Wednesday, April 26, 2017

வெற்றி, சாதனைக்கு வழிகாட்டும் ஶ்ரீஅன்னையின் 12 அமுத மொழிகள்!

விளையாட்டு மனதுக்கும் உடலுக்கும் உறுதி அளிக்கக்கூடிய ஒன்றாகும். சாதித்த பல விளையாட்டு வீரர்களான சச்சின், டிராவிட்  போன்றவர்களின் வெற்றிக்கான காரணம் திறமை மட்டுமல்ல. அவர்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ ஆன்மிக ரீதியாக ஒரு வீரன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான கோட்பாடுகளைக் கடைப்பிடித்ததால்தான். 
ஆம், ஒரு லட்சிய மனிதன் தன் வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஶ்ரீ  அன்னையின் பொன்மொழிகள்.

1. நல்ல மனநிலை உடையவன், விஷயங்கள் அவனுக்கு எதிராகப் போகும்போதும், தனக்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்படும்போதும் கோபம் கொள்ளமாட்டான்.

2. செய்வதைத் திருந்தச் செய்வான். தோல்வி நிச்சயம் என்று தெரிந்தபோதும் தான் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டேயிருப்பான். நேர்மறை எண்ணங்களால் நேர்மையாகச் செயல்புரிவான்.

3. தனது முயற்சிகள் பயனளிக்க நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தாலும் சோர்ந்து போகாமல் முயற்சித்துக்கொண்டே  இருப்பான்.

4. தவிர்க்க முடியாத இடர்களையும்    துயரங்களையும் சலனமின்றி கடந்து செல்வான்.எத்தனைத் தோல்விகள் ஏற்பட்டாலும் இறுதி வெற்றிக்காக ஓடிக்கொண்டே இருப்பான்.

5. வெற்றியைத் தலைக்கு எடுத்துச் செல்லமாட்டான். தன் தோழர்களைவிடவும், சக வீரர்களைவிடவும் உயர்ந்தவன் என்று கர்வம் கொள்ளமாட்டான். வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலைத் தவறமாட்டான்.

6. பிறரிடமுள்ள சிறப்புகளைப் பாராட்டுவான். குறைகளைப் பெரிதாக்க மாட்டான். இன்னொருவன் வெற்றி பெறுவதற்கு உதவ எப்போதும் தயாராக இருப்பான்.

7. பிறர் பிழைகளைக் கண்டு நகைக்க மாட்டான். எதிராளியின் தோல்வி கண்டு ஆரவாரம் செய்ய மாட்டான். அவர்களைப் பகைவரை நடத்துவது போல் அல்லாமல் நண்பனைப் போலவே நடத்துவான்.

8. பிறருக்கு மரியாதை தருவான். தன்னைப் பிறர் எவ்வாறு நடத்த வேண்டும் என்று நினைக்கின்றானோ அவனும் பிறரை அவ்வாறே நடத்துவான்.

9. தன் புகழுக்காக அல்லாமல் குழுவின் நன்மைக்காக உழைப்பான். குழுவுக்காக என்ன செய்ய வெண்டுமோ அவை அனைத்தையும் சுயநலமின்றி சிறப்பாகச் செய்வான். வெற்றியடைந்தபோதும் தன்னால்தான் நடந்தது என்று கூறாமல் பண்புடன் நடந்துக்கொள்வான்.

10. தான் செய்யப்போவதை தம்பட்டம் அடிக்கமாட்டான். தான் செய்து முடித்ததைப் பற்றிப் பெருமை பாராட்டிக்கொள்ளமாட்டான். பெருந்தன்மையுடைவனாய் இருப்பான். அதே நேரத்தில் தன் கருத்துகளை ஒளிவு மறைவின்றி தெள்ளத் தெளிவாகக் கூறுவதற்கு அஞ்சமாட்டான்.

11. கடுமையாகப் போட்டியிடுவான். ஆனால், விதிகளின்படி நட்பு முறையிலேயே போட்டியிடுவான. எதிராளி காயப்பட்டுவிட்டால் உதவுவான்.

