அந்த நேர அறிவுக்குத் தக்க முடிவுகள் எடுக்கிறார்கள். மன்னிப்பு பிறர் செய்த தீங்கால் மனதில் வரும் வன்ம எண்ணம் கூட மிகவும் தீமையானது என்று சொல்கிறார் புத்த மகான். வெறுப்பு அன்பை வளர்க்காது. பழி உறவைச் சரி செய்யாது. ஒன்று மட்டும் தான் உறவைச் சுகப்படுத்தும் வழி. அது மன்னிப்பு. மன்னிப்பவர்கள் திடமானவர்கள். அன்பு மயமானவர்கள். அறிவாளிகள். வெறுப்பும் கோபமும் எதிராளியைவிட தன்னை அதிகமாக அழிக்கும் என்று உணர்ந்தவர்கள்.
சிக்கல் சங்கிலியைத் தங்கள் பக்கத்திலிருந்து அறுக்கத் தெரிந்தவர்கள். மன்னிப்பவர்கள் தாழ்ந்து போவதில்லை. மாறாகப் பெரும் ஆன்மப் பலம் பெறுகிறார்கள். உறவுகளில் குற்றம் பார்த்தால் நீங்கள் தனிமைப்பட்டுப் போவீர்கள். எதிராளியின் பலவீனத்தை உணர்ந்து, அந்த நிலையில் தன்னை வைத்துப் பார்த்து, மன்னித்து விடும்போது மீண்டும் உறவு பலப்படும். மன்னிக்க முடியாத தவறு என்று ஒன்று இல்லை. அதை உங்கள் எதிராளி மட்டும் செய்யவில்லை.
அதே போல நீங்களும் தவறே செய்யாத பிறவி அல்ல. பிறர் தவறை மன்னிக்கையில் நீங்கள் உங்கள் தவறுகளுக்கு உங்களை மன்னிக்கிறீர்கள். அன்பும், மன்னிப்பும், கருணையும் தான் இந்தப் பூமியை வாழ்விக்க வல்ல சக்திகள். ‘என் வாழ்க்கையில் என்னைக் காயப்படுத்திய அனைவரையும் மனமாற மன்னிக்கிறேன்!’ என்ற எண்ணம் உங்களுக்கு அமைதி தரும்.
No comments:
Post a Comment