Monday, October 23, 2017

உலகைமாற்றக்கூடிய வழிகள் சில!

1. அழுகின்றவர்களுக்கு தோள் கொடுங்கள்.
2. உங்கள் பழைய நல்ல துணிகளை சுத்தம் செய்து இயலாதவர்களுக்கு தானமளியுங்கள்.
3. இரத்தம் தானமளியுங்கள்.
4. வாழ்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழுங்கள்.
5. தினமும் துணிச்சலான ஒரு செயலை செய்யுங்கள்.
6. அனைவரிடமும் ஏற்றத் தாழ்வு பார்க்காமல் சரி சமமாக பழகுங்கள்.
7. உங்கள் சுற்றத்தார்களை உற்சாகப்படுத்துங்கள், அவர்களை தட்டிக் கொடுங்கள்.
8. யாரையும் பார்க்கும் பொழுது கண்களால் சிறிது புன்னகை பூத்திடுங்கள்.
9. உங்கள் வாழ்க்கை அகராதியில் இருந்து பிடிக்காது, முடியாது, என்ற வார்த்தையை அழித்து விடுங்கள்.
10. உங்கள் திறமைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
11. உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு துரோகம்
செய்தவர்களை மனப்பூர்வமாக மன்னியுங்கள். மேலும்
அவர்களுக்காக பிராதித்துக்கொள்ளுங்கள்.
12. வயதானவர்களுக்கு, இயலாதவர்களுக்கு உங்கள்
இருக்கையை விட்டுக்கொடுங்கள்.
13. நல்ல செய்திகளை உலகிற்குஉரக்க சொல்லூங்கள்.
14. நீண்ட நாளைய நண்பனை கண்டவுடன் அவர்களை
தளுவிக்கொள்ளுங்கள், அவர்கள் முதுகில் தட்டிக் கொடுங்கள்.
15. உங்களை இதயப்பூர்வமாக, ஆத்மப்பூர்வமாக ஆழமாக நம்புங்கள், பின்னர் உலகம் உங்களை நிச்சயம்
கண்டுக்கொள்ளும் மேலான அங்கீகாரத்தை கொடுக்கும் என்பதை மறக்காதீர்கள்.
16. கோபம், பொறாமை கொள்ளாதீர்கள்.
17. தொல்வியுற்றவர்களுக்கு ஆறுதலாய் இருங்கள்.
18. நூலகங்களுக்கு உங்களால் முடிந்த புத்தகங்களை பரிசளியுங்கள், இயலாதவர்கள் அதனால் பயனடைவார்கள்.
19. மரங்கள், பூச்செடிகளை நடுங்கள்.
20. மக்களையும் அவர்களின் போக்கையும் விரும்புங்கள், அவர்கள் என்னதான் ஊமையாய் இருந்தாலும், ஒன்றுப்படாமல் இருந்தாலும் சரி காலம் அதற்கான சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதை மறக்காதீர்கள்.
21. ஜாதி, மதம், இனம் பாகுபாடு பார்க்காமல் பழகிடுங்கள்,
அவ்வாறு உங்கள் சுற்றத்தார் இருப்பின் ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருக்கிறார்கள் என்றெண்ணி விலகிவிடுங்கள்.
22. தெருவில் அனாதையாய் திரியும் குட்டி நாய்களுள் ஒன்றினை தேர்ந்தெடுத்து அதனை வளர்த்திடுங்கள் (இருக்கும் காலம் வரை உங்களுக்கு நன்றியுடன் இருக்கும்).
23. நீங்கள் இவ்வுலகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அவ்வாறே அதனை காணுங்கள், உங்களால் மற்றவர்களும் மாறுவார்கள் உலகமும் தன்னை நிச்சயம் மாற்றிக்கொள்ளும் அல்லது மாற்றத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கும்.
24. இதுபோன்ற நல்ல விடையங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Monday, October 16, 2017

உறவுகளை சார்ந்திருங்கள்

உயிர் உள்ளது, உயிர் அற்றது என்று, உலகில் உள்ளவற்றை பிரிக்கலாம். உயிர் உள்ள அனைத்தும், உணர்வை வெளிப்படுத்துகின்றன. உணர்வுகளை வெளிப்படுத்துவதால் உறவுகள் ஏற்படுகின்றன. அடுத்த கட்டமாக, உணர்வுகளை பகிர்ந்து கொள்வதும் அவசியமாகிறது. இப்படித் தான், அறிவு மற்றும் எண்ணங்கள் பரிமாறப்படுகின்றன.

