Tuesday, November 3, 2015

நாஸ்டர்டாமஸ் என்னும் ஐரோப்பிய தீர்க்க தரிசி !

நாஸ்டர்டாமஸ் என்னும் ஐரோப்பிய தீர்க்க தரிசி !

நம் நாட்டு சித்தர் பெருமக்களை ஒப்பிடும்போது , இவை எல்லாம் ஒன்றுமே இல்லை. என்ன பண்ணுவது? அவர் தான் மேலை நாட்டில் பிறந்து விட்டாரே ! அற்புதம் என்று தோன்றும் விஷயங்களை அவர்கள் தான் விளம்பரப் படுத்துவதில் ஜித்தர்களே. அவரை வைத்து எழுதிய புத்தகங்கள் அனைத்தும், மில்லியன் டாலர்களை சம்பாதித்துக் கொடுத்துள்ளன. சரி, நமது நண்பர்களுக்காக – அவரைப் பற்றி ஒரு சில பதிவுகள் . இந்த தகவல்கள், தற்செயலாக நான் படிக்க நேர்ந்தது. நமது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. நிச்சயமாக சுவாரஸ்யமாக இருக்கும்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாமஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது. ‘நூற்றாண்டுகள்’ என்ற இவரது நூல் 942 செய்யுட்களைக் கொண்டது. ஒவ்வொரு செய்யுளிலும் நான்கு வரிகள் உள்ளன. இவைகள் காண்டமாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு காண்டத்திலும் நூறு பாடல்கள் உள்ளன..

14-12-1503ல் பிறந்த இவர் 2-7-1566ல் மறைந்தார். இவர் வாழ்வு மிக விசித்திரமான ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும் விபத்துக்களையும் கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால் சிறிது பயத்துடன்தான் இந்த நூலை அணுக வேண்டியிருக்கிறது. ஆனால் ஹிந்து மதம் மிக உயரிய நிலையை இந்த நூற்றாண்டில் அடையப் போகிறது என்பதையும் இவர்தான் கூறியுள்ளார். லண்டனில் ஏற்பட்ட மாபெரும் தீ விபத்து, பிரெஞ்சுப் புரட்சி, ஹிட்லரின் எழுச்சியும் வீழ்ச்சியும், கென்னடியின் கொலை போன்றவற்றை இவரால் எப்படித் துல்லியமாகக் கூற முடிந்தது என்பது ஆச்சரியகரமான விஷயம்தான்!

லத்தீனில் ஆழ்ந்த புலமை பெற்ற நாஸ்டர்டாமஸ் அம்மொழியின் செழுமையான வார்த்தைகளைக் கையாண்டிருப்பதால் அதன் உள் அர்த்தம் புரியாமல் அறிஞர்களும் ஜோதிட ஆர்வலர்களும் இன்று வரை அச்சொற்பொருள்களை அறிய தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நான்கு ஆண்டுகளில் இந்நூலை முடித்து 1555ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி வெளியிட்டார். நூல் அச்சிடப்பட்ட மேஸ்பான்ஹோம் பிரஸ்ஸின் முன்னே வெகு தூரத்திற்கு நீண்ட வரிசையில் மக்கள் நின்று இதை வாங்கி மகிழ்ந்தனர். ஆனால் சங்கேத மொழியில் பலன்களைக் கொண்டுள்ள பாடல்கள் அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தின

அவரது மகனுக்கே அவர் ஒரு எச்சரிக்கையை சங்கேத மொழியில் அளித்திருந்தார். ஒரு கடித வடிவில் அது இருந்தது, சீஸர் என்ற பெயருடைய அவரது மகன் 22ம் வயதில் தன் தந்தையின் பெயரைத் தீய வழியில் பயன்படுத்துவார் என்றும் அது அவருக்கு நலம் பயக்காது என்றும் எச்சரித்திருந்தார் நாஸ்டர்டாமஸ். இதை அலட்சியப்படுத்திய சீஸர், தந்தையைப் போல் பலன்கள் கூற வேண்டும் என்ற ஆர்வத்தில் விவாரிஸ் என்ற நகர் அழியப் போகிறது என்று ஆரூடம் கூறினார். ஆனால் அரசாங்கப் படைகளின் பாதுகாப்பில் இருந்த அந்த நகரத்திற்கு ஒரு ஆபத்தும் நேரவில்லை. மக்கள் சீஸரைச் சூழ்ந்து கொண்டு எப்போது நமது நகரம் அழியப் போகிறது என்று கேட்கலாயினர். பளீரென்று சீஸர் ‘இன்னும் மூன்று நாட்களில்’ என்றார். அடுத்த நாள் இரவு அவரே நகருக்குத் தீ வைக்க முயன்ற போது கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு அரசாங்க வீரர்களால் கொல்லப்பட்டார்.

