Friday, April 26, 2013

மனஅழுத்தம் நீங்க 30 வழிகள்

வாழ்வின் போக்கு பிடிபடும் வரையில் அழுத்தங்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பலரும் ஆடிப்போய் விடுகிறார்கள். செய்த செயல் ஒன்றிற்கு எதிர்பார்த்த விளைவு ஏற்படாத போதும், எதிர்பாராத எதிர் விளைவுகள் ஏற்படும்போதும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

வெளியே தெரியாத வலி, சொல்லத் துடித்தாலும் சொல்ல விடாமல் தடுக்கிற தயக்கம், எந்தச் செயலையும் செய்ய விடாமல் சோர்ந்துபோகச் செய்யும் மன உளைச்சல் ஆகியவை மன அழுத்தத்தின் அடித்தளங்களும் அறிகுறிகளும் ஆகும்.

சிகிச்சை தேவைப்படும் அளவு மன அழுத்தத்தை முற்ற விடுபவர்களுக்கு சிகிச்சையே தீர்வு. ஆனால் அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்களால் ஏற்படும் பின்னடைவுகள் – மன அழுத்தங்கள் ஆகியவற்றை சரி செய்ய உலகெங்கும் உள்ள மனவியல் நிபுணர்கள் சில வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளனர்.

பல்வேறு சூழல்களில் பரிசோதிக்கப்பட்டு பலன் தருபவை என்று உறுதி செய்யப்பட்டுள்ள இந்த வழிமுறைகள், மன அழுத்தத்திலிருந்து உடனடி விடுதலை தருவதுடன் அடுத்த படிநிலை நோக்கி நகர்வதற்கும் கைகொடுக்கின்றன.

மனச்சோர்வைவிட மன அழுத்தம் எளிதில் கையாளக்கூடியது என்பதை மறந்துவிடக்கூடாது. இனம் புரியாத காரணங்களால் மனச் சோர்வு ஏற்படலாம். ஆனால் மன அழுத்தத்திற்கென்று குறிப்பிட்ட காரணங்கள் உண்டு. காரணங்களைக் கண்டறிய முடிகிறபோது தீர்வைக் கண்டடைவதும் எளிது.

மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தரக்கூடிய சில பயிற்சி முறைகள், நீண்டகால நிவாரணத்திற்குரிய பயிற்சிமுறைகள் – இரண்டையுமே மனவியல் நிபுணர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். அவற்றை இப்போது பார்க்கலாம்.

ஆழ்ந்த சுவாசம்:

கீழை நாடுகள், மேலை நாடுகள் இரண்டுமே ஒப்புக்கொள்கிற உத்தி இது. ஆழ்ந்த சுவாசத்தின் மூலம் இரத்தத்தில் பிராணவாயுவின் அளவு அதிகரிப்பதால் உங்கள் தசைகள் தளர்வுநிலை அடைகின்றன. மனம் இயல்புநிலை அடைகின்றது. அடிவயிற்றில் கையை லேசாக அழுத்திக்கொண்டு ஆழமாக சுவாசிப்பதன் மூலம் அடிவயிற்றின் அசைவுகளையும், உடலும் மனமும் தளர்வு நிலை அடைவதையும் கண்கூடாக உணரலாம்.

காட்சிப்படுத்துங்கள்:

பூப்பூவாய்த் தூவும் வென்னீர் ‘ஷவரின் கீழ் கண்மூடி நிற்பது போலவும், உங்கள் அழுத்தங்களும் பதட்டங்களும் அடித்துக் கொண்டு போவது போலவும் மனதுக்குள் ஒரு காட்சியை வரைந்து பார்க்கச் சொல்கிறார்கள் மனவியல் நிபுணர்கள். அமைதியான இடமொன்றில் ஏகாந்தமாய் நீங்கள் கண்மூடிப் படுத்திருப்பது போன்ற காட்சியையும் உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் அந்தக் காட்சியைத் துல்லியமாக உணர்வது அவசியம். அங்கு பார்வையில் படிகிற அம்சங்கள், கடற்கரையின் உப்பு வாசனை இவை அனைத்தையும் மனதில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

மனஅழுத்தம் தீர விரல் அழுத்தம்:

உள்ளங்கைகளில், மற்ற கையின் கட்டைவிரலால் தொடர் அழுத்தம் தருவது தொடங்கி, முழுமையான மசாஜ் செய்துகொள்வது வரையிலான உடல் தளர்வு நிலை உத்திகள் மன அழுத்தத்தைப் போக்குகிற திறன் கொண்டவை.

புன்னகையின் சக்தி:

மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் புன்னகைக்கிறீர்கள் என்பது எவ்வளவு உண்மையோ, புன்னகைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதும் உண்மை. நரம்புகளில் தொடங்கும் மெல்லதிர்வுகள் முகத்திலுள்ள தசைகளை அசைத்து, பாதுகாப்பான உணர்வை மூளைக்கும் கொண்டு செல்லும் அற்புதம் ஒவ்வொரு புன்னகையின் போதும் நிகழ்கிறது என்கிறார் டாக்டர் கூப்பர். புன்னகையின் சக்தி புரியவேண்டுமா? புன்னகைத்துத்தான் பாருங்களேன்.

கடைவாய் – ஒரு ரகசியம்:

மனதில் உருவாகும் அழுத்தம் வந்து படிகிற இடங்களில் ஒன்று கடைவாய் இணைப்புகள். பற்களை இறுகக்கடித்து, காதுக்குக்கீழ் சுட்டுவிரலால் அழுத்திக் கொண்டு, நீளமாக மூச்சிழுப்பதும், வாயைத் திறந்தபடி காற்றை வெளியே விடுவதும், அழுத்தத்தின் சுவடுகளை உடலில் தங்காமல் வெளியேற்ற மேலைநாட்டு ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கின்ற வழி.

மனம் சொல்லும் மந்திரம்:

நம்மை நாமே உற்சாகப் படுத்திக்கொள்ள ஆட்டோசஜஷன் முறைப்படி சில வாசகங்களை மனதுக்குள் உருவாக்கிக்கொள்வது மேலை நாட்டின் பாணி. நம்நாட்டில் அதற்குப் பஞ்சமே கிடையாது. “எல்லாம் செய்யக்கூடும்”, “நடப்பதெல்லாம் நன்மைக்கே” என்று எத்தனையோ வாசகங்கள், மனதுக்கு சக்திதரும் மந்திரங்களாய் உள்ளன. மனதுக்குள்ளேயே அவற்றைப் பத்து பதினைந்து முறைகள் சொல்லும்போது பெரிய அளவில் மாற்றங்கள் தெரியும்.

அடுத்தது என்ன…..?

மனஅழுத்தத்திற்கு ஆளாகிற பலரும் தன்னிரக்கத்தைத் தவிர்க்க முடியாமல் தவிக்கிறார்கள். “எனக்கேன் இது நிகழ்ந்தது? மற்றவர்களுக்கு இப்படி இல்லையே” என்கிற எண்ணங்கள் எழும்போது தன்னிரக்கம் நம் செயல் திறனை மேலும் பாதிக்கிறது. மாறாக, அடுத்தது என்ன?” என்ற அணுகுமுறையைக் கைக்கொள்கிற போது, செயல்படவேண்டும் என்ற தூண்டுதல் வேகம் பெறுகிறது.

எழுதிப்பாருங்கள்:

மனஅழுத்தத்தைத் தந்த சம்பவம், அதன் விளைவுகள், கையாள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், உடனடி நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். மனதுக்குள்ளேயே பலவற்றையும் யோசிப்பதைவிட எழுதும்போது ஒரு புதிய தெளிவு பிறக்கிறது. அந்தத்தெளிவே மன அழுத்தத்திலிருந்து விடுபடும் சக்தியைக் கொடுக்கிறது. தெளிவாக எழுதிப்பார்க்கும்போது தீர்வை நோக்கிப் பலஅடிகள் வைத்தது போன்ற மன நிறைவை எளிதில் எட்டமுடிகிறது.

தடாலடிகளைத் தள்ளிப்போடுங்கள்:

அழுத்தம் கொடுக்கும் பதட்டம் காரணமாக தடாலடியாய் சில தவறான முடிவுகளை எடுக்கக் தோன்றும். அந்த நேரப் பதட்டத்தில் எது தவறு எது சரி என்று சிந்திக்காமல் செயல்படுவது சேதங்களை வளர்க்கும். எனவே, மனம் பதட்டமாக இருக்கும்போது முடிவெடுப்பதைத் தள்ளிப்போடுங்கள். பத்துவரை மனதுக் குள்ளேயே எண்ணி விட்டு, சிறிது தூரம் உலவிவிட்டு, பதட்டம் தணியும்வரை பொறுமையாய் இருந்தால் ஆக்கபூர்வமான முடிவுகள் சாத்தியமாகும்.

காபி குடிப்பதைக் குறையுங்கள்:

காலை மாலை காபி மிகவும் சுகமானதுதான். ஆனால் மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் காபியைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ஜேம்ஸ் ட்யூக் என்கிற ஆய்வாளர். தூய குடிநீர், பழச்சாறுகள் போன்ற பானங்கள் புத்துணர்வு தருவதாகவும் மன அழுத்தத்தைப் போக்கும் சக்தி தருபவையாகவும் இருக்கும். தண்ணீரோ பழச்சாறோ பருகும் போது, அந்தத் திரவம் உங்களுக்குள் கலந்து புத்துணர்வு தருவதை உணர்வுப் பூர்வமாய் ஏற்பது மேலும் ஊக்கம் தரும்.

முடியாத விஷயங்களை மறுத்துச் சொல்லுங்கள்:

எல்லோரையும் திருப்திப்படுத்தும் எண்ணம் எங்கேயோ நமக்குள் இருக்கிறது. இது வேண்டாத விஷயங்களையும் மேலே தூக்கில் போட்டுக் கொண்டு, மற்றவர்களிடம் சிரித்தாலும், நம் உள் வட்டத்துக்குள் எரிந்துவிழச் செய்கிறது. இந்தக் கூடுதல் பாரம், மன அழுத்தத்தை வளர்த்துவிடும் என்பதால், செய்யமுடியாதவற்றையும் செய்ய விரும்பாதவற்றையும் நாசூக்காய் மறுத்துச் சொல்வதே நல்லது.

நறுமணங்களின் நலம் பெறுங்கள்:

தீயவாசனையை அடையாளம் கண்டு முகம் சுளிக்கும் அளவுக்கு மனிதர்கள் நறுமணங்களின் சுகத்தில் ஈடுபட்டு அனுபவிப்பதில்லை. நறுமணம் தரும் மலர்கள், எண்ணெய் வகைகள் ஆகியவற்றின் மூலம் மனதை மிக விரைவில் லேசாக்கிக் கொள்ளமுடியும்.

உங்கள் உஷ்ணமே உங்களுக்குதவும்:

டேவிட் சோபெல் என்ற மனநல மருத்துவர், மிக எளிதான வழியொன்றைச் சொல்கிறார். இரண்டு கைகளையும் பரபரவென்று தேய்த்து மூடிய கண்களுக்கு மேல் வைத்து, ஆழமாக சுவாசிக்கும்போதே அந்த உஷ்ணத்தையும் உள் வாங்குகிறபோது, புதிய உத்வேகம் உங்களுக்குள்ளேயே உருவாகும் என்கிறார் அவர்.

மூன்று முக்கிய இடங்கள்:

பெர்க்லேயில் உள்ள அக்யூ பிரஷர் மையத்தின் இயக்குநர் மைக்கேல் ரீட் கேச் மன அழுத்தம் வலுவிழந்து போக உடலிலுள்ள மூன்று இடங்களில் அழுத்தம் கொடுக்குமாறு அறிவுறுத்துகிறார்.

1. புருவங்களின் மத்தியில் அழுத்தம் தருதல்.

2. பின் கழுத்தில் அழுத்தம் தருதல்.

3. கழுத்துச் சரிவுக்கும் தோள்பட்டைக்கும் மத்தியில் அழுத்தம் தருதல்.

அழுத்தத்தின் கனத்தை உணரும் அளவு அழுத்தலாம். அங்குள்ள நரம்பு மண்டலங்கள் செயல்பட்டு, மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் உந்துசக்தியை மூளைக்கு வழங்கும்.

கவலைக்கென்று நேரம் ஒதுக்குங்கள்:

மனதில் தோன்றும் கவலைகள் எல்லா நேரமும் உங்களை அரித்தெடுப்பதை அனுமதிக்காதிருக்க வழி உண்டு. கவலைகள் என்னவென்று பார்க்க ஒரு நேரம் ஒதுக்குவது, கால்மணி நேரம் என்று வைத்துக்கொண்டால், அந்தக் கால் மணி நேரமும் கன்னத்தில் கைவைத்துக்கொண்டு கவலைப்பட வேண்டியதில்லை. கவலைகளை ஆராய்ந்து அவற்றை உங்கள் கட்டுக்குள் கொண்டு வரத்தான் அந்த நேரம் .

நொறுக்குத் தீனி நொறுக்குங்கள்:

கார்போஹைட்ரேட் கொண்ட நொறுக்குத் தீனியை நொறுக்கினால் அதிலிருந்து செரிடானின் உங்கள் மனதை அமைதிப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

வைட்டமின் வேண்டும்:

வைட்டமின் பி, மற்றும் கால்ஷியம் போன்ற சத்துக்களை சிறிதளவு சேர்த்துக்கொண்டே வருபவர்கள் அவ்வளவு எளிதாக மன அழுத்தத்திற்கு ஆட்பட மாட்டார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

அடையாளம் என்ன?

