Thursday, May 2, 2013

தொலைந்த குழந்தையை தேடுங்கள்


ஒவ்வொரு மனிதனின் உள்மனதிலும் உறங்கிக் கிடக்கிறதொரு குழந்தை. அது கட்டாய உறக்கமென்றும் சொல்லலாம். கையாலாகா உறக்கமென்றும் கொள்ளலாம். விளையாட்டுக் குணம் முடங்கியபிறகு, வியாபாரக் கண்ணோட்டம் தொடங்கியபிறகு, தூங்கப் போனது அந்தக் குழந்தை.

தனக்குள் இருக்கும் குழந்தையை விழிப்பு நிலையில் வைத்திருப்பவர்கள் ஞானிகளும் குழந்தைகளும். அதனால்தான் ஞானிகளை “சேய்போல் இருப்பர் கண்டீர்” என்று பழம் பாடல் ஒன்று பேசுகிறது. கவிஞர்களின் குழந்தை மனதுக்கு நடைமுறை உதாரணங்கள் நிறைய உண்டு.

குழந்தைத்தனம் என்பது வாழ்வின் பெரிய வரம் என்பதை எத்தனையோ பேர் உணராமலேயே இருக்கிறார்கள். குழந்தைத்தனம் என்பதன் முதல் அடையாளம், திறந்த மனம்.

எதையும் புதிதாய்க் காணும் எண்ணம் இருந்தால் உள்ளம் உற்சாக ஊற்றாகும். சந்தோஷக் காற்றாகும். புதிய தகவலின் மீது நம் பழைய பதிவுகளின் நிழல் பதியும் போதெல்லாம் காட்சிக் குழப்பம் ஏற்படுகிறது.
குழந்தைகளின் மனம், புத்தம் புதிய கண்ணாடி. அருகே வருவதை அப்படியே பிரதிபலிக்கிறது. காட்சித் தெளிவில்தான் நிறைகளும் குறைகளும் நேர்படத் தெரிகின்றன.

மாசாலும் தூசாலும் மங்கி, ரசம் போன கண்ணாடிகளில் காட்சி மங்கலாய்த் தெரிவது போல ரசனை போன மனதில் வாழ்க்கையே மங்கலாகத்தான் தெரிகிறது.

குழந்தைத்தனத்தின் இன்னொரு தன்மை, நம்பிக்கை. அனாவசியமான அவநம்பிக்கைக்கு அங்கே இடமில்லை. அதனால்தான் வேகமாக ஓடும்போது விழ நேர்ந்தால்கூட விழுந்த வேகத்திலேயே எழுந்து குதித்தோடுகிறது குழந்தை. வளர்ந்த பிறகோ, விழுந்தால் எழுந்து கொள்ளவே நேரம் பிடிக்கிறது. அது மட்டுமா? விழுந்ததால் விளைந்த வலியைவிடவும் அந்த அவமானத்தின் வலியே அதிகமாயிருக்கிறது. ஓடமறுத்து மெல்ல மெல்ல நடக்கத் தோன்றி விடுகிறது. தோல்விகளைத் துடைத்துவிட்டுக் கொண்டு குதித்தோடும் குணத்தைக் குழந்தைப் பருவத்தில் இழந்துவிட்டு, “பெரிய” மனித வாழ்க்கையில் பயனேதும் இருக்கிறதா என்ன?

குழந்தைப் பருவத்தில் போட்டி மனப்பான்மை இருக்கும் என்றாலும், எதிரிகள் இருக்க மாட்டார்கள். போட்டிகளையே விளையாட்டாய்ப் பார்க்கும் பக்குவம் பிள்ளைப் பருவத்தில் இருக்கிறது. விளையாட்டைக்கூடப் போட்டிகளாய் விளங்கிக் கொள்ளும் வீம்பும் பகையும் வளர வளர… வளர்கிறது.

