Tuesday, June 16, 2015

நீங்கள் செம்மறி ஆடுகள் அல்ல! சிங்கங்கள்!

நீங்கள் செம்மறி ஆடுகள் அல்ல! சிங்கங்கள்!

ஓ சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அமரத்துவம் பெற்ற ஆன்மாக்கள், அழியாத பேரின்பத்தை குழந்தைகள். அப்படியா? இது உண்மையா? உண்மை என்றால் நாம் ஏன் அதனை உணரவில்லை? சுவாமி விவேகானந்தர் கூறும் கதை ஒன்றைக் காண்போம்.

ஓர் அழகிய கிராமம். அந்தக் கிராமத்தில் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தான். அவனிடம் ஆட்டு மந்தை ஒன்று இருந்தது. அவன் தினந்தோறும் மேய்ச்சலுக்காக ஆட்டுமந்தையைக் காட்டுக்கு ஓட்டிச் செல்வான். மாலையில் மீண்டும் ஊருக்கு ஓட்டி வருவான். ஒருநாள், வழியில், அப்போது தான் பிறந்த சிங்கக் குட்டி ஒன்று கிடப்பதையும், அதன் அருகில் தாய்ச் சிங்கம் இறந்து கிடப்பதையும் அவன் காண நேர்ந்தது. தாயை இழந்து, அனாதையாகக் கிடக்கும் சிங்கக்குட்டியிடம் இரக்கம் கொண்ட அவன் அதையும் தூக்கிக்கொண்டு, ஆடுகளோடு வீடு வந்து சேர்ந்தான்.

அந்தச் சிங்கக் குட்டி ஆடுகளோடு ஆடாக வளர்ந்தது. ஆட்டுப்பாலைக் குடித்தது, ஆடுகளைப் போலவே புல் அமர்ந்து, நாளடைவில் ஆடுகள் போலவே கத்தவும் தொடங்கியது. விவசாயியும் அந்தச் சிங்கக் குட்டியை ஆடுகளுடன் மேய்ச்சலுக்குக் கூட்டிச் செல்வான். அந்தச் சிங்கக் குட்டி தன்னை ஓர் ஆடாகவே எண்ணி வாழ்ந்தது.

ஒருநாள், வழக்கம் போல் ஆடுகள் ஆற்றங்கரையில் புல் மேய்ந்து கொண்டிருந்தன. விவசாயி வேறு வேலையாக எங்கோ சென்றுவிட்டிருந்தான். அந்த வேளையில் சிங்கம் ஒன்று அங்கே வந்தது. ஆட்டு மந்தையைக் கண்ட அது ஆடுகள் மீது பாய்ந்தது. ஆடுகள் பயந்து திசைக்கொன்றாக ஓடின.

சிங்கக் குட்டியும் ஆடு போலக் கத்திக்கொண்டு பாய்ந்தோடியது. ஆடுகளிடையே ஒரு சிங்கக் குட்டியும் தன்னைக் கண்டு பயந்தோடுவதைக் கண்ட பெரிய சிங்கத்திற்கு ஆச்சரியம் தாளவில்லை. ஆடுகளை விட்டுவிட்டு, பாய்ந்து சென்று அந்தச் சிங்கக் குட்டியைத் தாவிப் பிடித்தது. மாட்டிக்கொண்ட சிங்கக்குட்டி ஆட்டுக்குட்டி போல் பரிதாபமாகக் கத்தியது.

உடனே அந்தப் பெரிய சிங்கம், ‘ஏன் இப்படி ஆடுபோல் கத்துகிறாய், என்னைப்போல் நீயும் சிங்கமாயிற்றே, பயப்படாதே’ என்று அந்தச் சிங்கக் குட்டியிடம் கூறியது. ஆனால் சிங்கக் குட்டி இதையெல்லாம் கேட்கும் நிலையில் இல்லை. பயத்தால் நடுங்கிக்கொண்டே, ‘என்னை விட்டுவிடுங்கள். நீங்கள் கூறுவதுபோல் நான் சிங்கம் அல்ல. நான் ஆடு தான்’ என்று வாய் குழறக் கூறியது. தான் ஓர் ஆடு என்பதில் அது உறுதியாக இருந்தது.

சிங்கக் குட்டிக்கு எப்படியாவது உண்மையை உணர்த்திவிட வேண்டும் என்று உறுதிகொண்ட பெரிய சிங்கம் அதனைக் கெட்டியாகப் பிடித்து ஆற்றங்கரைக்கு இழுத்துச் சென்றது. அதனைத் தண்ணீரின் அருகே கொண்டுபோய், ‘இதோ இந்த தண்ணீரில் தெரியும் உன் பிம்பத்தைக் கவனமாகப் பார். நாம் இருவரும் ஒரே மாதிரிதானே இருக்கிறோம்’ என்றது.

