நெருக்கடியும் வாய்ப்பும் ஒரே வார்த்தைதான்
வாய்ப்பு என்பது ஒரு மறைமுக வரம். ஆனால் பல சமயங்களில் சாபம் போலத் தோன்றும். வேலையிலும் தொழிலும் ஏற்படும் பல சிக்கல்கள் நிஜமாகவே வாய்ப்புகள் என்றால் நீங்கள் நம்புவீர்களா?
நல்ல வாய்ப்பை அது வந்து போன பின் உணர்பவர்கள் தான் இங்கு அதிகம். அதைத் தவறவிட்டவர்கள்தான் அதன் அருமை அறிந்தவர்கள்.
தெரியாம போச்சே
“அப்பவே அந்த கம்ப்யூட்டர் கம்பனியில வேலை கிடைச்சது. இதெல்லாம் நிலைக்காதுன்னு இங்க வந்தேன். எனக்குப் பதிலா சேர்ந்தவரு இப்ப எங்கேயோ போயிட்டாரு. ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருமானம். நாம இன்னமும் இங்கே முப்பதைத் தாண்டலை!” என்று அங்கலாய்த்தார் இருபத்தைந்து வருடங்கள் அனுபவம் கொண்ட ஒரு முதிய மேலாளர்.
“யாரு கண்டாங்க ஐ.டியெல்லாம் இப்படி வளரும்னு?” என்று சொல்லி எழுந்து சென்றார்.
நெருக்கடியில் வாய்ப்பு
“எனக்கு நல்ல பாஸ். அவனுக்கு ஒரு மோசமான பாஸ். நாங்க இரண்டு பேரும் ஒரே கம்பனியில ஒண்ணா ட்ரெய்னியா சேந்தவங்க. புதுசா வந்த எம்.என்.சியில இரண்டு பேருக்கும் வேலை கிடைச்சது. எனக்குப் போகப் பெரிய மனசில்ல. சம்பள உயர்வும் அதிகமில்ல, பாஸ் தொந்தரவு தாங்காம அங்கே போன என் நண்பன் இன்னிக்கு அங்க டிபார்ட்மெண்ட் ஹெட். நான் இங்கே ஒரு புரமோஷன்தான் வாங்கியிருக்கேன். நல்ல பாஸ்னு அந்தப் புது கம்பனிக்கு போகாம விட்டது பெரிய தப்பாப் போச்சு. அது எவ்வளவு பெரிய வாய்ப்புன்னு அப்பத் தெரியாமப் போச்சு!”
உடனடி அனுகூலம் எதிர்பார்ப்பது அல்லது இன்றைய பிரச்சினையிலிருந்து உடனடியாகத் தப்பிப்பது இதுதான் நம் முடிவுகளைப் பெரிதும் பாதிக்கும் மன நிலை. இது நாளைய வாய்ப்புகளைப் பற்றி யோசிக்க வைக்காது!
இன்று பெரிதாகத் தெரிவது வருங்காலத்தில் பெரிதாகத் தெரியாது. அதேபோல இன்று சாதாரணமாகத் தெரிவது வருங்காலத்தில் பெரிதாகத் தெரியலாம். இந்தச் சிந்தனை இடைவெளியில்தான் வாய்ப்புகள் நழுவிப்போய் விடுகின்றன!
ஆனால் ஒவ்வொரு நெருக்கடியிலும் ஏதேனும் வாய்ப்பு தென்படுகிறதா என்று பாருங்கள். அது உங்கள் முடிவு எடுக்கும் திறனைக் கூர்மைப்படுத்தும்.
பிரச்சினைகளில் வாய்ப்புகளைத் தேடுபவர்கள்தான் வேலையில் பெரிய வெற்றிகளைப் பெறுகிறார்கள்.
எனது நெருக்கடி
என் ஆரம்பக் காலச் சிக்கல் ஒன்றுதான் என் வாழ்க்கையை மாற்றும் சக்தியாக மாறியது. 1990-ல் நடந்த சம்பவம் அது.
முனைவர் ஆராய்ச்சியும், மருத்துவ உளவியல் ஆலோசனையும் மட்டும்தான் உலகம் என அப்போது நான் இருந்தேன். ஒரு குடியிருப்போர் சங்கத்தின் ஆண்டு விழாவிற்குச் சிறப்பு பேச்சாளனாக வர அழைப்பு கிடைத்தது.
முதல் முறை என்பதால் செம கெத்து. புதுச் சட்டை, கூலிங்கிளாஸ் சகிதம் பஸ்ஸில் பாரிமுனை சென்று அங்கிருந்து ஆட்டோ வைத்துக்கொண்டு வண்ணாரப்பேட்டை சென்றேன். உடன் என் உயிர் நண்பர் வேறு. சந்துக்குள் நுழைய முடியாது என்ற ஆட்டோ ஓட்டுனருடன் சண்டை போட்டு உள்ளே செலுத்தி ஒருங்கிணைப்பாளார் வீட்டு வாசலில் கித்தாப்பாய் இறங்கினோம். ஆரத்தி எடுக்க ஆளில்லாவிட்டால் பரவாயில்லை. நிகழ்ச்சிக்கே யாரும் வர ஆரம்பிக்கவில்லை. ஒரு வெயில் நேரத்தில் குழந்தைகள் மட்டும் பவுடர் பூசி நடனத்திற்கு ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படி இப்படி ஏழு மணிக்குக் கூட்டம் சேர்ந்தது. என்னைப் பேசச் சொன்னார்கள்.
