Thursday, October 30, 2014

சுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் கற்பனைக்கும் எட்டாத நன்மைகள்!

சுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் கற்பனைக்கும் எட்டாத நன்மைகள்!

1. ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.

2. காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார். உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார். அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.

3. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.

4. சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம்.

5. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.

6. சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும்.

7. சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.

8. சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் காலதாமதமான திருமணம் விரைவில் கை கூடும். கவலைகள் மறந்து போய் விடும்.

9. சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.

10. சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவம் தீரும். முடியாத செயல்கள் முடிந்து விடும்.

11. ஆஞ்சநேயருக்கு வடை வெண்ணை வைத்து நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

12. ராம நவமியன்று விரதம் இருந்து ராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் படித்து வந்தால் வாழ்வில் அமைதி பெறலாம்.

13. ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை சீதைக்கு கொடுத்து சுந்தரகாண்டம்தான். எனவேதான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்கிறார்கள்.

14. ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை நடப்பவர்கள் தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

15. சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன்பு சொன்ன ஸ்லோகத்துக்கு “ஜெய பஞ்சகம்” என்று பெயர். இதை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

16. சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையை கண்டுபிடிக்க அசோக வனத்துக்கு செல்லும் முன்பு கூறிய ஸ்லோகத்தை கூறி வந்தால் வெற்றி மீது வெற்றி உண்டாகும்.

17. சுந்தரகாண்டத்தை நீண்ட நாட்களாக பாராயணம் செய்பவர்களை விட்டு நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும்.

18. சுந்தரகாண்டம் என்று பெயர் சொல்லுவார். இதை சுகம் தரும் சொர்க்கம் என்பார்கள்.

19. சுந்தர காண்டம் படிப்பதன் மூலம் வேதம் சொல்லிய புண்ணியத்தை பெண்கள் பெற முடியும்.

20. ராமாயணத்தில் மொத்தம் 24 ஆயிரம் சுலோகங்கள் உள்ளன. இதில் 2885 சுலோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது.

21. சுந்தரகாண்டத்தை எவர் ஒருவர் ஆழமாக படிக்கிறாரோ, அவருக்கு தனது உண்மையான சொரூபத்தை உணரும் ஆற்றல் கிடைக்கும்.

22. சுந்தரகாண்ட பாராயணம் நமது ஊழ்வினையால் ஏற்படும் நிம்மதி சீர்குலைவை சரி செய்து விடும்.

23. சுந்தரகாண்டத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்தால் மனம் லேசாகி விடும்.

24. சுந்தரகாண்டத்தில் 42-ம் சர்க்கத்தில் 33-வது ஸ்லோகம் முதல் 37-வது ஸ்லோகம் வரை உள்ள ஸ்ரீஜெயபஞ்சகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் உடனே திருமணம் கைகூடும்.

25. ராமநவமியன்று ராகவேந்திர சுவாமிகள் இயற்றிய சுந்தரகாண்ட சுலோகம் கூறினால் மன தைரியம் உண்டாகும்.

26. ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் 9 மாதம் வரை நாள் தவறாமல் சுந்தரகாண்டம் படித்து வந்தால் சுகப் பிரசவம் உண்டாகி குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்பது ஐதீகம்.

27. கர்ப்பிணிகள் குறைந்த பட்சம் 5-வது மாதத்தில் இருந்து சுந்தரகாண்டம் படித்து வந்தால், பிறக்கும் குழந்தை ஆன்மிக சிந்தனை உள்ள குழந்தையாக பிறக்கும்.

28. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்தால்தான் அதன் முழு பலனும் கிடைக்கும்.

29. சுந்தரகாண்டம் மிகவும் வலிமையானது. அதை வாசிப்பவர்களுக்கும் வலிமை தரக்கூடியது.

30. சுந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் உறுதியாக அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டிலும் அசைவ உணவு தயாரிக்கக் கூடாது.

31. சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்ற சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.

32. சுந்தரகாண்டம் படிக்க தொடங்கும் மன்பு முதலில் ராமாயணத்தை ஒரே நாளில் படித்து விட வேண்டும். அதன் பிறகு சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்பது ஐதீகம். (ராமாயணத்தை முழுமையாக படிப்பதா? அதுவும் ஒரே நாளில்… என்று நினைக்கவேண்டாம். அதற்க்கு ஒரு எளிய வழி இருக்கிறது. அடுத்த பதிவில் அது பற்றி சொல்கிறோம்.)

33. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, அந்த அறை முன்பு அமர்ந்து சுந்தரகாண்டம் படிப்பது மிகவும் நல்லது.

34. சுந்தரகாண்டத்தை காலை, மாலை இரு நேரமும் படிக்கலாம்.

35. சுந்தரகாண்டத்தை படிக்கத் தொடங்கினால் ஒருநாள் கூட இடைவெளி விடாமல் படிக்க வேண்டும்.

36. பெண்கள் வீட்டுக்கு தூரமாக இருக்கும் நாட்களில் சுந்தரகாண்டம் படிக்கக் கூடாது.

37. சுந்தரகாண்டத்தின் ஒவ்வொரு சர்க்கத்துக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதை அறிந்து படித்தால் மிக எளிதாக பலன் பெறலாம்.

38. சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து முடித்ததும் ஆஞ்சநேயரை வழிபட்டு, ஏழைகளுக்கு உதவி செய்தால் அளவில்லா புண்ணியம் கிடைக்கும்.

39. வசதி, வாய்ப்புள்ளவர்கள் சுந்தர காண்டம் படிக்கும் நாட்களில் ஆஞ்ச நேயருக்கு பிடித்த நைவேத்தியங்களை படைத்து பயன்பெறலாம்.

40. சுந்தரகாண்டம் புத்தகத்தின் பதினோரு பிரதிகள் வாங்கி பதினோரு பேருக்கு படிக்க கொடுத்தால் யாகம் செய்ததற்கான பலன்கள் கிடைக்கும்

Monday, October 27, 2014

நெருக்கடியும் வாய்ப்பும் ஒரே வார்த்தைதான்

நெருக்கடியும் வாய்ப்பும் ஒரே வார்த்தைதான்

வாய்ப்பு என்பது ஒரு மறைமுக வரம். ஆனால் பல சமயங்களில் சாபம் போலத் தோன்றும். வேலையிலும் தொழிலும் ஏற்படும் பல சிக்கல்கள் நிஜமாகவே வாய்ப்புகள் என்றால் நீங்கள் நம்புவீர்களா?

நல்ல வாய்ப்பை அது வந்து போன பின் உணர்பவர்கள் தான் இங்கு அதிகம். அதைத் தவறவிட்டவர்கள்தான் அதன் அருமை அறிந்தவர்கள்.

தெரியாம போச்சே

“அப்பவே அந்த கம்ப்யூட்டர் கம்பனியில வேலை கிடைச்சது. இதெல்லாம் நிலைக்காதுன்னு இங்க வந்தேன். எனக்குப் பதிலா சேர்ந்தவரு இப்ப எங்கேயோ போயிட்டாரு. ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருமானம். நாம இன்னமும் இங்கே முப்பதைத் தாண்டலை!” என்று அங்கலாய்த்தார் இருபத்தைந்து வருடங்கள் அனுபவம் கொண்ட ஒரு முதிய மேலாளர்.

“யாரு கண்டாங்க ஐ.டியெல்லாம் இப்படி வளரும்னு?” என்று சொல்லி எழுந்து சென்றார்.

நெருக்கடியில் வாய்ப்பு

“எனக்கு நல்ல பாஸ். அவனுக்கு ஒரு மோசமான பாஸ். நாங்க இரண்டு பேரும் ஒரே கம்பனியில ஒண்ணா ட்ரெய்னியா சேந்தவங்க. புதுசா வந்த எம்.என்.சியில இரண்டு பேருக்கும் வேலை கிடைச்சது. எனக்குப் போகப் பெரிய மனசில்ல. சம்பள உயர்வும் அதிகமில்ல, பாஸ் தொந்தரவு தாங்காம அங்கே போன என் நண்பன் இன்னிக்கு அங்க டிபார்ட்மெண்ட் ஹெட். நான் இங்கே ஒரு புரமோஷன்தான் வாங்கியிருக்கேன். நல்ல பாஸ்னு அந்தப் புது கம்பனிக்கு போகாம விட்டது பெரிய தப்பாப் போச்சு. அது எவ்வளவு பெரிய வாய்ப்புன்னு அப்பத் தெரியாமப் போச்சு!”

உடனடி அனுகூலம் எதிர்பார்ப்பது அல்லது இன்றைய பிரச்சினையிலிருந்து உடனடியாகத் தப்பிப்பது இதுதான் நம் முடிவுகளைப் பெரிதும் பாதிக்கும் மன நிலை. இது நாளைய வாய்ப்புகளைப் பற்றி யோசிக்க வைக்காது!

இன்று பெரிதாகத் தெரிவது வருங்காலத்தில் பெரிதாகத் தெரியாது. அதேபோல இன்று சாதாரணமாகத் தெரிவது வருங்காலத்தில் பெரிதாகத் தெரியலாம். இந்தச் சிந்தனை இடைவெளியில்தான் வாய்ப்புகள் நழுவிப்போய் விடுகின்றன!

ஆனால் ஒவ்வொரு நெருக்கடியிலும் ஏதேனும் வாய்ப்பு தென்படுகிறதா என்று பாருங்கள். அது உங்கள் முடிவு எடுக்கும் திறனைக் கூர்மைப்படுத்தும்.

பிரச்சினைகளில் வாய்ப்புகளைத் தேடுபவர்கள்தான் வேலையில் பெரிய வெற்றிகளைப் பெறுகிறார்கள்.

எனது நெருக்கடி

என் ஆரம்பக் காலச் சிக்கல் ஒன்றுதான் என் வாழ்க்கையை மாற்றும் சக்தியாக மாறியது. 1990-ல் நடந்த சம்பவம் அது.

முனைவர் ஆராய்ச்சியும், மருத்துவ உளவியல் ஆலோசனையும் மட்டும்தான் உலகம் என அப்போது நான் இருந்தேன். ஒரு குடியிருப்போர் சங்கத்தின் ஆண்டு விழாவிற்குச் சிறப்பு பேச்சாளனாக வர அழைப்பு கிடைத்தது.

முதல் முறை என்பதால் செம கெத்து. புதுச் சட்டை, கூலிங்கிளாஸ் சகிதம் பஸ்ஸில் பாரிமுனை சென்று அங்கிருந்து ஆட்டோ வைத்துக்கொண்டு வண்ணாரப்பேட்டை சென்றேன். உடன் என் உயிர் நண்பர் வேறு. சந்துக்குள் நுழைய முடியாது என்ற ஆட்டோ ஓட்டுனருடன் சண்டை போட்டு உள்ளே செலுத்தி ஒருங்கிணைப்பாளார் வீட்டு வாசலில் கித்தாப்பாய் இறங்கினோம். ஆரத்தி எடுக்க ஆளில்லாவிட்டால் பரவாயில்லை. நிகழ்ச்சிக்கே யாரும் வர ஆரம்பிக்கவில்லை. ஒரு வெயில் நேரத்தில் குழந்தைகள் மட்டும் பவுடர் பூசி நடனத்திற்கு ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படி இப்படி ஏழு மணிக்குக் கூட்டம் சேர்ந்தது. என்னைப் பேசச் சொன்னார்கள்.