நீரில் தெரியும் தன் பிம்பத்தையும் பெரிய சிங்கத்தையும் மாறிமாறிப் பார்த்த சிங்கக்குட்டிக்கு வியப்பு தாளவில்லை. ‘உண்மை தானே! என் உருவம் சிங்கத்தின் உருவம்போலவே உள்ளது. அப்படியானால் நானும் சிங்கம் தான்’ என்று தனக்குத் தானே கூறிக்கொண்டது.

சிங்கக் குட்டியிடம் மாறுதலைக் கண்ட பெரிய சிங்கம் காடு அதிர ஒருமுறை கர்ஜித்துவிட்டு, ‘நான் கர்ஜித்தது போல் நீயும் கர்ஜனை செய்’ என்று அதனிடம் கூறியது. சிங்கக்குட்டியும் ஆர்வத்துடன் குரல் எழுப்பியது. பாவம், அந்தக் குரல் ஆடு கத்துவது போல்தான் இருந்தது. மீண்டும் மீண்டும் கத்திப் பார்த்தது. நீண்ட நேர முயற்சிக்குப் பின் சிங்கக் குட்டியின் குரல் மாற்றம் கண்டது. முடிவில் பெரிய சிங்கம் போலவே அது கர்ஜிக்கத் தொடங்கியது.

தன் கர்ஜனையை கேட்ட சிங்கக் குட்டிக்கு ஆனந்தம் தாளவில்லை. தனது உண்மை இயல்பை உணர்ந்த அந்தச் சிங்கக் குட்டி பெரிய சிங்கத்தோடு காட்டிற்குள் பாய்ந்தோடி மறைந்தது.

தன் சொந்த இயல்பை மறந்திருந்த சிங்கக் குட்டியைப் போல தான் நாம் எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்முள் எல்லையற்ற சக்தி அடங்கியுள்ளது. அதை வெளியே கொண்டுவந்து வேலை செய்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும்.

ஒவ்வொருவரின் உள்ளேயும் எல்லையற்ற ஆன்மா உள்ளது. மகத்தானவர்களாக, மேலோர்களாக ஒவ்வொருவருக்கும் மாறுவதற்கான எல்லையற்ற ஆற்றலும் அந்த ஆன்மாவில் உள்ளது. உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள், உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும்; பெருமை வரும்; நன்மை வரும்; தூய்மை வரும்; எவையெல்லாம் மேலானதோ அவை அத்தனையும் வரும்.

ஒரு கருத்தை எடுத்துக் கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு. அதையே கனவு காண். அந்தக் கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா.

மூளை, தசைகள், நரம்புகள் உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும். அந்த நிலையில் மற்ற எல்லாக் கருத்துக்களையும் தவிர்த்து விடு. வெற்றிக்கு இது தான் வழி.

ஓ, சிங்கங்களே! எழுந்து வாருங்கள்; நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அமரத்துவம் பெற்ற ஆன்மாக்கள்; சுதந்திர ஆன்மாக்கள்; அழியாத திருவருளைப் பெற்றவர்கள்.

விவேகானந்தரும் அவரது அன்னையும்!!!

விவேகானந்தரும் அவரது அன்னையும்!!!

என்தாயைப் போல பார்ததில்லை!

தாய்மையைப் போற்றுதல் என்னும் பண்பு சுவாமி விவேகானந்தரிடம் முழுமையாக வெளிப்பட்டது கீழ்க்காணும் வாசகங்கள் அதைப் பறைசாற்றும் விதத்தில் அமைந்துள்ளன. எங்கள் குடும்பங்களில் அன்னையே கடவுள் இவ்வுலகில் தன்னலமற்ற. உண்மையான அன்பு தாயிடம் மட்டுமே இருக்கிறது. அவள் எப்போதும் தான் துன்புற்றபடி பிறர் மீது அன்பைப் பொழிந்து கொண்டே இருப்பாள் என்று சுவாமிஜி கூறியுள்ளார்.

சுவாமிஜி என்ற அற்புத மனிதரை இவ்வுலகிற்கு அளித்த அவரது தாயான புவனேஸ்வரி தேவியைப் பற்றி பல சந்தர்ப்பங்களில் சுவாமிஜி புகழ்ந்து பேசியிருக்கிறார். வாழ்க்கையில் நான் அடைந்த அனைத்திற்கும் என் தாய்க்கு நான் கடமைப்பட்டுள்ளேன் நான் அவளுக்குக் கடன்பட்டிருக்கிறேன் அதை என்னால் திரும்பிக் கொடுக்கவே முடியாது.