மன அழுத்தம் உருவாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வெளிப்பாடுகளை ஏற்படுத்தும். சிலருக்குத் தோள்வலி வரும். சிலருக்கு சுவாசம் துரிதப்படும். உங்களுக்கு ஏற்படும் அடையாளம் என்னவென்று தெரிந்து வைத்துக்கொண்டால், அறிகுறிகள் தென்படும் போதே அவற்றிலிருந்து வெளிவருவதற்கு உடனடி முயற்சிகளில் இறங்கமுடியும்.

ஆகாயம் பாருங்கள்:

அடைந்துகிடக்கும் உணர்வுகளை விடுவிக்கும் சக்தி திறந்தவெளிக்கு இருக்கிறது. அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் வெளியே வந்து, ஆகாயத்தை, அலையலையாய்ப் போகும் மேகங்களைப் பார்ப்பது பயன்தரும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.

நடைப்பயிற்சி நலம் தரும்:

நெஞ்சில் ஏதோ எண்ணங்கள் கனக்கத் தொடங்கிவிட்டால் கொஞ்சதூரம் நடந்துவருவது பயன்தரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். வெளியே உலவுவதற்கு நேரம் ஒத்துழைக்காத நிலையில் அலுவலகத்துக்குள் அங்குமிங்கும் உலவுவது இடைக்கால நிவாரணம் போன்றது.

வெந்நீர்க்குளியல்:

வெறுப்பாக இருந்தால் வெந்நீர்க் குளியல் போடுங்கள் என்கிறார் டாக்டர் வெஸ்டன். குளிக்கும் அளவு நிலைமையோ நேரமோ இல்லையென்றால் வெந்நீரில் கைகால்களையாவது கழுவுங்கள். இதம் செய்யும் ஆற்றல் வெந்நீருக்கு இருக்கிறது என்கிறார் அவர்.

இசையால் வசமாகும் இதயம்:

எத்தகைய பதட்டத்தையும் தணித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. இசை கேளுங்கள் அல்லது பாடுங்கள். உங்கள் இதயம் படபடவென்று அடித்துக்கொள்வதை அது மட்டுப்படுத்துவதோடு என்டார்ஃபின் பெருகவும் வழிவகுக்கிறது.

செல்லப் பிராணிகள்:

நியூயார்க்கில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு, இரத்த அழுத்தம் ஏற்படுவதில்லை என்று தெரிய வந்துள்ளது. முயன்று பாருங்கள்.
கவனம் குவியுங்கள்:

மனம் பதறுகிறபோது நுணுக்கமான விஷயங்களை நோக்கிக் குவியாமல் அலைபாயத் தொடங்கும். அப்போதெல்லாம், ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக்கொண்டு அதில் முழு கவனத்தை செலுத்துங்கள். ஒரு சிறு பென்சிலாகக் கூட இருக்கலாம். அதன் அளவு, வடிவம், வண்ணம், கூர்மை என்று அனைத்தையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்குங்கள். உங்கள் மனம் இயல்பு நிலை அடைவதை உணர்வீர்கள்.

நண்பர்களை அழையுங்கள்:

மனதுக்கு நெருக்கமாக நீங்கள் உணரும் ஒருவரை அழையுங்கள். அவரிடம் உங்கள் சிக்கலைப் பற்றிப் பேசினாலும் சரி, பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் சரி. அந்த அன்பான குரலில் ஆதரவை உணர்வீர்கள்.

வஜ்ராசனத்தின் வல்லமை:

மன அழுத்தம் மாறுவதற்கு வஜ்ராசனத்தில் அமருங்கள் என்று சொல்பவர்கள் நம் ஊர் யோகக்கலை வல்லுநர்கள் மட்டுமல்ல. நியூயார்க்கில் உள்ள எக்யூனாக்ஸ் ஃபிட்னஸ் சென்டரின் இயக்குநர் மோலி ஃபாக்ஸ் கூடத்தான். குழந்தைபோல் மண்டியிட்டு கண்மூடி குதிகாலின் மீது சிறிது நேரம் அமருங்கள். அதுதான் வஜ்ராசனம். மெல்லக் குனிந்து முன் நெற்றியை நிலத்தில் பதியுங்கள். இதையே சில தடவைகள் செய்யுங்கள்.

பிரார்த்தனை:

மனமுருகும் பிரார்த்தனை, மன ஒருமை கொண்டு செய்யும் தியானம் இவையெல்லாம் மன அழுத்தத்தை விரட்டியடிக்கிற வல்லமை கொண்டவை.

நிமிர்ந்து அமருங்கள்:

சோர்வு வரும்போது சுருண்டு படுக்கத்தான் மனது சொல்லும். முதுகுத்தண்டை நிமிர்த்தி நேராக, ஜோராக உட்காரும்போது இரத்த ஓட்டம் நன்கு நிகழ்ந்து உங்கள் சக்தியைப் பெருக்கும்.

தாவரங்களோடு சிறிது நேரம்:

பேச முடியாத, பார்க்க முடியாத தாவரங்களிடம் ஜீவசக்தி நிரம்பி வழிகிறது. ஒரு செடியுடனோ மரத்துடனோ நெருக்கமாக சிறிது நேரத்தை செலவிடுங்கள். அழுத்தம் அகல்வதை உணர்வீர்கள்.

அதிர்ஷ்டத்தின் திறவுகோல்கள் பன்னிரண்டு

TWELVE KEYS FOR LUCK

“எதுவுமே சுலபமாவதற்கு முன் கடினமாக இருக்கிறது”
- ஷிவ்கரோ

அதிர்ஷ்டம்! நம் இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமா?

அது இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமா?

இந்த அதிர்ஷ்டத்திற்கான காரணம்?

ஜாதகமா? வாஸ்துவா? அதிர்ஷ்ட எண்களா? அதிர்ஷ்ட கற்களா? அதிர்ஷ்டத்தின் மூலம் எங்கே? அதை அடையும் வழி எங்கே? ஒவ்வொரு மனிதனும் தேடித் தேடி அலைகிறான். ஆனால் ஏதோ சிலர் வாழ்வில் மட்டுமே அது முகம் காட்டுகிறது.

1. பொறுத்திருக்க வேண்டும்:

அதிர்ஷ்டம் என்றால் என்ன என்று நாம் புரிந்து கொண்டிருக்கிறோம்? நாம் தொட்டதெல்லாம் துலங்க வேண்டும், தோல்வி என்ற வார்த்தையே வாழ்வில் தொல்லை தரக்கூடாது.

ஓடு தளத்தில் ஓடி, வானத்தில் ஏறிய விமானம் சுமாராக பத்து நிமிடங்களுக்குள் தான் அடைய வேண்டிய உயரத்தை அடைந்துவிடுவது போல வாழ்வில் தான் விரும்பும் உச்சத்தை சில மாதங்களில் அடைந்துவிட வேண்டும் என விரும்புகிறோம். அதையே அதிர்ஷ்டம் என போற்றுகிறோம்.

அதிர்ஷ்டம் யாருக்கும் வரலாம்! அதற்கான வரத்தை இறைவன் நமக்குத் தரலாம்! ஆனால் அதற்கான தகுதிகள் நம்மிடம் உள்ளதா, என்று நாம் கவனிக்க வேண்டும்.

சிலர் ஒரே நாளில் வாழ்வின் உச்சத்தை அடைந்துவிட்டார்கள் என்று நாம் வியக்கிறோம். ஆனால் அவர்கள் இந்த நிலையை அடைய பல வருடங்களாக, நீங்கள் தூங்கிக் கொண்டிருந்த ஒவ்வொரு இரவிலும் அவர்கள் கொட்ட கொட்ட கண் விழித்திருந்து தங்களை தாங்களே தயார் செய்து கொண்டிருந்தார்கள் என்ற உண்மையை நீங்கள் அறிவீர்களா?

- லாங் பெல்லோ

2. உயர்வு உள்ளல் (Self Esteem)

வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு
- திருக்குறள்

நீரின் மட்டம் எத்தனை உயரமோ அந்த அளவு உயரமான அதில் பூத்திருக்கும் தாமரைத் தண்டின் உயரம். அது போல மனிதனின் எண்ணங்களின் உயர்வுக்கு ஏற்ப அவனது வாழ்வின் உச்சமும் அமைகிறது.

ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றிய சில அளவீடை பெற்றிருக்கிறான். அவனது ஆழ் மனத்தில் அவனைப் பற்றிய சில வரையறைகள் சில அகல உயர நீளங்களை அளவீடாக உருவாக்கி இருக்கிறான். அதுவே அவன் தன்மதிப்பு, அதுவே அவன் தன்நிலை. அந்த அவனது சிகரத்தை தாண்டி அவன் அதற்கு மேலே செல்வதில்லை. வெறும் செல்வ வளம் மட்டமல்ல, சமுதாயத்தில் மனிதனது அங்கீகாரம், பொலிவான தோற்றம், உடல்நலம் யாவும் அந்த தன்மதிப்பை பொறுத்து அமைகிறது.

போர்க்களத்தில் போரிடும்போது மாவீரன் நெப்போலியன் நெஞ்சில் சில குண்டுகள் பாய்ந்துவிட்டன. அவனின் நெஞ்சை கீறி அதிலுள்ள குண்டுகளை மருத்துவர் அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது நெப்போலியன் கூறுகிறான். “டாக்டர் இன்னும் கொஞ்சம் ஆழமாக போய் என் இதயத்தை திறந்து பாருங்கள். அங்கே நான் காணும் பிரஞ்சு சாம்ராஜ்யத்தை நீங்களும் காணலாம்” என்றான்.

அவனது உள்ளத்தின் ஆழத்தில், அவனது ஆழ் மனதில், அவரது லட்சிய கனவுகள் பதிக்கப்பட்டுள்ளன. அதுவே அவனது சிகரம். அந்த கனவால் ஏற்பட்ட உக்கிரமான ஆசை அவனை ஆட்டிப் படைத்தது.

ஜுலியஸ் சீசர் என்ற ஆங்கிலப் படத்தில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான எலிசபெத் டெய்லர் கிளியோபாட்ராவாக நடித்தார். அப்போது அவருக்கு பல லட்சம் மதிப்புள்ள அணிகலன்கள் (தேவை என்று நினைப்பதற்கும் கூடுதலான அணிகலன்கள்) அணிவிக்கப்பட்டன. அப்போது சிலர் படத்தின் இயக்குநரிடம் ஏன் இத்தனை நகைகள், இவைகள் படத்தில் தெரியவா போகிறது, படத்தில் அவைகளின் மதிப்பு பார்க்கும் ரசிகர்களுக்கு புரியவா போகிறது என்றார்களாம். அப்போது இயக்குநர் கூறுகிறார், பார்க்கும் ரசிகர்களுக்கு அதன் மதிப்பு தெரியாவிட்டால் பரவாயில்லை. ஆனால் கிளியோபாட்ராவாக நடிக்கும் எலிசபெத் டெய்லருக்கு அதன் மதிப்பு தெரியுமல்லவா? அதன் மூலம் அந்த பாத்திரத்தின் மிகப்பெரிய மதிப்பு அவருக்கு புரியுமல்லவா? அப்படி கிளியோபாட்ராவின் அளவிலா பெருமையை மனப்பூர்வமாக உணர்ந்து கொண்டால் அதற்கு ஏற்ப தன் நடிப்பை கம்பீரமாக வெளிப்படுத்துவார் அல்லவா? என்றாராம்.

நமது உடலின் செல்களில் உள்ள டி.என்.ஏ.யில் நம் உடல் அமைப்பைப் பற்றி வரை படம் உள்ளது. அது போல நமது உள்ளத்தின் ஆழத்தில் ஒரு வரைபடம் பதிவு செய்யப் பட்டுள்ளது. அந்த பதிவுகளில் மாற்றம் செய்யும்போது அதற்கு ஏற்ப அவரவர் வாழ்வில் அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறந்து கொள்கின்றன.

3. வெற்றி மனப்பான்மை:

“பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்” என்பது பழமொழி.

இதை நேர்மறையாக மாற்றினால் பணம் கொட்டும் இடத்தில் மேலும் மேலும் கொட்டும், வெற்றி மேலும் மேலும் வெற்றியையும், தோல்வி மேலும் மேலும் தோல்வியையும் இழுத்துக் கொண்டு வரும்.

நாம் பெறும் மிகச் சிறிய வெற்றிகூட நமக்கு வெற்றி மனப்பான்மையை உருவாக்குகிறது. அந்த வெற்றி மனப்பான்மை மேலும் பல வெற்றிகளை உருவாக்குகின்றன. அது போலவே தோல்வி, தோல்வி மனப்பான்மையை உருவாக்கி தோல்வியை இழுத்து வருகிறது.

பல வெற்றிகளை குவித்த வெற்றி வீரர்களின் முகத்தில் அந்த வெற்றியின் ரேகைகள் படர்ந்திருக்கின்றன என்கிறார் எமர்சன். அந்த வெற்றி ரேகைகள், அந்த வெற்றி நோக்கு மேலும் மேலும் வெற்றிகளை ஈர்க்கின்றன.

ஆக நாம் மிகுந்த முயற்சி எடுத்து வாழ்வில் சில வெற்றிகளை உருவாக்கிவிட்டால், அந்த வெற்றி தேவதை மேலும் பல வெற்றிகளை நம்மிடம் கொண்டு வருவாள்.

எதிர்பாராமல் சில தோல்வி நேர்ந்துவிட்டால் சற்று ஓய்வு எடுத்து நன்றாக சிந்தனை செய்து சில சிறிய காரியங்களை கையில் எடுத்து சிரத்தையோடு செயலாற்றி சில வெற்றிகளை பற்றிக் கொண்டுவிட்டால் அப்போது மீண்டும் வெற்றி முகம் காட்டும். அந்த வெற்றிகள் மூலம் அதிர்ஷ்டத்தின் கதவு திறந்துகொள்கிறது.

