Friday, January 15, 2016

இன்றைய மனிதனுக்கு மிகப் பெரிய தேவை எது ?

என்னப்பா... ஏதோ யோசனையிலே இருக்கே...? படத்தைப் பார்த்தா சுத்துதே..."

"என்னென்ன எழுதலாம்ன்னு யோசனை... அதான் நீ வந்திட்டில்லே..."

"உனக்கு தெரியாததா...? மனித வாழ்வில் போனா வராதது எது ?, மிக மிக நல்ல நாள் எது ? இப்படிச் சின்னச் சின்ன விசயத்தைப் பற்றி எல்லாம் அலச வேண்டியது தானே..? சரி... சரி... முறைக்காதே... தலைப்பு என்ன சொல்லு...?"


"இன்றைய மனிதனுக்கு மிகப் பெரிய தேவை எது ?"

"அடேய்... சின்னச் சின்ன விசயத்திலிருந்து தான், நிறையத் தெரிந்து கொள்ள முடியும்... வாழ்க்கையில் நிறையப் பார்க்கிறோம், படிக்கிறோம், அனுபவ அறிவையும் பெறுகிறோம். ஆனால், நமக்குத் தெரிந்த அறிவையும் அனுபவங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிறோமா..? நிறைய விவரங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டு அவற்றைப் பயன்படுத்தத் தவறினால், என்ன பயன்...? தெரிந்ததைப் பயன்படுத்தாமல் இருப்பவருக்கும், தெரியாமலே இருப்பதற்கும் என்ன வேற்றுமை...? பயன்படாமல் இருக்கும் அறிவாற்றல் என்று எதுவுமில்லை... அதுவும் அறியாமைக்குச் சமம் தான்... அதனாலே... நிறையத் தெரிந்து கொள்ள முயல்வதை விடத் தெரிந்ததைப் பயன்படுத்த முயல்வோமா...? அதைத்தான் இப்ப நான் செய்து கொண்டிருக்கேன்..."

"அப்பாடா... முடிச்சிட்டியா... அதான்... அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? எது சிறந்தது?-பதிவிலே, பகிர்ந்து கொள்வது தான் சிறந்தது என்று சொல்லிட்டேயே... அதை விட, பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சொல்வது மிகச் சிறந்ததுன்னு நினைக்கிறேன்... நன்றி மறவாமல் இருப்பது தான் இன்றைய மிகப் பெரிய தேவை..."

"நன்றி மறந்தவன் மனிதனேயில்லை. ஆனால், மற்றவர்களுக்கு நன்றி சொல்வதோ இல்லை பாராட்டுவதோ ஒரு மந்திரச் சொல்லாக, நாம் வைத்துக் கொள்ளக் கூடாது. அவை இரண்டும் உடனே சொல்ல வேண்டும். நம் மனசுக்குள்ளேயே ஒருத்தரைப் பற்றிப் பாராட்டினாலோ, நன்றி தெரிவித்தாலோ எந்தப் பிரயோஜனமும் இல்லை... முக்கியமான விசயம்-அவை இரண்டும் மனதார சொல்ல வேண்டும்... பதிவின் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கணும்... நீ ஞாபகப்படுத்திட்டே... அன்புச் சகோதரி ராதா ராணி அவர்கள் AWESOME BLOGGER AWARD கொடுத்திருக்காங்க... அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..."

"பாத்தியா, மறந்துட்டே.. மறதி கூட மனிதனுக்கு நல்ல மருந்து தான்.. சரியா...?"

"மறதின்னு ஒன்னு இருக்கிறனாலே தான் மனிதன் இன்னும் உயிரோடு இருக்கான். இல்லேனா, இப்ப வீட்டிலேயும், நாட்டிலேயும் நடக்குற அநியாயத்திற்கு ஒருத்தரை ஒருத்தன் வெட்டிட்டு சாவான்..."

"நல்லது செய்தவர்களை யாரும் நினைக்கிறதேயில்லை... கடவுளைக் கூடக் கஷ்டம் வந்தாத்தான் ஞாபகமே வருது... கெடுதல் செய்தவர்களை மறக்க முடியலையே... என்ன செய்வது...?"