நான் பெரிதாகச் சொன்ன உளவியல் விஷயங்கள் எடுபடவில்லை. சில சிரிப்புத் துணுக்குகளுக்கு ஆரவாரமாய்க் கை தட்டினார்கள். இறுதியில் பலமாகக் கை தட்டியபோது ‘போதும்’ என்று நினைத்துக் கை தட்டினார்களா என்று சந்தேகம். இருந்தும் பலர் ஆட்டோகிராப் வாங்கினார்கள். விழா முடிவில் “நீங்கள் கண்டிப்பாக இதை வச்சுக்கணும்” என்று ஒரு சின்ன கவரைத் திணித்தார் அந்த ஒருங்கிணைப்பாளர். பையில் போட்டு விட்டு ஆட்டோ ஏறினோம். முனை தாண்டியதும் பிரித்துப் பார்த்தால் ஆட்டோ காசிற்கே பற்றாத ஒரு ஒற்றை நோட்டு நோஞ்சானாகத் தென்பட, ஆட்டோவை நிறுத்தி பஸ் பிடித்தோம். வீடு வரும்வரை அவர்கள் போற்றிய பூத்துவாலையில் எங்கள் ஆனந்தக் கண்ணீரைத் துடைக்கும் அளவு விழுந்து விழுந்து சிரித்தோம்!

எனது வாய்ப்பு

அடுத்த வாரமே வேறு ஒரு காப்புரிமை முகவர்களுக்கான கூட்டத்தில் பேச அழைத்தார்கள். நண்பன் காதைக் கடித்தான். “மீண்டும் தேங்காய் மூடி கச்சேரியா?”

எவ்வளவு கட்டணம் வேண்டும் என்று அவர்களே கேட்டவுடன் ஒரு நல்ல தொகையைச் சொன்னோம். 20 முதல் 70 வயதுவரை இருந்த மக்கள் கூட்டத்தில் பேசினேன். வண்ணாரப்பேட்டை அனுபவம் நிரம்ப கை கொடுத்தது. அன்றைய பேச்சு மிகச் சிறப்பாக அமைந்ததாகச் சொன்னார் அந்த அதிகாரி, தன் சொந்த வங்கி கணக்கில் உள்ள காசோலைப் புத்தகத்திலிருந்து தாள் கிழித்தார்.

“கம்பெனிதான் கொடுக்கிறது என்று பெரிய தொகை கேட்டோம். உங்கள் அக்கவுண்ட் என்றால் கொடுப்பதைக் கொடுங்கள்!” என்றேன். அதற்கு அவர், “உங்கள் பேச்சைக் கேட்ட முகவர்களில் 5% பேர் கூடுதலாக 25% ரிசல்ட் கொடுத்தாலே போதும். இந்த மூலதனம் எனக்கு நூறு பங்காகத் திரும்பி வரும்!” என்றார்.

இரண்டுக்கும் ஒரே சொல்

ஒரு பெரும் வணிகச் சூத்திரத்தை நொடிப் பொழுதில் கற்றுக் கொண்டதோடு, ஒரு தொழில் வாய்ப்பையும் கண்டுகொண்டேன். தனியார் நிறுவனங்களுக்கு உளவியல் பயிற்சி எடுக்கத் தயாரானேன்.

என் வாழ்வின் போக்கையே மாற்றிய தருணம் அது.

முதல் அனுபவத்தை மறக்க வேண்டிய சம்பவமாக அல்லாமல் படிக்க வேண்டிய பாடமாக எடுத்துக் கொண்டேன். பின் வருடங்களில் உலகின் முன்னணி நிறுவனங்களுக்குப் பயிற்சி அளிக்க, அந்தக் கற்றல் ஆதாரமாய்த் தேவைப்பட்டது.

சீன மொழியில் “நெருக்கடி” மற்றும் “வாய்ப்பு” இரண்டிற்கும் ஒரே சொல் தான். அதை இடம் பார்த்துப் பொருள் படுத்திக் கொள்ள வேண்டும்.

உங்கள் வாழ்வில் நிகழும் சம்பவங்களை நெருக்கடியாகப் பார்ப்பதும் வாய்ப்பாகப் பார்ப்பதும் உங்கள் மனநிலையைப் பொறுத்தது.

“வேலை எப்படிச் சார்?” என்றால் உங்களிடமிருந்து வரும் முதல் பதில் உங்களின் இந்த மனநிலையைக் காட்டிக் கொடுத்துவிடும்!

துன்பங்கள் எல்லாம் தூசிகளே!

துன்பங்கள் எல்லாம் தூசிகளே!


“வேலை கிடைக்க வில்லை. சாகலாம் போல உள்ளது.” என்று ஒரு மின்னஞ்சல் வந்தது. எழுதியவர் நல்ல கல்லூரியில் நல்ல மதிப்பெண்களுடன் தேறிய பொறியாளர். தாமதிக்காமல் பதில் போட்டேன்.

பணியிட மனநலம்

வேலையில்லாத நிலை, வேலையில் பளு, வேலையில் மனஅழுத்தம் எனப் பல காரணங்களுக்காகத் தற்கொலைகள் பெருகி வருகின்றன. இது கவலை தரும் விஷயம்.

