திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம் மட்டுமல்ல. இரு மனம் ஒன்றாகி ஒரு மனமாக கலப்பதே திருமணம் எனப்படுகின்றது. ஓரிருநாள் சடங்கில் முடிந்து போவது திருமணம் அல்ல. வாழ்க்கை முழுவதும் ‘திரு’வாளனும் ‘திரு’மதியும் சில நெறிகளைக் கடைப்பிடித்து வாழ வேண்டும். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை தான், தெய்வீக நறுமணம் வீசும் திருமண வாழ்க்கையாக அமையும்.
திருமணம்
ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்க்கையின் முதல் பருவமான பிரம்மச்சரிய பருவத்தில் ஆற்றவேண்டிய கடமைகளையும் கற்கவேண்டிய பாடங்களையும் சிறப்பாக முடித்து விட்டு, இரண்டாவது பருவமான கிரகஸ்த (குடும்பவாழ்க்கை) பருவத்தில் அடியெடுத்து வைப்பதே திருமணம் ஆகும். திருமணத்தின் போது ஒவ்வொருவரின் மரபுவழியிலும் நிறைய சடங்குகள் இருந்தாலும், சனாதன தர்மத்தைப் பொறுத்தவரை சப்தபதி எனப்படும் சடங்கு மிக முக்கியமாகும். இந்த சடங்கில், கணவனும் மனைவியும் அக்கினி சாட்சியாக கைக்கோர்த்து ஏழு அடிகள் அல்லது ஏழு சுற்றுப்பாதைகள் வலம் வருவர். இந்த ஏழு அடிகளும் ஏழு வாக்குறுதிகளைக் குறிக்கின்றன.
அவை:
1) கணவனும் மனைவியும் எப்போதும் சுகதுக்கங்களையும் குடும்ப சுமையையும் பகிர்ந்து கொள்ளவேண்டும்.
2) கணவனும் மனைவியும் ஒரே மனதாக இணைந்திருக்கவேண்டும், மனைவிக்கு விருப்பமில்லாததை கணவனும், கணவனுக்கு விருப்பமில்லாததை மனைவியும் விட்டுவிடவேண்டும்.
3) கணவன் மனைவியின் குடும்பத்தினரையும், மனைவி கணவனின் குடும்பத்தினரையும் மதிக்க வேண்டும்.
4) கணவனும் மனைவியும் ஒன்றாக இருந்து தம் மக்களை வளர்த்து, குழந்தைகளுக்கு நிறைவான கல்வியை தரவேண்டும்.
5) கணவனும் மனைவியும் குடும்ப பொருளாதாரத்தை சரிசமமாக இருந்து பேணவேண்டும்.
6) மனைவியைத் தவிர மற்ற பெண்ணிடமும், கணவனைத் தவிர மற்ற ஆணிடமும் தகாத உறவு வைத்துக் கொள்ளக் கூடாது.
7) கணவன் தன் மனைவியை (வாக்காலும், மனத்தாலும், செயலாலும்) நோகடிக்க கூடாது, மனைவியும் தன் கணவனை (வாக்காலும், மனத்தாலும், செயலாலும்) நோகடிக்க கூடாது.
சப்தபதி - ஏழு வாக்குறுதிகள்
இந்த ஏழு வாக்குறுதிகளையும் ஒவ்வொரு கணவனும் மனைவியும் கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும்.
குடும்பவாழ்க்கை
ஒரு குடும்பவாழ்க்கையில் கணவனும் மனைவியும் உடல்ரீதியில் மட்டுமல்லாமல் மனத்தாலும், செயலாலும், வாக்காலும் ஒன்றாகியவர்கள் ஆவர். கணவன் மனைவியைத் துன்புறுத்துவதும், மனைவி கணவனை துன்புறுத்துவதும் உண்மையில் தம்மை தாமே துன்புறுத்திக் கொள்வதற்கு ஒப்பாகும். ஒரு குடும்பவாழ்க்கையில் கணவனும் மனைவியும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சில முக்கிய உறவுகளைப் பிரதிபலிக்கின்றனர்.
உதாரணமாக:
1) தோழன் தோழி = கணவனும் மனைவியும் எப்போதும் எந்தவொரு ஒளிவும் மறைவும் இல்லாமல், தங்களின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு வாழ வேண்டும்.
2) மறுமகன் மறுமகள் = மனைவி என்பவள் தன் கணவனின் பெற்றோருக்கு இன்னொரு மகளாகவும், கணவன் என்பவன் தன் மனைவியின் பெற்றோருக்கு இன்னொரு மகனாகவும் இருந்து அவர்களை நல்ல முறையில் அன்புடனும் அரவணைப்புடனும் பாதுகாக்க வேண்டும்.