"அப்படியா...? அவங்களுக்கு ஏதாவது நல்லது செய்... நீ மறந்துருவே... அவங்க, வாழ்க்கை முழுக்க உன்னை ஞாபகம் வச்சிருப்பாங்க... நம்ம ஐயன் திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்றால், குறள் எண் 314-ல்
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல். பொருள் : துன்பம் செய்தவரைத் தண்டித்தல், அவர் தம் செய்கையை நினைத்து வெட்கப்படும்படியாக அவருக்கு நன்மைகளைச் செய்துவிடுதல் ஆகும். சரி... நீ விசயத்திற்கு வா... இன்றைய மனிதனுக்கு மிகப் பெரிய தேவை - பணம், பங்களா, வசதி, etc ., இப்படி எல்லாம் எதையும் சொல்லக்கூடாது... கத்தியை தீட்டாதே... உன் புத்தியை தீட்டு..."

"இருந்தாதானே தீட்டுரதற்கு... யோசிக்கிறேன் இரு.. அந்தத் திருக்குறள் புத்தகத்தைக் கொடு ...ம்... அன்பு ?, பாசம் ?, பணிவு ?, அறம் ?, தானம் ?, தவம் ?, நட்பு ?, நகைச்சுவை உணர்வு ?, பொறுமை ?, சுறுசுறுப்பு ?, விட்டுக் கொடுக்கும் தன்மை ?, உதவி ?, உண்மையே பேசுதல் ?, கருணை ?, சாந்தம் ?, மன்னிப்பு ?, அடக்கம் ?, அமைதி ?, மானம் ?, ஒழுக்கம் ?, வீரம் ?, தைரியம் ?, ஆர்வம் ?, ரசனை ?... என்ன சொல்றது..? இப்படிப் புலம்ப வைச்சிட்டீயே.. அட.. குறள் எண் 424-ல்
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு. பொருள் : கேட்பவருக்குப் புரியும்படி எளிமையாகத் தான் விளக்கிச் சொல்லியும்,, பிறரின் பேச்சுக்களில் உள்ள நுண்மையான பொருளைக் காண்பதும், அறிவு ஆகும். இன்றைய மனிதனுக்கு மிகப் பெரிய தேவை... அறிவு தான்..."

"இப்பத்தான் விசயத்திற்கு வர்றே... நீ சொன்ன எல்லாமே மனிதனுக்குத் தேவை தான்... எல்லா இடத்திலும் அது சரிப்பட்டு வருமா...? இதற்கு அவை அறிதல், அவை அஞ்சாமை அதிகாரங்களில், திருவள்ளுவர்... எந்தக் குறளை சொல்வது... எல்லாக் குறளும் சொல்லலாம்... அவ்வளவு நல்லா இருக்கு... குறள் எண் 724-ல்
கற்றார்முன் கற்ற செலத்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல். பொருள் : தாம் கற்றவற்றைக் கற்றோர்கள் மனங்கொள்ளும்படியாகச் சொல்லி, தம்மிலும் மிகுதியாகத் கற்றவர்களிடம், தாமும் எஞ்சிய மிகுதியைக் கேட்டுக்கொள்ளல் வேண்டும்."

"இரு... இரு... எங்கேயோ படிச்சது... பள்ளிக்கூடத்திலே வாத்தியார் சொல்லிட்டாரு... தென்னை மரம் / பசு-இந்த இரண்டு தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும்... நல்லா படிச்சிட்டு வந்துருங்க என்று சொல்லிட்டார். நம்ம பையன் தென்னை மரத்தைப் பற்றிப் படித்து விட்டுப் போனான்... அடுத்த நாள் வாத்தியார் எழுத சொன்னதோ பசு மரத்தைப் பற்றி... நம்ம பையன் கவலைப்படாமே, தென்னை மரத்தைப் பற்றி இரண்டு பக்கம் மேல எழுதிட்டு, கடைசி ஒரு வரியில், "இவ்வளவு மகத்துவம் வாய்ந்த தென்னை மரத்தில் அந்தப் பசு, கயிற்றால் கட்டப்பட்டிருந்தது." இப்படி விவரமா இருக்கிறது தான் தேவை.. சரியா ?"

