உழைப்பால் வரும் தன்னம்பிக்கை
டா க்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எழுதிய FORGE YOUR FUTURE ஆங்கில நூலின் பகுதிகள் இங்கே தரப்படுகின்றன. கலாமிடம் பலர் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள்தான் இந்த நூல். வெளியீடு: ராஜ்பால் அண்ட் சன்ஸ். தமிழில் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிடுகிறது. மொழியாக்கம் மு. சிவலிங்கம். இவர் கலாமின் அக்கினிச் சிறகுகள் நூலை மொழியாக்கம் செய்தவர்.
“உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், உங்கள் திறமை மீது நம்பிக்கை வையுங்கள், உங்களது சுய ஆற்றல்களில் நியாயமான நம்பிக்கை வைக்காமல் உங்களால் வெற்றிபெறவோ, மகிழ்ச்சியை அனுபவிக்கவோ முடியாது” என நீங்கள் பேசியதைக் கேட்டேன். என் மீது எப்படி நான் நம்பிக்கை கொள்வேன்? குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்தத் திறமைகளும் என்னிடம் இல்லை. நான் குழப்பத்தில் இருக்கிறேன். நீங்கள் சொல்வது உண்மைதான் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால், நீங்கள் சொல்வது எனக்குப் பொருந்தாது என நினைக்கிறேன். தயவுசெய்து, எனக்கு வழிகாட்டுங்கள்.
நண்பரே, உங்களுடைய தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டிய நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பது தெளிவாகப் புலப்படுகிறது.
வாழ்க்கையின் எந்த ஒரு களத்திலும், தயக்கத்துடனும் தடுமாற்றத்துடனும் எடுத்ததற்கெல்லாம் மன்னிப்புக் கோரியவாறும் ஒருவர் முன்வைக்கும் திட்டத்தை யாரும் ஏற்றுக்கொள்ளத் தயங்குவார்கள். இதற்கு மாறாக, தெளிவாகப் பேசும் திறனுடன் தலை நிமிர்ந்து, கேள்விகளுக்குத் திட்டவட்டமாகப் பதில் அளித்து, தனக்குத் தெரியாத எதையும் உடனடியாக ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பவர் மற்றவரின் நம்பிக்கையைப் பெற்றுவிடுகிறார்.
வழிநடத்தும் நம்பிக்கை
தன்னம்பிக்கை கொண்டுள்ளோர் மற்றவர்களிடமும் அவர்கள் தங்கள் ரசிகர்களாக இருந்தாலும், சகாக்கள் அல்லது எஜமானர்கள், வாடிக்கையாளர்கள் அல்லது தங்கள் நண்பர்களாக இருந்தாலும் அனைவரிடமும் நம்பிக்கையைத் தூண்டிவிடுகின்றனர். மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுவதை வெற்றியடைவதற்கான ஒரு முக்கிய வழிமுறையாகத் தன்னம்பிக்கை நிறைந்தவர்கள் வகுத்துக் கொண்டுள்ளனர்.
தன்னம்பிக்கையைக் கற்றுக்கொள்ள முடியும், வளர்த்துக்கொள்ள முடியும் என்பது நல்ல விஷயம். உங்களது சொந்தத் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதிலோ உங்களைச் சுற்றிலும் உள்ளவர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதிலோ நீங்கள் ஈடுபடும்போது, அந்த முனைப்பு நல்ல பலன் தரும்.
சுய ஆற்றல், சுய உழைப்பு ஆகியவைதான் தன்னம்பிக்கையை உருவாக்கிக்கொள்வதற்கான இரண்டு முக்கிய அம்சங்கள். திறன்களில் நாம் நிபுணத்துவம் பெற்று நமக்கு முக்கியமாக உள்ள இந்தத் திறன் தொடர்பான இலக்குகளை அடைவதில் நாம் வெற்றி பெறும்போது, சுய ஆற்றலை நாம் உணர்கிறோம். ஒரு குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெறுவதற்காக நாம் கடுமையாகப் பாடுபட்டால், நம்மால் வெற்றி பெற முடியும் என்ற அறிதலில் நம்பிக்கை பிறக்கிறது. தோல்விகள் குறுக்கிடும்போது துவண்டுவிடாமல், சிக்கலான சவால்களை எதிர்கொண்டு வெற்றி நடை போடுவதில் இப்படிப்பட்ட நம்பிக்கைதான் நம்மை வழிநடத்துகிறது.