உள்ளே உறங்கும் குழந்தையை எழுப்பிவிடும் போதுதான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது. அறிவோடு உணர்வு, செயலோடு கனவும் சேர்கிறது. பார்வையில் தெளிவும் பிறக்கிறது. பூட்டிய மனதும் திறக்கிறது. “இன்று புதியதாய்ப் பிறந்தோம்” என்று பாரதி இதைத்தான் சொன்னான்.

வீழ்ச்சிகளைப் பெரிதாய்க் கருதினால் எழுந்து கொள்ள முடிகிறது.

இப்போது சொல்லுங்கள்! உள்ளே குழந்தை தூங்குகிறதா விழித்திருக்கிறதா என்று சோதித்துப் பாருங்கள்.
அன்று “அணில் ஆடு” என்று பாடப் புத்தகத்தில் பார்த்தபோது எழுந்த பரவசம்.

இன்று அணிலையும் ஆட்டையும் நேர்படக் காண்கையில் நேர்கிறதா என்று உங்களை நீங்களே கேளுங்கள்.
மனதுக்குள் ஊற்றெடுக்கும் உற்சாகத்தை வெளிப்பட அனுமதிக்கிறீர்களா? வெறும் புன்னகையாய் மட்டும் வெளிப்படுத்துகிறீர்களா? என்று பாருங்கள்.

சிரிப்போ அழுகையோ சீறி வெளிப் படுகிறதா அல்லது உங்கள் பகீரத முயற்சியால் புதைந்து போகிறதா என்று பரிசோதியுங்கள்.

குழப்பங்களுக்கு மத்தியில் குடியிருந்தது போதும்…

அந்தக் குழந்தையை எழுப்புங்கள்.

நீங்களாக வாழ்க்கையை எதிர்கொள்வதில் தயக்கமிருந்தால்… அந்தக் குழந்தையை அனுப்புங்கள்.

குழந்தைத் தனத்தைத் தொலைத்ததனால்
குதூகலங்களை தொலைத்து விட்டோம்
உழைப்பை சுகமென உணராமல்
உள்ளமும் உடலும் களைத்துவிட்டோம்!

இன்னும் குழந்தையைத் தூங்கவிட்டால்
இந்த வாழ்க்கை இனிக்காது
உள்மனக் குழந்தையை எழுப்புங்கள்…
உணர்வுகள் சுமையாய் இருக்காது!

விடாமுயற்சி -நமது துருப்புச் சீட்டு


எந்த ஒரு வேலையையும் தொடர்ந்து முயல்பவர்களின் விடாமுயற்சி, வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்றார் ஒருவர். இதைக் கேட்டதும் சிலருக்கு வியப்பு ஏற்படலாம். முயற்சிகள் தொடரும்போது அதனால் சலிப்பு ஏற்படுவதுதானே நிஜம் என்பது சிலரின் கேள்வியாக இருக்கலாம். ஆனால் சாதிக்கும் வெறி கொண்டவர்களின் கதையே வேறு.

முயற்சியில் தோல்வி ஏற்படும்போதெல்லாம் இன்னும் வேகமாக முயல்கிறார்கள். தங்கள் தீவிரத்தை அதிகப் படுத்துகிறார்கள். அதன்விளைவாக திறக்காத கதவையும் முட்டி மோதித் திறக்கிறார்கள். ஒரு வேலை வாய்ப்பையோ, வணிக வாய்ப்பையோ அந்த முயற்சியின் மூலம் பெறுபவர்கள், அந்தத் தீவிரத்தைத் தக்கவைத்துக் கொள்கிறார்கள். காலம் முழுவதும் தங்களைக் காக்கப் போவது அந்தத் தீவிரம்தான் என்று தெரிந்து கொள்கிறார்கள்.

முதல் முயற்சியிலேயே கிடைத்த வேலை, முதல் பார்வையிலேயே கனிந்த காதல் போன்றவை சில நேரங்களில் ஆபத்தானவை. காத்திருப்பின் வலி தெரியாமலேயே கனிந்துவிடுகிற வெற்றிகளின் அருமை சிலருக்கு சில சமயங்களில் தெரியாமல் போவதுண்டு.