4. மகிழ்ச்சியான மனநிலை:

“வாழ்வு வருங்கால் வராது கண் தூக்கம்” என்பது பழமொழி. மழைக்கு முன் குளிர்ந்த காற்று வீசுவது போல முன்னேற்றம் வருவதற்கு முன் ஓர் உற்சாகமான மனநிலை வந்துவிடும்.

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு. இது செயல் விளைவு தத்துவம் (Cause and Effect) என அழைக்கப்படுகிறது. வெற்றியின் விளைவு மகிழ்ச்சி.

காற்று வீசினால் காற்றாடி சுற்றுகிறது. காற்றாடி சுற்றினாலும் காற்று வீசுகிறது. அதுபோல வெற்றி மகிழ்ச்சியை தருகிறது என்பது உலக விதி. மகிழ்ச்சியான மனநிலை வெற்றியை ஈர்க்கிறது என்பது ஆன்மீக விதி.

ஒரு வெற்றிக்காக இறைவனை வேண்டிய பின் அது கிடைத்தது போன்ற பாவனை செய்யுங்கள். அந்த வெற்றி கிடைத்த உடன் எத்தனை மகிழ்ச்சியோடு இருப்பீர்களோ அத்தனை மகிழ்ச்சியோடு இப்போதே இருங்கள். அந்த மனநிலை வெற்றியை இழுத்துக் கொண்டு வரும் என்பது ஆன்மீக ஞானிகளின் அறிவுரையாகும்.

மகிழ்ச்சியான மனநிலை வரும்போது அதிர்ஷ்டத்தின் கதவு திறந்துகொள்கிறது.

5. செயல் இன்றி பலன் இல்லை:

செல்வம் வேண்டும், வாழ்வு செழிக்க வேண்டும், வான்புகழ் பெற வேண்டும், அது வேண்டும், இது வேண்டும் என்று வாயால் பேசிக் கொண்டிருந்தால் போதுமா?

படிக்க வேண்டிய நேரங்களில் முயற்சி செய்து படித்தால் மதிப்பெண் வரும் காலங்களில் அதன் பலன் கை மேல் கிடைக்கும்.

செய்யும் செயலை நன்றாக செய்தால் அதற்கான பலன் நம்மை தேடிக்கொண்டு வரும்.

நிழலை நோக்கிச் சென்றால் நிழலை பிடிக்க முடியுமா? ஒளியை நோக்கிச் சென்றால் நிழல் நம் பின்னால் வரும்.

“ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா
ஊக்கம் உடையான் உழை”
- திருக்குறள்

எங்கே ஊக்கமும் அதன் பலனான விடாமுயற்சியும் இருக்கிறதோ, அங்கே செல்வம் வழி கேட்டுக்கொண்டு வரும். யாரிடம் விடா முயற்சி இருக்கிறதோ அவனிடம் இறைவனின் அருள் இருக்கிறது. அங்கே வெற்றி தேவதை வசிக்கிறாள்.

“முயலும் வரை முயல்வதல்ல முயற்சி
முடியும் வரை இடைவிடாமல் முயல்வதே முயற்சி”
- எங்கோ கேட்டது

எங்கே இந்த விடா முயற்சி இருக்கிறதோ, அங்கே அதிர்ஷ்ட வாசல் திறந்து கொள்கிறது.

6. தரம் வளம் தரும் (சமரசம் செய்யாத தரம்)

“நிறைய வேலை செய்யாதீர்கள், ஆனால் நிறைவாக வேலை செய்யுங்கள் குறைவாக வேலை செய்யுங்கள், ஆனால் குறையில்லாமல் செய்யுங்கள்.”

அமைதியான மனதுடன் தெளிந்த சிந்தனையுடன் மிகுந்த நம்பிக்கையுடன் முக மலர்ச்சியுடன் அளவில்லா ஆர்வத்துடன் செய்யும் காரியங்கள் சிறக்கின்றன. சாதனைகளாகின்றன.

அநேகர் இந்த சம்பளத்துக்கு இந்த வேலை போதும், இந்த மனிதர் கொடுக்கும் பணத்துக்கு இந்த அளவு வேலை செய்தால் போதும் என்று தங்களை தாங்களே தாழ்த்திக் கொள்கிறார்கள். இப்படி செய்வதால் அவர்களது தரம் தானாக கீழே இறங்குவதை அவர்கள் அறிவதில்லை.

ஆரம்ப காலங்களில் ஊதியம் குறைவாக இருந்தாலும், அதனால் நாம் சிரமப்பட்டாலும் தப்பில்லை. நம் தரம் மட்டும் எக்காரணம் கொண்டும் குறையக் கூடாது.

ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவுக்கு இசை அமைக்கும் முன் விளம்பரங்களுக்கு இசை அமைத்தார். சின்ன விளம்பரம் தானே என்று நினைக்காமல் அதையும் சிறப்பாக செய்தார். அந்த சிறிய விளம்பரங்களில் தன் முத்திரையை பதித்தார். அது மிகச் சிறப்பாக இருப்பதை கண்டு மணிரத்னம் அவரை ரோஜா படத்தில் அறிமுகப்படுத்தினார். அதன் பின் அவர் தன் தளரா முயற்சியில் உலகளாவிய சாதனை படைக்கிறார்.

சரவண பவனில் ஆரம்ப காலங்களில் கையைக் கடித்தாலும் பரவாயில்லை என்று குறைந்த விலைக்கு உணவுகளை வழங்கிய போதுகூட சுவையிலும் சுத்தத்திலும் எந்த குறையும் வைக்கவில்லை. இதனால் ஆரம்ப காலங்களில் அவருக்கு தினமும் நஷ்டம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. காலம் செல்ல செல்ல சரவண பவனின் சுத்தமும், சுவையும் யாவரையும் கவர்ந்தது. இன்று அதன் சாதனை உலகளாவியது.

ஜெப்ரி ஆர்ச்சர், சிட்னி செல்டன் (Jeffery Archer, Sydney Sheldon) போன்ற ஆங்கில எழுத்தாளர்கள் தங்கள் கதைகளை சுமாராக ஏழு தடவையில் இருந்து பதினான்கு தடவைகள் மீண்டும் மீண்டும் திருத்தி எழுதுவார்களாம். அதனால் அவர்கள் கதைகள் சிறப்புற்று விளங்குகின்றன.

சில வேளைகளில் நம் செயல்கள் சிறப்பாக இருந்தாலும் சாமானியர்கள் அதன் மதிப்பை உணராதவர்களாக இருப்பார்கள்.

வைரத்திற்கும் சாதா கற்களுக்கும் உள்ள வேறுபாடுகளை புரிந்துகொள்ள முடியாத மாறுபட்ட மனிதர்கள் மத்தியில் நாம் அறிந்து கொள்ளப்படாமல் இருக்கலாம், உயர்த்தப் படாமல் இருக்கலாம்.

ஆனால் வைரத்தின் தன்மைகளை அறிந்த வைர வியாபாரியின் கண்களில் நாம் படும்போது உண்மையான நிலைக்கு உயர்த்தப்படுவோம். அந்த நாளில் நாம் வைரம் போல் ஜொலிப்போம். அதுவரை பொறுமையாக உழைத்து காத்திருப்போம். அப்போது அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறந்துகொள்கின்றன.

7. பயனில செய்யாமை:

நாம் எந்தச் செயலைச் செய்தாலும் எதைப் பற்றி பேசினாலும் அதன் மூலம் நமக்கோ பிறர்க்கோ சமுதாயத்திற்கோ ஒரு நன்மையாவது இருக்க வேண்டும்.

நமது கையின் ஒரு விரலை நீட்டினாலும், மடக்கினாலும்கூட அதற்கும் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். ஒரே ஒரு வார்த்தை பேசினாலும் கூட அதற்கு ஒரு தேவை இருக்க வேண்டும். ஓர் எண்ணத்தை மனதினால் எண்ணினால்கூட அதற்கு ஒரு தேவை இருக்க வேண்டும். ஓர் எண்ணத்தை மனதினால் எண்ணினால் கூட அதற்கு ஒரு பொருள் இருக்க வேண்டும்.

பயனற்ற செயல்கள், பயனற்ற வீண் உரையாடல்கள், பயனற்ற சிந்தனைகள் இம்மூன்றும் நம் நேரத்தை நம் சக்தியை வீணடிக்கின்றன.

Watch your WAT (Words, Action and Thoughts)

நமக்கு சம்பந்தம் இல்லாத வெட்டியான அரசியல், கிரிக்கெட், சினிமா, அண்டை வீட்டார் பற்றிய கிசுகிசுக்கள் இவைகளை பற்றிய விஷய ஞானமும் இவைகள் பற்றிய உரையாடல்களும் நமது பொன்னான நேரத்தை மண்ணாக்கிவிடுகின்றன.

அநேகருக்கு தங்கள் வருமானத்தைக் கூட்டுவது சம்பந்தமான சிந்தனையோ, தங்கள் குழந்தைகளின் படிப்பு மற்றும் குடும்ப நலன் பற்றிய எண்ணமோ இருக்காது. ஆனால் சினிமாக்காரர்களின், கிரிக்கெட் வீரர்களின் சம்பளமும், அவர்களின் சாதனைப் பட்டியல்களும் அத்துப்படி.

நாம் எதை எதைச் செய்யவேண்டும், எதை எதைச் செய்யக் கூடாது என்பதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும்.

இன்னும் சிலர் விவரம் இல்லாமல் புடம் போடப்பட்ட தெளிவான சிந்தனை இல்லாமல் பழக்கம் காரணமாக யாருக்குமே பயன்தராத ஏதேதோ செயல்களை காலம் காலமாக செய்து கொண்டிருப்பார்கள்.

தண்ணீரே வராத கடும் பாறையில் போய் கிணறு தோண்டிக் கொண்டிருப்பார்கள். நாம் ஒரு செயலைச் செய்யும் முன் நன்றாக திட்டமிட்டு தெளிவான நோக்கத்தோடு சீரிய சிந்தனையோடு செயல்பட வேண்டும். அப்போது அதிர்ஷ்ட வாசல் நமக்காக திறந்து கொள்கிறது.

8. இக்கரைக்கு அக்கரை பச்சை:

மாற்றான் வீட்டு மல்லிகையின் மணம் மட்டும்தான் அநேகரின் மனம் கவரும். தன் தோட்டத்து ரோஜாவின் அழகை ரசிக்கும் கண்கள் அவர்களுக்கு இருப்பது இல்லை.

நாம் வெறுப்பாக செய்து கொண்டிருக்கும் அதே தொழிலை மிகப்பெரிய வாய்ப்பாக கண்டு வாழ்வில் வெற்றி பெற்றவர் அநேகர். எந்த தொழில் சிறப்பாக இருக்கிறது என்று நாம் நினைக்கிறோமோ அதே தொழிலில் தோல்வி கண்டு தங்கள் வசந்த வாழ்வை இழந்தவர்கள் அநேகர்.

இக்கரைக்கு அக்கரை பச்சை என்று அங்கும் இங்கும் அலையக் கூடாது. தான் இருக்கும் இடத்தில் பச்சையை (வாய்ப்பை) கண்டு கொள்பவன் புத்திசாலி.

9. விழிப்புணர்வு:

தங்கசாமி ஒரு முக்கியமான வேலையாக சில மைல்கள் தூரத்திலுள்ள பொன்னுசாமியை பார்க்க அவர் விட்டிற்கு மிதிவண்டியில் சென்றார். அதே வேளையில் பொன்னுசாமியும் தங்கசாமியைப் பார்க்க தங்கசாமி வீட்டிற்கு மிதி வண்டியில் சென்று கொண்டிருந்தார். வழியில் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்து செல்கிறார்கள். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு கொள்ளவில்லை.

இப்போது தங்கசாமி பொன்னுசாமி வீட்டிலும், பொன்னுசாமி தங்கசாமி வீட்டிலும் ஒருவருக்காக ஒருவர் இரண்டு மணி நேரம் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நினைத்தபடி சந்திக்க முடியாததால் இருவரும் ஒரே வேளையில் அவரவர் வீட்டை நோக்கி திரும்புகிறார்கள். வழியில் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்து செல்கிறார்கள். அப்போதும் இருவரும் ஒருவர் கண்ணில் மற்றவர் படவில்லை. மீண்டும் அவரவர் வீட்டில் போய் சேர்கிறார்கள். நினைத்தபடி ஒருவரை ஒருவர் பார்க்க முடியவில்லை.

நாம் அதிர்ஷ்டத்தை தேடி அலைகிறோம். அதுவோ நம்மை தேடி வருகிறது. வரும் அந்த அதிர்ஷ்டத்தை கண்டு கொள்ளும் அளவற்ற விழிப்புணர்வு நமக்கு இருப்பதில்லை. விழிப்புணர்வோடு இருப்பவர்கள் திட்டமிட்டு செயலாற்றுபவர்கள் அதிர்ஷ்ட வாசலை கண்டு கொள்கிறார்கள்.

10. தீய பழக்கங்கள்:

நாம் அலட்சியமாக நினைக்கும் சில தீய பழக்கங்கள் நம் வாழ்வில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

சின்ன நூலிலை போல படரும் அந்த தீய பழக்கங்கள், காலப் போக்கில் நம்மையறியாமல் உடைக்க முடியாத சங்கிலிபோல வலுத்து விடுகின்றன.

தீவிர முயற்சி எடுத்து தீய பழக்கத்திலிருந்து வெளியே வரவேண்டும். அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவதே அறிவுடைமை. நாம் தீய பழக்கங்களை கண்டு அஞ்சி ஓட வேண்டும். அதன் தீவிரத் தன்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இப்படி நாம் தீய பழக்கங்களில் இருந்து வெளியே வரும்போது அதிர்ஷ்டத்தின் கதவு நமக்கு திறந்துகொள்கிறது.

