பிறர் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் பலவேளைகளிலும் எமக்கு ஒரு சிறையாகி விடுகிறது, எம்மை பற்றி நாமே கருதிக்கொள்ளும் தோற்றங்களும் பலவேளைகளில் எம்மை நகரவிடாமல் செய்து விடுகிறது,
பிறரின் அபிப்பிராயங்கள் எமது தீர்மானங்களின் மீது பாதிப்பை உண்டு பண்ணுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது,
அதன் காரணமாகவே பல சமயங்களில் நாம் நாமாக இல்லாமல் இருக்கிறோம்.
பிறரின் அபிப்பிராயங்கள் நமது மூளையை பல சமயங்களிலும் கழுவி விடுகிறது.நம்மை அறியாமலேயே நாம் எமது சுய புத்தியை அல்லது சுய விருப்பத்தை மீறி நடந்து கொள்கிறோம்
ஏனெனில் பிறர் எம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் எமக்கு அவ்வளவு அக்கறை.
பிறரின் அபிப்பிராயங்களுக்கு நாம் ஏன் பயப்படுகிறோம் ?
நாம் சுயமாக சுதந்திரமாக சிந்திக்கும் போதெல்லாம் சமுகத்தை நாம் வழிநடத்துகிறோம்.
பிறரின் அல்லது சமுகத்தின் அபிப்பிராயங்களுக்கு ஏற்ப சிந்திக்கும் பொழுதெல்லாம் நம்மை சமுகம் வழிநடத்துகிறது.
இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வெரு ஜீவராசியும் தனி தனி தனது நோக்கங்களுக்காக பிறவி எடுத்திருக்கிறது,
தனது சுயத்தை இழந்து யாரோ ஒருவரது வாழ்வை வாழ்வது என்பது மனிதர்களிடம் மட்டும்தான் காணப்படுகிறது,
மனிதர்கள் ஏன் சுயத்தை இழக்கிறார்கள் ?
பயம்! தன்னை பற்றி பிறர் என்ன நினைப்பார்கள்?
சமுகத்தில் தனது பிரதிமை எப்படி இருக்கும்? அதாவது இமேஜ் பற்றிய பயம்.
இந்த இமேஜ் பொறி என்பது மிகவும் பலம் வாய்ந்தது, நம்ம வாழவும் விடாது சாகவும் விடாது,
பலவீனமான மனிதர்கள் இந்த இமேஜ் பொறியில் சிக்கி கடனாளியாவது அடிக்கடி நாம் காணும் காட்சியாகும் .
பிறரின் பார்வைக்கு ஏற்ப தனது இமேஜை மாற்றி கொள்வது ஒரு விதத்தில் ஒரு மெல்ல கொல்லும் வியாதிதான்.
பல குடும்பங்கள் கடனாளியவதும் , தேவையே இல்லாமல் தமக்கு விருப்பம் இல்லாவிடினும் சமயம் அரசியல் போன்ற பொது காரியங்களில் அதிகமாக ஈடுபடுபவர்கள் அநேகர் இந்த வியாதியால் பீடிக்க பட்டவர்கள்தான்,
இவர்கள் தங்கள் வாழ்வை வாழாமல் யாரோ ஒருவரது வாழ்வை வாழ முயற்சிப்பவர்கள் ஆவர்.
இதைதான் இல்லாத ஊருக்கு போகும் வழி என்று சொல்வர்.
தனது பணம் நேரம் மற்றும் சகல சக்திகளையும் வீண் விரயம் செய்து தனக்கு சம்பந்தம் இல்லாத கருமங்களில் காட்சி அளிக்கும் இவர்களின் செய்கை உண்மையில் வெறும் வீண் விரயமே .
இதற்கு அடிப்படை காரணம் தன்னம்பிக்கை இல்லாமையே,
தனது உண்மையான விருப்பங்களை பூர்த்தி செய்யவே தனக்கு இந்த அற்புத வாழ்வு அமைந்திருக்கிறது என்ற விழிப்புணர்வு வந்தால் மட்டுமே இந்த இமேஜ் ட்ராப் இல் இருந்து விடுதலை கிடைக்கும் ,
அப்படி அதில் இருந்து விடுபடுவது அவ்வளவு சுலபம் அல்ல.
ஏனெனில் எமது சமுக கட்டமைப்பு நீண்ட காலமாக பிறரின் அபிப்பிராயம் அல்லது கடவுளின் அபிப்பிராயம் என்று ஏதாவது ஒரு பயத்தை காட்டியே நிறுவனப்படுத்தி வந்துள்ளது,
அரசியல் கட்சிகள் மற்றும் சமயம் சார்ந்த அமைப்புக்கள் அல்லது குழுக்கள் எல்லாமே இந்த இமேஜ் பொறியை வைத்து தான் தங்கள் கடையை விரித்துள்ளன.
இதே தந்திரத்தை ஆம்வே போன்ற வர்த்தகர்களும் பயன்படுத்தியே வருகிறார்கள் . இவர்கள் அடிக்கடி தமது வாடிக்கையாளர்கள் அல்லது ஏஜெண்டுகளை கூட்டமாக சேர்த்து அதை ஒரு இமேஜ் பொறியாக மாற்றி விடுவார்கள். அங்கு பலர் முன்னிலையில் ஒவ்வொருவரினதும் திறமை மேன்மை தகுதி போன்றவற்றை செயற்கையாக புகழ்ந்து அவர்களை உயர உயர உயர்த்தி விடுவார்கள். அவர்களின் வார்த்தைகளால் மயங்கும் தனி நபர்கள் அவர்களின் இமேஜ் பொறியில் வசமாக சிக்கி தங்களின் சுயத்தை இழக்கிறார்கள்.
