நீங்கள் செம்மறி ஆடுகள் அல்ல! சிங்கங்கள்!
ஓ சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அமரத்துவம் பெற்ற ஆன்மாக்கள், அழியாத பேரின்பத்தை குழந்தைகள். அப்படியா? இது உண்மையா? உண்மை என்றால் நாம் ஏன் அதனை உணரவில்லை? சுவாமி விவேகானந்தர் கூறும் கதை ஒன்றைக் காண்போம்.
ஓர் அழகிய கிராமம். அந்தக் கிராமத்தில் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தான். அவனிடம் ஆட்டு மந்தை ஒன்று இருந்தது. அவன் தினந்தோறும் மேய்ச்சலுக்காக ஆட்டுமந்தையைக் காட்டுக்கு ஓட்டிச் செல்வான். மாலையில் மீண்டும் ஊருக்கு ஓட்டி வருவான். ஒருநாள், வழியில், அப்போது தான் பிறந்த சிங்கக் குட்டி ஒன்று கிடப்பதையும், அதன் அருகில் தாய்ச் சிங்கம் இறந்து கிடப்பதையும் அவன் காண நேர்ந்தது. தாயை இழந்து, அனாதையாகக் கிடக்கும் சிங்கக்குட்டியிடம் இரக்கம் கொண்ட அவன் அதையும் தூக்கிக்கொண்டு, ஆடுகளோடு வீடு வந்து சேர்ந்தான்.
அந்தச் சிங்கக் குட்டி ஆடுகளோடு ஆடாக வளர்ந்தது. ஆட்டுப்பாலைக் குடித்தது, ஆடுகளைப் போலவே புல் அமர்ந்து, நாளடைவில் ஆடுகள் போலவே கத்தவும் தொடங்கியது. விவசாயியும் அந்தச் சிங்கக் குட்டியை ஆடுகளுடன் மேய்ச்சலுக்குக் கூட்டிச் செல்வான். அந்தச் சிங்கக் குட்டி தன்னை ஓர் ஆடாகவே எண்ணி வாழ்ந்தது.
ஒருநாள், வழக்கம் போல் ஆடுகள் ஆற்றங்கரையில் புல் மேய்ந்து கொண்டிருந்தன. விவசாயி வேறு வேலையாக எங்கோ சென்றுவிட்டிருந்தான். அந்த வேளையில் சிங்கம் ஒன்று அங்கே வந்தது. ஆட்டு மந்தையைக் கண்ட அது ஆடுகள் மீது பாய்ந்தது. ஆடுகள் பயந்து திசைக்கொன்றாக ஓடின.
சிங்கக் குட்டியும் ஆடு போலக் கத்திக்கொண்டு பாய்ந்தோடியது. ஆடுகளிடையே ஒரு சிங்கக் குட்டியும் தன்னைக் கண்டு பயந்தோடுவதைக் கண்ட பெரிய சிங்கத்திற்கு ஆச்சரியம் தாளவில்லை. ஆடுகளை விட்டுவிட்டு, பாய்ந்து சென்று அந்தச் சிங்கக் குட்டியைத் தாவிப் பிடித்தது. மாட்டிக்கொண்ட சிங்கக்குட்டி ஆட்டுக்குட்டி போல் பரிதாபமாகக் கத்தியது.
உடனே அந்தப் பெரிய சிங்கம், ‘ஏன் இப்படி ஆடுபோல் கத்துகிறாய், என்னைப்போல் நீயும் சிங்கமாயிற்றே, பயப்படாதே’ என்று அந்தச் சிங்கக் குட்டியிடம் கூறியது. ஆனால் சிங்கக் குட்டி இதையெல்லாம் கேட்கும் நிலையில் இல்லை. பயத்தால் நடுங்கிக்கொண்டே, ‘என்னை விட்டுவிடுங்கள். நீங்கள் கூறுவதுபோல் நான் சிங்கம் அல்ல. நான் ஆடு தான்’ என்று வாய் குழறக் கூறியது. தான் ஓர் ஆடு என்பதில் அது உறுதியாக இருந்தது.
