Sunday, July 6, 2014

தம்பதிகள் இந்த ஐந்தை கடைபிடித்தால வாழ்வில் ஆனந்தமாய் வாழலாம்...

தம்பதிகள் இந்த ஐந்தை கடைபிடித்தால வாழ்வில் ஆனந்தமாய் வாழலாம்

1. நம்பிக்கை 

கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். ஒருவரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும். தங்களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது என்பதை உணர வேண்டும். அதை செயல்படுத்திக் காட்டும் வாய்ப்பினை ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். வருங்காலத்தில் என்ன வெல்லாம் நடக்க போகிற தோஎன்று பயம் கொள்வதைவிட, நிகழ் கால வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது தான் புத்திசாலித்தனம். 

2. பாதுகாப்பு 

ஆண்களைவிட பெண்களுக்குத் தான் அதிக பாதுகாப்பு தேவைப்படுகிறது. திருமண வயதையடையும் வரை பெண்களுக்கு பெற்றோரால் பாதுகாப்பு தரப்படுகிறது. பெண்கள் தங்கள் தாயைக் காட்டிலும் தந்தையே அதிக பாதுகாப்பு தருவதாக எண்ணுகின்றனர். திருமணத்திற்கு பின் பாதுகாப்பிற்காக கணவனை நம்பி வாழ்கின்றனர். இந்த விஷயத்தில் முரண்பாடு நிகழும் போதுதான் ஈகோ போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன. விட்டுக் கொடுக்கும் மனபான்மை இல்லாததுதான் இதற்கு காரணம். பெண், ஆணைவிட தான் தான் மேலானவள் என்றும், ஆண் பெண்ணை விட தானே எல்லா விதத்திலும் மேலானவன் என்றும் எண்ணுகின்றனர். இருவரும் அவரவர் தனித்தன்மைகளில் மேலானவர் தான். 

3. மரியாதை 

ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் கணவருடைய பெருமை, மரியாதை, கவுரவம் என்று அனைத்து விஷயங்களிலும் தனக்கும் பங்குண்டு என்பதைக் காட்ட வேண்டும். அதில் தான் பெண்ணுக்கு மரியாதை உள்ளது. அதேபோல், மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளுடன் இணைந்து ஒற்றுமை குலையாமல் குடும்பத்தை பராமரிப்பதில் தான் கணவனுக்கு மரியாதை உள்ளது. இயல்புக்கு மீறிய நடத்தைகளில் ஈடுபடும்போது அவர்களது மரியாதைக்கு பங்கம் வந்து விடுகிறது. 

4. அன்பு 

வாழ்க்கை பாதையை சீரமைக்கும் ஒரு கருவிதான் அன்பு. வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும் வல்லமை அன்பிடம் மட்டுமே உள்ளது. இந்த உன்னதமான உணர்வுகள் தான் நம் வாழ்வையே அர்த்தமுள்ளதாக மாற்றக் கூடியவை. அன்பால் மலரும் உணர்வுகளே குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் என்பதை இருவரும் உணர வேண்டும். `என்னை நல்லபடியாக வைத்துக் கொள்ளும் அன்பு உன்னிடம் இருந்து நிச்சயம் கிடைக்கும்` என்ற எண்ணம் தம்பதிகள் இருவரிடம் வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும். 

5. நேர்மை 

நல்ல விஷயங்களின் அடிப்படையில் உருவாக்கபடும் கூட்டுத் தொகுப்பே குடும்பம். நமக்கு நேர்மை அவசியம். “என் சிந்தனை உள்பட எனது ஒவ்வொரு வார்த்தையும், செயலும் உண்மை. அதை உன்னோடு பகிர்ந்து கொள்வேன். என் நோக்கம், இயல்பான முறையில் நீண்ட நாள் உறவை பேணுவது தான்” என்று இருவரும் எண்ண வேண்டும். நேர்மை இல்லாத குடும்பம் தண்டவாளத்தில் ஓடாத ரெயில் போன்றது. நேர்மைதான் குடும்பத்தின் முதுகெலும்பு. 