இமேஜ் பொறியை வைத்து பிறரிடம் கடன் போன்ற உதவிகளை பெற்றுக்கொள்வதை நாம் சர்வ சாதாரணமாக காணலாம்.
அந்த காலத்து புலவர்கள் அரசர்களையும் பணக்காரர்களையும் இந்த விதமான இமேஜ் பொறியை வைத்து பணம் பரிசுகள் பெற்றுள்ளதாக படித்திருக்கிறோம் .
ஆண்டாண்டு காலமாக அடிமனத்தில் ஆழமாக பதிக்கப்பட்ட கோட்பாடுகளை பற்றி மீள் பரிசீலனை செய்து பார்க்க மிகுந்த தன்னம்பிக்கை வேண்டும்,
திறந்த மனதோடு ஒரு விடயத்தை ஆராயும் பண்பு வேண்டும் .ஆனால் நாம்தான் எதையும் பார்க்காதே கண்ணை மூடிக்கொண்டு நம்பு அல்லது நம்புவது மாதிரி நடி , கும்பல்ல கோவிந்தா போடு, அப்படியே விழுந்த பாட்டுக்கு குறி போடு என்றெல்லாம் தப்பு தப்பாக்க நடதுகொள்கிறோம்,
உள்ளதை சொல்லாதே ஆனால் உண்மை சொல்வது போல் நடி. என்றெல்லாம் பக்கா கிரிமினல் கோட்பாடுகளை போற்றி வாழ்கிறோம்
அது மட்டுமல்ல வாழும் வழி இதுதான் என்று பரம்பரை பரம்பரையாக நம்பி கடைபிடித்து வருகிறோம்
நான் யார்? எனக்கு உண்மையில் எது விருப்பம்? நான் எப்படி இருக்கவேண்டும்?
என்ற அடிப்படை கேள்விகளை எமக்கு நாமே கேட்டு கொள்வதில்லை.
மொத்தத்தில் எம்மை நாமே மதிப்பதில்லை.அதன் காரணமாகவே பிறரையும் நாம் அதிகம் மதிப்பதில்லை.ஆனால் பொறாமை படுவோம் பொல்லாப்பும் சொல்வோம்.
பிறருக்காக எமது சுய சிந்தனையை இழந்துவிட்டால் பிறகு எமக்கு சுய சிருஷ்டியே இருக்காது,
அதாவது எமக்குள் இருக்கும் மென்மையான உணர்வுகள் செத்து போய்விடும்.
சுயம் இருப்பவர்கள்தான் சிருஷ்டி கர்த்தாக்கள். சுயம் இல்லாதவர்களிடம் Creativity இருக்காது.Creativity என்பது கணக்கு பாடம் அல்ல அது உள்ளுணர்வில் இருந்து தானே வரவேண்டும். இளையராஜா சொல்கிறார் இசையமைக்கும் அந்த கணம் கூட அந்த பாடலின் இசை என்ன என்று எனக்கு தெரியாது . அது வெளிப்படும்போதுதான் தனக்கே அது தெரிய வருகிறது?
இதே போல தான் கண்ணதாசனும் அவரது வாயால் வருபோழுதுதான் அந்த வரிகள் அவருக்கே தெரிய வருக்கிறது.
இவர்களும் நம்மவர்களை போல சதா இந்த இசை அல்லது இந்த பாடல்வரிகளை பிறர் எப்படி நோக்குவர் என்பதிலேயே குறியாக இருந்திருந்தால் இவர்களும் வெறும் Empty மனிதர்களாக இருந்திருப்பார்கள்.
இவர்கள் எல்லாம் இமேஜ் பொறியை உடைத்து எறிந்தவர்கள்.
அதனால்தானோ என்னவோ நம்மவர் இசை இலக்கியம் திரைப்படம் போன்ற நுண் கலைகளில் மிகவும் பின் தங்கி இருக்கிறார்கள்.
சுயத்தை இழந்தவர்கள் வெறும் மெஷின் தான் . வெறும் மெஷின் கதைவசனம் எழுதுமா அல்லது சுயமாக இசையமைக்குமா என்ன?
சுயத்தை இழந்தவரின் வார்த்தைகள் எல்லாம் Empty words தான்.
வெறும் சொற்களை வைத்து வெறும் வாயை மெல்லுவார்கள்.
சுய பரிசோதனை செய்வது அவசியம், ஏற்கனவே தலைக்குள் ஏறிவிட்ட கோட்பாடுகளை தூசி தட்டி சுயமாக கூர்ந்து பார்க்க வேண்டும்.
அவர் பாதை அவருக்கு நல்லது . உன் பாதைதான் உனக்கு உரியது ,
அதுதான் உன்னை உனக்கு தெரிய படுத்தும்.
இமேஜ் பொறியை ஒரு சிறை என்று எப்போது தெரிகிறதோ அப்போதுதான் நீ நீயாக இருக்கமுடியும்
உன் முழு பிரகாசமும் இந்த பிரபஞ்சத்தில் ஜொலிக்க இமேஜ் பொறி என்ற இருட்டில் இருந்து கொஞ்சமேனும் வெளியே வர எனது வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment