Friday, April 26, 2013

செங்கோல்: நேரம் நல்ல நேரம்

பதவி உயரும்போது, வருமானமும் வளரும், வசதிகளும் வளரும், கூடவே பொறுப்புக்களும் வளரும். நமது குழுவின் அளவும் வளரும். முன்னைவிட அதிக மக்களோடு தொடர்பு ஏற்படும். இவை எல்லாம் வளர்ந்து வரும்போது, முக்கியமான உபகரணமான, நேரம் மட்டும் வளர்வதில்லை. முன்னமும் 24 மணிநேரம்தான், இப்போதும் அவ்வளவேதான். அதனால் மிகுந்த அழுத்தம் ஏற்படுகிறது. குறைந்த நேரத்தில் மிகுந்த விளைவுகளை ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது.


மேலும் வேலையின் இயல்பும் மாறிவிடுகிறது. இங்கே கொடுத்திருக்கும் படத்தைப் பாருங்கள்:

ஒரு நிறுவனத்தில் மேல் படிகளில் ஏறிக்கொண்டு வரும்போது நமது வேலைப்பாட்டில் மாறுதல் ஏற்படுகிறது. ஆனாலும் அந்த பழைய வேலைப் பாட்டில் இன்னமும் ஈடுபாடு இருந்துவருகிறது. அந்த ஈர்ப்பிலிருந்து உடனடியாக விடுபடுவது கடினமாக இருக்கின்றது. அந்தப் பழைய வேலைப் பாட்டினைச் சமாளிப்பதற்கென்று ஒருவரை நியமித்திருந்தாலும், அதில் மீண்டும் குறிக்கிட வேண்டுமென்ற ஆர்வம் பிடித்திழுக்கிறது. இதனால் அவருடைய நேரமும் வீணாகிறது, நம்முடைய நேரமும் வீணாகிறது. ஏனென்றால் இப்போது புதிய பொறுப்புக்கு வேண்டிய வேலைப்பாட்டைச் செய்வதற்கு நம்மைத் தவிர வேறு யாரும் இல்லையே. ஒன்றை விட்டால் மட்டுமே வேறொன்றைப் பிடிக்க முடியும்.

ஒரு ஆரம்பநிலைத் தொழிலாளிக்குப் பண்டங்களை உற்பத்தி செய்வது மட்டுமே கடமையாக இருக்கிறது. அவர் சிறப்பாக வேலை செய்து வரும்போது, அவரது திறமை மற்றும் உழைப்பை மதித்து, நிறுவனம் அவருக்கு, பதவி உயர்வு கொடுத்து அவரை மேற்பார்வையாளராக நியமிக்கின்றது. இந்தப் புதிய பதவிக்குப் புதிய பொறுப்புக்கள் இருக்கின்றது. மற்றவர்களைப் பயிற்றுவிப்பது, மேற்பார்வை காண்பது, இவற்றில் அதிக நேரம் செலவிடுவது, அலுவல்களைத் திட்டமிடுவது, உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வது போன்றவற்றில் சிறிது நேரமும் செலவிட வேண்டியிருக்கும்.

அடுத்த பதவியுயர்வு அவரை மேலாளராக மாற்றித்தரும்போது, இந்தப் பதவியின் பொறுப்புக்கள் இவரிடம் வேறு விதமான செயல்பாட்டை எதிர்பார்க்கிறது. இப்போது இவர் திட்டமிடுவது, ஒருங்கிணைந்த செயல்பாட்டைக் கண்டுகொள்வது, அதிக பொறுப்புகளைக் கையாள்வதற்கு அவர்களைத் தயார்படுத்துவது போன்றவற்றிற்கு அதிக நேரம் செலவிடவும் முன்பு செய்து கொண்டிருந்த மேற்பார்வை செயல்பாடு, நேரடியாக உற்பத்தியில் ஈடுபடுவது இவற்றைக் குறைத்துக் (தவிர்த்து) கொள்ளவேண்டும். அடுத்து ஆளுமை நிலையை அடையும்போது வேலைப்பாடுகள் இன்னமும் வித்தியாசமாக, வெளிப்புறத் தொடர்புகளைப் பலப்படுத்திக் கொள்வது, சந்தை ஆய்வுசெய்து, அதற்குத் தகுந்த வகையில் வளர்ச்சிக்கான யுக்திகளை வரைவது, நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தயார்செய்து கொள்வது போன்ற அலுவல்கள் பிரதானமாகிவிடும்.

அந்தந்த நிலைகளுக்கென்ற பிரத்தியேகமான செயல்களுக்கு அதிக நேரம் செலவிட வேண்டுமென்றால், மற்ற அலுவல்களைத் தவிர்த்தால் மட்டுமே முடியும். ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பதில் எந்த மாற்றமும் இல்லையே. ஆனால், பலருக்கும் மற்ற அலுவல்களை ஒதுக்கிவிட மனம் வருவதில்லை. தன்னை முக்கியமானவன் என்று அனைவரும் கருதவேண்டுமென்ற ஆசை, யாருக்கும் முடியாது என்று சொல்ல மனமில்லை. அனைவரையும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இவையெல்லாம் சேர்ந்து, பிரத்தியேகமான வேலைகளுக்கு கிடைக்க வேண்டிய சமயத்தைக் குறைத்து விடுகிறது.

இதற்குத்தான் வள்ளுவர் சொன்னார்;

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.

