Wednesday, January 20, 2016

உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா ?

உங்களுக்கே தெரியும் முன்பின் பழக்கம் இல்லாத நிலையிலும் ஒரு சிலரைப் பார்த்தால் சிநேகிக்கத்   தோன்றுகிறது.  ஒரு சிலரை முதல் பார்வையிலேயே வெறுக்கத் தோன்றுகிறது. சமூகத்தில்  ஒருவர் மட்டும் ஏன் மிகவும்   பாராட்டப்படுகிறார்? கண்ணை மூடிக்கொண்டு அவரை நேசிக்க ஒரு கூட்டம் இருக்கிறதே. அது எப்படி?.அவர்களிடம் சில சிறப்பான பண்புகள் இருக்கவேச் செய்கிறது. அவர்களைப் போல் உண்மையான அழகைப் பெறுவது மற்றவர்களாலும் முடியக் கூடிய காரியம்தான்.
                       
நகைச்சுவை உணர்வு , வாழ்க்கையின் கடினமான சந்தர்ப்பங்களை இலகுவாக்கிவிடும். இறுக்கமான சூழ்நிலைகளை  இளகவைத்துவிடும். உங்களைச்  சுற்றி  உள்ளவர்களை உங்கள் மீது நம்பிக்கை வைக்கச் செய்யும். நீங்கள் சிரிக்கிறபோது, உலகத்தின் எந்தச் சுமையும் உங்கள் தோளை அழுத்துவதில்லை. உங்களுடன் சினேகபாவத்துடன் கை குலுக்குபவர்களின் எண்ணிக்கைக்கும் பஞ்சம் இருக்காது.

எல்லா நேரங்களிலும் தற்பெருமை பேசுபவர்களிடம் பழக யார்தான் விரும்புவார்கள். தன்னையே பெருமையாக பேசுபவர்களிடம் எவரும் நெருங்கிப் பழக மாட்டார்கள். தற்பெருமையும்,தன்னையே நேசிப்பதும் விரும்பத்தக்க காரியங்ககள் அல்ல. நீங்கள் எப்போதும் அன்பு கொண்டவர்களாகத் திகழுங்கள். அன்பானவர்கள் எப்போதுமே உண்மையானவர்கள். அன்புள்ளவர்களை   இந்த உலகத்தில் விரும்பாதவர்கள் எவரும் இல்லை. எனவே அன்பை கொடுத்து அன்பை பெறுங்கள். அடுத்தவர்களிடம் நல்லதைக் காண்கிற போது அவர்களைப் பாராட்டுகிற அளவு உங்கள் மனம் விசாலமாய் இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் விரும்பத்தக்க மனிதர்தான்.
         
வாழ்க்கையில் நிறைய நண்பர்களை பெறவும்,அவர்களுடையா நட்பு நீடித்து நிலைக்கவும் உங்களுடைய பாராட்டுகிற குணம் நிறையவே உதவிப் புரியும். தேவையில்லாத விமர்சனங்களை கண்டு கொதித்துஎழ வேண்டாம். அமைதியோடு இருங்கள், கட்டுபாடாக இருங்கள். நிறையப்படியுங்கள்.
                                 
நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படித்தான் இந்த உலகமும் உங்கள்  கண்களுக்குபடும். மனித மனம் கடுமையானவற்றை எதிர்க்கும், மென்மைக்கு  வளைந்து கொடுக்கும். நெருப்பின் தீவிரத்தைத் தணிக்கிற தண்ணீர் மாதிரி, சாந்தமான வார்த்தை கோபத்தை தணித்துவிடும். அன்பு இருக்கிறதே, அது பாலை நிலத்திலும் பயிர் வளர்க்கும்.
                         
அன்பின் வலிமையில் பாதிகூட அதிகாரத்திற்கு கிடையாது என்கிறார் லே ஹண்ட் . மனதை சமநிலையில் வைத்துக்கொள்பவன் விவேகி, விவேகியாக இருந்துவிட்டால் போதுமே. விவேகம் உள்ளவனே நிறைவு பெறுகிறான்.அவனுடைய பயணம் முடிவுற்ற பாலைவனத்தில் நடப்பதல்ல. பூவும்,காயும்,கனியும் நிறைந்த சோலைவனத்தை சுற்றிவருவது. எனவே சோலைவனத்தைச் சுற்றிவரும் நபராக இருங்கள் நிச்சயம் நீங்கள் விரும்பத்தக்க நபராக இருப்பீர்கள்.

No comments:

Post a Comment