Wednesday, July 22, 2015

முதலீட்டில் நஷ்டத்தைத் தவிர்க்கும் 10 குணாதிசயங்கள்!

முதலீட்டில் நஷ்டத்தைத் தவிர்க்கும் 10 குணாதிசயங்கள்!

1 தெளிவான முதலீட்டு நோக்கம்!

முதலீட்டாளர்கள் நஷ்டத்தைத் தவிர்க்க கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை விதி, முதலீட்டுக்கு தெளிவான நோக்கம் அவசியம். உதாரணத்துக்கு, மகனின் படிப்புக்காகத் தேவைப்படும் பணத்தை  பங்குச் சந்தையிலோ அல்லது அது சார்ந்த திட்டங் களிலோ முதலீடு செய்வாராயின், அவருக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்தாலொழிய நஷ்டம் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதேபோல், அடுத்த ஐந்தாண்டுக்குத் தேவையில்லாத பணத்தை வங்கிகளில் முடக்கி னால், அதுவும் ஒருவித நஷ்டம் தான்.

முதலீடு செய்வதற்குப் பல வழிகள் இருந்தாலும், நமது நோக்கத்தின் அடிப்படை யிலேயே முதலீடு செய்தால், நஷ்டத்தைத் தவிர்த்து லாபம் சம்பாதிக்கலாம். முதலீடு சில மாதங்களுக்கு என்றால் வங்கியிலோ குறுகிய கால மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலோ முதலீடு செய்யலாம். ஓரிரு ஆண்டுகளுக்கு என்றால் வங்கி டெபாசிட் மற்றும் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.  மூன்றாண் டுக்கு மேல் என்றால் பங்குகளிலோ அல்லது பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலோ முதலீடு செய்யலாம். ஆனால், அடிப்படை விதி, முதலீட்டு நோக்கம்தான்.

2 தெரிந்ததில் முதலீடு செய்தல்!

முதலீட்டில் நஷ்டத்தைத் தவிர்க்க ஒரு முக்கிய விதி, நமக்குத் தெரிந்ததில் முதலீடு செய்வது அவசியம். உலகின் தலைசிறந்த முதலீட்டாளரான வாரன் பஃபெட் நவீன தொழில் நுட்பம், இ-காமர்ஸ் போன்ற துறைகளில் என்றுமே முதலீடு செய்தது இல்லை. செய்வதும் இல்லை. ஏன் என்று கேட்டதற்கு, எனக்கு அந்தத் துறைகளின் வியாபாரப் போக்கை புரிந்து கொள்ள முடிவதில்லை என்றார்.

எல்லோருக்கும் எல்லா முதலீட்டு வழிகளைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும் என்பது இல்லை. ஒருவருக்குத் தெரிந்து கொள்ளக்கூடிய, புரிந்து கொள்ளக்கூடிய முதலீட்டு வழி களில் முதலீடு செய்தாலே நஷ்டத்தைத் தவிர்க்கலாம். அதிலும் குறிப்பாக, ரிஸ்க் அதிகமாக இருக்கும் முதலீடுகளில் அதைப் பற்றிய புரிதல் இல்லாமல் முதலீடு செய்வதால்தான் நஷ்டம் ஏற்படுகிறது.

3 சுயபலம் / பலவீனம் அறிந்து முதலீடு!

முதலீடு என்பது பணம் மட்டும் சார்ந்த விஷயம் அல்ல. அது மனமும் சார்ந்த விஷயம்என்பதுதான் அடிப்படை. அதனால் முதலீடு செய்யும்போது நமது பலம், பலவீனத்தைக் கருத்தில்கொண்டு முதலீடு செய்தால் நஷ்டத்தைத் தவிர்க்கலாம்.

பல முதலீட்டாளர்களின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப் பது மனம்தானே தவிர, பணம் அல்ல. ஒருவரது வயது, முதலீடு, முதலீட்டுக் காலம், ரிஸ்க் எடுக்கும் திறன் போன்ற அடிப்படை விஷயங்கள்தான் பலம், பலவீனத்தைத் தீர்மானிக்கும்.