12. எப்போதும் கட்டுப்பாடு உடையவனாகவும் நேர்மை உள்ளவனாகவும் இருப்பான். உணவு கொள்ளும்போது சுவைத்து மகிழ்ந்து உண்பான். உறங்கவேண்டிய நேரத்தில் உறங்குவதை விரும்புவான்.

வெற்றி என்பது உங்கள் உறுதியையும் நேர்மையையும் பொறுத்தே உள்ளது. இனியும் சாதாரண மனிதர்களைப் போல அல்லாமல் ஒரு புதிய உயரிய லட்சியத்தை உடைய  மனிதனின் வாழ்க்கையைப் போல வாழ விரும்புங்கள்.

Monday, April 24, 2017

உங்களுக்குள் இருக்கும் எதிரி யார் என்று தெரியுமா?

கடினப்பட்டு வேலைசெய்து உங்கள் இலக்கை அடைய நினைத்தாலும் அடைய முடியவில்லையா... செய்யும் வேலைகளில் உங்களுக்கே நிறைவு இல்லையா? அப்படியெனில், உங்களுக்குள் மிகப்பெரிய ஓர் எதிரி இருக்கிறான். அவனை அழித்தால் மட்டுமே உங்களால் கனவு வாழ்க்கையை நினைவாக்கிட முடியும். அதற்கான #Morningmotivationதான் இது.

அந்த எதிரியின் பெயர் 'Sleep Inertia' என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் `தூக்கமின்மை'. இது, உங்கள் வேலையை மட்டும் பாதிக்கவில்லை... உங்களின் உடல்நலத்தையும் கடுமையாகப் பாதிக்கிறது. `பல் பிரச்னையில் தொடங்கி இதயப் பிரச்னை வரை பல நோய்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுப்பதே இந்தத் தூக்கமின்மைதான்' என்று பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தத் தூக்கமின்மையை வெல்ல, ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது அதிகாலையில் எழுவது. “சீக்கிரம் எந்திரிச்சா எப்படிங்க நல்லா தூக்கம் வரும்? செம உடான்ஸா இருக்கே!” என்கிற உங்கள் மைண்ட்வாய்ஸ் எனக்கும் கேட்கிறது. ஆனால், அதுதான் உண்மை.  அப்படி அதிகாலையில் எழுவதற்கும், தூக்கமின்மையை வெல்வதற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அவை....

1. தேவை ஆழ்ந்த தூக்கம்:  முக்கியமான டிப்ஸ் என்பது, சீக்கிரம் தூங்குவது. “தூக்கம் வந்தா தூங்க மாட்டோமா... என்ன பாஸ்!” என உங்களின்  ஆதங்கம் புரிகிறது. ஆனால், தூக்கத்தை வரவழைக்க இன்றைய நவீன வாழ்க்கையில் சில விஷயங்களைச் செய்தாலே போதும். அதில் முதலில் செய்யவேண்டியது, உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே இரவு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.  ஆழ்ந்த தூக்கம்கொள்ளும் பெரும்பாலானோர், இந்த முறையைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். 

2. நெட்டு கட்டு: படுக்கைக்குப் போவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் சாப்பிடுவது எவ்வளவு நல்லதோ, அதே அளவுக்கு மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்வதும் நல்லது. ஆஃப் செய்ய முடியாது என்பவர்கள், குறைந்தபட்சம் வைஃபை மற்றும் மொபைல் டேட்டாவையாவது தயவுதாட்சண்யம் இல்லாமல் நிறுத்திவைப்பது நல்லது. கண்கள் சொருகும் நேரத்தில் அலெர்ட் டோனோ, நோட்டிஃபிகேஷன் சவுண்டோ அன்றைய தூக்கத்தின் பாதியைக் குறைக்கலாம். மேலும், தூங்கப்போகும் இரண்டு மணி நேரத்துக்கு முன் மொபைலை அப்பால் வைத்தால் தூக்கமின்மையை விரட்ட முடிகிறது என ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