"நல்ல பையன்.. பிற்காலத்தில் பெரிய தலைவன் ஆயிடுவான்.. ஒரு கதை செல்றேன்... கேளு... அந்தக் காலத்திலே, செல்வாக்கு மிக்க, மோசமான பண்ணையார் ஒருத்தர் இருந்தார்... பணத்தை வட்டிக்கு விடுவது தான் வேலையே... தன்னிடம் பணத்தை வாங்கினவனின் மகள் மீது ரொம்ப நாளா ஒரு கண்... சமயம் பார்த்து ஒரு பஞ்சாயத்து.. உடனே பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று... (1) வீட்டை விற்றுப் பணம் கொடு (2) அவனின் மகளைக் கல்யாணம் செய்து கொடு என்று... அம்மன் கோயிலில் இரண்டு சீட்டு போட்டு பார்த்து விடுவோம் என்று தீர்ப்பு... எல்லாரும் கூடிட்டாங்க... அந்தப் பொண்ணுக்கு பண்ணையார் பற்றியும், ஏதோ சூழ்ச்சி செய்கிறான்.. என்பதை உடனே தெரிந்து கொண்டு, ஒரு சீட்டை எடுத்து, வாயிலே போட்டு முழுங்கிட்டாள். கூட்டத்தைப் பார்த்து, "இந்த ஒரு சீட்டில் என்ன உள்ளதோ, அதற்கு எதிர்மறையான சீட்டில் உள்ளது போல் எனது தந்தை செய்யட்டும்" என்று சொல்லி விட்டாள்... ஏன்..? பண்ணையார் இரண்டு சீட்டிலும் ' மகளைக் கல்யாணம் செய்து கொடு' என்று எழுதியிருப்பார் என்று சட்டென்று யோசித்தாள். இதைத்தான் சமயோஜித புத்தி எனச் சொல்வார்கள். அதாவது நமக்கு இக்கட்டான அல்லது தர்மசங்கடமான நிலைமை வரும் போது நம் புத்தியை எப்படிச் சமயத்திற்குத் தகுந்தாற் போல் உபயோகிப்பது எனபது தான் முக்கியம். என்ன புரிஞ்சதா...? ஆக என்னைப் பொறுத்தவரை
இன்றைய மனிதனுக்கு மிகப் பெரிய தேவை :

சமயோஜித புத்தி (நல்ல சொல்களிலும் செயல்களிலும்)

"யப்பா.. இந்த வார்த்தை தாம்பா சொல்லத் தெரியலே.. இதுக்குத் தான் தென்னை மரம் - பசு கட்டுரையைச் சொன்னேன்... நீ எப்படியும் சொல்லிடுவேன்னு தெரியும். இதுக்குப் பேரு தான் போட்டு வாங்குறது... நீ சொன்ன புத்தி வரணும்ன்னா, அதற்கு நிறைய அனுபவம் வேண்டும்... கண்டும், கேட்டும், சிந்தித்தும், படித்தும், அதுவும் அந்தச் சமயத்திற்குத் தகுந்தாற்ப் போல் செயல் பட, நமக்குள் தெளிவான ஆற்றலை உண்டு பண்ண வேண்டும்... அதுக்கு நமது முன்னோர்களின் வீர தீரச் செயல்களையும், புராணக் கதைகளும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்... இப்பத் தான் புரியுது... சின்னச் சின்ன விசயத்தையும் முழுமையா தெரிஞ்சிக்கணும்ன்னு.. முடிவா நான் ஒரு குறள் (701) சொல்லிக்கிறேன்...
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி. பொருள் : ஒருவன் வாயால் சொல்லாமல் இருக்க, அவனுடைய முகத்தையும் கண்ணையும் பார்த்தே, அவன் மனக்கருத்தை அறிந்து கொள்பவன், வற்றாத கடலால் சூழப் பெற்றுள்ள உலகத்துக்கே அணிகலன் ஆவான். மேலே படத்தைப் பார்த்தா, ஏன் சுத்தற மாதிரி தெரியுதுன்னு இப்ப நான் யோசிக்கிறேன்... வரட்டுமா...?"

நன்றி மனச்சாட்சியே... சமயோஜித புத்தி மட்டும் இருந்தால் போதுமா ? நம் உண்மையான எதிரியை அறிந்து கொள்ள வேண்டாமா...? 

No comments:

Post a Comment