தனி மரம் தோப்பாகாது; தனி மனிதன் சமூகமாக மாட்டான். உணர்வு, எண்ணம், அறிவு ஆகியவற்றை பரிமாறிக் கொள்வதால் பயன் கிடைக்கிறது. நல்லது – கெட்டது, சுகம் – துக்கம், அறிவு – அறியாமை, தெளிவு – குழப்பம் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் போதுதான், அவை அர்த்தம் பெறுகின்றன. தோன்றியதை சொல்ல சக மனிதன் தேவைப்படுகிறான். இப்படி பரிமாறிக் கொள்வதால், ஆதாயம் மற்றும் இழப்பு ஆகியவை இரு சாராருக்கும் கிடைக்கிறது. பலனை பொறுத்து, உறவு நிற்கும் அல்லது நீர்த்துப் போகும். 

மனிதன், தனக்காக வாழலாம்; ஆனால், தானாக வாழ முடியாது. இது, உலக நியதி. அதனால்தான், ‘யாருக்காக வாழ்கிறோம்’ என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதைப் பொறுத்து தான், வாழ்க்கையில் ஈடுபாடு ஏற்படுகிறது. 
சங்கடப்படும் போதுதான் ஆதரவும், துணையும் அதிகமாக தேவைப்படும். அதுபோல் சந்தோஷமாக இருக்கும்போது, அதை பகிர்ந்து கொள்ளவும், நமக்கு உறவுகள் தேவைப்படுகின்றன. எனவே உறவை சார்ந்திருங்கள்.

மறப்போம் மன்னிப்போம்

‘மறந்து விட்டேன், மறந்து போனது, அச்சச்சோ! இப்படி மறந்து போகிறேனே’ என்று அங்கலாய்க்கிறோம். ஒரு விஷயத்தை நினைவில் நிறுத்தத்தான் முயல்கிறோம், முயல வேண்டும் என்றும் சொல்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு விஷயத்தை மறப்பதற்கு தான் உண்மையில் முயல வேண்டி இருக்கிறது. வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களை மறக்க முடியாமல் தான் துன்பப்படுகிறோம்; துன்பப்படுத்துகிறோம்.

ஒரு நிகழ்வை சந்திக்கிறோம். அந்நிகழ்விற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை பொறுத்து தான் அதை சந்திக்கிறோமா, எதிர் கொள்கிறோமா என்பது முடிவாகிறது. அதை பொறுத்து, நமக்குள் ஏற்படும் அனுபவங்களுக்கு ஏற்ப, உணர்ச்சிகள் ஏற்படுகின்றன. அதை பொறுத்து இன்பம், துன்பம் தீர்மானிக்கப்படுகிறது. 

உணர்வின் வெளிப்பாட்டிற்கு ஏற்ப அந்த சம்பவம் முக்கியத்துவத்தை பெறுகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு உணர்ச்சி கொந்தளிப்பிற்கு காரணமாகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு, அது தீவிரமாக, நினைவில் நீங்காமல் நிற்கிறது. ஒன்றை மறக்க வேண்டுமானால், அதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, நிறுத்த தெரிய வேண்டும். 

முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்க முயற்ச்சி, பயிற்சி மற்றும் அனுபவம் தேவை. 

எனவே, ஒன்றை மறப்பதற்கும், மன்னிப்பதற்கும் அடிப்படை, சம்பவத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருக்க தெரிய வேண்டும். எனவே, முயற்சி செய்து மன்னித்து மறப்போமாக!