3. கொட்டாவிப் படிப்பு: `சாப்பிட்டாயிற்று... மொபைல் நெட் இல்லாமல் செய்தாயிற்று, தூக்கம் வரும் வரை டிவி பார்க்கலாம்' என ப்ளான் போடுகிறீர்களா? அதுவும் கூடாது. ஆனால், படிக்கலாம். இதுதான் சாக்கு எனக் கிண்டில், இ-புக் என எலெக்ட்ரானிக் ஏரியா பக்கம் போகவே கூடாது. புத்தகத்தில் வாசிக்கலாம். இல்லையென்றால் குடும்பத்துடன் பேசிக்கொண்டிருக்கலாம்.

4. ஆரோக்கியமான உடற்பயிற்சி: இதுவரை நாம் படித்த  மூன்றையும் செய்யத் தொடங்கினாலே அதிகாலை விழிப்பு இலகுவாகிவிடும். 

இனி, காலையில் எழுந்தவுடன் செய்யவேண்டியது. உடனே ஃப்ரெஷ்ஷாகி வாங்கிங், ஜாக்கிங் அல்லது சைக்கிளிங் என உடலுக்குப் பயிற்சி கொடுப்பது. உடலில் உள்ள கலோரிகள் காலையில் செய்யும் உடற்பயிற்சிகளால்தான் அதிகம் எரிக்கப்படுகின்றன. 

5. சன்னுக்கு ஹாய்:  காலையில் எழுந்தவுடன் வெளிச்சத்தை நோக்கிப் போக வேண்டும். வெளிச்சத்தை உணர்ந்தவுடன்தான் உங்கள் மனம் அலெர்ட் நிலைக்கு வரும். என்னதான் காலையில் சரியான நேரத்துக்கு எழுந்து யோகா, உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டாலும் இது முக்கியம். காலையில் எழுந்தவுடன் வெளிச்சத்தைப் பார்ப்பது இரவில் சரியான நேரத்துக்குத் தூக்கத்தைக் கொடுக்கும்.

6. ஹெவி பிரேக்ஃபாஸ்ட்: முதல் நாள் இரவு எட்டு மணிக்குச் சாப்பிட்டிருப்பீர்கள். காலையில் பெயருக்கு எதையாவது வயிற்றுக்கு அள்ளிப் போட்டுக்கொண்டு, லன்ச் பாக்ஸில் சோற்றை அடைத்துக்கொண்டு ஓடாதீர்கள். காலையில் விரைவாக எழுவதால் பரபரப்பு இருக்காது. எனவே, காலையில் நிதானமாகச் சாப்பிடவும். மதியம் அளவாகச் சாப்பிட்டு வெயிட்டை பேலன்ஸ் செய்யலாம். 

மேலே தூங்குவதற்கான ஐடியாக்கள் மூன்று, தூங்கி எழுந்த பிறகு செய்யவேண்டிய மூன்று என ஆறு பாயின்ட்கள் உள்ளன. இவற்றில் மொபைல் நெட்டை எட்டு மணிக்கு கட் செய்தாலே தூக்கம் தன்னால் வந்துவிடும் என்பது சொந்த அனுபவம்.

Tuesday, March 28, 2017

கணவன் மனைவி இடையே பிரியம் பெருக்கும் 10 பழக்கங்கள்!