தமிழ்நாட்டில் சாலை விபத்துகள், டாஸ்மாக், மாரடைப்பு போல இதுவும் அவசியம் விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டிய விஷயம். இதன் சமூக, உளவியல், மருத்துவத் தீர்வுகள் எல்லோருக்கும் தெரிய வேண்டியவை. மேலை நாடுகளில் பணியிட மனநலம் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இங்கும் அதன் தேவை வளர்ந்துவருகிறது.

துக்கம் எனும் நோய்

சுய மதிப்பு இழத்தல், உதவி இல்லாமை மற்றும் நம்பிக்கையின்மை என 3 முக்கிய உளவியல் காரணங்களைத் துக்க நோய்க்குக் காரணமான மனநிலைகள் என்கிறார்கள். ஆமாம், துக்கம் என்பதும் ஒரு நோய்தான்.

இதில் நம்பிக்கை யின்மைதான் கடைசியில் தவறான முடிவை எடுக்க வைக்கிறது.

நம்பிக்கையை வளர்க்கும் செய்திகளைத் தேர்வு செய்து உட்கொள்வது மிக அவசியம். நம்பிக்கையைக் கெடுக்கும் செய்திகளை நச்சு போலத் தவிர்ப்பது நல்லது. இதை ஒரு திறனாகச் செய்ய நம் குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டும்.

வாலியைத் தேற்றிய கண்ணதாசன்

கவிஞர் வாலி திரைப்படத் துறைக்கு வருவதற்கு மிகவும் போராடிக்கொண்டிருந்த நேரம். ஒரு முறை சலித்துப் போய் ஊருக்குத் திரும்பலாம் என்று நினைக்கையில் அவர் கண்ணதாசனின் ஒரு திரைப்பாடலைக் கேட்கிறார்.

அது அவர் மனதை உறுதி செய்து மீண்டும் போராடித் திரைப்பட வாய்ப்பிற்கு நெருக்கமாக அழைத்துச் செல்கிறது. அந்தப் பாடல் “மயக்கமா கலக்கமா?” என்று தொடங்கும்.

அதில் என் பிரிய வரிகள்:

“உனக்கும் கீழே உள்ளவர் கோடி.

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!”

அமரத்துவம் பெற்ற இந்த வரிகள் துன்பம் வரும் தருணங்களில் ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டிய வரிகள்.

மாறும் நிஜங்கள்

வேலை கிடைக்கவில்லை. வருமானம் இல்லை. வேலை போய் விட்டது. குடும்பம் கஷ்டத்தில். வேலையில் தீராத மன உளைச்சல். ஆரோக்கியம் கெடுகிறது. எல்லாம் நிஜமான போராட்டங்களே. எதையும் மறுப்பதற்கில்லை.

ஆனால் மறந்துவிட்ட ஒரே உண்மை: இவை அனைத்தும் மாறக்கூடிய நிஜங்கள். இவற்றை மாற்றத் தேவை மனோ திடம்.

மாறாத நிஜங்கள்

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் மாற்ற முடியாத நிஜங்களுடன் எத்தனை பேர் போராடிக் கொண்டிருக்கிறார்கள்?

மன வளர்ச்சி குன்றியவர்கள், சிறு வயதில் பெற்றோர்களை இழந்தவர்கள், போர்க் குற்றங்களால் பாதிக்கப் பட்டோர், இயற்கைப் பேரிடரில் அனைத்து உடைமைகளையும் இழந்தவர்கள், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுமிகள், விபத்தில் உறுப்பிழந்தவர்கள், சாதிக் கொடுமையால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டோர், வேற்று நாட்டுச் சிறையில் நீதி கிடைக்காமல் வருடக்கணக்கில் சிக்கி உள்ளோர், மனநலம் பாதிக்கப்பட்டுத் தெருவில் விடப்பட்டவர்கள்...இன்னமும் நிறையப் பேரைப் பட்டியலிடலாம்.

பூதக்கண்ணாடியில்..

இவர்கள் வலிகளை விட நம் வலி பெரிதா? எந்த நம்பிக்கையில் இவர்கள் வாழ்கிறார்களோ, அதே நம்பிக்கை நம்மைக் காக்காதா?

யோசித்துப் பார்த்தால் நம்மில் பலர் சமூகத்தின் 98 சதவீத மக்களை விடச் சிறப்பாக இருக்கிறோம். இந்த உண்மையைப் பெரும்பாலான நேரத்தில் நாம் நினைப்பதில்லை. நம்மிடம் இல்லாததை நினைத்து வேதனை கொள்ளும் மனம் நாம் மற்றவர்களை விடச் சிறப்பாக இருக்கிறோம் என்கிற உண்மையைப் புறந்தள்ளி விடுகிறது.

இப்படிச் சலித்து எடுத்துப் பிரச்சினைகளைப் பூதக்கண்ணாடியில் வைத்துப் பார்க்கையில் நாம் மலைத்து விடுகிறோம்.

நல்லதே நடக்கும்

போதாக்குறைக்கு, நாம் பேசும் மொழி நம் எண்ணங்களைக் கூர்மைப்படுத்துகிறது.

“இந்த வேலை மாதிரி கஷ்டமான வேலை உலகத்திலேயே கிடையாது!”

“என் அளவுக்கு அடிபட்டவன் யாரும் இருக்க மாட்டான்.”

“என் நிலைமை என் எதிரிக்குக் கூட வரக் கூடாது.”

“அது மாதிரி ஒரு சோதனையை என் வாழ்க்கையிலேயே நான் பார்த்ததில்லை”

“இந்த மாதிரி ஒரு மோசமான முதலாளி உலகத்திலேயே கிடையாது!”