சுயமதிப்பு என்றால்..
சுய மதிப்பு குறித்த சிந்தனையுடன் இந்த நம்பிக்கை ஒன்றிணைந்து கொள்கிறது. நமது வாழ்க்கை நிகழ்வுகளை நம்மால் சமாளிக்க முடியும், மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு நமக்கு உரிமை உள்ளது என்ற அறிதல்தான் பொதுவாகச் சுய மதிப்பு எனக் கருதப்படுகிறது. நற்பண்புகளுடன் நாம் நடந்துகொள்கிறோம், நாம் மேற்கொள்ளும் செயல்களுக்கான திறன்படைத்தவர்களாக இருக்கிறோம், நாம் முழு மனதுடன் செயல்படும்போது, நம்மால் போட்டியில் வெல்ல முடியும் என்ற அறிதலிலிருந்தும் சுய மதிப்பு தோன்றுகிறது. நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நமக்கு அங்கீகாரம் கிடைக்கிறது என்ற உணர்வும் நமது சுய மதிப்புக்கு ஒரு காரணமாக உள்ளது.
1957-ம் ஆண்டு. சென்னை தொழில்நுட்பப் பயிலகத்தில் (Madras Institute of Technology) நான், இறுதியாண்டு பயின்ற நேரம். ஒப்படைக்கப்பட்ட வேலையைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றுவதற்கான அவசர உணர்வை எப்படி உருவாக்கிக்கொள்வது என்ற மிகவும் மதிப்புவாய்ந்த பாடத்தை நான் அப்போது கற்றுக்கொண்டேன். ஒரு திட்டத்துக்காக எனது தலைமையில் ஆறு உறுப்பினர் அணியை எனது ஆசான் பேராசிரியர் நிவாசன் அமைத்திருந்தார். தாழ்வாகப் பறந்து தாக்கும் போர் விமானத்தின் ஆரம்பக் கட்ட வடிவமைப்பை உருவாக்கும் பொறுப்பு எங்கள் அணியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. காற்று இயக்கம் மற்றும் கட்டமைப்பு வடிவத்தை உருவாக்குவது எனது பொறுப்பு.
நீண்ட பட்டியல்
எங்கள் அணியின் மற்ற ஐந்து உறுப்பினர்களும் விமானத்தின் உந்துவிசை, கட்டுப்பாடு, வழிகாட்டுதல், ஏவியானிக்ஸ், இன்ஸ்ட்ருமன்டேஷன் ஆகியவற்றுக்கான வடிவமைப்பை உருவாக்கும் பணியை ஏற்றிருந்தார்கள். ஐந்து மாதங்களுக்குப் பிறகு இந்தத் திட்டத்தை ஆய்வு செய்த பேராசிரியர் நிவாசன், திட்ட முன்னேற்றம் குறித்து அதிருப்தி அடைந்தார். மிகுந்த ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினார். பல்வேறு வடிவமைப்பாளர்களிடமிருந்து தேவையான தகவல்களை ஒன்றுதிரட்டுவதில் எதிர்கொண்ட சிக்கல்களை நான் நீண்ட பட்டியலிட்டதை எல்லாம் அவர் காதுகொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. எனது ஐந்து சகாக்களிடமிருந்தும் உள்ளீடுகளை நான் பெற வேண்டியிருந்தது. அவை இல்லாமல், வடிவமைப்புப் பணியைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில், நான் மேலும் ஒரு மாத அவகாசம் கேட்டேன். பேராசிரியர் நிவாசனோ “இங்கே பார் இளைஞனே, இது வெள்ளிக் கிழமை பிற்பகல் நேரம். கான்ஃபிகரேஷன் வரைபடத்தை (விமானத்தின் அனைத்து அம்சங்களையும் விவரித்துக்காட்டும் வரைபடம்) என்னிடம் காட்டுவதற்கு மூன்று நாள் அவகாசம் கொடுக்கிறேன். அது எனக்குத் திருப்தியாக இருந்தால், கூடுதலாக ஒரு மாதம் அவகாசம் அளிப்பேன். திருப்தியாக இல்லாவிட்டால், உன்னுடைய உதவித்தொகை ரத்து செய்யப்படும்” என்று சொல்லிவிட்டார்.