11. எல்லாம் நன்மைக்கே:

நல்லதும் கெட்டதும் மாறி மாறி வரலாம், சாதகங்களும், பாதகங்களும் மாறி மாறி வரலாம். அதில் துள்ளுவதோ, துவளுவதோ கூடாது. எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக பார்ப்பான் புத்திசாலி.

வெற்றியும் தோல்வியும் வீரருக்கு அழகு தோல்வியைக் கண்டு பயந்து பின்வாங்குவோரால் வெற்றிக்கனி பறிக்க முடியாது. தோல்வி என்றால் அரை கிணறு தாண்டி இருக்கிறோம் என்பதே பொருள். அதாவது தங்கத்திற்குப் பதில் வெள்ளி கிடைத்திருக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்.

மனம் தளராமல் மீண்டும் முயற்சிக்கும்போது வெற்றிக்கனி நம் கைக்கு எட்டும்.

12. தடைகள் தகர்க்கப்பட வேண்டும்:

கோழிக் குஞ்சுகள், தங்கள் சிறு அலகுகளால் தன்னைச் சுற்றியுள்ள முட்டை ஓட்டை உடைத்துக்கொண்டு வெளிவருகின்றன.

விதைகள், தங்களை சுற்றியுள்ள தோலை கிழித்துக் கொண்டு பூமியை பிளந்துகொண்டு மேலே முளைத்தெழுகின்றன.

இலையைத் தின்றுகொண்டு ஒரே செடியில் ஊர்ந்துகொண்டு வாழும் புழு தன்னைச் சுற்றி ஒரு கூட்டை உருவாக்கி அந்த கூட்டுக்குள் பல நாட்கள் உண்ணாமல் தவம் இருந்து, பின்பு அந்த கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே பறக்கிறது. பட்டாம்பூச்சியாக புதுப் பிறவி எடுக்கிறது.

நாம் உடைத்து வெளியேற வேண்டிய சில கூடுகள் அல்லது கோட்டைகள் என்ற தடைகள் நம் முன்னே இருக்கலாம். அவைகளை உடைத்து வெளிப்பட வேண்டும்.

எத்தனை பெரிய பலமான தடைகளை நாம் உடைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதனைகள் சரித்திரம் படைப்பதாக இருக்கும். ஆகவே என் முன்னே இருக்கும் கோட்டை பலமானதாக இருக்கிறதே, நான் தாண்ட வேண்டிய மலை மிக உயரமாக இருக்கிறதே என மனம் கலங்க வேண்டாம். துணிச்சலோடு மோதுங்கள். மனிதனால் தாண்ட முடியாத மலைகளோ, உடைக்க முடியாத கோட்டைகளோ உலகில் இல்லை.

சித்தார்த்தர் அரசாட்சியை துறந்து காட்டுக்குள் செல்லாவிட்டால் நமக்கு ஒரு புத்தர் கிடைத்திருப்பாரா?

செங்கோல்: நேரம் நல்ல நேரம்

பதவி உயரும்போது, வருமானமும் வளரும், வசதிகளும் வளரும், கூடவே பொறுப்புக்களும் வளரும். நமது குழுவின் அளவும் வளரும். முன்னைவிட அதிக மக்களோடு தொடர்பு ஏற்படும். இவை எல்லாம் வளர்ந்து வரும்போது, முக்கியமான உபகரணமான, நேரம் மட்டும் வளர்வதில்லை. முன்னமும் 24 மணிநேரம்தான், இப்போதும் அவ்வளவேதான். அதனால் மிகுந்த அழுத்தம் ஏற்படுகிறது. குறைந்த நேரத்தில் மிகுந்த விளைவுகளை ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது.


மேலும் வேலையின் இயல்பும் மாறிவிடுகிறது. இங்கே கொடுத்திருக்கும் படத்தைப் பாருங்கள்:

ஒரு நிறுவனத்தில் மேல் படிகளில் ஏறிக்கொண்டு வரும்போது நமது வேலைப்பாட்டில் மாறுதல் ஏற்படுகிறது. ஆனாலும் அந்த பழைய வேலைப் பாட்டில் இன்னமும் ஈடுபாடு இருந்துவருகிறது. அந்த ஈர்ப்பிலிருந்து உடனடியாக விடுபடுவது கடினமாக இருக்கின்றது. அந்தப் பழைய வேலைப் பாட்டினைச் சமாளிப்பதற்கென்று ஒருவரை நியமித்திருந்தாலும், அதில் மீண்டும் குறிக்கிட வேண்டுமென்ற ஆர்வம் பிடித்திழுக்கிறது. இதனால் அவருடைய நேரமும் வீணாகிறது, நம்முடைய நேரமும் வீணாகிறது. ஏனென்றால் இப்போது புதிய பொறுப்புக்கு வேண்டிய வேலைப்பாட்டைச் செய்வதற்கு நம்மைத் தவிர வேறு யாரும் இல்லையே. ஒன்றை விட்டால் மட்டுமே வேறொன்றைப் பிடிக்க முடியும்.

ஒரு ஆரம்பநிலைத் தொழிலாளிக்குப் பண்டங்களை உற்பத்தி செய்வது மட்டுமே கடமையாக இருக்கிறது. அவர் சிறப்பாக வேலை செய்து வரும்போது, அவரது திறமை மற்றும் உழைப்பை மதித்து, நிறுவனம் அவருக்கு, பதவி உயர்வு கொடுத்து அவரை மேற்பார்வையாளராக நியமிக்கின்றது. இந்தப் புதிய பதவிக்குப் புதிய பொறுப்புக்கள் இருக்கின்றது. மற்றவர்களைப் பயிற்றுவிப்பது, மேற்பார்வை காண்பது, இவற்றில் அதிக நேரம் செலவிடுவது, அலுவல்களைத் திட்டமிடுவது, உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வது போன்றவற்றில் சிறிது நேரமும் செலவிட வேண்டியிருக்கும்.

அடுத்த பதவியுயர்வு அவரை மேலாளராக மாற்றித்தரும்போது, இந்தப் பதவியின் பொறுப்புக்கள் இவரிடம் வேறு விதமான செயல்பாட்டை எதிர்பார்க்கிறது. இப்போது இவர் திட்டமிடுவது, ஒருங்கிணைந்த செயல்பாட்டைக் கண்டுகொள்வது, அதிக பொறுப்புகளைக் கையாள்வதற்கு அவர்களைத் தயார்படுத்துவது போன்றவற்றிற்கு அதிக நேரம் செலவிடவும் முன்பு செய்து கொண்டிருந்த மேற்பார்வை செயல்பாடு, நேரடியாக உற்பத்தியில் ஈடுபடுவது இவற்றைக் குறைத்துக் (தவிர்த்து) கொள்ளவேண்டும். அடுத்து ஆளுமை நிலையை அடையும்போது வேலைப்பாடுகள் இன்னமும் வித்தியாசமாக, வெளிப்புறத் தொடர்புகளைப் பலப்படுத்திக் கொள்வது, சந்தை ஆய்வுசெய்து, அதற்குத் தகுந்த வகையில் வளர்ச்சிக்கான யுக்திகளை வரைவது, நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தயார்செய்து கொள்வது போன்ற அலுவல்கள் பிரதானமாகிவிடும்.

அந்தந்த நிலைகளுக்கென்ற பிரத்தியேகமான செயல்களுக்கு அதிக நேரம் செலவிட வேண்டுமென்றால், மற்ற அலுவல்களைத் தவிர்த்தால் மட்டுமே முடியும். ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பதில் எந்த மாற்றமும் இல்லையே. ஆனால், பலருக்கும் மற்ற அலுவல்களை ஒதுக்கிவிட மனம் வருவதில்லை. தன்னை முக்கியமானவன் என்று அனைவரும் கருதவேண்டுமென்ற ஆசை, யாருக்கும் முடியாது என்று சொல்ல மனமில்லை. அனைவரையும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இவையெல்லாம் சேர்ந்து, பிரத்தியேகமான வேலைகளுக்கு கிடைக்க வேண்டிய சமயத்தைக் குறைத்து விடுகிறது.

இதற்குத்தான் வள்ளுவர் சொன்னார்;

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.

அதாவது நேர நிர்வாகம் என்பது உண்மையில் பார்த்தால் சுயநிர்வாகம்தான். நமது நடவடிக்கைகளை நிர்வகிப்பதின் மூலம் நேரத்தை நிர்வகிக்கமுடியும். நாம் விரும்பினாலும் விரும்பவில்லையென்றாலும் இந்த நிமிடம் நிற்காது, ஏதாவது ஒன்றோடு மாற்றிக்கொள்ளும், எத்துடன் மாற்றிக்கொள்வது என்பதில் வேண்டுமானால் நமக்குத் தெரிவு செய்ய வாய்ப்பிருக்கிறதே தவிர, மாற்றிக்கொள்ளாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அதனால்தான் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். சிலர் தங்கள் நேரத்தை தூங்கும் சௌகர்யத்தோடு மாற்றிக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் பொழுதுபோக்கு, கேளிக்கை போன்றவற்றோடு மாற்றிக் கொள்கிறார்கள். சிலரோ மேன்மையான செயல்களோடும், சிறப்பான சாதனைகள் விளைவிக்கும் செயல்களோடும் மாற்றிக் கொள்கிறார்கள்.

நேரம் என்பது நமக்கு இருக்கக்கூடிய எல்லா உபகரணங்களிலும் அமூல்யமானது. நேரம் பொன்னானது என்பார் சிலர். உண்மையில் நேரம் பொன்னைவிடவும் சிறந்தது. ஏனென்றால் பொன்னுக்கும் பொருளுக்கும் இல்லாத சிறப்புகள் நேரத்திற்கு உள்ளது. காசு பணமிருந்தால் சிறிது சேர்த்து வைத்துக்கொள்ளலாம். எங்காவது பத்திரமாக, பிறகு உதவும் என்று சேமித்து வைக்கலாம். நேரம், சமயம் என்ற அமூல்யமான இந்த உபகரணத்தை அப்படி எடுத்து வைக்க முடியுமா? பணம் பொருள் இவற்றை ஒருவருக்கு ஒருவர் கொடுக்கலாம், வாங்கிக்கொள்ளலாம். நம்மிடம் இருக்கும் நேரத்தை எப்படி இன்னொருவருக்கு வெட்டி எடுத்துக் கொடுக்க முடியும்? இது மட்டுமல்ல, போன நேரம் திரும்ப வராது.

இவ்வளவு சிறந்த உபகரணம் என்று அறிந்தும் கூட இன்னமும் பலர் நேரத்தை வீணடிக்கிறார்கள். ஏனென்றால் ஆண்டவன் நேரத்திற்கு எந்த விலையும் வைக்க வில்லையல்லவா? இதுவே ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தால்? ஒரு நாளைக்கு 25,000 ரூபாய், 12 மணிக்கு ஸ்ரீட்ங்ஸ்ரீந்-ர்ன்ற் ற்ண்ம்ங் என்றால், 11 மணிக்கெல்லாம் தயாராகி வெளியேறிவிடுகிறார், ஏனென்றால் சற்று அதிக நேரம் இருந்துவிட்டால் இன்னுமொரு 25,000 பழுத்துவிடுமே.

நேர நிர்வாகத்திற்கு முதல் படி நேரத்தைப் பற்றிய மனப்பான்மைதான். நேரம் அமூல்யமானது என்ற மனப்பான்மை உள்ளவர்கள் எப்போதும் நேர நிர்வாகத்தில் சிறப்பாக இருப்பார்கள். அந்த மனப்பான்மை இல்லாதவர்கள் வாழ்க்கையில் நேரம் மிகவும் விரயமாகும். நிர்வாகம் செய்வதற்கு முடியாமல் திணறுவார்கள். ஏனென்றால் எந்தச் செயல்பாடுகளில் நமது நேரத்தை பங்களிக்கிறோம் என்பதுதான் நேர நிர்வாகத்திற்கு அடிப்படையான ஒன்று.

நமது வெற்றிக்கென்று செய்யவேண்டிய சில செயல்பாடுகள் உள்ளன. அந்தச் செயல்பாடுகள் என்னென்ன என்று அறிந்து அவற்றில் நேரத்தைச் செலவிட்டால் மட்டும் வெற்றிக்கான வாய்ப்புகள் உண்டு. இலக்குகளைத் தெளிவாக விவரித்தல் அவசியம். அதில் குழப்பம் இருந்தால் என்ன செயல்கள் செய்ய வேண்டும் என்பதில் தெளிவு இருக்காது. நேரம் விரயமாகத்தான் செய்யும்.

இனி வரும் இதழ்களில் விடையங்களைப் பற்றி விவரமாகச் சர்ச்சிப்போம்:

சிறந்த நேர நிர்வாகத்திற்கு தேவையானது:

1. நேரம் குறித்த சிறப்பான மனப்பான்மை

2. இலக்குகள் குறித்த தெளிவு

3. நமக்கு இருக்கும் பல தரப்பட்ட பாத்திரங்களுக்கும், பொறுப்புகளுக்கும் அவற்றின் இலக்குகளுக்கும் இடையில் இணக்கத்தை அறிந்து முன்வரிசைப் படுத்துவது

4. அந்த இலக்குகளை அடைவதற்கு வேண்டிய செயல்பாடுகள் குறித்துத் தெளிவாகக் கண்டறிந்து, முன்வரிசைப் படுத்திப் பட்டியலிட்டு, அவற்றிற்குக் கால அளவுகள் தோராயமாகக் கணக்கிட்டு ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றுவது.

