Tuesday, November 3, 2015

“வெற்றிக்கு வழிகாட்டும் விந்தை மனம்” ….வெற்றி நிச்சயம்!

“வெற்றிக்கு வழிகாட்டும் விந்தை மனம்” ….வெற்றி நிச்சயம்!
துறவி ஒருவரைப் பார்க்கப் போனான் ஓர் இளைஞன். அன்புடன் அவனை வரவேற்ற துறவி, அவனது பிரச்னை என்ன என்று கேட்டார்.

“ஐயா, என்னால் வாழ்க்கையில் எந்த ஒரு செயலிலும் வெற்றிபெறவே முடியவில்லை. நீங்கள்தான் நல்லவழி கூறவேண்டும்!’ சொன்னான் இளைஞன்.
 
“தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்… நிச்சயம் வெற்றிபெறுவாய்!’ ஆசி வழங்கினார் துறவி.
 
“இல்லை ஐயா! எனக்குத் தன்னம்பிக்கை நிறையவே இருக்கிறது. ஆனாலும் என்னால் ஓர் அடி கூட முன்னேற முடியவில்லை. என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தபோது, என்னிடம் மற்றவர்களைப் போல் பணம் இல்லை என்று தெரிய வந்தது. அதனால் நீங்கள் எனக்குப் பணம் கிடைக்க வழி சொல்லுங்கள், அதுபோதும்’
 
“நிறைய செல்வம் கிடைக்க வழி சொல்கிறேன். அதைவைத்து நீ என்ன செய்வாய் சொல்!’
 
“அதைவைத்து என் லட்சியத்தை சுலபமாக அடைந்து விடுவேன்.’
 
“அப்படியானால் உன் லட்சியம் என்ன என்பதைக் கூறு’
 
“நல்லதொரு வேலைக்குச் சென்று, நிறைய பணம் சம்பாதித்து! அதைவைத்து நன்றாக வாழ்வது!’
 
“செல்வம் சேர்ப்பதுதான். உன் லட்சியம் என்றால், அதை நீயே செய்ய வேண்டியதுதானே… ஏன் என்னிடம் கேட்கிறாய்!’
 
“நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் அதைத் தொடங்குவதற்கு முதலீடு வேண்டும் அல்லவா? அதற்கு என்னிடம் எதுவும் இல்லையே!’
 
“நீ சொல்வது சரிதான். நான் உனக்கு பணம் தருகிறேன். அதற்கு பதிலாக நான் கேட்பதை நீ எனக்குத் தர வேண்டும்!’
 
“தாராளமாக தருகிறேன்.. என்ன வேண்டும் சொல்லுங்கள்!’
 
“உனக்கு ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன். உன் கண்களை எனக்குத் தந்துவிடு!’
“இது என்ன அநியாயம். முடியாது’
 
“போகட்டும்… ஐம்பதாயிரம் தருகிறேன். உன் கைகளில் ஒன்றைக் கொடுத்துவிடு!’
 
“முடியவே முடியாது!’
 
“அப்படியானால் உன் உடலில் இருந்து உனக்கு வேண்டாத உறுப்பு எது என்று சொல். அதற்கு என்ன விலை தரமுடியும் எனக் கூறுகிறேன்!’
 
“நடக்கவே நடக்காது. நீங்கள் கோடிகோடியாகத் தந்தாலும் என் உடலில் இருந்து எந்த அவயத்தையும் தரமாட்டேன்!’
 
இளைஞன் கோபமாகச் சொன்னதை கேட்டு, துறவி மெல்லப் புன்னகைத்தார். பிறகு சொன்னார்.
 
“கோடி கோடி ரூபாய்க்கு மேலான மதிப்புள்ள உன் உடலை வைத்துக் கொண்டு. எதுவும் இல்லை என்கிறாயே! தன்னம்பிக்கை இருந்தால் மட்டும் போதாது. உழைக்கும் மனமும் வேண்டும். அப்போதுதான் வெற்றிபெறமுடியும்.
 
எல்லோருமே குழந்தையாக இருக்கும்போது வெறும் காலோடுதான் நடக்கக் கற்றுக் கொள்கிறோம். நடக்கத் தெரிந்த பிறகுதான் விதவிதமான காலணிகள் கிடைக்கின்றன. காலணி கிடைத்த பிறகுதான் நடக்கப் பழகுவேன் என்று எவரும் இருப்பதில்லை.
 
லட்சியத்தை அடைய தன்னம்பிக்கையோடு முயற்சி செய். அதனை எட்டுவதற்குத் தேவையான எல்லாமும் படிப்படியாக உன்னிடம் வந்து சேரும்!’
 
துறவி சொன்னதைக் கேட்ட இளைஞன், வெற்றிபெறுவதில் தனக்கு இருந்த தடை என்ன என்பதை உணர்ந்தான். அதனை அங்கேயே களைந்து எறிந்துவிட்டு, தன்னம்பிக்கையோடு லட்சியப்பாதையில் நடக்கத் தொடங்கினான்.
 
உங்கள் மனதில் அந்த இளைஞனைப்போல் ஏதாவது குறை இருக்கலாம். அந்த எண்ணமே உங்கள் லட்சியத்துக்குத் தடையாக இருக்கலாம் முதல் வேலையாக அதனை உதறுங்கள். உங்கள் லட்சியத்துக்கு நீங்களே தடையாக இருப்பதை முதலில் தகர்த்து எறியுங்கள். வெற்றி நிச்சயமாகும்!

No comments:

Post a Comment