Wednesday, April 1, 2015

கலங்கிய வீரத்துறவி! (ஆன்மிகம்)ஜூலை 4 – விவேகானந்தர் நினைவுநாள்!

கலங்கிய வீரத்துறவி! (ஆன்மிகம்)ஜூலை 4 – விவேகானந்தர் நினைவுநாள்!

“வீரன் ஒருநாள் தான் சாகிறான், கோழை தினமும் சாகிறான்…’ என்று வீரமொழி பேசிய விவேகானந்தரே ஒருசமயம் கண் கலங்கியிருக்கிறார் என்றால் ஆச்சரியமாகத் தானே இருக்கிறது. எதற்காக அவரது கண்களில் நீர் முட்டியது?

ஜன., 12,1863ல் மக்கள், மகரசாந்தி பண்டிகையைக் கொண் டாடிய நன்னாளில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உதித் தார் சுவாமி விவேகானந்தர். உலகில் எவ்வளவு நாள் வாழ்கிறோம் என்பதை விட, என்ன சாதிக் கிறோம் என்பதே மிக முக்கியம். விவேகானந்தர் 39 ஆண்டுகள் தான் இந்த பூமியில் வாழ்ந்தார். ஜூலை 4, 1902ல் இயற்கை அவரை தன்னோடு அணைத்துக் கொண்டது; ஆனால், இந்த குறுகிய காலத்தில் அவர் செய்த சாதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

இந்த தேசம் வறுமையிலும், அடிமைத்தனத்திலும் மூழ்கிக் கிடக்க காரணம் என்ன என்பது பற்றி அவர் ஆராய்ந்தார். அதற்கு விடை, அவருக்கு கன்னியாகுமரியில் கிடைத்தது. 1892ல் குமரிமுனைக்கு வந்து, பகவதி அம்மனை தரிசித்தார்.

“அம்மா, மகாசக்தி! நீ இமயத் தில் பார்வதியாய் இருக்கிறாய்; இங்கே பகவதியாய் வீற்றிருக் கிறாய். கன்னியாக இருந்தாலும் நீ உலகத்தின் தாயல்லவா! இங்கு அந்நியர்களின் அரசாட்சி நடக்கிறது. மக்கள் தங்கள் நிலையை மறந்து, அந்நியர் களின் கலாசாரத்தைப் பின்பற்றுகின்றனரே! இது அவர்களைப் பாழ்படுத்திக் கொண்டிருக் கிறதே! இதற்கு தீர்வு என்ன?’ என்று முறையிட்டார்.

தன் கேள்விக்கு விடை வேண்டு மானால் தனிமை வேண்டுமெனக் கருதி கடலில் குதித்து, நீச்சலடித்து ஒரு பாறையை அடைந்தார். அங்கே தியானத்தில் ஆழ்ந் தார். அவரது உள்ளுணர்வில் பல எண்ணங்கள் ஓடின; அவை, காட்சிகளாக மலர்ந்தன. பாரதம் அவரது கண்களின் முன் பரந்து விரிந்தது. இங்கே மொழிகளும், மக்களின் பழக்க வழக்கங்களும் மாறுபட்டிருந் தாலும், இவர்களையெல்லாம் இணைக்கும் பாலமாக வேதங் களும், ஆகமங்களும், புராணங் களும், சித்தாத்தங்களும் இருப்பது தெரிந்தது.

ஒவ்வொரு இந்தியனும், ஏதோ வாழ்ந்தோம், மடிந்தோம் என்பதற்காக பிறக்கவில்லை; இந்த ஆன்மிக அமுதத்தை ருசிக்கவே அவன் பிறந்திருக் கிறான். இந்த மக்களை ஆன்மிகத்தின் மூலமாக மட்டுமே இணைக்க முடியும். ஆன்மிகமே இந்தியாவை இணைக்கும் பாலம் என்பது புலப்பட்டது.

அதேநேரம், வறுமையில் சிக்கித் தவிக்கும் இந்தியனிடம் ஆன்மிகத்தைப் பற்றி போதித் தால் எடுபடாதே! அவனது பசியைப் போக்கிவிட்டு, ஆன்மிகத் தைப் போதித்தால், அவனிடம் ஒழுக்கக்கேட்டை உருவாக்கும் அந்நிய கலாசார பழக்கங்களை போக்குவது குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்தலாம். ஆனால், அவனது பசியைப் போக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பெரும் பணம் வேண்டுமே! அப்போது தான் அவரது கண்கள் கலங்கின.