நீங்கள் இன்று செய்யும் வேலை இனிவரும் ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் வாழ்க்கைக்கு உதவும்!!

நீங்கள் இன்று செய்யும் வேலை இனிவரும் ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் வாழ்க்கைக்கு உதவும்!!

வாழ்க்கையில் ஒருநாள் என்பது அவ்வளவு முக்கியமானதா என கேட்பவரா நீங்கள்? இன்று ஒருநாள் போனால் என்ன,  இன்னும் என் வாழ்நாளில் தான் ஆயிரகணக்கில் நாட்கள் உள்ளதே என ஒருநாளை சாதாரணமாக நினைப்பவரா?  அப்படியென்றால் இது உங்களுக்கான பக்கம் தான்!!

ஒருநாளை ஒரு நாள் என்று பார்க்காதீர்கள்! 24 மணி நேரம், 1140 நிமிடம், 86,400 நொடி இப்படி பார்த்து பழகுங்கள் எவ்வளவு பெரிதாக உள்ளது. இப்போது இதையே ஐந்து வருடங்கள் என்று பார்த்தால் நிச்சயம் உங்களுக்கு தலை சுற்றும்! ஆனால் இந்த ஐந்து வருடங்கள் சிறப்பாக இருக்க உங்களது ஒரு நாள் எப்படி இருக்க வேண்டும் என்று பார்த்தாலே போதும், நீங்கள் தினசரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில வழிகள் இதோ...

1. உங்கள் கனவுகளை நிறைவேற்றும் பயணத்தில் மகிழ்ச்சியை தேடி கொள்ளுங்கள்!!  

உங்களை வாழ்க்கைக்கான திட்டத்தை மாற்றிக் கொள்ளாதீர்கள், அதற்குபதில் எதிர்காலத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்,  இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை கவனியுங்கள். இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கண்டுபிடியுங்கள். அப்போது தானாகவே இன்று நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தெரிந்துவிடும்.இன்று செய்ய வேண்டியதை சரியாக செய்யுங்கள் தனாக உங்கள் கனவு நிறைவேறும்.

2.இன்றைய நாளில் என்ன செய்தீர்கள் என்பதை எழுதி வைத்துக்கொள்ள பழகுங்கள்!

''ஒரு நாளின் முடிவில் நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்று எழுதி வைத்து பாருங்கள் அது இன்றைக்கு நீங்கள் உங்கள் நேரத்தை எப்படி செலவு செய்துள்ளீர்கள் என்பதை காட்டும். வெறும் 15 நிமிடங்கள் நீங்கள் செய்த வேலையை எழுதி வைப்பது உங்களுக்கு வேலை மீதான செயல்திறனை அதிகரிக்கும்!' இன்று எது நீங்கள் நினைத்து உங்கள் புத்தகத்தில் இடம்பெறவில்லையோ அதனை சரிசெய்தாலே போதும்!

3.தினமும் ஒரு புதிய, பழக்கமில்லாத நபரோடு பேசுங்கள்

''புதிய பழக்கமில்லாதவர்கள் என்பது புதிய வாய்ப்புகளுக்கு சமம். இந்த வாய்ப்புகள் புதிய நண்பர்கள், புதிய யோசனைகள் மற்றும் உங்களுக்குள் இருக்கும் பயத்தையும், கூச்சததையும் போக்குவதாகவும், புதிய தொழில் துவங்குவதற்கான கருவியாக இருக்கும். உங்கள் வட்டத்தை பெரிது படுத்திக்கொள்ள பழகிவிட்டால் அது உங்கள் வேலை,மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை முடிவு செய்யும்.அதனால் தினமும் ஒரு புதிய பழக்கமில்லாத மனிதரோடு பேசுங்கள்.

4. நன்றாக கவனிக்க பழகி கொள்ளுங்கள்!