இப்படிப் பேசப்படும் சொற்களை ஆழ்மனம் பதிவு செய்து கொள்கிறது. பின்னர் இவை மெல்ல நம் சுய மதிப்பைக் குறைக்கின்றன. பின் அடுத்தவர் மதிப்பையும் குறைத்துத் ‘தன்னை யாராலும் காப்பாற்ற முடியாது’ என்று நம்ப வைக்கிறது. எதிர்காலம் சூனியமாகத் தெரியும். பின் தன்னம்பிக்கை மறையும். வாழ்க்கை பற்றிய நம்பிக்கை மறையும்.

அதனால் படித்துவிட்டு வேலை தேடுவோர், வேலை தாவி வேறு வேலை தேடுவோர், வேலைச் சூழ்நிலையில் சிக்கலில் உள்ளவர்கள் என அனைவரும் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:

நல்லது நிச்சயம் நடக்கும் என நம்புவது!!

அந்த நம்பிக்கையைத் தரக்கூடிய தெய்வங்கள், மனிதர்கள், புத்தகங்கள், பாடல்கள், வழிமுறைகள், அமைப்புகள், வார்த்தைகள், நடத்தைகள் என அனைத்தையும் தழுவிக்கொள்ளுங்கள்.

சிறு தூசி

ஒரு சோதனைக் காலத்தில் நான் தலைப்பு பார்த்து வாங்கிய புத்தகம் என் சோதனைகளை விட என் வலிமையை உணர்த்தியது. அந்தப் புத்தகத்தின் பெயர்:

“Tough times never last. Tough people do!”

ஆண்டவன் இந்தச் சோதனையை உங்களுக்கு அளித்திருக்கிறான் என்றால் அதை வென்று வெற்றி கொள்ளும் திறமை உங்களுக்கு உள்ளது என்கிற காரணத்தில் தான்!

கண்ணில் விழும் தூசி கண் பார்வையையே மறைக்கும். அதைத் துடைத்துப் போடுகையில்தான் தெரியும் அது கண் பார்வைக்குக்கூட அகப்படாத சின்னஞ்சிறிய தூசி என்று.

எதை இழந்தாலும் இழக்கக் கூடாதது நம்பிக்கை!

உழைப்பால் வரும் தன்னம்பிக்கை

உழைப்பால் வரும் தன்னம்பிக்கை

டா க்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எழுதிய FORGE YOUR FUTURE ஆங்கில நூலின் பகுதிகள் இங்கே தரப்படுகின்றன. கலாமிடம் பலர் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள்தான் இந்த நூல். வெளியீடு: ராஜ்பால் அண்ட் சன்ஸ். தமிழில் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிடுகிறது. மொழியாக்கம் மு. சிவலிங்கம். இவர் கலாமின் அக்கினிச் சிறகுகள் நூலை மொழியாக்கம் செய்தவர்.

“உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், உங்கள் திறமை மீது நம்பிக்கை வையுங்கள், உங்களது சுய ஆற்றல்களில் நியாயமான நம்பிக்கை வைக்காமல் உங்களால் வெற்றிபெறவோ, மகிழ்ச்சியை அனுபவிக்கவோ முடியாது” என நீங்கள் பேசியதைக் கேட்டேன். என் மீது எப்படி நான் நம்பிக்கை கொள்வேன்? குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்தத் திறமைகளும் என்னிடம் இல்லை. நான் குழப்பத்தில் இருக்கிறேன். நீங்கள் சொல்வது உண்மைதான் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால், நீங்கள் சொல்வது எனக்குப் பொருந்தாது என நினைக்கிறேன். தயவுசெய்து, எனக்கு வழிகாட்டுங்கள்.

நண்பரே, உங்களுடைய தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டிய நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பது தெளிவாகப் புலப்படுகிறது.

வாழ்க்கையின் எந்த ஒரு களத்திலும், தயக்கத்துடனும் தடுமாற்றத்துடனும் எடுத்ததற்கெல்லாம் மன்னிப்புக் கோரியவாறும் ஒருவர் முன்வைக்கும் திட்டத்தை யாரும் ஏற்றுக்கொள்ளத் தயங்குவார்கள். இதற்கு மாறாக, தெளிவாகப் பேசும் திறனுடன் தலை நிமிர்ந்து, கேள்விகளுக்குத் திட்டவட்டமாகப் பதில் அளித்து, தனக்குத் தெரியாத எதையும் உடனடியாக ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பவர் மற்றவரின் நம்பிக்கையைப் பெற்றுவிடுகிறார்.

வழிநடத்தும் நம்பிக்கை

தன்னம்பிக்கை கொண்டுள்ளோர் மற்றவர்களிடமும் அவர்கள் தங்கள் ரசிகர்களாக இருந்தாலும், சகாக்கள் அல்லது எஜமானர்கள், வாடிக்கையாளர்கள் அல்லது தங்கள் நண்பர்களாக இருந்தாலும் அனைவரிடமும் நம்பிக்கையைத் தூண்டிவிடுகின்றனர். மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுவதை வெற்றியடைவதற்கான ஒரு முக்கிய வழிமுறையாகத் தன்னம்பிக்கை நிறைந்தவர்கள் வகுத்துக் கொண்டுள்ளனர்.

தன்னம்பிக்கையைக் கற்றுக்கொள்ள முடியும், வளர்த்துக்கொள்ள முடியும் என்பது நல்ல விஷயம். உங்களது சொந்தத் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதிலோ உங்களைச் சுற்றிலும் உள்ளவர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதிலோ நீங்கள் ஈடுபடும்போது, அந்த முனைப்பு நல்ல பலன் தரும்.