அந்த கலங்கிய கண்கள் கடலை நோக்கிச் சென்றன. அந்தப் பார்வை அமெரிக்காவைக் காட் டியது. சனாதன தர்மம் எனப் படும் இந்துமத கொள்கைகள் அந்த தேசத்தில் ஒலிக்குமானால், அது உலகையே எட்டும். அங்கே நடக்கப்போகும் சர்வமத மகாசபை கூட்டத்தில் நமது கருத்துக் களை ஏற்கும் வகையில் பேச வேண்டும். அதற்காக தரப்படும் பொருளைக் கொண்டு நமது தேசத்தில் மடங்களை நிறுவ வேண்டும். அதற்கு நம் குருநாதர் ராமகிருஷ்ணரின் பெயரை வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.

குமரியில் பிறந்த இந்த சிந் தனை பெரும் சிரமத்தின் பேரில் வெற்றியும் பெற்றது; நமது தேசத்தின் மாண்பு காப்பாற்றப் பட்டது. இன்று ராமகிருஷ்ண மடங்கள் பாரதமெங்கும் விரிந்து கிடக்கின்றன.

இந்த அரிய சாதனையைப் படைத்த விவேகானந்தருக்கு அவரது 107வது நினைவுநாளில் வீர அஞ்சலி செலுத்துவோம்.

விவேகமானவரா மாற வேண்டுமா? (ஆன்மிகம்)

விவேகமானவரா மாற வேண்டுமா? (ஆன்மிகம்)

தார்மீக விஷயங்களையும், தெய்வீக, வேதாந்த விஷயங்களையும் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் முதலில் சிரத்தையும், பிறகு, பொறுமையும் இருக்க வேண்டும். “இதெல்லாம் நமக்கு வேண்டாம்பா…’ என்று சிலர் சொல்லலாம்.

பின்னே எது தான் வேண்டும்? எது, வாழ்க்கைக்கு உதவக் கூடியது, எது, அறிவை வளர்ப்பது, எது, மன நிம் மதியை அளிக்கக் கூடியது? மற்ற விஷய சுகங்களெல்லாம் மன சஞ்சலத்தை உண்டு பண்ணக் கூடியவைகளே! நிதானமாக சிந்தித்தால் தெரியும்.

பருத்தி பளபளப்பாக உள்ளது போல் சான் றோரின் வாழ்க்கையும் ஒளி வீசுகிறது. விருப்பு, வெறுப்பு இல்லாமையால் சுவையற்றது. பருத்தி பல கஷ்டங்களுக்கு உட்பட் டாலும், நம் உடலை மறைக்கும் துணியாகிறது. சான்றோரும் மற்றவர் களின் குறை, குற்றங்களை நீக்க பல இன்னல்களை மேற்கொள் கின்றனர்.

சான்றோர் நட்பு (சத்சங்கம்) கிடைத்தால் காக்கை குயிலாகவும், வாத்து அன்னமாகவும் மாறி விடும் தன்மை பெறுகின்றன. அதுபோல, குறைகள் உள்ளவர்களும் சான்றோரின் நட்பால் உயர்வு பெறலாம். வேடரான வால்மீகி, நாரதரின் தொடர்பால் ராம நாம உபதேசம் பெற்று முனிவரானார்.

ஒரு வேலைக்காரியின் புதல்வராக இருந்த நாரதர், மகான்களின் சேர்க்கையால் ஞானம் பெற்று, அடுத்த பிறவியில் பிரம்மாவின் புதல்வரானார். சத் சங்கத்தின் மூலமே இவர்களுக்கு உயர்வு ஏற் பட்டது.

சத் சங்கத்தின் மூலம் தான் அறிவு, புகழ், முன்னேற்றம், செல் வம், மங்களம் ஆகியவற்றை எந்த இடத்திலும், எந்த காலத்திலும் பெற முடியும்.