விடாமுயற்சியைத் தக்கவைத்துக் கொள்கிற மனிதனை, அவனது நிர்வாகமும், சமூகமும் உன்னிப்பாகக் கண்காணிக்கிறது. அவனை அதிகம் நம்புகிறது. சாத்தியமற்றவற்றைக் கூட சலிக்காது முட்டி மோதுகிற மனிதன் சாதிக்கப் பிறந்தவன் என்பது, எல்லோரும் அறிந்த ரகசியம்.

நீங்கள் வாழ்வின் எந்த நிலையிலிருந்தாலும் சரி, விடாமுயற்சியைக் கைவிடாதவர் என்ற பெயரை மட்டும் தக்க வைத்துக் கொண்டு அதற்கு உண்மையாய் இருங்கள். நீங்கள் நினைத்தால் கூட உங்கள் வளர்ச்சியைத் தடுக்க முடியாது.

இதற்கு வெளியிலிருந்து ஊக்கங்களோ வழிகாட்டுதல்களோ தேவையில்லை. ஒவ்வொரு விநாடியும் எவ்வளவு விலைமதிப்பு மிக்கது என்று உணரும்போது, நம்மை நிரூபிக்க வேண்டிய காலநெருக்கடி இருப்பது எல்லோருக்குமே புலப்படும்.

சாதாரண மனிதர்களுக்கு பொழுது போகாது, சாதனையாளர்களுக்கோ பொழுது போதாது. இந்த முனைப்பும் காலம் பற்றிய விழிப்புமே காலங்காலமாய் வெற்றியாளர்களை செதுக்கி வருகிறது. தொடர் முயற்சி, வாழ்க்கையில் நமக்கிருக்கும் முக்கியமான துருப்புச்சீட்டு. குறிப்பிட்ட அளவு வயது வந்த பிறகோ அனுபவம் அடைந்த பிறகோ அதனைக் கீழே போட்டு விடலாகாது.

ஏனெனில் காலத்தோடு சேர்ந்து நாமும் பழசாகாமல் காப்பாற்றுவதே அதுதான். எனவே, விடாமுயற்சி செய்யுங்கள்…. விடாமுயற்சியைத் தக்க வைத்துக் கொள்ள!!

சவால்களில் உள்ளது சந்தர்ப்பம்


ராஃபோர்ட் என்கிற நகரம், அமெரிக்காவின் மிஸ்ஸிசிப்பி மாநிலத்தில் உள்ளது. அங்கே வளர்ந்துவந்த இளைஞனின் தந்தை, கட்டிடங்கள் கட்டுவதற்கு செங்கல் சுமக்கும் கூலியாளாக வேலைபார்த்தார். விடுமுறைக் காலங்களில் அப்பாவுக்கு உதவியாய் இந்த இளைஞனும் போவான். கனவுகள் சுமக்கும் கல்லூரி மாணவனுக்கு செங்கல் சுமப்பதொன்றும் சந்தோஷமான வேலையல்ல.

ஓரிடத்தில் நின்றுகொண்டு, தன்னிடம் வீசப்படும் செங்கற்களைப் பிடித்து, அதே வேகத்தில் அடுத்தவரிடம் வீசுகிற வேலையில், வெய்யிலில் உலர்ந்தும் வியர்வையில் நனைந்தும் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.

ஆனால் அந்த இளைஞன் மன உறுதியுடன் செயல் பட்டான். செங்கற்கள் கைகளில் வந்து விழுகிற போதெல்லாம் கரங்களைப் போலவே அவன் மனதிலும் உரமேறிக் கொண்டிருந்தது. ஒவ்வொருமுறை செங்கல்லைப் பிடிக்கும்போதும் வாழ்வில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று உறுதிகொண்டான் அந்த இளைஞன். கைகளில் செங்கல்லைத் தாங்கிக் கொண்டே ஒரு கால்பந்து வீரனாய் வரவேண்டும் என்ற கனவுக்கு நெய்வார்த்துக் கொண்டிருந்தான் அவன். அந்தக்கனவு நனவானது. உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரனாய் வளர்ந்த ஜெர்ரி ரைஸ்தான் அந்த இளைஞன்.