5. மற்றவர்கள் செயல்படுத்தக் கூடியவற்றை அவரவரிடம் ஒப்புவித்து நிறைவேற்றிக் கொள்வது,

6. நிதம் திட்டமிடுவதற்கும், செயல் பாட்டைத் திட்டமிட்டபடி நடக்கின்றதா என்று பரிசீலனை செய்வதற்கும் நேரம் ஒதுக்க வேண்டியது.

Thursday, April 25, 2013

காயத்ரீ மகா மந்திரம்


பூணூலின் மூன்று நூல்கள்:

ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களின் அடையாளம் ஒளி, சக்தி, அறியாமை என்றும் சொல்லலாம். மனிதனுக்கு மூன்று விதமான கடன்கள் உண்டு. தன்னுடைய காலம் சென்ற முன்னோர்கள், ரிஷிகள், கடவுள் இவர்களுக்கு செலுத்த வேண்டிய பக்தியாக அந்த மூன்று கடன்களையும் கூட இந்த மூன்று நூல்கள் நினைவு படுத்துகின்றன. பலம், அறிவு, நீண்ட ஆயுள் இந்த மூன்றும் பையனுக்கு கிடைக்க வேண்டும் என்று குறிப்பதாகவும் எடுத்து கொள்ளலாம்.

ஆத்மீக வழியிலும், அறிவிலும் உன்னத நிலையை அடைய மான் தோல் பூணூலில் முடிக்கபடுகிறது.

தர்பை

மூன்று இழை தர்பை (மேகலை) மாணவன் இடுப்பில் சுற்றப்படும். இதற்கு மூன்று வேதங்களால் அவன் சூழப்பட்டு இருக்கிறான் என்பது பொருள்.
மேகலை என்றால் நம்பிக்கையின் மகள், ரிஷிகளின் சகோதரி, தூய்மையை காப்பற்றுபவள், தீமையை விரட்டுபவள் என்று பொருள்.

சூரியனை பார்ப்பது::

சூரியனிடமிருந்து, தவறாமல் தன் கடமையை செய்யும் தன்மையையும், ஒழுங்கு முறைகளையும், கட்டுப்பாடுகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். சூரியனை பார்த்து நல்ல குணங்களை அளிக்குமாறு வேண்டிக்கொள்ள வேண்டும். இதற்காகவே உபநயனம் செய்விக்கப்படும் பையன் சூரியனை பார்க்கிறான். அவன் ஒரு கல்லின் மீது ஏறி நிற்பது, அவனுக்கு கல் போன்ற மன உறுதியை பெற வேண்டும் என்பதற்கு அடையாளம்.

ப்ரும்மோபதேசம்:

காயத்ரியை விட சிறந்த மந்திரம் இல்லை. அது பரப்ரும்ம ஸ்வரூபம். அதனால் தான் காயத்ரி உபதேசத்தை ப்ரும்மோபதேசம் என்று கூறுகிறார்கள். அந்த மந்திரத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் மிக சக்தி வாய்ந்தது. அந்த சக்தி சிஷ்யனுக்கு அருளப்படுகிறது.

சாதாரண மின் சக்திக்கே கம்பியின் மேலே, துணி ப்ளாஸ்டிக் போன்ற ஏதாவது ஒன்றை சுற்றுகின்றோம். அது போல தான், மிக சக்தி வாய்ந்த காயத்ரி மந்திரம் உபதேசிக்கப்படும்போது - அதாவது ப்ரும்மோபதேசம் நடக்கும் போது, மேலே பட்டு வஸ்த்திரத்தால் மூடிக்கொள்ளப்படுகிறது.

அமைதி, ஆரோக்கியம், மகிழ்ச்சி, நிறைவு, தடையின்மை, ஆயுள் கூடியிருக்கவும், தீமைகள் அழியவும், செல்வங்கள் குடியிருக்கவும், சர்வ மங்களம் கூடியிருக்கவும், இவை எல்லாம் ஒருங்கே அமையப்பெறவும் சபையோரின் ஆசீர்வாதம் வேண்டப்படுகிறது.

நினைவில் கொள்ள வேண்ட காயதரீ மந்திரம்.

ஓம்
பூர்ப்புவஸ்ஸீவ;
தத்ஸ விதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்//

யார் தன்னை கானம் செய்கிறர்களோ ஜெபிக்கிறார்களோ அவர்களையும், அவர்கள் மூலமாக உலகத்தையும் காப்பாற்றும் காயத்ரீ மந்திரம். காயத்ரிக்கு மேல் மந்திரமோ, தந்திரமோ, தெய்வமோ கிடையாது. அவ்வளவு உயர்ந்த மந்திரம், தெய்வம் காயத்ரி... நமக்கு கிடைத்தற்கரிய மாபெரும் சக்தி காயத்ரீ. இகத்திற்கும், பரத்திற்கும் நன்மையைக் காட்டும் மேலான மந்திரம். இந்த மந்திரம் இந்த தேவதைகள் இது சம்பந்தப்பட்ட ரிஷிகள் இவர்கள் பற்றி அறிந்து இதைப் பயன்படுத்தினால்தான் பிரும்மஸ்வரூபத்தை அறிய முடியும். காயத்ரீ என்பது ஜோதி வழிபாடு அல்லது சூரிய வழிபாடோ ஏதோ ஒரு குறிப்பிட்ட இனத்தினரின் ஏகபோக உரிமை அல்ல. எல்லோரும் அவரவர்களுக்கு ஏற்பட்ட முறைபடி காயத்திரியை வழிபட்டு பயனடைய முடியும்.

காயத்ரி தோன்றிய விதம்:

எங்கும் எதிலும் வியாபித்துள்ள ஒரு சக்தி இருக்கிறது. அது ஆண் அல்ல, பெண் அல்ல, ஆவி அல்ல, நாம ரூபம் இல்லாதது. ஆனால் உலகம் உய்ய அந்த சக்தியே உருவமும் ஏற்றது. அந்த சக்தியே குரு, அம்மை, அப்பன். உலகத்தை தோற்றி வைப்பதும் சக்தியே. பரிபாலிப்பதும் சக்தியே. தன்னிடம் ஐக்யப்படுத்திக் கொள்வதும் சக்தியே. இம்மூன்று தொழில் புரியும்போது மும்மூர்த்தி. ஓய்ந்திருக்கும்போது பரபிரும்மம். இந்த பிரும்ம சக்தியே சத்சித் ஆனந்த ரூபம். இதன் தத்துவத்தை விளக்க நான்கு வேதங்கள் ஆறு சாஸ்திரங்கள் தோன்றின. இந்த சாஸ்திரம் மாபெரும் கடல். பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தபோது அமிர்தம் கிடைத்தது. இந்த வேதக்கடலை ரிஷிகள், ஞானிகள் கடைந்தனர். த்ரயீ என்று ரிக், யஜுர், சாமவேதங்களின் சாரம் கிடைத்தது. இதன் சாரத்தைக் காண மதி என்னும் மத்தைக் கொண்டு கடைந்தனர். அதிலிருந்து மூன்று பாத வடிவமான காயத்ரீ தோன்றிற்று. அதிலும் சாரம் காணக் கடைந்தனர். பூ:பூவ:ஸுவ: என்று மூன்று வ்யாக்ருதிகள் உதித்தன. அதிலும் சாரம் காண முயற்சித்ததில் 'ஓம்' என்ற ப்ரணவம் கிடைத்தது. அ, உ, ம, என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையான இதுவே நாதம். நாதாந்தம் எனப்படும். உலகமெல்லாம் ப்ரணவத்திலேயே சென்று படிபடியாக ஒடுங்கும். உலகம் தோன்றும்போது ஓங்காரம் மலரும். அதிலிருந்து வியாக்ருதி உதிக்கும். அதிலிருந்து காயத்ரீ தோன்றும். அதிலிருந்து வேதங்கள் தோன்றும். அதிலிருந்து உலகம் உண்டாகும்.

பிண்டமான நம் உடலிலும் அந்த சக்தி திருவிளையாடல் புரிகிறது. நமது புத்தியிலிருந்து எண்ணற்ற எண்ணங்கள் அலை அலையாக கிளம்புகின்றன. செயல்கள் கிளம்புகின்றன. அந்த சக்தியே சாவித்ரீ, காயத்ரீ, சரஸ்வதி - இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி - துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி.
கா+ய+ஆ+த்ரீ
கா என்பது ஜல தத்துவம்.
அதாவது ஜலத் தத்துவமாகிய ஸ்தூலதேகம்.
ய என்பது வாயு தத்துவம். அதாவது வாயு தத்துவமாகிய ஸூஷ்ம தேகம்.
ஆ என்பது அக்னி தத்துவம். அதாவது அக்னி தத்துவமாகிய காரணதேகம் (திரி-மூன்று).

ஜலதத்துவமாகிய ஸ்தூல உடம்புக்கு அதிகாரி ப்ரம்மா, வாயு, தத்துவ ஸூஷ்ம உடம்புக்கு அதிகாரி விஷ்ணு. அக்னி தத்துவமான காரண உடம்புக்கு அதிகாரி ருத்திரன்.

புறத்தில் கண் கொண்டு அனுபவிப்பது ஸ்தூலம். மனத்தினால் மனக்கண் கொண்டு அனுபவிப்பது ஸூஷ்மம்.  அகத்தில் ஞானக்கண் கொண்டு அனுபவிப்பது காரணம்.

திரதேகஸ்வரூபமே காயத்ரீ மந்திரத்தின் நோக்கம். இந்த மூன்று தேகங்களின் சொரூப சுபாவங்களை ஜயம், திரிபு, மயக்கமின்றி தெரிந்து அனுபவிப்பதே காயத்ரீ மந்திரத்தின் பயன் அடைந்த நிலை.

"ஓ தயாத்" என்று காயாத்ரீ முடிகிறது. ஓ - என்பது ஆத்ம அறிவு.
த - சத்வ குணமான ஜீவகாருண்யம்
யா - என்றால் தெய்வ அம்சம்
த் - என்பது அருள் அனுபவம்
முதலில் ஜீவ காருண்ய ஸித்தி, பின் அருள் அனுபவ ஸித்தி, கடைசியில் இறையனுபவ ஸித்தி.

காயத்ரீ வேதங்களால் ஆக்ரயிக்கப்பட்ட அன்னையாவாள். அன்போடு ஜபம் செய்பவனை விடாது பாதுகாப்பது எதுவோ அதனைத்தான் காயத்ரீ என்றழைத்தனர்.

நம் தேசீய மந்திரம்:

காயத்ரீ எல்லோரும் உய்வதற்காக ஏற்பட்ட மகா மந்திரம் - தேசீய மந்திரம். இம்மனிதப் பிறவிக்கே லட்சியமாக வேதத்தின் சாரமாக இருப்பது இம் மந்திரம். இப்பேற்பட்ட மகிமை வாய்ந்த மந்திரம் எல்லோருக்கும் உரிய பொது சொத்து. இதை இன்னார்தான் ஜபிக்கலாம், இன்னார் ஜபிக்கக்கூடாது என்பதில்லை.

காயத்ரீ மந்திர தத்துவம் யாருக்கு விளங்குகிறதோ அவர்கள் உபாஸிக்கலாம்.
காயத்ரீ மந்திரம்: ஓம் பூர் புவ: ஸூவ: தத்ஸ விதுர் வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீ மஹி தியோயோன ப்ரசோதயாத்!!

யார் நம் அறிவை தூண்டுகிறாரோ அந்தச் சுடர் கடவுளின் மேலான ஒளியை த்யானிப்போமாக.

இது தான் அம்மகா மந்திரத்தின் அர்த்தம். பாரத நாட்டின் ஆத்மீக விழிப்புக்காக ஏற்பட்ட இம் மந்திரத்தை ஒரே மூச்சில் உச்சரித்துவிடலாம்.

காயந்தம்+த்ராயதே= காயத்ரீ ஜபிப்பவனை ரக்ஷிப்பது என்று பொருள்.
இதிலுள்ள 24 எழுத்துக்களும் எல்லா தேவதைகளையும் கட்டி நிற்பதால் அவர்களின் அருளை பெறுவதற்கும் ஏற்றதாக இருக்கிறது.

24 அக்ஷரங்களுடைய சந்தஸ் விசேஷத்திற்கு காயத்ரீ என்று பெயர். அது பரமாத்மா ஸ்வரூபம்.

ஒளிமயமான எதிர்காலம் - சொல்வேந்தர் சுகிசிவம்

யார் நீங்கள்? முடியாததை முடிப்பவரா? முடிந்ததை முடிப்பவரா?

ஜாலியாக இருக்க வேண்டும். சுலபமான வேலை பார்க்க வேண்டும். தளுக்கான வேலை பார்த்து சுமாரான சம்பளம் வாங்கி, சினிமா, ஹோட்டல், செக்ஸ், சாராய சமாசாரங்களை அப்படி இப்படி எப்படியோ அனுபவித்தபடியே இருக்க வேண்டும். அலட்டிக் கொள்ளக் கூடாது. சட்டையோ, மூளையோ எதுவுமே கசங்கவே கூடாது. தான் மட்டும் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். வாழ்க்கை என்பதே இதுதான், என்கிற சராசரியிஸத்தின் சம்ரட்சகர்கள் பலர் நிரம்பி வழியும் பூமி இது.

இவர்களால் மக்கள் தொகை புள்ளி விவரத்தில் இடம்பெற முடியும். தேசத்தின் தனிநபர் வருமான விகிதத்தைத் தாழ்த்த முடியும். வாக்காளர் பட்டியல், ஜனன மரணப் பட்டியல், போன்ற பட்டியலில் இடம் பிடிக்க முடியும். மற்றபடி இவர்கள் ஜடங்கள். சுற்றிக் கொண்டிருக்கும் சோம்பேறிகள். கண்விழித்து உறங்கும் கபோதிகள். கட்டி வைக்கப்படாத விலங்குகள்.