மக்கள் தங்களை பற்றி பேசுவதை பெரிதும் விரும்புவார்கள். அதனால் அவர்கள் பேசுவதிலிருந்து உங்களுக்கு தேவையானதை பெற அவர்களை பேசவிட்டு கவனியுங்கள். இது போன்ற மனிதர்களின் அனுபவம் எப்போதும் நமக்கு கைகொடுக்கும் சிக்கலான சூழல்களில் அவர்கள் செய்த தவறை பற்றி கூறியிருப்பார்கள் அதை நாம் செய்யாமல் இருந்தாலே போதும் என்ற பாடத்தையாவது அது கற்றுக்கொடுக்கும்.
  
5.குறைந்த நேரத்தை மட்டும் வீணாக்குங்கள்!! 

நேரத்தை வீணாக்காமல் நம்மால் வாழமுடியாது. ஆனால் நம்மால் குறைவான நேரத்தை வீணாக்க முடியும். வாழ்க்கை நாட்களால் உருவாக்கப்பட்டது, நாட்கள் நேரங்களாலும், நேரம் நிமிடங்களாலும் உருவாக்கப்பட்டவை. அதனால் நிமிடங்களை தாண்டி நாம் நொடியை மட்டும் வீணாக்கி கொள்ள கற்று கொள்ள வேண்டும்.இந்த விஷயத்தை நீங்கள் சரியாக கையாண்டால் உங்களால் வெற்றியை மட்டும் தான் பெறமுடியும்.

6. உங்கள் அனுபவங்களை திசை மாற்றி கொண்டே இருங்கள். 

உங்கள் அனுபவங்களை ஒரு விஷயத்தை நோக்கியே கொண்டு செல்லாதீர்கள்.. உங்கள் அனுபவங்களை திசை மாற்றி கொண்டே இருங்கள். உங்கள் அனுபவங்களை விரிவுபடுத்துங்கள். இது உங்களது புதுமையான ஐடியாக்களுக்கும், நல்ல முறையில் உங்களை மக்களோடு தொடார்புபடுத்திக்கொள்ள உதவும்.அந்த அனுபவத்தை உலகிற்கு பரிமாறுபவராக இருங்கள்: அது பலரை முட்டாள்தனத்திலிருந்து விடுவிக்கும்.ஒரு சிறந்த அனுபவம் நல்ல சிந்தனையாளனை உருவாகியே தீரும்!

7. அவமானத்தோடும், சந்தேகத்தோடும் வேலை பார்க்க பழகுங்கள்!!

அனைவருக்கும் ஏதோ ஒரு சூழலில் அவமானத்தையும், சந்தேகத்தையும் எதிர்கொண்டு இருப்பார்கள். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே இதை சமாளிக்க கற்றுக்கொண்டு இருப்பார்கள். இதனை சமாளிக்க பழகுங்கள். உங்கள் அவமானம் பாடத்தையும் கற்று கொடுக்கும்! உங்கள் மீதுள்ள சந்தேகம் உங்களை தெளிவு படுத்தும்.
  
8. வெளிச்சூழலுக்கு செல்லுங்கள்:

 உள்ளேயே இருந்து வேலை பார்ப்பது எளிது. வெளிச்சூழலுக்கு செல்லுங்கள். மிக உயரமான பகுதிகளுக்கு சென்று வாருங்கள், உளவியலாலர்களை சந்தியுங்கள். அது உங்களுக்குள் உள்ள புதுமையற்ற சதாரண மனிதனை புதுமைபடுத்துவதுடன்,உங்கள் அழுத்தத்தை குறைக்க உதவும் கருவியாகவும் அமையும்.