அதாவது நேர நிர்வாகம் என்பது உண்மையில் பார்த்தால் சுயநிர்வாகம்தான். நமது நடவடிக்கைகளை நிர்வகிப்பதின் மூலம் நேரத்தை நிர்வகிக்கமுடியும். நாம் விரும்பினாலும் விரும்பவில்லையென்றாலும் இந்த நிமிடம் நிற்காது, ஏதாவது ஒன்றோடு மாற்றிக்கொள்ளும், எத்துடன் மாற்றிக்கொள்வது என்பதில் வேண்டுமானால் நமக்குத் தெரிவு செய்ய வாய்ப்பிருக்கிறதே தவிர, மாற்றிக்கொள்ளாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அதனால்தான் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். சிலர் தங்கள் நேரத்தை தூங்கும் சௌகர்யத்தோடு மாற்றிக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் பொழுதுபோக்கு, கேளிக்கை போன்றவற்றோடு மாற்றிக் கொள்கிறார்கள். சிலரோ மேன்மையான செயல்களோடும், சிறப்பான சாதனைகள் விளைவிக்கும் செயல்களோடும் மாற்றிக் கொள்கிறார்கள்.

நேரம் என்பது நமக்கு இருக்கக்கூடிய எல்லா உபகரணங்களிலும் அமூல்யமானது. நேரம் பொன்னானது என்பார் சிலர். உண்மையில் நேரம் பொன்னைவிடவும் சிறந்தது. ஏனென்றால் பொன்னுக்கும் பொருளுக்கும் இல்லாத சிறப்புகள் நேரத்திற்கு உள்ளது. காசு பணமிருந்தால் சிறிது சேர்த்து வைத்துக்கொள்ளலாம். எங்காவது பத்திரமாக, பிறகு உதவும் என்று சேமித்து வைக்கலாம். நேரம், சமயம் என்ற அமூல்யமான இந்த உபகரணத்தை அப்படி எடுத்து வைக்க முடியுமா? பணம் பொருள் இவற்றை ஒருவருக்கு ஒருவர் கொடுக்கலாம், வாங்கிக்கொள்ளலாம். நம்மிடம் இருக்கும் நேரத்தை எப்படி இன்னொருவருக்கு வெட்டி எடுத்துக் கொடுக்க முடியும்? இது மட்டுமல்ல, போன நேரம் திரும்ப வராது.

இவ்வளவு சிறந்த உபகரணம் என்று அறிந்தும் கூட இன்னமும் பலர் நேரத்தை வீணடிக்கிறார்கள். ஏனென்றால் ஆண்டவன் நேரத்திற்கு எந்த விலையும் வைக்க வில்லையல்லவா? இதுவே ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தால்? ஒரு நாளைக்கு 25,000 ரூபாய், 12 மணிக்கு ஸ்ரீட்ங்ஸ்ரீந்-ர்ன்ற் ற்ண்ம்ங் என்றால், 11 மணிக்கெல்லாம் தயாராகி வெளியேறிவிடுகிறார், ஏனென்றால் சற்று அதிக நேரம் இருந்துவிட்டால் இன்னுமொரு 25,000 பழுத்துவிடுமே.

நேர நிர்வாகத்திற்கு முதல் படி நேரத்தைப் பற்றிய மனப்பான்மைதான். நேரம் அமூல்யமானது என்ற மனப்பான்மை உள்ளவர்கள் எப்போதும் நேர நிர்வாகத்தில் சிறப்பாக இருப்பார்கள். அந்த மனப்பான்மை இல்லாதவர்கள் வாழ்க்கையில் நேரம் மிகவும் விரயமாகும். நிர்வாகம் செய்வதற்கு முடியாமல் திணறுவார்கள். ஏனென்றால் எந்தச் செயல்பாடுகளில் நமது நேரத்தை பங்களிக்கிறோம் என்பதுதான் நேர நிர்வாகத்திற்கு அடிப்படையான ஒன்று.

நமது வெற்றிக்கென்று செய்யவேண்டிய சில செயல்பாடுகள் உள்ளன. அந்தச் செயல்பாடுகள் என்னென்ன என்று அறிந்து அவற்றில் நேரத்தைச் செலவிட்டால் மட்டும் வெற்றிக்கான வாய்ப்புகள் உண்டு. இலக்குகளைத் தெளிவாக விவரித்தல் அவசியம். அதில் குழப்பம் இருந்தால் என்ன செயல்கள் செய்ய வேண்டும் என்பதில் தெளிவு இருக்காது. நேரம் விரயமாகத்தான் செய்யும்.

இனி வரும் இதழ்களில் விடையங்களைப் பற்றி விவரமாகச் சர்ச்சிப்போம்:

சிறந்த நேர நிர்வாகத்திற்கு தேவையானது:

1. நேரம் குறித்த சிறப்பான மனப்பான்மை

2. இலக்குகள் குறித்த தெளிவு

3. நமக்கு இருக்கும் பல தரப்பட்ட பாத்திரங்களுக்கும், பொறுப்புகளுக்கும் அவற்றின் இலக்குகளுக்கும் இடையில் இணக்கத்தை அறிந்து முன்வரிசைப் படுத்துவது

4. அந்த இலக்குகளை அடைவதற்கு வேண்டிய செயல்பாடுகள் குறித்துத் தெளிவாகக் கண்டறிந்து, முன்வரிசைப் படுத்திப் பட்டியலிட்டு, அவற்றிற்குக் கால அளவுகள் தோராயமாகக் கணக்கிட்டு ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றுவது.

5. மற்றவர்கள் செயல்படுத்தக் கூடியவற்றை அவரவரிடம் ஒப்புவித்து நிறைவேற்றிக் கொள்வது,

6. நிதம் திட்டமிடுவதற்கும், செயல் பாட்டைத் திட்டமிட்டபடி நடக்கின்றதா என்று பரிசீலனை செய்வதற்கும் நேரம் ஒதுக்க வேண்டியது.

No comments:

Post a Comment