ஏன்? ஏன் இவர்களால் மக்கள் தொகை புள்ளிவிவரம் மாறுகிறதே ஒழிய வேறு எந்த மாற்றமும் நிகழ்வதில்லை. குடும்பமோ தேசமோ உலகமோ அரை அங்குல வளர்ச்சி கூட இவர்களால் அடைவதில்லை. இவர்கள் எதையுமே கண்டுபிடிக்க மாட்டார்கள். ஆனால், எல்லாக் கண்டுபிடிப்புகளையும் அனுபவிக்க ஆசைப் படுவார்கள். உழைக்க மாட்டார்கள். எல்லார் உழைப்பையும் உறிஞ்சிக் கொள்வார்கள். அதிகம் சம்பாதிக்க மாட்டார்கள். ஆனால், அடுத்தவர் சம்பாத்தியத்தில் அதிகம் உறிஞ்சுவார்கள். மரப் பொந்தில் வளர்ந்து மரத்தை உறிஞ்சும் காளான்கள் போல.

இவர்களுக்குத் தன்மானம், சுயகௌரவம், தேசப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று, தியாக உணர்வு, தொலை நோக்குச் சிந்தனை, தலைமைப் பண்பு இப்படி எதுவுமே இருக்காது. ஆண், பெண் என்கிற பால் வேறுபாட்டு அடையாளங்கள்தான் இவர்களது பிரதான பயன்பாடுகள். இவர்கள் அதிகம் வேலை செய்யாவிட்டாலும் இவர்கள் ஜீரண மண்டலம் மட்டுமே அதிகம் வேலை செய்திருக்கும். இந்த மானு… சாபங்களாய் மானாவரி மனிதர்களாய் சாகப்பிறந்த சராசரிகளாக நீங்கள் செத்தொழிவதோ!

கல்லை வைர மணியாக்கல், செம்பைக் கட்டித் தங்கம் எனச் செய்தல் வெறும் புல்லை நெல்லெனப் புரிதல் பன்றிப் போத்தைச் சிங்க ஏறு ஆக்கல், மண்ணை வெல்லத்து இனிப்பு வரச் செய்தல் என்று முடியாதவற்றை முடியவைக்கும் பாரதித்தனம் உங்களுக்கு வேண்டாவோ.

டக்கர் பிகர்டா மச்சி என்று ஜொள்ளு வடிய பின்புலப் பாதுகாப்புச் செய்து ஊர்வலம் வந்து பல்வேறு டெக்னிக்குகளால் மெல்ல மெல்ல சரிய வைத்து படிய வைத்து, சமயம் பார்த்து தள்ளிக் கொண்டு போய் குப்பை கொட்டுகிற அசிங்கமான வேலையை, அயோக்கிய லீலையை மிகப் பெரிய வீரதீரப்பிரதாபமாக நீட்டி முடிக்கும் வெட்டிப் பெருமைக்கு நீங்கள் அடிமையாவதோ!

பலரைப் படிய வைத்து, படுக்கைக்கு அழைப்பதும் பலரோடு உடலுறவு கொள்வதும் ஒன்றும் பெரிய சாதனை அல்ல. மிருகங்கள் எப்போதும் அதைத்தான் செய்கின்றன. ஒரே ஒரு வித்தியாசம். அவைகளுக்காக யாரும் லாட்ஜ்களைக் கட்டி வைக்கவில்லை. மற்றபடி இதில் மார்தட்டிக் கொள்ள ஏதுமில்லை என்பது இளையதலை முறைக்கு நன்கு உறைக்க வேண்டாவோ!

வாழவேண்டும் என்கிற வெறியில் திருச்சியில் இருந்து சென்னைக்குச் சைக்கிளில் வர உங்களுக்குத் துணிச்சல் உண்டா? வந்தவர் ந.ந.வாசன். ஜெமினி ஸ்டுடியோ, ஆனந்த விகடன் என்று பிரம்மாண்டமான ஒரு சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த ந.ந. வாசன் அவர்கள் ஒரு சாதாரண சமையல்கார விதவைத் தாயின் எளிய மகன். ஆனால், முடியாதவற்றை முடிக்கும் அவரது சாம்ராஜ்ய சரித்திரத்தின் முன்னுரை திருச்சி முதல் சென்னை வரையான சைக்கிள் பயணம். டிக்கட்டில்லாமல் ரயிலில் போகும் திருட்டுத் தனத்தை விட சைக்கிளை மிதிக்கும் சங்கடம் மேல் என்று கஷ்டத்தை நேசித்த மனோபாவம்தான் அவரைச் சக்கரவர்த்தியாக்கியது.முடியாததை முடிப்பவர்களே முடிசூடிக் கொள்கிறார்கள். முடியக் கூடியதை முடிப்பவர்கள் பாவம் முடிவெட்டிக் கொள்கிறார்கள். உங்கள் சிரம் முடிவெட்டத் தோன்றியதா? முடிசூடத் தோன்றியதா? முடிவெடுக்க வேண்டாவோ?ஐம்பத்தாறு சமஸ்தானங்கள் ஆளுக்கொரு திசையில் பிய்த்துக் கொள்ள ஆசைப்பட்டபோது அத்தனை பேரையும் அடக்குவது நடக்கிறகாரியமா? முடியாது முடியாது என்று பலரும் நினைத்தபோது ஏன் முடியாது அடக்கிக் காட்டுகிறேன்” என்று அடக்கிய இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல். முடியாததை முடித்த முடி மன்னர். நீங்கள் அவரை விட மட்டமா?

எமர்ஜன்ஸி என்கிற இரும்புக் கைகளால் இந்திராகாந்தி இந்தியாவைப் பிசைந்தபோது திராவிட இயக்கமும் சரி, இந்து இயக்கமும் சரி காப்பாற்ற முடியாதபடி கரைந்துபோகும் என்றே எல்லோரும் கணக்குப் போட்டார்கள். ஆனால், இரண்டுமே கட்டுக் கோப்பாகக் காப்பாற்றப்பட்டு மாநிலத்திலும் மத்தியிலும் பதவியேற்று வரலாறு படைத்தார்களே எப்படி? எப்படி? சமைந்தது எப்படி என்று பாட்டுப் பாடினால் போதாது. சாவிலிருந்து எழுந்தது எப்படி என்ற சரித்திரம் படிக்க வேண்டும்.

இந்து இயக்கம் திராவிட இயக்கம் ஆகிய இரண்டு இயக்கங்களுமே எதிர் எதிரானவை என்றாலும் சாக மறுக்கும் உயிர் ஆவேசம், முடியாததை முடிக்கும் மனோபாவம் இருவருக்கம் பொதுவானவை. அதனால்தான் சாம்பலிலிருந்து புறப்படும் ஃபினிக்ஸ் பறவைபோல (கற்பனைதான்) சாவிலிருந்து புறப்பட்டவை அந்த இரண்டு இயக்கங்களும்! ஒரு கோவிலின் மேல் கூரையில் ஓவியம் வரையவேண்டும். உட்கார்ந்தபடியோ நின்றபடியோ அல்ல. படுத்தபடி மேல் கூரையில் வரைவதால் சாரம் கட்டி அதில் படுத்தபடி பலமணி நேரம் வரைய வேண்டும். ஒருநாள் இரு நாள் அல்ல நான்கரை ஆண்டுகள் வரைந்தார் ஒருவர். உங்களால் அப்படி உழைக்கமுடியுமா? உணவு நேரத்திற்கு உணவு கிடையாது. கொடுமையான பெயிண்ட் வாசனையால் நுரையீரல் கோளாறு ஏற்பட உடல்நலம் கெட எதையுமே பொருட்படுத்தாமல் ஐயாயிரத்து எண்ணூறு சதுர அடி பரப்பளவில் முந்நூற்று நாற்பத்திமூன்று அமர ஓவியங்களை வரைந்து பைபிளை உயிர்ப்பித்த மைக்கல் ஏஞ்சலோதான் அந்த உலகப் புகழ்பெற்ற ஓவியர்.

அவர் வெறும் ஓவியர் மட்டுமல்ல சிற்பி, கட்டடக் கலை வல்லுநர். இடைஇடையே இந்தப் பணிகள் வேறு. முடியாததை முடித்ததால் ஓவியத்தில் முடிசூடிய மன்னர் அவர். கல்லே இல்லாத ஊரில் கற்கோவில். கிரேனே இல்லாத போது பல டன் எடையுள்ள கல்லை சாரம் கட்டி உச்சிக்குக் கொண்டுபோன சாதனையாளன். முடியாததை முடித்தவன் ராஜ ராஜ சோழன். அதனால் தான் சோழ அரசர்களின் மணி மகுடம் அவன். அடிமையாக இருப்பவர்கள். அடிபடவே பிறந்தவர்கள் என்று நசுக்கப்பட்ட தொழிலாளர் கள் தோளை நிமிர்த்தி பொதுவுடமை என்கிற வாளை நிமிர்த்தி அடிமைச் சங்கிலியை அறுத்தெறிந்து ஆட்சிச் செங்கோலைத் தொழிலாளர் கையில் தந்து உலகம் அதுவரை கண்டிராத ஆட்சிமுறைக்கு வித்திட்டாரே கார்ல மார்க்ஸ். அவரென்ன முடியக் கூடியதை முடித்தவரா? முடியாததை முடித்தவரா? யோசியுங்கள். யோசியுங்கள். கடல் வழிப் பயணம் ஒரு கனவாக இருந்த காலத்தில் நனவாக்கும் வெறியில் புறப்பட்டார் கொலம்பஸ். பக்கத் துணையாகப் பயணிகள் வரவில்லை. கொள்ளையர்களும் குற்றாவளிகளும் அனுப்பப்பட்டனர்.

பாதி வழியில் பிரச்சனை பிறந்தது. உணவுப் பொருட்களைப் பாதுகாத்து வந்த ரொனால்ட் என்பவன் அதிர்ச்சியை அறிவித்தான். கைவசம் உள்ள உணவு ஊர் திரும்ப மட்டுமே போதுமானது. மேற்கொண்டு பயணம் தொடர்ந்தால் ஒவ்வொரு நாளும் திரும்புவதற்கான உணவு தீர்ந்து போவதால் கப்பலைத் திருப்புவோம். புறப்பட்ட இடமே போய்ச் சேருவோம் என்றான். உடனிருந்த மாலுமிகள் ஆம் ஆம் என்றனர். கொலம்பஸின் கப்பல் கவிழவில்லை. கப்பல் பயண லட்சியம் கவிழ ஆரம்பித்தது. கொலம்பஸின் கூற்று அவர்கள் பய மண்டையில் ஏறவே இல்லை. கொலம்பஸ் கைதானார். ரொனால்ட் தலைமை ஏற்றான். கொலம்பஸ் அசரவில்லை. ஒரு புதுக் கணக்கு சொன்னார். திரும்பும் நாட்களில் தமக்கென்று உள்ள மொத்த உணவை மற்றவர் எல்லோரும் பங்கிட்டுக் கொள்ளலாம். பட்டினி கிடக்க தான் தயார். அந்த உணவு துணைகொண்டு ஒரு நாளோ இரு நாளோ திட்டமிட்டபடி மேலே பயணம் தொடர்வோம். திரும்ப வேண்டாம் என்று கெஞ்சினார். அது நியாயமாகப்பட்டது. பயணம் தொடர்ந்தது. அடுத்த இருபத்தி நாலு மணி நேரத்துக்குள் அமெரிக்கக் கடற்கரை அவர்களுக்குத் தட்டுப்பட்டது. உணவைக் கருதி திரும்பி இருந்தால், கொலம்பஸ் உலகப் புகழ் வெறும் புஸ். முடியாததை முடித்தார். முடிசூடிக் கொண்டார்.

முடியாததை முடிக்கவே நாம் பிறந்திருக்கிறோம். முடிவதை முடிப்பதற்கு அல்ல!

எது? எது? எப்ப? எப்ப?

பதினாறாம் லூயி மன்னர் மட்டும் ஒரு சின்ன ஆபரேஷன் செய்து கொண்டிருந்தால் பிரெஞ்சுப் புரட்சியே நடந்திருக்காது என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா? நம்பத்தான் வேண்டும். ஓரளவு உண்மைதான் இந்தச் செய்தி.

பதினாறாம் லூயி மன்னரின் பிறப்புறுப்பில் ஒரு சின்ன குறைபாடு. இறுக்கமாகத் தோல்மூடியிருந்தது. அதைச் சரிசெய்ய சின்ன அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அந்த அறுவை சிகிச்சை உலக முழுவதும் இன்று ஒரு மதச் சடங்காகக் கூட ஆகிவிட்டது. ஆனால், அவ்வளவு சாதாரணமான அறுவை சிசிச்சைக்கு மன்னர் உடன்படவில்லை. தயங்கினார், குழம்பினார், ஒத்திப் போட்டார். முடிவில் அவரது தலையே கில்லட்டின் மூலம் துண்டிக்கப்பட்டது.

