நாட்டின், மொத்த மக்கள் தொகையில், 10 சதவீதம் பேருக்கு மனநோய் அல்லது மன அழுத்தம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மன அழுத்தம் என்பது ஒரு மனநோய்.
மன அழுத்தம் ஏற்படும் போது அழுகை, சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சி வசப்படுதல், எந்த நேரமும் சோகமாகவும், தனிமையாகவும் இருப்பது ஆகியவை நடக்கும். இவை சாதாரண மன அழுத்தத்திற்கான அறிகுறிகள்
அதிகமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், தன்னம்பிக்கை குறைந்து, தற்கொலை எண்ணம் மேலோங்கும். தற்கொலை எண்ணம், ஓரிரு நொடிகளில் ஏற்பட்டு, செயலாக மாறக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. சிதைந்து போன உறவு முறைகள், நகரத்தில் இயந்திரமயமான வாழ்க்கை, கூட்டுக்குடும்ப மகிழ்ச்சி காணாமல் போனது, தன் வேலை, தன் வீடு என்ற குறுகிய மனப்பான்மையின் வளர்ச்சி, தனக்கு உறவுகள் யாரும் இல்லையே என்ற பாதுகாப்பற்ற உணர்வு, என, மன அழுத்தத்திற்கு பல காரணங்கள் உள்ளன. மன அழுத்தம் அதிகமாகி, கட்டுப்பாடற்ற நிலைக்கு செல்லும் போதுதான், மனநோய் ஏற்படுகிறது.
வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் துயர சம்பவங்கள், பொருளாதார பின்னடைவுகள், தோல்விகள் போன்றவை, மன அழுத்த நோய், உடனடியாக வெளிப்பட காரணமாக அமைகின்றன.
ஒரு சிலருக்கு, எந்தவித காரணம் இல்லாமலும், மன அழுத்த நோய் ஏற்படலாம் அல்லது பரம்பரை காரணமாகவும் ஏற்படலாம். தன்னம்பிக்கையற்ற உணர்வு, எல்லாவற்றிற்கும் பிறரை சார்ந்து இருப்பது, அதிக ஒழுங்கு எதிர்பார்ப்பது போன்ற ஆளுமை குணம் கொண்டவர்களுக்கும், மன அழுத்த நோய் வர வாய்ப்புகள் அதிகம். அதற்கு இரண்டு வகையான சிகிச்சை முறைகள் உள்ளன. மருத்துவ ரீதியாக சிகிச்சைகள் கொடுத்து, சரிசெய்யலாம். அல்லது, அவர்களின் எண்ண ஓட்டங்களை மாற்றியமைப்பதன் மூலம், மன அழுத்தத்தை சரி செய்யலாம். மனதை எந்த விஷயமும் அழுத்தவிடாமல் பார்த்து கொள்வதே, இந்த நோயில் இருந்து தப்பிக்கும் வழி.
No comments:
Post a Comment