சான்றோர் நட்பின்றி விவேகம் வராது; விவேகம் இன்றி பக்தி வராது; பக்தி இன்றி ஆண்டவன் அருள் கிடைக்காது; அருள் இன்றேல், சித்திகள் ஏற்படாது.

சாதுக்கள் சலனமற்ற மனம் உடையவர்கள். அவர்களுக்கு நண் பன்-பகைவன் என்று யாரும் கிடையாது. மலரானது எப்படி வலது, இடது என்று வேற்றுமை இல்லாமல் இரு கைகளுக்கும் மணம் அளிக்கிறதோ, அப்படி சான்றோர் எல்லாரிடமும் அன்பு காட்டுவர்.

சான்றோர் தூய உள்ளம் கொண்டவர் கள், உலக நன்மையை நாடுபவர்கள், உலக நன்மைக்கு எதிராக அவர்கள் எதையும் விரும்ப மாட்டார்கள். உலகம் நலமாக இருக்க வேண்டும் என்பதையே அவர்கள் விரும்புவர்.

நாமெல்லாம் எப்படியோ… சான்றோர் வரிசையில் சேர முடியுமா? எண்ணம்தான் காரணம்!

கனவில் வந்த நெல்லையப்பர்! (ஆன்மிகம்)

கனவில் வந்த நெல்லையப்பர்! (ஆன்மிகம்)

“செ”செப்பறை’ என்றால், தாமிர அறை என பொருள்படும். நடராஜரின் பஞ்சசபைகளில் ஒன்றான தாமிரசபை இங்கு தான் முதலில் அமைந்ததாகச் சொல்லப் படுவதால், செப்பறை என பெயர் ஏற் பட்டிருக்கலாம். இங்கு நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் கோவில் அமைந் துள்ளது.  திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலைக் கட்டிய முழுதும்கண்ட ராமபாண்டிய மன்னரே, செப்பறை கோவிலை யும் கட்டினார்.  திருநெல்வேலி அருகில் உள்ள மணப் படைவீடு என்னும் ஊரில் அரண்மனை அமைத்து தங்கியிருந்தார் முழுதும் கண்ட ராமபாண்டியன். தினமும் நெல்லையப்பர் கோவிலுக்கு நடந்தே சென்று ஆண்டவனை வணங்கி வந்த பின்னரே உணவருந்துவது அவரது வழக்கம்.

ஒரு நாள் தாமிரபரணியில் வெள்ளம் அதிகமாக ஓடியதால் ஆற்றைக் கடந்து கோவிலுக்கு செல்ல இயலவில்லை. எனவே, அன்று முழுவதும் உணவு உண்ணாமல், அரண்மனைக்கு திரும்பி நெல்லையப்பரின் நினைவுடன் உறங்கிவிட்டார்.  அவரது கனவில், ஒரு முனிவரின் வடிவில் நெல்லையப்பர் தோன்றி, “என்னை தினமும் நடந்தே வந்து தரிசிக்கும் உனக்கு வசதியாக நீ தங்கியிருக்கும் இடத்தின் அருகிலேயே நான் கோவில் கொள்ள உத்தேசித்துள்ளேன். நீ என்னை அங்கு பிரதிஷ்டை செய்து வணங்கி வருவாயாக…’ என்று கூறி மறைந்தார்.

மறுநாள் கனவில் எழுந்தருளிய நெல்லையப்பர், “சிதம்பரத்திலிருந்து இரண்யவர்மன் என்னும் சக்கரவர்த்தியிடம் பணிபுரிந்த சிற்பி ஒருவர், நடராஜ பெருமானின் சிலையை சுமந்து இங்கு வருவார்; எந்த இடத்தில், அந்த சிலையை அவர் இறக்கி வைக்கிறாரோ, அந்த இடத்தில் எனக்கும், காந்திமதி அம்மைக்கும், நடராஜருக்கும் சன்னதி அமைக்க வேண்டும். கோவில் அமையும் இடத்தில் உள்ள குழிக்குள் எறும்புகள் சாரை, சாரையாக ஊர்ந்து செல்லும். அதை அடையாளமாக கொண்டு கோவில் அமைக்கலாம்…’ என்றார்.