'ஒருவனுக்கு ஒருத்தி...' 
சொல்லும்போதே காதுகள் இனிக்கிறதல்லவா? சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமண வாழ்வு மொத்தமும் அங்கேயே தொடர்ந்தால், மகிழ்ச்சிக்குச் சொல்லவா வேண்டும்? தம்பதியரின் கைகளில்தான் அதற்கான மந்திரச் சாவியும் உள்ளது. 'இவன் எனக்குத்தானே', 'இவள் எங்கே போய்விடப்போகிறாள்?' என்கிற எண்ணத்தில், தனது இணைக்கு சின்னச் சின்ன சந்தோஷங்களுக்கான வாய்ப்பை அளிக்கத் தவறும்போது, அந்த உறவே சிக்கலாகிறது. தனது விருப்பம், ஆர்வம் எல்லாவற்றையும் ஒத்த அலைவரிசையில் தன்னைப் புரிந்துகொள்கிற இன்னொருவரிடம் கொட்டத் தொடங்கி, அதுவே ஆழமான நட்பாக வேரூன்றுகிறது. கணவன் மனைவிக்கு இடையில் உள்ள முடிச்சு அவிழ்ந்து, ஒரே வீட்டில் பெயருக்கு வாழ்வதில் என்ன இருக்கிறது? கணவன், மனைவி உறவு கசந்துவிடாமல் எப்பொழுதும் ஃபிரஷ்ஷாக உணர, சில விஷயங்களில் கவனம் செலுத்துவது முக்கியம். இதோ அவை... 

* இருவரும் தினமும் ஏதாவது ஒரு விஷயத்துக்காக ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்ளுங்கள். அது, ரசம் நன்றாக இருந்தது என்றோ, காய்கறிகளைச் சரியாக நறுக்கினீர்கள் என்றோ இருக்கலாம். 

* எதிர்பாராத அணைப்பு, முத்தம் இருவரையும் அன்புத் தூண்டிலில் சிக்கவைக்கும். இதை இருவரும் பின்பற்றுங்கள். 
ஒருவரது குறையை எந்தச் சூழலிலும் மற்றவர் குறிப்பிட்டுப் பேசக் கூடாது. இது, மனதில் கசப்புக்கான விதைகள் பரவாமல் தடுக்கும். 

* ஒருவர் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லத் தொடங்கும்போது, மற்றவர் காதுகொடுத்து கேட்க வேண்டும். தன் பேச்சுக்கு மதிப்புள்ள இடத்தில் நம்பிக்கை பலப்படும். 

* தாம்பத்தியத்தில் ஒருவருக்கு விருப்பம் இல்லாதபோது, மற்றவர் தொந்தரவு செய்ய வேண்டாம். இருவருக்கும் தேவையான ஒன்று என்பதால், மற்ற பிரச்னைகளை மறந்து இதற்கும் நேரம் ஒதுக்குங்கள். 

* ஒரே மாதிரியான வாழ்க்கை முறை போரடிக்க செய்யும். பிடித்த இடங்களுக்குச் செல்ல திட்டமிடுங்கள். உங்கள் வாழ்வின் ஸ்டைலையும் அவ்வப்போது மாற்றிக்கொள்ளுங்கள்..உணவு, உடை உட்பட. வாழ்வதன் சுவாரஸ்யம் கூடும். 

* சோஷியல் மீடியாக்கள் இரண்டாவது துணை அல்லது இணை என்பது போல ஆகிவிட்டது. குடும்பத்தைப் பொறுத்தவரை தனி ஒருவரின் விருப்பத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கலாம். இருக்கும் உறவுகளுக்குள் நட்பின் தன்மை மாறாமல் பார்த்துக்கொள்ளும்போது புதிய துணையோ, இணையோ தேவையிருக்காது. 

* ஒவ்வொருவரும் வீட்டில் இருப்பதைவிட வேலையிடத்தில் அதிக நேரம் இருக்கிறோம். அந்தச் சூழலில் நட்புடன் பழகுபவர்களுக்கு இடையில் ஆழமான புரிதல் இருக்க வாய்ப்புள்ளது. அதுபோன்ற உறவுகளை நட்பின் எல்லைக்குள் நிறுத்தவும். எல்லை தாண்டியே பழகினாலும் அது உரிமையற்ற உறவு. எப்போதும் மனதுக்குள் ஒரு பயத்தையும், குற்ற உணர்வையும் ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். இதுபோன்ற உறவுகள் கணவன் மனைவிக்குள் விரிசலை ஏற்படுத்தும். எல்லைக் கோட்டை தாண்டாமல் இருப்பதே வாழ்வு முழுமைக்குமான பாதுகாப்பு. 