9.உங்களைவிட வித்தியாசமானவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:

நீங்கள் சற்று தாராளமானவராக இருந்தால் வித்தியாசமான மனிதர்களின் நட்புக்குள் செல்லலாம். நீங்கள் நகரத்து எலியாக இருந்தால் நாட்டு எலியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இந்த தேடலில் நீங்கள் பல வித்தியாச மனிதர்களை அடையாளம் காட்டும். அவர்கள் மீதான புரிதல் மாறுபட்ட மனிதர்கள் உள்ள குழுவில் சரியான முடிவை எடுக்க பயனளிக்கும்.

10. குறைந்தபட்ச குறிக்கோள்களை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்:

ஒரு நாளைக்கு 15 பக்கங்கள் படிக்க வேண்டும், 20 புஷ்-அப்கள். இப்படி குறுகிய டார்கெட்டுகள் உங்களை பெரிய வேலைகளுக்கு பழக்கப்படுத்தும்! இந்த பயிற்சி பெரிய திட்டங்களை உடைத்து சிறிது சிறிதாக ஒரு நாளைக்கு எவ்வளவு என பிரித்துக் ஐந்து வருட திட்டத்தையும் ஒரு நாளைக்கு பிரித்து வெற்றியடைய உதவும்.

இன்னும் ஐந்து வருடம் கழித்து எப்படி இருக்க வேண்டும் என்பதை சிந்திக்க தொடங்கிவிட்டால் இன்று உங்கள் வேலை என்னவெனில்......

உங்களுக்கான வேலை என்ன என்பதை இன்னோருவரை தீர்மானிக்க விடாமல் இருப்பது தான்!! இன்றைய நாளை உங்கள் பிடித்த மாதிரி செதுக்குங்கள் அது  இனிவரும் ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் வாழ்க்கைக்கு உதவும்!!

கோபத்தை அடக்க சுலபமான வழிகள் !!!

கோபத்தை அடக்க சுலபமான வழிகள் !!!

1. பொருட்படுத்தாதீர்கள்(Objects do not)

உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.

2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்(Do not expect anything to anyone)

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்(Please disregard opponents)

தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம். தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்(Please stop unwanted thoughts)

பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.

நமது புராணங்களும் கோபத்தின் தீமைகளைப் பற்றி விபரமாக விளக்குகின்றன.
பாருங்கள் இங்கொரு முனிவரின் கோபத்தை..

துர்வாசர் என்றொரு முனிவர் இருந்தார். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் அடிக்கடி கோபப்படகூடியவர். கோபத்தின் மறு உருவமாகவே அவரை புராணங்கள் சித்தரிக்கின்றன. அவர் அடிக்கடி சாதாரண விசயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு, தனது தவவலிமைகளை இழந்தவர். மகாமுனிவரையே ஆட்டுவித்த கோபம், சராசரியான மனிதனை பாடாய்படுத்துவதில் என்ன அதிசயம்?

எனவே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற , முதலில் நம்முடைய கோபத்தை ஆட்சி செய்ய வேண்டும். அதாவது தேவைப்படும் இடத்தில் அளவான கோபம் மட்டுமே கொள்ளலாம். அதுவும் நம் சுயமதிப்பை காப்பாற்றிக்கொள்ள கூடிய அளவில் இருந்தாலே போதுமானது. என்ன நண்பர்களே !இனி எடுத்ததற்கெல்லாம் கோபப்படமாட்டீர்கள்தானே..!!

Saturday, July 5, 2014

நல்ல குடும்பத்திற்கு வேண்டிய 10 லட்சணங்கள்

நல்ல குடும்பத்திற்கு வேண்டிய 10 லட்சணங்கள் :

1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.

2. கணவன் - மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.

3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியை குலைக்கும்.

5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது, பெரும்பாலானோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம், சிலர் குறைவாக சம்பாதிக்கலாம். எப்படி இருந்தாலும் அதை காப்பது, நுகர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.

6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிரச்சினைகளுக்கு இடம்தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் அங்கே தெய்வீக உறவு இருக்காது.

7. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகிய மூன்றையும் கடைப்பிடித்து வர வேண்டும்.

8. பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிவகுக்கும்.

9. தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர் அடிமனமே இதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

10. நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி இன்றியமையாததாகும்.

Tuesday, July 1, 2014

அனுபவம்

வாலால் தேளும் வாயால் பாம்பும் விடமென அறிந்து 

அடி முதல் முடிவரை ஆய்ந்து பாராது அழியாதே 

மனிதனை கயவானாக்குவது வளமையும் அதிகாரமும்தான்

மனிதனை புனிதனாக்குவது அறிவும் அனுபவமும்தான்

ஆசிரியரோ போதித்த பிறகே தண்டிக்கிறார்

அணுபவமோ தண்டித்த பிறகே போதிக்கிறது

காற்றுக்கு ஏற்ப மாறாதவன் கடலில் மூழ்குவான்

காலத்துக்கு தக்க மாறாதவன் கவலையில் மூழ்குவான்

தெளிந்தது கொண்டு தெளிய அறிவது நம்பி உறுதி கொண்டு

சிறிது சிறிதாக அறிவினை வளர்த்து அனுபவம் பெறுவார்     அறிஞர்

சுட்ட தங்கமும் துயர் பட்ட மனமும் புகழ் பெறுமே

துட்ட மனமும் தரம் கெட்ட மனிதரும் இதழ்பெறுவாரே

உலகை புத்தகத்தில் படிப்பது நிழலை காதலிப்பதாகும்

உலகையே புத்தமாக படிப்பது நிலவையே காதலிப்பதாகும்

கல்லிலும் நார் உரிப்பவர் கயவர்
கவலையிலும் பாடம் கற்பவர் அறிஞர்

பிறர் அனுபவத்தை பாடமாக கேட்பவன் காது உள்ளவன்

பிறர் பாடத்தை அனுபவமாக பார்ப்பவன் கண் உள்ளவன்

நம் பாதையை மறிப்பவர் எல்லாம் திருடருமல்ல 
ஆபத்தை தவிர்ப்பவராகலாம்

நம் கருத்தை மறுப்பவர் எல்லாம் பகைவருமல்ல 
நம் அழிவை தடுப்பவராகலாம்

Tuesday, June 24, 2014

தோல்வியை வெல்லும் தியானம்

தோல்வியை வெல்லும் தியானம்

தோல்வி என்று ஒரு நிகழ்ச்சி நடந்துவிட்டால் மனிதர்களின் மனம் அந்த தோல்வியில் இருந்து சாமான்யமாக வெளி வராது.

காரணம் உங்களுடைய ஆழ்மனது தான்.

உங்களுடைய நடத்தைகள் அனைத்திற்கும் உங்களுடைய ஆழ்மனதுதான் காரணம்.  நீங்கள் ஒரு செயலை தவறு என்று நினைத்தீர்கள் என்றால் அந்த நினைவு அப்படியே உங்கள் ஆழ்மனதிற்கு எடுத்து செல்லப்பட்டு நீங்கள் செய்யும் செயல் தவறு என்று பதியப்படுகிறது. பிறகு அந்த செயலை சரி என்று யாராவது சொன்னாலும் உங்களது ஆழ்மனது இல்லை அந்த செயல் தவறானது என்று ஞாபகபடுத்தும். உங்களது செயலும் உங்கள் ஆழ்மனது என்ன சொல்கிறதோ அதன் பிரகாரம்தான் நடந்து கொள்வீர்கள்.

இதேபோன்றுதான் ஒரு நல்ல மனிதரை நீங்கள் கெட்டவர்  என்று முடிவு செய்து விட்டீர்கள் என்றால் அந்த சிந்தனை அப்படியே உங்கள் ஆழ்மனதினில் பதிந்துவிடும். அதன் பின்பு யார் சொன்னாலும் உங்கள் எண்ணத்தை மாற்றி கொள்ளமாடீர்கள்.     