கால்பந்தாட்டத்தில் ஈடுபாடு இல்லாதவர்கள் கூட “நட்சத்திரங்களுடன் ஒரு நடனம்” (Dancing with the Stars) தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அவரை அறிந்துகொண்டிருந்தார்கள்.

தன் வாழ்வில் தன்னைப்பிழிந்த வறுமையைத் தான் பிழிந்து சாரமெடுத்து, சாறு குடித்து, வெற்றி வேட்கையைத் தணித்துக் கொண்ட ஜெர்ரி ரைஸ், தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டபோது சொன்ன விஷயங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டுகிற வெற்றிச் சூத்திரங்கள்.

சவால்களில் உள்ளது சந்தர்ப்பம்:

தன்னைநோக்கி வீசப்பட்ட செங்கற்களைப் பிடிப்பது வேறு வழியில்லாத வேலை. ஆனால் வெட்டி வேலை என்று பலரும் விமர்சனம் செய்தார்கள். ஆனால் அந்த வலிமிகுந்த பொழுதுகளை, எதிர்காலத்தின் வரைபடத்தை இதயத்தில் வரைந்து கொள்ளப் பயன்படுத்தினார் ஜெர்ரி ரைஸ். அந்த வலியில் விழுந்த வியர்வைத் துளிகள் வைராக்கியத்தை வளர்த்தன. எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலைக் கொடுத்தன. கொளுத்தும் வெய்யிலில் அசராது நிற்கும் பொறுமை, வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் பக்குவத்தைப் பரிசாய்த் தந்தது.

வெற்றியின் பாதையில் வலிகள் சகஜம்:

வலியும் வேதனையும் தங்கத்தை வாட்டும் நெருப்பின் வேலையைத்தான் செய்கின்றன என்பதை சரியாகப் புரிந்து கொண்டிருந்தார் ஜெர்ரி ரைஸ். உள்ளங்கைகளில் வந்து விழுந்த ஒவ்வொரு கல்லும், “நீ செங்கல் சுமக்கப் பிறந்தவனல்ல” என்று சொல்லிக் கொண்டேயிருந்தது. அந்த வலியே அவரது ஆதர்சக் கனவுகளுக்கு அடித்தளம் அமைத்தது. யாருக்கோ வீடுகட்டப் பயன்பட்ட செங்கல், ஜெர்ரி ரைஸ்-சின் கனவுகளுக்கும் அஸ்திவாரமாய் அமைந்தது. வருகிற போது வலி அவமானமாய்த்தான் இருக்கிறது. ஆனால் வெற்றி நோக்கிய பாதைகளில் அதுவே உந்துசக்தியாய் பயன்படுகிறது.

எதையும் வெறுக்காதீர்கள்! எல்லாமே அனுபவம்தான்!

ஜெர்ரி ரைஸ்-சிற்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே அவர்கள் விரும்பாத ஒன்றைத் தான் வாழ்க்கை முதலில் கொடுக்கிறது. மற்றவர்கள் வெறுத்தொதுக்கி, விலகி ஓடிய விஷயங்களில் துணிந்து முன் நின்றதன் மூலம் ஜெர்ரி ரைஸ், விலைமதிப்பில்லாத அனுபவத்தைப் பரிசாய்ப் பெற்றார். கடினமான வேலைகள்தான் உண்மையிலேயே நாம் யார் என்பதை நமக்குக் காட்டுகின்றன. அதன் மூலம் நம்முடைய தனித்திறன்கள் என்னவென்று நமக்கும் இந்த உலகுக்கும் முதன்முதலாகத் தெரிய வருகிறது.