ஆம். அவரது இந்தப் பிறவிக் குறைபாடு காரணமாக மன்னர் பதினாறாம் லூயி தம் மனைவியுடன் தாம்பத்ய உறவு மேற்கொள்ள முடியவில்லை. உடல் உறவுக்குத் தகுதியில்லை என்று அவள் தன்னை விவகரத்துச் செய்து அவமானப்படுத்திவிடக் கூடாதே என்பதற்காகவே அரசியின் எல்லா அநியாயங்களையும் மன்னர் சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. அவளது ஒழுக்கப் கேடுகள், முறையற்ற தொடர்புகள், அகங்காரமான நடவடிக்கைகள், நியாயமற்ற அரசியல் தலையீடுகள் குறித்து மன்னருக்கு அதிருப்தி இருந்தாலும் இந்த ஒரே காரணத்துக்காகவே அவளிடம் மன்னர் பணிந்து போனார். விளைவு… அரசியின் அராஜக நடவடிக்கைகள் மீது ஏற்பட்ட கோபமே பின்னர் பிரெஞ்சப் புரட்சியாகப் வெடித்தது. மன்னர் மீது மக்களுக்கு அவ்வளவு வெறுப்பில்லை… மாறாகப் பாசம் இருந்தது என்பது ஓர் ஆச்சர்யமான உண்மை.

நாடே கொந்தளித்த நிலையில் மன்னருக்கான மரண தண்டனையை நிறைவேற்றுவதா, மன்னிப்பதா என்ற விவாதம் பிரெஞ்சு கன்வென்ஷனில் நடைபெற்றபோது மன்னருக்கு மரணதண்டனை என்று வாக்களித்தவர் எண்ணிக்கை 361. மன்னிப்புக் கொடுப்போம் என வாக்களித்தவர் எண்ணிக்கை 334. இதிலிருந்து புரிவது என்ன? மரணத் தறுவாயிலும் செல்வாக்காகவே இருந்தார் பதினாறாம் லூயி என்பது புரிகிறதா?

ஏழாண்டுக்காலம் சிறிய ஓர் அறுவை சிகிச்சைக்குத் தயங்கி அல்லது கூச்சப்பட்டு மனைவியைத் திருப்தி செய்ய முடியாமல், அவளது தவறான அரசியல் முடிவுகளை ஏற்று நடந்ததால் ஒரு நல்ல மனிதர் அரசையும் உயிரையும் இழந்தார். ஏழாண்டுக்குப் பிறகு தமது மைத்துனரின் உறுதியான ஆலோசனைப்படி அந்தச் சிகிச்சையை மேற்கொண்டார். இல்வாழ்வுத் தகுதி பெற்றார். ஆனால், அதற்குள் நாட்டு அரசியல் நிலை செப்பனிட முடியாத அளவு சிக்கலாகி இருந்தது. சின்னப் பிரச்சனைகளை உரிய காலத்தில் தீர்க்க விரும்பாதவர்கள் பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும். புரிகிறதா?
ஒரு கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. வீட்டில் மேல் தளத்தின் உட்பூச்சு நடந்தபோது நிறைய சிமெண்ட் கலவை சிந்தியிருந்தது. உடனுக்குடன் அதனை எடுப்பது நடக்கிற காரியம் இல்லை. காரணம் மேற்கூரை பூசும் போது நிறைய சிமெண்ட் கலவை கீழே விழும். கொஞ்சம் பொறுத்துத்தான் அனைத்தையும் கூட்டிப் பெருக்கி அள்ள முடியும். ஆனால், வீட்டு சொந்தக்காரர் சிமெண்ட் வீணாகிறது என்று தொழிலாளர்களைத் திட்டிக் கொண்டே இருந்தார். தொழிலாளர்கள் கடுப்பாக வேலை செய்தார்கள். கொஞ்சம் பொறுமை வேண்டாமா! ஆனால் ஒன்று கொஞ்சம் பொறுத்து சிமெண்ட்டை அள்ளவில்லை என்றால் அவ்வளவுதான்.! சிமெண்ட் கலவை தரையில் உறுதியாகக் கெட்டியாகிவிடும். அதன் பின் கொத்திதான் எடுக்க வேண்டும். இதனால் பொருளும் நஷ்டம். உழைப்பும் சம்பளமும் வேறு கூடுதலாகும்.

அந்தக் “கொஞ்சம் பொறுத்து” என்கிற கால எல்லையில் விழிப்பு மிக மிக அவசியம். மிக முன்னதாகச் செய்ய வேண்டியது எது, கொஞ்சம் காலம் தாழ்த்திச் செய்ய வேண்டியது எது என்கிற தெளிவும் விவேகமும் நமக்கு மிகவும் அவசியம்.

இன்னொன்று சொல்கிறேன். பிறருக்குக் கெடுதல் செய்ய வேண்டும் என்கிற அளவு நமக்குச் சிலசமயம் கோபம் வரும். அப்போது கெடுதலை உடனே செய்துவிடக் கூடாது. அந்தச் செயலை எவ்வளவு காலம் தாழ்த்தலாமோ அவ்வளவு தாழ்த்தலாம். தவறில்லை. ஆனால் நம்மவர்கள் பிறருக்குக் கெடுதலை மட்டும் அவசர அவசரமாகச் செய்து விட்டு பிறகு அவஸ்தைப் படுகிறார்கள்.

ஒருமுறை சேரன் எக்ஸ்பிரஸில் சென்னையில் இருந்து கோவை வரும்போது நடந்த சம்பவம். இரவு பதினோரு மணிக்கு ரயில் புறப்படும் சமயம் ஒருதாயும் மகளும் அவசர அவசரமாக வந்து பெட்டியில் ஏறினர். அவர்களுக்கு வழி விடாது ஒரு ராணுவ வீரர் தமது பெரிய இரும்புப் பெட்டி கைப்பைகள் என்று பல மூட்டை முடிச்சுகளை வாயில் கதவருகே வைத்துக் கொண்டு இடையூறாக நின்றிருந்தார்.

சிரமப்பட்டு தாயும் மகளும் ஏறிவிட்டனர். உண்மையில் ப.ப.உ (டிக்கட் பரிசோதகர்) பின்னால் இருந்து தள்ளி ஏற்றிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

ரயில் புறப்பட்டும் விட்டது. எரிச்சலுடன் ராணுவ வீரரிடம் உங்கள் பெர்த் எது? ஏன் வழியில் பொறுப்பின்றி இப்படி அடைத்துக் கொண்டு நிற்கிறீர்கள்? என்று கேட்டார். பெர்த் ரிசர்வ் ஆகவில்லை. என்னுடன் வந்த இன்னொரு ராணுவ வீரர் பிளாட் பாரத்திலிருந்து எங்கள் லக்கேஜீகளை (இன்னும் வேறு) எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவற்றை வாங்கத் தான் வழியில் நின்றேன் என்று வெகு அலட்சியமாகச் சொன்னார்.
அவ்வளவுதான் ரிசர்வேஷன் இல்லாம ஏன்யா ஏறினே என்று ப.ப.உ. கத்த நான் மிலிடிரியாக்கும் என்று ராணுவ வீரர் எகிற ஏக ரகளை. அளவு கடந்த கோபத்தில் இறங்குய்யா கீழே என்று கத்தியடியே ப.ப.உ. ராணுவ வீரர் கைப்பையைத் தூக்கி ஓடும் ரயிலிலிருந்து பிளாட்பாரத்தில் எறிய… அடிதடி ஆரம்பமாகி விட்டது.

சாமாதனம் செய்து வைத்து நாங்கள் விசாரித்தால் பெரிய சிக்கல் புலப்பட்டது. ராணுவ வீரர் மறுநாள் போய் குன்னூரில் பொறுப்பில் (ஈன்ற்ஹ்) சேரவேண்டிய ராணுவ உத்தரவு கைப்பைக்குள் இருக்கிறது. ரயிலோ ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போது என்ன செய்வது? எவ்வளவு கோபத்திலும் ப.ப.உ. அப்படிச் செய்யலாமா? கெடுதலை உடனே செய்வதா? தயவு செய்து தோன்றுகிற கெடுதலை மட்டும் உடனே செய்யாதீர்கள். கொஞ்சம் காலம் தாழ்த்தி செய்ய வேண்டியதைச் சரியாகக் காலம் தாழ்த்தி செய்யுங்கள். உடனே செய்ய வேண்டியவற்றை உடனே செய்யுங்கள். பதினாறாம் லூயி ஞாபகம் இருக்கட்டும்.

விவேகானந்தர் போராடிப் பெற்ற வெற்றி

காலத்தின் கணக்கு கடுகளவு பிசுகியிருந்தாலும், இந்தக் காவியுடைக் காவியம் கவனிக்கப்படாமலேயே போயிருக்கும்! கிழக்கில் உதிக்கும் பொழுதே கவனிக்கப்படுவதுதான் சூரியன். ஆனால், இந்தச் சூரியனையோ மேற்குத் திசைக்குப் போன பிறகுதான் உலகம் உன்னிப்பாகப் பார்த்தது.
\
ஓர் இலட்சிய தீபத்தின் நிழலில் இருந்த இருள், நமக்கு இன்றும் வியப்பாய் இருக்கிறது, இருளை உள்வாங்கி அருளைப் பரப்பிய வித்தியாசமான தீபம்தான் விவேகானந்தர்.
விவேகானந்தர் என்று சொன்ன மாத்திரத்தில், கல்கத்தாவில், ஓர் ஆசிரமத்தின் நிழலில் அலட்டிக் கொள்ளாமல் வளர்ந்தவர் என்று தவறாகக் கருதுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள். வறுமை, குருதேவரின் மறைவு போன்ற பற்பல சூழ்நிலைகளில் விவேகானந்தர் மேற்கொண்ட இலட்சியப் போராட்டத்தை இன்று நினைத்தாலும் இதயம் சிலிர்க்கிறது.

எப்போதுமே ஒரு பெரிய இலட்சியத்தின் அழைப்பிற்கும், சராசரி வாழ்க்கைப் பிழைப்பிற்கும் நடுவே ஊசலாட்டங்கள் இருந்து கொண்டுதான் இருக்கும். அந்த ஊசலாட்டத்தில், சராசரித் தேவைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஒரு மகத்தான இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்ல, மிகப்பெரிய உறுதி தேவைப்படுகிறது. அந்தப் போராட்டத்தின் உச்சியில் பூப்பூத்த குறிஞ்சி மலர்தான் விவேகானந்தர்.

1900 ஜனவரி மாதம் 27 தேதி, கலிபோர்னியாவில் விவேகானந்தர் ஆற்றிய உரை, தன்னிலை விளக்கம் போல் திகழ்கிறது.

“எனக்கு நேர்ந்த துரதிர்ஷ்டம்தான் எவ்வளவு கடுமையானது! ஒரு பக்கத்தில் என் தாயும் சகோதரர்களும், அப்பொழுது என் தந்தை காலமாகியிருந்ததால் நாங்கள் வறுமைத் துன்பத்தில் உழன்று கொண்டிருந்தோம். மிகவும் ஏழைகளாக, உண்ண உணவின்றி ஏறக்குறைய முழு நேரமும் பட்டினி கிடந்தோம். என் ஒருவனைத்தான் குடும்பம் நம்பியிருந்தது. நான் ஒருவன்தான் அவர்களுக்கு ஏதாவது உதவ முடியும். இரண்டு உலகங்களுக்கு நடுவில் நான் நிற்க வேண்டியதாயிற்று.

தாயும் சகோதரர்களும் பட்டினி கிடந்து இறப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பதா? அல்லது இந்திய நாட்டின் நன்மைக்காவும் உலக நாடுகளின் நன்மைக்காவும் அமைந்தவை என்று நான் நம்பிய, இந்த மகானின் கருத்துக்களை மக்களுக்கு உபதேசம் செய்து அவற்றைச் செயல்படுத்துவதா? இப்படி ஒரு போராட்டம் என் மனத்தில் நாட்கணக்கில், மாதக் கணக்கில் நடந்து கொண்டிருந்தது.

இப்படியே இளைஞர்களாகிய நாங்கள் பணியைத் தொடர்ந்தோம். எங்களைச் சுற்றி வாழ்ந்த மக்களிடமிருந்து நாங்கள் பெற்றதெல்லாம் உதையும் சாபங்களும்தான். உணவுக்காக நாங்கள் வீடுவீடாக ஏறிப் பிச்சை எடுக்க வேண்டியிருந்தது. எல்லாம் எங்களுக்கு மறுக்கப்பட்டது. எப்போதாவது ஓரிரு சப்பாத்திகள் கிடைத்தன. தங்குவதற்கு, இடிந்து போன பழைய வீடு ஒன்று எப்படியோ கிடைத்தது. படமெடுத்துச் சீறும் பாம்புகள் அங்கே ஏராளம். அதைவிட மலிவாக வேறு வீடு கிடைக்காது என்ற காரணத்தால் நாங்கள் அங்கே குடிபுகுந்தோம்.

எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் பத்து ஆண்டுகள் கடந்தன. பத்து நீண்ட ஆண்டுகள்! மனம் ஆயிரம் தடவைகள் சோர்வுற்றது. ஆனால், ஏதோ ஒன்று எங்களுக்கு நம்பிக்கை ஊட்டிவந்தது. அதுதான் நாங்கள் பரஸ்பரம் வைத்திருந்த நம்பிக்கை. நாங்கள் ஒருவர் மற்றவரிடம் வைத்திருந்த மகத்தான அன்பு. ஆண்களும் பெண்களுமாக நூறு பேர் எனக்குத் துணையாக அமைந்தனர்.

பிறகு இந்திய நாட்டில் முயன்று பார்த்தாகி விட்டது. இனி இன்னொரு நாட்டில் முயல வேண்டும் என்று நினைக்கலானேன். அப்போது தான் சர்வமத மகாசபை கூடுவதாக இருந்தது.

மிகவும் சிரமப்பட்டு முயன்று என்னுடைய பயணச் செலவிற்குப் போதுமான அளவிற்குப் பணம் திரட்டினார்கள். நான் வந்துசேர்ந்தேன். ஓரிரு மாதங்களுக்கு முன்னதாகவே வந்துவிட்டேன். எனவேதான் யாரையும் தெரியாமல் இங்கே தெருக்களில் அலைந்து கொண்டிருந்தேன்.