எனவே ஒரு மனிதனுடைய சிந்தனை, செயல்கள் அனைத்தும் அவன் ஆழ்மனதினில் பதியப்பட்டு, அந்த ஆழ்மனதின் உந்துதலினால்தான் அவனுடைய தொழில், வேலை, குடும்பம் போன்றவற்றில் பிரதிபலிக்கும்.

இதுகுறித்து அந்த காலத்தில் வெளிவந்த ஒரு திரைப்பட பாடல்.

"உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பாத்துக்க நல்லபடி"

அதனால்தான் "எண்ணம் போல் வாழ்வு" என்று ஒரு பல மொழி உண்டு.

நல்லவற்றை பற்றி நினைக்கும்போது அந்த நல்லவைகள் உங்கள் ஆழ்மனதினின் அடித்தளத்தில் பதியப்பட்டு உங்களுடைய பேச்சு, செயல்கள், சிந்தனைகளில் பிரதிபலித்து உங்களுக்கு நன்மையை தரும்.

அதேபோன்று கெட்டவைகளை நினைக்கும்போது அவை அப்படியே உங்கள் ஆழ்மனதினில் பதியப்பட்டு உங்களுடைய பேச்சு, செயல்கள், சிந்தனைகளில் பிரதிபலித்து உங்களுக்கு கெட்டவைகளை தரும். 

மனிதனின் ஆழ்மனது என்பது ஒரு ஒலி  நாடாவை போன்றது. எது எப்படியோ அதை அப்படியே பதிவு செய்து வெளிபடுத்தும். 

மனிதனின் ஆழ்மனது என்பது ஒரு xerox இயந்திரத்தை போன்று உள்ளதை உள்ளபடி  பதிவு செய்யும்.

மனிதனின் ஆழ்மனது என்பது ஒரு கண்ணாடியை போன்றது. எது எப்படியோ அதை அப்படியே பிரதி பலிக்கும். 

நீங்கள் தோல்வியை எதிர்கொள்ள வேண்டும் என்றால் அல்லது அதை வெற்றி கொள்ள வேண்டும் என்றால் அதை ஒரு இழப்பு ஆக எடுத்து கொள்ளாதீர்கள்.
தோல்வி தரும் பாடங்களை வெற்றிக்குண்டான அனுபவமாக எடுத்து கொள்ளுங்கள். இல்லையென்றால் தோல்வியை ஒரு அவமானமாக நீங்கள் 
நினைத்தீர்கள் என்றால் அந்த சிந்தனை உங்கள் ஆழ்மனதினில் பதியப்பட்டு உங்களுடைய பேச்சிலும் செயலிலும் பிரதி பலிக்கும். 

நான் நினைக்கிறேன் இந்த காரியம் நடக்காது, நான் நினைக்கிறேன் என்னால் அங்கு போக முடியாது, நான் நினைக்கிறேன் என்னால் அந்த செயலை செய்ய முடியாது என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் அவை அத்தனையும் உங்கள் ஆழ்மனதினில் பதியப்பட்டு நடக்கும் காரியங்கள் அத்தனையும் உங்களுக்கு பாதகமாகவே நடக்கும். 

இதை விடுத்து என்னால் அதை செய்யமுடியும், அங்கு போக முடியும், அந்த காரியம் நடக்கும் என்று சிந்தித்து பாருங்கள் உங்கள் சிந்தனைகள் அப்படியே ஆழ்மனதினில் பதியப்பட்டு உங்களுக்குள்ளேயே ஒரு உற்சாகம் பிறக்கும். 

நீங்கள் தடையென்று நினைக்கும் எந்த ஒரு காரியமும் உங்கள் நினைப்பில்தான் இருக்கிறது. நினைப்பை மாற்றி கொண்டீர்கள் என்றால் அந்த தடையை தகர்த்து எறிந்து விடலாம். அதற்கும் உங்கள் ஆழ்மனதுதான் காரணம். 