சிங்கக் குட்டிக்கு எப்படியாவது உண்மையை உணர்த்திவிட வேண்டும் என்று உறுதிகொண்ட பெரிய சிங்கம் அதனைக் கெட்டியாகப் பிடித்து ஆற்றங்கரைக்கு இழுத்துச் சென்றது. அதனைத் தண்ணீரின் அருகே கொண்டுபோய், ‘இதோ இந்த தண்ணீரில் தெரியும் உன் பிம்பத்தைக் கவனமாகப் பார். நாம் இருவரும் ஒரே மாதிரிதானே இருக்கிறோம்’ என்றது.
நீரில் தெரியும் தன் பிம்பத்தையும் பெரிய சிங்கத்தையும் மாறிமாறிப் பார்த்த சிங்கக்குட்டிக்கு வியப்பு தாளவில்லை. ‘உண்மை தானே! என் உருவம் சிங்கத்தின் உருவம்போலவே உள்ளது. அப்படியானால் நானும் சிங்கம் தான்’ என்று தனக்குத் தானே கூறிக்கொண்டது.
சிங்கக் குட்டியிடம் மாறுதலைக் கண்ட பெரிய சிங்கம் காடு அதிர ஒருமுறை கர்ஜித்துவிட்டு, ‘நான் கர்ஜித்தது போல் நீயும் கர்ஜனை செய்’ என்று அதனிடம் கூறியது. சிங்கக்குட்டியும் ஆர்வத்துடன் குரல் எழுப்பியது. பாவம், அந்தக் குரல் ஆடு கத்துவது போல்தான் இருந்தது. மீண்டும் மீண்டும் கத்திப் பார்த்தது. நீண்ட நேர முயற்சிக்குப் பின் சிங்கக் குட்டியின் குரல் மாற்றம் கண்டது. முடிவில் பெரிய சிங்கம் போலவே அது கர்ஜிக்கத் தொடங்கியது.
தன் கர்ஜனையை கேட்ட சிங்கக் குட்டிக்கு ஆனந்தம் தாளவில்லை. தனது உண்மை இயல்பை உணர்ந்த அந்தச் சிங்கக் குட்டி பெரிய சிங்கத்தோடு காட்டிற்குள் பாய்ந்தோடி மறைந்தது.
தன் சொந்த இயல்பை மறந்திருந்த சிங்கக் குட்டியைப் போல தான் நாம் எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்முள் எல்லையற்ற சக்தி அடங்கியுள்ளது. அதை வெளியே கொண்டுவந்து வேலை செய்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும்.
ஒவ்வொருவரின் உள்ளேயும் எல்லையற்ற ஆன்மா உள்ளது. மகத்தானவர்களாக, மேலோர்களாக ஒவ்வொருவருக்கும் மாறுவதற்கான எல்லையற்ற ஆற்றலும் அந்த ஆன்மாவில் உள்ளது. உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள், உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும்; பெருமை வரும்; நன்மை வரும்; தூய்மை வரும்; எவையெல்லாம் மேலானதோ அவை அத்தனையும் வரும்.
ஒரு கருத்தை எடுத்துக் கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு. அதையே கனவு காண். அந்தக் கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா.
மூளை, தசைகள், நரம்புகள் உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும். அந்த நிலையில் மற்ற எல்லாக் கருத்துக்களையும் தவிர்த்து விடு. வெற்றிக்கு இது தான் வழி.
ஓ, சிங்கங்களே! எழுந்து வாருங்கள்; நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அமரத்துவம் பெற்ற ஆன்மாக்கள்; சுதந்திர ஆன்மாக்கள்; அழியாத திருவருளைப் பெற்றவர்கள்.
No comments:
Post a Comment