புவனேஸ்வரி வடக்கு கொல்கத்தாவில் பிரபலமாயிந்த பெற்றோர்களுக்கு 1841 ஆம் ஆண்டு பிறந்த ஒரே குழந்தை சற்றே குள்ளமாக அழகு மிக்கவராக விளங்கினார் இவர். பின்னாளில் சுவாமிஜியின் மேல்நாட்டு சிஷ்யையான கிறிஸ்டைன் சுவாமிஜியின் தாய் ஒரு அரசியைப் போன்று கம்பீரமாக நடந்து செல்வார். சுவாமிஜியின் கம்பீரமான தோற்றம்.அவருடைய அன்னையிடமிருந்தே அவருக்கு வந்தது என்று அடிக்கடிக் கூறுவது வழக்கம்.

16 வயது விஸ்வநாத தத்தரை புவனேஸ்வரி மணந்த போது அவருடைய வயது 10 மட்டுமே பெரிய கூட்டுக் குடும்பத்தில்,சிறிய மாமனாரும் அவருடைய மனைவியும், புவனேஸ்வரிக்கு மாற்றுப் புடவை கூடத் தராது கொடுமைப்படுத்திய போதிலும் எல்லாவற்றையும் பொறுமையாகச் சகித்துக் கொண்டார். அதே நேரத்தில் மனவுறுதியும் உடல் வலிமையும் எதிர்ப்பேச்சுக்கு இடமின்றி பிறரைப் பணிய வைக்கும் ஆளுமைப் பண்பும் பெற்றவராகத் திகழ்ந்தார் புவனேஸ்வரி தேவி.

தாயின் இக்குண நலன்கள் அனைத்தும் தனயனான சுவாமிஜியிடமும் நிரம்பியிருந்தன. ஒயாத வீட்டு வேலைகளுக்கு இடையிலும் இசை தையல் வேலை ராமாயணம் மகாபாரதம் வாசித்தல் போன்றவைகளுக்கு தினமும் புவனேஸ்வரி நேரம் ஒதுக்கியிருந்தார்.சிறிது ஆங்கிலமும் கற்றிருந்தார் ஆழ்ந்த அறிவும் மதிநுட்பமும் கொண்ட புவனேஸ்வரி மிகவும் பக்தி பூண்டவரும் கூட முதலில் பிறந்த ஆண் குழந்தை இறந்து விட அடுத்தது நான்கும் பெண் குழந்தைகள்.

எனவே ஆண்குழந்தை வேண்டும்மென்று சிவபெருமானை நினைந்து ஒரு வருடம் சோமவார விரதத்தைக் கடைபிடித்தார். எனக்குத் தெரிந்து எந்தப் பெண்ணும் என் தாயைப் போல் நீண்ட நாள் விரதமிருந்து பார்த்ததில்லை என் தாய்மிகுந்த சுயக்கட்டுப்பாடு உடையவர். ஒருமுறை 14 நாட்கள் தொடர்ந்து எதுவும் உண்ணாமல் அவர் விரதம் இருந்துள்ளார் என்று புவனேஸ்வரியைப் பற்றி பெருமிதமாக சுவாமிஜி சொல்வதுண்டு.

புவனேஸ்வரியின் ஒரு வருட விரதத்தின் முடிவில் ஒரு நாள் இரவில் சிவபெருமான் அவரது கனவில் தோன்றி ஓர் ஆண் குழந்தையாக மாறுவதைக் கண்டார் சுவாமிஜியின் தாய். சிவனது அருளால் சுவாமிஜி குழந்தை நரேனாக புவனேஸ்வரிக்குக் கிடைத்தார். புவனேஸ்வரி அற்புதமான நினைவாற்றல் கொண்டவர்.
எனவே தன் தாயின் மடியில் அமர்ந்து இதிகாசம் மற்றும் புராணங்களிலுள்ள கதைகளைக் கேட்கும் வாய்ப்பு சிறுவன் நரேந்திரனுக்குக் கிட்டியது. இத்துடன் வாழ்வில் எதிர்கொள்ள வேண்டிய இடைஞ்சல்கள் துன்பங்கள் ஆகியவற்றுக்கு நடுவிலும் எக்காரணத்தைக் கொண்டும் நல்லொழுக்க விதிகளைக் கைவிடக்கூடாது என்பதை தம் பிள்ளைகளுக்கு ஆணித்தரமாகக் கற்றுத் தந்தார் புவனேஸ்வரி.

குழந்தைகளும் தம் தாயின் மீது மிகுந்த மரியாதை செலுத்தினர் நாங்கள் சிறுவர்களாக இருந்த போது ஒவ்வொரு நாளும் ஒரு தம்ளரில் தண்ணீரை எடுத்து வந்து தாயின் முன் வைத்து அவர் அந்த நீரில் தன் கால்கட்டை விரலை அமிழ்த்திய பின்னர் நாங்கள் அந்த நீரைப் பருகுவோம் என்று தனது மேல்நாட்டு உரைகளில் குறிப்பிடுகிறார். சுவாமிஜி.

