கனவில் வந்த நெல்லையப்பர்! (ஆன்மிகம்)
“செ”செப்பறை’ என்றால், தாமிர அறை என பொருள்படும். நடராஜரின் பஞ்சசபைகளில் ஒன்றான தாமிரசபை இங்கு தான் முதலில் அமைந்ததாகச் சொல்லப் படுவதால், செப்பறை என பெயர் ஏற் பட்டிருக்கலாம். இங்கு நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் கோவில் அமைந் துள்ளது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலைக் கட்டிய முழுதும்கண்ட ராமபாண்டிய மன்னரே, செப்பறை கோவிலை யும் கட்டினார். திருநெல்வேலி அருகில் உள்ள மணப் படைவீடு என்னும் ஊரில் அரண்மனை அமைத்து தங்கியிருந்தார் முழுதும் கண்ட ராமபாண்டியன். தினமும் நெல்லையப்பர் கோவிலுக்கு நடந்தே சென்று ஆண்டவனை வணங்கி வந்த பின்னரே உணவருந்துவது அவரது வழக்கம்.
ஒரு நாள் தாமிரபரணியில் வெள்ளம் அதிகமாக ஓடியதால் ஆற்றைக் கடந்து கோவிலுக்கு செல்ல இயலவில்லை. எனவே, அன்று முழுவதும் உணவு உண்ணாமல், அரண்மனைக்கு திரும்பி நெல்லையப்பரின் நினைவுடன் உறங்கிவிட்டார். அவரது கனவில், ஒரு முனிவரின் வடிவில் நெல்லையப்பர் தோன்றி, “என்னை தினமும் நடந்தே வந்து தரிசிக்கும் உனக்கு வசதியாக நீ தங்கியிருக்கும் இடத்தின் அருகிலேயே நான் கோவில் கொள்ள உத்தேசித்துள்ளேன். நீ என்னை அங்கு பிரதிஷ்டை செய்து வணங்கி வருவாயாக…’ என்று கூறி மறைந்தார்.
மறுநாள் கனவில் எழுந்தருளிய நெல்லையப்பர், “சிதம்பரத்திலிருந்து இரண்யவர்மன் என்னும் சக்கரவர்த்தியிடம் பணிபுரிந்த சிற்பி ஒருவர், நடராஜ பெருமானின் சிலையை சுமந்து இங்கு வருவார்; எந்த இடத்தில், அந்த சிலையை அவர் இறக்கி வைக்கிறாரோ, அந்த இடத்தில் எனக்கும், காந்திமதி அம்மைக்கும், நடராஜருக்கும் சன்னதி அமைக்க வேண்டும். கோவில் அமையும் இடத்தில் உள்ள குழிக்குள் எறும்புகள் சாரை, சாரையாக ஊர்ந்து செல்லும். அதை அடையாளமாக கொண்டு கோவில் அமைக்கலாம்…’ என்றார்.
இந்த நல்ல நாளுக்காக காத்திருந்தார் மன்னன். நெல்லையப்பர் சொன்னபடியே, சிற்பி ஒருவன் நடராஜர் சிலையை சுமந்துவர, ஒரு இடத்தில் கனம் அதிகரித்தது. அந்த இடத்தில் அவர் சிலையை வைத்துவிட்டார். களைப்பின் காரணமாக உறங்கிய அவர், விழித்துப் பார்த்தபோது சிலையைக் காணவில்லை.
இதுபற்றி மன்னரிடம் அவர் முறையிட்டார். அதிர்ச்சியடைந்த மன்னர் சிலையைத் தேடிச் செல்லவே, ஒரு இடத்தில் நடனமாடும் ஒலி கேட்கவே, அங்கு சென்று பார்த்தபோது திருத்தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார் நடராஜர். அவ்விடத்தை அடையாளமாக கொண்டு முழுதும்கண்ட ராமபாண்டியன் கோவில் எழுப்பினார்; நெல்லையப்பரின் பெயரால் இந்த கோவில் அமைந்தாலும் நடராஜருக்கே இங்கு முக்கியத்துவம். ஆனி மாதத்தில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பிரம்மோற்சவம் நடக்கும்போது இங்கும் அதே விழா நடக்கும். இயற்கை எழில்மிக்க இந்த கிராமம் திருநெல்வேலி – மதுரை ரோட்டில் உள்ள தாழையூத்தில் இருந்து பிரியும் சாலையில் பத்து கி.மீ.தொலைவில் உள்ளது.
ஜூன் 20 – செப்பறை கோவில் ஆனித்திருவிழா!
No comments:
Post a Comment