மனமே இன்பமாய் இரு

நாட்டின், மொத்த மக்கள் தொகையில், 10 சதவீதம் பேருக்கு மனநோய் அல்லது மன அழுத்தம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மன அழுத்தம் என்பது ஒரு மனநோய். 

மன அழுத்தம் ஏற்படும் போது அழுகை, சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சி வசப்படுதல், எந்த நேரமும் சோகமாகவும், தனிமையாகவும் இருப்பது ஆகியவை நடக்கும். இவை சாதாரண மன அழுத்தத்திற்கான அறிகுறிகள்

அதிகமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், தன்னம்பிக்கை குறைந்து, தற்கொலை எண்ணம் மேலோங்கும். தற்கொலை எண்ணம், ஓரிரு நொடிகளில் ஏற்பட்டு, செயலாக மாறக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. சிதைந்து போன உறவு முறைகள், நகரத்தில் இயந்திரமயமான வாழ்க்கை, கூட்டுக்குடும்ப மகிழ்ச்சி காணாமல் போனது, தன் வேலை, தன் வீடு என்ற குறுகிய மனப்பான்மையின் வளர்ச்சி, தனக்கு உறவுகள் யாரும் இல்லையே என்ற பாதுகாப்பற்ற உணர்வு, என, மன அழுத்தத்திற்கு பல காரணங்கள் உள்ளன. மன அழுத்தம் அதிகமாகி, கட்டுப்பாடற்ற நிலைக்கு செல்லும் போதுதான், மனநோய் ஏற்படுகிறது. 
வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் துயர சம்பவங்கள், பொருளாதார பின்னடைவுகள், தோல்விகள் போன்றவை, மன அழுத்த நோய், உடனடியாக வெளிப்பட காரணமாக அமைகின்றன. 
ஒரு சிலருக்கு, எந்தவித காரணம் இல்லாமலும், மன அழுத்த நோய் ஏற்படலாம் அல்லது பரம்பரை காரணமாகவும் ஏற்படலாம். தன்னம்பிக்கையற்ற உணர்வு, எல்லாவற்றிற்கும் பிறரை சார்ந்து இருப்பது, அதிக ஒழுங்கு எதிர்பார்ப்பது போன்ற ஆளுமை குணம் கொண்டவர்களுக்கும், மன அழுத்த நோய் வர வாய்ப்புகள் அதிகம். அதற்கு இரண்டு வகையான சிகிச்சை முறைகள் உள்ளன. மருத்துவ ரீதியாக சிகிச்சைகள் கொடுத்து, சரிசெய்யலாம். அல்லது, அவர்களின் எண்ண ஓட்டங்களை மாற்றியமைப்பதன் மூலம், மன அழுத்தத்தை சரி செய்யலாம். மனதை எந்த விஷயமும் அழுத்தவிடாமல் பார்த்து கொள்வதே, இந்த நோயில் இருந்து தப்பிக்கும் வழி.

மாற்றம் ஒன்றே மாறாதது

இரவு பகலாகிறது; பகல் இரவாகிறது. கோடை போய் குளிர் வருகிறது; வறட்சி போய் வெள்ளம் வருகிறது. பூ காயாகிறது; காய் கனியாகிறது; கனி செடியாகிறது. குழந்தை பெண்ணாகிறாள்; பெண் தாயாகிறாள். இளமை மாறி முதுமை ஆட்சி செய்கிறது. இதைத்தான் மாற்றம் ஒன்றே மாறாதது என்கிறோம். 