புவனேஸ்வரி தேவியின் பெருந்தன்மையைப் பிரதிபலிக்கும் இரு சம்பவங்களை அடுத்துக் காணலாம்.

1.சுவாமிஜியின் தந்தை, நீதி மன்றத்தால் விற்கப்படும் பெரிய சொத்துக்களை விலைக்கு வாங்கி அதைத் திரும்பவும் விற்பது வழக்கம். அத்தகைய சொத்து ஒன்றைஅவர் புவனேஸ்வரியின் பெயரில் வாங்கி வாடகைக்கு விட்டிருந்தார். அவற்றில் குடியிருந்த சில முஸ்லீம்களால் தொடர்ந்து வாடகை அளிக்க முடியவில்லை.

தங்கள் இயலாமையை அவர்கள் சுவாமிஜியின் தந்தை தாயிடம் முறையிட்டனர். சொத்தின் உரிமையாளரான புவனேஸ்வரியிடமே முடிவெடுக்கும் பொறுப்பை விட்டுவிட்டார் விஸ்வநாதர். எந்தப் பணமும் தாராமல் முஸ்லீம்கள் அந்த இடத்திலேயே வசிக்கச் சம்மதித்தார் புவனேஸ்வரி நாளடைவில் அந்த முஸ்லீம்களுக்கே அந்தச் சொத்து உடைமையாகி விட்டது.

2.புவனேஸ்வரியின் மகள் ஜோகேந்திரபாலா 1891 இல் தனது 25 ஆவது வயதில் சிம்லா மலையில் தற்கொலை செய்து கொண்டார். திருமணமான அந்தப் பெண்ணின் மரணம் தாய்க்கு எப்படியொரு துன்பத்தைக் கொடுத்திருக்கும் என்பதை நாம் சொல்லவே வேண்டியதில்லை.

அவரின் மருமகன் மறுமணம் செய்து கொண்டு புது மனைவியை புவனேஸ்வரியிடம் அழைத்து வந்தார். தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்ட சுவாமிஜியின் தாய் இருவரையும் வரவேற்றதுடன் மணப்பெண்ணையும் தன் மகள் போலவே நடத்தினார்.

நரேந்திரர் ஸ்ரீராம கிருஷ்ணரைச் சந்தித்து அவரால் ஆட்கொள்ளப்பட்டு துறவறம் பூண்ட போது. அந்தக் தாயுள்ளம் மௌனமாக தன் மகனை உலகிற்கு ஈந்து விட்டது. சுவாமிஜியின் சகோதரரான பூபேந்திரநாதர் இந்திய விடுதலையை முன்னிட்டு புரட்சி இயக்கத்தில் சேர்ந்து சிறைக்குச் சென்று. பல துயரங்களை அனுபவித்தார்.

இத்தகைய வீர மகனைப் பெற்றதற்காக பலர் புவனேஸ்வரியைப் பாராட்டினர் பூபேனின் பணி இப்போது தான் தொடங்குகிறது நான் அவனை நாட்டிற்காக அர்ப்பணித்து விட்டேன் என்று அஞ்சா நெஞ்சத்துடன் மொழிந்தார் புவனேஸ்வரி.

1900 ஆம் ஆண்டு கொல்கத்தாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடும் மழை பெய்தது ஸ்ரீராமகிருஷ்ணரின் புனித அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடமான காங்குர் காச்சி யோகோத்யானுக்கு புவனேஸ்வரி உணவுப்பொருட்களை அனுப்பி வைத்தார். சுவாமிஜியின் தம்பியான பூபேந்திரர் இடுப்பளவு நீரில் நடந்து சென்று அப்பொருட்களை அளித்து விட்டு திரும்பினார். பொறுமை திறமை உறுதி பெருந்தன்மை இன்னும் என்னென்ன நற்குணங்குள் உண்டோ அவையனைத்தும் புவனேஸ்வரி தேவிக்குச் சொந்தமானவை போலும்.

தன் எழுச்சி மிகும் கருத்துக்களின் தாக்கத்தினால் உலகத்தின் ஆணிவேரையே அசைத்த வீரப்புதல்வன் புதியதோர் தேசம் எழுவதற்கு அடிக்கற்கள் அமைத்த தலைசிறந்த மனிதர் சுவாமி விவேகானந்தர். நம் போன்றோருக்கு அவரைக் கொடையாய் அளித்த புவனேஸ்வரி தேவி எனும் புனிதத் தாயின் தியாக உள்ளம் மிகமிக விசாலமானது விசேஷமானது.

பிடிவாதக் குழந்தைகள்... வழிக்குக் கொண்டுவர டிப்ஸ்!