* காதலெல்லாம் திருமணத்துக்கு பிறகு கிடையாது என்று நினைக்க வேண்டாம். நம் மனசு எப்போதும் குழந்தைதான். கணவன், மனைவிக்குள் காதல் பகிர்ந்தல்கள் இருக்கும் வரை அந்த அன்புக் கோட்டைக்குள் அந்நியர் நுழைய முடியாது. வாழ்வின் கடைசி மூச்சு வரை காதலியுங்கள். 

* கணவன், மனைவி இருவரும் அவரவர் வேலையில் இலக்குகளை நிர்ணயித்து தீவிரம் காட்டுங்கள். ஒருவர் இலக்கை எட்ட மற்றவர் தோள் கொடுங்கள். உயர உயர அன்பின் நெருக்கம் அதிகரிக்கும். 

* பிறந்த நாள், திருமண நாள் என முக்கிய நாட்களை மறந்துவிடாமல் அன்பு செய்யுங்கள். 'நீ என் வாழ்வில் அவ்வளவு முக்கியம்' என்பதைப் புரியவையுங்கள். காதல் என்றென்றும் தித்திக்கும். ஒருவர் மற்றவரது உறவினர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிகம் பேசாதீர்கள். கணவன், மனைவிக்குள்ளான பல்வேறு சண்டைகளுக்கு இதுவே காரணம். உங்களைப் பற்றிய பாசிட்டிவான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இனிக்க இனிக்க வாழுங்கள். வாழ்த்துக்கள்! 

Monday, March 20, 2017

வேலையில் இருப்பவர்கள் பிசினஸ்மேன் ஆக விரும்புகிறீர்களா... இதப் படிங்க முதல்ல!

பிசினஸ்

எல்லோருக்குமே பெரிய பெரிய கனவுகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை நிறைவேற்றிக்கொள்ள சூழல் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அல்லது வாய்ப்பை உருவாக்கிக் கொள்வதில்லை. மனதுக்குள் பிசினஸ்மேன் ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பலர், மனது ஒட்டாமல் எதோ ஒரு வேலையில்  காலத்தைக் கழித்துக்கொண்டிருப்பார்கள். கேட்டால், `முதலீடு செய்ய பணமில்லை' என்பார்கள். அவர்கள் எல்லாம் சந்தையில் இறங்கியே இருக்கமாட்டார்கள். ஏனெனில், உண்மையில் பிசினஸ் செய்ய முதலீடு ஒரு பிரச்னையே இல்லை. ஏராளமான பொது மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் அமைப்புகள், முதலீட்டு நிறுவனங்கள் பிசினஸ் செய்ய விரும்புபவர்களுக்கு பணம் தர தயாராக உள்ளன. எனவே துணிந்து இறங்கினால் வெற்றி பெறலாம்.

அப்படி வேலையை விட்டுவிட்டு பிசினஸ் செய்ய நினப்பவர்கள் சில விஷயங்களை மனதில் வைத்துக்கொள்வது அவசியம். ஒருபோதும் நாம் எடுத்த முடிவு,  தவறான முடிவாகிவிட்டதே என்று நம்மை கவலைப்பட வைத்துவிடக் கூடாது. எனவே பின்வரும் விஷயங்களை பிசினஸ் செய்பவர்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.

30 வயது!

30 வயது என்பதுதான் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டம். அந்த வயதில் எடுக்கும் முடிவுகள் தான் இறுதிவரை நம்முடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கும். மேலும் 30 வயதுக்கெல்லாம் நமக்கு வாழ்க்கையைப் பற்றியும் நம்முடைய திறமைகள் பற்றியும் எதிர்காலம் பற்றியும் ஒரு தெளிவு ஏற்பட்டுவிடும். இந்த வயது வரைக்கும் நாம் பல வேலைகளுக்கு மாறி இருக்கலாம். பல தவறுகளைச் செய்திருக்கலாம். வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பற்றி கவலைப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் 30 வயதுக்குப் பிறகு நாம் பொறுப்பானவர்களாக மாற வேண்டியிருப்பது, நம்முடைய சமூக கட்டமைப்பில் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அப்படியும் பொறுப்பில்லாமல் இருந்தால் காலம் நமக்கு அதற்கான பாடத்தைக் கற்றுத்தந்தே தீரும்.