“ஒருவழியாக சர்வமத மகாசபை தொடங்கியபோது, எனக்கு ஆரம்பம் முதலே உதவி வந்த அன்பார்ந்த நண்பர்களைச் சந்தித்தேன். நானும் சிறிது வேலை செய்து கொஞ்சம் பணம் சம்பாதித்தேன். இரண்டு பத்திரிகைகளைத் தொடங்கினேன். பிறகு இங்கிலாந்திற்குச் சென்று அங்கும் பணிபுரிந்தேன். அதே வேளையில் இந்தியாவிற்கான வேலையையும் அமெரிக்காவில் செய்து வந்தேன்”.இவற்றைப் படிக்கும்போதே அவர் பட்ட சிரமங்கள் என்னவென்று நமக்குப் புரிகிறது. இந்தப் போராட்டங்களும், போராட்டங்களுக்குப் பயந்து நிற்காத போர்க்குணமும் தான் விவேகானந்தரை ஒரு வீரத் துறவியாகச் செதுக்கின.உலகத்தின் கண்களுக்கு முன் அவர் உலா வந்ததென்னவோ ஒரு பத்தாண்டுக் காலம் தான். அதற்குள், பல நூற்றாண்டுகளுக்கு வேண்டிய நம்பிக்கைக் கருவூலத்தை விவேகானந்தர் வழங்கிச் சென்றிருக்கிறார்.

பரமஹம்சரின் பாதங்களுக்குக் கீழே வாழ்ந்த பக்குவமும், தன் நுண்ணறிவின் வெளிச்சத்தில் நுணுகிப் பயின்ற தத்துவங்களும் ஏற்றிய உரங்களுக்கு எதிரே சோதனைகள் அத்தனையும் சிறு தூசாகத் தெரிந்தன அவருக்கு.விவேகானந்தரின் மேன்மையைப் புரிந்து கொள்ள, அவரது சோதனைகளை ஒருவன் பயில வேண்டியதில்லை. அவரது வாழ்வையும், சோதனை களை எதிர்கொண்ட முறைகளையும் அறிந்தாலே அவர் மீதான மதிப்பு பலமடங்கு பெருகும்.

மனித வாழ்க்கைக்குப் பயன்படுவதே சமயம் என்கிற சித்தாந்தத்தை ஓங்கி ஒலித்த விவேகானந்தர், ஆரோக்கியம் – மனிதநேயம் – தூய சிந்தனைகள் ஆகியவை நிரம்பிய இலட்சிய சமுதாயத்தின் சிற்பியாவார்.

ஒவ்வொரு மனிதனும், தனக்குள் இருக்கும் தன்னிகரில்லாத ஆற்றலை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்று விரும்பினார் விவேகானந்தர். மனிதனிடம் இருக்கும் மகத்தான ஆற்றல், பெரியதொரு பார்வையில் விரிவடையும் போதுதான் அது மனித சமூகத்தை மேம்படுத்துகிறது என்பதை உணர்ந்திருந்தார்.கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் – இல்லாதவர்கள், அனைவருக்கும் பொதுவாக அவர் வழங்கும் இந்த உபதேசத்தைப் பாருங்கள்.

நிமிர்ந்து அமருங்கள். அதன்பின்னர் முதலில் ஒரு புனித எண்ணத்தை எல்லா உயிரினங்களின் மீதும் செலுத்துங்கள்.

“எல்லோரும் இன்பம் பெறுக, எல்லோரும் அமைதி பெறுக, எல்லோரும் ஆனந்தம் பெறுக” என்று மனத்தில் திரும்பத் திரும்பக் கூறுங்கள். கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு என்று எல்லா திசைகளுக்கும் அவ்வாறு செய்யுங்கள். இவ்வாறு எவ்வளவுக் கெவ்வளவு அதிகம் செய்கிறீர்களோ அவ்வளவுக் கவ்வளவு நீங்களும் நன்மையை உணர்வீர்கள்.

நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் எளிய வழி பிறரது ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வதே, நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு மிக எளிய வழி பிறரை மகிழ்ச்சியுறச் செய்வதே என்பதை நாளடைவில் அறிந்து கொள்வீர்கள். இதன்பிறகு, கடவுளிடம் நம்பிக்கை உடையவர்கள் பிரார்த்தனை செய்யுங்கள் – பணத்திற்காக அல்ல, உடல்நலத்திற்காக அல்ல. சொர்க்கத்திற்காக அல்ல; ஞானத்திற்காக, ஒளிக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்! பிற பிரார்த்தனைகள் எல்லாமே சுயநலம்தான்.

பின்பு உங்கள் உடம்பை நினைத்து அது நலமாக உறுதியாக இருப்பதாக எண்ணுங்கள். உடல்தான் நம்மிடம் உள்ள சிறந்த கருவி. அது வஜ்ரம் போல் உறுதியாக இருப்பதாகவும், இதன் துணையுடன் நீங்கள் வாழ்க்கைக் கடலையே தாண்டிவிடலாம் என்று எண்ணுங்கள். உங்கள் உடம்பு உறுதியாக இருப்பதாக அதனிடம் சொல்லுங்கள். உங்கள் மனம் உறுதியாக இருப்பதாக அதனிடம் சொல்லுங்கள். உங்களிடமே எல்லையில்லா நம்பிக்கை, முழு நம்பிக்கை வையுங்கள்!

விவேகானந்தர், இலட்சியங்களை முன்னிறுத்திப் பயணம் சென்ற மகான். எவ்வளவு பெரிய சமயமென்றாலும், அது மனிதர்களின் துயரம் துடைப்பதாகவும், மனிதர்களின் நிலையை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டுமென்று விரும்பினார். சடங்குகளின் பிடியில் அகப்படாமல் சமூக நலனையே சிந்திக்கும் வித்தியாசமான துறவி விவேகானந்தர்.

வாஷிங்டனில் இருந்து, 1894 அக்டோபர் 27ம் தேதியன்று, அளசிங்கப் பெருமாள் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் விவேகானந்தர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்,

“விதவையின் கண்ணீரைத் துடைக்கவும், அனாதையின் வாய்க்கு ஒரு பிடி சோறு கொண்டு வந்து கொடுக்கவும் முடியாத ஒரு மதத்திடமோ, தெய்வத்திடமோ எனக்கு நம்பிக்கை இல்லை.

இருபத்தோராம் நூற்றாண்டில், சந்நியாசம் என்கிற சொல் கேள்விக்கும் கேலிக்கும் ஆளாகிற சூழலில், இந்திய ஆன்மீக மரபின் மாசு மருவற்ற மகத்தான வடிவமாய் விவேகானந்தர் விளங்குகிறார்.

சாதனைகளைக் கனவு காணும் இளைஞனிலிருந்து, காவியுடையில் வாழும் துறவிகள் வரை அத்தனை பேரும் பெற்றுக் கொள்வதற்கான போதனையாய் விளங்குகிறது விவேகானந்தரின் வாழ்க்கை.

இந்தியாவின் ஆன்மீகம், மக்கள் நலன் சார்ந்தது. சகமனிதனுக்குள் இருக்கும் தெய்வீகத்தை மதிப்பது. தனக்குள் இருக்கும் அளப்பரிய ஆற்றலை உணர்ந்து அதன் மேம்பாட்டுக்கென வாழ்வது. இந்த ஆன்மீகத்தின் அடையாளம், விவேகானந்தர்.

பொதுவாகவே, ஒரு குரு நிறுவிய மடமோ, நிறுவனமோ, அவருடைய காலத்திற்குப்பின் வலிமை பெற்று வளர்வது அபூர்வம். ஆனால், ராமகிருஷ்ண மடம் இன்றளவும் ஒரு விருட்சம் போல் வேரூன்றி நிற்கிறது. அதற்கான ஆழமான அடித்தளங்களில் ஒன்று விவேகானந்தரின் தொலை நோக்கும் உழைப்பும்தான்.இந்த நூற்றாண்டில், ஆன்மீகம்-சந்நியாசம்-துறவு-தன்னலமறுப்பு போன்ற சொற்களின் பொருளைப் புதுப்பித்துக்கொள்ள சரியான முன்மாதிரி, விவேகானந்தர்.

சத்தியத்திற்கான சர்வபரித் தியாகம்!
அதுவே விவேகானந்த யோகம்!

மாபெரும் சபையினில் நீ நடந்தால்…


சமூக மரியாதை, செல்வாக்கு என்றெல்லாம் சொல்கிறார்களே, அதற்கெல்லாம் என்ன பொருள்? நம்மீது பிறர் கொண்டிருக்கிற அபிப்பிராயம்தான் அவையெல்லாம்! இந்த அபிப்பிராயங்களை அவர்களாக உருவாக்கிக் கொள்வதில்லை. நம்முடைய வார்த்தைகள், செயல்பாடுகள், அணுகுமுறைகள் எல்லாம் சேர்ந்து நம்மீது சில அபிப்பிராயங்களைக் கட்டமைக்கிறது.

நாம் நல்ல மனநிலையில் இருப்பதைப் பார்ப்பவர்கள், இவர் ரொம்ப அன்பான மனுஷன் சார்” என்று முடிவெடுக்கிறார்கள். எதற்கோ, யார் மீதோ அளவு கடந்து கோபப்பட்டதைப் பார்ப்பவர்கள் அய்யோ! சரியான சிடுமூஞ்சி என்று முத்திரை குத்திவிடுகிறார்கள்.
மொத்தத்தில், நம்மீதான சமூக அபிப்பிராயங்களுக்கு நாமே காரணம். ஒவ்வொரு தனிமனிதரையும், அவரைச் சுற்றியுள்ள சமூகம் மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. எனவே, நமக்கு சமூக மரியாதை, செல்வாக்கு, மற்றவர்களின் பாராட்டு எல்லாம் வேண்டுமென்றால் நாமே எளிதாக அவற்றை உருவாக்கிக் கொள்ளலாம்.

உங்கள் தோற்றம் : உங்களைப் பற்றிய முதல் அபிப்பிராயம், உங்கள் தோற்றத்திலிருந்தே தொடங்குகிறது. தோற்றம் என்பது வெளித்தோற்றம் மட்டுமல்ல. உங்கள் நலனில் உங்களுக்கிருக்கும் அக்கறை, உங்கள் தோற்றத்தையும் ஆரோக்கியத்தையும் நீங்கள் பேணிப் பாதுகாக்கிற விதம், எல்லாம் இணைந்துதான் உங்களைப் பற்றிய எண்ணத்தை உருவாக்குகிறது.

உங்கள் இடம் : அலுவலகச் சூழல், உங்களைப் பற்றிய அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உங்கள் அலுவலகத்தின் ஒழுங்கு, ஆடம்பரமில்லாத அழகு, உங்கள் மேசையில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் வரிசை, எல்லாமே, எந்த விஷயத்தையும் நீங்கள் சரியாகச் செய்பவர் என்கிற அபிப்பிராயத்தை ஏற்படுத்துகிறது.உங்கள் வெளிப்பாடு : உடலசைவுகளும், உச்சரிக்கும் வார்த்தைகளும் உங்களைப் பற்றிய அபிப்பிராயத்தை அழுத்தமாக ஏற்படுத்தக் கூடியவை. பலரும், மற்றவர்களுக்குப் புரியாத மாதிரி பேசுவதுதான் ஒரு துறையில் சிறந்து விளங்குவதாக அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் என்று கருதுகிறார்கள். ஆனால், ஒரு துறையில் நிபுணராக இருப்பவர் சிக்கலான விஷயங்களையும், எல்லோரும் புரிந்து கொள்ளும்படி எளிதாகச் சொல்பவர்தான். எனவே, மற்றவர்களின் சிக்கல்களை எளிதாக்குபவரே மதிக்கப்படுகிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்.

நேரந்தவறாமை : கடுகடு என்றிருக்கும் முகம்தான் கண்டிப்பை வெளிப்படுத்தும் என்றில்லை. நேரந் தவறாமை, சொன்ன சொல் தவறாமை போன்ற அம்சங்கள், “நீங்கள் கண்டிப்பானவர் என்ற உணர்வை ஏற்படுத்தும். உங்கள் மீதான மரியாதையை மேம்படுத்தும்.

நடப்புகளை நன்கறிதல் : உங்கள் துறையில் மட்டுமின்றி உலகில் பொதுவாக நடைபெறும் விஷயங்களை ஓரளவு தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. நாலும் தெரிஞ்சவர் இவர் என்கிற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டு ஒன்றும் தெரியாமல் இருக்கலாமா என்ன?

தெளிவாக வழிகாட்டுதல் : ஏதேனும் ஓர் இடத்திற்குப் போக வழி கேட்டால் கூட, தனக்குத் தெரியாது என்பதை வெளிப்படுத்த விருப்பமின்றி சுற்றிவிடுகிற இயல்பு நிறைய மனிதர்களுக்கு உண்டு.

நம்மிடம் ஆலோசனை கேட்டு வருபவர்களுக்கு சரியாக வழி காட்டுவது நம்முடைய கடமை. ஒருவேளை நமக்குத் தெரியவே தெரியாத விஷயமென்றால், யாரை அணுகலாம் என்பதைத் தெளிவாகவும், துல்லியமாகவும் சொல்லி விடுவது நல்லது. இதன் மூலம் நமக்குத் தெரியாத விஷயங்களில் கூட “வழிகாட்டியாக” விளங்க முடியும்.

நம்மை நாம் எப்படி வெளிப்படுத்து கிறோமோ அப்படித்தான் உலகம் நம்மை அறிந்து கொள்கிறது. எனவே, உலகம் உங்களை மதிக்க வேண்டுமென்றால், மதிக்கும் விதமாக உங்களை நீங்கள் வெளிப்படுத்துங்களேன்!