இந்த நல்ல நாளுக்காக காத்திருந்தார் மன்னன். நெல்லையப்பர் சொன்னபடியே, சிற்பி ஒருவன் நடராஜர் சிலையை சுமந்துவர, ஒரு இடத்தில் கனம் அதிகரித்தது. அந்த இடத்தில் அவர் சிலையை வைத்துவிட்டார். களைப்பின் காரணமாக உறங்கிய அவர், விழித்துப் பார்த்தபோது சிலையைக் காணவில்லை.

இதுபற்றி மன்னரிடம் அவர் முறையிட்டார். அதிர்ச்சியடைந்த மன்னர் சிலையைத் தேடிச் செல்லவே, ஒரு இடத்தில் நடனமாடும் ஒலி கேட்கவே, அங்கு சென்று பார்த்தபோது திருத்தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார் நடராஜர். அவ்விடத்தை அடையாளமாக கொண்டு முழுதும்கண்ட ராமபாண்டியன் கோவில் எழுப்பினார்; நெல்லையப்பரின் பெயரால் இந்த கோவில் அமைந்தாலும் நடராஜருக்கே இங்கு முக்கியத்துவம். ஆனி மாதத்தில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பிரம்மோற்சவம் நடக்கும்போது இங்கும் அதே விழா நடக்கும். இயற்கை எழில்மிக்க இந்த கிராமம் திருநெல்வேலி – மதுரை ரோட்டில் உள்ள தாழையூத்தில் இருந்து பிரியும் சாலையில் பத்து கி.மீ.தொலைவில் உள்ளது.

ஜூன் 20 – செப்பறை கோவில் ஆனித்திருவிழா!

பரலோக பாக்கியம் வேண்டுமா? (ஆன்மிகம்)

பரலோக பாக்கியம் வேண்டுமா? (ஆன்மிகம்)

“ஓம் நம சிவாய, ஓம் நம சிவாய’ என்று சாதுக்கள் அடிக்கடி சொல்வதைக் கேட்டிருக்கிறோம். சிவ நாம ஜெபம் எம பயத்தைப் போக்கும் என்பர். பரமேஸ்வரனை ஆராதித்து வழிபட்டால், எம பயம் இராது. பிரதோஷ காலமும், சிவராத்திரி காலமும் சிவனுக்கு உகந்த காலங்கள். அந்த காலங்களில் சிவ வழிபாடு செய்பவர்களுக்கு சகல பாக்கியங்களையும் அளித்து, மோட்சத்தையும் ஈசன் அளிக்கிறான்.

சிவனை வழிபடும் போது ஸ்ரீ ருத்ர ஜெபம் செய்வது வழக்கம். அதையடுத்து சமகம் என்பதையும் சொல்வர். ருத்ரத்தில் பரமேஸ் வரனுடைய குணாதிசயங்களை வர்ணித்துவிட்டு நமஸ்காரம் செய்ய வேண்டும். இதில், நமஸ்காரத்தை முதலில் சொல்லிக் கொண்டு, பிறகு பரமேஸ்வரனை பற்றிய வாக்கியங்கள் வருகின்றன.

எடுத்தவுடன் நமஸ்காரம் செய்துவிட்டால், பரமேஸ்வரன் மகிழ்ந்து போகிறார். அதன் பிறகு நாம் சொல்வதையெல்லாம் அன் புடன் கேட்டு அனுக்ரகம் செய்து மோட்சத்தையும் அளிக்கிறார்.

ஒரு வித்வான், “ஏ, பரமேஸ்வரா! முன் ஜென்மத்தில் நான் உன்னை நமஸ்காரம் செய்யவில்லை. இதை எப்படிச் சொல்ல முடிகிறது என்றால், முன் ஜென்மத்தில் உன்னை நமஸ்காரம் செய்திருந்தால் எனக்கு இந்தப் பிறவி கிடைத்திருக்காது! இந்த பிறவி கிடைத்திருப்பதால் முன் ஜென்மத்தில் உன்னை நான் நமஸ்காரம் செய்யவில்லை என்று தெரிந்து கொண்டேன்.