3) குரு சிஷ்ய = குடும்பவாழ்க்கையை துவங்குவதற்கு முன்னரே, பிரம்மச்சரிய பருவத்தில் குடும்பவாழ்க்கையைப் பற்றிய போதுமான அறிவைப் பெற்றிருக்க வேண்டும். எனவே, கணவனும் மனைவியும் தம் துணையார் வழிதவறி போனால் அவருக்கு நல்லறிவைப் புகட்டி மீண்டும் நல்ல பாதைக்குத் திருப்பி கொண்டு வர வேண்டும். ’கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என்று வாழாமல், கணவன் தப்பு செய்தால் மனைவி அவனைக் கண்டிக்க வேண்டும்.
4) தலைவன் தலைவி = ஒரு குடும்பத்தைப் பொருளாதார அளவில் உயர்த்த கணவனும் மனைவியும் சேர்ந்தே பாடுபட வேண்டும். எப்படி ஒரு நாட்டை அரசனும் அரசியும் நல்ல முறையில் வழிநடத்துவார்களோ, அதுபோல ஒரு குடும்பத்தை கணவனும் மனைவியும் வழிநடத்த வேண்டும். நம்முடைய பாரம்பரியத்தில், ஒரு குடும்பம் ஒரு நாட்டின் பிரதிபலிப்பாக திகழ்கின்றது. கணவனும் மனைவியும் அந்த குடும்பத்தின் அரசனாகவும், அரசியாகவும் அமைந்துள்ளனர். அவர்களின் பிள்ளைகளே அக்குடும்பத்தின் ‘மக்கள்’ ஆவர். குடும்பத்தில் உள்ளவர்களிடம் சகிப்புத்தன்மையுடனும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் வாழ்ந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
5) தாய் சேய் = குடும்பவாழ்க்கையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அரவணிப்புடனும் அன்புடனும் வாழவேண்டும். கணவனுக்கு முடியாத நிலையில் மனைவி அவனுக்கு பணிவிடை செய்தலும், மனைவிக்கு முடியாத நிலையில் கணவன் அவளுக்குப் பணிவிடை செய்தலும் வேண்டும். இதனாலே திருமண சடங்கின் போது, புரோகிதர் சொல்லித்தர கணவனும் மனைவியும் சேர்ந்து மனதார உச்சரிக்கும் மந்திரத்தில் “சுபஹே த்வம் ஜீவ சரத சதம்” என காலம்வரை உடனிருந்து (தன் துணையை) கவனித்துக் கொள்வேன் என வாக்குறுதி எடுத்துக் கொள்கின்றனர்.
6) சகோதரன் சகோதரி = சண்டைகளும் மனசஞ்சலங்களும் இல்லா குடும்பவாழ்க்கை கிடையாது. எவ்வளவு சண்டைகள் போட்டாலும், எப்போதும் தன் துணையை விட்டுக் கொடுக்க கூடாது. கணவன் மனைவி ஆகிய இருவரில் யாராவது ஒருவர் மனமிறங்கி வந்து சமாதானம் பேசவேண்டும். இருவரும் ஒத்த மனத்துடன் கலந்துரையாடி பிரச்சனையைக் கலைந்து இனிதான ஒரு முடிவை எடுக்க வேண்டும்.
7) தாய் தந்தை = குடும்பவாழ்க்கையின் மிக முக்கிய நிலை தாய் தந்தை உறவு ஆகும். கணவனும் மனைவியும் குழந்தையை ஈன்றெடுத்தப் பின்னர் (அல்லது தத்தெடுத்தப் பின்னர்) அவர்கள் தாய் தந்தை என்ற நிலையை அடைகின்றனர். அந்த குழந்தைக்கு தேவையானவற்றையும் முழுமையான அறிவையும் அளிக்கவேண்டிய கடமையில் அவர்கள் ஈடுபடுவர். தம் மக்களைச் சான்றோர் மத்தியில் மதிக்க தக்கவர்களாக ஆக்கவேண்டியது பெற்றோர்களின் மிக முக்கிய கடமையாகும்.
8) மாமனார் மாமியார் = ஒரு தம்பதியரின் மக்களின் துணை அவர்களுக்கு மறுமக்கள் ஆகின்றனர். இதனாலே நம் பாரம்பரியத்தில், மகளின் கணவன் மறுமகன் என்றும் மகனின் மனைவி மறுமகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஒருவர் தன் மகன் அல்லது மகளிடம் எவ்வளவு அன்பும் அரவணைப்பும் செலுத்துவாரோ அதேபோல தன் மறுமக்களிடமும் செலுத்த வேண்டும்.
இதுபோல குடும்பவாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய நெறிகள் உள்ளன. இவை ஒரு சிறப்பான குடும்பவாழ்க்கையைப் பேண ஒரு வழிகாட்டல்களாக அமைக்கப்பட்டவை ஆகும். புராண கதைகளிலும் நம் முன்னோர்கள், தெய்வங்களை மையமாகக் கொண்டு சில நன்னெறிகளை உரைத்திருப்பார்கள். ஒரு குடும்பத்தின் பதி-தர்மத்தை கணவனும், பதினி-தர்மத்தை மனைவியும் கடைப்பிடிக்க வேண்டும். பிறனில் நோக்காமல் தன் துணையை உயிராக நேசிப்பவரே கற்புடையர் எனப்படுவர்.
No comments:
Post a Comment