விளையாட்டு வீரர்களை எடுத்து கொள்ளுங்கள். நேற்று தோற்றவர் இன்று சாம்பியன் ஆகி விடுகிறார். காரணம் அவருடைய நினைப்புதான். நாம் எப்படியாவது இன்று சாம்பியன் ஆகி விடவேண்டும் என்ற நினைவு அவருடைய ஆழ்மனதினில் பதியப்பட்டு அவர் வெற்றி அடைவதற்கான யுக்திகளை எடுத்து கொடுத்து அவரை  சாம்பியன் ஆக்குகிறது. 

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் தோல்விகள் தரும் அனுபவங்களை மட்டும் மதிப்பு கொடுங்கள். அனுபவங்களை மட்டும்  உங்கள் ஆழ்மனதிற்கு எடுத்து செல்லுங்கள். அந்த அனுபவங்கள் அவ்வபோது உங்கள் ஆழ்மனதினில் இருந்து வெளிவந்து நீங்கள் வெற்றி அடைவதற்கு வழி  செய்யும். 

சரி இந்த ஆழ்மனதுக்கும் தியானத்துக்கும் சம்பந்தம் உண்டா?

நிச்சயம் உண்டு. உங்கள் ஆழ்மனதை சென்றடையும் ஒரே சக்தி தியானம் 
மட்டும்தான். தியானம் உங்கள் ஆழ்மனதினை ஊடுருவி சென்று அங்கு இருக்கும் அல்லது பதிய பட்டிருக்கும் தோல்வி கரமான சிந்தனைகளை கிளறி வெளி கொண்டு வந்து உங்கள் மனதை இலகுவாக்குகிறது. 

தோல்வி கரமான சிந்தனைகள் மனதினில் இருந்து அகற்றப்படும் போது மனது சரியாக சிந்தனை செய்ய ஆரம்பிக்கிறது. எது சரி, எது தவறு என்று சரியாக சிந்தனை செய்ய ஆரம்பித்து அதன் பிரகர்ரம் உங்களை நடக்க செய்கிறது. தவறானவைகளை கண்டு கலக்கம் அடையாமல் உங்கள் சிந்தனை செயல்களை முறைபடுத்துகிறது. எனவே தியானம் என்னும் அற்புத கலையின் மூலம் வாழ்க்கை, தொழில், வேலை மற்றும் இதர அமசங்களிலும் வெற்றி பெறலாம் என்பதில் சந்தேகம் இல்லை.              

அறிஞர்களின் பொன் மொழிகள்

அறிஞர்களின் பொன் மொழிகள்

* எளிமையும் தூய்மையும் ஒருவனை உயர்ந்த மனிதனாக உயர்த்துகின்றன. அநீதியானது மனிதர்களிடையே சச்சரவுகளை விளைவிக்கிறது. நீதியோ தோழமையை வளர்க்கிறது.

* அறிவுள்ளவன் தன் செல்வத்தை மூளையில் வைத்திருக்க வேண்டும். தன் இதயத்தில் வைத்திருக்கக் கூடாது.

* உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமானால் யாருக்காகவும் காத்திருக்காதீர்கள். நேரத்தை வீணாக்காதீர்கள்.

* சட்டங்கள் ஏழைகளைக் கசக்கிப் பிழிகின்றன. பணக்காரர்களே சட்டத்தை ஆட்சி செய்கின்றனர்.

* அறிவாளிகள் பணத்திற்கு அடிமையாக இருப்பதால் தம் அறிவை விலை கூறுகின்றனர்.

* வேதனையைச் சகித்துக் கொண்டவனே எப்போதும் வெற்றி பெறுவான். ஒருவனிடம் அச்சம் கொண்டால் அவனிடம் அன்பு கொள்ள முடியாது.

* ஒருவனுக்கு நீ செய்த உதவிகளை அவனிடம் அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருப்பது அவனைப் பழிப்பது போலாகும்.

* சோம்பலும் சோர்வு கொண்டு நூறு ஆண்டு வாழ்வதை விட ஒருநாள் பெரு முயற்சியோடு வாழ்வது மேலானது.