Tuesday, November 3, 2015

பிசினஸில் தோல்வியைத் தகர்த்து, வெற்றி காண 7 விஷயங்கள்..!

பிசினஸில் தோல்வியைத் தகர்த்து, வெற்றி காண 7 விஷயங்கள்..! 
"சச்சினாகவே இருந்தாலும் அடிச்சாத்தான் ரன்னு" என்கிற மாதிரி எவ்வளவு உழைத்தாலும் வெற்றியடைந்தால் மட்டுமே லட்சத்தில் ஒருவராக முடியும். எல்லோருக்கும் வாழ்க்கையில் தொழிலில் ஜெயிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். தோற்றுப் போகிறவர்களே அதிகம். ஆனால், நமக்கு வெற்றிகளின் கதைகளே அதிகம் சொல்லப்படுகின்றன. தோல்வியில்லாமல் வெற்றியில்லை. ஆனால் தோல்வியைத் தகர்த்து வெற்றியடைய முடியும். எப்படி?

1. தெளிவான திட்டம்:
எந்தத் தொழிலாக இருந்தாலும் சரி, ஆரம்பிக்கும் முன்னரே தெளிவான திட்டத்தோடு தொடங்க வேண்டும். எப்போதுமே தொடக்கம் ஒரு சோதனை காலம் என்பதால் முதல் அடியே அகலக்கால் வைக்காமல் சிறிய அளவில் தொடங்குவது நல்லது. பிறகு வளர வளர உங்களுடைய தொழிலின் அளவையும் அமைப்பையும் வளர்த்துக்கொள்ளலாம்.

2. குறைவான ஆட்கள், சரியான ஆட்கள்:
ஆரம்பத்திலேயே நிறைய ஆட்களை வேலைக்கு நியமிப்பதைத் தவிர்க்க வேண்டும். தொழிலின் அளவுக்கேற்ப தேவையான சரியான ஆட்களை மட்டுமே வேலைக்கு வைக்க வேண்டும்

3. ஆர்வமும் அறிவும்:


செய்யும் தொழில் மீது ஆர்வமும் அதற்கான அறிவுத் தேடலும் இருக்க வேண்டும்.  ஆனால் ஆர்வக்கோளாறாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

4. மக்களோடு தொடர்புடைய பிசினஸ்

நீங்கள் செய்யப்போகும் தொழில் எப்போதும் உங்களுடைய குறிப்பிட்ட வாடிக்கையாளர்களோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும்.
அவர்களுடைய விருப்பம் என்ன, தேவை என்ன, போன்றவற்றை அலசி பார்த்து அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

5. பொறுமையும் பொறுப்பும்


வெற்றிகரமாக தொழில் செய்வதற்கு மிக முக்கியமானவை பொறுமையும் பொறுப்புணர்ச்சியும். தொழிலில் எந்த நிலையிலும் பொறுமையை இழக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆனால் அதே நேரத்தில் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களின் நலனை நோக்கியே நம்முடைய செயல்பாடு இருக்க வேண்டும். தொழிலின் தரத்தையும் சேவையையும் உயர்த்திக்கொண்டே இருக்க வேண்டும்.

6. சரியான தேர்வு

தொழிலில் கூட்டு வைப்பதாக இருக்கட்டும் அல்லது முக்கிய பொறுப்புகளுக்கு நியமிப்பதாக இருக்கட்டும் பலமுறை யோசித்து முடிவு செய்ய வேண்டும்.
தகுதியானவர் யாராக இருந்தாலும் விட்டு விடாதீர்கள். தகுதியற்றவர் யாராக இருந்தாலும் அருகே சேர்க்காதீர்கள்.

7. மேலாண்மை அறிவு (Management)

ஒரு தொழிலில் மிக முக்கியமானது மேலாண்மை. தொழிலை நடத்துபவருக்கு பல திறன்கள் இருந்தாலும் அனைத்தையும் விட முக்கியமானது அவரது மேலாண்மை திறன்.
பல தொழில்கள் வேகவேகமாக துவங்கி, வெகு சீக்கிரமே முடங்கி போவதுற்கு முக்கிய காரணம் இந்த மேலாண்மை திறன் இல்லாமையால்தான். தொழிலுக்கு அவசியமான பணம், ஊழியர்கள், பொருட்கள், கருவிகள் என அனைத்தையும் திறமையாக மேலாண்மை செய்யும் அறிவு முக்கியம்.

இந்த 21ஆம் நூற்றாண்டு தொழில் செய்பவருக்கே பொற்காலம் என்பதால் இவற்றை மனதில் கொண்டு செயல்பட்டால் தொழிலில் வெற்றி நடை போடலாம்.

No comments:

Post a Comment