மாற்றம் மட்டும்தான் நிரந்தரம். அனைத்து உயிரினங்களும், அவற்றுக்கே உரித்தான குணங்கள் மற்றும் பண்புகளை உள்ளடக்கியிருக்கின்றன. அவை நிலையானது என, நம்பப்படுகிறது
ஆனால், அனுபவத்தில் என்ன காண்கிறோம்? அன்பு வெறுப்பாகிறது; வெறுப்பு பாசமாகிறது; கோபம், சாந்தமாகிறது; சாந்தத்தை கோபம் காலி செய்கிறது. அதாவது மனிதனின் குணம் மாறி கொண்டே இருக்கிறது. 
ஏன்? தேவை, வசதி, வாய்ப்பு, சூழ்நிலைக்கு ஏற்ப, ஆபத்தை தவிர்த்து, நன்மை கருதி, குணம் மாறுபடுகிறது; மாற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகிறது. இதைத்தான் மாற்றம் ஒன்றே மாறாதது; மாற்றம் மட்டும்தான் நிலைத்திருக்கும் என்கிறோம். 
மாற்றம் வரும்போது, அதை மனிதன் ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். இதை புரிந்து கொண்டால், மாற்றத்தை சந்திக்கும் போது, ஏமாற்றம் அடைய வேண்டி இருக்காது.

தோல்வியை கொண்டாடுங்கள்

தோல்வி என்றால் என்ன; போட்டியில் தோற்பது தான் 
தோல்வி என, நினைக்கின்றனர். உண்மை அதுவல்ல. 
ஏதாவது ஒரு காரியத்தை எடுத்து அதை முழுமையாக முடிக்காமல் விடுவதும் தோல்விதான். இலக்கும், திறமையும் ஒத்துப் போகாத போது, செயலை முடிக்க முடியாது. தோல்வி ஏற்படும்.


ஒன்றை பற்றி விவரமாக புரிந்துகொண்டு பாராட்டுவதை தான் கொண்டாடுவது என்கிறோம். எனவே, தோல்வியை அலசி, ஆராய்ந்து, இலக்கை நம் திறமைக்கு உட்பட்டு வைத்துக் கொள்ள வேண்டும். 
மேலும் லட்சியத்திற்கு ஏற்ப, திறமையை வளர்த்துக் கொண்டால் வெற்றி உறுதி. அந்த அளவிற்கு தயாராக இருந்தால், தோல்விக்கு வாய்ப்பே இல்லை. 
எனவே தோல்வியை கொண்டாட தெரிய வேண்டும். தோல்விகளை அல்ல. 
வாழ்க்கையில் உயர்வும், தாழ்வும் மாறிமாறி வருவது இயல்பு. முன்னேற வேண்டும் என்பது, எல்லாருக்கும் இருக்கும் ஆசை; அதுவும் இயல்பு. உயர்வு வந்தால், தோல்வியும் வரும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். 
உயர்வும், தாழ்வும் நாணயத்தின் இரு பக்கங்கள். தோல்வியை கண்டு துவளக் கூடாது. வாழ்வில், ஒருமுறையேனும் தோல்வி ஏற்பட்டால் தான் வெற்றியின் அருமை புரியும். சாதாரணமாக ஒருவன் வெற்றியடைந்தால், அவனுக்கு அது பெரிய விஷயமாக தெரியாது. பலமுறை தோல்வி கண்டு, வெற்றியை தழுவும் ஒருவனால் தான், அதை உண்மையில் உணர முடியும். 
தோல்வியை தெரிந்து, அதற்கு தயாரானால், தோல்விகளுக்கு வாய்ப்பில்லை. ஆகவே, தோல்வியை கொண்டாடுங்கள்.

நாட்களை செயல்களால் நிரப்புவோம்!

