Monday, February 23, 2015

நிதி நிர்வாகத்தில் தவிர்க்க வேண்டிய தவறுகள்!

நிதி நிர்வாகத்தில் தவிர்க்க வேண்டிய தவறுகள்!

நிதி நிர்வாகத்தை கையாளுவது என்பது நமக்கு தேவையில்லாத வேலை என்று நினைத்து பலர் ஒதுங்குகிறார்கள். இல்லை யென்றால் இது விஷயமே இல்லை என்பதுபோல் டீல் செய்கிறார்கள். இது இரண்டுமே தவறுதான்.

நிதி நிர்வாகத்தில் நம்மவர்கள் செய்யும் தவறு குறித்து நிதி ஆலோசகர்களிடம் கேட்டோம். அவர்கள் சொல்லிய கருத்துகளின் தொகுப்பு உங்களுக்காக. தவறுகளை குறைத்துக்கொள்வது என்பதே சரியான செயலை செய்வது போலதான்.

திட்டமிடல்

முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்’ பெரும்பாலான நிதி ஆலோசகர்கள் சொல்லும் முதல் வார்த்தை இதுதான். ஆனால் சேமிப்பே இல்லாமல் பலருடைய வாழ்க்கை நகர்கிறது. வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் சேமிக்க ஆரம்பிப்பதே நல்லது.

‘உங்களின் பெரும்பாலானவர்கள் வரவு, செலவு குறித்து எந்தவிதமான திட்டமும் இல்லாமலே இருக்கிறார்கள். மாதம் வருமானம் எவ்வளவு வருகிறது, எவ்வளவு செலவு ஆக வாய்ப்பு இருக்கிறது என்பதை பற்றிய எந்த விதமான திட்டமும் இல்லை. திட்டமிடல் இல்லாததால் சேமிப்பு என்பதே இல்லாமல் இருக்கிறது.

பணவீக்கத்தை தாண்டிய வருமானம்

சிலர் தொடர்ந்து சேமித்துவருவார்கள். ஆனால் பணவீக்கத்தை பற்றிய எந்த கவலையும் இல்லாமல் பிக்ஸட் டெபாசிட் உள்ளிட்ட நிலையான வட்டி விகிதம் கொடுக்கும் சேமிப்புகளில் முதலீடு செய்வார்கள். முதலீட்டின் தாரக மந்திரமே பணவீக்கத்தை தாண்டிய வருமானம்தான். ஆனால் இதைபற்றி கவலைப்படாமல் மிகவும் பாதுகாப்பான முதலீடுகளிலேயே சிலருடைய மொத்த முதலீடும் இருக்கும்.

முதலீட்டுப் பகிர்வு

சிலர் மிகவும் பாதுகாப்பான முதலீடு களை நோக்கி செல்லும் பட்சத்தில் சிலருடைய மொத்த முதலீடும் பங்குச் சந்தையிலே இருக்கும். இன்னும் சிலரோ தங்கமாக வாங்கி குவித்துக்கொண்டே இருப்பார்கள். ஒருவருடைய மொத்த முதலீட்டில் அதிகபட்சம் 10 சதவீதம் தங்கம் இருக்கலாம்.

வயதுக்கு ஏற்ப பங்குச்சந்தையில் முதலீடு இருக்க வேண்டும் என்பது பொதுவான விதி. முதலீடு செய்யாமல் இருப்பது எப்படி தவறோ அதுபோல மொத்த முதலீடும் ஒரே இடத்தில் இருப்பதும் தவறு. தங்கம், பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்ட், பிக்சட் டெபாசிட் என அனைத்து முதலீடுகளிலும் பிரித்து முதலீடு செய்வது நல்லது.

காப்பீடு தேவை

இந்தியாவில் ஆயுள் காப்பீடு எடுத்தவர்கள் 5 சதவீதம் கூட இல்லை. நம்மிடம் சேமிப்பே இல்லை அல்லது கொஞ்சம் சேமிப்பு இருக்கிற நிலையில் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால் மொத்த சேமிப்பும் கரைந்துவிடும் அல்லது பெருங்கடனாளியாக மாறும் சூழ்நிலை உருவாகும்.

இப்போது வரும் நோய்களும், நாம் சிகிச்சைக்கு செல்லும் மருத்துவமனைகளும் நம்மை கடனாளி ஆக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால் ஒரு மருத்துவக் காப்பீடும், ஆயுள் காப்பீடும் அவசியம் எடுப்பது நல்லது.

ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது ஒரு பாலிசியை சிலர் எடுக்கிறார்கள். அதுவும் கணக்கின்றி பல பாலிசிகளை எடுக்கிறார்கள். குறிப் பாக பிப்ரவரி - மார்ச் மாத காலத்தில் வரிச்சலுகை பெற வேண்டும் என்பதற்காக தேவை இல்லாத பாலிசிகளை எடுக்கவும் செய்கிறார்கள். ஆயுள் காப்பீட்டை பொறுத்தவரை டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பதுதான் சிறந்த தேர்வு.

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு உபயோகம் நிச்சயம் மோசமானது கிடையாது. ஆனால் இதை யார், எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்து இருக்கிறது. தவறாக பயன்படுத்தும் பட்சத்தில் பல சிக்கல்களை இது உண்டாக்கும்.

ஒரு கிரெடிட் கார்டில் வாங்கிய கடனை இன்னொரு கார்டு மூலம் செலுத்துவது, குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்துவது உள்ளிட்ட காரணங்களால் சிக்கல்கள் மேலும் அதிகரிக்கும். தவிர, காலதாமத கட்டணம், வட்டி, சிபில் கணக்கில் பிரச்சினை உள்ளிட்ட பல ஆபத்துகள் தொடரும்.

ஓய்வுகால திட்டம்

30 வயதில் இருக்கும் நான் ஓய்வு காலத்துக்கு ஏன் இப்போதே திட்டமிட வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் இப்போது திட்டமிடாவிட்டால் அதன் பிறகு எப்போதும் திட்டமிட முடியாது என்பதை மறந்து விட வேண்டாம்.

தற்போது மருத்துவ வசதிகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் சராசரி ஆயுள் காலம் உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஓய்வு காலத்துக்கு பிறகு 15 வருடங்களுக்கு மேலே சராசரியாக வாழ வேண்டி இருக்கும் என்பதை மனதில் வைத்துகொண்டு ஓய்வு காலத்துக்கு சேமிப்பது நல்லது.

அதிகக் கடன்

கடன் வாங்குவது தவறில்லை. கடன் வாங்காமல் வீடு வாங்க முடியாது என்ப தும் உண்மைதான். ஆனால் தங்களது எல்லை தெரிந்து வாங்க வேண்டும். எவ்வளவு காலத்துக்கு நமக்கு வருமானம் கிடைக்கும், எவ்வளவு தொகையை நம்மால் திருப்பி செலுத்த முடியும் உள்ளிட்டவற்றை தெரிந்து கடன் வாங்க வேண்டும்.

பொதுவாக கையில் கிடைக்கும் நிகர வருமானத்தில் 40 சதவீதத்துக்கும் மேல் கடன் இருக்க கூடாது. வீட்டுக்கடன், கார் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களும் இந்த எல்லைக்குள்தான் இருக்கவேண்டும். ஆனால் எளிதாகக் கடன் கிடைக்கிறது என்று பல வகையான கடன் வாங்குகிறார்கள்.

இது தவிர நண்பர்கள் உறவினர்களிடம் வாங்கும் கடன் தனி. எல்லை தாண்டிய கடன் தலைக்கு மேல் தொங்கும் கத்தி என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அவசர கால நிதி

பலர் சீராக சேமித்து வந்தாலும், அனைத்து முதலீடுகளையும் உடனடி யாக எடுக்க முடியாத திட்டங்களாக தேர்ந்தெடுத்து முதலீடு செய்து வருவார்கள். ஏதாவது அவசர தேவைகள் அல்லது வேலை இழப்பு என்னும் சூழ்நிலை வரும் போது பணம் இல்லாமல் சிரமப்பட வேண்டி இருக்கும். அல்லது கடன் வாங்க வேண்டி இருக்கும். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் முதலீட்டின் மீது கிடைக்கும் வருமானத்தை விட வாங்கிய கடனுக்கு அதிக வட்டி செலுத்த வேண்டி இருக்கும். அதனால் குறைந்தபட்சம் 3 மாத சம்பளத்தையாவது எளிதில் எடுக்க முடிகிற முதலீடுகளில் சேமிப்பது நல்லது.

முதலீடு செய்யாமல் இருப்பது எப்படி தவறோ அதுபோல மொத்த முதலீடும் ஒரே இடத்தில் இருப்பதும் தவறு. தங்கம், பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்ட், பிக்சட் டெபாசிட் என அனைத்து முதலீடுகளிலும் பிரித்து முதலீடு செய்வது நல்லது.

No comments:

Post a Comment