நான் பெரிதாகச் சொன்ன உளவியல் விஷயங்கள் எடுபடவில்லை. சில சிரிப்புத் துணுக்குகளுக்கு ஆரவாரமாய்க் கை தட்டினார்கள். இறுதியில் பலமாகக் கை தட்டியபோது ‘போதும்’ என்று நினைத்துக் கை தட்டினார்களா என்று சந்தேகம். இருந்தும் பலர் ஆட்டோகிராப் வாங்கினார்கள். விழா முடிவில் “நீங்கள் கண்டிப்பாக இதை வச்சுக்கணும்” என்று ஒரு சின்ன கவரைத் திணித்தார் அந்த ஒருங்கிணைப்பாளர். பையில் போட்டு விட்டு ஆட்டோ ஏறினோம். முனை தாண்டியதும் பிரித்துப் பார்த்தால் ஆட்டோ காசிற்கே பற்றாத ஒரு ஒற்றை நோட்டு நோஞ்சானாகத் தென்பட, ஆட்டோவை நிறுத்தி பஸ் பிடித்தோம். வீடு வரும்வரை அவர்கள் போற்றிய பூத்துவாலையில் எங்கள் ஆனந்தக் கண்ணீரைத் துடைக்கும் அளவு விழுந்து விழுந்து சிரித்தோம்!
எனது வாய்ப்பு
அடுத்த வாரமே வேறு ஒரு காப்புரிமை முகவர்களுக்கான கூட்டத்தில் பேச அழைத்தார்கள். நண்பன் காதைக் கடித்தான். “மீண்டும் தேங்காய் மூடி கச்சேரியா?”
எவ்வளவு கட்டணம் வேண்டும் என்று அவர்களே கேட்டவுடன் ஒரு நல்ல தொகையைச் சொன்னோம். 20 முதல் 70 வயதுவரை இருந்த மக்கள் கூட்டத்தில் பேசினேன். வண்ணாரப்பேட்டை அனுபவம் நிரம்ப கை கொடுத்தது. அன்றைய பேச்சு மிகச் சிறப்பாக அமைந்ததாகச் சொன்னார் அந்த அதிகாரி, தன் சொந்த வங்கி கணக்கில் உள்ள காசோலைப் புத்தகத்திலிருந்து தாள் கிழித்தார்.
“கம்பெனிதான் கொடுக்கிறது என்று பெரிய தொகை கேட்டோம். உங்கள் அக்கவுண்ட் என்றால் கொடுப்பதைக் கொடுங்கள்!” என்றேன். அதற்கு அவர், “உங்கள் பேச்சைக் கேட்ட முகவர்களில் 5% பேர் கூடுதலாக 25% ரிசல்ட் கொடுத்தாலே போதும். இந்த மூலதனம் எனக்கு நூறு பங்காகத் திரும்பி வரும்!” என்றார்.
இரண்டுக்கும் ஒரே சொல்
ஒரு பெரும் வணிகச் சூத்திரத்தை நொடிப் பொழுதில் கற்றுக் கொண்டதோடு, ஒரு தொழில் வாய்ப்பையும் கண்டுகொண்டேன். தனியார் நிறுவனங்களுக்கு உளவியல் பயிற்சி எடுக்கத் தயாரானேன்.
என் வாழ்வின் போக்கையே மாற்றிய தருணம் அது.
முதல் அனுபவத்தை மறக்க வேண்டிய சம்பவமாக அல்லாமல் படிக்க வேண்டிய பாடமாக எடுத்துக் கொண்டேன். பின் வருடங்களில் உலகின் முன்னணி நிறுவனங்களுக்குப் பயிற்சி அளிக்க, அந்தக் கற்றல் ஆதாரமாய்த் தேவைப்பட்டது.
சீன மொழியில் “நெருக்கடி” மற்றும் “வாய்ப்பு” இரண்டிற்கும் ஒரே சொல் தான். அதை இடம் பார்த்துப் பொருள் படுத்திக் கொள்ள வேண்டும்.
உங்கள் வாழ்வில் நிகழும் சம்பவங்களை நெருக்கடியாகப் பார்ப்பதும் வாய்ப்பாகப் பார்ப்பதும் உங்கள் மனநிலையைப் பொறுத்தது.
“வேலை எப்படிச் சார்?” என்றால் உங்களிடமிருந்து வரும் முதல் பதில் உங்களின் இந்த மனநிலையைக் காட்டிக் கொடுத்துவிடும்!
No comments:
Post a Comment