பிடிவாதக் குழந்தைகள்... வழிக்குக் கொண்டுவர டிப்ஸ்!

'நாம் இருவர்; நமக்கு இருவர்’ என்பது அந்தக் காலப் பிரசாரம். அதற்குப் பிறகு, 'நாம் இருவர் நமக்கு ஒருவர்’ என்று அது சுருங்கியது. ஆனால், அரசு கூறுகிறதோ இல்லையோ, பொதுவாகவே இப்போது இருக்கும் பொருளாதார நெருக்கடி, பள்ளியில் இடம் கிடைக்கப் போராடும் அவலம், கல்லூரிக் கட்டணங்கள், வேலையில்லாத் திண்டாட்டம், திருமணச் செலவுகள்... என்று குழந்தை பிறக்கும் முன்பே அதற்கு செலவழிக்க வேண்டிய தொகையின் கூட்டல் பூதாகரமாக எழுந்து நிற்பதால், 'நமக்கு ஒரு பிள்ளை போதும்’ என்று ஏக மனதாகத் திட்டமிட்டுவிடுகிறார்கள் பல தம்பதியர்.  ஆனால், அந்த 'ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு’ இருக்கிறதே... அதை வளர்ப்பதற்குள்ளாகவே விழி பிதுங்கிவிடுகிறது பலருக்கு. அதிஅற்புதமான ஐ.க்யூ., அருமையான கற்பனைத்திறன், புத்திசாலித்தனம்... இவற்றுடன் அளவு கடந்த சேட்டை, அதிமேதாவித்தனம், எடுத்ததற்கெல்லாம் கோபம், பிடிவாதம் என்ற கலவையாகத்தான் இருக்கிறது இன்றைய சுட்டிகளின் சாம்ராஜ்யம். எதற்கெடுத்தாலும் முரண்டுபிடிக்கும், அடம்பிடிக்கும் குழந்தைகள் இருக்கும் பெற்றோர்களுக்கு, குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சவாலாகவே உருவாகி இருக்கிறது. அவர்களை வழிக்குக் கொண்டுவர வேண்டியது பெற்றோர்கள்தான். ஒரே குழந்தையாக இருப்பதால் விட்டுக்கொடுத்தல், பகிர்தல் எதுவுமே இல்லாமல் வளரும் குழந்தைகளின் பெற்றோர்களுக்காக சில வழிமுறைகளைச் சொல்கிறார் மூத்த உளவியல் ஆலோசகர் சரஸ் பாஸ்கர்.

''ஒரே ஒரு குழந்தை பெற்றுக்கொள்வது சரியா, தவறா என்பது தனிமனிதரைப் பொருத்த விஷயம். ஆனால், அது குழந்தைகளை மிக மோசமாகப் பாதிக்கிறது என்பதற்கான வாழும் உதாரணங்கள் நிறையவே உள்ளன. பல வன்முறைச் சம்பவங்களில், குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்களின் பின்னணியைப் பார்க்கும்போது, இதுபோல பால்யத்தில் தனிமை, பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காமல்போதல் போன்ற விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். அதனால், ஒரு குழந்தை என்றாலும் அதைத் தனிமையில்விடாமல் அரவணைத்து வளர்க்க வேண்டியது பெற்றோரின் தலையாய கடமை.

எந்தக் குழந்தையும் பிறந்து, வளர்ந்து வரும்போதே 'நான் மட்டும்தான்... எனக்கு மட்டும்தான்’ என்று சொல்வது இல்லை. 'தான் மட்டும்’ என்ற அந்த மனோபாவத்தைக் குழந்தைக்கு ஊட்டுவதும் பெற்றோர்கள்தான். என்ன வாங்கி வந்தாலும், 'இது எல்லாமே உனக்குத்தாண்டா செல்லம்’ என்று சொல்லிச் சொல்லியே, அப்படி ஒரு மனோபாவத்தைச் சிறுவயது முதலே வளர்த்துவிடுகிறோம். எனவே, குழந்தைகளிடம் நமது அணுகுமுறை கவனமாக இருக்கவேண்டும்.

இருவருமே வேலைக்குச் செல்லும் வீடுகளில், தங்களுடைய 'இல்லாமையை’ சமரசம் செய்வதற்காகவே, குழந்தை என்ன கேட்டாலும் வாங்கித் தருவது, பக்கத்து வீட்டில் ஏதாவது ஒரு பொருள் வாங்கிவிட்டால், அதைவிடக் கொஞ்சம் விலை உயர்ந்ததாக தன் பிள்ளைக்கு வாங்கித் தருவது நிகழ்கிறது. இதனால் குழந்தைக்கு அந்தப் பொருளின் மதிப்பே தெரியாமல் போய்விடும். இது எல்லாமேதான், பூமராங் போல பின்னாளில் அவர்களையே நோக்கித் திரும்பி வருகிறது.