உதாரணத்துக்கு, ஒருவர் தனது முப்பதாவது வயதில் முதலீடு செய்யத் துவங்குகிறார். மற்றொருவர் 45-வது வயதில் துவங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். முதலாமவருக்கு வயதும், முதலீட்டுக் காலமும் பெரிய பலம். இரண்டாமவருக்கு அவை இரண்டும் பலவீனம்.

இருவரும் வெவ்வேறு யுக்திகளைக் கையாள வேண்டும். சுயப்பலம் / பலவீனம் அறிந்தால் முதலீட்டில் நஷ்டம் தவிர்க்க உதவியாக இருக்கும்.

4 துறை நிபுணர்களிடம் நம்பிக்கை வைத்தல்..!

முதலீட்டாளர்கள் அனைவரும் எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. வாரன் பஃபெட் முதலீட்டை தன் முழுநேர பணியாகச் செய்வதால், அவருக்குப் பல விஷயங்கள் தெரிகிறது. பல முதலீட்டாளர் களுக்கு அது பொருந்தாது. ஆகவே, முதலீட்டாளர்கள் அவர்களாகவே நேரத்தை செலவு செய்து, விஷயங்களைத் தெரிந்துகொண்டு முதலீடு செய்வது என்பது கடினமான வேலைதான்.

அதற்குத்தான் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற துறை சார்ந்த நிபுணர்கள் உள்ளார்கள். நமது முதலீட்டுத் தேவைக்கேற்ப சரியான முதலீட்டு வழிமுறைகளைத் தேர்வு செய்து முதலீடு செய்து வந்தால் நஷ்டத்தைத் தவிர்த்து லாபம் சம்பாதிக்கலாம்.

5 பரந்துபட்ட முதலீடு!

டைவர்ஸிஃபிகேஷன் என்று வழங்கப்படுகிற பரந்துபட்ட முதலீட்டுக் கொள்கை ஓர் அடிப்படை முதலீட்டு விதியா கும். ஒருவர் தனது முதலீட்டை ஓரிரு மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யாமல் பரந்துபட்ட விதத்தில் செய்தால் முதலீட்டில் நஷ்டம் தவிர்க்க முடியும். ஏனென்றால், ஒருவர் இரண்டு ஃபண்டுகளில் முதலீடு செய்வதைக்காட்டிலும் ஐந்து முதல் எட்டு ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்யும்போது ஓரிரு ஃபண்டுகள் சரியான முறையில் வருமானம் தரவில்லை என்றாலும், மீதமுள்ள ஃபண்டு கள் கைகொடுக்கும். பரந்துபட்ட முதலீட்டு அணுகுமுறை என்பது லாபத்தைக் கூட்டுவதற்கு மட்டுமல்லாது நஷ்டத்தைத் தவிர்க்க சிறந்த யுக்தியாகும்.

6 சொத்து ஒதுக்கீடு!

முதலீட்டில் நஷ்டத்தைத் தவிர்த்து லாபத்தைக் காணச் செய்யும் முக்கிய முதலீட்டுத் தந்திரம், அஸெட் அலோகேஷன் என வழங்கப்படும் சொத்து ஒதுக்கீட்டு முறைதான். ஒரு சொத்திலோ அல்லது ஒரே முதலீட்டு வழியிலோ முதலீடு செய்யாமல் ஒருவருடைய வயது, முதலீட்டு மூலதனம், முதலீட்டுக் காலம், ரிஸ்க் போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு முதலீட்டை பல்வேறு வழிகளில் பிரித்து முதலீடு செய்யும்போது நஷ்டத்தைத் தவிர்க்க முடியும். பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும்போது எல்லா பணத்தை யும் பங்குகளில் போடுவது, வீழ்ச்சியடையும்போது எல்லாவற்றையும் வங்கிகளில் வைப்பது போன்ற அணுகு முறையைத் தவிர்த்து, அனைத் திலும் நம் தேவைக்கேற்ப முதலீடு செய்து வந்தால் நஷ்டம் தவிர்க்கலாம்.

7 எஸ்ஐபி திட்டம்!

