Wednesday, January 20, 2016

கவலையை கழற்றி வீசுங்கள்

worry  கவலை என்பது எல்லோரிடமும் இருக்கும் ஒருவித சொத்து. அதன் உருவங்கள் மாறலாம். ஆனால் அதன் அழுத்தம் ஒன்றாகவே இருக்கும். கவலையே இல்லாத மனிதர் யாருமே இல்லை. நமக்குத்தான் இவ்வளவு பெரிய சோகம் இருக்கிறதென்று பொதுவாக அனைவரும் எண்ணுகின்றனர். ஆனால் ஒவ்வரிடமும் ஒவ்வொரு விதத்தில் கவலையின் ஆட்சி இருக்கிறது.

கவலை என்று அதையே நினைத்துக் கொண்டு இருப்பதை தவிர்த்து மனதின் திசைகளை மாற்றுங்கள். கொஞ்சம் சிரமமான காரியம்தான் இருந்தாலும் அதனைச் செய்தாக வேண்டும். மனம் தன் இயல்புகளை மாற்றிக் கொண்டே இருந்தால் கவலை என்ற பேய் விரட்டப்படுகிறது. சிலருக்கு லச்சியவெறி என்று ஒன்று இருக்கலாம். அதற்காக நம்மால் இது முடிகிற காரியமா….? என்று மலைத்து நிற்காமல் செயலில் இறங்க வேண்டும். இதுதான் மனதின் திசைமாற்றல் எனப்படும். இப்படி ஒவ்வொன்றாக மனதின் திசைகளை மாற்றிக் கொண்டே போனால் குறிப்பிட்ட இலக்கை கவலைகள் இன்றி அடையலாம். மனித சக்தியை மீறி எதுவுமே கிடையாது.

கவலையற்ற மனிதர் உலகில் உண்டா? எல்லாருக்கும் கவலைகள் உண்டு. எதற்காக கவலை …? எப்படிப்பட்ட கவலை? என்பது மட்டும் மனிதருக்குள் மாறுப்படும். ஒரு நேரத்தில் மனிதனை ஆர்வத்தோடு இயங்க வைத்துக் கொண்டிருக்கும். சில நேரங்களில் விரக்தியில் படுகுழியில் தள்ளிவிடும்.

கவலை      கவலையில் வீழ்ந்து விடாமல் வீழ்கிற போதெல்லாமல் நம்பிக்கையுடனும், உற்சாகமாய் எழுந்துவிடுங்கள் பீனிக்ஸ் பறவையைப் போல். கவலையில் துன்பப்படும் எல்லோரும் உணர்ச்சி கொந்தளிப்பில் மூழ்கி விடுவது உண்டு. நன்றாக மூடப்பட்ட பாட்டிலில் காற்றைத் திணிப்பதைப் போன்று நமது உள்ளமாகிய பாட்டிலில் கவலைகளை அடைத்துத் திணித்துப் பூட்டி வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால் உள்ளத்தில் இருக்கும் கவலைகளின் காரணமாகச் சோர்வு, தோல்வி மனப்பான்மை, வாழக்கையின் மேல் விரக்தி முதலியவைகள் உண்டாகும். உங்களுடைய கவலைகளை உங்களுடைய நண்பர்கள், மனைவி, பெற்றோர்கள் மற்றும் உங்களை விரும்பும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால் கவலைகளின் சுமை குறையும்.

கவலைப்படும்படி ஏதாவது நேர்ந்துவிட்டால் நம் கவலையிலிருந்து தப்பிச் செல்ல முயலவேண்டும். நண்பர்களுடைய வீட்டிற்குச் சென்று பேசிக் கொண்டிருக்கலாம் அல்லது சினிமாவிற்கு செல்லாம். உல்லாசப் பயணம் போகலாம். இதுபோன்ற எண்ணற்ற வழிகளில் நாம் சிறிது நேரம் செலவிட்டு கவலையை மறக்க முயற்சி செய்ய வேண்டும். அந்த நிலையில் உள்ளத்திற்கு ஓய்வு கிடைக்கிறது. கவலையை எதிர்த்து போராட மனதில் உற்சாகம் பீறிடும்.

அனைவருடைய உள்ளங்களிலும் எப்போதும் ஏதோ கவலைகள் குடிகொண்டிருக்கின்றன. கவலைப்படும் சமயங்களில் நம்மை நாமே கேட்டுக் கொள்ளலாம். அதாவது நான் எதற்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இது தேவைதானா….? இப்படி கேட்டு பார்த்தால் கவலைப்படும் விஷயங்கள் பெரும்பாலானவை கவலைப்படத் தேவையற்ற சில அர்த்தமற்ற விசயங்களாக தென்படும். கவலைகள் மலையாக உருவெடுத்து, தன் மேல் அமர்ந்திருப்பதைப் போன்ற மனநிலையை வளர்த்தல் கூடாது. கவலைகளுடன் போராடி அவைகளை எப்படியும் வெல்ல முயற்சி செய்வது சாலச்சிறந்தது.

எதற்கும் உற்சாகமிழந்து விடாதீர்கள். உலகம் இருக்கிறது.நாட்கள் இருக்கின்றன. எதை இழந்தாலும் எதிர்காலம் இருக்கிறது. வாழக்கை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்து கிடக்கின்றது. நாம் அடைய வேண்டிய இலக்கை நோக்கிய பயணத்தில் எதிர்படுகின்ற தடைகளும், போராட்டங்களும் தான் வாழ்க்கை. கவலைகளை வளர விடாதீர்கள்.

ஒரு நாளும், ஒரு வாரமும், ஒரு மாதமும், ஒரு வருஷமும் கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் இது நம்மால் முடியும், நிச்சயம் முடியும் என்கிற அழுத்தமான மனக்கட்டளையிடுங்கள். முதலில் பூ… பூக்கும் பிறகு காயாகி அதன்பின் தானே கனியாகும். எனவே எப்போதும் எதிலும் வெற்றியை குறி வைத்து செயல்படுங்கள். நிச்சயம் கனி கிடைக்கும். கனவு காணுங்கள் வெற்றி நிச்சயம்.

No comments:

Post a Comment