எனவே நம் வாழ்க்கைக்கான முடிவை 30 வயதில் தீர்மானித்துவிட வேண்டும். நாம் என்ன செய்யப் போகிறோம், வேலையா, பிசினஸா, பிசினஸ் என்றால் என்ன பிசினஸ், எப்படி செய்யப் போகிறோம்? போன்ற கேள்விகளைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் 30 வயதைக் கடந்த பிறகு குடும்பம், குழந்தைகள், செலவுகள் என்று நம் கையை மீறிதான் வாழ்க்கை இருக்கும். மேலும் வயதான பிறகு ரிஸ்க் எடுக்கவும் முடியாது.

ஆர்வம், திறமை, தேவை!

பிசினஸ் செய்வதற்கு முன் நம்முடைய ஆர்வம் எதில் இருக்கிறது, நம்மிடம் என்னென்ன திறமைகள் இருக்கின்றன, நாம் செய்யப்போகும் பிசினஸின் தேவை என்ன? என்ற இந்த மூன்று கேள்விகளையும் ஒருவர் தனக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில் இவை மூன்றும் ஒரு புள்ளியில் இணைந்தால்தான் வெற்றி வசமாகும். ஆர்வம் இருந்து திறமை இல்லையென்றாலும் சரி, நம்முடைய பிசினஸுக்கான தேவையே இல்லாமல் இருந்தாலும் சரி தோல்விதான். எனவே என்ன பிசினஸ் செய்ய ஆசைப்படுகிறோம் என்பதை முடிவு செய்துவிட்டு, அதற்கு தேவையான திறமைகளையும் திறன்களையும் வளர்த்துக்கொள்ளுங்கள். அந்த பிசினஸ் குறித்த அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். முக்கியமாக அந்த பிசினஸின் தேவை எந்தளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு தான் வளர்ச்சி இருக்கும்.

துவண்டுபோகக் கூடாது!

தொழில் தொடங்கிய ஆரம்பத்தில் பெரிதாக வளர்ச்சி இருக்காது. 'சூரியவம்சம்' படத்தில் வருவது போல ஒரே பாட்டில் ஓஹோ என்றெல்லாம் வளர்ந்துவிட முடியாது என்பதை முதலில் உணருங்கள். ஆரம்பத்தில் வருமானம் குறைவாக இருந்தால், வேலையில் இருந்திருந்தாலே மாத வருமானம் ஒழுங்காகக் கிடைத்திருக்குமே என்று நீங்களும் நினைக்கக்கூடாது; அப்படி கூறுபவர்களின் பேச்சையும் காதில் போட்டுக்கொள்ள கூடாது. ஆரம்பத்தில் ஏற்படும் இந்த நெருக்கடி நிலையைச் சமாளிக்கும் மனதைரியம் வேண்டும்.

இருக்கு, ஆனா இல்லை!

வேலையில் இருக்கும்போது நம்முடைய சுதந்திரம் என்பது ஒரு வட்டத்துக்குள்தான் இருக்கும். ஆனால் பிசினஸ் செய்வது என்று கிளம்பிவிட்டால் நம் இஷ்டம்தான், நம் சுதந்திரம்தான் என்று நினைக்கலாம். தவறில்லை உண்மைதான். சுதந்திரம் இருக்கிறது. ஆனால் அதே சமயம் ஒவ்வொரு நாளும் வளர்ச்சியை அடைய வேண்டுமெனில் வேலையில் இருந்ததைவிட பிசினஸில் அதிக ஒழுக்கங்களைக் கடைபிடிக்க வேண்டியிருக்கும்.