சுய ஆற்றல், சுய உழைப்பு ஆகியவைதான் தன்னம்பிக்கையை உருவாக்கிக்கொள்வதற்கான இரண்டு முக்கிய அம்சங்கள். திறன்களில் நாம் நிபுணத்துவம் பெற்று நமக்கு முக்கியமாக உள்ள இந்தத் திறன் தொடர்பான இலக்குகளை அடைவதில் நாம் வெற்றி பெறும்போது, சுய ஆற்றலை நாம் உணர்கிறோம். ஒரு குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெறுவதற்காக நாம் கடுமையாகப் பாடுபட்டால், நம்மால் வெற்றி பெற முடியும் என்ற அறிதலில் நம்பிக்கை பிறக்கிறது. தோல்விகள் குறுக்கிடும்போது துவண்டுவிடாமல், சிக்கலான சவால்களை எதிர்கொண்டு வெற்றி நடை போடுவதில் இப்படிப்பட்ட நம்பிக்கைதான் நம்மை வழிநடத்துகிறது.

சுயமதிப்பு என்றால்..

சுய மதிப்பு குறித்த சிந்தனையுடன் இந்த நம்பிக்கை ஒன்றிணைந்து கொள்கிறது. நமது வாழ்க்கை நிகழ்வுகளை நம்மால் சமாளிக்க முடியும், மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு நமக்கு உரிமை உள்ளது என்ற அறிதல்தான் பொதுவாகச் சுய மதிப்பு எனக் கருதப்படுகிறது. நற்பண்புகளுடன் நாம் நடந்துகொள்கிறோம், நாம் மேற்கொள்ளும் செயல்களுக்கான திறன்படைத்தவர்களாக இருக்கிறோம், நாம் முழு மனதுடன் செயல்படும்போது, நம்மால் போட்டியில் வெல்ல முடியும் என்ற அறிதலிலிருந்தும் சுய மதிப்பு தோன்றுகிறது. நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நமக்கு அங்கீகாரம் கிடைக்கிறது என்ற உணர்வும் நமது சுய மதிப்புக்கு ஒரு காரணமாக உள்ளது.

1957-ம் ஆண்டு. சென்னை தொழில்நுட்பப் பயிலகத்தில் (Madras Institute of Technology) நான், இறுதியாண்டு பயின்ற நேரம். ஒப்படைக்கப்பட்ட வேலையைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றுவதற்கான அவசர உணர்வை எப்படி உருவாக்கிக்கொள்வது என்ற மிகவும் மதிப்புவாய்ந்த பாடத்தை நான் அப்போது கற்றுக்கொண்டேன். ஒரு திட்டத்துக்காக எனது தலைமையில் ஆறு உறுப்பினர் அணியை எனது ஆசான் பேராசிரியர் நிவாசன் அமைத்திருந்தார். தாழ்வாகப் பறந்து தாக்கும் போர் விமானத்தின் ஆரம்பக் கட்ட வடிவமைப்பை உருவாக்கும் பொறுப்பு எங்கள் அணியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. காற்று இயக்கம் மற்றும் கட்டமைப்பு வடிவத்தை உருவாக்குவது எனது பொறுப்பு.

நீண்ட பட்டியல்

எங்கள் அணியின் மற்ற ஐந்து உறுப்பினர்களும் விமானத்தின் உந்துவிசை, கட்டுப்பாடு, வழிகாட்டுதல், ஏவியானிக்ஸ், இன்ஸ்ட்ருமன்டேஷன் ஆகியவற்றுக்கான வடிவமைப்பை உருவாக்கும் பணியை ஏற்றிருந்தார்கள். ஐந்து மாதங்களுக்குப் பிறகு இந்தத் திட்டத்தை ஆய்வு செய்த பேராசிரியர் நிவாசன், திட்ட முன்னேற்றம் குறித்து அதிருப்தி அடைந்தார். மிகுந்த ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினார். பல்வேறு வடிவமைப்பாளர்களிடமிருந்து தேவையான தகவல்களை ஒன்றுதிரட்டுவதில் எதிர்கொண்ட சிக்கல்களை நான் நீண்ட பட்டியலிட்டதை எல்லாம் அவர் காதுகொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. எனது ஐந்து சகாக்களிடமிருந்தும் உள்ளீடுகளை நான் பெற வேண்டியிருந்தது. அவை இல்லாமல், வடிவமைப்புப் பணியைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில், நான் மேலும் ஒரு மாத அவகாசம் கேட்டேன். பேராசிரியர் நிவாசனோ “இங்கே பார் இளைஞனே, இது வெள்ளிக் கிழமை பிற்பகல் நேரம். கான்ஃபிகரேஷன் வரைபடத்தை (விமானத்தின் அனைத்து அம்சங்களையும் விவரித்துக்காட்டும் வரைபடம்) என்னிடம் காட்டுவதற்கு மூன்று நாள் அவகாசம் கொடுக்கிறேன். அது எனக்குத் திருப்தியாக இருந்தால், கூடுதலாக ஒரு மாதம் அவகாசம் அளிப்பேன். திருப்தியாக இல்லாவிட்டால், உன்னுடைய உதவித்தொகை ரத்து செய்யப்படும்” என்று சொல்லிவிட்டார்.