“அப்படி நமஸ்காரம் செய்யாத தற்கு என்னை மன்னித்துவிடு. ஆனால், இப்போது இந்த ஜென்மாவில் உன்னை நமஸ்காரம் செய்கிறேன்; நான் மறுபடியும் அடுத்த ஜென்மாவில் உன்னை நமஸ்காரம் செய்யப் போவதில்லை; அதற்காகவும் மன்னித்து விடு. ஏன் தெரியுமா? இந்த ஜென் மாவில் உன்னை நமஸ்காரம் செய்தவனுக்கு மறு ஜென்மா கிடையாதே! மறு ஜென்மாவே இல்லாதபோது நமஸ்காரம் எப்படி செய்ய முடியும்?

“அதனால், சென்ற ஜென்மாவுக்காக ஒரு நமஸ்காரம், இந்த ஜென்மாவுக்காக ஒரு நமஸ்காரம், அடுத்த ஜென்மாவுக்காக ஒரு நமஸ்காரம், ஆக மூன்று நமஸ்காரம்! என்னை ரட்சிக்க வேண்டும்…’ என்று பிரார்த்தித்தாராம்.

இப்படி சுலபமாக முக்தி பெறு வதற்கான வழி சிவ நாம ஜெபம், சிவ வழிபாடு, நமஸ்காரம் எல்லாம் சொல்லப்பட்டுள்ளது. ஆக, பரமேஸ்வரனை பிரார்த் தித்தால், வாழ்நாளில் சுகமும், பரலோக சுகமும் கிடைக்கிறது.

குழந்தைகளுக்கு பக்தி புகட்டுவோம்! (ஆன்மிகம்)

குழந்தைகளுக்கு பக்தி புகட்டுவோம்! (ஆன்மிகம்)

ஆண்டவன் தொண்டு என்றாலும், ஆன்மிக நூல்களை வாசிப்பதென்றாலும் அது வயதானவர் களுக்கு மட்டுமே என்று ஒதுக்கிவிடுகிறோம். ஆனால், குழந்தைப் பருவத்தில் ஏற்படும் பக்தி, ஒருவரை உயர்நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

குழந்தையாக திருஞானசம்பந்தர் இருந்தபோது செலுத்திய பக்தி, அவர் இறைவனின் குழந்தையாகவே மாறுவதற்குரிய சந்தர்ப்பத் தைத் தந்தது. இதனால் இவரை, “இளைய பிள்ளையார்’ என்று அடைமொழி கொடுத்து அழைக்கிறோம்.

சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர்- பகவதியம்மாள் தம்பதியரின் செல்வப்புதல்வராக அவதரித்தார் திருஞானசம்பந்தர். மூன்று வயதுக் குழந்தையான சம்பந்தரை, அவரது தந்தை தினமும் தோணியப்பர் கோவிலுக்கு அழைத்துச் செல் வார். அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் (குளம்) நீராடும் போது, குழந்தையை கரையில் அமர்த்தி விடுவார். குழந்தை சம்பந்தன் அங்குமிங்கும் வேடிக்கை பார்ப்பார். ஒரு தோணியில், சிவபார் வதி பவனி வருவது போன்ற சிற்பம் அங்கு இருக் கும். அதை ரசித்தபடியே இருப்பார்.

ஒருநாள் நல்ல பசி. குளிக்கச் சென்ற இருதயர் திரும்பவில்லை. கரையில் இருந்த குழந்தை அழ ஆரம்பித்து விட்டது. அப்போது, அம்பாள் அவர் முன் வந்தார். கையில் கொண்டு வந்த பொற் கிண் ணத்தில் பால் நிரம்பியிருந்தது. குழந்தைக்கு அதைப் புகட்டினாள். அப்படியே மறைந்து விட்டாள்.

குளித்துவிட்டு வந்த இருதயர் குழந்தையின் வாயில் வழிந்திருந்த பாலைப் பார்த்துவிட்டு,

“பிறர் கொடுக்கும் பாலைக் குடிக்கலாமா? யார் கொடுத்தது இது?’ என்று அதட்டினார்.

“தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடி

காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம்

கவர் கள்வன் ஏடுடைய மலரான் உனை நாள் பணிந்தேத்த அருள் செய்த பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே…’

—என்று துவங்கி ஒரு பதிகத்தைப் பாடியபடியே தோணியப்பரையும், அம்பிகையையும் சுட்டிக்காட்டியது குழந்தை. பதிகம் என்பது 11 பாடல்களைக் கொண்டது. இந்தப் பதிகத்தைப் பாடுவோருக்கு முன்வினை பாவங்கள் எல்லாம் தீர்ந்து விடும் என்று பாடி முடித்தார்.