குழந்தைகள் எதையாவது கேட்டு அடம்பிடிக்கும்போது, மிகக் கடுமையாக எதிர்க்கவும் கூடாது. அதேசமயம், 'என்கிட்ட காசே இல்ல'' என்று அன்னக்காவடி போலப் புலம்பவும் கூடாது. 'ஏன் அந்தப் பொருள் அப்போதைக்கு வேண்டாம்’ என்பதை யதார்த்தமாக எடுத்துச் சொல்லி, வேறு ஏதாவது பொருளை வாங்கித் தரலாம். என்னதான் அழுது அடம்பிடித்தாலும், அதற்கு இடம்கொடுக்காமல் உறுதியாக இருந்து பழகிவிட்டால், பிறகு, உங்களிடம் 'பாச்சா பலிக்காது’ என்று தெரிந்து, அவர்களே வழிக்கு வருவார்கள். பிள்ளைகளிடம் கோபப்படுவதோ, எரிச்சல்படுவதோ இல்லாமல், உண்மையான அக்கறையோடு செய்ய வேண்டும். இதற்கு நிறையப் பொறுமையும், சகிப்புத்தன்மையும் தேவை.

ஒற்றைக் குழந்தையாக இருக்கும்போது, அதற்கு பிரைவேட் - ஹோம் டியூஷன் என்றெல்லாம் ஏற்பாடு செய்யக் கூடாது. குழுவினரோடு பழகுவதுபோல, பிள்ளைகள் இருக்கும் இடத்துக்கு அனுப்பவேண்டும். விளையாட்டுகளிலும், பாஸ்கெட் பால், ஃபுட்பால் போன்ற குழு விளையாட்டுகளில் சேர்த்துவிடவேண்டும். பாட்டு, நடன வகுப்புகளுக்குப் போகும்போது, மற்றவர்களுடன் கலந்து பழகவும், சூழ்நிலையை அனுசரிக்கவும், விட்டுக்கொடுக்கவும் குழந்தை பழகும்' என்றவரிடம், ''வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர், டிவி என்று நவீன 'காட்ஜெட்ஸ்’ உடன் வளரும் குழந்தைக்கு மனதளவில் உண்டாகும் பாதிப்புகள் என்ன? அதை எப்படிச் சரிசெய்வது?'' என்று கேட்டோம்.

''அது, அந்த சாதனங்களைக் குழந்தைகள் எந்த அளவுக்கு உபயோகிக்கிறார்கள் என்பதைப் பொருத்து இருக்கிறது. எந்த ஒரு விஷயமுமே அளவோடு இருக்கும்போது தீங்கு தராது. அளவுக்கு அதிகமாகி அதில் மூழ்கும்போது, அவர்கள் மற்றவர்களுடன் பழக மாட்டார்கள். தங்களின் தனி உலகத்தில்தான் மட்டுமே பயணிப்பார்கள். இதைத் தடுக்க, கம்ப்யூட்டர், டி.வி, வீடியோ கேம்ஸ் எல்லாவற்றுக்குமே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிவிட வேண்டும். ''நீ சமத்தா படிச்சு முடிச்சேன்னா, இன்னிக்கு போனஸா ஒரு மணி நேரம் நீ கேம்ஸ் விளையாடலாம்’ என்று சொன்னால், குழந்தை படிக்கவும் செய்யும். விளையாட்டில் கட்டுப்பாடும் வரும். இது போல நேர எல்லையை வகுத்து, அதன்படி சீராகப் பராமரித்தாலே போதும்; அவர்களே அந்த ஒழுங்குக்கு வந்து விடுவார்கள். அதிக நேரம் அதில் உட்கார்ந்தால் என்ன ஆகும் என்று சொல்லி, அதன் விளைவுகளையும் அவசியம் புரியவைக்க வேண்டும்'' என்றார்.

''ஒற்றைக் குழந்தை வைத்துள்ள பெற்றோர்களுக்கு டிப்ஸ்...!''

3 வயது வரையுள்ள குழந்தைகளின் வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பது பற்றி குழந்தைகள் சிறப்பு நிபுணர் ஜனனி ஷங்கர் பேசியபோது, அவருடைய விரலும் பெற்றோர்களை நோக்கித்தான் நீண்டது.