மன அழுத்தம்

என் வாழ்க்கையின் பேரதிர்ச்சி என்னை இடியாகத் தாக்கியது. எனது உயிரோட்டமே அந்த உதவித் தொகைதான். அது நிறுத்தப்பட்டுவிட்டால், விடுதியில் என் உணவுக்கான பணத்தைக்கூட என்னால் கொடுக்க முடியாமல் போய்விடும். மூன்று நாள் கெடுவுக்குள் அந்த வேலையை முடிப்பதைத் தவிர வேறு எந்த வழியுமே இல்லை. நானும் எனது அணி உறுப்பினர்களும் எங்களால் முடிந்த அளவுக்குத் தீவிர முனைப்புடன் செயல்படுவது என முடிவு செய்தோம். 24 மணி நேரமும் பாடுபட்டோம். இரவு முழுவதும் வரைபலகையிலிருந்து எங்கள் தலைகளை நிமிர்த்தவே இல்லை. உணவையும் உறக்கத்தையும் துறந்தோம். சனிக்கிழமை அன்று ஒரு மணி நேரம் மட்டுமே நான் ஓய்வெடுத்துக்கொண்டேன்.

ஞாயிறு காலை எனது வேலையில் நான் மூழ்கியிருந்தபோது, ஆய்வுக் கூடத்தில் வேறு யாரோ இருப்பதை உணர்ந்தேன். அவர் வேறு யாரும் இல்லை, பேராசிரியர் நிவாசன் தான். அமைதியாக அவர் என்னுடைய முன்னேற்றத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். எனது வேலையைப் பார்த்த பிறகு, பாசத்துடன் என்னைக் கட்டித் தழுவிக்கொண்டு முதுகில் தட்டிக்கொடுத்துப் பாராட்டினார். “ஒரு நெருக்கடியான கெடுவுக்குள் வேலையை முடிக்க வேண்டும் என்று சொல்லி உங்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கினேன் என்பது எனக்குத் தெரியும், ஆனால், இந்தத் திட்டத்தை உங்களை முடிக்க வைப்பதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை” என்று குறிப்பிட்டார்.

மேலும் ஒரு மாதம் இருட்டில் நாங்கள் துழாவிக் கொண்டிருப்பதற்கு இடம் தராமல், அடுத்த மூன்று நாட்களுக்குள் முடிக்க வேண்டும் எனப் பேராசிரியர் நிவாசன் தெள்ளத் தெளிவாகக் கெடு விதித்தார். இந்தக் காலக்கெடு என்ற நிர்ப்பந்தம்தான், கடந்த சில மாதங்களாக எங்களுக்குப் போக்குக் காட்டி வெற்றியை நோக்கி எங்களை விரைவாகப் பயணிக்க வைத்தது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றிய தொடர்கட்டங்களில், நான் பொறுப்பேற்றிருந்த பணியில் அடிப்படைத் தகுதியை மேம்படுத்திக்கொண்டேன். அணி உறுப்பினர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கான மென் திறன்களையும் வளர்த்துக்கொண்டேன்.

நான்கு படிநிலைகள்

இந்த அனுபவம் தரும் செய்தி என்ன? பின்வரும் நான்கு படிநிலைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்களுடைய தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்தச் செய்தி. முதலாவது, உங்களுடைய இலக்கை வரையறுத்துக்கொள்ளுங்கள். இரண்டாவது, அந்த இலக்கை எட்டுவதற்குக் களம் இறங்குங்கள். மூன்றாவது, இலக்கை நோக்கி விரைந்து முன்னேறுங்கள். நான்காவது, உழைப்பு; உழைப்பு; உழைப்பு.

உங்களுடைய தன்னம்பிக்கையை மேம்படுத்திக்கொள்வதற்கு நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான செயலாக அமையக்கூடியது, இலக்கை நிர்ணயித்துக்கொள்வதுதான். உங்களை மிகவும் ஈர்க்கும் ஒரு துறையில் உங்களுக்கான இலக்கை முடிவு செய்துகொண்டு, அந்த இலக்கை அடைவதற்காகக் கடுமையாகப் பாடுபடுங்கள். இது, ஆயுட்காலம் முழுவதும் நீங்கள் வெற்றிகளைக் குவிப்பதற்கு உந்துசக்தியாக அமையும். மற்றவர்களுடன் இணைந்து வெற்றிகரமாகச் செயல்படுவதற்கான நம்பிக்கையையும்கூட நீங்கள் பெறுவீர்கள்.

Friday, October 17, 2014

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...!

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...!

1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

# மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடினால், தாழ்வு மனப்பான்மையை எளிதில் போக்கி விடலாம்.

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் ...

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம். அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.

01. போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.
02. நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.
03. உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.
04. பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல
05. பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல
06. சொல்றவங்க நூறு சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?
07. அவன் அப்படித்தான் இருப்பான். அப்படித்தான் பேசுவான். அதையெல்லாம் கண்டுக்கலாமா? ஒதுங்கு. அப்பதான் உனக்கு நிம்மதி.
08. இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.
09. கஷ்டம் தான் … ஆன முடியும்.
10. நஷ்டம் தான் … ஆன மீண்டு வந்திடலாம்.
11. இதில விட்டா அதில எடுத்திட மாட்டனா?
12. விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?
13. விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு.
14. ஒக்காந்து கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதப் பார்.
15. இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?
16. இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?
17. இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.
18. இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.
19. முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.
20. கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட நல்லதாகவே கிடைக்கும்.
21. அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு.
22. விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.
23. திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.
24. சும்மா யோசிச்சுக் கிட்டே இருக்காதே.குழப்பம் தான் மிஞ்சும். சட்டுனு வேலையை ஆரம்பி.
25. ஆகா, இவனும் அயோக்யன் தானா?சரி,சரி.இனிமே யார் கிட்டயும் நாலு மடங்கு ஜாக்ரதையாத்தான் இருக்கணும்.
26. உலகத்துல யாரு அடிபடாதவன்? யாரு ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும், அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?
27. ஊர்ல ஆயிரம் பிரச்சனை. என் பிரச்சனைய நான் தீர்த்தா போதாதா?
28. கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.
29. எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?
30. அவனை ஜெயிச்சாதான் வெற்றியா? நான் தான் தினம் வளர்றேன, அதுவே வெற்றி இல்லையா?
31. அடடே, இதுவரை நல்லா தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிருந்தாலே போதும்.
32. நாலு காசு பாக்குற நேரம். கண்டதப் பேசிக் காலத்த கழிக்கலாமா?

