நன்றியுணர்வு
நன்றி சொல்லும் நெஞ்சம் நமக்கு இருந்தால்
நான்கு திசையிலும் உறவுகள் விரியும்
முயற்சி என்னும் அற்புதச் சிறகுகளிருந்தால்
ஆகாயத்திற்கு அப்பாலும் அதிசயம்
நிகழ்த்தலாம்!
நாம் வாழும் வாழ்விற்கு ஆதாரமாக, பக்கபலமாக, உதவிக்கரமாக பலர் இருக்கின்றார்கள். மற்றவர்களின் உதவியும், ஒத்துழைப்பும் இன்றி நம்மால் வாழவே முடியாது. அவ்வாறு நமக்கு உதவிக்கரமாக இருக்கும் அனைவருக்கும் நமது நன்றி உணர்வை வாழ்நாள் முழுவதும் தெரிவித்துக்கொண்டே இருக்க வேண்டும். இதைத்தான் Attitude Of Gratitude என்பார்கள். வள்ளுவப் பெருந்தகையும் நன்றி மறப்பது நன்றன்று என்றார். நன்றியுணர்வோடு செயல்படும் போது நமது மனம் பக்குவப்பட்ட நிலையில் பணிவோடும் தெளிவோடும் இருக்கின்றது. தான் என்ற அகந்தை நீங்கிய நிலையில் எண்ணங்கள் தெளிந்த நீருற்றாகவே ஊற்றெடுக்கத் தொடங்குகிறது. இது சாத்தியமா? முயற்சித்துப் பாருங்கள். இதுநாள் வரை உங்களுக்கு உதவியவர்களை நெஞ்சில் நினைத்து நன்றி செலுத்திப் பாருங்கள் உங்களுக்குள் ஒரு பணிவுணர்வும் மென்மையும் தோன்றும். பணிவுடன் துணிவும் வேண்டும்.
மற்றவர்களின் மீது அன்பு செலுத்துகின்ற பண்பும், மற்றவர்களை மதித்து நடக்கின்ற தன்மையும் ஒருவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பது உறுதி. இதைத்தான் ஒரு கவிஞர் பதவி வருகின்றபோது பணிவு வரவேண்டும் என்றார். வெற்றி பெறுவதற்கு பணிவும் துணிவும் வேண்டும். தோல்வி வருகின்ற போதும் தொடர்ந்து முயற்சிக்கும் துணிவுதான் ஒருவரை வெற்றியின் சிகரத்திற்கு அழைத்துச் செல்கிறது.
ஒருவன் தனது வாழ்க்கையில் இரண்டு நபர்களை எப்பொழுதும் மறக்கமாட்டான். அதாவது தனக்குத் துன்பம் நேரும்போது கை கொடுத்துதவியவனையும், துன்பம் சூழும்போது காலை வாரியவனையும் மறக்க முடியாது. இப்பொழுது எல்லோரும் நன்றி உணர்வு இல்லாமல் இருக்கின்றனர் என்பது பலரது கருத்து. மற்றவர்கள் நன்றியுணர்வு இல்லாமல் இருக்கின்றார்கள் என்பதற்காக நாம் ஏன் அவர்களைப் பின்பற்றி நன்றி உணர்வற்றவனாக வேண்டும்? மற்றவர்கள் நம்மைப் பின்பற்றும் விதத்தில் நன்றியுணர்வோடு நடந்து முன் உதாரணமாகத் திகழ முயற்சிப்போம்.
பிறரிடம் குறை காண்பது எளிது . ஆனால் அவர்கள் அதைத் திருத்திக் கொள்வதற்கு நீங்கள் எந்த விதத்திலாவது உதவுகின்றீர்களா? ஆம் எனில் நீங்கள் உண்மையில் அவருடைய உண்மையான நலம் விரும்பி.
No comments:
Post a Comment