இப்போது தான் புத்தாண்டு பிறந்தது போல் இருக்கிறது. அதற்குள் பாதியை கடந்து விட்டோம். புது ஆண்டு பிறந்த போது, என்னென்னவோ தீர்மானம் செய்து, சபதமும் செய்தோம். 
ஆனால், ‘கடந்த மாதங்களில் என்ன சாதித்தோம்…’ என்று நினைத்துப் பார்த்தால், சிலரால் தான் திருப்திப்பட்டுக் கொள்ள முடியும். 
சாதித்த திருப்தியை வெளிப்படுத்தக் கூடியவர்கள் கூட, ‘உடன் இருப்போரின் தொந்தரவால் தான், இந்த அளவாவது சாத்தியமாயிற்று…’ என்பர். 
உங்களது சொந்த வாழ்வில், சுய முயற்சியில், கடந்த ஆறு மாத பணிகள் திருப்திகரமா இருந்தனவா என்று கேட்டால், ‘வீட்டுல இருக்கறவங்களோட நச்சரிப்பு தாங்க முடியாம தான் இதெல்லாம் செய்ய முடிந்தது; இல்லா விட்டால் எதுவும் சாத்தியப்பட்டிருக்காது…’ என்று உதட்டை பிதுக்கு கின்றனர். 
ஆக, வெளியிலிருந்து வந்த நெருக்கடிகள் தான், இவர்களை உசுப்பியிருக்கின்றனவே தவிர, சுயமாக, ஆர்வமெடுத்து சாதித்தவை என்றால், கோணித்துணியிலே வடிகட்டப்பட்ட பழச்சாற்றின் கதையாக, குடிக்கிற பாத்திரத்திற்கு ஏதோ சொட்டு சொட்டாகத் தான் வந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. 
மிக குறுகிய காலமே வாழ்ந்த பாரதியும், விவேகானந்தரும், ஜான்சி ராணியும் சாதித்தவை மகத்தானவை! 80 – 90 வயது வரை வாழ்ந்து, பூமிக்கு பாரமாய் இருந்தவர்கள், வரலாற்றுப் பக்கங்களில், ஒரு வரி கூட தேற மாட்டார்கள்.


பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றும் போது நான் கூறுவது இது தான்… ‘உங்கள் கல்வி நிறுவன பதிவேடுகளில், உங்கள் பெயர்கள் இடம்பெறுவது இயல்பாகவே நிகழப்போகிற விஷயம்; ஆனால், உங்கள் பெயர், உங்கள் நிறுவனத்தின் ஆண்டுதழ்களில் பதிக்கப்பட வேண்டும். அடுத்து, வரவேற்பறையின் மரப்பலகைகளில், உங்கள் பெயர் பொறிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், இக்கல்வி நிறுவனத்தில் படித்தீர்கள் என்பதில் கிடைக்கக் கூடிய முழுப் பெருமையை, தக்க வைத்துக் கொள்ள முடியாது…’ என்பேன். 
உண்ணல், உறங்கல், ஜீரணித்தல், கழித்தல் ஆகியவற்றை, எல்லா உயிரினங்களும் செய்கின்றன. மனிதனும் இதற்குள் அடங்கிப் போகலாமா? 
நாளையும், பொழுதையும், மணித்துளிகளையும் கை வைத்து தள்ளாத குறையாய், வாழ்வதில் என்ன பயன்! 
‘பொழுதே போகமாட்டேங்குது… என்ன செய்றதுன்னே தெரியல; ஒவ்வொரு நாளையும் ஓட்றது பெரும்பாடா இருக்கு…’ என்பவர்கள், தங்களது இயலாமைகளை, முகவிலாசமாக எழுதி ஒட்டிக் கொள்கின்றனர். 
நூற்றியொரு வயதான, எம்.ஏ.எம். பழனியப்பச் செட்டியார் என்பவர் தினமும், ‘ஷேர்’ மார்க்கெட்டில் இரண்டு மணி நேரமாவது பொருள் ஈட்டுகிறார். ஈட்டுபவற்றை இயலாதவர்களுக்கு அளிக்கிறார். ‘ஒவ்வொரு நாளையும் நமக்கோ, பிறருக்கோ முன்னேற்றம் தரக் கூடிய ஏதேனும் சிறிய நற்காரியங்களையாவது செயல்படுத்த வேண்டும்…’ என்கிறார். 
நல்லவர், வல்லவர், தங்க மனசுக்காரர், பரோபகாரி, தேனீ போன்ற சுறுசுறுப்பானவர், மனிதநேயர், புனிதர், மாண்புடை நெஞ்சர் என்ற வார்த்தைகளை, பிறர் பேச நாம் விட்டு செல்ல வேண்டுமானால், நாட்களை, செயல்களால் நிரப்பினால் மட்டுமே சாத்தியம்!