முடிவெடுங்கள்! செயல்படுங்கள்!

ஒன்றில் இறங்க வேண்டுமா என்ற தயக்கம் எழுகிறபோது அந்தத் தயக்கத்தைத் தழுவி வாழ்ந்தால் அதைத் தவிர்த்துவிட வேண்டும் என்றுதான் உள்மனது சொல்லும். ஆனால் இறங்கிப் பார்ப்பது என்று முடிவெடுத்த உடனேயே புத்தம்புதிய உலகம் நமக்காகத் திறந்து கொள்கிறது. எந்தச் சூழலிலும் துணிவாக முடிவெடுப்பதும் தெளிவாக செயல்படுவதும் புத்தம் புதிய வெற்றிகளை நமக்குப் பரிசாகக் கொடுக்கும்.

கூடுதல் தகுதிகளை வளர்த்தெடுங்கள்:

கால்பந்தாட்ட வீரராக வருவது என்று ஜெர்ரிரைஸ் முடிவெடுத்ததுமே, ஒவ்வொரு நாளும் ஐந்து மைல் தூரம் மலைப்பகுதிகளில் ஓடுவதை வழக்கமாகக் கொண்டார். உடலுறுதியை எவ்வளவு தூரம் வளர்த்தெடுக்கிறோமோ அந்த அளவுக்கு சிறந்த விளையாட்டு வீரராக வரமுடியும் என்பதுதான் அவருடைய எண்ணம். கால்பந்தாட்டம் கற்றுக்கொள்வது முதல் தகுதி. இந்தக் கூடுதல் தகுதியை வளர்த்ததால் தனித்தன்மையுடன் விளங்கினார் ஜெர்ரி ரைஸ்.

மிகப்பெரிய சாதனையாளராக வளர வேண்டுமென்று விரும்பிவிட்டால் குறிக்கோள் நோக்கிக் கடுமையாக உழைக்க வேண்டும். கூடுதல் தகுதிகளை வளர்க்க வேண்டும். சவால்களையே சந்தர்ப்பமாக்கி ஜெயிக்க வேண்டும். இது ஜெர்ரி ரைசுக்கு மட்டுமல்ல…. நம் ஒவ்வொருவருக்குமே வாழ்க்கை தருகிற வெற்றிச் சூத்திரம்.

அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகத்தை அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் என சொல்வதுண்டு. பீடத்தின்மீது வைக்கப்படும் தெய்வ திருவுருவங்கள் அசையாமல் உறுதியுடன் நிலைத்து நிற்க, கொம்பரக்கு, சுக்கான்தான், குங்குலியம், கற்காவி, செம்பஞ்சு, ஜாதிலிங்கம், தேன்மெழுகு, எருமையின் வெண்ணெய் ஆகிய எட்டுவகை மருந்துகளை கலந்து சார்த்துவார்கள். அஷ்டம் என்றால் எட்டு என பொருள். இந்த எட்டுவகை மருந்துகளை சார்த்துவதற்கே அஷ்ட பந்தனம் என பெயர் அஷ்டபந்தனம் கும்பாபிஷேகத்தை அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் என சொல்வதுண்டு. பீடத்தின்மீது வைக்கப்படும் தெய்வ திருவுருவங்கள் அசையாமல் உறுதியுடன் நிலைத்து நிற்க, கொம்பரக்கு, சுக்கான்தான், குங்குலியம், கற்காவி, செம்பஞ்சு, ஜாதிலிங்கம், தேன்மெழுகு, எருமையின் வெண்ணெய் ஆகிய எட்டுவகை மருந்துகளை கலந்து சார்த்துவார்கள். அஷ்டம் என்றால் எட்டு என பொருள். இந்த எட்டுவகை மருந்துகளை சார்த்துவதற்கே அஷ்ட பந்தனம் என பெயர்