''பெற்றோர் இருவரும் வேலைக்குப் போகும் சூழலில், குழந்தைக்காகக் கண்டிப்பாக நேரம் ஒதுக்க வேண்டும். இரண்டு பேருமே பிஸி என்றால், ஒருவர் இல்லாதபோது இன்னொருவர் வீட்டில் இருப்பது போல மாற்றிக்கொள்ளலாம். சனிக்கிழமை ஒருவர் இருந்தால், ஞாயிற்றுக்கிழமை இன்னொருவர் இருக்கலாம். ஒருவர் ஆபீஸ் போனால், மற்றவர் வீட்டில் இருந்து பணி செய்யலாம். இது போன்ற திட்டமிடலில் ஆரம்பித்து, எல்லாவற்றிலுமே குழந்தையை முதன்மைப்படுத்திச் செய்யவேண்டும்.

தனிக்குடித்தனமாக இருந்தாலும் யாராவது பெரியவர்களை உடன் வைத்துக்கொள்வது நல்லது. நம் அப்பா, அம்மா, மாமியார் போன்ற சொந்தங்களிடம் விட்டுச் செல்லும்போது குழந்தைக்கு நல்ல பழக்கவழக்கங்களும் வரும். சுத்தமான, ஆரோக்கியமான உணவும் கிடைக்கும்.

மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கண்டிப்பாக கிரெச்சில் விடக் கூடாது. 3 - 4வயதுக்குள்தான் ஒரு குழந்தையிடம் நோய் எதிர்ப்பு சக்தி நன்கு உருவாகிறது. அதற்கு முன்பே காப்பகத்தில் விடும்போது, மற்ற குழந்தைகளுடன் நெருக்கமாக இருக்கும் அந்தச் சூழ்நிலையில், எல்லா வகையான நோய்த்தொற்றும் குழந்தைக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறைந்தது, 3 வயது வரையிலுமாவது குழந்தையை வீட்டில் வைத்து வளர்ப்பது அதன் உடல்நலனுக்கு மிகவும் நல்லது. கிரச்சில் உள்ள கேர்டேக்கர்களின் சுத்தம், சுகாதாரம் மற்றும் பழக்கவழக்கங்கள் பற்றி நமக்குத் தெரியாது. அது அப்படியே குழந்தைக்கு வரலாம். பெற்றோர் இல்லாத தனிமை, கோபம் எல்லாம் சேர்ந்து, குழந்தைக்கு மனதினுள் புதைந்த கோபமாக இருக்கும். அது வளர்ந்து பெரிதாகும்போது, அந்தக் கோபம் வெடிக்கும். ''என் ஃப்ரெண்ட் ஆகாஷ் அம்மா எல்லாம் எப்படி அவனைப் பார்த்துக்கிட்டாங்க? நீ என்னைப் பார்த்துகிட்டியா?'' என்று ஒப்பிடச் சொல்லும்.

குழந்தையும் நன்றாக வளரவேண்டும், சம்பாதிக்கவும் வேண்டும் என்றால், சிற்சில சமரசங்களைச் செய்துகொண்டு, உறவினர்களையே வீட்டில் வைத்துக்கொள்ளலாமே! இல்லையெனில், உடல்ரீதியாக, மனரீதியாகப் பாதிக்கப்பட்டு, போதிய ஊட்டச்சத்தும் இல்லாமல் போகும். குழந்தையின் எதிர்காலம் ஆரோக்கியமான அமையவேண்டுமென்றால், அதற்குத் தேவை பணத்தைத் தாண்டி, உங்கள் அருகாமையும் அன்பான அரவணைப்பும்தான்!''

Sunday, June 14, 2015

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும்.இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், 

உடல்வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ] பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது. 

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள்  கூறுகின்றனர். 

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர். 

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண் . 

இதன் விளக்கம் :-
இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும். 

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும்  அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது.இதனால்இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் (பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.குப்புறப் படுக்கக் கூடாது,  தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்கவேண்டும். 

இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.

இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும். 

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். 

இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். 

இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்

சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோமாக....

Thursday, June 4, 2015

வெற்றிக்கு !!!

வெற்றிக்கு!!!

1.தினமும் அரை நாள் (12 மணி நேரம்) கடுமையாய் உழையுங்கள்..,

2.வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்புதான்…

3.வெற்றி ஒன்றையே மனம் நினைக்க வேண்டும்…,

4. வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏற்வேண்டும்…,

5.ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது, மற்றொன்று நாமே ஏறுவது…,

6.வியாபார அபாயங்களை கண்டு அஞ்சக்கூடாது…,

7.பிடித்த காரியத்தை செய்ய வேண்டும் என்பதைவிட செய்யும் காரியத்தை நமக்கு பிடித்ததாய் மாற்றி கொள்ள வேண்டும்.

8. முடியாது, நடக்காது போன்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது..,,

9. பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது…,

10. வெற்றிக்கு தேவை பாதி அதிர்ஷ்டம், பாதி அறிவு…,

11. துணிச்சலாய் முடிவுகள் எடுக்க வேண்டும்…,

12. நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகம் உழைக்க வேண்டும்..,

13. மற்றவர்களை உங்களுக்கு உழைக்க வைப்பதில்தான் உங்கள் புத்திசாலித்தனம் இருக்கிறது…,

14. வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்….,

15. எதையும் நாளை என்று தள்ளி போடக்கூடாது..,

16. கைக்கடிகாரத்தை கொடுத்துவிட்டு அலாரம் கடிகாரம் வாங்குங்கள்…,

17. மற்றவர்களை வழிநடத்த வேண்டுமென்று நினைக்கக் கூடாது…,

18. கவலைப்படாதீர்கள். கவலையில் எந்த நன்மையும் கிடைக்காது…,

19. சந்தோஷத்தை கொடுப்பது பணம் மட்டுமல்ல….,

20. கடவுளை நம்புங்கள்.

வெற்றிக்கு உதவும் ஆறு குணங்கள்:

பணிவு

ஒரு துறையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர் நாலு விசயங்களைப் பழகியவுடன் கர்வம் அவர்களுடைய தலைக்கு மேல் ஏறிக் கொள்கிறது. என்னைப் போல் யார்? என்றுநினைக்கிறார்கள். இதுதான் அவர்களின் சரிவுக்கான முதல் படி. முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை. இதற்குப் பதிலாகத் துணிவை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வெற்றிக்கு அது துணை நிற்கும்.

கருணை

உங்களைச் சுற்றியுள்ளவர்கள் துயரத்தை அனுபவிக்கும் போது, அவர்களுக்கு ஆறுதலாக இருங்கள். உங்களுக்குப் பிரச்சனை என்று வரும் போது அவர்கள் உதவுவதற்கு ஓடோடி வருவார்கள்.

பழகும் தன்மை

வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, உங்களுக்கு மேலே உள்ளவர்களிடமும், கீழேஉள்ளவர்களிடமும் வெளிப்படையாக நடந்து கொள்ளுங்கள். திறந்த புத்தகமாக வாழத் தொடங்குங்கள். பல புதிய வெற்றி வாசல்கள் திறப்பதை அறிவீர்கள்.

அரவணைக்கும் குணம்

உலகில் எல்லாவிதமான மனிதர்களும் இருப்பார்கள் என்பதை ஒப்புக் கொண்டு,அவர்களிடம் உள்ள நல்ல விசயங்களைப் பார்த்துப் புரிந்து கொண்டு பழகத்தொடங்கினால் நட்பு வட்டம் பெருகும். வாழ்க்கை சிறகடிக்கும்.

இணைந்து பணியாற்றும் தன்மை

நாம் ஒவ்வொருவரும் பல தனிப்பட்ட திறமை கொண்டவர்களாக இருப்போம். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றினால் அந்த வெற்றி பல மடங்காக உயரும்.
முடிவெடுக்கும் திறன்

நாம் தினந்தோறும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஏதாவது ஒரு முடிவைஎடுக்கிறோம். நமது திறமை மற்றும் அனுபவத்தைச் சரியான விகிதத்தில் யோசித்துஎடுக்கும் முடிவுகள் நமது வாழ்வின் முக்கியத் திருப்புமுனையாக அமையும்.

இவையே நமது வெற்றியின் வளர்ச்சியைத் தூக்கிவிடும்.

தொந்தியைக் குறைக்கும் இஞ்சி!

தொந்தியைக் குறைக்கும் இஞ்சி… நோய் நீக்கி இளமையை கூட்டும்!

* இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி, காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு, வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.

* இஞ்சி சாறில் தேன் கலந்து, தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர, நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

* காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட, பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

* இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட, வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

* இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட, மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

* இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

* இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

* இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

* இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட, வயிற்று உப்புசம், இரைச்சல் தீரும்.

* பத்து கிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கோப்பை வெந்நீரில் கலந்து, காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட, மார்பு வலி தீரும்.

* இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட, நல்ல பசி ஏற்படும்.

* இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட, ஜீரணம் ஏற்படும்.

* இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து, அந்த நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

* இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து, ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட, வாய்வுத் தொல்லை நீங்கும்.

* இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து, காலையில் ஒரு கரண்டி வீதம், ஒரு வாரம் குடித்துவர, நீரிழிவு குறையும்.

* இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர, தொடக்கத்தில் உள்ள ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்!

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்!

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.

2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.

3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.

4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.

5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.

6. நிறைய புத்தகம் படியுங்கள்.

7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.

8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.

9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.

11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.

12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.

15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.

16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.

17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.

18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.

21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.

22. மன்னிக்கப் பழகுங்கள்.

23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.

24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.

25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.

26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.

29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.

30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.