Friday, October 21, 2016

இந்துதர்மத்தில் தூய்மை

இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய 10 ஒழுக்கநெறிகளை பதஞ்சலி யோகசூத்திரம் உட்பட இதர சனாதன தர்ம நூல்கள் பகர்கின்றன. அந்த பத்து ஒழுக்கநெறிகளில் ஒன்றுதான் “தூய்மை”. தூய்மை என்பது சுத்தம் அல்லது ஷௌச்சம் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இந்துதர்மத்தைப் பொறுத்தவரை தூய்மை என்பது ஐந்து நிலைகளில் அமைந்துள்ளது.

அவை:

சுற்றுச்சூழல்
1) வசிப்பிடத்தை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்
2) கண்ட இடங்களில் குப்பை போடுவதை தவிர்க்க வேண்டும்
3) கோயில்களை மாசுபடுத்தாமல் சுத்தமாக பராமரிக்க வேண்டும்

உடல்
1) தினந்தோறும் தவறாமல் குளிக்க வேண்டும்
2) ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்
3) புகை/மது போன்ற உடலுக்குப் பாதிப்பை தரும் பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்
4) யோகாசனம் போன்ற உடலுக்கு வலிமை தரும் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்

மனம்
1) மன அழுக்குகள் என சொல்லப்படும் பொறாமை, பேராசை, கோபம், பயம், வெறுப்பு, பழியுணர்வு, பகைமை ஆகிய ஏழு குணங்களையும் நீக்க வேண்டும்
2) அன்பு, கருணை, பொறுமை, சாந்தம், சமநிலை, திருப்தி, திடம் ஆகிய ஏழு நற்பண்புகளை மனதில் விதைத்திட வேண்டும்

செயல்
1) மற்றவர்களுக்கு சொந்தமான பொருள்களை அவர்களிடமிருந்து அபகரிக்க கூடாது
2) அப்பாவி உயிர்களுக்கு எந்தவகையிலும் துன்பம் விளைவிக்க கூடாது
3) எல்லா செயல்களிலும் நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்
4) கடமையை செய்வதில் கருத்தாக இருக்க வேண்டும்

வாக்கு
1) நன்மை, இனிமை, உண்மை – ஆகிய மூன்றையும் மட்டுமே பேச வேண்டும்
2) தீமை, கடுமை, பொய்மை – ஆகிய மூன்றையும் பேசக் கூடாது

அஷ்டாங்க யோகத்தின் நியமங்களில் ஒன்றாக தூய்மை விளங்குகின்றது. இந்து தர்மநூல்களிலும் தூய்மையைப் பற்றிய ஏராளமான குறிப்புகள் உள்ளன. பகவத் கீதையின் படி, தூய்மை எனப்படுவது ஒருவன் உடலால், மனதால், வாக்கால் மேற்கொள்ள வேண்டிய தவம் (ஆன்மீகப் பயிற்சி) எனக் கூறப்படுகின்றது.

தூய்மை ஏன் அவசியம்?

உடல்நலம், மகிழ்ச்சி மற்றும் தரமான வாழ்க்கை ஆகிய மூன்றிற்கும் தூய்மை என்பது அவசியமான ஒன்றாகும். மகாபாரதத்தில் பல இடங்களில் தூய்மையின் அவசியத்தைப் பற்றி விளக்கப்படுகின்றது. அஷ்வமேதிக பர்வத்தின் 14:38:5-8-இல் இடம்பெறும் கூற்று தூய்மை என்றால் என்ன என்பதை மிக துல்லியமாக விளக்குகின்றது.

“உண்மையில் தூய்மையானவன் என்பவன் யாரென்றால் - பேராசைகுணத்தில் இருந்து விடுபட்டவன், இறுமாப்பில் இருந்து விடுபட்டவன், எதிலும் குற்றத்தையே காணும் குணத்தில் இருந்து விடுபட்டவன், ஏற்றத்தாழ்வுகளை விடுத்து எல்லாரையும் சமநோக்குடன் அரவணிப்பவன், அது வேண்டும் இது வேண்டும் என்ற தீராத ஆசைகளில் இருந்து விடுபட்டவன் - ஆவான். அவனிடம் தன்னம்பிக்கை, பரிசுத்தம், மனவலிமை, பொறுமை, திருப்தி, அன்புடைமை, மயக்கமின்மை, எல்லா உயிர்களிடமும் அருளுடைமை போன்ற நற்குணங்கள் நிறைந்திருக்கும். அவன் அமைதியானவன், அவன் ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்படுவதில்லை. எது சரி எது தவறு, எது செய்யத்தக்கது எது செய்யத்தகாதது என்பதில் தெளிவான புத்தியையுடைய அவனின் செயல், வாக்கு மற்றும் மனம் ஆகிய மூன்றும் மிக தூய்மையான நிலையை அடைந்து தூயவடிவான பரம்பொருளுடன் நிலைபெற்று விடுகின்றது.” 
(மகாபாரதம் 14:38:5-8)

No comments:

Post a Comment