புருவ மத்தியின் சிறப்பு


புருவ மத்தியின் சிறப்பு
1.நம் தேகத்தின் மூன்றாவது கண் புருவ மத்தி
2.இந்த இடத்தில் ஆன்மா விளக்க விசேஷம் உள்ளது.
3.இதற்கு முச்சுடர், முப்பால், மஹாமேரு, இலாடம் என்றும் வேறு பெயர்கள் உண்டு.
4.தகுந்த குரு மூலம் மூன்றாவது கண் ஆகிய நெற்றிக் கண்ணை திறந்து கொள்ள வேண்டும்.
5.நெற்றிக் கண்ணை திறக்கப் பெற்றவர்களுக்கு எல்லா விஷயங்களூம் பட்ட பகல் வெளிச்சம் போல் தெரியும், இவர்கள் பார்வையினால் இறந்தவன் உயிரோடு எழுவான்.

புருவ மத்தி என்பது ஹிப்னடிசத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது
பெண்கள் பொட்டு வைப்பது தங்களை யாரும் வசியம் செய்வதில் இருந்து தப்பத்தான்,

கற்பூர ஆராதனை


பொதுவாக பூஜையின் போதும், ஆரத்தி எடுக்கும்போதும் கற்பூரம் கொளுத்தி சுற்றிப் போடுவது வழக்கம். அவ்வாறு கற்பூரம் கொளுத்தும் போது உருவாகும் புகை சென்று சேரும் இடமெல்லாம் மனிதனுக்கு நன்மை ஏற்படுத்தக் கூடிய பாசிடிவ் சக்தி உருவாகிறது. அந்த சக்தி நோய்க்கிருமிகளை அழித்து விடுகிறது. அதனால் நமக்கு ஆரோக்கியமான உடல் நலம் கிடைக்கிறது. கூடவே இறையருளையும் பெற முடிகிறது.

கற்பூரம் கடைசிவரை எரிந்து போகும். எதுவுமே மிஞ்சாது. அதுபோல மனிதன் இறந்த பிறகும் இதே நிலைமைதான். எஞ்சும் சாம்பல் கூட தண்ணீரில் கரைக்கப்பட்டு விடுகிறது. இந்த தத்துவத்தை உணர்த்தவே கோயில்களில் தீபாராதனை காட்டுகிறார்கள். எனவே நம்மை இறைவனுக்கு அர்ப்பணிப்போம் என்பதை எடுத்துக் காட்டவே தீபாராதனை செய்யப்படுகிறது. மேலும் கற்பூர தீபாராதனைக்குப் பிறகு பிரசாதமாக கொடுக்க அதில் எதுவுமே மிஞ்சாது. இதரவகை வழிபாடுகள் மூலம் நைவேத்தியம் மிஞ்சும். அதை பிரசாதமாக கொடுப்பதற்கு வழி உண்டு. கற்பூரம் தன்னைத்தானே அழித்துக்கொண்டு ஒளி கொடுப்பதைப்போல நாமும் மற்றவர்களுக்காக நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் வகையிலும் இந்த தீபாராதனை செய்யப்படுகிறது.

