ஒவ்வொரு மனிதனின் உள்மனதிலும் உறங்கிக் கிடக்கிறதொரு குழந்தை. அது கட்டாய உறக்கமென்றும் சொல்லலாம். கையாலாகா உறக்கமென்றும் கொள்ளலாம். விளையாட்டுக் குணம் முடங்கியபிறகு, வியாபாரக் கண்ணோட்டம் தொடங்கியபிறகு, தூங்கப் போனது அந்தக் குழந்தை.
தனக்குள் இருக்கும் குழந்தையை விழிப்பு நிலையில் வைத்திருப்பவர்கள் ஞானிகளும் குழந்தைகளும். அதனால்தான் ஞானிகளை “சேய்போல் இருப்பர் கண்டீர்” என்று பழம் பாடல் ஒன்று பேசுகிறது. கவிஞர்களின் குழந்தை மனதுக்கு நடைமுறை உதாரணங்கள் நிறைய உண்டு.
குழந்தைத்தனம் என்பது வாழ்வின் பெரிய வரம் என்பதை எத்தனையோ பேர் உணராமலேயே இருக்கிறார்கள். குழந்தைத்தனம் என்பதன் முதல் அடையாளம், திறந்த மனம்.
எதையும் புதிதாய்க் காணும் எண்ணம் இருந்தால் உள்ளம் உற்சாக ஊற்றாகும். சந்தோஷக் காற்றாகும். புதிய தகவலின் மீது நம் பழைய பதிவுகளின் நிழல் பதியும் போதெல்லாம் காட்சிக் குழப்பம் ஏற்படுகிறது.
குழந்தைகளின் மனம், புத்தம் புதிய கண்ணாடி. அருகே வருவதை அப்படியே பிரதிபலிக்கிறது. காட்சித் தெளிவில்தான் நிறைகளும் குறைகளும் நேர்படத் தெரிகின்றன.
மாசாலும் தூசாலும் மங்கி, ரசம் போன கண்ணாடிகளில் காட்சி மங்கலாய்த் தெரிவது போல ரசனை போன மனதில் வாழ்க்கையே மங்கலாகத்தான் தெரிகிறது.
குழந்தைத்தனத்தின் இன்னொரு தன்மை, நம்பிக்கை. அனாவசியமான அவநம்பிக்கைக்கு அங்கே இடமில்லை. அதனால்தான் வேகமாக ஓடும்போது விழ நேர்ந்தால்கூட விழுந்த வேகத்திலேயே எழுந்து குதித்தோடுகிறது குழந்தை. வளர்ந்த பிறகோ, விழுந்தால் எழுந்து கொள்ளவே நேரம் பிடிக்கிறது. அது மட்டுமா? விழுந்ததால் விளைந்த வலியைவிடவும் அந்த அவமானத்தின் வலியே அதிகமாயிருக்கிறது. ஓடமறுத்து மெல்ல மெல்ல நடக்கத் தோன்றி விடுகிறது. தோல்விகளைத் துடைத்துவிட்டுக் கொண்டு குதித்தோடும் குணத்தைக் குழந்தைப் பருவத்தில் இழந்துவிட்டு, “பெரிய” மனித வாழ்க்கையில் பயனேதும் இருக்கிறதா என்ன?
குழந்தைப் பருவத்தில் போட்டி மனப்பான்மை இருக்கும் என்றாலும், எதிரிகள் இருக்க மாட்டார்கள். போட்டிகளையே விளையாட்டாய்ப் பார்க்கும் பக்குவம் பிள்ளைப் பருவத்தில் இருக்கிறது. விளையாட்டைக்கூடப் போட்டிகளாய் விளங்கிக் கொள்ளும் வீம்பும் பகையும் வளர வளர… வளர்கிறது.
உள்ளே உறங்கும் குழந்தையை எழுப்பிவிடும் போதுதான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது. அறிவோடு உணர்வு, செயலோடு கனவும் சேர்கிறது. பார்வையில் தெளிவும் பிறக்கிறது. பூட்டிய மனதும் திறக்கிறது. “இன்று புதியதாய்ப் பிறந்தோம்” என்று பாரதி இதைத்தான் சொன்னான்.
வீழ்ச்சிகளைப் பெரிதாய்க் கருதினால் எழுந்து கொள்ள முடிகிறது.
இப்போது சொல்லுங்கள்! உள்ளே குழந்தை தூங்குகிறதா விழித்திருக்கிறதா என்று சோதித்துப் பாருங்கள்.
அன்று “அணில் ஆடு” என்று பாடப் புத்தகத்தில் பார்த்தபோது எழுந்த பரவசம்.
இன்று அணிலையும் ஆட்டையும் நேர்படக் காண்கையில் நேர்கிறதா என்று உங்களை நீங்களே கேளுங்கள்.
மனதுக்குள் ஊற்றெடுக்கும் உற்சாகத்தை வெளிப்பட அனுமதிக்கிறீர்களா? வெறும் புன்னகையாய் மட்டும் வெளிப்படுத்துகிறீர்களா? என்று பாருங்கள்.
சிரிப்போ அழுகையோ சீறி வெளிப் படுகிறதா அல்லது உங்கள் பகீரத முயற்சியால் புதைந்து போகிறதா என்று பரிசோதியுங்கள்.
குழப்பங்களுக்கு மத்தியில் குடியிருந்தது போதும்…
அந்தக் குழந்தையை எழுப்புங்கள்.
நீங்களாக வாழ்க்கையை எதிர்கொள்வதில் தயக்கமிருந்தால்… அந்தக் குழந்தையை அனுப்புங்கள்.
குழந்தைத் தனத்தைத் தொலைத்ததனால்
குதூகலங்களை தொலைத்து விட்டோம்
உழைப்பை சுகமென உணராமல்
உள்ளமும் உடலும் களைத்துவிட்டோம்!
இன்னும் குழந்தையைத் தூங்கவிட்டால்
இந்த வாழ்க்கை இனிக்காது
உள்மனக் குழந்தையை எழுப்புங்கள்…
உணர்வுகள் சுமையாய் இருக்காது!
No comments:
Post a Comment