மன அழுத்தம்
என் வாழ்க்கையின் பேரதிர்ச்சி என்னை இடியாகத் தாக்கியது. எனது உயிரோட்டமே அந்த உதவித் தொகைதான். அது நிறுத்தப்பட்டுவிட்டால், விடுதியில் என் உணவுக்கான பணத்தைக்கூட என்னால் கொடுக்க முடியாமல் போய்விடும். மூன்று நாள் கெடுவுக்குள் அந்த வேலையை முடிப்பதைத் தவிர வேறு எந்த வழியுமே இல்லை. நானும் எனது அணி உறுப்பினர்களும் எங்களால் முடிந்த அளவுக்குத் தீவிர முனைப்புடன் செயல்படுவது என முடிவு செய்தோம். 24 மணி நேரமும் பாடுபட்டோம். இரவு முழுவதும் வரைபலகையிலிருந்து எங்கள் தலைகளை நிமிர்த்தவே இல்லை. உணவையும் உறக்கத்தையும் துறந்தோம். சனிக்கிழமை அன்று ஒரு மணி நேரம் மட்டுமே நான் ஓய்வெடுத்துக்கொண்டேன்.
ஞாயிறு காலை எனது வேலையில் நான் மூழ்கியிருந்தபோது, ஆய்வுக் கூடத்தில் வேறு யாரோ இருப்பதை உணர்ந்தேன். அவர் வேறு யாரும் இல்லை, பேராசிரியர் நிவாசன் தான். அமைதியாக அவர் என்னுடைய முன்னேற்றத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். எனது வேலையைப் பார்த்த பிறகு, பாசத்துடன் என்னைக் கட்டித் தழுவிக்கொண்டு முதுகில் தட்டிக்கொடுத்துப் பாராட்டினார். “ஒரு நெருக்கடியான கெடுவுக்குள் வேலையை முடிக்க வேண்டும் என்று சொல்லி உங்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கினேன் என்பது எனக்குத் தெரியும், ஆனால், இந்தத் திட்டத்தை உங்களை முடிக்க வைப்பதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை” என்று குறிப்பிட்டார்.
மேலும் ஒரு மாதம் இருட்டில் நாங்கள் துழாவிக் கொண்டிருப்பதற்கு இடம் தராமல், அடுத்த மூன்று நாட்களுக்குள் முடிக்க வேண்டும் எனப் பேராசிரியர் நிவாசன் தெள்ளத் தெளிவாகக் கெடு விதித்தார். இந்தக் காலக்கெடு என்ற நிர்ப்பந்தம்தான், கடந்த சில மாதங்களாக எங்களுக்குப் போக்குக் காட்டி வெற்றியை நோக்கி எங்களை விரைவாகப் பயணிக்க வைத்தது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றிய தொடர்கட்டங்களில், நான் பொறுப்பேற்றிருந்த பணியில் அடிப்படைத் தகுதியை மேம்படுத்திக்கொண்டேன். அணி உறுப்பினர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கான மென் திறன்களையும் வளர்த்துக்கொண்டேன்.
நான்கு படிநிலைகள்
இந்த அனுபவம் தரும் செய்தி என்ன? பின்வரும் நான்கு படிநிலைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்களுடைய தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்தச் செய்தி. முதலாவது, உங்களுடைய இலக்கை வரையறுத்துக்கொள்ளுங்கள். இரண்டாவது, அந்த இலக்கை எட்டுவதற்குக் களம் இறங்குங்கள். மூன்றாவது, இலக்கை நோக்கி விரைந்து முன்னேறுங்கள். நான்காவது, உழைப்பு; உழைப்பு; உழைப்பு.
உங்களுடைய தன்னம்பிக்கையை மேம்படுத்திக்கொள்வதற்கு நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான செயலாக அமையக்கூடியது, இலக்கை நிர்ணயித்துக்கொள்வதுதான். உங்களை மிகவும் ஈர்க்கும் ஒரு துறையில் உங்களுக்கான இலக்கை முடிவு செய்துகொண்டு, அந்த இலக்கை அடைவதற்காகக் கடுமையாகப் பாடுபடுங்கள். இது, ஆயுட்காலம் முழுவதும் நீங்கள் வெற்றிகளைக் குவிப்பதற்கு உந்துசக்தியாக அமையும். மற்றவர்களுடன் இணைந்து வெற்றிகரமாகச் செயல்படுவதற்கான நம்பிக்கையையும்கூட நீங்கள் பெறுவீர்கள்.
No comments:
Post a Comment