இதே போல நடந்த இன்னொரு விசித்திரமான சம்பவம் அவர் புகழை வெகுவாகப் பரப்பி விட்டது. புகழ் பெற்ற மருத்துவராகவும் தீர்க்கதரிசியாகவும் அவர் திகழ்ந்ததால் பிரான்ஸிலுள்ள பெரும் தனவந்தர்களும் பிரபுக்களும் அவரை அழைத்துத் தங்கள்குறைகளைப் போக்கிக் கொள்வது வாடிக்கையாக இருந்தது, ஒரு சமயம் லொரெய்ன் என்ற மாகாணத்தில் இருந்த பெயின்ஸ் கோட்டையின் உரிமையாளரான லார்ட் ப்ளோரின்ஸ்வில்லி அவரை அழைத்தார். அவரது தாயாரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று பிரபு ப்ளோரின்ஸ்வில்லி கேட்டுக் கொள்ளவே சலான் என்ற தனது நகரிலிருந்து பயணப்பட்டு லொரெய்ன் வந்து தன் சிகிச்சையைத் தொடங்கினார் நாஸ்டர்டாமஸ். சீக்கிரமே அவர் குணமடைந்தார். இதனால் மனம் மகிழ்ந்த பிரபு தன் தாயார் குணமடைந்ததைக் கொண்டாட ஒரு பெரும் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். விருந்து நடக்கும் நாளன்று காலையில் தோட்டத்தில் நாஸ்டர்டாமஸுடன் அவர் உலாவச் சென்றார். அங்கே ஒரு இடத்தில் இரண்டு குட்டிப் பன்றிகள் இருந்தன. ஒன்றின் நிறம் கறுப்பு. இன்னொன்றின் நிறம் வெள்ளை. அதைச் சுட்டிக் காட்டிய ப்ளோரின்ஸ்வில்லி நாஸ்டர்டாமஸிடம் கிண்டலாக “இந்த இரண்டு பன்றிகளின் எதிர்காலம் பற்றிச் சொல்ல முடியுமா” என்று கேட்டார். நாஸ்டர்டாமஸின் உண்மையான பெருமை அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

இரண்டு பன்றிகளையும் உற்றுப் பார்த்த நாஸ்டர்டாமஸ் ப்ளோரின்ஸ் வில்லியிடம் “இதோ இந்த கறுப்புப் பன்றி ஒரு ஓநாய்க்கு உணவாகப் போகிறது. இதோ இந்த வெள்ளைப் பன்றி நமக்கு இரவு விருந்தில் உணவாகப் போகிறது” என்றார். ப்ளோரின்ஸ்வில்லி இதைப் பொய்யாக்கி விட வேண்டுமென்று எண்ணம் கொண்டு தனது சமையல்காரரை ரகசியமாக அழைத்து கறுப்புப் பன்றியை விருந்து உணவிற்குக் கொல்லுமாறு கட்டளையிட்டார். இரவு விருந்தில் தனது அருகில் உட்கார்ந்திருந்த நாஸ்டர்டாமஸிடம் “உங்கள் கூற்றுப் பொய்யாகி விட்டது. இதோ நாம் சாப்பிடுவது கறுப்புப் பன்றியைத்தான்” என்றார். நாஸ்டர்டாமஸோ சிரித்தார். “இல்லை, இது நான் சொன்ன வெள்ளைப் பன்றிதான்” என்றார். உடனே பிரபு தன் சமையல்காரரை அழைத்தார். சமையல்காரர் நடந்ததை விளக்கினார். “கறுப்புப் பன்றியைக் கொன்ற பின்னர் சில நிமிடம் நான் வெளியே போனேன். அப்போது ஒரு நொண்டி ஓநாய் உள்ளே வந்து அந்த மாமிசத்தை உண்டு விட்டது. வேறு வழியின்றி வெள்ளைப் பன்றியையே சமைத்தேன்” என்றார். இந்த விஷயம் வெளியில் பரவவே நாஸ்டர்டாமஸின் புகழ் பெருமளவில் பரவியது. அவரை பய பக்தியுடன் அனைவரும் வணங்கினர்.

இன்னொரு சம்பவம்: ஒரு நாள் மாலையில் அவரைத் தாண்டிச் சென்ற ஒரு இளம் பெண் தனது மாலை வணக்கத்தைத் தெரிவித்து அருகிலுள்ள காட்டில் சுள்ளிகளைப் பொறுக்கப் போவதாகச் சொன்னாள். நாஸ்டர்டாமஸும் அவளிடம் “மாலை வணக்கம் இளம் பெண்ணே” என்று கூறினார். சற்று நேரம் கழிந்து இரவான போது அவள்திரும்பி வந்தாள். அவருக்குத் தனது இரவு வணக்கத்தைத் தெரிவித்தாள். நாஸ்டர்டாமஸ், “மாலை வணக்கம் கூறிய போது இளம் கன்னியாகப் போனாய்; இப்போது இளம் மனைவியாக வந்து விட்டாயே” என்று சிரித்துக் கொண்டே கூறினார். அரண்டு திகைத்துப் போன அவள் ஓடியே விட்டாள். தனது காதலனைக் காட்டில் சந்தித்த அவள் கன்னிமை இழந்ததை நாஸ்டர்டாமஸ் போகிற போக்கில் கூறியது அவரது எதையும் உணரும் ஆற்றலை உணர்த்தியது. நாளுக்கு நாள் அவர் புகழ் பெருகவே அவர் வாயிலிருந்து என்ன சொல் உதிரப் போகிறது என்பதை அனைவரும் அறிய ஆவலுற்றனர். அவர் மரணத்திற்குப் பின்னும் கூட அவர் ஆரூடம் பலித்ததுதான் விசித்திரத்திலும் விசித்திரம்!

No comments:

Post a Comment