வேலையில் இருக்கும்போது, எட்டு மணி நேரம் வேலை செய்கிறீர்கள் என்றால் பிசினஸில் 10 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஆரம்பத்தில் கடினமாகத்தான் இருக்கும். 'உழைப்புதான் உன்னை உயர்த்தும்' என்பதை நீங்களே உங்களுக்குச் சொல்லிக்கொள்ளுங்கள். பின்னர் அதுவே பழகிவிடும்.

போட்டியாளர்களைப் படியுங்கள்!

எல்லா பிசினஸிலும் போட்டி இருக்கிறது. போட்டி என்பது மிக ஆரோக்கியமான ஒரு விஷயம். ஒருவரின் வளர்ச்சியைக் குறைக்கவும், கூட்டவும் போட்டிக்கு வலிமை உண்டு. வளர்ச்சியை அதிகரித்துக்கொள்ள போட்டியாளர்களைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அவர்களை விட எந்தவிதத்தில் நாம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் மாற முடியும் என்பதை அதை வைத்துதான் முடிவு செய்ய முடியும்.

உங்கள் பிசினஸ் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். நடைமுறைகள், அரசு கட்டுப்பாடுகள், தொழில்நுட்பங்கள் ஆகியவைக் குறித்து அப்டேட்டாக இருங்கள்.

வேலையில் சம்பள உயர்வுக்கும், பிசினஸில் லாப வளர்ச்சிக்கும் இடையே உள்ள வித்தியாசம்தான் பிசினஸ் செய்வதிலுள்ள ப்ளஸ். ஆனால் உண்மையில் பிசினஸ் செய்வது, ஒரு இடத்தில் வேலை செய்வதைக் காட்டிலும் கடினமானது. அந்த ரிஸ்க்கை எடுப்பவர்களும், ஒருபோதும் முன்வைத்த காலை பின்வைக்காதவர்களும் தான் பிசினஸில் ஜெயிக்க முடியும்.

ஆல் தி பெஸ்ட்...!

கேவலமான உண்மைகள் !!!

1. அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 40 லிருந்து 50 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக்  கிடைக்கிறது..!!

2. பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

3. வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!

4. Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட ஆம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

5. ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக்கொ டுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச்செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!

6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc  இவையெல்லாம் செயற்கையான ரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

8. மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்று கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9. கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!

10. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.!

11. வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு,  சிலருக்கு படிக்கட்டாகவும்,  சிலருக்கு எஸ்கலேட்டராகவும்,  சிலருக்கு லிஃப்டகாவும் அமைகிறது..

12. பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும் ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.!

13. தோற்றுப்போய் வீடு திரும்புகையில், தலை கோதி மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும், வாழ்க்கையை ஜெயித்துவிடலாம்.

14. முதியோர் இல்லத்திற்கு 
பணம் கொடுங்க, 
பொருள் கொடுங்க, 
உணவு கொடுங்க, 
உடை கொடுங்க.. 
ஆனா உங்க பெற்றோரை மட்டும் கொடுத்துடாதீங்க..

15. 20 வயசு வரைக்கும்தான் வேளா வேளைக்கு சோறு..  அதுக்கு மேல வேலைக்கு போனால் தான் சோறு.. 

16. டாக்டரை மறந்து விட்டு நர்சுகளை ஞாபகம் வைத்திருக்கும் விசித்திரமான உலகம் இது.!

17. ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட,  ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான்  பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க.!

18. கடவுள் சிற்பத்தை 'கல்' என ஒத்துக்கொள்பவர்கள்,  பணத்தை 'காகிதம்' என ஒத்துக்கொள்வதில்லை.

19. அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்..  இன்று சங்கம் வைத்து சாதி வளர்க்கிறார்கள்...

20 .கடவுளாக வாழ கல்லாயிருந்தால் போதும்..  மனிதனாக வாழத்தான் அதிகம் மெனக்கிட வேண்டியிருக்கிறது.! 

21. மழையை நிறுத்த தமிழர்கள் இரண்டு யுக்திகளைக் கையாளுகிறார்கள்.. ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுகிறார்கள்..  மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள்..

