Thursday, April 25, 2013

விவேகானந்தர் போராடிப் பெற்ற வெற்றி

காலத்தின் கணக்கு கடுகளவு பிசுகியிருந்தாலும், இந்தக் காவியுடைக் காவியம் கவனிக்கப்படாமலேயே போயிருக்கும்! கிழக்கில் உதிக்கும் பொழுதே கவனிக்கப்படுவதுதான் சூரியன். ஆனால், இந்தச் சூரியனையோ மேற்குத் திசைக்குப் போன பிறகுதான் உலகம் உன்னிப்பாகப் பார்த்தது.
\
ஓர் இலட்சிய தீபத்தின் நிழலில் இருந்த இருள், நமக்கு இன்றும் வியப்பாய் இருக்கிறது, இருளை உள்வாங்கி அருளைப் பரப்பிய வித்தியாசமான தீபம்தான் விவேகானந்தர்.
விவேகானந்தர் என்று சொன்ன மாத்திரத்தில், கல்கத்தாவில், ஓர் ஆசிரமத்தின் நிழலில் அலட்டிக் கொள்ளாமல் வளர்ந்தவர் என்று தவறாகக் கருதுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள். வறுமை, குருதேவரின் மறைவு போன்ற பற்பல சூழ்நிலைகளில் விவேகானந்தர் மேற்கொண்ட இலட்சியப் போராட்டத்தை இன்று நினைத்தாலும் இதயம் சிலிர்க்கிறது.

எப்போதுமே ஒரு பெரிய இலட்சியத்தின் அழைப்பிற்கும், சராசரி வாழ்க்கைப் பிழைப்பிற்கும் நடுவே ஊசலாட்டங்கள் இருந்து கொண்டுதான் இருக்கும். அந்த ஊசலாட்டத்தில், சராசரித் தேவைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஒரு மகத்தான இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்ல, மிகப்பெரிய உறுதி தேவைப்படுகிறது. அந்தப் போராட்டத்தின் உச்சியில் பூப்பூத்த குறிஞ்சி மலர்தான் விவேகானந்தர்.

1900 ஜனவரி மாதம் 27 தேதி, கலிபோர்னியாவில் விவேகானந்தர் ஆற்றிய உரை, தன்னிலை விளக்கம் போல் திகழ்கிறது.

“எனக்கு நேர்ந்த துரதிர்ஷ்டம்தான் எவ்வளவு கடுமையானது! ஒரு பக்கத்தில் என் தாயும் சகோதரர்களும், அப்பொழுது என் தந்தை காலமாகியிருந்ததால் நாங்கள் வறுமைத் துன்பத்தில் உழன்று கொண்டிருந்தோம். மிகவும் ஏழைகளாக, உண்ண உணவின்றி ஏறக்குறைய முழு நேரமும் பட்டினி கிடந்தோம். என் ஒருவனைத்தான் குடும்பம் நம்பியிருந்தது. நான் ஒருவன்தான் அவர்களுக்கு ஏதாவது உதவ முடியும். இரண்டு உலகங்களுக்கு நடுவில் நான் நிற்க வேண்டியதாயிற்று.

தாயும் சகோதரர்களும் பட்டினி கிடந்து இறப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பதா? அல்லது இந்திய நாட்டின் நன்மைக்காவும் உலக நாடுகளின் நன்மைக்காவும் அமைந்தவை என்று நான் நம்பிய, இந்த மகானின் கருத்துக்களை மக்களுக்கு உபதேசம் செய்து அவற்றைச் செயல்படுத்துவதா? இப்படி ஒரு போராட்டம் என் மனத்தில் நாட்கணக்கில், மாதக் கணக்கில் நடந்து கொண்டிருந்தது.

இப்படியே இளைஞர்களாகிய நாங்கள் பணியைத் தொடர்ந்தோம். எங்களைச் சுற்றி வாழ்ந்த மக்களிடமிருந்து நாங்கள் பெற்றதெல்லாம் உதையும் சாபங்களும்தான். உணவுக்காக நாங்கள் வீடுவீடாக ஏறிப் பிச்சை எடுக்க வேண்டியிருந்தது. எல்லாம் எங்களுக்கு மறுக்கப்பட்டது. எப்போதாவது ஓரிரு சப்பாத்திகள் கிடைத்தன. தங்குவதற்கு, இடிந்து போன பழைய வீடு ஒன்று எப்படியோ கிடைத்தது. படமெடுத்துச் சீறும் பாம்புகள் அங்கே ஏராளம். அதைவிட மலிவாக வேறு வீடு கிடைக்காது என்ற காரணத்தால் நாங்கள் அங்கே குடிபுகுந்தோம்.

எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் பத்து ஆண்டுகள் கடந்தன. பத்து நீண்ட ஆண்டுகள்! மனம் ஆயிரம் தடவைகள் சோர்வுற்றது. ஆனால், ஏதோ ஒன்று எங்களுக்கு நம்பிக்கை ஊட்டிவந்தது. அதுதான் நாங்கள் பரஸ்பரம் வைத்திருந்த நம்பிக்கை. நாங்கள் ஒருவர் மற்றவரிடம் வைத்திருந்த மகத்தான அன்பு. ஆண்களும் பெண்களுமாக நூறு பேர் எனக்குத் துணையாக அமைந்தனர்.

பிறகு இந்திய நாட்டில் முயன்று பார்த்தாகி விட்டது. இனி இன்னொரு நாட்டில் முயல வேண்டும் என்று நினைக்கலானேன். அப்போது தான் சர்வமத மகாசபை கூடுவதாக இருந்தது.

மிகவும் சிரமப்பட்டு முயன்று என்னுடைய பயணச் செலவிற்குப் போதுமான அளவிற்குப் பணம் திரட்டினார்கள். நான் வந்துசேர்ந்தேன். ஓரிரு மாதங்களுக்கு முன்னதாகவே வந்துவிட்டேன். எனவேதான் யாரையும் தெரியாமல் இங்கே தெருக்களில் அலைந்து கொண்டிருந்தேன்.

“ஒருவழியாக சர்வமத மகாசபை தொடங்கியபோது, எனக்கு ஆரம்பம் முதலே உதவி வந்த அன்பார்ந்த நண்பர்களைச் சந்தித்தேன். நானும் சிறிது வேலை செய்து கொஞ்சம் பணம் சம்பாதித்தேன். இரண்டு பத்திரிகைகளைத் தொடங்கினேன். பிறகு இங்கிலாந்திற்குச் சென்று அங்கும் பணிபுரிந்தேன். அதே வேளையில் இந்தியாவிற்கான வேலையையும் அமெரிக்காவில் செய்து வந்தேன்”.இவற்றைப் படிக்கும்போதே அவர் பட்ட சிரமங்கள் என்னவென்று நமக்குப் புரிகிறது. இந்தப் போராட்டங்களும், போராட்டங்களுக்குப் பயந்து நிற்காத போர்க்குணமும் தான் விவேகானந்தரை ஒரு வீரத் துறவியாகச் செதுக்கின.உலகத்தின் கண்களுக்கு முன் அவர் உலா வந்ததென்னவோ ஒரு பத்தாண்டுக் காலம் தான். அதற்குள், பல நூற்றாண்டுகளுக்கு வேண்டிய நம்பிக்கைக் கருவூலத்தை விவேகானந்தர் வழங்கிச் சென்றிருக்கிறார்.

பரமஹம்சரின் பாதங்களுக்குக் கீழே வாழ்ந்த பக்குவமும், தன் நுண்ணறிவின் வெளிச்சத்தில் நுணுகிப் பயின்ற தத்துவங்களும் ஏற்றிய உரங்களுக்கு எதிரே சோதனைகள் அத்தனையும் சிறு தூசாகத் தெரிந்தன அவருக்கு.விவேகானந்தரின் மேன்மையைப் புரிந்து கொள்ள, அவரது சோதனைகளை ஒருவன் பயில வேண்டியதில்லை. அவரது வாழ்வையும், சோதனை களை எதிர்கொண்ட முறைகளையும் அறிந்தாலே அவர் மீதான மதிப்பு பலமடங்கு பெருகும்.

மனித வாழ்க்கைக்குப் பயன்படுவதே சமயம் என்கிற சித்தாந்தத்தை ஓங்கி ஒலித்த விவேகானந்தர், ஆரோக்கியம் – மனிதநேயம் – தூய சிந்தனைகள் ஆகியவை நிரம்பிய இலட்சிய சமுதாயத்தின் சிற்பியாவார்.

ஒவ்வொரு மனிதனும், தனக்குள் இருக்கும் தன்னிகரில்லாத ஆற்றலை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்று விரும்பினார் விவேகானந்தர். மனிதனிடம் இருக்கும் மகத்தான ஆற்றல், பெரியதொரு பார்வையில் விரிவடையும் போதுதான் அது மனித சமூகத்தை மேம்படுத்துகிறது என்பதை உணர்ந்திருந்தார்.கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் – இல்லாதவர்கள், அனைவருக்கும் பொதுவாக அவர் வழங்கும் இந்த உபதேசத்தைப் பாருங்கள்.

நிமிர்ந்து அமருங்கள். அதன்பின்னர் முதலில் ஒரு புனித எண்ணத்தை எல்லா உயிரினங்களின் மீதும் செலுத்துங்கள்.