ஒரு குழந்தைக்கு இவ்வளவு ஞானமா? இருதயரும், கோவிலுக்கு வந்த பக்தர்களும் ஆச்சரியப்பட்டனர்.

சம்பந்தரின் பாடல்களில் ஒரு விசேஷம் உண்டு. இவர் பாடும் ஒவ்வொரு பதிகத்தின் கடைசிப் பாடலிலும் தன் பெயரை அவர் குறிப்பிட்டிருப்பார்; அதாவது, இந்தப்பாடல் ஞானசம்பந்தனாகிய தன்னால் தரப்பட்டது என்று சொல்லியிருப்பார்.

இவரது முதல் பாடலைப் போல கடைசிப்பாடலும் மிகவும் உயர்ந்தது. இவருக்கு நிச்சயிக்கப்பட்ட முதல் திருமணம் சில காரணங்களால் நின்று போனது. பின்னர், திருப்பெருமணநல்லூர் எனப்படும் ஆச்சாள்புரத்தில் வசித்த பெண்மணியுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணமக்கள் யாக குண்டத்தை வலம் வந்த போது, தன் இனிய குரலில், “காதலாகிக் கசிந்து’ எனத்

துவங்கும் பதிகத்தைப் பாடினார் சம்பந்தர். அவர் பாடி முடித்ததும், மாப்பிள்ளை – மணப் பெண்ணுடன், திருமணத்தில் பங்கேற்றவர்களும் அந்த ஜோதியில் கலந்து விட்டனர்.

சிவஜோதியில் சம்பந்தர் கலந்த நாளை குருபூஜை யாக எல்லா சிவாலயங்களிலும் வைகாசி மூலம் நட்சத்திரத்தன்று நடத்துவர். சீர்காழி தோணியப் பர் கோவிலில் இந்த நிகழ்ச்சி மிகவும் விசேஷம்.

சம்பந்தரின் வரலாறு, குழந்தைப் பருவத் திலேயே பக்தியைப் புகட்ட வேண்டும் என்பதை தெளிவாகச் சொல்கிறது.

நம்பினார் கெடுவதில்லை! (ஆன்மிகம்)

நம்பினார் கெடுவதில்லை! (ஆன்மிகம்)

களங்கமற்ற, முழுமையான இறை நம்பிக்கை, இறைவனை நம்மிடம் நேரில் கொண்டு வந்து காட்டும் என் பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி.

இவர், சோழ நாட்டில் தில்லையம்பலமான சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூரில் அவதரித்தார். இங்குள்ள பொள்ளாப்பிள்ளையார் கோவில் மிகவும் பிரபலமானது. “பொள்ளா’ என்றால், உளியால் செதுக்கப்படாதது என்று பொருள்; அதாவது, தானாகவே தோன்றிய சுயம்பு விநாயகர் அவர்.

இந்த விநாயகருக்கு பூஜை செய்து வந்தார் நம்பியின் தந்தை; நம்பிக்கும் பூஜை முறைகளைக் கற்றுக் கொடுத் தார். ஒருநாள், அவர் தன் மனைவியுடன் வெளியூர் செல்ல இருந்ததால், மகனிடம், “இன்று, நீ போய் விநாயகருக்கு நைவேத்யம் செய்து பூஜை செய்து வா…’ என்றார்.

மகிழ்ச்சியடைந்த சிறுவன் நைவேத்திய பொருட்களுடன் கோவிலுக்குச் சென்றான். விநாயகரை வணங்கி நைவேத்யத் தைப் படைத்தான்.

“அப்பனே, விநாயகா! நான் சின்னஞ்சிறுவன். அப்பா ஊருக் குப் போய் விட்டார். உனக்கு தேங்காய், பழம், பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன். ஒன்று விடாமல் சாப்பிடு. குருகுலத்துக்கு கிளம்ப வேண்டும். தாமதமாகச் சென்றால், ஆசிரியர் கோபிப்பார். விரைவில் சாப்பிடப்பா…’ என்றான்.