ஆம், நண்பர்களே, வீழ்வது கேவலமல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம். ஒன்பது முறை விழுந்தவனுக்குஇன்னொரு பெயர் உண்டு-. எட்டு முறை எழுந்தவன். எழுந்திருங்கள். உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள். எவ்வளவு உயரம் தொட முடியும் என்பதைக் காட்டுங்கள்.

அறுபடை வீடுகள்

அறுபடை வீடுகள்

01.திருப்பரங்குன்றம்

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அசுரனை வென்ற அவர் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். முருகன் அமர்ந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் மலை வடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார். சிவனின் பெயரால் இத்தலம் "திருப்பரங்குன்றம்' எனப்படுகிறது. முருகனின் அருகில் நாரதர் தாடியுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

02. திருச்செந்தூர்

முருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் அலைவாய் என்ற பெயரும் உண்டு. இந்ததலம் கைலாயத்திற்கு சமமானது. முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும் பின்னும் தங்கிய இடம். இவரது திருவடிகளை படகிற்கு சமமாக சொல்கிறார்கள். அதனால் தான் கடலின் முன்புள்ள இத்தலத்திலுள்ள முருகனின் திருவடிகளை வணங்கி பிறவிப் பெருங்கடலை கடப்பதாக நம்பிக்கையுள்ளது.

03. பழநி

சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பழநி. மருந்தே மலையாக அமைந்த தலம். பழநியில் கால்வைத்தாலே பாதி நோய் தீரும். மலை ஏறிவிட்டால் முழு நோயும் நீங்கும். 12 ஆண்டுகளுக்கு தொடர்ந்து காலை 4 மணிக்கு எழுந்து நீராடி, கிரிவலம் வந்து, மலை மீது ஏறி, முருகன் திருவடி நாடி, தியானத்தில் அமர்ந்தால் அனைத்தும் ஒன்றே என்ற அற்புத தத்துவ விளக்கம் பெறுவதுடன், வாழ்க்கை என்றால் இன்னதென்று உணரும் ஞானஒளியையும் பெறலாம். அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் நோய் தீரும். ஒரு கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பவை அங்குள்ள மூர்த்தி (சிலை), தீர்த்தம், தலம் (அமைவிடம்) ஆகியவை. பழநி கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பது சிலை. போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. 

04. சுவாமிமலை சிவகுருநாதன்

சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து சுவாமி மலையில் சுவாமிநாதனாக முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார். "தன்னைவிட தன் பிள்ளைகள் அறிவுடையவர்களாக இருப்பது இப்பரந்த உலகத்தில் வாழும் உயிர்களுக்கெல்லாம் நன்மையைத் தரும்' என்கிறார் வள்ளுவர். அந்த வழியில் தன் பிள்ளையின் வாயால் மந்திரத்தின் பொருளை கேட்டு மகிழ்ந்தார் சிவன். அதுவும் தன் பிள்ளை குருவாக வீற்றிருக்க, தானே சீடனைப் போல் அமர்ந்து கேட்டார். அதனால் ""சிவகுருநாதன்'' என்ற பெயரை முருகப்பெருமான் பெற்றார்.

05. திருத்தணி முருகன்

அழகே உருவாக பொலிவுடன் காட்சி தரும் முருகன், திருத்தணியில் மார்பில் காயம்பட்ட தடத்துடன் இருக்கிறார். இதனை சூரனுடன் போரிட்ட போது ஏற்பட்ட காயம் என்கிறார்கள். திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் இங்கு வந்து கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்தார். கோபம் தணித்த இடம் என்பதால் "தணிகை' என இவ்வூர் பெயர் பெற்றது. அபிஷேக சந்தனம் இத்தலத்தில் பிரசாதமாக தரப்படுகிறது. இ தனை பக்தர்கள் நீரில் கரைத்து குடிக்கின்றனர். இதனால், நோய் நீங்கும் என்பது நம்பிக்கை. 

06. சோலைமலை

அறுபடைவீடுகளில் ஆறாவது வீடாக விளங்குவது சோலைமலை. மதுரையிலிருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ளது. அவ்வைக்கிழவியிடம்,"" சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?,'' என்று சாதுர்யத்துடன் உரையாடிய முருகன், இங்கு கோயில் கொண்டிருக்கிறார். உலக உயிர்கள் அனைத்தும் பழங்கள். அவற்றின் மீது பாசபந்தம் என்னும் மண் ஒட்டியிருக்கிறது. அதனைப்போக்க கல்வியறிவு மட்டும் போதாது. இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்த சுட்டிப்பையனாக வந்து திருவிளையாடல் புரிந்தவர் இவர். தன்னை வழிபட்டவர்க்கு கல்வியறிவும், ஞானமும் தருபவராக அருள்கிறார். ""அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே'' என்று அருணகிரிநாதர் இவரைப் போற்றியுள்ளார்.