21. மழைக்காக விடப்பட்ட விடுமுறையில் ஒருபோதும் மழை பெய்வது இல்லை..  அவை குழந்தைகள் மீதான கடவுளின் மனிதாபிமானம்..

22. ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான், சாலையோரத்து ஏழை வியாபாரியிடம் வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம்.

23. ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுறீங்க சரிதான்.. 

ஆள் இருக்கிற பல கிராமப்புற ஊருக்கு எப்ப பஸ் விடுவீங்க?

இன்னிக்கு இதுபோதும் மீண்டும் பார்போம்...

இழந்தது எல்லாம் திரும்பத் தா இறைவா!

இழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன்..

இழந்தது எவை என இறைவன் கேட்டான்..

பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்..

பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்?

கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்..

கோலம் மாறி அழகையும் இழந்தேன்..

வயதாக ஆக உடல் நலம் இழந்தேன்..

எதை என்று சொல்வேன் நான்..

இறைவன் கேட்கையில்?

எதையெல்லாம் இழந்தேனோ

அதையெல்லாம் மீண்டும் தா என்றேன்.

அழகாகச் சிரித்தான் இறைவன்.

”கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய்"..

"உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்"..

"உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய்"..

"நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்"..

சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல..

தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்..

திகைத்தேன்!

இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்..

வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறு தான்..

இழந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்..

இறைவன் மறைந்தான்..

ஞானத்தை யாரிடம் கற்பது ?

”குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும்
முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்” என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு.

காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை.
ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு புண் வந்துவிட்டால் போதும். அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும்.

அதுபோலத்தான் மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்வதும்.

அந்தக் குரங்கு கொஞ்சம் பொறுமையாய் புண்ணை நோண்டாமல் இருந்தாலே போதும், புண் விரைவில் ஆறிவிடும்.

இதை குரங்குக்குச் சொன்னாலும் புரியாது. அது புண்ணை நோண்டுவதை நிறுத்தப்போவதில்லை.

ஆனால்,

மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே?

மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழமுடியும் தானே?

மனித மனம் வெறும் “மனம்” மட்டுமே… மனித மனம் குரங்கு அல்ல…
என்ற புரிந்து கொள்ளுதல்தான் ”ஞான உதயம்”.

இந்த புரிதல் எப்போதும் இயற்கையில் எதிர்பாராத தருணங்களில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

இதில் புரிந்து கொள்வது எல்லாமே சீடர்கள். புரிய வைப்பவை எல்லாமே குரு. இந்த மொத்த நிகழ்வும் ”ஆன்மிகம்” எனப்படுகிறது, அவ்வளவுதான்.

தத்தாத்ரேயர் எனும் அவதூதர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, ஒரு நாட்டின் மன்னனைச் சந்தித்தார்.

தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக் கண்ட அரசன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார்? என்பதையும் கேட்டான்.

'எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார் தத்தாத்ரேயர்.

இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட அரசன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.

அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று,

“சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு,

“தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு
ஆகியவையும், 

“நாட்டியக்காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப்பவன்,
சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...“ என்றார் தத்தாத்ரேயர்.

மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...

"மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;

“தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.

“பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.

“எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ (நெருப்பு)உணர்த்தியது. 

“பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் - தெரிவித்தது.

"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.

"வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது.
இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.

"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.

“பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.

“பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.

"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.

“பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது.

“இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.

"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையைப் பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்... "
என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.

இதைக் கேட்ட அரசன், பூரண அமைதி அடைந்தான்.

தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே..

தத்தாத்ரேயரின் ”அவதூதகீதை” பகவான் ராமகிருஷ்ணர், ரமண மகரிஷி போன்ற பல மஹான்களால் சீடர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அத்வைத கிரந்தமாகும்.

நல்ல சீடனுக்கு எல்லாமே குருதான்.