“எல்லோரும் இன்பம் பெறுக, எல்லோரும் அமைதி பெறுக, எல்லோரும் ஆனந்தம் பெறுக” என்று மனத்தில் திரும்பத் திரும்பக் கூறுங்கள். கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு என்று எல்லா திசைகளுக்கும் அவ்வாறு செய்யுங்கள். இவ்வாறு எவ்வளவுக் கெவ்வளவு அதிகம் செய்கிறீர்களோ அவ்வளவுக் கவ்வளவு நீங்களும் நன்மையை உணர்வீர்கள்.

நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் எளிய வழி பிறரது ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வதே, நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு மிக எளிய வழி பிறரை மகிழ்ச்சியுறச் செய்வதே என்பதை நாளடைவில் அறிந்து கொள்வீர்கள். இதன்பிறகு, கடவுளிடம் நம்பிக்கை உடையவர்கள் பிரார்த்தனை செய்யுங்கள் – பணத்திற்காக அல்ல, உடல்நலத்திற்காக அல்ல. சொர்க்கத்திற்காக அல்ல; ஞானத்திற்காக, ஒளிக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்! பிற பிரார்த்தனைகள் எல்லாமே சுயநலம்தான்.

பின்பு உங்கள் உடம்பை நினைத்து அது நலமாக உறுதியாக இருப்பதாக எண்ணுங்கள். உடல்தான் நம்மிடம் உள்ள சிறந்த கருவி. அது வஜ்ரம் போல் உறுதியாக இருப்பதாகவும், இதன் துணையுடன் நீங்கள் வாழ்க்கைக் கடலையே தாண்டிவிடலாம் என்று எண்ணுங்கள். உங்கள் உடம்பு உறுதியாக இருப்பதாக அதனிடம் சொல்லுங்கள். உங்கள் மனம் உறுதியாக இருப்பதாக அதனிடம் சொல்லுங்கள். உங்களிடமே எல்லையில்லா நம்பிக்கை, முழு நம்பிக்கை வையுங்கள்!

விவேகானந்தர், இலட்சியங்களை முன்னிறுத்திப் பயணம் சென்ற மகான். எவ்வளவு பெரிய சமயமென்றாலும், அது மனிதர்களின் துயரம் துடைப்பதாகவும், மனிதர்களின் நிலையை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டுமென்று விரும்பினார். சடங்குகளின் பிடியில் அகப்படாமல் சமூக நலனையே சிந்திக்கும் வித்தியாசமான துறவி விவேகானந்தர்.

வாஷிங்டனில் இருந்து, 1894 அக்டோபர் 27ம் தேதியன்று, அளசிங்கப் பெருமாள் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் விவேகானந்தர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்,

“விதவையின் கண்ணீரைத் துடைக்கவும், அனாதையின் வாய்க்கு ஒரு பிடி சோறு கொண்டு வந்து கொடுக்கவும் முடியாத ஒரு மதத்திடமோ, தெய்வத்திடமோ எனக்கு நம்பிக்கை இல்லை.

இருபத்தோராம் நூற்றாண்டில், சந்நியாசம் என்கிற சொல் கேள்விக்கும் கேலிக்கும் ஆளாகிற சூழலில், இந்திய ஆன்மீக மரபின் மாசு மருவற்ற மகத்தான வடிவமாய் விவேகானந்தர் விளங்குகிறார்.

சாதனைகளைக் கனவு காணும் இளைஞனிலிருந்து, காவியுடையில் வாழும் துறவிகள் வரை அத்தனை பேரும் பெற்றுக் கொள்வதற்கான போதனையாய் விளங்குகிறது விவேகானந்தரின் வாழ்க்கை.

இந்தியாவின் ஆன்மீகம், மக்கள் நலன் சார்ந்தது. சகமனிதனுக்குள் இருக்கும் தெய்வீகத்தை மதிப்பது. தனக்குள் இருக்கும் அளப்பரிய ஆற்றலை உணர்ந்து அதன் மேம்பாட்டுக்கென வாழ்வது. இந்த ஆன்மீகத்தின் அடையாளம், விவேகானந்தர்.

பொதுவாகவே, ஒரு குரு நிறுவிய மடமோ, நிறுவனமோ, அவருடைய காலத்திற்குப்பின் வலிமை பெற்று வளர்வது அபூர்வம். ஆனால், ராமகிருஷ்ண மடம் இன்றளவும் ஒரு விருட்சம் போல் வேரூன்றி நிற்கிறது. அதற்கான ஆழமான அடித்தளங்களில் ஒன்று விவேகானந்தரின் தொலை நோக்கும் உழைப்பும்தான்.இந்த நூற்றாண்டில், ஆன்மீகம்-சந்நியாசம்-துறவு-தன்னலமறுப்பு போன்ற சொற்களின் பொருளைப் புதுப்பித்துக்கொள்ள சரியான முன்மாதிரி, விவேகானந்தர்.

சத்தியத்திற்கான சர்வபரித் தியாகம்!
அதுவே விவேகானந்த யோகம்!

No comments:

Post a Comment