முதலீடுகளில் நஷ்டம் தவிர்த்து நீண்ட நாள் லாபம் சம்பாதிக்க எளிதான வழி, எஸ்ஐபி முதலீட்டுத் திட்டம். இந்த வழிமுறை ஏற்ற இறக்கம் அதிகமாக உள்ள முதலீடுகளுக்குப் பொருத்தமாக இருக்கும். பங்கு மற்றும் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளுக்கு எஸ்ஐபி நல்ல முறையில் கைதரும். ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் ஒருமுறை முதலீடு (ஒன் டைம் இன்வெஸ்மென்ட்) என்பது நஷ்டத்தைத் தர அதிக வாய்ப்பு கள் உண்டு. முதலீட்டாளர்கள் எஸ்ஐபி முறையைப் பின்பற்றினால் ஏற்ற இறக்கத்தைச் சமாளிப்பது மட்டுமல்லாது, நஷ்டத்தைத் தவிர்த்து லாபம் சம்பாதிக்க உதவும்.

8 அகலக்கால் வைக்கக் கூடாது!

முதலீடு என்பது நமது சேமிப்பில் இருக்கும் பணத்தை முதலீடு செய்ய வேண்டுமே தவிர, கடன் வாங்கி முதலீடு செய்தல், சொத்தை விற்றோ அடமானம் வைத்தோ முதலீடு செய்தல் என்பது கூடவே கூடாது. அப்படிச் செய்வது என்பது நஷ்டத்தைத் தர வாய்ப்புள்ளதாகும்.

அதேபோல, முதலீடு செய்யும்போது சிறிய அளவில் துவங்குவது என்பது சரியான அணுகுமுறையாக இருக்கும். நமது முதலீட்டுக் காலம், ரிஸ்க் போன்றவற்றைக் கணக்கில் கொண்டு படிப்படியாக முதலீடுகளில் ஈடுபட்டால் நஷ்டத்தைத் தவிர்க்க முடியும்.

உலகின் மிகப் பெரிய முதலீட்டாளர்கள் சிறிய முதலீடு களோடுதான் துவங்கினார்கள், வாரன் பஃபெட் உட்பட.

9  நிறைய முதலீட்டு வழிகளில் முதலீடு செய்தல்!

பரந்துபட்ட முதலீடு என்பது முதலீட்டுக்கு முக்கியமான விஷயம்தான். அது அளவுக்கு அதிகமாகப் போகும்போது அதுவே நஷ்டம் ஏற்படக் காரணமாக மாறுகிறது.

பல மியூச்சுவல் ஃபண்டுகளிலோ, பல பங்கு களிலோ பரந்துபட்டால் அவற்றை ஆராயவும் சரிபார்க் கவும் இயலாத காரியமாகிறது.

ஒருவர் எஸ்ஐபி மூலம் ஒரு லட்சம் முதலீடு செய்கிறார். அதை ஐந்து முதல் ஏழே ஃபண்டு களில் முதலீடு செய்தால் அவற்றை எளிதில் கண்காணிக்க முடியும். பத்து முதல் பதினைந்து ஃபண்டுகளில் முதலீடு செய்தால் கண்காணிப்பது கடினம். அந்தச் சூழலில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பரந்துபட்ட முதலீடும் அளவாகத்தான் இருக்க வேண்டும்.

10 முதலீடுகளின் ஆய்வு!

எந்த ஒரு முதலீடும் நமது நேரடிக் கண்காணிப்பில் இருப்பது அவசியம். முதலீடு எவ்வளவு முக்கியமோ ஆய்வும் அந்தளவு முக்கியம். மூன்று அல்லது ஆறு மாதத்துக்கு ஒருமுறை நமது முதலீடுகளை ஆய்வு செய்தால் முதலீடுகளில் இருக்கும் நிலையை நாம் உணர முடியும்.

முதலீடுகளில் தொய்வு இருந்தால், அதை சீர்ப்படுத்திச் சரி செய்ய முடியும். அதுவே நஷ்டத்தைத் தவிர்க்க பெரிய வழிமுறையாக அமையும்.

No comments:

Post a Comment