பிள்ளையார் என்றாவது சாப்பிட்டதுண்டா?

அவர் கல்லாக அப்படியே உட்கார்ந்திருந்தார். பையனுக்கு அழுகை வந்தது…

“இதோ பார்! நீ மட்டும் இப்போது சாப்பிடாவிட்டால் இந்தத் தூணில் முட்டி மோதி இறப்பேன்…’ என்று சொல்லியபடியே, தூணில் முட்டி அழுதான்.

அவனது களங்கமற்ற பக்தி விநாயகரை ஈர்த்தது. அவர் சன்னதியில் இருந்து எழுந்து வந்து, அவனைத் தடுத்து நிறுத்தினார். தும்பிக்கையால் நெற்றியில் வழிந்த ரத்தத்தைத் துடைக்க, காயம்பட்ட வடுவே மறைந்து விட்டது. நம்பியின் விருப்பப்படியே அத்தனை பொருட்களையும் ஒன்று விடாமல் சாப்பிட்டார்.

அவரிடம், “விநாயகா! எப் படியோ இன்று குருகுலம் செல்ல நேரமாகி விட்டது. நான் அங்கு சென்றிருந்தால் அவர் என்ன கற்றுக் கொடுத்திருப் பாரோ, அதை நீயே சொல்லிக் கொடேன்…’ என்றார் நம்பி.

அவனுக்கு அனைத்து ஞானத் தையும் போதித்து, மறைந்து விட்டார் விநாயகர்.

மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தான் நம்பி. பெற்றவர்கள் ஊர் திரும்பியதும் நடந்ததையெல்லாம் சொன்னான். அவர் கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. இந்த விஷயம் ராஜராஜசோழனுக்கு எட்டியது. அவன் நம்பியாண்டார் நம்பியின் இல்லத்துக்கே வந்துவிட்டான். விநாயகருக்கு நைவேத்யம் செய்து அவர் சாப்பிடுவதைக் கண்ணார கண்டு களிக்க வேண்டும் என்றான்.

அதன்படியே, கோவிலுக்குச் சென்று விநாயகரை சாப்பிட வைத்தார் நம்பி. மன்னனும், மக்களும் ஆச்சரியப் பட்டனர். அவரது மகிமையை உணர்ந்த மன்னன், தில்லையம்பலத்தில் பூட்டிக் கிடக்கும் அறையில் மூவர் பாடிய தேவாரமும், தொகையடியார்கள் வரலாறும் இருப்பதைச் சொல்லி, அவற்றை வெளியே கொண்டு வர ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டான்.

அதன்படி, அவர்கள் அங்கு சென்று புற்று மண்டிக்கிடந்த அறையில் இருந்து ஓலைச்சுவடிகளை எடுத்து வந்தனர். நம்பியாண்டர் நம்பி அவற்றை 11 திருமுறைகளாகப் பிரித்தார். அவை இன்றும் நமக்கு இசையின்பத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

குழந்தை போல களங்கமற்ற உள்ளங்களுக்கு கடவுள் தெரிவான் என்பதை நம்பியாண்டார் நம்பி வரலாறு உணர்த்துகிறது.

கீதையில் பதினெட்டு அத்தியாயங்களின் தாத்பரியம்.

கீதையில் பதினெட்டு அத்தியாயங்களின் தாத்பரியம்.

1. விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம்.

2. சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது.

3. கர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம்.

4.ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது.

5. சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது.


6.தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது.

7. ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான் என உணர்வது.

8. அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப்பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது.

9. ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம். கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உணர்வது.ஒன்பதாம் படி.

10. விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது.பத்தாம் படி.

11.விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.

12. பக்தி யோகம். இன்பம் - துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை - பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது.

13. ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல்.

14. குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே.

15. தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது.

16. சம்பத் விபாக யோகம். இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது.

17. சிரித்தாத்ரய விபாக யோகம். சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது.

18.மோட்ச சன்யாச யோகம். யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது.

சத்தியம் நிறைந்த இந்தப் பதினெட்டு அத்தியாயங்களையும் முழு மனதுடன் படித்து, அதன் படி வாழ்ந்து வந்தால், நமக்கு பகவான் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே பதினெட்டு அத்தியாயங்கள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.