Wednesday, May 1, 2013

பீஷ்மரின் தியாகம்

தந்தையின் விருப்பத்திற்காக இளமை துறந்து பதவியை உதறிய பீஷ்ம பிதாமகர் மறைந்த நன்னாள் பீஷ்மாஷ்டமி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.பீஷ்மாஷ்டமி தினம் என்பதால் பீஷ்மரின் தியாகத்தை இந்த நாளில் அறிந்து கொள்ளலாம். சந்தனு மகாராஜாவிற்கும் கங்கா தேவிக்கும் பிறந்தவர்தான் தேவவிரதன் என்ற காங்கேயன்.இளவரசான இவர் தனது தந்தை சந்தனுவிற்காக யாருமே செய்ய முடியாத தியாகத்தை செய்துள்ளார். தந்தை விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதற்காக இளமை விட்டுக்கொடுத்தார். அவர்களின் வாரிசுகள் அரசாளா வேண்டும் என்பதற்காக திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று சபதம் ஏற்றார்.அவரது தியாகம் கண்டு உலகமே அதிசயத்தது. தந்தையின் ஆசையை நிறைவேற்ற தியாகம் செய்தவர் ‘பீஷ்மர்' என்று போற்றப்பட்டார். பீஷ்மர் என்றால் யாருமே செய்ய முடியாத தியாகத்தை செய்தவர் என்று பொருள். மகனின் தியாகத்தைக் கண்டு மகிழ்ந்த சந்தனு, மகனுக்கு மிகப்பெரிய வரம் ஒன்றை அளித்தார். "தீர்க்காயுளுடன் இருக்கும் நீ விரும்பும் நாளில்தான் உயிர்துறப்பாய்" என்பதுதான் அந்த வரம்.சந்தனு மகாராஜாவின் இரண்டாவது மனைவி மூலம் சித்திராங்கதன், விசித்திரவீர்யன் என்ற இரு மகன்கள் பிறக்கிறார்கள். அவர்களுக்கு அம்பிகா, அம்பாலிகா ஆகியோரை பீஷ்மர் மனமுடித்து வைக்கிறார். மன வலிமை குறைந்த சித்திராங்கதன் முதலில் இறந்துபோக, சந்தனு மஹாராஜாவுக்குப் பிறகு, விசித்திரவீர்யன் அஸ்தினாபுரத்தைத் தலைநகராய்க்கொண்டு இராஜ்ஜியத்தை ஆள்கிறான். கொஞ்ச காலத்திற்குப் பின்னர், காச நோயால் அவதியுற்ற விசித்திரவீர்யனும், சந்ததி இல்லாமல் மரணமடைகிறான். அவனுடைய அம்பிகா, அம்பபாலிகா என்ற இரு மனைவியரும் தம் இளம் வயதிலேயே விதவைகள் ஆகின்றனர். அஸ்தினாபுர இராஜ்ஜியம் அரசன் இல்லாமல் தவிக்கிறது. அன்றாட அரச காரியங்கள், சத்யவதி, பீஷ்மர் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.அப்போது விரதத்தை விட்டு வம்சவிருத்தி செய்ய உதவவேண்டும் என்று என்று இரண்டாவது அன்னை கேட்டுக்கொண்ட போதும் சபதத்தை கைவிடவில்லை பீஷ்மர். இதனையடுத்து வியாசர் மூலம் அம்பிகா, அம்பாலிகாவிற்கு பிறந்தவர்கள்தான் திருதராஷ்டிரன், பாண்டு ஆகியோர். இதில் திருதராஷ்டிரன் கண்பார்வையற்றவன். பாண்டுவின் புத்திரர்கள் பாண்டவர்கள், திருதராஷ்டிரன் மக்கள் கவுரவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.பிற்காலத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தீயவர்கள் என்று தெரிந்தும் கவுரவர்களின் பக்கம் நின்றார் பீஷ்மர். அர்ஜூனன் விட்ட அம்புப் படுக்கையில் பல நாள் இருந்தாலும் உத்தராயண காலத்தில் உயிர் விட வேண்டும் என்று காத்திருந்து ரத சப்தமிக்கு மறுதினம் அஷ்டமி நாளில் உயிர்நீத்தார். எனவேதான் இந்த நாளினை பீஷ்ம தர்ப்பண நாள், பீஷ்மாஷ்டமி என்று அழைக்கின்றனர்.தகப்பனுக்காக யாரும் செய்ய முடியாத தியாகத்தை செய்தவர் பீஷ்மர். ஆனால் இன்றைய காலத்தில் பெற்றவர்களுக்கு ஒருவேளை உணவளிக்க கூட யோசிக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கின்றனர். பீஷ்மாஷ்டமி நன்நாளில் பெற்றோர் இருந்தாலும் பீஷ்மருக்காக தர்பணம் செய்யலாம் என்கின்றனர் முன்னோர்கள்